தெளிந்த உள்ளத்தின் நிரந்தரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 13, 2024
பார்வையிட்டோர்: 85 
 
 

(2011ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதிரவன் தன் கடனை முடித்து ஓய்வெடுக்கும் நேரம். அதனால் நான்கு திக்கிலும் இருள் சூழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தத் தெரு மட்டும் ஒளிமயமாக இருந்தது. அதற்குக் காரணம் சாலை இரு மருங்கிலும் இருந்த விளக்குக் கம்பத்தின் ஒளி எங்கும் பிரகாசித்ததேயாகும். அந்தத் தெரு வழியே நான் மெல்ல நடந்து கொண்டிருந்தேன். மேலும் அடி எடுத்து வைக்க என் கால்கள் ஏனோ தயங்கின. அதை விட என் மனமோ குற்றவுணர்வுடன் மேலும் முன்னோக்கிச் செல்லவிடாது தவித்தது. அந்த உணர்வின் தாக்கத்தால் என் கால்கள் மெல்ல தளர்ந்தன.

கையில் இருந்த கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அது எட்டேகால் என்று காட்டியது. “ச்சே! மணி ஒன்பது கூட ஆகவில்லை. இவ்வளவு வெள்ளென அங்கே போனால்… ம் பார்க்கக் கூடாதவங்க பார்த்துட்டா அப்புறம் வேற வினையே வேணாம். எதற்கும் ஒன்பது மணிக்கு மேல போகலாம்” என எனக்குள் சொல்லிக் கொண்டேன். நெற்றியில் முத்து முத்தாய் வடிந்திருந்த வியர்வையை எனது கைக்குட்டையால் மெல்லத் துடைத்தேன். கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.

எதிரில் ஒரு காப்பிக்கடை தென்பட்டது. உள்ளத்தில் ஏற்பட்ட “தாகத்தைத்’ தீர்த்துக் கொள்ளத் தானே அந்தப் பக்கம் வந்திருக்கிறேன். இந்த உணர்வு எழுந்தவுடன் தொண்டை வறண்டது. நேரே காப்பிக்க்டையினுள் நுழைந்தேன். அந்தக் கடையில் அவ்வளவு கூட்டம் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாய்ச் சிலர் தங்களுக்குப் பிடித்த உணவைச் சுவைத்துக் கொண்டிருந்தனர். யாரும் என்னைப் பார்த்துவிடக் கூடாது என்றெண்ணி ஒதுக்குப்புறமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தேன்.

கடைச் சிப்பந்தி நான் அமர்ந்ததைக் கண்டதும் என்னை உபசரிக்க ஓடி வந்தார். காப்பிக்கு ஆடர் கொடுத்தேன். சிறிது நேரத்தில் ஆவி பறக்கும் காப்பி ஒன்று என் முன்னே வைக்கப்பட்டது. காசு எடுக்கச் சட்டைப் பையில் கையை விட்டபோது ஒரு கவர் வெளியே வந்தது. அதை அப்படியே மேசை மேல் வைத்துவிட்டு, காப்பிக்கான பணத்தைத் தந்து சிப்பந்தியை அனுப்பி வைத்தேன்.

மேசையிலிருந்த கடித உறையில் “பார்த்திபன்” என என் பெயர் எழுதப்பட்டிருந்தது. போன வாரம் வந்த கடிதம் தான் அது. நான் படித்துப் பார்த்த கடிதம். இருப்பினும் மீண்டும் படிக்க வேண்டும் போலிருந்தது. எடுத்துப் படித்தேன். ”மை டியர் பென்…” எனத் தொடங்கிய கடிதத்தில் ஆங்கில ஆதிக்கம் கொடி கட்டிப் பறந்தது. “ம் முத்து ரொம்ப தான் மாறிட்டான் இப்போ எப்படி இருக்கிறானோ?” என எண்ணியவாறு அவனோடு பழகிய நாள்கள் என் மனக்கண் முன்னே வட்டமிட்டது.

நான், முத்து, சரவணன் மூவரும் முதியோர் கல்விக்கூடத்தில் ஒன்றாகப் படித்து வந்த காலம் அது. அந்த வகுப்பில் படித்த பதிமூன்று பேர்களுள் நாங்கள் மூவர் தான் ஆண்கள். மற்றவர்கள் யாவரும் பெண்கள். அதனால் நாங்கள் மூவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். இயற்கையிலேயே எனக்குக் கொஞ்சம் பயந்த சுபாவம். அதனால்தான் பெண்களோடு அதிகம் பேச மாட்டேன். ஆனால் முத்துவும் சரவணனும் அப்படியல்ல. சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்கள். எப்போதும் கலகலப்புடன் இருப்பார்கள். நான் அவர்களோடு இருப்பதால் அவ்வவ்போது பெண்களின் தரிசனமும் கடைக்கண் பார்வையும் கிட்டுவதுண்டு. அதை நான் வெறுப்பதும் இல்லை. ஒதுக்குவதும் இல்லை. இருப்பினும் முத்து. சரவணனைப் போல் நான் என்றும் வரம்புக்கு மீறிச் சென்றதே இல்லை.

ஆனால் எல்லையைத் தாண்டும் சந்தர்ப்பம் எனக்கு ஒரு நாள் ஏற்பட்டது. உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க இந்தியா செல்லத் திட்டமிட்டோம். என்னைத் தவிர முத்துவும் சரவணனும் நல்ல வசதி படைத்தவர்கள். இந்தப் பயணத்திற்குப் பணம் ஒரு முட்டுக்கட்டையாக அமையவில்லை அவர்களுக்கு. ஆனால் எனக்கோ அது கேள்விக்குறி. இதில் திக்கு முக்காடிப் போனவர்கள் என் பெற்றோரே. ஒரே மகன் ஆசைப்படுகிறான் என்ற காரணத்தினால் அம்மா என் அப்பாவிடம் எனக்காக வாதாடிச் சம்மதத்தை வாங்கினார். மகன் இந்தியாவுக்குச் செல்கிறான் என்பதில் என் தாய்க்கு ஏற்பட்ட மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே?

பயணத்திற்கான ஏற்பாடு துரிதமானது. மும்மூர்த்திகளான நாங்கள் விமானத்தின் மூலம் இந்தியாவுக்குப் பயணமானோம். தமிழ் மண்ணில் காலடி எடுத்து வைத்த பூரிப்பில் நான் மிதந்தேன். முத்துவின் நெருங்கிய உறவினர் வீட்டில் தங்கினோம். “சிங்கப்பூரிலிருந்து வந்திருக்கிறோம்” என்ற ஒரே காரணத்திற்காக இராஜ உபசரனை நடத்தினார் முத்துவின் பெரியப்பா. எந்தக் குறையும் இல்லை. இன்பமாகப் பொழுதைக் கழித்தோம். இந்தச் சமயத்தில் தான் ஒரு நாள் முத்துவின் மாமா என்று சொல்லி ஒருவர் அங்கு வந்திருந்தார். அவர் மறுநாளே பம்பாய் செல்ல வேண்டியிருந்தது. அவருடன் பம்பாய் செல்லலாம் என முத்து புதுத்திட்டம் ஒன்றைப் போட்டான். நாங்களும் இந்தியாவுக்கு வந்த ஒரு வாரத்திலேயே பம்பாய் கிளம்பினோம்.

பம்பாய்….ம் மிகவும் பரபரப்பான ஊர். அது ஒரு புதுமையான அனுபவமாக எங்களுக்கு இருந்தது. வட நாட்டவர்கள் வாட்ட சாட்டமாக வஞ்சயிைல்லாமல் வளர்ந்திருந்தனர். எங்கும், இந்தி. எதிலும் இந்தி, முத்துவின் மாமா கருணாநிதி ஒரு ஜாலியான பேர்வழி. வேலையிடத்தில் மூன்று நாள்கள் விடுப்பு எடுத்துக் கொண்டு எங்களுக்கு ஊரைச் சுற்றிக் காட்டினார். நல்ல முனுஷன். ஆனால் “தண்ணீர்” போட்டால் அப்படியே சாய்ந்துவிடுவார். அவரை எழுப்புவது என்பது முடியாத காரியம். அதனால் தான் “அந்த மாதிரியான’ இடத்திற்குச் செல்ல நாங்கள் துணிந்தோம்.

தொடக்கத்தில் எதற்கும் தயங்கிய நான் கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி ஒரு வழியாக முன்னேற்றம் கண்டேன். போதாததற்கு முத்துவின் மாமா போட்ட தண்ணீரின் மீதத்தைக் குடித்த ‘தெம்பில்’ அந்த இடத்தில் காலடி எடுத்து வைத்தோம். பம்பாயில் “சோனா” என்ற இடத்தை அறியாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதுவும் “சிவப்பு விளக்குப் பகுதிக்கு” கிராக்கியான இடம் அது. அங்கே காலடி எடுத்து வைத்ததும் பெரிய மனிதன் ஆகிவிட்ட எண்ணம் தோன்றியது. பழைய ஆனால் இனிய இந்திப்பாடல் ஒன்று காற்றில் மிதந்து வந்தது. இரண்டு மாடிக் கட்டடத்தின் நடைப்பாதை முழுவதிலும் பெண்கள் அணி, நான், முத்து, சரவணன் மூவரும் ஏற்கனவே எங்கள் குடலின் நிரப்பிய புட்டியின் துணையோடு ஆளுக்கொரு குட்டியோடு தனியறையில் இட்டுச் செல்லப்பட்டோம். அந்த மங்கலான அறையில்… அப்பப்பா! அதற்கு மேல் நனைத்துப் பார்க்கவே என் நெஞ்சம் கூசியது.

“இஞ்சே மவ் லாகி கோப்பி” எனக் கடைச் சிப்பந்தி என்னைத் தட்டி எழுப்பி என் கடந்த கால நினைவுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான். சுய நினைவுக்குத் திரும்பிய நான் அங்கிருக்க விரும்பாது நடையைக் கட்டினேன். வழியில் முத்து, சரவணனின் நினைப்பு வந்தது. முத்து மேற்படிப்பைத் தொடர ஆஸ்திரேலியா சென்றதோடு சரி. அவன் அனுபவிக்கும் “இன்பங்களை” இப்படிக் கடிதம் வழி தெரிவிப்பான். சரவணனோ அப்பாவின் வியாபாரத்தைக் கவனிக்கச் சென்றவன் தான் ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வான்.

நானோ என் கல்வித் தரத்தை உயர்த்திக் கொண்டு வாழ்க்கையில் படிப்படியாக முன்னேறி முன்பிருந்த வேலையை விட்டு இப்பொழுது ஒரு கௌரவமான வேலையில் இருக்கிறேன். இருப்பினும் அவர்கள் இருவரையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் நான் சர்வ் சாதாரணம்.

“என்ன சார் யாருக்கும் தெரியக்கூடாதுனு இப்படி வேகமா போறீங்களா?” எனச் சைக்கிளில் வந்தவர் முன்பின் அறிமுகமில்லாத என்னிடம் பேச்சுக் கொடுத்ததும் நான் சற்று நிலைகுலைந்து நின்றேன். “ஏன் நின்னுட்டீங்க. ம் மேல நடங்க என்றதும் நானும் அவரைத் தொடர்ந்தேன். “சார் இந்த இடத்திற்குப் புதுசா. இதுக்கு முன்னால சாரை நான் பார்த்ததில்லையே” என்றார். நான் ஆமாம் என்று தலையை ஆட்டினேன்.

“இங்கே பாருங்க தம்பி. இதுல தப்பே இல்லை. உடல் வலிக்க உழைக்கிறவனுக்கு ஓய்வு வேணும். அந்த ஓய்வை அவன் இங்கே வந்து செலவிடுறான். நாம் அனுபவிக்கத் தானே பெண் ஜென்மம்” என எனக்குச் சாதகமாகப் பேசினார். “தம்பிக்குக் கல்யாணம்….”

“ஆயிட்டு” என்றேன். “அப்படினா பொண்டாட்டி?” “தலைப்பிரசவத்திற்காக அம்மா வீட்டுக்குப் போயிருக்கா” என் தவிப்பை உணர்ந்தவர் போல் “இ….இ..இ… இவ்வளவு நாள் தம்பி தாக்குப்பிடிச்சதே பெரிய விஷயம். வேணும்னா சின்ன

பொண்ணா பார்த்து ஏற்பாடு செய்யட்டுமா?” என்றார். நான் அசடு வழிய நின்றேன்.

“கொஞ்சம் இங்கே இருங்க தம்பி. நான் இதோ வந்திடுறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்த ஒரு மாடியில் ஏறினார். இந்தத் தெருப்பக்கம் வந்தாலே நம் “தேவையை” அறிந்து செயல்படுவார்கள் போலும். அந்த அளவிற்கு அந்த இடம் புகழ் பெற்றிருப்பதை கண்கூடாகக் கண்டேன் நான். சிறிது நேரங்கழித்து “தம்பி உங்களுக்கு ரொம்ப நல்ல யோகம். ஒரு சிறு குட்டியை ஏற்பாடு செய்திருக்கேன். கை படாத ரோஜா. புத்தம் புதுசு. ஆனால் பணம் கொஞ்சம் அதிகமாகும்” எனக் கூறினார். பணம் பறிக்கும் வழி இது தான் என்பதை உணர்ந்து அவர் கையில் சிவப்பு நோட்டைத் திணித்தேன். அவர் மாடியைக் காட்டினார். என் கால்கள் அதை நோக்கி நடந்தன.

அறைக் கதவைத் திறந்தேன். உள்ளே அதிக வெளிச்சம் இல்லை. ஆனால் பார்க்கக்கூடிய அளவுக்கு வெளிச்சம் இருந்தது. உள்ளே ஒரு பெரிய கட்டில். அதன் அருகில் அலமாரி. மூலையில் சிறிய மேசை, எதிரே இரு நாற்காலிகள். அறையினுள் ஒரே ஓர் அகன்ற சன்னல். அதற்கு அழகூட்ட பூவேலைப்பாடு கொண்ட திரைச்சீலை. அந்தத் திரைச்சீலைக்குள் ஓர் உருவம் மறைந்திருந்தது. திரை அசைவதன் மூலம் அங்கு ஆள் மறைந்திருப்பதை உணர்ந்தேன். நான் கதவைத் தாழிட்டேன். தாழ் சத்தம் கேட்டு திரைச்சீலை அதிகமாகக் குலுங்கியது.

மெல்ல திரையை விலக்கினேன். அங்கே ரோஜா மொட்டுப் போலப் புத்தகம் புதிதாக மலர்ந்த ஒரு பூச்செண்டு. கள்ளங்கபடு இல்லாத குழந்தை முகம். ஒரு பிளாஸ்டிக் பையில் எதையோ திணித்துக் கொண்டிருந்த அவள் நான் திரைச்சீலையை விலக்கியதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால் பயத்தில் அவள் கைகள் நடுங்க, கை நழுவிப் பொருள் கீழே விழுந்தது. விழுந்த பொருளைப் பார்த்ததும் நான் திடுக்கிட்டுப் போனேன்.

“என்ன இது” என்றேன். புரியாது விழித்தாள். அவளைப் பார்த்தால் தமிழ்ப்பெண் போல இல்லை. அதனால் ஆங்கிலத்தில் விசாரித்தேன். அவள் சொன்ன பதில் என்னைத் திக்குமுக்காட வைத்தது. அவள் “படிப்பதாகக்” கூறியதைக் கேட்டு மலைத்தேன். அவளே “சார் என் மேடம்கிட்ட நான் புத்தகத்தை வைச்சிப் படிச்சதா சொல்லாதீங்க. அவங்க என்னை அடிப்பாங்க. பார்த்தீங்களா இந்தக் காயத்தை?” என்று கூறி, தொடையில் இருந்த தீக்காயத்தை காட்டினாள். சொல்ல மாட்டேன் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினேன். என் மீது அவளுக்கு ஏற்பட்ட நம்பிக்கையில் தன் பூர்வீகத்தைச் சுருக்கமாகக் கூறினாள்.

சூசன் என்ற பெயர் கொண்ட அவள் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்தவள். கூடப் பிறந்தவர்கள் எட்டு பேர். நான்காவது பெண்ணான அவள் பிழைப்புத் தேடி இங்கு வந்தாள். வந்த இடத்தில் ‘இந்தத் தொழிலைச்” செய்ய வற்புறுத்தப்பட்டாள். குடும்பச் சூழ்நிலையால் இதற்கு இணங்கியுள்ளாள். எப்படியும் படித்து. முன்னேறித் தன் தாய்நாடு திரும்பியதும் கௌரவமான ஒரு வேலையில் அமர வேண்டும் என்ற வைராக்கியத்தில் அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் புத்தகத்தைப் புரட்டி வருவதாகக் கூறினாள்.

அவள் தொழில் அசிங்கமானதாக இருந்த போதிலும் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் அவளுள் நிறைந்திருப்பதை என்னால் காண. முடிந்தது. இமைக்காமல் அவளைப் பார்த்தேன். என் பார்வையின் ஸ்பரிசத்தைக் கண்ட அவள் தன் “கடமையைச் செய்ய முனைந்தவளாய் மேலாடையைக் களையத் தயாரானாள். நான் அதைத் தடுத்து நிறுத்தினேன். என் செயல் அவளுக்குப் புதுமையாக இருந்தது. “நான் உள்ளே நுழைந்தபோது நீ படித்துக் கொண்டிருந்தாயா?” என வினாத் தொடுத்தேன். பையிலிருந்து விழுந்த புத்தகத்தை ஆர்வத்தோடு எடுத்து எண்பத்தாறாம் பக்கத்தைத் திருப்பிக் காட்டினாள். ”அல்ஜிப்ரா’ கணிதம். மூன்றாவது கேள்வி முழுமை பெறாமல் இருந்தது.

“இதைச் செய்ய தெரியுமா?”

“தெரயாது”

“சொல்லித் தரட்டுமா?”

“சரி”

அதற்குப் பிறகு என்னால் அந்தக் கட்டிலில் உட்கார முடியவில்லை. அருகில் இருந்த மேசைக்குச் சென்றேன். அவள் என்னைத் தொடர்ந்தாள். இருவரும் நாற்காலியில் அமர்ந்தோம். பாடம் தொடங்கியது. கணக்குப் போடத் தெரியாமல் அவள் தலையைச் சொறிந்தபோது அது… அது… வசந்தியை எனக்கு நினைவூட்டியது. அவள் பேனாவைப் பிடித்து எழுதும் விதம் கணேஷைப் படம் பிடித்துக் காட்டியது. இப்படி என் வகுப்பில் படித்த ஒவ்வொரு மாணவரின் முகமும் என் மனத்திரையில் நிழலாடியது.

டாண்… டாண்… டாண்… மணி பன்னிரண்டு என்பதை நினைவுறுத்தியது. தூக்கம் அவள் கண்ணை வருடியது. பாடத்தை நிறுத்தினேன். புறப்படத் தயாரானேன். என் சட்டைப் பையில் இருந்த சிவப்பு நோட்டில் ஐந்தை அவள் கையில் திணித்தேன். ”சார்” என்று ஏதோ சொல்லத் துடித்தாள். எதுவும் சொல்ல வேண்டாம் என்பதற்கு அடையாளமாக அவள் முதுகில் வாஞ்சையுடன் தட்டிக் கொடுத்தேன். அவள் இரு கரங்கூப்பி என்னை வணங்கினாள். அந்த வணக்கம் “சார் இது போன்ற சாக்கடைக்கு நீங்க வரவே கூடாது. எழுத்தறிவித்தவன் இறைவனுக்குச் சமம்” எனக் கூறுவது போல் இருந்தது.

அவளுடைய அந்தப் பார்வை என் இதயத்தை முள்ளாகத் தைத்தது. இரத்தத்தைக் கசிய வைத்தது. அந்த இரத்தம் என்னைப் புனிதமாக்கியது. தெளிந்த உள்ளத்துடன் உறுதியான முடிவோடு அந்த இடத்தை விட்டு “நிரந்தரமாக” வெளியேறினேன்.

– தேடிய சொர்க்கம், முதற்பதிப்பு: பெப்ரவரி 2011, தமிழ்க் கலை அச்சகம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *