தெய்வம் நேரில் வரும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 29, 2020
பார்வையிட்டோர்: 6,050 
 

அந்தத் தேதித் தாள் அப்புறம் கிழிக்கப்படவே இல்லை!…

அப்படியென்றால், காலம் மாறவில்லையென்று பொருளா?

ஊஹும்!
காலம் மாறிக் கொண்டுதான் இருக்கிறது.

ஆனால், அவர்களைப் பொறுத்தமட்டில் மட்டும் காலம் மாறவில்லை.

சுவரில் தொங்கிய காலண்டரில் கிழிக்கப்படாமல் இருந்த அந்தத் தேதித் தாளை பழுப்புப் படிந்து தூசும் தும்பட்டையுமாகத் திகழ்ந்த அந்த தேதித் தாளைக் கிழிபட்ட மனத்தோடு கிழிபட்ட மனத்தில் ரத்தமும் பாசமுமாகப் பொங்கிப் புரண்ட மனத்தோடு பார்த்தான். பார்த்துக் கொண்டேயிருந்தான் ஆனந்தன், கனத்து வலித்த கண் விளிம்புகளினின்றும் சுடுநீர் மாலையாக நீண்டது. எதை நினைத்தான். எதுவோ நினைவில் வந்தது.

’16-10-1970′ என்று அந்தத் தேதித் தாள் சுட்டிக்காட்டிய வண்ணமிருந்த அந்த நாளை அவனுடைய உதடுகள் முணு முணுத்தன. இமைகள் பொருந்தின. இமைகள் மூடிய கருமணிகள் இரண்டிலும் அந்தச் சித்திரம் மாறி மாறி மாற்றித் தரிசனம் தந்தது. ஐயையோ… தெய்வமே!… ராஜா!…. ஓ…. மை டியர் ராஜா! – விம்மல் வெடித்தது. நெஞ்சு எப்போது வெடிக்கப் போகிறதோ?

காலடிச் சத்தம் கேட்டது.

ஆனந்தன் சுயப் பிரக்ஞை கொண்டான். கொண்ட வளை ஏக்கம் சூழப் பார்த்தான். “நீ நடந்து வந்திருக்கே. அந்தச் சத்தத்திலே நான் நம்ப ராஜாவோட கால் சலங்கைச் சத்தத்தைக் கேட்டேன்…ஆமா… சுசீ” என்று விம்மினான்.

சுசீலா உயிர்க் கழுவில் ஊசலாடினாள். இன்று நேற்றுத்தானா இப்படி? கழிந்த இருநூற்று இருபத்திரண்டு நாட்களாகத்தான் இந்த ஜீவ மரணப் போராட்டம். இவ்வீட்டில் விதியாக வினையாக தெய்வமாக விளையாடிக் கொண்டிருக்கிறது விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது!

“அத்தான் வாங்க, சாமி கும்பிடலாம்…” என்றாள் சுசீலா. பூங்கரங்களிலே பூசனைப் பொருள்களும் பூவும் இருந்தன. குளித்து முழுகிக் கொண்டை போட்டிருந்த கேசக் கற்றைகளில் செருகப்பட்டிருந்த பூச்சரத்தினின்றும் நீர் சொட்டியது. சொட்டிய விழிநீரைத் தட்டிவிடச்சிந்தை இழந்து, கொண்டவனின் கரம் பற்றி அழைத்துச் சென்றாள் அவள் மெய் நடுங்கியது.

தீபாராதனை முடிந்தது.

“விபூதி குங்குமம் எடுத்துக்குங்க” என்றாள். “இன்னிக்கு சனிப் பெயர்ச்சியாம்!”

அவளை ஏறிட்டு ஊடுருவிப் பார்த்தபடி, விபூதி குங்குமம் எடுத்துக் கொண்டான் ஆனந்தன். நெற்றியில் தரித்துக்கொள்ளப் போனவன், டக்’ கென்று நின்று, சுவர்க்கோடியின் கீழ்முனையை நோக்கி நடந்து, அந்தப் பேசும் பொற்சித்திரத்தின் நெற்றியில் அழகு கொழித்த நெற்றியில் விபூதியையும் குங்குமத்தையும் இட்டான். “ராஜா…! ஐயோ ராஜா…. தெய்வமே! ஐயையோ தெய்வமே….” வெறிபூண்டு ஓலமிட்டான். பைத்தியம் பிடித்துவிட்ட மாதிரி சுசீலாவின் நடுங்கும் கைகளைப் பற்றிக்கொண்டு, “சுசீ, நம்ம ராஜா நம்மகிட்டே திரும்பி வந்து சேர்ந்திடுவான்னு இன்னமும் நீ நம்புறே! அப்படித் தானே சுசீ?’ என்று சின்னப் பிள்ளை மாதிரிக் கெஞ்சும் குரலெடுத்துக் கேட்டான். மார்பை அழுந்தப் பிடித்துக்கொண்டான்.

சோகத்தில் தெளிந்த நம்பிக்கை அவள் இதழ்களிலே புன்னகையைாகச் சுடர் தெறித்தது. “தெய்வத்தைத்தான் இன்னமும் நான் நம்பிக்கிட்டு இருக்கேன். ஆனதாலே, நம்ம ராஜாவை அந்தத் தெய்வம் நம்பிக்கிட்டே மீட்டுக் கொண்டாந்து பத்திரமாய் ஒப்படைச்சிடும்னு தோணுது அத்தான்…” பெற்ற மனம் உருகி வழிந்தது, கண்களில் காலை இளஞ்சுடரொளியில் வெண் முத்தங்கள் பளிச்சிட்டன. “சனியும் பெயர்ந்திடுச்சாம்!” தொடர்ந்தாள்.

அவன் மெய்ம்மறந்தான். ஆஹா!’ என்று தனக்குத்தானே சொல்லிச் சிரித்தான். புதிய ரத்தம் பெற்றவனென அவன் திசை மடங்க முனைந்தான். என்னவோ இடித்தது. ‘டங்’ கென்று அரவம் கேட்டது. அரவம் கண்டாற் போன்று விழித்தான்.

நடை வண்டி நிலை குப்புறக் கிடந்தது.

“ராஜா… என் கண்ணே ! என் தெய்வமே… உன்னைப் பெற்ற எங்களுக்கு இனியானும் உயிர்ப் பிச்சை அளிக்க மனசு இறங்கப்படாதாடா?… ஐயோ!”

வீரமாகாளி சிரித்துக் கொண்டிருக்கிறாள்…

***

அறந்தாங்கி புதுக்கோட்டை பஸ், வீட்டைச் சுற்றி மடங்கியது.

எதை நினைப்பான்?

எதை மறுப்பான்?

ஆனந்தனின் மேனி புல்லரித்தது. அந்தப் பதினோரு மாதங்களில் ராஜாவை அழைத்துக்கொண்டு இதே காரில் போய் குழந்தை ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் விசுவிடம் எத்தனை தடவை காண்பித்து மருந்து வாங்கி வந்திருக்கிறார்கள்.

விதிக்கு மருந்து இல்லையாம்…

வினைக்கும் மருந்து இல்லையா?

“தெய்வமே, எங்க ராஜா எங்கே?”

மனம் அழுதது.

ராஜா எங்கே?

ஏமாற்றமும் ஏக்கமும் புடைசூழ, நெற்றி நரம்புகள் புடைத்து நிற்க, நிலைக்காமல், நிற்காமல் அங்கும் இங்குமாகத் தேடினான் ஆனந்தன். சித்தபேதம் கொண்டவன் மாதிரி.

“ராஜா…”

பாசம், கண்ணீராகப் பொங்கிப் புரள, கண்ணீர் பாசமாகப் பெருகி வழிய, வெறி கொண்ட பாவனையில் அலறினான் அவன்.

உயிர்ப் பதைப்புடன் ஓடோடி வந்தாள் சுசீலா. தாய் நெஞ்சம் தவித்தது. துடித்தது. புடவை முன்றானை நாசியை நாடியது. “அத்தான், இட்டிலியைச் சாப்பிடுங்க!” என்று வேண்டினாள்.

“நம்ப ராஜாவை விட்டுட்டு என்னை மட்டும் இட்டிலி சாப்பிடச் சொல்றியே, சுசீ?”

“ஐயோ, அத்தான்!”

“சுசீ, அப்போ நம்ப ராஜா துளித் துளியாக இட்டிலியை ‘நப்பு’க் கொட்டிச் சுவைச்சுத் தின்பானே! தெய்வம் போல… அந்த அழகை எப்படி சுசீ மறக்கமுடியும்?”

“ஆமாங்க!” என்று கேவிக் கேவி அழுதாள் அன்னை , “சாப்பிட்டுட்டு கடைப்பக்கம் போங்க, மனசுக்கு ஒரு மாற்றம் கிடைக்கலாமுங்க” என்றாள்.

“சுசீ, நீ ஒண்டியா இருந்து, அழுது புலம்பி, உருகி உருக்குலைந்து போகிறேன் என்கிறாயா? உன் கண்ணீரைத் துடைக்க ராஜாகூட இல்லையே, சுசீ?”

“ஐயோ, ராஜா! தெய்வமே, எங்க தெய்வத்தை எங்ககிட்ட நல்லபடியாய் ஒப்படைத்து விடு, தெய்வமே!”

அப்போது, வீரமாகாளி கோயில் மணி ஒலித்தது. “சுசீ!’

“அத்தான், தெய்வம் நல்ல சகுனம் கொடுக்குதுங்களே! நம்ம ராஜா உயிரோடு நம்பகிட்டே வந்து சேர்ந்திடுவான்னுதானே அர்த்தம்?”

‘ஊம்’ கொட்டினான் ஆனந்தன்.

அவள் சிரித்தாள்.

சிற்றண்டி முடிந்தது.

அவனும் அவளும் மௌனப் பிண்டங்களாக நின்றார்கள். அவர்கள் பார்வையில் ராஜாவின் வெள்ளிக்கிண்ணி தென்பட்டது; ராஜாவின் நடைவண்டி காட்சிதந்தது. அதோ, கிலுகிலுப்பை, ஊதுகுழல், டமாரம்!

ராஜா… ராசா….

பெற்ற உள்ளங்கள் இரண்டும் தணல் மெழுகுகளாயினவோ?

கனவுகள் கண்டு விழிப்பவன் போல ஆனந்தன் வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்தோடினான்: “சுசீ! இதோ பார் நம்ப ராஜாவை!’ என்று ஆனந்தக் களி துலங்கக் கூவினான்.

பழைய பத்திரிக்கையொன்று காலில் சிக்கியது. எடுத்தான் ஆன்ந்தன்.

இந்தப் படத்திலுள்ள ராஜா எங்கள் ஒரே குழந்தை. வீரமாகாளியம்மன் தந்த வரப் பிரசாதம். பூச்சொரியல் திருவிழாக் கச்சேரியின்போது நாங்கள் கச்சேரி கேட்டுக்கொண்டிருந்தோம். எனக்கும் என் மனைவிக்கும் நடுவில் எங்கள் கண்மணி ராஜா அமர்ந்திருந்தான். அம்மன் பேரில் பாடப்பட்ட ராகமாலிகையில் மெய்மறந்திருந்த நாங்கள் சுயநினைவு பெற்றுப் பார்க்கையில் எங்கள் தெய்வத்தைக் காணவில்லை!

தேடாத இடமில்லை; ராஜா இருபது சவரன் நகைகள் அணிந்திருந்தான்.

நகைகளைப் பற்றிக் கவலையே இல்லை. ஆனால், எங்கள் ராஜாவை மட்டும் யார் கண்டாலும், யார் கையில் இருந்தாலும் எங்களிடம் உயிரோடு ஒப்படைத்தால் போதும். அவர்கள் கேட்கும் பொருளைத் தட்டாமல் கொடுப்பேன். அறந்தாங்கியில் ராஜா காபி முதலாளி ஆனந்தனை யாவரும் அறிவார்கள். ஒரு உயிரைக் காட்டுவதன் மூலம் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய புண்ணியம் கிடைக்கும்!

இப்படிக்கு
ஆனந்தன் – சுசீலா

விளம்பரம் ராஜாவைக் காட்டவில்லை.

‘எங்களுக்கு பைத்தியம் பிடிச்சிட்டால் கூடத் தேவலாமே? என்று தவித்தார்கள் பெற்றவர்கள்.

***

நிலா மலர்ந்த முன்னிரவு வேளை.

ஆனந்தன் முன்கட்டிலும் சுசீலா பின் கட்டிலுமாகப் படுக்கைகளில் புரண்டு கொண்டிருந்தார்கள். ராஜா பிரிந்த பின், அவர்களும் இப்படிப் பிரிந்து விட்டனர் போலும்!
கசக்கிப் பிழிந்த பெருமூச்சுகள்!

கணங்கள் பேய்க் கணங்களாக ஊர்ந்தன.

அப்போது

“தாயே, ராப்பிச்சை போடு!….. உன் பிள்ளை குட்டிங்க நல்லா இருக்கும். என் மகன் பசியாலே துடிக்கிறான். பிச்சை போடம்மா… தர்மம் தலைகாக்கும் தாயே!”

வாசற்புறமிருந்து சாடி வந்த சொற்கள் சுசீலாவின் தாய் உள்ளத்தில் சிலிர்ப்பை ஏறுபடுத்தியிருக்க வேண்டும். ராசா சாப்பிடும் வெள்ளிக் கிண்ணியில் சோறும், குழம்பும் போட்டு எடுத்துக் கொண்டு வெளியே நடந்தாள்.

ஒளியில் மிதந்து நின்றாள் பிச்சைக்காரி. முரண்டு பிடித்து வீரிட்டலறியது இடுப்புக் குழந்தை.

“ஏம்மா, குழந்தையோட அழுகை ஓயறதுக்கு ஒரு வாட்டி பால் கொடுக்கப்படாதா, என்ன?’ என்று குரல் தழு தழுக்கக் கேட்டாள் சுசீலா.

பிச்சைக்காரியின் முகம் மாறியது. தலையைத் தாழ்த்தியபடி, தோளில் தொங்கிய பையிலிருந்து பாத்திரத்தை எடுத்தாள்.

“இந்தா, இது உனக்கு, இது உன் பிள்ளைக்கு” என்று சொல்லி, பிச்சையிட்டுவிட்டு, தலையை நிமிர்த்தினாள் சுசீலா, கண்கள் கசிந்தன.

பிச்சைக்காரியின் மகன் அந்தச் சோற்றைக் கண்டதுதான் தாமதம், உடனே பிஞ்சுக் கரங்களால் சாதத்தை அள்ளி அள்ளி வாயில் திணித்துக்கொண்டான்.

சுசீலாவின் மேனி நடுங்கத் தொடங்கியது. விழிகளைத் துடைத்துக் கொண்டு உன்னிப்பாகப் பார்வையைச் செலுத்தினாள். ஆ…. ராஜாவா? ஆஹா! ராஜாவேதான்! என் ராஜாவேதான்!…தெய்வமே!’ அவளது அன்னை மனம் ஆனந்தத்தில் தவித்தது. அதே கண்கள், அதே உதடுகள்…!’ அதோ, இரண்டு பற்கள் கீழ்வரிசையில்!….

அந்தக் குழந்தை சுசீலாவைப் பார்த்துக் கொண்டேயிருந்தது. எப்படிக் கறுத்து மெலிந்துவிட்டது!

கைக்கு ஐந்து வீதம் போட்டிருந்த ஐந்து கொலுசுகள் எங்கே? இடுப்பில் கட்டியிருந்த சலங்கைச் சங்கிலி எங்கே? கடுக்கன்கள் எங்கே? டெர்ரின் ஸ்லாக், நிஜார் எல்லாம் எங்கே?

“தாயே, உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு, உன்பிள்ளை குட்டி எழுதிக் கெடக்கும்!” என்று கும்பிட்டு விட்டுக் குழந்தையும் தானுமாகப் புறப்பட்டாள் பிச்சைக்காரி.
தத்தளித்தாள் சுசீலா, “ஏ, பிச்சைகாரி! நில்லு!” பிச்சைக்காரி நிகைத்து நின்றாள்.

அந்தக் குழந்தை இப்போதும் சுசீலாவை இமைக்காமல் பார்த்த வண்ணம் இருந்தது.

“பிச்சைக்காரி, இப்படி உள்ளே வா. பயப்படாமல் வா!”

“இந்தாப் பாரு , நீ வச்சிருக்கிற இந்தக் குழந்தை உண்னுடையதா?”.

“பின்னே?…” அதிகாரமாக எதிர்த்துக் கேட்டாள் பிச்சைக்காரி. கீழே இறங்கத் துடித்துக் கொண்டிருந்த குழந்தையை இறுகப் பற்றிக் கொண்டாள். “இருடா, காளி!” என்று அடக்கினாள்.

“தாயே! காளி ஆணையாய்ச் சொல்லு. இந்தப் பிள்ளை, நீ பெற்ற பிள்ளையா? சொல்லு தாயே, சொல்லு!” விக்கலுக்கும் விம்மலுக்கும் இடையே கை கூப்பிக் கெஞ்சினாள் சுசீலா.

“நான் பெத்த மகன் இல்லீங்க! ஏனுங்க கேட்கறீங்க?” என்று மேனி நடுங்கினாள்.

“அது என் குழந்தை! பத்து மாசம் தவமிருந்து சுமந்து நான் பெற்ற மகன் அவன்!” உணர்ச்சிப் பெருக்குடன் செப்பினாள் சுசீலா எம்பித் துடித்த மார்பை அழுந்தப் பற்றிக்கொண்டாள். விழிகள் புனலாடின.

“இது உங்க பிள்ளை என்கிறதுக்கு ருசு என்னா? ஆதாரம் என்னா?” என்று ஓங்காரமாகக் கேட்டாள் பிச்சைக்காரி.

“ராஜா! என் தெய்வமே!” என்று அலறினாள் அந்தத் தாய்.

அடுத்த கணம்…..!

தாய்ப்பால் பீரிட்டுப் பொங்கிச் சிதறி வழியத் தொடங்கி விட்டது!

மேனி புல்லரிக்க நின்ற சுசீலா, தன் தெய்வ மணிக்கரங்கள் இரண்டையும் குழந்தையை நோக்கி ஏந்தி விரித்தாள்.

தாவி ஓடி வந்த அந்தப் பிள்ளை , சுசீலாவின் மார்பகத்தைச் சரண் அடைந்தது. “அ…ம்…மா! அம்மா !”

“தாயே! உங்க மகன் தான் என் காளி!” என்று தேம்பினாள் பிச்சைக்காரி.

“ஏழெட்டு மாசத்துக்கு முன்னாடி இப்ப இருக்கக் கூடிய இதே கோலத்திலே பிறந்த மேனியாய் இந்தப் பிள்ளையை பட்டுக்கோட்டை நாடியம்மன் சந்நிதியிலே கண்டெடுத்தேன். என் பேச்சு சத்தியமுங்க! குழந்தையைக் கயவாடிக்கிட்டுப் போன எந்தப் பாவியோ, நகை நட்டுகளைக் கழற்றிக்கிட்டு, மனசு இரங்கி இதைக் கொல்லாமல் விட்டுப்புட்டுப் போயிக்க வேணும்!” என்றாள் அவள்.

“ராஜா! தெய்வமே!”

ஆனந்தனே வந்து விட்டான். ராஜா திரும்பினான். “ப்… பா! ப்… பா!” என்று செருமினான்.

“ராஜா! எங்க தெய்வமே! இந்தாப் பாரு உன்னை !” என்று தழுதழுக்கக் கூறிய ஆனந்தன், தன் கையிலிருந்த ராஜாவின் புகைப்படத்தைக் குழந்தையிடம் காட்டினான்.
ராஜா கைகொட்டிச் சிரித்தான்.

“தாயே, நான் புறப்படுறேனுங்க!” என்று விம்மினாள் பிச்சைக்காரி.

“தாயே, நீ எங்க கண்ணுக்குப் பிச்சைக்காரியாகவே தோணலே!… இந்தா! ” என்று சொல்லி ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நோட்டுக் கொத்தை நீட்டிக் கெஞ்சினாள் சுசீலா.

பிச்சைக்காரி நடு நடுங்கினாள். “தாயே, இந்தப் பிச்சைக்காரிக்கு இனி வேண்டியது சாண் வயிற்றுக்குப் பிடி சோறு மட்டுந்தான் … அதைத்தான் அள்ளி அள்ளிக் கொடுத்துப்பிட்டீங்களே? பின்னே, எனக்கு எதுக்குங்க தாயே, பணமும் காசும்?… ஒண்ணும் வேண்டாம்! ஆனா, இந்த ஏழைக்கு ஒரேயொரு ஆசைதான் மனசிலே, தவிச்சுக்கிட்டு இருக்குது. இந்தப் படத்தை மட்டும் எனக்குக் கொடுத்துப்பிடுங்க. கோடிப் பொன்னைக் கொட்டிக் கொடுத்ததாட்டம் நினைச்சுக்கிடுவேனுங்க, தாயே! கும்பிட்ட கைகளில் ஈரம் சொட்டியது.

அதோ, கைகளில் புகைப்படத்துடன், கண்களில் கண்ணீருடன் புறப்பட்டு விட்டாள். அந்தப் பிச்சைக்காரி!

“ராஜா…! எங்க தெய்வமே!…தாயே! வீரமாகாளித்தாயே!…”

ஆஹா!…. வீரமாகாளி எவ்வளவு கருணையோடு சிரிக்கிறாள்!

– பூவையின் சிறுகதைகள் – முதல் பதிப்பு – டிசம்பர் 2003 – பூவை பதிப்பகம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *