தூறல்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 18, 2019
பார்வையிட்டோர்: 6,299 
 
 

திம்மராஜபுரம்.

மாலை நான்கு மணி.

மழை வரும்போல் வானம் இருட்டிக்கொண்டு வந்தது.

வயலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சிதம்பரநாதன், தூறல் ஆரம்பிக்கும் முன் வீடு திரும்ப எண்ணி வேகமாக நடந்தார். விறுவிறுவென வேகமாக நடந்து அவர் குடியிருக்கும் நெடிய தெருவில் பிரவேசித்துவிட்டார்.

தெரு முனையில் இருந்தே சிதம்பரநாதன் பார்த்துவிட்டார். கோட்டைசாமியின் மகள் காந்திமதி அவள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அடுத்த வீட்டுப் பெண்ணுக்கு தலைசீவி ஜடை போட்டுக் கொண்டிருந்தாள். காந்திமதியும், சிதம்பரநாதனை தூரத்தில் வரும்போதே கருட பார்வை பார்த்துவிட்டாள். தூரப் பார்வையிலேயே அவர்கள் இருவரின் பார்வையும் தயக்கத்துடன் கலந்துகொண்டன.

ஊரார் யாருடைய கவனத்திலும் சிக்காத மர்மமான பார்வைக் கலவை இது. காந்திமதியின் வீட்டைத் தாண்டுகிறபோது நடையின் வேகத்தை சிறிது குறைத்துக்கொண்ட சிதம்பரநாதன், இந்த ஒரு சில வருட வழக்கப்படி ‘டப்பா’ கட்டுக் கட்டியிருந்த வேட்டியை மெதுவாக கீழே இறக்கி விட்டுக்கொண்டார். இது அவர் காந்திமதிக்குக் காட்டும் சின்ன மரியாதை. அதுவும் ரகசிய மரியாதை. இந்த ரகசிய மரியாதை ஏற்பட்டிருப்பதெல்லாம் கடந்த சில வருடங்களாகத்தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்னால் சிதம்பரநாதனின் மனைவி மஞ்சள் காமாலையில் இறந்துபோனாள். ஆனால் கோட்டைச்சாமியின் மகள் காந்திமதி விதவைப் பெண்ணாகி எழெட்டு வருஷங்களாகிவிட்டன. இருபதாவது வயதில், அதுவும் கல்யாணமான இரண்டு வருடங்களில் காந்திமதியின் புருஷன் செத்துப்போனது ஊர்க்காரர்கள் எல்லோருக்கும் போல சிதம்பரநாதனுக்கும் அதிர்ச்சியான, வேதனையான செய்திதான்.

கோட்டைசாமி, சிதம்பரநாதனுக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும்தான். காந்திமதியின் பதினெட்டாவது வயதில் திருச்செந்தூருக்கு பக்கத்தில் இருக்கும் குரும்பூரில் நல்ல இடமாகப் பார்த்துதான் அவளைக் கல்யாணம் பண்ணிக் கொடுத்திருந்தார்கள்.

அப்போதெல்லாம் சின்ன வயசுப் பெண்ணான காந்திமதி, சிதம்பரநாதனின் எந்த மாதிரியான கவனத்திலும் இடம் பெற்றதில்லை. அவளை கவனித்துப் பார்க்கும் முகாந்திரமும் சிதம்பரநாதனுக்கு இல்லை. அவருடைய உலகமும், காந்திமதியின் உலகமும் வேறு வேறானவை. காந்திமதியின் புருஷன் செத்துப்போனது தெரிந்ததும், மனைவியை அழைத்துக்கொண்டு சிதம்பரநாதனும்தான் அடுத்த நிமிஷமே கோட்டைச்சாமியின் குடும்பத்துடன் குரும்பூருக்கு ஓடினார்.

சூறைக் காற்றில் சாய்ந்துபோன இளம் வாழைக்கன்று போல கிடந்தாள் காந்திமதி. கோட்டைச்சாமியை அரவணைத்தபடி ஆயிரம் தடவை ஆறுதல் வார்த்தைகள் சொல்லித் தேற்றிவிட்டுத்தான் சிதம்பரநாதன் மனைவியுடன் திம்மராஜபுரம் திரும்பினார். அப்புறம் அனைத்துக் காரியங்களும் முடிந்து காந்திமதியையும் குரும்பூரில் இருந்து அழைத்து வந்து விட்டார்கள்.

அதன்பிறகு பல மாதங்களுக்கு காந்திமதி வாசலுக்குக்கூட வராமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தாள். யாராவது அவளுடைய வீட்டிற்குப் போனால்கூட அவர்களின் கண்ணில் படாமல் ஒளிந்து கொள்வாள். ரொம்பநாள் கழித்து அவ்வப்போது கொஞ்சமாகத் திறந்திருந்த வாசல் கதவின் குறுகலான இடைவெளியில் ஓரிரு நிமிடங்கள் அவளின் உருவம் தென்படலாயிற்று. அப்புறம் கொஞ்சநாள் கழித்து காந்திமதி வீட்டுத் திண்ணையில் நிற்பதைப் பார்க்க முடிந்தது.

அப்போதெல்லாம் ‘பாவம் கோட்டைசாமி மவ…’ என்கிற அனுதாபத்திற்கு மேல் சிதம்பரநாதனின் மனதில் வேறு எண்ணம் எதுவும் வந்ததில்லை. இரண்டு வருடங்களுக்கு முன், சிதம்பரநாதனின் மனைவி திடீரென்று மஞ்சள் காமாலையில் இறந்துபோனாள். கோட்டைசாமி குடும்பத்துடன் போய் அவருக்கு ஆறுதல் சொன்னார்.

மனைவி இறந்த தன்னுடைய ஐம்பத்தைந்தாவது வயதிலிருந்து சிதம்பரநாதன் தன் வாழ்க்கையை தனிமையில் ஓட்டினார். ஒரு ஆரோக்கியமான ஆணுக்கும், பெண்ணுக்கும் தனிமை கொடுமையானது. தனிமையில் உடல் தகித்து ஊற்றெடுக்கும் எண்ணங்கள் வெப்பமானது.

அவருடைய மனைவி இறந்துபோன பிறகு, ஒரு சமயம் காந்திமதியை அவள் வீட்டு வாசலில் பார்த்தபோது, ‘இவளுக்குப் புருஷன் கிடையாது; எனக்குப் பெண்டாட்டி கிடையாது’ என்கிற சின்ன ஒப்பீட்டு எண்ணம் தரையை நோக்கிப் பாய்கிற காக்கையைப் போல ஒரு பாய்ச்சல் பாய்ந்தது.

முதலில் சிதம்பரநாதனுக்கே இந்த எண்ணப் பாய்ச்சல் திகைப்பானதாகவும், சோகமானதாகவும் இருந்தது. பிறகு இந்தத் திகைப்பையும், சோகத்தையும் காந்திமதியும் உணர்ந்து கொள்ளும்படி தன் கண்களில் காட்டியவாறு அவள் எதிரில் சிதம்பரநாதன் நடக்க ஆரம்பித்தார். அவரின் இந்த ஏக்க நடை ஒருநாள் காந்திமதியின் கண்களில் ஒரு புதிய அர்த்தத்துடன் பட்டு விட்டது.

முதலில் அவள் தயங்கி தயங்கித்தான் சிதம்பரநாதனின் நடையை மெளனமாகப் பார்த்தாள். அப்புறம்தான் அவளுடைய மனசிலும் ஒருவித மலைப்பு, முட்டைக்குள் இருந்து பொரிக்கும் குஞ்சு போல ரொம்ப ரொம்ப ரகசியமாகப் பொரிந்தது. குஞ்சு பொரித்தது சிதம்பரநாதனின் கழுகுப் பார்வைக்கு புலப்பட்டு விட்டது. இதற்குப் பிறகுதான் காந்திமதி, அவருடைய கண்களில் வெறும் கோட்டைசாமியின் மகளாகத் தெரியாமல் சின்ன வயசு விதவைப் பெண்ணாகத் தெரிய ஆரம்பித்தாள். அவளுடைய உடல் வனப்பும் அன்றிலிருந்து சிதம்பரநாதனின் கண்களுக்குக் குறிப்பாக தெரியத் தொடங்கியது. அதன் பின்தான் வனப்பு உள்ள இளம் வயசுப் பெண்ணைப் பார்க்கிற ஆண்பிள்ளையாக சிதம்பரநாதன், காந்திமதியை ஒரு பிரத்யேக கவனிப்புடன் கள்ளப் பார்வை பார்க்க ஆரம்பித்தார். நாளடைவில் இதே கள்ளப் பார்வை கவனிப்பு காந்திமதியிடமும் தொற்றிக்கொண்டது.

அதுவரை திம்மராஜபுரம் கிராமத்தின் நல்ல வசதியான நில உடைமைக்காரர்களில் கொஞ்சம் அழுத்தக்கார மனிதராகவும், குடும்பத்துக்கு வேண்டிய மனிதராகவும் மட்டுமே அவளால் பார்க்கப்பட்டுக் கொண்டிருந்த சிதம்பரநாதன்; பெண்டாட்டியை இழந்த கம்பீர வயதான சிறந்த ஆணாக காந்திமதிக்கு தெரிய ஆரம்பித்துவிட்டார். அவளின் இந்தப் பார்வை மாற்றத்தை சிதம்பரநாதனின் மேட்டு விழிகள் உடனே கவனித்து விட்டன.

மழையின் ஆரம்பத்துளிகள் முகத்தில் தெறிக்கும் போது ஏற்படுகின்ற இன்பச் சிலிர்ப்பு அவர்களுக்குள் அரும்புவதற்கு இந்தப் பார்வை மாற்றங்களே போதுமானதாக இருந்தது. மழையின் இந்த ஆரம்பத் தூறல்கள் சிறிது காலமாக யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் தூறி தெறித்துக் கொண்டிருந்தன. ஆனால் எத்தனை நாளைக்கு இப்படி ஆரம்பத் தூறலாகவே தூறிக் கொண்டிருப்பது…? பெரிய மழையாகக் கொட்டித் தீர்க்க வேண்டாமா? தீர்க்கலாம்தான்… ஆனால் அதில் பிரச்சனைகள் வர வழி இருக்கிறது. பெரிய மழை கொஞ்சம் ஆபத்தானது. வெள்ளம் கிளம்பிவிடும் ! வெள்ளம் கண்டிப்பாக சேதாரங்களை ஏற்படுத்திவிடும்…!

திம்மராஜபுரம் ரொம்பவும் சின்ன கிராமம். ஊர்க் கட்டுப்பாடு என்கிற கரைகளால் சுற்றிக் கட்டப்பட்ட கிராமம். அந்தக் கிராமத்தில் போய் சிதம்பரநாதனுக்கும் காந்திமதிக்கும் இடையே வெள்ளம் ஏற்படுகிற மாதிரி உறவு மழை பெய்தால், அவசர அபாய நடவடிக்கைகளுக்கு இருவருமே ஆளாக வேண்டிவரும். அதற்கெல்லாம் இருவரும் தயாரில்லை.

அதனால் வெள்ளம் வருகிற அளவிற்கு மழையை பெய்வித்துக் கொள்ளாமல் குற்றாலத்துச் சாரலாகவே இரண்டு பெரும் தூறிக் கொண்டிருந்தார்கள். யாருக்கும் புலப்படாத அடிமணல் நீரோட்டமாக ஓடிக் கொண்டிருந்தார்கள்.

ஆனால் சிதம்பரநாதனின் மனதில், இப்படி சின்ன மழைத் தூறலாகவே இருந்து கொண்டிருந்தால் போதுமா? என்ற கேள்வி ஆணுக்குரிய ஆங்காரத்துடன் எழுந்தது. யோசித்துப் பார்த்துவிட்டு அவரின் திருட்டுப் புத்தி ‘போதாது’ என்று முனங்கியது. சில நிமிடங்கள் அவருடைய உணர்வுகளில் சின்ன வன்முறை, பலூன் போல உப்பியது. என்ன வெள்ளம் வந்தாலும் மேடான இடத்திற்குப் பெயர்ந்து விட்டால், தப்பி விடலாமே…!

ஆனால் என்ன… அந்த மாதிரியான இடப் பெயர்ச்சிக்கு வேறொரு விதமான துணிச்சலான இளமை வேண்டும். சிதம்பரநாதனிடம் இருக்கிறதா அது? யோசிக்கவே வேண்டாம். சிதம்பரநாதனிடம் அது கிடையாது. வேறு வழியில்லை… தூறலே போதும்.

சிதம்பரநாதன், காந்திமதியின் பார்வைத் தூறலில் நனைந்துகொண்டே; அவரின் பார்வைச் சாரலில் அவளையும் நனைத்துக்கொண்டே, அவருடைய வீட்டுப் படியேறி திண்ணையில் களைப்புடன் சற்று நேரம் மூச்சு வாங்க நின்றார்.

பிறகு பூட்டைத் திறந்து வீட்டினுள் சென்றார்.

டி.வி யில் மாலை செய்திகளை கவனிப்புடன் கேட்டார்.

அவரோ திம்மராஜபுரத்தின் பண்ணையார். மரியாதைக்குரியவர். பிரபலமானவர். நெல்லை மாவட்டத்தில் பலருக்கு அவரின் பணக்காரப் பண்ணையார் ‘கெத்து’ நன்றாகத் தெரியும்.

அவருடைய போதாத நேரம், me too வில் அவர் காந்திமதியால் இழுக்கப்பட்டு நாறடிக்கப் பட்டால்…

‘மழையும் வேண்டாம், கிழையும் வேண்டாம். தான் இறக்கும்வரை இந்தத் தூறலே போதும்டா சாமி’ என்று உறுதி பூண்டார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *