தூரத்துப் பார்வையில்….!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 7, 2024
பார்வையிட்டோர்: 1,484 
 
 

(1995ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று வெள்ளிக்கிழமை…! இந்து மதத்தினர்க்குப் புனிதமான நாள்…! “வெள்ளிக்கிழமை… விடியும் வேளை…. வள்ளிக் கணவன்… பேரைச் சொல்லி.. வாசலில் கோலமிட்டேன்…” போன்ற பக்திப் பாடல்கள் வானொலியில் தேனொலியாய் ஒலித்துக் கொண்டிருந்தன. அடுக்குமாடி வீட்டுத் தலைவாயின் முன் இருக்கும் ஒரு சிறு பகுதிக் ‘காரைத் தரையில்” பத்ம ஜெயா கோலம் போட்டு முடித்துவிட்டு எழுந்தாள். சூரியோதயத்தில் மஞ்சள் குளித்து, மங்களக் குங்கும மலர்முகத்தோடு பத்ம ஜெயா மகிழ்ச்சியின் உச்சத்தில் உலவிக் கொண்டிருந்தாள்…!

அப்போது எதிர்வீட்டின் தலைவாசற் கதவு திறக்கப்படும் ஒலி கேட்டது. பத்ம ஜெயா தன் வீட்டுத் தலைவாசலின் இரும்புச் சட்டப் பாதுகாப்புக் கதவைப் பிடித்துக்கொண்டு சற்று நேரம் காத்து நின்றாள். மிஸஸ் யாப் கன்னங் குழியச் சிரித்துக் கொண்டே மலர்முகம் காட்டியபோது இருவரும் பரஸ்பரம் ‘குட்மார்னிங்’ சொல்லிக் கொண்டார்கள்; புன்முறுவல் பூத்துக் கொண்டார்கள்.

பத்மஜெயாவின் பெருமகிழ்ச்சிக்குரிய காரணத்தை மிஸஸ் யாப் நன்கறிவாள். வேலைக்குப் போக வேண்டிய பரபரப்பு: இல்லாமல் அமைதியாக இறைவழிபாடு செய்து கொள்வதற்குப் “புனித வெள்ளிக்கிழமை” பொதுவிடுமுறை வாய்க்கப் பெற்றது ஒன்று “விலக்கு” இல்லாத விதிவசப் பேருவகை மற்றொன்று…! பொன்முகத்துப் புன்முறுவல்களின் சங்கமத்தில் புரிந்துணர்வும் இரண்டறக் கலந்து விட்டிருந்தது.

இன்று மாலை ஆறரை மணிக்கு “சுமங்கலி பூஜை” என்ற நினைவு கூர்தலைத் தோழிகள் இருவரும் பரிமாறிக் கொண்ட நிலையில் அவரவர்கள் வீட்டின் இரும்புக் கவசக் கதவுகளை மட்டும் பூட்டிக் கொண்டு “பை பை” சொல்லிய வண்ணம் மறைந்தனர்….!

அந்தி சாய்ந்து கொண்டிருந்தது…! ஆறு மணி ஆகியிருக்கக் கூடும்…! இரண்டு வீடுகளின் தலைவாசற் கதவுகளும் பரக்கத் திறந்திருந்தன..! சாம்பிராணி, ஊதுவத்தி, கற்பூரம், பூக்கள் ஆகியவற்றின் நறுமணங்கள் வீடுகளின் வெளிப்புறம் வரையிலும் விசாலித்துக் கொண்டிருந்தன….!

ஆறரை மணியளவில் இருவரும், செம்பவாங் புனிதமரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் சுமங்கலி பூஜையில் கலந்து கொண்டு “அம்மனின்” அருள் பெற விரைந்து கொண்டிருந்தனர். பேரூந்து நிறுத்தத்திலும், ஏறத்தாழ ஒரு பத்து நிமிடப் பேரூந்துப் பயணத்தின் போதும் இரண்டு பெண்களும் இருவேறு திசைகளில் சிந்தித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சீன இனத்துப் பெண்ணான இவள் இந்து மத வழிபாடுகளில் இத்தனை ஆர்வம் காட்டுகின்றாளே… என்ற பூரிப்பு இயல்பாகவே தோன்றியது. இதற்குரிய காரணமும் சிந்தனையில் பதிந்து பரவியது.

பத்து ஆண்டுகளுக்கு முன்னம் அடுக்குமாடி வீடமைப்புக் குடியேற்றத்தின் போதுதான் அறிமுகம் ஆனார்கள். அப்போது அவர்களுக்குள் அவ்வளவு நெருக்கமில்லை…..! மிஸஸ் யாப் பேறு காலத்துக்காகக் “கண்டாங் கெர்பாவ்” மகப்பேறு மருத்துவமனை சென்றாள். அயலார் – அண்டை வீட்டார் என்ற முறையில் முகஸ்துதி போற்றி, “தாயும் சேயும் நலமா?” என்று கேட்டபோது, மிஸ்டர் யாப்: “தாய் நலமே….! என்று மட்டும் மங்களகரமாகப் பதில் சொன்னார்.

பத்ம ஜெயா புரிந்து கொண்டாள். அடுத்த நாள் ஆஸ்பத்திரிக்கு” விபூதிப் பிரசாதம் சகிதம் விரைந்து கொண்டிருந்தாள். மிஸ்டர் யாப் குடும்பத்தினர் வியந்து போயினர். ‘கவலை வேண்டாம், குழந்தை பிழைத்துக் கொள்வான்…!” என்று தன்னம்பிக்கையோடு உறுதியாகச் சொல்லித் தன் இறை நம்பிக்கையைப் புலப்படுத்திக் கொண்டு திரும்பினாள். மருத்துவத் துறையின் விற்பன்னர்களுக்கே ஒரு சவாலாக அமைந்த அந்தக் குழந்தையின் நோய் குணமாகியது; ஓரிரு தினங்களில் வீடு வந்து சேர்ந்தார்கள்.

அந்த நாள்முதல் இந்தப் புனிதமரம் பாலசுப்பிரமணியர் ஆலயத்தின் மீது ஒருவகைத் தனிப்பற்று; அருளில் பெரும் நம்பிக்கை…! “இயலும்” போதெல்லாம் பத்ம ஜெயாவுடன் ஆலயம் செல்வாள்: முறையாக இறைவழிபாடு மேற்கொள்வாள்; சிறப்பு வழிபாடுகளிலும் சிந்தை மகிழ்வுடன் கலந்து கொள்வாள். – இது பத்ம ஜெயா….!

எப்போதும் எல்லாவற்றுக்கும் விளக்கம் சொல்பவள் இந்தச் சுமங்கலி பூஜையின் தார்மீகத்தைப் பற்றிச் சொல்லவில்லையே: இதன் மூலப் பொருள் என்னவாக இருக்கும்? சொல்லாமல் இருந்துவிட மாட்டாள். அல்லது கேட்டுத் தெரிந்து கொள்வோமே…! – இது மிஸஸ் யாப்.

கால தேவனின் ஒரு மென்மைச் சிரிப்பில் ஏறக்குறைய இருபத்தைந்து நிமிடம் கரைந்து தேய்ந்தது. பேருந்து நிறுத்தத்திலிருந்து தார்மீகம் பற்றிக் கேட்க நினைத்தாள். அவளை முந்திக்கொண்டு, “என்ன இது… வானம் இருட்டிக் கொண்டு வருகிறது… பெரு மழையின் மிரட்டலாக இருக்கிறதே.. என்று பத்மஜெயா பேச்சைத் தொடங்கி விட்டாள்.

இடைமறித்துக் கேட்காமல் இருப்பதுதான் இப்போதைக்கு உசிதமானது. இந்த நேரத்தில் அவளது ஆதங்கம் எல்லாம் மழை மிரட்டலின் தொடர்பாக இருக்கின்றது; சகுணத் தடைச் சிந்தனையில் மேலோங்கியிருக்கும் அவளுக்கு மேலும் ஒரு மனச் சங்கடத்தைக் கொடுக்க வேண்டாம்… என்று. தனக்குள்தானே சிந்தித்துக் கொண்டு, மிஸஸ் யாப் நடைபயின்று வந்தாள்…!

அதோ….! புனிதமரம் ஸ்ரீ பாலசுப்ரமணியர் ஆலயம்….! அருள் மாமணி முழக்கம் நாதஸ்வர மேள ஒலியோடு இரண்டறக் கலந்து எழுந்து ஒலித்துக் கொண்டிருந்தது. வண்ண விளக்கொளிகளின் ஊடுருவலில் தோரணப் பேரழகுகள் துலங்கிக் கொண்டிருந்தன…! ஆலயத்தின் நித்திய கால ஆராதனை நிறைவேறிக் கொண்டிருந்தது. பத்மஜெயா தொலைபேசித் தொடர்பில் பெயர்களைப் பதிந்து கொண்டிருந்ததனால் வழிபாடு முடிந்த கையோடு முதல் வேலையாகப் பணம் செலுத்தி “ரசீது” பெற்றுக் கொண்டு வந்தாள்.

ஆலயத்தின் ஆறுகால பூஜையில் ஐங்காலப் பூஜை தீபாராதனை நிகழ்ந்தேறி, தீபமும் தீர்த்தமும் வழங்கிக் கொண்டிருக்கின்றபோது எண்ணிப் பார்த்திராத அளவில் இடி மின்னலுடன் பெருமழை தொடங்கிவிட்டது. ஆலய நிர்வாகிகள் உட்பட அப்போது ஆலயத்தில் குழுமியிருந்தோர் அனைவரும் அங்கலாய்த்தவாறு ஆத்மார்த்தமாக இறைவனை வேண்டிக் கொண்டிருந்தனர்.

ஏறத்தாழ ஒரு மணிநேரம் பெய்யாப் பெருமழை பெய்து ஓய்ந்தது. இப்போதும் ஆலயத்தில் சூழ்ந்திருந்தோர் மலர் முகங்களில் மலர்ச்சி தோன்றவே இல்லை…! ஏன்?

முன்னாள் நேவல்பேஸ் தொழிலாளர்களின் குடியிருப்புத் தளங்கள் – செம்பவாங், சொங் பாங், புக்கிட் செம்பவாங் ஏரியாக்களின்” கிராமப்புறச் சூழ்நிலை வீடுகள் எல்லாம் அரசியலாரின் புனரமைப்புத் தொடர்பான நிலப்பற்றுமானக் கொள்கைக்கு இலக்காகி விட்டிருந்தன. தனித் தனி வீடுகளும் நேவல் பேஸ் “புளோக்குகளும்” தரைமட்டமாகிக் கிடந்தன.

ஆயிரத்துத் தொளாயிரத்து எண்பத்தொன்றாம் ஆண்டு அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட நிலமீட்புப் பணி தீவிரப் பட்டுக் கொண்டிருந்த ஒரு காலக் கட்டம்…..! ஒன்பது ஆண்டுகள் இடைவிடாது தொடர்ந்த பணி முடியுந் தறுவாயில் இருந்து வந்தது. அசோகச் சக்கரவர்த்தியின் படையெடுப்பில் போர் முடிவு அமைதியின் போது, நாடு காக்கத் தம் இன்னுயிர் நீத்தப் போர் மறவர்களின் பிணக் குவியல்கள் கிடந்தன போல் வீடுகள் இடிக்கப்பட்டுத் தகர்க்கப்பட்டுச் சின்னா பின்னமாகிக் கிடந்தன.

இந்தப் பகுதிகளில் வாழ்ந்து வந்த இந்தியக் குடும்பங்கள் இப்போது அங் மோ கியோ, ஈசூன், தோபாயோ, மார்சிலிங், உட்லண்டஸ் ஆகிய பகுதிகளில் அடுக்குமாடி வீடமைப்பு பேட்டைகளில் வீடுகளை வாங்கிக்கொண்டு சென்றுவிட்டிருந்தன. அவர்களெல்லாம் “பஸ்” பிடித்து வந்து சேர வேண்டுமே…. இங்கே மழை ஓய்ந்திருக்கிறது; அங்கேயெல்லாம எப்படியோ? என்றிவ்வாறு அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.

இறைவன் திருவருளோ…? எவர் செய்த புண்ணியமோ? மழை ஓய்ந்த மாயம் தெரியவில்லை; மங்கையர்தம் புடைசூழல் ஒரு பெரிய விந்தையைப் போல் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஆலயத்தில் சூழ்ந்திருந்தோர் அனைவரது முகத்திலும் செந்தாமரைப் பூ மலர்வின் செழுமை படர்ந்து கொண்டிருந்தது.

இன்றைய சிறப்பு வழிபாடு தொடங்கித் துவங்கிக் கொண்டிருந்தது. இயற்கையால் ஏற்பட்ட ஒரு சில மணித்துளிகளின் கால தாமதத்தை எவரும் பொருட்படுத்திக் கொள்ளவில்லை….!

சுமங்கலி பூஜை உபயதாரர் மங்கள் கௌரி வெண்கொற்றக் குடையின் கீழ் முன்னே நிற்க: அவரைத் தொடர்ந்து ஐந்தாறு பெண்கள் “சீர் வரிசை” ஏந்திவர. அம்மங்கையர்தம் பின்னணியில் ஆலய நிர்வாகிகள் மற்றையோரும் அணியாய் வர மேள தாள இசை முழக்கத்துடன். ஆலயத்தின் உட்பிரகார மும்முறை ஊர்வலம் ‘கும்ப மரியாதையாக” நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அம்மன் சன்னிதானத்துக்கு எதிரில் அமைக்கப்பட்டிருந்த, “நீல விதானத்து நித்திலம்பூம் பந்தரின்” கீழ் நிறைமனத்துச் சுமங்கலியர் சூழ்ந்து அமர்ந்தனர். வேள்வித் தீக்குண்டத்தின் முன் வேதாகமங்கள் வினைத் திட்பத்தோடு நடைபெற்றுக் கொண்டிருந்தன.

“வெளியில்” சென்று வரவேண்டிய விகற்பம் ஏற்பட்டதனால் தோழிகள் இருவரும் எழுந்து விரைந்து கொண்டிருந்தனர். “ஆசுவாசப்” பட்டுக் கொண்ட பின்னர், ஆங் கோர் அமைதிச் சூழலில் நின்று இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். சடங்கு பூர்வச் சம்பிரதாயங்கள் அனைத்தும் சார்ந்து நிகழ்ந்த பின்னரே “தீபாராதனை’ என்பது பத்மஜெயாவுக்கு நன்கு தெரியும்; பதட்டமில்லாமல் பேசிக் கொண்டிருந்தாள். இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு திருமதி யாப் “அந்தத்” தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினாள்.

திருமணமான பெண்கள் தங்களது “தாலி பாக்கியம்” நிலைக்க வேண்டும் என்பதற்காக சுமங்கலித் தெய்வமான மங்களநாயகி மாரியம்மனுக்கு நடத்தப் பெறுவது இந்தச் சிறப்பு வழிபாடு…!

கணவன் நோய் நொடியில்லாமல்- துன்பப்படாமல் – அமைதியாகவும், இன்பமாகவும். மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்று தெய்வத்தை வேண்டிக் கொள்வது இந்தச் சிறப்பு வழிப்பாட்டின் குறிக்கோள்.

விதிவசம் காரணமாக வரும் பெருந் துன்பம் அல்லது விபத்து என்பது தவிர்க்க முடியாத ஒன்றுதான்….! “தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போய்விட வேண்டும்” – என்பது இதன் தாத்பரியம்….!

இவ்வாறு தன்னுடைய சிற்றறிவுக் கெட்டிய சில விளக்கங்களைச் சொல்லி முடிப்பதற்கும் வேதாகமங்கள் முடிந்து தீபாராதனை தொடங்குவதற்கும் சரியாக இருந்தது. இருவரும் அம்மன் சன்னிதானத்துக்கு விரைந்து கொண்டிருந்தனர்.

அம்மனின் அருட் பிரசாதம் “காளாஞ்சியைப்” பெற்றுப் புறப்பட எத்தனித்தபோது, “பிரசாதம்” சாப்பிட்டு விட்டுத்தான் போகவேண்டும் என்று அருட் கொடையாளர் மங்கள கௌரி அனைவரையும் இடைமறித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். “நயத்தகு நாகரிகம்” கருதி அவள்தம் அன்புக் கட்டளைக்குப் பலர் இசைந்து கொண்டிருந்தனர்.

ஆலயத்தின் அருட்பிரசாதம் என்றால் ஆவலோடு கேட்டு வாங்கிச் சாப்பிடும் பக்தி சிரத்தை மிக்க திருமதி யாப்.. இன்று ஏன் பிடிவாதமாக மறுத்து வீட்டுக்குப் போகப் புறப்பட்டாள்….!

கால தாமதம் ஒரு காரணமாக இருக்கக்கூடும் என்று சிந்தித்துக் கொண்ட பத்ம ஜெயா மங்கள கௌரியிடம் நாசூக்காக ஏதோ சொல்லிக் கொண்டு விடைபெற்று வந்தாள்.

மங்கள கௌரி பட்டுப்புடவை சரசரக்கப் பம்பரமாகச் சுழன்று பிரசாத வகைகளைப் பந்தியில் பரிமாறிக் கொண்டிருந்தாள். அடிக்கொரு தடவை அகலக் கரை “பார்டர்” முந்தானையைச் சரி செய்து கொண்டு மிகவும் பரபரப்பாக ஏராளமாக எஞ்சியிருந்த பிரசாத வகைகளைப் “பொங்குஸ்” போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள்….! இந்தச் சமயத்தில் இரண்டு மலாய்ப் பெண்கள் ஆலயத்தின் தலைவாசலில் “டேக்சியை” விட்டிறங்கி வந்து மங்கள கௌரியின் பக்கத்தில் போய் நின்று அவள் காதோரமாக ஏதோ சொல்லிவிட்டுத் திரும்பினார்கள். இதைக்கவனித்த மிஸஸ் யாப்… நெஞ்சம் துணுக்குற்றாள்…. ஏன்..?

இருவரும் பேரூந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டு இருக்கும்போது தன்தோழி “சுதாரிப்பு” இல்லாமல் சோர்வு நடைபோடுவதைப் பத்மஜெயா உன்னிப்பாகக் கவனித்தாள், எதையும் அப்போதைக்கப்போது “தீர்வு” செய்து கொள்ளும் மனப்போக்குடையவளாதலால் பிரசாதப் பந்தி மறுதலிப்புக்குரிய காரணத்தை மிகவும் நாசூக்காக மனங் கோணாத நிலையில் கேட்டாள்.

பண்புத் திலகம் பத்மஜெயாவின் இந்த கேள்விக்கு எந்த வகையில் பதில் சொல்வது? மனக் கருத்தை எவ்வாறு வெளியிடுவது..? என்ற அமைப்பில் சிந்தித்துக் கொண்டே மிகவும் மெதுவாக நடந்து வந்தவள் ஒரு சில மணித்துளிகளை மௌனத்தில் கடத்தியது தவிர்க்க முடியாத ஒன்றுதான்…..!

ஒரு கணம் பத்மஜெயாவின் முகத்தைக் கூர்ந்து கவனித்துவிட்டு, “உனக்கு இந்த அம்மாளைத் தெரியுமா? நல்ல பழக்கமா..? என்று ஒரு முன்னுரை வடிவமாகக் கேட்டாள்.

அவ்வப்போது கோயிலுக்கு வரும்போது அந்த அம்மாளைப் பார்த்திருக்கிறேன்..! ஆலயச் சந்திப்பின்போது “ஹலோ” சொல்லிக் கொள்வோம்; அவ்வளவுதான்….! ஏன்? என்று பத்மஜெயா வியந்து போய்க் கேட்டாள்.

இல்லை.. ஒரு பேச்சுக்காகக் கேட்டேன்…. அவ்வளவுதான்…! ஆமாம்; சுமங்கலி பூஜை நிறைவின் போது இரண்டு மலாய்ப் பெண்கள் அவசரமாக ஓடிவந்து என்னவோ இரகசியமாகச் சொல்லிவிட்டுச் சென்றார்களே… அதை நீ கவனித்தாயா..? என்று ஒரு கேள்வியைக் கேட்டு வைத்தாள்….

நிழல் வடிவம் போல் தோன்றிய அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து கொண்ட பத்ம ஜெயா, “உம்…” என்று, தலையை மட்டும் ஆட்டிக் கொண்டாள்….!

இன்றைக்கு நடைபெற்ற இந்தச் “சுமங்கலி பூஜை” என்பது, என்னுடைய சிற்றறிவுக்கு எட்டிய வரை இந்து மதத்தின் ஆசாரங்களில் மட்டுமே இருக்கின்ற சிறப்புமிக்க ஒரு வழிபாடாகக் கருதுகின்றேன். இதற்கு ஒரு காரணம் திருமணமான பெண்களுக்கு அடையாளமாக, புனிதமான அணிகலனாகத் துலங்குகின்ற “தாலி” என்பது பிற இனத்தவர்களுக்கு இல்லை. அதனால் அதன் தொடர்பான ஆகம நெறி வழிபாடுகள் இல்லாமல் இருந்திருக்கலாம்.

இவ்வாறு திருமதி யாப் சொல்லிக் கொண்டிருந்தபோது பத்மஜெயாவின் உள்ளம் தாமரை மலர்வு போல் தகைத்து பூரித்தது. “இந்தச் சுகம் இனி கிடைக்கப் போமோ…” என்பதுபோல, ஒரு கணம் கண்களை மூடி மெய்சிலிர்க்கும் புகழுரையை அங்கீகரித்து நெகிழ்ந்தாள்.

இந்தச் சிறப்பு வழிபாட்டைப் புனிதம் நிறைந்த ஒன்றாகப் போற்றி மகிழ்கின்றேன். அதே சமயத்தில்… என்று ஏதோ சொல்ல வந்தபோது, கல் தடுக்கிக் கால் இடறியது. ஒரு நிமிடம் நின்று நடைபாதையில் கிடந்த அந்தக் கல்லை எடுத்து, தூரமாகத் தூக்கி எறிந்துவிட்டு நடையைத் தொடர்ந்தாள்…..!

அதே சமயத்தில்… என்று, தான் சொல்லத் தொடங்கிய அந்தத் தொடர் அறுபட்டதும் ஒரு நன்மைக்குத்தான் என்று தனக்குள் சிந்தித்துக் கொண்டாள். “அது இருக்கட்டும் பத்மா.” என்று, திருமதி யாப் பேச்சைத் தொடங்கியபோது…ஏன் இவள் இப்போது வேறொரு விஷயத்துக்குத் தாவுகிறாள்..?” என்று நினைத்தாலும் இடைமறிக்காமல்” கொட்டத் தொடங்கினாள்.

ஏழாண்டுகளுக்கு முன்னம் ஏற்றுமதி இறக்குமதி தொடர்பான நான் வேலை செய்யும் கம்பெனிக்குத் தலைமை நிர்வாகியாகப் பதவி உயர்வு பெற்று ஒரு தமிழர் வந்தார். அவர் பெயர் தனராஜ்…! இந்த நிறுவனம் எங்கள் இனத்தைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஒருவருக்குச் சொந்தமானது உங்கள் இனத்தைச் சேர்ந்த ஒருவர் மேலதிகாரியாக நியமிக்கப்பட்டார் என்றால் அவருக்கிருக்கும் ஆற்றல்- திறமை – ஆளுமை என்பது பற்றியெல்லாம் விவரிக்க வேண்டாம்…..!

தனராஜ பூபதி கம்பெனிக்கு வந்து சேர்ர்ந்தபோது ஏறக்குறைய ஐம்பது பேர் பணிபுரியும் அலுவலகத்தில் அவ்வப்போது தஸ்தாவேஜுகள் தொடர்பாகப் பேசிக்

கொள்வதைத் தவிர, தனியன்பு உபசரிப்புகள் எங்களிடையே இருந்ததில்லை. குறிப்பாகக் கூறினால் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் “குட்மார்னிங்” சொல்லிக் கொள்வதோ. புன்முறுவல் பூத்து அறிமுகங்களை அங்கீகாரப் படுத்திக் கொள்வதோ கூட என்றுமே இருந்ததில்லை. ஏதோவோர் இயந்திர மயமான இயக்கம்: அவ்வளவுதான்..!

இந்த “இயந்திர இயக்கத்தை, பொறுப்பேற்றுச் செயல்பட்ட சில தினங்களிலேயே மாற்றியமைத்து விட்டதொரு சாதனை மாமன்னர்” என்று அவரைப் பாராட்டினாலும் தகும்….! ஒரு தலைமை மேலதிகாரி என்ற தராதரத்தினை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, எதிர்ப்படுவோருக்குப் புன்முறுவல் பூத்து “வணக்கம்” கூறி நலம் விசாரித்துச் செல்வார்.

அன்றாடப் புழக்கத்தில் பதவி-வயது வித்தியாசம் பாராமல் வலிந்து “வணக்கம் -நன்றி” கூறும் படலத்தின் மூலமாக அசையாத உள்ளங்களையும் அசைத்து, ஆசியப் பண்பாடுகளை உணர்த்துவித்து, உலகளாவிய நிலையில் பேசப்படும் மனிதாபிமானத் தத்துவங்களைக் கம்பெனியில் மகத்துவம் பெறச் செய்த மாமனிதர் என்றே மகுடம் சூட்டிப் பாராட்டி மகிழலாம்….!

எங்கள் கம்பெனியில் இன்றைக்கு நிலவுகின்ற மகிழ்ச்சிகரமான மனித உறவுகளுக்கு – ஆன்ம நேயங்களுக்கு வித்திட்ட பெருமை அந்தப் புண்ணியவானையே சாரும்…! ஏறக்குறைய பத்துப் பேர்தாம் அவரொத்த வயதினர். எஞ்சிய நாற்பதுக்கும் மேற்பட்டோர் இளைய தலைமுறையினர்.

இந்த நிறுவனத்தில் பணிபுரியும் எல்லோரும் “பதவி” அடிப்படையில் தங்களைத் தாங்களே தராதரப்படுத்திக் கொள்ளாமல் “ஊழியர்கள்” என்ற அடிப்படையில், உறவு- நட்பு – சமூகம் ஆகியவற்றின் அடிச்சுவடுகளைப் பதிய வைப்பதன் மூலம் உற்பத்தித் திறனை உருவாக்க முடியும் என்பதை மெய்ப்பித்துக் காட்டிய மேன்மைமிகு பண்பாளர்..! இன்னொரு மொழியில் சொல்வதென்றால் அவர், கனிமொழி மன்னன்; கருணைக் கடல்….!

எங்களின் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தனராஜ பூபதி என்றைக்குமே சோர்ந்து காணப்பட்டதில்லை. எப்போதும் துறுதுறு வென்று சுறுசுறுப்பாகப் பம்பரம் போல் இயங்குவார். கவலைப்பட்டுக் கொண்டு கன்னத்தில் கையூன்றி “முகங் கருகி” அமர்ந்திருந்த நிலையை “எவருமே” பார்த்திருக்க முடியாது “மருத்துவ விடுப்பு” என்று அலுவலகத்துக்கு வராமல் இருந்ததே இல்லை.

அவரை “இரட்டை வேடக்காரர்” என்று கம்பெனியிலுள்ளவர்கள் சொல்வார்கள். வேலை நேரத்தில் “கடு சிடு” என்று கெடுபிடியாகத் தோன்றும் அவர் வேலை நேரம் அல்லாத வேளைகளில் சாந்த சொரூபியாகத் தோழமையோடு பழகுவார்….!

அவ்வப்போது அவரால் நடத்தப் பெறும் கலந்துரையாடல் கூட்டத்தின்போது ஒரு நாள் “எப்போதும் முகமலர்ச்சியுடன் இருக்கிறீர்களே; உங்களுக்குத் துன்பம் – கவலை என்று எதுவுமே ஏற்படுவதில்லையா? என்று நானே கேட்டு விட்டேன்.

‘வீட்டுக்கு வீடு வாசற்படி… என்று பழமொழி சொல்வார்கள்: கேள்விப்பட்டதில்லையா? இன்பங்கள் ஏற்று மகிழும் இதயத்துக்குத் துன்பங்களையும் துணிவோடு எதிர்கொள்ளும் வலிமை இருக்க வேண்டும். பொருட்படுத்திக் கொள்ளாவிட்டால் துன்பம் ஒரு பொருட்டாகாது” – என்று, ஒரு பெரிய தத்துவார்த்தக் கருத்தினைச் சர்வ சாதாரணமாகச் சிரித்துக் கொண்டே சொன்னார்: உள்ளபடியே நான் வியந்து போனேன்….!

ஒரு “டைப்பீஸ்ட்” – மேடம் சான் என்ற பெண். “ஏன் சார் உங்களுக்கு “சீக்கே” (நோயே) வராதா…? என்று கேட்டு விட்டாள், அபசகுனமாகக் கேட்கிறாளே.. என்று. எல்லோருமே ஆத்திரத்துடன் அவளைப் பார்த்தோம்…..! அப்போதும் அவர் சிரித்துச் செழித்த முகமலர்ச்சியோடு, ‘எனக்கும்கூட எம்.சி. (மருத்துவ விடுப்பு) எடுக்க வேண்டும் என்று ஆசைதான்; இறைவன் அருள் பாலிக்கவில்லையே…!” என்றார்.

அறிவாற்றல் மிக்க அவர்தம் அந்தப் பதிலுக்காக அனைவருமே கையொலி எழுப்பி ஆரவாரித்தபோது அந்த மகிழ்ச்சியைப் பொன்முகத்தின் புன்முறுவலோடு வரவேற்றுக் கொண்டார்.

“உங்கள் மனைவி பேரழகியாமே…. அதனால்தான் எங்களுக்கெல்லாம் அறிமுகப்படுத்தவில்லையா?” என்று, முந்திய அமங்கலக் கேள்வியின் மழுப்பலைப் போல் அலுவலகப் பணிப்பெண் அமீனா பீவி குறும்புத் தனமாகக் கேட்டு வைத்தாள். அதற்கவர், “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்றார். எந்தப் பொருளில் சொல்கிறார் என்று இனம் புரிந்து கொள்ள முடியாத சாதுரியமான ஒரு பதிலாக இருந்தது.

தனராஜ பூபதியைத் திரு பாங் என்பவர், “இவர் பசியா வரம் பெற்றவர்” என்று கிண்டலோடு பாராட்டுவார். ஆமாம்; அவர் காலையில் பசியாறுவதில்லை; ஒரே ஒரு கப் காப்பி மட்டும். மத்தியானச் சாப்பாடும் இல்லை: மாற்றாக ஒரு கோப்பை தேசீ. இரவு ஒருவேளை உணவு மட்டும்தான்….! அவரால் எப்படி முடிகிறதோ?

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் வியந்து போய்க் கேட்பதுண்டு. அப்போதெல்லாம் “அவ்வளவுதான்” என்று சொல்லிச் சிரித்துக் கொண்டு தலையை மட்டும் அசைத்துக் கொள்வார். அவர் கூறும் அந்த “அவ்வளவுதான்” என்பதற்கு என்ன பொருள்..? புதிர்தான்….!

சமீபத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் ஒருநாள்…..! எல்லோரும் மதியம் உணவுக்குப் போய்விட்டார்கள். பாதி நேரம் “லீவு” கேட்டுக் கொண்டு போகலாம் என்று காத்திருந்தேன். அவரது ஆப்த நண்பர் கம்பெனிக் காவலர் சியோங் அவருக்குத் “தேசீகௌ….! கொண்டு சென்றார்; மேலும் சிறிது நேரம் காத்திருந்தேன்.

இந்நேரம் தேனீர் அருந்திவிட்டிருப்பார் என்று எண்ணிக் கொண்டே அவருடைய தனி அலுவலகத்தின் “ஸ்பிரிங்” கதவைத் தட்டிவிட்டு அந்த அரைக் கதவுக்கு மேலே தலையை நீட்டி அனுமதி கேட்க நினைத்தேன்: ஓ… மை குட்னஸ்….!

”பத்மா… நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து வாயடைத்துப் போய் நின்றேன். ஏன் தெரியுமா…? அந்தத் தனியறைக்குள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சோகமே உருவமாக மாலை மாலையாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார். கையில் ‘சிகரெட்’ புகைந்து கொண்டிருந்தது; தேசீ கௌ காற்றாடிக் காற்றில் உறைந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சற்றும் எதிர்பார்த்திராத என்னுடைய வருகையை அவர் அதிர்ச்சியோடு எதிர்கொண்டார்.

தனராஜ பூபதி தனது இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டு, கைத்துவாலையை எடுத்து முகத்தை அழுந்தத் துடைத்த வண்ணம், முகமலர்வுப் பொன் முகத்தை வலிந்து வரவழைத்தவாறு “எஸ் மிஸஸ் யாப்…? என்று வினவியதுடன் எதிர் இருக்கையிலே அமரும்படி சுட்டிக் காட்டினார்….!

தூரத்துப் பார்வையில் நிஜங்கள் நிழலாகி விடுமோ” என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். இப்போது விழிகள் நான்கின் சங்கமம்…! என்னையும் மீறி என் விழிகள் வெப்பத் துளிகளை உகுத்துக் கொண்டிருந்தன. எதற்காக அவரைப் பார்க்கச் சென்றேனோ அதை அடியோடு மறந்து விட்டேன். அன்றைய அதிர்சசி நிலையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு என் மனம் இயல்பாகவே வந்துவிட்டது.

அவருடைய இதயச் சுமையைச் சற்றே தோள் மாற்றிக் கொள்ளும் தோழியாக அமர்ந்து கேட்டேன்; அவரும் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னார்.

“இரட்டை வேடதாரி” என்று, என்னை நீங்கள் எல்லோரும் விமர்சிப்பது உண்டல்லவா? அது நூறு விழுக்காடு சரி…! துன்பமே-கவலையே இல்லாதவன் போல் நடிக்கிறேன். சகோதரி… மனித வாழ்க்கை என்பது பிரச்சினைகளின் சுழற்சியில் இருப்பதுதான்; ஆயின், பிரச்சினைகளின் ஒட்டு மொத்தக் கூட்டுருவமாக ஒருவன் ஆகிவிடுகின்றான் என்றால் அஃது வாழ்க்கை ஆகாது அல்லவா? என்று கேட்டு விட்டு, சிகரெட் புகைக்கத் தொடங்கினார். கேள்வியாகவும் பதிலாகவும் அமைந்த அவரது கருத்தைத் தலையை மட்டும் அசைத்து அங்கீகரித்துக் கொண்டேன்.

அதன்பின் அவர் சொல்லி முடித்தவற்றைக் கொஞ்சம் பொறுமையோடு கேள். ஐம்பத்து மூன்று வயது நிரம்பிய அவருக்கு மனைவி, மூன்று பிள்ளைகள். மூத்தவன் பையன். அடுத்த இரண்டும் பெண்கள்: திருமணம் செய்து கொடுத்தாயிற்று. மகன் நன்றாகப் படித்து உத்தியோகத்தில் இருக்கின்றான். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இலட்சிய மனைவியைத் தேடிக் கொண்டிருக்கின்றான். பிள்ளைகள் சம்பாதிக்கத் தொடங்கிய போது அவர்களுடைய சம்பாத்தியத்தில் கை வைப்பதில்லை என்பது இவர் தனக்குள் செய்து கொண்டிருந்த முடிவு…..! அதே சமயத்தில் பிள்ளைகளின் வருமானத்தைப் பெறக்கூடாது. என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார் அவரது மனைவி….!

இன்றைக்கு வரை இவரது வரும்படியை எதிர்பார்த்தே குடும்பம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. கை நிறையச் சம்பளம் வாங்கினாலும் ‘அறுவடை’ தினத்தை எதிர்நோக்கியே குடும்பத்தின் செலவுகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது. ஏன்? எப்படி?

“வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப்பார்” என்று ஒரு தொடர்மொழி சொல்வார்களே…! ஒரு வீட்டைக் கட்டி, கடனாளியாகித் தேர்ந்து வந்த சமயத்தில், செம்பவாங் பகுதியின் நிலப்பற்றுமானக் கொள்கைக்கு இலக்காகி வீடு உடைபட்டது. மத்திய சேமநிதித் தொகை இருப்பை முழுமையாகச் செலுத்தி, அடுக்குமாடி வீடமைப்பில் ஐந்தரை வீடொன்றை வாங்கியாகி விட்டது. இந்த “ரெனவேஷன்” என்று ஒன்று இருக்கின்றதே. இதற்கு ஏறத்தாழ இருபத்தெட்டாயிரம்; அதற்கும் பின் ஆடம்பரத் தளவாடங்கள். புதுமனை புகுவிழா என்பன போன்றவற்றுக்குப் பன்னீராயிரம்…! வீட்டைக் கட்டிப் பார் தொடர் மொழி கூறும் துன்பச் சுமை…! பகட்டு படாடோபம் என்றால் கடன்தானே….!

ஒன்பது கல்யாணங்களின் ஒட்டு மொத்தமான ஆரவாரங்களுக்கும் தனராஜ பூபதியின் தலையே உருண்டது. இரண்டு மகள்களுக்குத் தானே திருமணம் என்று கேட்கத் தோன்றும்.

அவரது மனைவியின் உடன் பிறப்புகள் ஒன்பதுபேர். அவர்களின் ஒரு பையனுக்குத் தவிர ஏழு பேருக்குத் திருமணம் செய்து வைத்தார்…! இன்னும் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடும் படலம்…..! மனைவியின் பெற்றோர் ஏழைத் தொழிலாளர்கள்….! ஆகவே, சம்பந்தம் பேசுவது முதல் “சகல சம்பத்தும்” தனராஜ பூபதியின் வீட்டில்தான் நடந்தாக வேண்டும். திருமணம் செய்து கொண்டிருந்த குடும்பத்தில் மூத்த மருமகன் என்ற “இராஜ மரியாதை” அடிப்படையில் அவ்வப்போது ஆயிரக்கணக்கான வெள்ளிகள் அடிபட்டுக் கொண்டிருந்தன. அத்தனையும் “ஊமையன் கனவு”-போன்ற ஈடுபாடு…..!

சமுதாய வீதியில் தன்னுடைய தராதரத்தை உயர்த்திக் கொள்ளத் துடிக்கும் “தாடகைகள்” இன்றுவரை சமூகப் பேரரங்கில் இருக்கவே செய்கின்றார்கள் என்பதற்கு அவர்தம் துணைவியாரே ஆதாரமான ஓர் எடுத்துக்காட்டாவார்….!

அறிமுகம் இருந்ததோ இல்லையோ; பின்னர் அது வருமோ வராதோ அழைப்பு வந்துவிட்டதென்றால் “மொய்ப்பணம்” நூற்றியொன்றுக்கும் மேல்தான்…..! இல்லாவிட்டால் முணுமுணுப்பும் நச்சரிப்பும்தான் எஞ்சி நிற்கும்….!

பிறந்தநாள் – தீபாவளித் திருநாள்- பொங்கல் – வருடப் பிறப்பு சிறப்பு வழிபாடுகள்…..! வைபோகங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயிரக் கணக்கில் கொடுத்தாக வேண்டும்; இல்லையென்றால், “என்ன சுகம் கண்டேன்: இதைவிடச் செத்துத் தொலைவதே மேல்; இருக்கவே இருக்கிறது அடுக்குமாடி வீடமைப்பு…..! என்றிவ்வாறு தற்கொலை மிரட்டல்….!

இன்னும் இரண்டு ஆண்டுகள் தாம் கை நிறையச் சம்பளம் வாங்கும் கண்ணியத் தொழில்….! அதற்குப் பின் அன்றாடக் ‘கஞ்சிக்கு” எந்தப் பிள்ளையின் முகத்தைப் பார்ப்பது? வீட்டுக்கு “மொட்டையடித்த நிலையில்” மத்திய சேமநிதி இருப்பு தீர்ந்து விட்டது. எஞ்சியுள்ள ஒரு சில ஆண்டுகளின் சி.பி.எஃப் – எத்தனைக் காலத்தின் முடையைத் தாங்கும்? என்பது போன்ற எதிர்காலச் சிந்தனையில் ஏற்படுகின்ற கவலை ஒரு பக்கம்.

தனராஜ பூபதி கம்பெனியின் வர்த்தகத் துறை தொடர்பான மாநாடொன்றுக்கு வெளியூர் சென்றிருந்த சமயத்தில், அவருடைய அன்புத் தங்கை, திடீர் வருகையாகச் சிங்கப்பூருக்கு வந்திருந்தபோது ஏதோவோர் பிச்சைக் காசாக ஐம்பது வெள்ளி மட்டும் அன்பளிப்பாகக் கொடுத்து அவமதிப்பு செய்திருந்ததனால் இன்றைய நிலையில் பந்தபாசத் தொடர்பே அற்றுப் போயிருக்கும் கவலை இன்னொரு பக்கம்….!

அவரது தங்கையின் வருகையை அங்கீகரித்துக் கொள்ளாது அவமதித்து அனுப்பிய தவற்றினை இறுமாப்பினைத் தற்காத்துக் கொள்வதற்காக, அவரைக் குற்றவாளியாக்கிக் காட்டிவிட முனைந்து விட்டாள் அந்த அம்மாள்….! ஆம்; பத்மா… எங்கள் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருக்கும் “எழுத்தர்” பகுதித் தலைவி இளமதி என்பவள், ஓர் இளம் விதவை…! அவள் அவரைத் தந்தையாக மதித்துப் பழகி வருகின்றாள்: இது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று…..! அந்த இளமதியைத் தனராஜபூபதி “சின்னவீடாக்”ச் செட்டப் செய்து கொண்டு விட்டார் என்று ஒரு குமைச்சலைப் புகையவிட்டுத் தன்னை மிகப்பெரிய “புனிதவதியாகப்” பதிய வைத்துக் கொண்டிருந்தாள்.

இந்தப் புரட்சித் தீயைப் பற்ற வைத்தபோது, அவர் இப்படியொரு “இடி” தன் தலையில் விழும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை…..! பேரதிர்ச்சிக்குள்ளாகிப் பேசத் தோன்றாமல் வாய் விட்டழுது; “அம்மா… தாயே….! என்னைக் கொல்லாதே….! சமுதாயத்தில் நாலு பேர் மதிக்கும் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் எனக்கு “அவப் பெயரைச்” சூட்டி, அவமதிப்புக்கு உள்ளாக்கி விடாதே…! அவளோ வாழ்க்கையில் விரக்தியடைந்து விதவைக் கோலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் அபலைப் பெண். நானோ சமுதாயத்தால் மதிக்கப்படுபவன்: எங்களுக்குக் களங்கம் கற்பித்துத் தவிர்க்க வியலாத் தற்கொலைகளுக்கு வழிவகுத்து விடாதே; நான் சாவதற்குத் தயார். ஆனால் பாவம் ஏன் அந்த விதவைப்பெண் அநியாயமாகச் சாக வேண்டும். அமைதியாக வாழ விடு…..! எந்தக் கோவிலில் வேண்டுமானாலும் கற்பூரம் அணைத்துச் சத்தியம் செய்கிறேன். நீ நினைப்பது போல் எங்களுக்குள் எந்த உறவுமில்லை…! உன் காலில் விழுந்து கேட்டுக் கொள்கிறேன். எனக்குச் சமுதாயத்தில் இருந்து கொண்டிருக்கின்ற மதிப்பையும் மரியாதையையும் கெடுத்துவிடாதே….! என்று சொல்லி இரத்தக் கண்ணீரே வடித்திருக்கிறார்.

“நான் நம்பத் தயாராக இல்லை; என் வாழ்வில் குறுக்கிட்ட அந்த வாழாவெட்டியை எங்கே பார்க்க நேர்ந்தாலும் அந்த இடத்திலேயே அவள் முகத்தில் காறி உமிழ்ந்து கன்னத்தில் அறைந்தால்தான் என் ஆத்திரம் அடங்கும்…..! என்று, வெறித்தனமாகப் பேசி, அவரது இதயத்தில் ஓர் அங்கலாய்ப்பை ஏற்படுத்தியிருக்கின்றாள் அவரது அன்பு மனைவி…!

ஒரு பெண் சொன்னால் இந்த உலகம் நம்பும்…! அதிலும் அவருடன் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அவருடைய மனைவியே சொல்லும்போது. இந்தச் சமுதாயம் அதை ஆராய்ந்து கொண்டிருக்காது; அப்படியே ஏற்றுக் கொள்ளும் அல்லவா…?

எந்த நேரத்தில் என்ன விபரீதம் நிகழ்ந்து தம்முடைய பேருக்கும் புகழுக்கும் பெருமைக்கும் சமூகப் பேரரங்கில் “இழுக்கு” நேர்ந்து விடுமோ…? என்ற கவலைதான். இப்போது அவர்தம் உள்ளத்தில் இமயம் போல எழுந்து நின்று அல்லும் பகலும் அறுபது நாழிகையும் அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றது. இதயத்தின அடித்தளத்தில் இந்தப் படுபயங்கரமான மிரட்டல் கவலை ஒரு பக்கம்..!

இதுவரை இடைமறித்துப் பேசாத பண்புத் திலகம் பத்மஜெயா. தன்னையுமறியாமல் “இராட்சசி” என்று மென்மையாக அல்ல; வன்மையாகவே சொல்லிப் பற்களை நறநறவென்று கடித்துக் கொண்டாள்…!

பத்மஜெயா… துரதிர்ஷ்ட வசமாக நேற்றும் அவரது கண்ணீர்ப் பிரவாகத்தைக் காண நேர்ந்தது. ஆம். எங்கள் கம்பெனியின் தலைமையகத்திலிருந்து அவருடைய “ரிட்டையர்ட்” பற்றிய முன்னறிவிப்புக் கடிதம் கிடைக்கப் பெற்றிருந்ததைக் காட்டிக் கண்ணீர் உகுத்தார்.

முதுமை பற்றிச் சிந்திக்காமல் முறுக்கேறிய இளமைச் சுறுசுறுப்பினோடு இயங்கிக் கொண்டிருந்த ஒருவர், தன்னுடைய “ரிட்டையர்ட்மெண்ட்” பற்றிய முன்னறிவிப்புக் கடிதத்தை வாங்கும் போது கை நடுக்கத்துள்ளாகி, பின் அதுவே மெய் நடுக்கமாகி, தொடர்ந்து இதயத் துடிப்பின் நடுக்குறு நிலையாகி, அலுவலகத்திலிருந்தே “ஆஸ்பத்திரிக்குக்” கொண்டு செல்லப்பட்டு அங்கேயே உயிர் நீத்தார்.

இப்படி ஒரு செய்தியை எப்போதோ நாளிதழில் படித்திருந்த ஞாபகம் எனக்குத் திடுமெனத் தோன்றி இதயத்தைத் தொட்டபோது; பத்மா… “இறைவா… தனராஜ பூபதியின் வகையில் அப்படியொரு அவலம் ஏற்பட்டு விடாமல் இருக்க அவருக்குப் போதிய மன வலிமையக் கொடுத்தருள்வாயாக…! என்று நான் ஆத்மார்த்தமாக இதோ இந்த முருகனைத்தான் நினைந்து வேண்டிக் கொண்டேன். தனராஜ பூபதியின் அண்டை வீட்டு மலாய்ப் பெண்கள் வந்து திரும்பியதிலிருந்தே எனக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பித்து விட்டது. அந்த நல்லவருக்கு இறைவன் மன அமைதி தர வேண்டும்.

இன்றைய இந்தச் சுமங்கலி பூஜை ஆடம்பரங்கள் எத்தனையெத்தனை தற்கொலை மிரட்டல்களின் பிரதிபலிப்புகளோ..? அந்த ஒன்று ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்…..!

திருமதி யாப் இவ்வாறு சொல்லி முடித்தபோது, தனராஜ பூபதியின் நிலைக்காக ஆதங்கப்பட்டுக் கொண்ட பத்மஜெயா, இத்தனைத் துன்பங்களையும் கவலைகளையும் பொருட்படுத்திக் கொள்ளாமல் இருக்க அவரால் எப்படி முடிகிறது. ஆச்சரியம்தான்….! என்று வியந்து கூறினாள்.

ஓஹோ…நான் அதைச் சொல்ல மறந்து விட்டேன். அவர் ஒவ்வொரு நாளும் அலுவலகம் முடிந்ததும் ஏதாவதொரு “பார்க்குக்கு” சென்று, புத்தகம் படித்திருந்து விட்டு இரவு ஏழரை மணியளவில் எல்லாத் துன்பங்களையும் ஒருசேர எண்ணிப் பார்த்துக் கொண்ட நிலையில் மனம் விட்டு வாய்விட்டு அழுது கவலைகளைக் கண்ணீரில் கரைசலாக்கிக் கொண்டபின் வீடு செல்வாராம்….! ஒட்டு மொத்தமாகச் சிந்தித்து அழுது தீர்த்து விடுவதால் துன்பத்தின் தாக்கம் தெரிவதில்லை.

தனராஜ பூபதியின் துன்ப ஒடுக்கத்தை மனத்துக்குள் பாராட்டிக் கொண்டாள் பத்மஜெயா…! பல பேரூந்துகளைத் தவறவிட்டு விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்கள்; பேரூந்தில் ஏறிக் கொண்டார்கள்.

“நல்லறம் எனப்படும் இல்லறத்தில் இப்படியும் ஒரு “ஜென்மமா….! – இப்படி பத்மஜெயா, “தனாராஜ பூபதிக்கு என்னமோ ஏதோ?” – இப்படி திருமதி யாப்…! இருவரது சிந்தனைத் தேரோட்டமும், ஈசூன் பேரூந்து நிறுத்தத்தில் “பஸ்” நின்றபோது குலுங்கிய குலுக்கத்தில் அறுபட்டது. இருவரும் விரைந்து கொண்டிருந்தனர்; எங்கே…? தனராஜ பூபதி வசிக்கும் அடுக்குமாடிக் கட்டடத் தொகுதிக்குச் சென்று அந்த மலாய்ப் பெண்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தனர், அடுத்த நாள் சனிக்கிழமை… அரைநாள் அலுவலகம் முடிந்து, ஒரு மலர்க் கூடையுடன் தோபாயோ பொது மருத்துவ மனைக்குச் சென்றனர்.

வைத்திய மனைப் படுக்கையில் தன்னந் தனிமையில் வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் எத்தனை முறை அழுது தீர்த்திருப்பாரோ… தெரியவில்லை. நோய்த் துன்பம் உட்பட எல்லாத் துன்பங்களையும், கவலைகளையும் கண்ணீரில் கரைசலாக்கி விட்டுத் தெளிந்த முகத்தோடு பூமலர்வுப் பொன்முகத்தோடு எழுந்து நின்று கரம் குவித்து வணக்கம் கூறினார். திருமதி யாப் தனராஜ பூபதிக்குப் பத்மஜெயாவை அறிமுகம் செய்து வைத்தாள்: பரஸ்பரம் இருவரும் பணபோடு கைகூப்பிக் கொண்டனர்.

சற்று நேரத்துக்குப் பின் பிரியாவிடை பெற்றுக்கொண்டு திரும்பினார்கள். அப்போதுதான் பட்டுப புடவை மேனி அலங்காரத்தினோடு ஆலயச் சிலையொடு அசைந்து வருவதே போல் மங்கள கௌரி வந்து கொண்டிருந்தாள்..!

தனராஜ பூபதி பாலைவனப் பசுந்திட்டுகளில் நீரூற்றுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றார் பத்மா…” என்று திருமதி யாப் சொன்ன சொற்றொடர்களைப் பத்ம ஜெயா தலையை மட்டும் அசைத்து அங்கீகரித்துக் கொண்டே நடந்தாள்….!

– கற்பனை மலர்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: டிசம்பர் 1995, தமிழவேள் நாடக மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *