துவஜஸ்தம்பம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 9, 2019
பார்வையிட்டோர்: 6,098 
 
 

சேலம்.

பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்பு பகுதி.

அந்தத் தெருவிலுள்ள வயதானவர்கள் பலர், பெரியவர் ஆவுடையப்பன் வீட்டில் அன்றும் ஒன்று கூடினார்கள். அவ்வப்போது அந்தத் தெருவில் நடந்து கொண்டிருக்கும் ‘அந்த’ அசிங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தேயாக வேண்டும் என்று மறுபடியும் அவரிடம் முறையிட்டார்கள்.

இது இன்று நேற்று நடப்பதல்ல. கடந்த பல மாதங்களாகவே அவர்கள் அடிக்கடி ஆவுடையப்பனிடம் இதுபற்றி புகார் அளித்துள்ளனர். அனால் ஆவுடையப்பன் “இது ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விஷயம், இதில் நாம் தலையிடுவது மிகவும் அநாகரீகம்…” என்று எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் தெருக்காரர்கள் அந்த விஷயத்தை விடுவதாக இல்லை.

ஆனால் இன்று இது பற்றி புகார் அளித்தது ஒரு மரியாதைக்குரிய குடும்பத் தலைவி. அவள் அந்தச் சம்பவத்தை இன்று நேரிலேயே பார்த்தாளாம். பார்த்து பயந்துபோய் விட்டாளாம்.

மாணிக்கம் கவலையுடன் “ஐயா இதை இப்படியே விட்டா, நாம அனைவரும் தெரிந்தே ஒரு அசிங்கத்தை இந்தத் தெருவில் அனுமதிக்கின்ற குற்றச் செயலுக்கு ஆளாவோம்…” என்றார். பலரும் அவர் சொல்வதை ஆமோதித்தனர்.

விஷயம் இதுதான்…

சென்ற வருடம் விலைக்கு வந்த அந்தத் தெருவின் எட்டாம் நம்பர் வீட்டை ஒரு பெங்களூர் தம்பதியினர் வாங்கி குடி புகுந்துள்ளனர். பெங்களூரில் இருந்துகொண்டே அந்த வீட்டை பேரம் எதுவும் பேசாமல் சொன்ன விலைக்கே வாங்கி விட்டனர். அதன் பிறகு சில மராமத்து வேலைகள் செய்து வீட்டை புதிதாக மாற்றிக்கொண்டு அதில் குடி புகுந்தனர். கணவருக்கு ஐம்பது வயது இருக்கலாம். மனைவிக்கு நாற்பந்தைந்து இருக்கலாம். அவர்கள் அக்கம் பக்கத்தினரிடம் பேச்சு வைத்துக் கொள்வதில்லை. வீட்டிற்கு வேலைக்காரியும் கிடையாது.

அவர்களைப் பார்ப்பதற்காக அடிக்கடி ஒரு அழகிய வளப்பமான பெண்மணி அவர்கள் வீட்டிற்கு ஒரு வெள்ளைநிற டொயோட்டா ஆல்டிஸ் காரில் வந்து செல்கிறாள். பார்த்தால் பெரிய பணக்காரத் தோற்றம். வயது ஐம்பது இருக்கலாம். பகலில் மட்டும்தான் வருவாள். ஒருமணிநேரம் அல்லது ஒன்றரை மணி நேரம் இருந்துவிட்டுக் கிளம்பிவிடுவாள்.

காரை வீட்டிற்கு வெளியே நிறுத்திவிட்டு அவள் உள்ளே வந்ததும், அந்த வீட்டுக்காரரின் மனைவி வெளியே வந்து, சுற்றும் முற்றும் ஒருமுறை பார்த்துவிட்டு, மெயின் கேட்டைப் பூட்டிவிட்டு, பிறகு வீட்டின் கதவையும் உள் புறமாகத் தாளிட்டுக் கொள்வாள்.

அந்தத் தெருவில் வசிப்பவர்களுக்கு அந்த வளப்பமான பெண்மணியின் வருகை ஒரு மர்மமாக இருந்தது. அந்தப் பெண் ஏன் தனியாக காரை ஓட்டிக்கொண்டு வரவேண்டும்? ஏன் பகலில் மட்டும் வரவேண்டும்? அவளுக்கு அந்தத் தம்பதியினருடன் என்ன தொடர்பு?

பலர் பலவிதமாச் சொன்னார்கள்…

அந்த வீட்டின் ஓனர் அந்த வளப்பமான பெண்மணியுடன் முறை தவறிய தொடர்பில் இருப்பதாகவும், திருமணத்திற்கு முன்பே அவர்கள் காதலித்ததாகவும், ஆனால் அது கைகூடவில்லை என்றும், அவரின் மனைவிக்கும் இந்தத் தொடர்பில் சம்மதம் இருப்பதாகவும் கிசுகிசுத்தார்கள்.

சிலர், “காலம் கெட்டுவிட்டது, கலி முத்திவிட்டது… இனிமே இப்படித்தான்.” என்றனர்.

தணிகாசலம், “இதை இப்படியே விட்டு விடக்கூடாது. வளர்ற பசங்க இருக்கின்ற தெரு இது” என்றார்.

அந்தக் குடும்பத் தலைவி தான் பார்த்ததை திரும்பத் திரும்பச் சொல்லி விஷயத்தை பெரிது படுத்தினாள். “காலைல எட்டரை மணிக்கு என் குழந்தைகள் ஸ்கூலுக்கு போய் விட்டன. என் கணவர் ஒன்பது மணிக்கு அலுவலகம் கிளம்பிச் சென்று விட்டார்… நா வீட்டு வேலைகளெல்லாம் முடிச்சுட்டு வீட்டின் கதவைப் பூட்டிட்டு பத்தரை மணி வாக்கில் குளிக்கப் போனேன்.. வெளிச்சத்திற்காக பாத்ரூம் ஜன்னல் கதவைத் திறந்தேன். அப்போது பக்கத்து வீட்டின் படுக்கையறை ஜன்னல் கதவு திறந்திருந்தது.”

“………………………….”

“அதன் வழியே நான் பார்த்தபோத காரில் வந்த அந்தப் பெண்மணி அந்த வீட்டுக்காரரின் தோளில் சாய்ந்துகொண்டு அவர் மார்பில் தன் வலது கன்னத்தைப் புதைத்துக் கொண்டாள். அதைப் பார்த்த எனக்கு திக் திக்கென்றது. மேற்கொண்டு என்ன நடக்கிறது என்று பார்ப்பதற்குள் அந்த வீட்டு அம்மா அவசர அவசரமாக ஜன்னல் கதவின் கர்டன்களை இழுத்து விட்டு மூடினாள்.”

ஆவுடையப்பன், “சரி அப்படியே அவர்களுக்குள் முறையற்ற தொடர்பு இருந்தாலும், இதில் நாம் என்ன செய்ய முடியும்? அவர்களின் வீட்டிற்குள் அமைதியாக நடக்கும் இந்த விஷயம் அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.” என்றார்.

“அப்படிச் சொல்லாதீங்க ஐயா. நாம இருக்கிறது ஒரு மரியாதைப்பட்ட குடியிருப்பு ஏரியா. அப்படி அரிப்பெடுத்து அலையறவங்க இதை வெளியே எங்காவது கண்காணாத இடத்தில் ஒரு ஹோட்டலில் வைத்துக் கொள்ளலாமே! எதற்கு நம் குடியிருப்பு பகுதியில்?” ஆடிட்டர் நரசிம்மன் வெகுண்டார்.

“சரி, நமக்கு பெருமாள் கோவிலுக்கு துவஜஸ்தம்பம் பிரதிஷ்டை செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. அடுத்த தடவை அந்தப் பெண்மணி வரும்போது, நாம மூன்று அல்லது நான்கு பேர் ஒன்றாகச் சேர்ந்து சென்று துவஜஸ்தம்பத்திற்க்காக டொனேஷன் கேட்கப் போவது மாதிரி போகலாம்…”

“நல்ல ஐடியா… ஆனா அந்த வீட்டுக்கார அம்மா மெயின் கேட்டை இழுத்து மூடுவதற்கு முன்பாகவே நாம் அங்கு செல்ல வேண்டும்…”

சரியென்று ஏகமனதாக முடிவு செய்தார்கள். ஆவுடையப்பன், ஆடிட்டர் நரசிம்மன், தணிகாசலம் மற்றும் அந்த பக்கத்து வீட்டு குடும்பத் தலைவி செல்வதாக முடிவு செய்யப் பட்டது.

அடுத்த பத்து நாட்களில் அந்தப் பெண்மணி தன்னுடைய வெள்ளைநிற டொயோட்டா ஆல்டிஸ் காரை ஓட்டிக்கொண்டு வந்தாள். தெரு முனையிலேயே காரைப் பார்த்துவிட்ட ஆடிட்டர் நரசிம்மன், உடனே ‘வாட்ஸ் ஆப்பில்’ மற்ற மூவருக்கும் செய்தி அனுப்பினார்.

அந்தப் பெண்மணி வீட்டின் முன் காரைப் பார்க் செய்துவிட்டு இறங்குவதற்கும், இவர்கள் நால்வரும் அங்கு விரைந்து செல்வதற்கும் டைமிங் சரியாக இருந்தது.

கேட்டருகில் வந்து நின்ற வீட்டுக்காரப் பெண்மணி, வீட்டிற்குள் வருவதற்காக எத்தனித்த நால்வரையும், “வாங்க, வாங்க” என்று முகம் மலர வரவேற்றாள். பிறகு ஆல்டிஸ் அழகிய பெண்மணியைப் பார்த்து “ப்ளீஸ் கம்” என்றாள். அனைவரையும் உள்ளே அழைத்து ஹாலில் வசதியாக அமர வைத்து ஸ்பிளிட் ஏஸியை இயங்கச் செய்தாள்.

பக்கத்து வீட்டுக் குடும்பத் தலைவியைப் பார்த்து, “யு ஆர் அவர் நெய்பர்.. ஆனா இப்பத்தான் எங்க வீட்டுக்கு வர்றீங்க..” என்று சிரித்தாள்.

அப்போது அந்த வீட்டு ஓனரும் இவர்களுடன் வந்து அமர்ந்துகொண்டார்.

ஆவுடையப்பன் மெதுவான குரலில், “நாங்க எல்லோரும் இதே தெருவில் குடியிருக்கோம். நம்ம பெருமாள் கோவிலுக்கு துவஜஸ்தம்பம் செய்து பிரதிஷ்டை செய்ய உத்தேசம்… அதற்காக டொனேஷன் வாங்க வந்திருக்கோம்…” என்றார்.

உடனே அந்த வீட்டுக்காரப் பெண்மணி, “ரொம்ப சந்தோஷம. இவர் பெயர் ராகவன். இவர் பேர்ல ஒரு லட்சம் டொனேஷன் எழுதிக்குங்க… இன்றைக்கு நல்லபடியாக இவர் நடமாடுவதே அந்தக் கடவுளின் செயல்தான்” என்றாள்.

ஆல்டிஸ் பெண்மணி, “என் பெயர் ரோஸ்மேரி. துவஜஸ்தம்பம் என்றால் என்ன?” என்று கேட்டாள்.

ஆவுடையப்பன் “மேடம், அதை தமிழில் கொடிமரம் என்பார்கள். கோயில்களுக்கு அழகு தருவது கொடிமரமாகும். பக்தர்களைக் காக்கவும்; இறை சக்தியை அதிகரிக்கவும்; தீய சக்திகளை விரட்டவும் கோயிலின் நுழைவில் கொடிமரம் நடப்படுகிறது. மரத்தால் செய்யப்பட்டாலும், மெல்லிய உலோகத்தால் மூடப்பட்டிருக்கும். கோயிலில் நமக்கு முதலில் காட்சியளிக்கும் கொடிமரம் மும்மூர்த்திகளின் முத்தொழிலை நமக்கு உணர்த்துகிறது. அவைகள் படைத்தல், காத்தல், அழித்தல் என்பனவாகும். கோயிலில் நடக்கும் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கிறது.” என்று விவரித்தார்.

“ஓ வெரி நைஸ்… என் பெயரில் ஒரு ஐம்பதாயிரம் எழுதிக் கொள்ளுங்கள்.”

வந்தவர்கள் திகைத்துப் போனார்கள். ஒரு கிறிஸ்டியனிடமிருந்து அவர்கள் இதை எதிர்பார்க்கவில்லை.

ஆடிட்டர் நரசிம்மன், “மேடம், உங்களை நான் அடிக்கடி இந்த வீட்டில் பார்த்திருக்கிறேன்… நீங்களே தனியாக வருகிறீகள், போகிறீர்கள்..” என்றார். அந்தத் ‘தனியாக’வில் ஒரு அழுத்தம் கொடுத்தார்.

அந்தப் பெண்மணி ஒருகணம் திகைத்து அடுத்த கணம், “ஆமாம், என் அன்பு மகன் இங்கு குடியிருக்கிறான்.” என்றாள்.

இதைச் சொல்லும்போது அவள் குரல் உடைந்தது.

உடனே அந்த வீட்டின் ஓனர், “இந்த ரோஸ்மேரி அம்மாதான் எனக்கு உயிர் கொடுத்த தெய்வம். நான் பெங்களூரில் ஒரு பெரிய நகைக்கடை வைத்திருக்கிறேன். தற்போது என் மகன்கள் கடையைப் பார்த்துக் கொள்கிறார்கள். எனக்கு ஏற்பட்ட இதயக் கோளாறு காரணமாக மூன்று மாதங்களாக நாராயண ஹிருதாலயா ஹாஸ்பிடலில் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தேன். என்னுடைய இதயம் மிகவும் பலவீனமாகி மாற்று இதயம் பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என் மனைவிதான் எனக்கு தைரியம் சொன்னாள். மாற்று இதயம் கேட்டு கர்நாடகா உறுப்பு தானம் ஆணையத்தில் பதிவு செய்து காத்திருந்தோம். நான் பிழைப்பேன் என்கிற நம்பிக்கையே எனக்குள் சிதைந்துபோனது…

அவர் மனைவி தொடர்ந்தாள்.

“அப்போதுதான் ரோஸ்மேரி மேடத்தின் ஒரே மகன், கோரமான சாலை விபத்தில் சிக்கி கோமா நிலையில் பெங்களூர் ஹாஸ்மாட் ஹாஸ்பிடலில் இருந்தார். டாக்டர்கள் இனி அவர் பிழைக்க மாட்டார் என தெரிவித்து விட்டனர். உடனே ஒரே அன்பு மகனின் உறுப்புகளைத் தானமாக வழங்க பெருந்தன்மையுடன் எழுதிக் கொடுத்தார் ரோஸ்மேரி. மாற்று இதயத்திற்காக காத்திருந்த இவருக்கு மேடம் மகனின் இதயம் உடனே ட்ரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது….”

ரோஸ்மேரி தன் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு கதறி அழுதாள். பிறகு சற்று நேரத்தில் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு, “என் ஒரே மகன் இன்னமும் உயிருடன்தான் இருக்கிறான். அவனின் இதயத் துடிப்பை நான் அடிக்கடி இவரின் மார்பில் என் காதுகளை வைத்து ‘லப் டப்’ சத்தத்தை கேட்டுக் கொண்டிருக்கிறேன். பெங்களூரிலிருந்து இதற்காகவே நான் அடிக்கடி இங்கு வந்து கொண்டிருக்கிறேன்.” எழுந்து சென்று வாஷ்பேஸினில் முகம் கழுவினாள்.

வந்தவர்கள் முகத்தில் சோகம் கப்பியது. அமைதியாக அந்த மூவருக்கும் கைகளைக் கூப்பி கும்பிடு போட்டுவிட்டு எழுந்து நின்றார்கள். பிறகு மரியாதை தொனிக்க அவர்களிடமிருந்து விடை பெற்று வெளியே வந்தார்கள். .

“துவஜஸ்தம்பம் பிரதிஷ்டை செய்யும்போது சொல்லுங்க, நாங்க மூன்று பேரும் அந்த விசேஷத்திற்கு வருவோம்..”

“கண்டிப்பா மேடம்.” கோரஸாகச் சொன்னார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *