துள்ளுமறி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 10, 2024
பார்வையிட்டோர்: 1,276 
 
 

மூன்று மாதங்களே ஆன செம்மறிக் கெடாகுட்டியை தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தாள் பேச்சியம்மா.அது புட்டிப் பாலை குடித்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தது. “ஏண்டி,உனக்கு குடிக்க பால் கொடுத்தா ஆட்டுக் குட்டிக்கு கொடுக்கிறியே”-என அவள் அம்மா வைது கொண்டிருந்தாள். அவர்களின் மளிகைக் கடையில் மிஞ்சும் கீரைகளையும் காய்கறிகளையும் தின்றுவிட்டு மாலையில் பட்டியில் அடைய வேண்டிய ஜீவன், அவர்கள் வீட்டு சோபாவில் படுத்து உறங்குகிறது. பேச்சியம்மா சொல்வதை புரிந்து கொள்வதும்,அதன் பரிபாஷையை பேச்சியம்மா புரிந்து கொள்வதும் தினசரி நடக்கும் செயல். நான்காம் வகுப்பு படிக்கும் பேச்சியம்மா, பல வருடங்களாக குழந்தையின்றி இசக்கி அம்மனிடம் பிள்ளை வரம் வேண்டி பிறந்தவள். அதற்கான நேர்த்திக் கடன் பாக்கி உள்ளது. பல வருடங்களாக ஊரில் இசக்கி அம்மனுக்கு ஊர் பொது கொடை விழா நடக்கவில்லை.அதை ஆவலுடன் எதிர் நோக்கி இருக்கிறார்கள் பேச்சியம்மாவை பெற்றவர்கள். ஊரிலிருந்து அதற்கான செய்தியும்  வந்தது. இசக்கி அம்மன் கோயில் முன் கூடி பெரியவர்கள் கூட்டம் நடந்தது. இதில் பூசாரியும்,சாமியாடியும்,கணியன் அண்ணாவியும் கலந்து கொண்டு ‘வரிக் கொடை’ மூன்று நாட்கள் நடத்துவது என்றும்,தலைக்கு ஐம்பது ரூபாய் ‘தலைக்கட்டு வரி’என்றும் முடிவு செய்தார்கள். அம்மனுக்கு கற்பூர ஆராதனை செய்ததும் சாமியாடிக்கு அருள் வந்தது.அம்மனிடம் கொடை நடத்துவதற்கான உத்தரவை கேட்டார். அதை நடத்துவதற்கு இசக்கி இசைவு தந்துவிட்டதாக சாமியாடி சொன்னதும், அதற்க்கான தேதியை குறித்து பொது அறிவிப்பு செய்துவிட்டார்கள். 

பேச்சியம்மாவின் அப்பா சுடலைமுத்து தன் அலைபேசியில் உள்ள கட்செவி குழுவின் மூலம் அறிந்து கொண்டான். 

பள்ளியிலிருந்து வந்தவுடன் புத்தகப் பையை மேசையில் வைத்துவிட்டு செம்மறியை தேடுவாள் பேச்சியம்மா. அது வீட்டுக்குள் ஏதாவது ஒரு அறையில் படுத்துக்கிடக்கும் பின், அதை தூக்கி வந்து சோபாவில் அமர்ந்து மடியில் வைத்து முத்திக் கொண்டிருப்பாள். இரவில் அவள் படுக்கையில் அவளுடன் சேர்ந்து உறங்கும். இதை சுடலைமுத்துவும் அவன் மனைவி நாகமணியும் பார்த்து வியந்து போவார்கள். வீடெல்லாம் செம்மறியின் புளுக்கை வாடையும் மூத்திரக் கவிச்சியும் வீசியது. இரவுணவை முடித்துவிட்டு நாகமணியுடன் பேசிக் கொண்டிருந்தான் சுடலை. கொடைக்கு எட்டு நாளுக்கு முன்பே ‘கால் நடுதல் ‘நடக்கும். அதற்கு ஒரு நாள் முன்பே போய்விட வேண்டும் என முடிவு செய்திருந்தான். கொடைக்கான அனைத்து நிகழ்வுகளிலும் பங்கெடுத்துக் கொள்தலும், காப்புக் கட்டி விரதம் இருக்க வேண்டும் என்பதிலும் முன்னேர்பாடாக இருந்தான். நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் கோயில் முன் மஞ்சள் கயிற்றில் விரலி மஞ்சள் சேர்த்து வலது மணிக்கட்டில் கட்டிக் கொள்வார்கள். இதற்கு காப்பு கட்டுதல் என்று பெயர். 

சுடலைமுத்து தனது மளிகைக் கடையை பத்து நாட்களுக்கு மூடிவிட்டு அதற்கான அறிவிப்பு பதாகையையும் வைத்துவிட்டு தனது வியாபார வண்டியிலேயே குடும்பத்துடன் ஊருக்கு புறப்பட்டான். நாகமணியும் பேச்சியம்மாவும் பின்னே துள்ளுமறியும் வண்டியில் வசதியாக அமர்ந்து கொண்டார்கள். மறக்காமல் பால் புகட்டும் புட்டியை கழுவி எடுத்துக் கொண்டாள் பேச்சியம்மா. 

கால் நடுதல்…சுண்ணாம்பும், காவியும் அடிக்கப்பட்ட பன்னிரண்டு அடி உயரம் உள்ள கம்பத்தில் பூமாலை,மாவிலை,சிவப்பு நிற பரிவட்டத் துணி,வெற்றிலை பாக்கு முதலியவற்றை சேர்த்து ஒரு முனையில் கட்டி கோயிலின் ஈசான மூலையில் நட்டு வைத்தார்கள். அன்று முதல் ஊரைவிட்டு யாரும் வெளியூர் போகமாட்டார்கள். இசக்கி துடியான தெய்வம். தண்டித்துவிடும். இசக்கி அம்மன் கோயில் அந்த ஊரின் பிரதான சாலையில் இருப்பதால் அதை கடந்து செல்லும் வாகனங்கள் நின்று தரிசனம் செய்துவிட்டு கொடைக்கு தாராளமாக நிதியை உண்டியலில் போட்டுப் போவார்கள். ஊரில் சுடலையை பிரமாதமாக வரவேற்றார்கள் அவனது சேக்காளிகள். கொடையின் போது மது அருந்துவதற்காக முன் கூட்டியே வேண்டும்மளவு வாங்கி வைத்துவிட வேண்டும் எனவும் அதற்கான செலவுகளை பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் சுடலைக்கு சொல்லி வைத்தார்கள். நாகமணியிடம் அவள் மாமியார் சுத்தபத்தமாக இருக்க வேண்டியும், மாதவிலக்கு காலங்களையும் கேட்டு தெரிந்து கொண்டாள். நீண்ட காலத்திற்குப் பின் சுடலையின் வீடு வெள்ளையடிக்கப்பட்டு இருந்தது. கொடைக்காக வெளியூரிலிருந்து வந்த விருந்தாளிகள் கொடை முடியும் வரை உள்ளூரிலே தங்கிக் கொண்டார்கள். செம்மறியை நன்றாக குளிப்பாட்டி குங்கும பொட்டு வைத்துவிட்டிருந்தாள் பேச்சியம்மா. அதன் கழுத்தில் மணியும் கட்டிவிட்டிருந்தாள். அவள் போகுமிடமெல்லாம் மணியோசையை எழுப்பியவாரு பின்னாலே சென்றது செம்மறி. சாமிஆடு என்பதால் அதை நன்றாக கவனித்துக் கொண்டார்கள். இரண்டாம் நாள் சாமக் கொடையில் துள்ளுமறியை பலியிட்டுவிடுவார்கள் என்பது பேச்சியம்மாவுக்கு தெரியாது.  “ஏண்டி,பேச்சி என்நேரமும் தூக்கிக்கிட்டே திரியரேயே..நாளைக்கு உன் கிடாகுட்டிய சாமிக்கு குடுத்துருவாகளே தெரியுமா ஒனக்கு?”-பேச்சியம்மாவின் பாட்டி கேட்டாள்.  “மாட்டேன்”-என்று மட்டும் சொல்லிவிட்டு கிடாகுட்டியை தூக்கிக் கொண்டு நடுவீட்டில் போய் உட்கார்ந்து கொண்டாள். 

இசக்கிக்கும் அவள் இடுப்பில் இருக்கும் குழந்தைக்கும் பூவலங்காரம் செய்து கொண்டிருந்தார்கள். நேர்த்திக் கடன் செலுத்துபவர்கள் அவரவர் பொருட்களை தட்டில் வைத்து மேளதாளம் முழங்க கொண்டு வந்து கோயில் முன் வைத்தார்கள். 

கும்பம் எடுத்து வர சாமியாடிகள் மேளக்காரர்களுடன் ஆற்றங்கரை சென்றார்கள். மணல் எடுத்ததால் நீரின்றி ஆறு குற்றுயிராய் இருந்தது. பித்தளைக் குடத்தில், ஆற்றின் ஓரம் போடப்பட்ட அடிபம்பிலிருந்து தண்ணீர் அடித்து குடங்களை நிரப்பிக் கொண்டார்கள். பின்பு பூசாரி கும்ப அலங்காரம் செய்து சாமியாடிகளின் தலையில் ஏற்றிவிட்டதும்,நாதஸ்வரகாரர் தீர்த்த மல்லாரி வாசிக்க, மேளம் முழங்க ஊர்வலமாக வந்து கோயில் முன் இறக்கி வைத்தார்கள்.

சாமிக்கு சேவல் பலியும், முட்டை திருஷ்டியும் செய்த பின் கற்பூர ஆராதனை காட்டினார்கள். வயதான பெண்கள் குலவையிட்டார்கள். எல்லோரும் கன்னத்தில் போட்டுக் கொண்டு சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார்கள். தப்பை அடிப்பவர் ஓங்கி அடிக்க ஆரம்பித்தார். ஆண்களும், பெண்களும் சாமி வந்து ஆடினார்கள். 

பேச்சியம்மா பட்டுப் பாவாடையும் பட்டுச் சட்டையுமாக வலம் வந்தாள். நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். 

சாமக் கொடைக்கு எல்லோரும் தயாராய் இருந்தார்கள். கரகாட்டமும் குறவன் குறத்தி ஆட்டமும் விடிய விடிய களைகட்டும். 

இசக்கி அம்மன் முன்பு தலைவாழை இலை போட்டு அதில் இரணச் சோறு படைத்திருந்தார்கள். அதில் சோறும்,குழம்பும் ,காய்கறிகளும், மாமிச துண்டுகளும் ஒன்றாக விரவி குவித்து வைத்திருந்தார்கள். முதலில் சன்னதி கெடா வெட்டச் சொல்லி பூசாரி சொன்னதும் சாமியாடி தயாராகி நின்றார். அவர் கையில் அருவாள் இருந்தது. கிடாவுக்கு மாலை போட்டு சந்தனம் பூசி குங்குமம் வைத்திருந்தார்கள். அதன் மேல் மஞ்சத் தண்ணீர் மூன்று முறை ஊற்றினார்கள். ஆடு சிலிர்த்தது. சாமி உத்தரவு தந்துவிட்டதாக பூசாரி சொன்னார். ஒரே வெட்டில் தலை துண்டாக போய் விழுந்தது முண்டம் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது. பேச்சியம்மா, “அம்மா!”-வென அலறினாள். அவள் மடியில் இருந்த துள்ளுமறியை கெட்டியாக பிடித்துக் கொண்டாள். கழுத்தில் மாலையும் உடம்பெல்லாம் சந்தனமுமாக நின்று கொண்டிருந்த சுடலைக்கு மகளை எப்படி தேற்றுவது என தெரியவில்லை. தடுமாறினான். 

இரண்டாம் கொடையாக சுடலையை கூப்பிட்டார் பூசாரி. சுடலை, பேச்சியின் மடியில் இருந்த மறியை வாங்கினான். அவள் மறுத்தும் விடவில்லை. சன்னதி முன்பு போடப்பட்டிருந்த தொட்டிலில் துள்ளுமறியை படுக்க வைத்தான். தொட்டிலை ஆட்டிவிட்டான். தப்பை முழங்கியது. கணியான், “ஆராரோ…ஆரிராரோ..!”-என தாலாட்டு பாடல் பாடினார். மறி உறங்கவில்லை. பேச்சியம்மாவும் அழுது கொண்டே தொட்டிலை ஆட்டினாள். பூசாரி போதும் என்று சொன்னவுடன் துள்ளுமறியை தூக்கி தரையில் மல்லாக்க படுக்க வைத்தார்கள். கால்களை இருவர் பிடித்துக் கொண்டார்கள். தலையை ஒருவர் பிடித்துக் கொண்டார். பேச்சியம்மாவுக்கு என்ன நடக்கப் போகிறது என தெரியவில்லை. அவள் அழுகையும் நிற்கவில்லை. மறியின் மார்பை இரண்டாக பிளந்து அதன் ஈரலை எடுத்தார்கள். அதை இரணச் சோற்றுப் படையலில் வைத்துவிட்டார்கள். குபுக்கென பீரிட்டு வரும் ரத்தத்தை சாமியாடி குடித்து நிமிரும் போது,வெள்ளை துணியால் மறப்பு செய்திருந்தார்கள்.

மேளமும், தப்போசையும் உச்சம் தொட்டது. 

“கொடையை அம்மன் ஏத்துக்கிட்டாள் !”-என சொல்லி திருநீரை அள்ளி சுடலை மீதும் பேச்சியம்மா மீதும் வீசினார் -பூசாரி. சுடலை, மகளை பார்த்தான்.அவள் மயங்கி சரிந்து கிடந்தாள். அவளை அப்படியே தூக்கி கூட்டத்திலிருந்து விலகி வந்தான். நாகமணி, அருள் வந்து ஆடிக் கொண்டிருந்தாள். அவள் ஆதாளி ஓயும் வரை காத்திருந்தான். 

“மாப்ளே, கறி வெந்துக்கிட்டு இருக்கு. சரக்கு ரெடியா இருக்கு. சீக்கிரமா வந்துரு!”-என்று சுடலையின் காதில் அவன் சேக்காளி சொல்லிவிட்டு சென்றான். 

– ஜனவரி 2024, கல்வெட்டு பேசுகிறது இதழில் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *