துலுக்காணம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 18, 2024
பார்வையிட்டோர்: 1,209 
 
 

‘ஆக்சிஜன் பிளான்ட் ஷாப்’-என்ற பெயரை பார்த்தவுடன் அங்கே செல்லும்படி மனைவி சொன்னாள். பின்னால் அமர்ந்திருந்த ஆறு வயதுள்ள மகனும் ‘ஆமாப்பா அங்கே போங்க!’ -என்று ஆவலுடன் சொன்னான். தன் வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்கு தேவையான குரோட்டன்ஸ் வாங்க மூவரும் போனார்கள். அந்த நர்சரி தோட்டத்தை பச்சை வர்ணம் அடித்து சுற்றுப் புறத்தை பசுமை ஏற்றி வைத்திருந்தார்கள். எல்லா பக்கமும் தண்ணீர் தெளித்து இருந்ததால் குளுமையாக இருந்தது.

பணமும் பயிற்சியும் இல்லாத அக்கரஹாரத்து அம்பிகளுக்கும் சேரிப் பெயல்களுக்கும் எம்.பி.பி.எஸ். கனவு பலித்துவிடுவதில்லை.

துலுக்காணத்தின் மருத்துவர் கனவு உடைந்து நிறைவேறாமல் சாதாரணமான மூன்று வருட பட்டய படிப்பான BPT படித்து எலும்பு மூட்டுக்கான பிசியோதெரபி சிகிச்சை நிபுணராக மருத்துவமனையில் மாதச் சம்பளத்திற்க்கு பணியாற்றுகிறான். மாலையில் சொந்தமாக கிளினிக்கும் வைத்து நடத்துகிறான். தன் பெயருக்கு முன்னால் டாக்டர் என்றும் பின்னொட்டாக BPT என்றும் போட்டுக் கொள்வதில் அவனுக்கு மகிழ்வை தந்தது.

தொட்டிச் செடிகளை பார்த்து வாங்கிக் கொண்டிருந்தாள் துல்கியின் மனைவி. ‘அப்பா, எனக்கும் செடி வாங்கி கொடுங்க’- என அடம்பிடித்தான் துல்கியின் மகன். அவன் விரும்பி கேட்டது துளசிமாடமும், பச்சை துளசியும்தான். ஏனோ அதை கை காட்டியவுடன் துல்கியின் முகம் சுருக்கம் கொண்டது.

“ஏங்க பிள்ள ஆசையா கேக்குறான்”-என்றாள் மனைவி.

“துளசியும், துளசிமாடமும் வேண்டாம்” -என சொல்லிவிட்டு மனைவி வாங்கிய பூச் செடிகளுக்கு மட்டும் பணம் தந்துவிட்டு வெளியேறினான். சிறுவன் அடம்பிடித்து அழுது கொண்டே வந்தான்.

துலுக்காணத்திற்கு தன் பால்ய கால நினைவுகள் வந்து வருத்தியது. பணம் இல்லையென்றாலும் அன்பும்,நட்பும், சந்தோஷங்களும் நிறைந்து கிடக்கும் தன் சேரி வாழ்க்கையை நினைத்துப் பார்த்தான். சிறு வயதிலேயே தந்தையையும் தாய்யையும் இழந்தவன். ஆயாதான் அவனை வளர்த்து ஆளாக்கினாள். ஆயாவின் ஒரே மகள் ஒரு பணக்கார யுவனை காதலித்து மணம் முடிக்கும் முன்னே பிள்ளை பெற்றுக் கொண்டாள். பணபலம் வென்றது. ஒரு நாள் இரவு ஓடிக் கொண்டிருக்கும் கூவம் ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். நீதி கேட்டு போராடும் திராணியற்றவள் ஆயா. குழந்தைக்கு துலுக்காணம் என பெயர் வைத்து அவனுக்காகவே வாழ்ந்தாள்.

வாகனத்தை தன் வீட்டின் முன் நிறுத்திவிட்டு உள்ளே வந்தான் துலுக்காணம். மாடியின் ஜன்னல்களை திறந்துவிட்டு அதன் வழியே வெளியை பார்த்துக் கொண்டிருந்தான். நிர்மலமாக வெளுத்துக் கிடந்தது வானம். பல நினைவுகள் அவனை அலைக்கழித்தது. தாய் தந்தையற்ற தன் இளமைக் காலங்கள் பாடுகள் நிறைந்தது. குரோட்டன்ஸ்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்துவிட்டு தேனீர் தயாரித்து துல்கிக்கு எடுத்து வந்தாள் மனைவி. அவன் முகம் வாடி இருந்தது. நீர் ஊற்றினால் மலர்ந்துவிடும் பூ அல்ல முகம். அவன் கை பற்றி தேனீரை தந்துவிட்டு துளசிக்கும் துளசிமாடத்திற்கும் பின் உள்ள கதையை கேட்டாள். சதா சமஸ்கிருத கீதை சுலோகங்களை முனுமுனுத்துக் கொண்டிருக்கும் ஒரு வைஷ்ணவ கிழவி கடைபிடிக்கும் தீட்டுகள் நம் நாட்டில் பன்னெடுங் காலமாக இருந்து வரும் வாழ்வியல் முறை. சமூகத்தில் அவனுக்கு ஏற்பட்ட ஒரு புறக்கணிப்புதான் அது. நம்மையும் நம் அருகாமையையும் ஸ்பரிசத்தையும் புறக்கணிக்கும் எந்த நிகழ்வுகளையும் நாம் எளிதில் மறந்தவிட முடியாதுதானே-விஷயம் சிறியதாக இருந்தாலுமே. அது பால்ய காலத்து புறக்கணிப்பு என்பதால் எளிதில் மறக்க முடியவில்லை. சூரியன் மேற்கே சரிந்து கொண்டிருந்தான். வானத்தில் புறாக்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தது. தன் பால்ய காலத்தில் நடந்த அந்த நிகழ்வை இப்போது நடந்தது போல் அச்சரசுத்தமாக தன் மனைவிக்கு வரிசைக் கிரமமாக எல்லாவற்றையும் சொல்லிக் கொண்டிருந்தான் துலுக்காணம்.


இருபது வருடங்களுக்கு முன்…

‘டேய்,துல்கி! இன்னைக்கு ஸ்கூலு இருக்கு வரலையா?’- அவன் குடிசையின் முன்பக்கத்தை பலமாக தட்டிவிட்டு சென்றனர் சக மாணவர்கள். மூன்று நாட்களாக பகலில் கூட இருள் கவிழ்ந்தது போல் இருந்தது. பிலு பிலுவென மழை கொட்டிக் கொண்டே இருந்தது. தொடும் இடமெல்லாம் ஈர பசபசப்பு. ஒரு பழைய கம்பளியில் சுருண்டு படுத்துக் கிடந்தான் துலுக்காணம். நல்ல காய்ச்சல்,தொடர் இருமல். பெற்றவர்களை தொலைத்தவனுக்கு ஆயாதான் ஆறுதல். இன்று காலையிலே சூரிய கிரணங்கள் குடிசையின் துவாரங்களின் வழியாக ஊடுருவி தரையை சுட்டது. ஆயா ஊரில் நான்கு வீடுகளின் கழிவறையை கழுவினால்தான் வீட்டில் அடுப்பு எரியும்.

துலுக்காணத்தின் வீடு கூவம் நதிக் கரையில் இருக்கிறது. ஒரு பாலிதீன் கவரை தலையில் சொருகிக் கொண்டு சுத்தப் பணிக்காக ஆயா கிளம்பினாள். ‘துல்கி, நீயும் வர்ரீயா..?’- என கேட்டாள். அவள் சொல்லி முடிக்கும் முன் எழுந்து அவள் முன் நடந்தான். மழை பெய்யும் போது, கருத்து ஓடிய கூவம் வெளுத்து ஓடியது. மதுரவாயல் தரைப்பாலத்தை கடந்து ஊருக்குள் இருக்கும் பழைய பெருமாள் கோயில் நோக்கி போனார்கள்.

‘…நீல நிறத்து பாலகன் ஒருவன் குழல் ஊதி நின்றான்…’- காற்றினில் கீதம் கரைந்து வந்து கொண்டிருந்தது.

‘அம்மா இந்த பாட்டு என்ன படம்மா’- துல்கி ஆயாவிடம் கேட்டான்.

‘துல்கி,உனக்கு பசிக்கலையா, தினமும் இட்டிலிக்கு இரண்டு வகை சட்னி வைத்து சாப்பிடுபவர்கள் கேட்கும் பாடல் அது. கிருஷ்ணரின் கை நெய் மணக்கும். நம் கை மணம் மாற நீ நல்ல படிக்க வேணும்’- ஆயா சொன்ளாள்.

‘…………………’

புறாக்கள் கோயிலின் மடப்பள்ளி அருகே தரையில் கூட்டமாக அமர்ந்து சிந்திய அரிசியை கொத்திக் கொண்டிருந்தது. அங்குதான் கோயிலுக்கு பின்புறம் அக்ரஹார வீடுகள் வரிசையாக இருக்கின்றன. சீமை ஓடு வேய்ந்த ஒவ்வொரு வீட்டிற்கும் கோட்டை சுவர் இருந்தது. முன்கட்டில் இரண்டு பக்கமும் திண்ணையும். பின்கட்டில் ஒரு மூலையில் அகலமான பழைய காலத்து வற்றாத கிணறும், மறுமூலையில் நவீனமாக கட்டிய கழிவறையும், பின்வாசலின் நேர் எதிராக துளசிமாடமும் இருந்தது.

ஆயா,பின்கட்டு வழியாக கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்து,’அம்மா..!பூங்குறத்தி’- என்று அழைக்கும் போது அவளது குரலில் சோகம் இளையோடியது. நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த வீட்டின் மாட்டுப் பெண் வெளியே வந்து கிணற்று நீரை இறைத்து இரும்பு வாளியில் ஊற்றிவிட்டு போனாள்.அந்த வீட்டின் மூத்த குடிமகள் சமுந்திரிகா பாட்டி தனது இரண்டு கால்களையும் நீட்டி பின் வாசலில் அமர்ந்திருந்தாள். அருட்பா,தேவாரம்மென தன் மனதில் பதிந்திருந்த வரிகளை பாடிக் கொண்டிருந்தாள். தன்னருகில் ஒரு பித்தளை குவளையில் துளசி நீரும் அதில் ஒரு சின்னஞ்சிறு கரண்டியும் இருந்தது. கையில் ருத்ராட்டிர மாலையுடன் தன் இரண்டு கண்களையும் முன்நூற்று அறுபது கோணத்தில் சுழலவிட்டுக் கொண்டிருந்தாள். அவள் பார்வைக்கு தப்பி அந்த வீட்டில் எதுவும் நடந்துவிடாது. துலுக்காணம் எப்போது வந்தாலும் ஒரு தோசை வார்த்து கொடுப்பாள் மாட்டுப்பெண். இன்று இருமலும் பசியும் ஒன்று சேர நின்றிருந்தான். தொடர் இருமலுக்கு துளசி நல்ல மருந்து என அவன் வாத்தியார் சொன்னது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. மாடத்திலிருந்த துளசி செடியிலிருந்து இரண்டு இலைகளை பிட்டு தன் வாயில் போட்டு அதக்கினான். ‘அய்யோ போச்சே! அய்யோ போச்சே!’- என சமுந்திரிகா பாட்டி கத்தினாள். பாட்டி,காலையிலே ஸ்நானம் பண்ணி சூரிய நமஸ்காரம் முடியும் வரை அமுது உண்ண மாட்டாள். மடி, ஆச்சாரம்,தீட்டு என்று இருப்பவள். அமைதியாக இருந்த அந்த வீட்டிற்குள்ளிருந்து அத்தனை பேரும் வெளியே ஓடி வந்தார்கள். இத்தனை பேர்களா என மலைக்க வைத்தது சிறுவனுக்கு. அதில் அநேகம் பேர் கல்லூரி சீருடையில் இருந்தனர். நீட் தேர்வு எழுதி அரசு கல்லூரியில் மருத்துவம் படிக்கும் வாய்பை பெற்றவர்கள். சிறுவனுக்கு பயத்தால் கால்கள் நடுங்கியது.ஒரு குவளை நிறைய ஜலம் எடுத்து வந்து பாட்டி முன் வைத்துவிட்டு போனாள் மாட்டுப் பெண். ஜலத்தை கையில் எடுத்து செடிக்கு தெளித்துவிட்டாள் பாட்டி.

‘சூரியஸ்பரிசம், பார்த்தீனியம்,கள்ளி,துளசியென வகை பிரிச்சு படுறது இல்லையே…?’

‘ஆர்ப்பாட்டம் பண்ணிட்டாள் சமுந்திரிகா பாட்டி.மனுஷாளுக்குள்ளே ஏன் ஆச்சாரம் பாத்துண்டிருக்கா…’- வீட்டிற்குள் போய் பேசிக் கொண்டார்கள் புதிய தலைமுறைகள்.

சிறுவனை கைப்பிடித்து கேட்டை திறந்து கொண்டு வெளியே வந்த ஆயாவுக்கு அவர்கள் பேசிக் கொண்டது ஆறுதலாக இருந்தது.

தரைபாலத்தை கடக்கும் போது,மழை ஓய்ந்துவிட்டதால் வெளுத்து ஓடிய கூவம் மீண்டும் கருத்து ஓடியது.


நடந்ததை சொல்லி முடித்துவிட்டு மனைவியின் முகத்தை பார்த்தான் துலுக்காணம். அவள் கண்களில் நீர் பனித்திருந்தது. பகல் முடிந்து இரவு தொடங்கிவிட்டதால் எங்கேயோ ஒரு அடர்ந்த மரத்திலிருந்து சிலிர்த்துக் கொண்டு பறந்தது கூகை!

– புதியகோடாங்கி இதழில் மே,2024 ல் பிரசுரமானது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *