துரும்பு வாழ்க்கையிலும், துலங்கும் ஒரு சோதிப் பிழம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 21, 2022
பார்வையிட்டோர்: 13,197 
 

கொரொனோவின் கோரப் பிடிக்குள் சிக்கி, உலகமே சின்னபின்னமாகிச் சிதறி விட்ட நிலை வந்தும், பூரணியின் மனதில் எந்தச் சலனமும் இல்லை. அவள் ஒரு தபஸ்வினியாகவே இன்னும் இருக்கிறாள். அது என்ன வகைத் தவம்? அவள் என்ன தவம் செய்யக் காட்டுக்குப் போய் வந்தவளா? காடு போய்த் தான் தவம் செய்ய செய்ய வேண்டுமா என்ன? வீடே அவளின் தவச் சாலை. உறவாகத் தோன்றி வந்து உதைத்து விட்டுப் போன, சக மனிதர்களே அவளுக்கு வேதம் போதித்து வழி நடத்திய மகா புருஷர்களாவார்கள்.. புருஷன் என்ற இந்தக் குறியீடு ,பெண்களுக்கும் பொருந்தும். அதெல்லாம் பழங் கதை தானென்றாலும், அதில் கற்றுத் தேறிய பாடம், நிலையழியும் வாழ்க்கையின் வெற்றுத் தடம் பற்றி வீழும் நிழல் போலன்றி, அவளை ஒரு சாஸ்வத சத்திய தேவதையாகவே உயிர்த்து எழ வைத்த, வேத தரிசன நிகழ்வென்றே அதைக் கொள்ளலாம்..அவள் அப்படித் தான் நம்புகிறாள். உலகம் எப்படி நிலை குலைந்து, சீரழிந்து தடம் புரண்டு போனாலென்ன தான் மட்டும் வாழ்ந்து, கொடி கட்டிப் பறந்தாலே போதும் என்ற நினைப்பு என்றைக்குமே, அவளுக்கு வந்ததில்லை. உலக நலன் குறித்த தார்மீக சிந்தனை ஒன்று மட்டும் தான், அவளின் இயல்பான பிறவிச் சுபாவமாக இருந்தது

இந்த எண்பது வருட அனுபவ வாழ்க்ககையும்,, அதன் சோதனைகளும் ., அவள் எதிர்கொள்ள நேர்ந்த மிகப் பெரிய சவால்களும், அவளை சரித்து வீழ்த்தவல்ல. அவள் தீக்குளித்துப் புடம் கொண்டு எழவே, வந்த எதிர்மறையான இருப்புச் சங்கதிகள் தாம் அவை. வாழ்க்கையே அவளைப் பொறுத்தவரை மறை பொருள் துருவ நிலையில் தான். அன்பு வழிபாடு செய்வது ஒன்றைத் தவிர, வேறு ஒன்றுமே அறியாத அப்பாவிப் பெண் அவள். ஆனால் உலகம் போகிற போக்கு அப்படியல்ல இதை நித்ர்ஸ்னமாக நிரூபித்து காட்டுவது போன்ற அதன் மந்த நிலை கண்டு, அவள் மிகவும் மனக் கவலை கொண்டாள்.

உலகமே இப்போது பெரும் அழிவை நோக்கித் தான் சரித்து கொண்டிருக்கிறது .கொரொனோ வைரஸ் ஸின் திரிபு மாறுதல்களினால் ஏற்பட்டிருக்கும் மனித அவலம் குறித்து, எவர்க்கும் கவலை இருப்பதாகத் தெரியவில்லை ..இந்தக் கசப்பான பேருண்மையை, அவள் அனுபவமாகவே உணர நேர்ந்து, வெகுவாகத் துடித்துப் போனாள்.

இந்தக் கொடுமைக்கு வித்திட்ட சூத்திரதாரிகள் யார்?கொரொனோ வைரஸ் எப்படி வந்தது? இது வெறும் கதையல்ல, கலிகாலக் கொடுமை. வெறும் பணம் தேடுவதொன்றையே குறிக் கோளாக வைத்து, அதற்காக உலகை இப்படி நாசம் செய்ய வேண்டுமென்று எந்தத் தர்ம சாஸ்திரம் போதிக்கிறதென்று அவளுக்குப் புரியவில்லை. இப்படி நீதியே அடியோடு,செத்து மடிந்து போனால், உலகம் தான் வாழுமா?உலகம் எக் கேடு கெட்டுப் போனாலென்ன. இதைப் பற்றிக் கவலைப் பட எவருமே இல்லையென்ற கசப்பான உண்மையை, அவள் மிகவும் மன வருத்தத்துடன் நினைவு கூர்ந்தாள்.

சமீபத்தில் அவள் அறிய நேர்ந்த ஒரு கசப்பான உண்மையை உளம் திறந்து உரத்துக் கூவி அழுது, பறை கொட்டிஅதைச் சொல்ல வேண்டும் போல் அவள் மனம் கிடந்து தவித்தது . நேற்று நடந்தது போலிருக்கிறது அந்த நிகழ்ச்சி..எப்பவோ நாலைந்து நாட்களுக்கு முன்னால் ,நடந்து முடிந்த சமாச்சாரம் . இந்த வயதிலும் அவள் முகநூல் பார்க்கிறாள். கணனி ஒளித்திரையில் எழுத்துக்கள் விழும் போது, கண்கள் ஒளி தீட்சண்யமாக அவற்றை அவள் படிக்கவும் செய்கிறாள் . எப்படி இருந்த வாழ்க்கை , இப்படியெல்லாம் திசை மாறிப் போனதே1 சொந்த மண்ணில் வேரூன்றி, அவளை வாழ விடாமல், விதி துரத்திய பாவத்தை எண்ணி, அவள் மனம் நிலை குலைந்து சரிந்து போகவுமில்லை. அவள் இப்போது இருப்பது முழு சிங்களப் பிரதேசம்.. அவளுக்குச் சிங்களம் பேச வராது. அவளின். கணவருக்கு அது அத்துபடி. சிங்களம் படித்துத் தேறி, உயர்தர அரச பதவியில் இருந்தவர் அவர் . அவர் இருந்தவரை அங்கு வாழ்வதில் எந்தப் பிரச்சனையுமில்லை. அவர் வாழ்ந்த இடம், இப்போது வெற்றிடமாக இருக்கிறது. இருந்தாலும் அவரின் வாரிசாக, அவள் பையன் சந்துரு இருக்கிறான். அவன் துருவ மறை பொருளாகாத, வாழ்க்கையின் ஒளி பிரகாசமான இருப்பு நிலையைக் கட்டிக் காக்க வந்த, ஓர் ஆதர்ஸ இளைஞன். ஒரு கம்பனியில் சுப்பவைசராக வேலை பார்க்கிறான். கல்யாணமாகி வேறு இடத்தில் இருக்கிறான். தினமும் அவளிடம் வந்து போவான். கணனியை இயக்க, அவளுக்குச் சொல்லிக் கொடுத்த குரு தான் அவன். நேற்று முன் தினம் அவள் கணனியைட் திறந்து பார்த்த போது ,அவனிடமிருந்து மெசன்ஞரில் ஒரு செய்தி வந்திருந்தது . அது ஒரு மிகவும் முக்கியமான காணொளி. உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரொனோ என்ற கொடிய நோயின் தோற்றம் வளர்ச்சி, அது எவ்வாறு உருவாகியது என்பது பற்றி, ஒரு டிவி நாடக நடிகன் ,மிக விளக்கமாக, அக் காணொளியில் சொல்வதை, அவளும் பார்த்துக் கேட்க நேர்ந்தது. அக் காணொளியை அவளின் முகநூலிலும் பதிவிட்டிருந்தான் சந்துரு. அதை எவரும் பார்க்க முன் வராதது ,அவளுக்குப் பெரும் ஏமாற்றத்தையே அழித்தது. வெறும் பணத்திற்காக டொலர் கணக்கில் சம்பாதித்து, உலகின் முதன்மைப் பணக்காரனாகக் கொடி கட்டிப் பறக்க நினைக்கும், பண முதலைகளின் ஒரே நோக்கத்த்திற்காகாகவே உலகம் இன்று எல்லாச் செல்வங்களையும் இழந்து, தடம் புரண்டு கிடக்கிறது..மனிதாபிமானம் இனிக் கேள்விக் குறி தான். இதற்கான பதிலை யாரிடம் போய்க் கேட்பது ? இந்தப் பண முதலைகளிடம் மட்டுமல்ல எங்களிடமும் தான் அது செத்து விட்டது .

அதை அவள் கண் கூடாகவே கண்டாள், அவளின் முகநூலில் வந்த அக் காணொளிக்கு ,எவரும் விருப்பம் கூடத் தெரிவில்லை . கருத்து எப்படிச் சொல்வார்கள்? அதனால் மன வருந்தி அழுத அவள் மனதில் வேறு ஒரு யோசனை ஓடியது.. அது வேறொன்றுமில்லை. அவளுக்குத் தான் முகநூல் நண்பர்கள் பலர் இருக்கிறார்களே1 அதிலும் நெருகிய உறவாகச் சிலர்.. அவர்கள் மனத்திரையில் தோன்றியபோது, ஒளித் திரையில் சிரிக்கும் நளினியின் முகமே ஞாபகத்துக்கு வந்தது. அவள் பூரணியின் அண்ணன் மகள். குடும்பத்தோடு லண்டனில் இருக்கிறாள். தன் குடும்பக் கவலைகளை அவள் அடிக்கடி பூரணியிடமே மனம் திறந்து கொட்டித் தீர்ப்பாள் . அவளுக்கு ஒரேயொரு மகன் தான். பெயர். திவாகரன் .பொறியியல் துறையில் பி எச்டி செய்வதற்காக , அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கிறானாம். அவனைப் பற்றி அவளுக்கு ஒரு பயம் கல்யாணமாகாமலே சேர்ந்து வாழ்ந்து, பழகிப் பார்க்கிற ஒரு கொடிய நடைமுறை, இப்போதெல்லாம் வெளிநாட்டில் அரங்கேறி வருகிறதாம் ணாதற்குப் ப்ன்னர் தான் அவர்கள் கல்யாணம் செய்து கொள்வது பற்றி முடிவெடுப்ப்பார்களாம் . அதனால் அந்தச் சகதி நிலைக்கு அவனும் ஆளாகி விடுவானோ என்ற பயமே அவளைப் பாடாய்ப் படுத்துகி,றதாம். அது அவளுடைய உலகம். தன் குடும்பநலன் ஒன்றைத் தவிர, அவள் வேறு எதையும் கருத்தில் கொள்வாளா என்று தெரியாமலே ,பூரணி இக் கானொளியை அவளுக்கு அனுப்ப நேர்ந்தது .அவள் அதைக் கண்டு கொள்ளாதது மட்டுமல்ல, திறந்து பார்க்கவில்லையென்ற கசப்பான உண்மையை எதிர் கொள்ள நேர்ந்து பூரணி வெகுவாக ,மனம் உடைந்து போனாள் . அப்படி அவள் அதைப் பார்த்துக் கேட்டிருந்தால் ,தன் ஆதங்கத்தை வெளிப்படையாகவே சொல்லியிருப்பாள். .அவள் அப்படிப் பேசக் கூடியவள் தான் .. மாறாக என்ன நடந்ததென்று நினைக்கவே மனம் கூசுகிறது . கேவலம் அதைக் கண்டு கொண்டதற்கு அடையாளமாக, அவள் ஒரு கை அடையாளமாவது அனுப்பியிருப்பாளே1 அதுவும் நடக்கவில்லை என்று அறிகிற போது, மெசென்ஞர் வழியாக இதைப் பற்றிப் பேசியே தீர வேண்டுமென்று, பூரணி விரும்பினாள் .

அந்தத் திருநாள் விரைவிலேயே வந்தது. . இப்போது எவர்க்கும் இருப்பு முக்கியமில்லை .அது என்னவகையான இருப்பு?. மனிதனாக வாழ்வதற்கான தகுதி தான் என்ன ? இதை அவளிடம் போய்க் கேட்டால் என்ன சொல்வாள்? தன் வேரறுந்து போன நிலைமையைச் சொல்வாளா? இப்படி வேரோடிச் சிறப்பதற்கு தன் சொந்த வாழ்கை நலன்களும் அதை நிலை நிறுத்துவதற்காக[ பணம் ஈட்டுவதொன்றையே இலக்காக வைத்து வாழும் முறையும் தான் வாழ்க்கையென்று நம்புகிற அவளிடம் போய் மனிதாபிமானம் ஒன்றையே குறிக்கோளாகக் கருதி ,அன்பு வழிபாடு செய்யும் தன் உண்மை இருப்பின் சத்தியம் பற்றிச் சொன்னால், அவளிடம் இது எடுபடுமா என்பதே கேள்விக் குறிதான்.. இதற்காகப் பின் வாங்குவது தானும் சகதி குளித்து எழுவது போலத் தான் என்று அவளுக்குப் பட்டது தர்மத்தை நிலை நாட்ட வேண்டுமென்றால் எதற்கும் துணியத்தான் வேண்டும் அது ஒரு தர்மயுத்தம் மாதிரி அவளுக்கு . சத்தியமும் மனிதமும் எடுபடாமல் காற்றில் பறக்கிற விபரீத நிலை கண்டும் வாளாவிருப்பது மகா கொடுமை.

அந்த யுத்தகளம் தானாகவே திறந்தது. நேற்று முன் தினம், அவள் மிகவும் சந்தோஷமாகக் களை கட்டிய அழகுப் பொலிவுடன், மெசென்ஞரின் திரையிலே ஒளித் தெவதையாகத் தோன்றினாள்.. நான் அனுப்பிய காணொளியை அவள் பார்த்துக் கேட்டிருந்தால், அது குறித்த மிகப் பெரிய கவலையில் அவள் முகம் இருண்டு தோன்றாதா?

முதலில் அவள் தான் பேச்சைத் தொடங்கினாள்.

மாமி!எப்படி இருக்கிறியள்?.

இன்றைக்கும் வேரறுந்த நிலை தான் எனக்கு.

என்ன அப்படிச் சொல்லுறியள்? அப்படி என்ன குறை தான் உங்களுக்கு?.

சொல்லட்டே? என்ரை குறையை, சொன்னால் அதற்கும் மேலாய் எனக்குள் குமுறி வெடிக்கிற எரிமலை ,உன்னையும் தாக்குமே1 சொல்லட்டே?.

என்ன மாமி புதிர் போடுறியள்? மனம் வெடிக்கிற அளவுக்கு அப்படி என்ன பெருஞ் சோகம் உங்களுக்குள்?.

இது என் வீட்டைப் பற்றிய கவலையல்ல . உன்னைப் போல் நானிருந்தால் எனக்கேன் கவலை வரப் போகுது? எல்லாம் அந்தப் பாழாய்ப் போன காணொளியைப் பார்த்துக் கேட்டதிலிருந்து தான் ,இந்த மன வருத்தம் எனக்குள்.

ஏன் அதிலை அப்படி என்ன இருக்கு?.

சரிதான். நீ பூஜ்யம் என்பது எனக்கு நல்லாய் புரியுது. நீ நான் அனுப்பிய காணொளியைப் பார்த்துக் கேட்டிருந்தால், இப்படிக் கேட்டிருக்க மாட்டாய்.

எவனோ ஒரு விசரன் அலம்புவதையெல்லாம் கேட்க வேணுமெண்டு எனக்கென்ன தலைவிதி? சொல்லுங்கோ மாமி?.

நான் அதை அலம்பலாய்ப் பார்க்கேலை நளினி. எங்கடை உலக நலனில் அக்கறை கொண்டு, தர்மாவேசத்துடன் ஒரு வன் பேசிய பேசிய பேச்சு அது உனக்கு உன் குடும்பத்தை விட்டால், வேறு உலகமில்லை. என்னாலை அப்படி இருக்க முடியாது. கொரொனோ தலையெடுத்து உலகமே அழியிற நிலையிலை இருக்கு லட்சக்கணக்கான உயிர்களே அழிஞ்சு போச்சு. இன்னும் சாகுது. நீ ஏன் இதைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறாய்? இந்தக் கொடூரத்துக்கான மூல வேரை அறுத்துப் போடவேண்டுமென்று நான் கிடந்து துடிக்கிறன். தர்மம் செத்தால் ஆருக்கு நட்டம்? சொல்லு நளினி?

அவளிடமிருந்து வெகு நேரமாய் பதில் வரவில்லை. மாறாக வாயைப் பொத்திக் கொண்டு, அவள் சிரிக்கிற சப்தம் மட்டும் தான் கேட்டது. துருவத்தில் இருக்கிற மறை பொருள் அவள். அன்பு வழிபாடு செய்வது ஒன்றையே வேதம் என்று அறியாமல் போன, அநாதை இருப்பு அவளுக்கு? இதற்காக எங்கே போய் முட்டிக் கொள்வது? யாரை நோவது? அப்படித் தான் அணிவகுக்கும் உலக நடப்பும், உன்மந்தப் போக்கும். அது விடுபட்டு, உலகத்துக்காகவும் அபலை மனிதர்களுக்காகவும், மனம் வருந்தி அழுது கரை ஒதுங்கிப் போகுமளவுக்கு, தன் நெஞ்சில் குளிர்ந்து சில்லிட்டுப் போகிற ஈரத்தை நினைக்க, அவளுக்கு தன் மீதே இப்போது வெறுப்பாக வந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *