துரத்தும் பேய்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 4, 2012
பார்வையிட்டோர்: 7,134 
 
 

சிந்தாமணிக்கு இப்படி நடக்கும் என்று தெரியாது. அவள் அப்படி யோசித்தே பார்க்கவில்லை. அருகில் மணியும், மாலினியும் தூங்கிக் கொண்டிருந்தனர். இவளுக்குத் தூக்கம் என்ற கேள்வியே வரவில்லை. எப்படி தூங்க முடியும்? என்ன நடந்திருக்கிறது என்பதை அவள் அறிவாள். அனைத்தும் முடிந்துபோய்விட்டது.. அவளது காதல், அவள் பிள்ளைகளின் வாழ்க்கை அனைத்தும் முடிந்துபோய்விட்டது என்று அவளுக்குத் தெரியும்..

ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தாள். வவுத்து மலை பேய் போல நின்றுகொண்டிருந்தது. இருட்டாக.. அவளின் வாழ்க்கை போல.. சோவென்று மழைக் கொட்டிக்கொண்டிருந்தது… இவள் அப்படி அழ வேண்டும். ஆனால், அழ முடியவில்லை.. ஏன் அவன் அப்படி செய்தான்?

அவன் என்பது இவளின் கணவனை. கணவன் என்று சொல்ல முடியுமா? இவள் அப்படித்தான் நினைத்தாள். ஆனாலும் அவன் இன்னொருத்தியின் கணவன். இவள், ‘இவன்தான் என் கணவன்’, என்று உரக்கச் சொல்ல முடியாது.

13 வருடங்கள் ஓடிவிட்டன.. அவனும் அவளும் சேர்ந்து.

அப்போது அவள் அந்த அலுவலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தாள். அது காப்பீடு நிறுவன முகவரின் அலுவலகம், அவன் காப்பீடு முகவன். ரெங்கசாமி என்றால், பெரிய பெரிய கம்பெனிகளில் கூட தெரியும். கம்பெனிகள்தான் அவர்களின் பிரதான வாடிக்கையாளர்கள்.

அவர்களின் அலுவலக வணிகம் ஒரு சில கோடிகளை நெருங்கிக்கொண்டிருந்தது. அவன் அனைவரையும் இழுத்து தன்னை இரசிக்க செய்துவிடும் திறனுள்ளவன். லேசாக கோணலாக உதடுகள் தெரிய அவன் சிரிப்பது எவரையும் வீழ்த்திவிடும். எந்தவொருவருடனும் எளிதில் நெருக்கமாகிவிடுவான். பார்க்கும் பார்வையில் ஒரு தீட்சண்யம் இருக்கும். அதனால், வணிகம் பெருகியது. அதே காரணங்களால்தான் இவளுக்கும் அவன் மேல் காதல் பெருகியது..

அவன் 30 வயது எல்லையைக் கடந்துகொண்டிருந்தான். இவள் 30 வயது எல்லையை நெருங்கிக் கொண்டிருந்தாள். இவளைப் பற்றி குறிப்பாகச் சொல்ல எதுவும் இல்லை. பிகாம் முதல் வகுப்பில் தேர்வாகியிருந்தாள். நெடுநெடுவென்று உயரம், உயரத்திற்கு ஏற்றாற்போல எடை. நெளிந்து நெளிந்து இறங்கும் கருகரு முடி. முத்துப்பல்லழகி என்று இவளைச் சொல்வார்கள்.

இந்த அலுவலகத்தில் சேர்ந்த பின்னர்தான் காப்பீடு வணிகம் பற்றி தெரிந்துகொண்டாள்.. இவளின் விடாப்பிடியான கற்கும் முயற்சிக்கு அவன் உதவி செய்தான்..

சிந்தாமணி படிப்பு முடிந்தவுடனேயே திருமணம் செய்துகொண்டவள். காதல் திருமணம்தான். அவள் காதலித்தது அவள் சாதியைச் சேர்ந்த ஜெயபாலைத்தான். ஆனால், காதலித்தபோது தெரியாத அவனைப் பற்றிய நிறைய செய்திகள் திருமணத்திற்குப் பின்பு தெரிய ஆரம்பித்தது. அதற்குள் மணி பிறந்துவிட்டான்.

கணவன் ஜெயபால் வேலைக்குச் செல்வதில்லை. சரியாகச் சொன்னால், போவான், சில வாரங்கள் அல்லது மாதத்தில் வேலையை விட்டுவிடுவான். ஏனென்று கேட்டால், நிறைய பிரச்சனைகளைச் சொல்லுவான்.. பிரச்சனைகள் இல்லாத வேலை எது? ஆனால், அவன் பிரச்சனை இல்லாத வேலையை எதிர்பார்த்தான். காலையில் செல்ல வேண்டும், மாலையில் திரும்ப வேண்டும் என்பது அவன் கணக்கு.. ஆனால், எல்லா அலுவலகத்திலும் இரவு எட்டு மணி வரை இருக்கச் சொன்னார்கள். ‘மூன்று ஆள் வேலையை நான் பார்க்கிறேன்..’, என்று அவன் நொந்துகொள்ளும் அளவுக்கு அவன் வேலை பார்ப்பதாகப் புலம்புவான்.

ஜெயபாலுக்கு அரசு வேலைதான் கனவு. அதுதான் 10 முதல் 5 வரையிலான வேலை என்று அவன் நினைத்துக்கொண்டிருந்தான். விஏஓ தேர்வு எழுதி அவன் வேலைக்குச் சென்றபோது ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. தாலுகா அலுவலகத்தைவிட்டு 5 மணிக்குப் புறப்பட முடியவில்லை. 2 கிராம அலுவலர் வேலையை அவன் பார்க்க வேண்டியிருந்தது. அனைத்து அலுவலக வேலைகளையும் முடித்துவிட்டு மண் அள்ளுவது, புறம்போக்கு தொடர்பான பிரச்சனைகள், பட்டா பிரச்சனைகள் என்று அனைத்திற்குமான லஞ்ச வரவுக் கணக்கையும் பார்க்க வேண்டியிருந்தது. அந்த வருமானத்தில் விஏஓ அலுவலகம் துவங்கி தாசில்தார் வரை சனிக்கிழமையில் கணக்குப் பார்த்து செட்டில் செய்ய வேண்டியிருந்தது. வெள்ளி அன்று இந்த ‘லட்சுமி வேலை’ துவங்கும். சனிக்கிழமைதான் நிறைவு பெறும். ஞாயிற்றுக் கிழமையில் கூட வேலை பார்க்க வேண்டியிருக்கும். மற்ற நாட்களில் விதிக்கப்பட்ட வேலையையும் விதிக்கு மாறான வேலையையும் முடிக்கும்போது எட்டு மணியைத் தாண்டியிருக்கும்..

இப்படித்தான் பிரச்சனை ஆரம்பித்தது. சிந்தாமணி அவனை அன்று உள்ளே விடவில்லை. அவள் கதவைத் திறந்தபோது மதுவின் வாடை வீசியதுதான் காரணம். இவன் அலுவலகத்தில் நுழைவதற்கு முன்னர் ஜனங்கள் கால்மிதியடியைக் கழற்றுவார்கள். இவனோ செருப்பைக் கூட கழற்றாமல் வாசலில் நின்றபடி செல்லில் சிந்தாமணியுடன் மன்றாடிக் கொண்டிருந்தான்.. இன்று ஒரு நாள் மட்டும்தான்… என்று கெஞ்சிக் கொண்டிருந்தான்.

சிந்தாமணி கதவைத் திறந்தாள். அன்று மட்டுமல்ல.. சில மாதங்கள் கதவைத் திறந்தாள். அதற்குள் அவன் மதுவிற்கு அடிமையாகியிருந்தான். தடதடவென்று கொட்டும் லஞ்சப் பணத்திற்கும் மனசாட்சிக்கும் இடையில் சிக்கிக்கொண்டு, பணம் தரும் வசதியால் குடிகாரனாகியிருந்தான்..

ஒரு நாள் அவனது வேலை போய்விட்டது. எவனோ ஒரு கட்சிக்காரன் லஞ்ச ஒழிப்பு போலீசை அணுகியிருந்தான். கையும் களவுமாகப் பிடிபட்டான். அப்புறம் பத்திரிகையில் படத்துடன் செய்தி வந்தது. விசாரணை என்று அலைத்துகொண்டிருந்தான்.

சிந்தாமணியோ நொந்து போயிருந்தாள். அவனுக்கு அவள் சோறு போட்டே பல மாதங்கள் ஆகியிருந்தன.

அப்போதுதான் அவள் அலுவலகத்தில் ரங்கசாமியுடன் நெருக்கமானாள். அவளின் துயரங்களை அவன் செவிகொடுத்து கேட்டான். அதுதான் அனைத்துக்குமான துவக்கம். அப்புறம் அவள் கருத்தரித்தபோது, குழந்தையின் அப்பா யாரென்று உத்தரவாதமாக அவளுக்குத் தெரிந்திருந்தது. ‘ரெங்கசாமி சாரி’டம் அவள் சொன்னபோது அவன் அதிர்ச்சியடைந்தான்.

‘எப்படி சொல்ற?’ என்று பதறினான்.

‘உண்மைதான் சார்.. நான் ஏ பொய் சொல்லனும்..? எனக்குத் தெரியாம யாருக்குத் தெரியும்?’

‘உன் புருஷன்?’

‘அந்தாள் இல்ல… அந்த ஆளு வீட்டுக்கு வந்தே அஞ்சாறு மாசம் ஆவுது.’

அது உண்மைதான். கடைசியாக அவன் வீட்டுக்கு வந்தபோது பெரிய சண்டை நடந்தது. அவனுக்கு ரெங்கசாமியுடனான அவளின் உறவு தெரிந்திருந்தது. கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டினான். அவன் கேட்ட கொச்சையான கேள்விகளுக்கு அவள் பதில் சொல்ல விரும்பவில்லை. உறவு என்பது உடல் தொடர்பானதுதானா? மனம் மரத்துப்போய்விட்டால் உடல் எப்படி இளகும்? இளகிய மனம் வாய்த்த இடத்தில் உடல் இளகுவதில் என்ன தப்பு என்பது அவளின் கேள்வி.

அன்றைய தகராறில் மணிக்கும் அடி விழுந்தது. ‘எவனுக்குப் பொறந்தடா?’ என்று கேட்டால் குட்டிப்பயலுக்கு என்ன புரியும்? முடிவு செய்தாள்.. சமையலறையில் நுழைந்து கத்தியை எடுத்துக்கொண்டு விரட்டினாள்.. அன்று ஓடியவன்தான் அப்புறம் வீட்டுக்கு வருவதில்லை. இவளின் மாமாவிடம் சொல்லி பணம் கேட்பான். ஒழியட்டும் என்று கொடுத்துக்கொண்டிருந்தாள்.

ரெங்கசாமி இவளைத் தீர்க்கமாகப் பார்த்தான். அவனது அலுவலக அறை குளிரூட்டப்பட்ட அறை. பெரிய ஜன்னல்கள் இருந்தாலும் அனைத்திலும் கனமான திரைகள் தொங்கும். அவள் அருகே எழுந்து வந்தான்.. அவளின் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தான். சற்றே மேடான வயிற்றில் தன் குழந்தையை உணர்ந்தான் போலும். அவளின் தலையைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டு தலையைக் கோதிவிட்டான்.

அப்போதுதான் அவளுக்கு மனம் சாந்திப்பட்டது. தன்னை இவன் கைவிட மாட்டான் என்ற நம்பிக்கை வந்தது.

அந்த நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தினான் அவன். அவளுக்கென்று மதுரையில் ஒரு வீடு பிடித்துக்கொடுத்தான். சில மாதங்கள் போன பின்பு அனர்த்தம் பிடித்துக்கொண்டது அவளின் கணவன் அலுவலகத்திற்கு வந்திருந்தான்.

‘சாரைப் பார்க்கனும்’, என்றான் இவளிடம்.

சிந்தாமணிக்கு வெலவெலத்துப் போய்விட்டது. விரட்டப்பட்டவனும், வாழ்ந்துகொண்டிருப்பவனும் சந்திக்க, தான் அருகே இருப்பதா? எதற்காக வந்திருக்கிறான்? குடித்திருக்கிறானோ? ஆழமாக சுவாசித்துப் பார்த்தாள். மெல்லிய மது நெடி தெரிந்தது,

‘எதுக்குப் பாக்கனும்?’ என்று அவனைக் கேட்டாள். குரலில் நடுக்கம் இல்லாதிருப்பதாகக் காட்ட முயற்சி செய்தாள்.

‘படுக்கைக் கூலி வேணும்’.

‘என்னது?’ சிந்தாமணிக்குப் புரியவில்லை.

சற்றே குனிந்து இவள் முகத்துக்கு நேரே வந்தான். நிச்சயம் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.

‘நீ அவங்கிட்ட படுக்கிறதுக்கு… எனக்குக் கூலி வேணும்’ அவன் சிரிப்பில் தெரிந்த குரூரம் இவளை மிரட்டியது.

என்ன செய்வான்? என்ன செய்வான் இந்த மாமாப் பயல்? அவளுக்கு சட்டென்று வேர்த்தது. ஜாக்கெட் உடலுடன் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு வியர்த்தது.

சட்டென்று விலகி ரெங்கசாமியின் அறைக்குள் நுழைந்தாள். பிரச்சனையைச் சொன்னாள்.

‘எவ்வளவு கேப்பான்?’, என்றான் அவன் கவலையுடன்.

‘என்ன கேட்கிறார் இவர்? இது பண விஷயம் மட்டும்தானா?’, என்று இவளின் இதயம் கேட்டது. சரி.. ‘வேறென்ன அவன் கேட்பான்?’, என்று தன்னைத் தேற்றிக்கொண்டாள்.

‘நீங்க கொடுத்துடுவிங்க.. எவ்வளவு கேட்டாலும்… ஆனா.. அவன் திரும்பத் திரும்ப வந்தா என்ன செய்யிறது?’.

சிந்தாமணியின் கவலை ரெங்கசாமிக்குப் பிடித்திருந்தது. ‘சரி.. அவன வர சொல்லு நா பாத்துக்கிறேன்’, என்றபடி அவளை இழுத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.

சிந்தாமணிக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது. தான் பத்திரமாக இருப்பதாக உணர்ந்தாள். அவனைப் பார்த்தவாறே பின்னோக்கி நடந்து திரும்பி கதவைத் திறந்தாள். அங்கே அவன் முகம், கணவனின் முகம் நேராக, கண்ணுக்கு மிக நெருக்கமாகத் தெரிந்தது. சட்டென்று பின் வாங்கினாள்..

‘இல்ல எப்புடி கொஞ்சிக்கிறிங்கன்னு பார்க்க வந்தேன், கதவைத் தெறந்திட்ட..’, என்று நக்கலாகச் சிரித்தான்.

சட்டென்று விலகிக்கொண்டு அவனை உள்ளே அனுப்பிக் கதவைச் சாத்தினாள். எதனைப் பார்த்திருப்பான் அந்த நாய் என்று இவள் மூளைக்குள் கரப்பான் பூச்சி ஓடியது.

அவர்கள் வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள். இவளுக்கு இருப்பு கொள்ளவில்லை. ஆனாலும், உள்ளே செல்ல துணிச்சலில்லை. தன்னை ஒரு பண்டம்போல விலைபேசுகிறார்கள் என்று அவள் சதையெல்லாம் கருகியவளாக அமர்ந்திருந்தாள்.

என்ன வாழ்க்கையிது? அவளின் இதயத் துடிப்பு அவளுக்கே கேட்டது. என்ன தப்பு செய்தாள்? அன்னையும் இல்லை தந்தையும் இல்லை என்ற வாழ்க்கையில் வாய்த்தவனும் வக்கற்றவன் என்றால் என்ன செய்வது? ஆதரவு தேடியபோது கிடைத்தவன் அரவணைப்பில் மயங்கியது தவறோ? வாழ்க்கை ஒழிந்துபோய்விடும் என்ற அச்சத்தில் கிடைத்த அரவணைப்பைப் பற்றிக்கொண்டது தவறோ? ஜெயபால் முகத்தில் தெரிந்த சிரிப்பு, இளக்காரம், தெரு நாயைப் பார்ப்பது போன்ற பார்வை.. அந்தரங்கத்தைக் கொச்சைப்படுத்தும் அகங்காரம்.. இவனுடன் எப்படி வாழ்ந்தோம் என்றெல்லாம் அவளுக்குள் எண்ணம் ஓடி, தலை கிறுகிறுத்தது.

கதவைத் திறந்துகொண்டு அவன் வந்தான். இவள் மேஜை அருகே வந்து நின்று விரல்களால் மேஜையைத் தட்டினான். இடி கேட்டவள் போல இவள் திடுக்கிட்டு நினைவுக்கு வர, அவனின் முகத்தில் அதே சிரிப்பு..

‘ஒன்னை வித்து அட்வான்சு வாங்கிட்டேன்..’, என்று பேண்ட் பாக்கெட்டைத் தட்டிக் காட்டினான். ‘படுக்கைக் கூலிய மொத்தமா அப்புறம் வாங்கிக்குவேன்’, என்று விலகி நடந்தான். கதவருகே நின்று அவன் விரல்களால் காட்டிய சமிக்ஞை அவளை இன்றுவரை கொன்று போட்டுக்கொண்டிருக்கிறது.

எத்தனை நேரம் அப்படியே அமர்ந்திருந்தாள் என்று தெரியாது. அழைப்பு மணியடித்தது. பலமுறை அடித்து ஓய்ந்தது. எங்கோ தொலைவில் கேட்பது போல அவளுக்குப் பட்டது. ரெங்கசாமி எழுந்து வந்து இவள் தலையைத் தொட்டபோதுதான் அவள் நினைவுக்கு வந்தாள். அவனின் கை இவளைச் சுட்டது… நெருப்பு போல.. விலைக்கு வாங்கிய கை என்றுணர்ந்தாள்.

அவனோ, கோணல் உதடுகள் விரிய அதே கவர்ச்சியுடன் சிரித்தான். ‘பயந்துட்டியா..? நானிருக்கேன்ல… பிரச்சனையைத் தீர்த்துட்டேன்’, என்றான்.

‘என்ன வெல கொடுத்தீங்க?’, இவள் குரல் பிணத்தின் குரல் போல இவளுக்கே கேட்டது.

‘வெலையா? வெலையில்ல.. அவன வெரட்டுறதுக்கு அவங்கேட்டத கொடுக்கப்போறேன்.. நாளைக்கே வக்கீலப் பார்த்து டைவர்ஸ் பைல் பன்னு. அவனும் ஒத்துக்குவான். ஒன்னோட மாமாகிட்டயும் போன்ல பேசிட்டேன்.. அவருதான் எல்லாத்துக்கும் பொறுப்பு.. மியூட்சுவல்.. டைவர்ஸ் ஆகுற அன்னிக்கு மீதப்பணம்.. இதுதான் ஒப்பந்தம்..’

இவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை. ‘அதா நானும் சொல்றேன். என்ன வெலகொடுத்து வாங்கிட்டிங்க..’

ரெங்கசாமிக்கு இவள் என்ன பேசுகிறாள் என்று புரியவில்லை. அதற்குமேல் பேச அவனுக்கு அன்று நேரமும் இல்லை.

அந்த ரெங்கசாமிதான் இன்று இறந்துபோனான். மாமா தொலைபேசியில் அழைத்துச் சொல்லியிருந்தார்.

மறுபடியும் செல் சிணுங்கியது. அலுவலக எண் என்று தெரிந்தது. யோசனையாக இருந்தது. எடுக்கலாமா? வேண்டாமா? செய்தியைக் கேட்கும்போது எப்படி நடந்துகொள்வது? யார் பேசுவார்கள்? நான்தான் காரணம் என்று யாருக்கெல்லாம் தெரியும்?

செல் அடித்து ஓய்ந்து மறுபடியும் உயிர் பெற்று சிணுங்கியது. ‘லேசா லேசா’ என்ற பாட்டு இப்போது கேட்டது.

அது ரெங்கசாமியின் செல்லில் இருந்து அழைப்பு வரும்போது வரும் பாடல். அவன்தான் வைத்துக்கொடுத்திருந்தான். ‘லேசா லேசா.. நீயில்லாமல் வாழ்வது லேசா..’

அப்படியிருந்த காதல் ஏன் இப்படிப் போனது?

யார் போன் செய்வது? கண்டுபிடித்துவிட்டார்களோ?

நடுக்கத்துடன் செல்லை எடுத்தாள். ஈனஸ்வரத்தில், ‘சொல்லுங்க சார்..’ என்றாள்.

‘சார் இல்லம்மா.. நா சுரேஷ் பேசுறேன்’. சுரேஷ் என்பது ரெங்கசாமியின் உயிர் நண்பன்.

‘சொல்லுங்க சார்’.

‘இல்ல கடைசியில ஒனக்குத்தான் போன் போட்டுருக்கார்.. அதான்..’

இவள் புரிந்துகொண்டாள். தன் மேல் சந்தேகப்படுகிறார்கள். குரலை இயல்பாக்கிக்கொண்டு, ‘கடைசியிலன்னா?’, என்று கேட்டாள்.

‘ஒனக்குத் தெரியாதா..?’

‘என்ன சார் ஆச்சி’ என்றாள் வரவழைத்துக்கொண்ட பதட்டத்துடன்.

சுரேஷ் சற்று யோசித்துவிட்டு, ‘அவன் ஆபீசுலயே தூக்குப் போட்டுகிட்டாம்மா’, என்றார்.

‘அய்யோ…’ என்று அலறியவள், அப்படியே செல்லைத் தரையில் போட்டாள். இதற்கு மேல் பேசினாள் மாட்டிக்கொள்வோம் என்று அவளுக்குத் தெரியும். கீழே விழுந்த செல் துள்ளியெழுந்து தள்ளிப்போய் விழுந்து இரண்டாகப் பிளந்தது. பேட்டரி தனியே விலகிச் சென்று விழுந்தது.

இவளும் துண்டுகளாகத்தான் இருந்தாள்.

கடைசியாக ரெங்கசாமி பேசியபோது கெஞ்சினான். அவளுடைய காதலை எப்படிப் போற்றுகிறான் என்று சொன்னான். அவளின் அணைப்பில் தாயை உணர்ந்ததாகச் சொன்னான். இவள் தடுமாறினாள். ஆனாலும், அவனின் துரோகம் இவளைச் சுட்டது. எதிர்காலம் பற்றிய பயம் நெஞ்சில் இருந்தது.

‘சரி.. மாமாகிட்ட பேசுங்க’, என்றபடி அழைப்பைத் துண்டித்துவிட்டாள்.

ரெங்கசாமி ஏன் அப்படி செய்தான்? மாமாவிடம் பேசினானா? என்ன சொன்னார் அவர்? தூக்கு மாட்டிக்கொள்ளும் அளவுக்கு அவன் கோழையா? இவள் ஏன் அவனை அப்படி நிர்ப்பந்தம் செய்தாள்? இந்த வீட்டில் உள்ள அனைத்துப் பொருளும் அவன் வாங்கியளித்தது அல்லவா? இவற்றுடன் எப்படி வாழ்வது? அவன் ஏன் துரோகம் செய்தான்? ரெங்கசாமிக்கும், பணம் பெற்றுக்கொண்டு விவகாரத்து அளித்து ‘மனைவியை விற்பனை’ செய்த ஜெயபாலுக்கும் என்ன வேறுபாடு?

இவளும் ரெங்கசாமியும் வாழ்ந்த பதிமூன்று ஆண்டுகளில் பதினோராவது ஆண்டில்தான் பிரச்சனை துவங்கியது.

ரெங்கசாமி ஒவ்வொரு மாதமும் மாமன் வழியாக பணத்தைக் கொடுத்துவிடுவான். மாலினியைப் பெற்றெடுக்கும்போது அலுவலகத்தைவிட்டு நின்றவள், அப்புறம் போவதில்லை. வவுத்து மலை அடிவாரத்து குக்கிராமத்தில் வீடு கட்டி கொடுத்திருந்தான். பணம் ஒவ்வொரு மாதமும் ஒன்றாந்தேதி வந்துவிடும். பிள்ளைகளை அழைத்துச் செல்ல செயின்ட் ஆண்டனி பள்ளியின் பஸ் வாசலுக்கே வந்துவிடும்.

வியாழன் இரவுகளில் அவன் இங்கிருப்பான். பிள்ளைகளுடன் விளையாடுவான். மணியையும் மாலினியையும் அவன் தன் பிள்ளைகளைப் போலவே நடத்தினான். வெள்ளி காலை புறப்பட்டு தேனி போய்விடுவான். தேனியில் உள்ள அலுவலகத்தில் அவன் தங்குகிறான் என்றுதான் அவன் மனைவி நினைத்துக்கொண்டிருக்கிறாள். இத்தனை ஆண்டுகள் ஆகியும் இவர்களின் இரகசியம் அவன் மனைவிக்குத் தெரியாது.

கடைசி ஆண்டுகளில் அவன் வீட்டுக்கு வருவது குறைந்தது. வேலைகள் நிறைய என்றான். ஆனால், வீட்டுக்குத் தேவையான அனைத்தையும் எந்தக் குறையும் இல்லாமல் செய்தான். செல்லில் பேசுங்களேன் என்று வற்புறுத்தினாள். சில நாட்கள் சென்றபோது இவள் அழைக்கும்போதுதான் அவன் பேசுகிறான் என்பதை உணர்ந்தாள்.

ஒருநாள் பெருமாள் வந்திருந்தார். அவர்தான் ரெங்கசாமியின் அந்தரங்கம் அனைத்தும் தெரிந்த டிரைவர். ‘அய்யா போக்கு சரியில்லம்மா..’ என்று ஆரம்பித்து அவர் சொன்னதைக் கேட்ட சிந்தாமணிக்கு இதயம் ஒரு முறை நின்று துடித்தது. இருக்காது என்று நினைத்தாள்.

ரெங்கசாமி தொழில் விஷயமாக பெங்களூர் சென்றபோது கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் அமுதாவை அழைத்துச் சென்றானாம். இப்போதெல்லாம், வாரம் ஒரு நாள் அமுதா வீட்டில் தங்குகிறானாம். அதுமட்டுமல்லாமல் இன்னும் இரண்டு பெண்களும் இருக்கிறார்களாம்…

வரட்டும் அவன் என்று சில நாட்கள் காத்திருந்தாள். அவன் வரவில்லை. அழைத்தாலும் பதிலில்லை. அப்புறம் ஒரு நாள் அவனுடைய மதுரை அலுவலகத்துக்குச் சென்றாள்.

நேராக சென்று அவன் அறைக் கதவைத் திறந்தாள். அமுதா தன் கம்யூட்டருடன் அவன் அறைக்கு இடம் பெயர்ந்திருந்தது தெரிந்தது. எதுவும் பேசாமல் கதவை அடித்துச் சாத்திவிட்டு வந்தாள்.

அன்று இரவே இரங்கசாமி சிந்தாமணியைத் தேடி வந்தான். புடவை, பிள்ளைகளுக்கு டிரெஸ் என்று நிறைய வாங்கி வந்திருந்தான். இவள் எதையும் தொடவில்லை. பிள்ளைகள் தூங்கும் வரை இரண்டு பேரும் பேசிக்கொள்ளவும் இல்லை.

பிள்ளைகள் தூங்கியவுடன் இவள் மாலினி அருகில் சென்று படுத்துக்கொண்டாள். அவன் அருகே வந்தான். ‘சிந்து’ என்று அவன் அழைத்தபோது அதில் பொய்யிருந்ததாக அவளுக்குப் பட்டது.

‘ஏங்க இப்புடி செஞ்சிங்க?’ என்று நேரே கேட்டாள். அவன் தலை குனிந்து அமர்ந்திருந்தான். இவள் எழுந்து நின்று மறுபடியும் கேட்டாள், ’ஏங்க இப்புடி செஞ்சிங்க?’

‘அதெல்லாம்.. சும்மா.. சிந்து.. ஒரு.. சேன்ஞ்சுக்குத்தான்.. ஆனா, நீதான்..’

இவள் ஓடி அவன் அருகில் சென்று, ‘அப்ப சேன்ஞ்சுக்கு என்ன வேன்னாலும் செய்வியா? செய்வியா? செய்வியா?’ சிந்தாமணி அவனின் முன் தலை முடியைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தாள். வலி தாங்காமல் அவன் துடித்தான். பிடித்த முடி கையோடு வந்துவிட, அவன் பயத்துடன் விலகினான். இவள் முடியை உதறிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவை அடித்துச் சாத்தினாள். சற்று நேரத்தில் அவனின் கார் புறப்பட்டுச் செல்லும் சப்தம் கேட்டது.

மறுநாளில், அதிகாலை என்றும் பாராமல் சுரேஷை அழைத்தாள். தான் கண்டதை, கேட்டதை, நடந்ததைச் சொன்னாள்.

‘அது.. ஆம்பிளைங்கன்னா அப்புடி இப்புடித்தான் இருப்பாங்க’, என்று ஆரம்பித்த போதே இவளுக்குப் புரிந்துவிட்டது.

‘சரி, என்னைக் கல்யாணம் பன்னிக்கச் சொல்லுங்க’, என்று இவள் கேட்டபோது, ‘அது எப்புடி.. அவம் பொண்டாட்டி எப்புடி ஒத்துக்கும்?’, என்று கேள்வி எழுப்பினார் சுரேஷ்.

‘அப்ப.. இந்த ஆளு ஒவ்வொரு பொட்டச்சியா புடிக்கும்.. என் நெலம என்னாவுறது? எம்புள்ளைங்க நெலம என்னாவுறது?’

நீண்ட விவாதத்துக்குப் பின் வார்த்தைகள் சூடு பிடித்தன. கடைசியாக சுரேஷ் கேட்ட வார்த்தை இவள் இதயத்தை அறைந்தது. ‘சரிம்மா.. அவனுக்கு நீ ரெண்டாவது பொண்டாட்டி.. ஒனக்கு அவ ரெண்டாவது புருஷந்தானா? ஒன்ளோட மாமா உண்மையிலேயே மாமாதானா?’

அன்று அழைப்பைத் துண்டித்தவள்தான். அதன் பின் சுரேசுடன் பேசவில்லை. பதிலாக அவளது மாமாவை அழைத்துப் பேசினாள். தாய் தந்தை இல்லாத அவளுக்கு அவளின் தாய் மாமாதான் எல்லாம்.

அவர் செய்ததுதான் வினையாகிப்போனது. அவர்களின் சாதிக் கட்சித் தலைவரை அழைத்துப் பிரச்சனையைச் சொல்லியிருக்கிறார். அவர்கள் ‘கல்யாணம் செய்துகொள் இல்லாவிட்டால் ஒரு பெருந்தொகை கொடுத்துவிடு’, என்று நெருக்கினார்கள். பேரம் படிந்தது. ஆனால், சொன்ன தேதியில் பணம் வரவில்லை. நாளொன்றைக் குறித்து அதற்குள் பணம் வரவில்லையென்றால் மானம் கப்பலேறிவிடும் என்று மிரட்டியிருந்தார்கள். எத்தனைப் பெண்களுக்கு செலவு செய்து அழிந்தானோ.. ரெங்கசாமி தொங்கிவிட்டான்.

இன்னமும் மழை கொட்டிக்கொண்டிருந்தது. ஜன்னலைத் திறந்து வவுத்து மலையைப் பார்த்தாள். மலை தெரியவில்லை. அருகாமை மரங்கள் காற்றில் பேயாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. சட்டென்று புறப்பட்ட மின்னலின் வெளிச்சத்தில் வவுத்து மலை பேயென உயிர் பெற்று பின் மறைந்தது. இவள் தலையில் இறங்கியது போல எங்கோ இடி விழுந்தது.

என்ன நேரமிருக்கும் என்று சுவர்க் கடிகாரத்தைப் பார்த்தவள் அதிர்ந்துபோனாள். மணி ஐந்து ஆகிக்கொண்டிருந்தது. இரவு எட்டு மணிக்கு செய்தி வந்ததிலிருந்து அவள் ஓயவில்லை. ஆனாலும், கண்ணில் தூக்கம் இல்லை. உடலில் வேதனையில்லை. ஒரு சொட்டு கண்ணீர் கூட வரவில்லை. என்ன ஆயிற்று தனக்கு என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

வராண்டாவில் இருந்த கட்டிலில் மாலினி தூங்கிக்கொண்டிருந்தாள். அவள் ரெங்கசாமி மாதிரியே இருந்தாள். தூங்கும்போது குளிராக இருக்க வேண்டும். போர்த்திக்கொள்ள வேண்டும். போர்வைக்குள் முடங்கிக்கொள்ள வேண்டும். அந்த வராண்டாவில்தான் இவள் மார்பில் ஒரே போர்வையில் ரெங்கசாமி தூங்கியிருக்கிறான். ‘அப்புறம் ஏன் இந்த எண்ணற்ற பெண் சகவாசம்? நான் என்ன குறை வைத்தேன்?’

மாலினையை நெருங்கி வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இந்தப் பெண்ணுக்கு என்ன ஆகும்? என்னைப் போல ஆகிவிடுவாளோ? அவளுக்குப் பயமாக இருந்தது.

மகளை நெருங்கி அவளின் நெற்றியில் கைவைத்தாள். விழித்துப் பார்த்த மாலினி அம்மாவின் கையை இழுத்து நெஞ்சில் வைத்துக்கொண்டு குறுக்கிப் படுத்துக்கொண்டாள். மகள் பெரியவளாகிக் கொண்டு வருகிறாள் என்பதை சிந்தாமணி உணர்ந்தாள்.

கடவுளே.. கடவுளே.. மகளும் தானும் பெண்ணாகப் பிறந்திருக்கக் கூடாது என்று மனதுக்குள் குமுறினாள். மகளிடம் இருந்த கையை உருவிக்கொண்டு வராண்டாவில் குறுக்கும் நெடுக்கும் நடக்க ஆரம்பித்தாள்.

பொழுது விடியும் நேரத்தில் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு நடையை நிறுத்தினாள். கதவின் அருகே இருந்த ஜன்னலின் திரையை விலக்கிப் பார்த்தாள்.

இவளின் மாமாவும், விற்றுவிட்டுப் போன கணவனும் மழையீரத்துடன் நிற்பது தெரிந்தது.

எதற்கு வந்திருக்கிறார்கள்? என்ன கேட்பார்கள்? தன்னை எங்கே இட்டுச் செல்வார்கள்?

ஆண்கள்.. ஆண்கள்.. அனைத்து கணத்திலும் பரவி நிற்கும் ஆண்கள்.

சிந்தாமணி அசையாது நின்றாள். பூட்டிய வீட்டிற்குள் அனைத்து மூலையிலும், வீட்டுக்கு வெளியேயும் ஆண்கள் இருப்பதாகப் பட்டது. அணைத்து, அடித்து, கெஞ்சி, ஏறி மிதித்து, காலைப் பிடித்து, கதறவைத்து.. ஆண்கள்.. ஆண்கள்.. உயிரோடிருந்து, செத்துப்போய்… எப்படியிருந்தாலும் பேயாய் விரட்டும் ஆண்கள்.

அவள் ஓடிப்போய், தன் மகளைக் கட்டிக்கொண்டாள். மகளின் அரவணைப்பில் பயம்போகும் என்பது போல மகளின் நெஞ்சில் புதைந்து பதுங்கிக் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *