கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2013
பார்வையிட்டோர்: 29,154 
 
 

“ஏடே!… இது ஆரு?… இது நம்ம கிட்ணத்தேவர் மவ வண்டி மலைச்சியில்லாடே?… இவ எங்கன கெடந்துடே ஆம் புட்டா?…” என்று ஆச்சரியத்தோடும், பிரியத்தோடும் கேட்டார் நம்பித்தேவர்.

பட்டப்பகல் மாதிரி நிலா வெளிச்சம் இருந்தாலும் நம்பித்தேவர் உட்கார்ந்திருந்த இடத்தில் பூவரச மர நிழல் விழுந்து அவரை மறைத்திருந்தது.

அவளுடன் அந்த ஆட்கள் பதில் சொல்வதற்கு முன்பாகவே வண்டி மலைச்சி, “என்ன மாமோவ்…பொம்பளையின்னா வேண்டானிட்டு அனுப்பி வச்சிருவீயளா?…” என்று சொல்லிக் கொண்டே நம்பித்தேவரின் கால்மாட்டில் போய் உட்கார்ந்தாள்.

’ஏ பெயபுள்ளே! அதுக்குச் சொல்லல. ஆரோ அன்னைக்கி ஊருக்குள்ள, நீ முளுவாம இருக்குன்னு பேசிக்கிட்டாவ… முளுவாம இருக்கவளப் போயி இந்த வேலைக்குக் கூட்டிட்டு வந்துருக்கானுவனேன்னுதான் கேட்டேன்… இந்தமுள்ளுக் காட்டுக்குள்ள சரக்கத் தூக்கிக்கிட்டுப் பத்துப் பன்னெண்டு மைலு நடக்கணும் நீ… ம்… இதுல மத்த வேலையவுடக் கூட ரெண்டு ரூவா கெடைக்குமுன்னு பாத்தியாக்கும்!… எந்தப் பாவிப் பெய வுட்ட சாவமோ தெரியல!…

எப்பேர்க்கொத்த மறக்குடிச் சனங்க எல்லாம் இப்படிக் கெடந்து சீரழியணும்னிட்டு இருக்குது!…”

“நீங்க எதுக்கு மாமோய் இந்த முள்ளுக் காட்டுக் குள்ள இத்தனை வயசுக்குப் பொறவும் ஒத்தையிலே கெடந்து சாராயம் காச்சிக்கிட்டு, எந்த நேரம் எவன் வருவானொன்னு செத்துக்கிட்டுத் திரியுதீய?…”

”வேற என்ன… துட்டுக்குத்தான்”.

இதைக் கெட்டுவிட்டு வண்டிமலைச்சி லேசாகச் சிரித்தாள்.

”சரி… பெருசு.. மணி எட்டு எட்டரைக்கி மேல இருக்கும் போல, நெலா மேல ஏற ஆரம்பிச்சாச்சி சீக்கிரமா எடத்தக் காலி பண்ணணும். பொழுது விடியறதுக்குள்ள சரக்கக் கொண்டு போயி நாசரேத்துல சேப்பிக்கணும்… இந்தக் கொள்ளைக்குள்ள மொபைல் பார்ட்டிக்கி புது இன்ஸ்ப்பெக்டரு வந்திருக்காராம்! கொஞ்சம் கடுத்தமான ஆளு போல. எச்சரிக்கையாக கொண்டுட்டுப் போகணும்னு மொதலாளி சொல்லி அனுப்பிச்சிருக்காரு… சரக்க டின்னுலே அளந்து அடச்சிட்டீருல்ல?.. வண்டி மலைச்சி கதய நாளைக்கு ஊருக்கிள்ள போயிப் பேசிக்கிடலாம்…” என்று சொன்னான் சங்கரபாண்டி.

வண்டிமலைச்சி ஓடை மரங்களுக்கு மேலே தெரிந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். சங்கரபாண்டி பேசினது நம்பித்தேவருக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை. வண்டிமலைச்சியைப் பார்க்க பார்ர்க்க அவருக்கு மனசுக்குக் கஷ்டமாக இருந்தது.

”இந்தத் திமிருனாலதாம்லே கெட்டுக் குட்டிச் சொவராப் போறிங்க… அந்தப் பெய சம்முகம் மட்டும் சயிலுக்குப் போவாம இருந்தான்னாக்க இந்தப் புள்ள இன்னைக்கி இப்படியா சாராய டின்னு தூக்க வந்திருக்கும்?…”

வண்டிமலைச்சிக்கு அவள் புருஷன் சண்முகத்தை நினைத்ததும் ஒரு மாதிரியாகப் படபடவென்று வந்தது. தலை சுற்றுகிற மாதிரி இருந்தது. கொஞ்சம் பின்னால் நகர்ந்து அப்படியே அடிமரத்தோடு மரமாகச் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள். எங்கோ தூரத்தில் பஸ் போகிற சத்தம் கேட்டது.
பஸ் சத்தம் வந்த திசையை பார்த்தாள் வண்டிமலைச்சி. கிழக்குத் திசையில், அடிவானத்தில் போய்க் கொண்டிருந்த பஸ்ஸின் ஹெட் லைட் வெளிச்சம் திட்டுத் திட்டாக முள் மரங்களுக்கு மேல் விட்டு விட்டுத் தெரிந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு, சத்தமும் வெளிச்சமும் மறைந்தே போய்விட்டன.

அது எந்த ஊருக்குப் போகிற பஸ்ஸாக இருக்கும்? ஒருவேளை சாத்தான்குளம் பஸ்ஸாக இருந்தாலும் இருக்கலாம், கல்யாணம் ஆன பிறகு அம்மன் கோயில் கொடை, பொங்கல் என்று இந்த நாலு வருஷத்தில் எத்தனை தடவை திருச்செந்தூர் – சாத்தான்குளம் பஸ்ஸில் சண்முகத்தோடு போய் வந்திருக்கிறாள். ஒரு தடவை சண்முகம் வேலை பார்த்த வாழைத் தோட்டத்திலுருந்து நாகர்கோவிலுக்கு வாழைக்காய் லாரி லோடு ஏற்றிக்கொண்டு போனபோது, சாத்தான்குளம் வழியாகத் தான் போகிறது என்று, திடீரென்று தோட்டத்திலிருந்து அவசர அவசரமாக வந்து இவளை புறப்படச் சொன்னான் சண்முகம்.

சாத்தான்குளத்துக்கு லாரி போய்ச் சேரும்போதும் இதே நேரம் இருந்தது. இதே மாதிரித்தான் அன்றும் நிலவுகூட இருந்தது. மெயின் ரோட்டிலிருந்து வீட்டுக்குச் சின்னச் சின்ன முடுக்குகளைக் கடந்துதான் போக வேண்டும். நிலா வெளிச்சத்தில் அவனோடு சிரித்துப் பேசிக்கொண்டே அந்த சின்னஞ்சிறு முடுக்குகளினூடே நடந்து போன போதுதான் எவ்வளவு சந்தோஷமாக இருந்தது. அப்போது அய்யாவும் ஆத்தாவும் இருந்தார்கள். இரண்டு பேரையும் பார்த்தபோது அவர்களுக்கும்தான் எவ்வளவு சந்தோஷம். ஆத்தா தோசை சுட்டுக் கொடுத்தாள். ராத்திரி வெகுநேரம் வரை எல்லோரும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருஷத்துக்கு முன்னால் மழையே இல்லாமல் போய் ‘தண்னீர் தட்டு’ வந்த பிறகுதான் எல்லாமே ரொம்ப மோசமாகி விட்டது. சண்முகத்துக்குத் தோட்டத்தில் வேலை இல்லாமல் போய் விட்டது. நாளைக்கு ஒரு இடத்தில் கூலி வேலை பார்க்க ஆரம்பித்தான். சாத்தான்குளத்தில் அய்யாவும், ஆத்தாவும் அடுத்தடுத்து ஒரு வருஷத்துக்குள் செத்துப் போய்விட்டார்கள். அண்ணன் சாத்தான்குளம் வீட்டைத் திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டு விட்டான். இத்தனைக்கும் அண்ணன் இவள் மேல் ‘தங்கச்சி, தங்கச்சி’ என்று எவ்வளவோ பாசமாக இருந்துவந்தான். ஆனாலும் அவனுக்குக்கூட வீடு, வாசல், சொத்து என்றதும் பாசமெல்லாம் விட்டுப் போய்விட்டது. வீட்டு விவகாரத்துக்குப் பிறகு பேச்சுவாத்தைகூட வேண்டாம் என்று, உறவே விட்டுப் போய்விட்டது.

சண்முகத்துக்கு வாழைத் தோட்டத்தில் வேலை போன பிற்பாடு எல்லாமே தலைகீழா மாறி விட்டது. இரண்டு மாதத்துக்கு மின்னால் குரும்பூர் பஜாரில் ஏதோ தகராறு வர கோபத்தில் ஒருத்தனை வெட்டிக் கொன்று விட்டான். கல்யாணமாகி நாலு வருஷத்துக்கிப் பிறகு அப்போதுதான் வண்டிமலைச்சி முதல் முதலாக உண்டாகியிருந்தாள்.

சண்முகம் திருச்செந்தூர் சப்-ஜெயிலில்தான் இருக்கிறான். அவன் மேல் கேஸ் போட்டிருக்கிறார்கள். அண்ணனிடம் போய் கேட்டதுக்கு, “கொலைகாரப் பெயலுவோ பொங்சாதிமாருக்கெல்லாம் இந்த வூட்டுல என்ன வேலை…?” என்று கோபமாகச் சொல்லி விரட்டி விட்டான். அன்றைக்கு ராத்திரியே ஊருக்குத் திரும்பி விட்டாள். அரளி விதையை அரைத்துக் குடிக்கப்போனவளை ராமாக்கவின் மகள் பார்த்து விட்டாள்.

”வண்டிமலைச்சி அக்கா அரளி வெதயை அரைச்சுக்கிட்டிருக்கா…” என்று சொல்லி விட்டாள். பிறகு, ராமக்கா ஓட்டமாக ஓடிவந்து அரைத்ததைப் பிடுங்கி எறிந்தாள். இவளைக் கண்ட மாதிரி திட்டினாள்.”

“ஏ, சங்கரபாண்டி!… நீயும் மணிப்பெயலுமா குளத்துக்குள்ள பதிச்சு வச்சிருக்க டின்னைத் தூக்கிக்கிட்டு இங்கன வாங்கடே!… இங்கனே வச்சே அத அளந்து டின்னுகள்ல ரொப்பிரலாம்…” என்றார் நம்பித் தேவர்.

”பாத்தேரா… ஒம்ம சோலியக் காட்டிட்டீரே! ரெண்டு நாளாகக் காட்டுக்குள்ள கெடந்து சாராயம் காச்சுத ஆளுக்கு இந்த டின்னுகள்ல அளந்து ரோப்பி வக்கத் தேரமில்லாமேப் போயிட்டுதாக்கும்… இதுக்கு ஆளு வரட்டும்னு பாத்துக்கிட்டு இருந்தீராக்கும்… இதுதான ஒம்ம கிட்ட உள்ள கெட்ட பளக்கம்…”

”பெரிய கெவுனரு மவனுவோ இவனுக…. போங்கலே போயித் தூக்கிட்டு வாங்கடா!… இந்தப் புள்ளய வேற கூட்டிக்கிட்டு வந்துட்டியோ. வயித்துத் தள்ளிக்கிட்டு இதுவேற இங்கன தனியா உக்காந்திருக்கு, என்னத்தெயாவது ஒண்ணக் கெடக்க ஒண்ணு ஆயிடிச்சின்னா?…”

”ஒமக்கேன்ன… ஒம்ம சோலி முடிஞ்சிது… இன்னைக்கி ராவு பூரா காட்டுக்குள்ள பதுங்கிக் கெடந்து போட்டு நாளைக்கிக் காலையில மொதலாளியப் பாத்து சம்பளத்தக் கணக்குப் பாத்து வேண்டி முடிஞ்சுகிட்டுப் போயிருவீரு! வந்த எடத்துல போனமான்னு இல்ல… சரக்க டின்னுல ரோப்பிக்கிட்டு இன்னும் பத்துப் பன்னெண்டு மைலு லொங்கு லொங்குன்னு ஒடணும்!… மூணு நாளா இங்கனயே கெடக்கேரு… இந்த டின்னுகள ரொப்பி வைக்க முடியல ஒம்மாலே?…” என்று மூணு மூணுத்துக்கொண்டே பக்கத்தில் தெரிந்த குளத்து மேட்டைப் பார்க்க நடந்தார்கள் சங்கரபாண்டியும், மணியும்.

அவர்கள் போகுபோது, “ஏய்!… அங்கன குளத்தாங்கரை மேலேயே நாலஞ்சாறு டின்னுக கெடக்கும்… அந்த எடத்துக்கு நேரே கீள கொளத்துக்குள்ள எறங்குக்க… தண்ணிக்கரை ஒரத்துல ஒரு கல்லு அடையாளங் கெடக்கும் கல்லைப் பொரட்டிப் போட்டு கீள தோண்டுங்க…”

அவர்கள் போவதைப் பார்த்துக்கொண்டே இருந்தார் நம்பித் தேவர். அவர்கள் குளத்துமேட்டில் ஏறுவதைப் பார்ர்த்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

”ஏளா!… என்னடா இந்தக் கெழட்டுப் பெய இப்பிடிச் சொல்லுதேன்னென்னுட்டு வருத்தப்படாத. இதேல்லாம் பொம்பள செய்யக்கூடிய வேலையா?… மொதலாளிமாருக்குச் சாராயம் கடத்ததுக்கு ஆம்பளயவுடப் பொம்பளையோதான் ரொம்பத் தோது. யாரும் சந்தேகப்பட மாட்டாவ… அவெனுவோ நாலஞ்சு தாரானுவோங்கிறதுக்காவ வவுத்துப் புள்ளக்காரி இப்படி ஓடியாரலாமாளா?..”

“இந்தக் கண்றாவிய ஆரு கிட்டச் சொல்லி அழ?… நாஞ் சொல்லுததக் கேளு. இன்னையோட இத வுட்டுரு. நாளையே ஒன் அண்ணங்காரன் கால்ல போயி வுளு. அந்தச் செறுக்கி மவென் ஏதாவது ஏடாகூடமாப் பேசினாம்னாக்க எங்கிட்டே வந்து சொல்லு… ஊர்ப் பஞ்சாயத்தக் கூட்டிப் பேசிப்புடுவோம்!… நாஞ் சொல்லுததக் கேளுளா… இது வேறு வாக்கிலியத்த தொழிலுளா… இன்ன நேரமின்னு இல்லாம எப்பயும் போலிஸூக்குப் பயந்து சாகணும்ளா…”

வண்டிமலைச்சி மரத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்த படியே அழ ஆரம்பித்து விட்டாள்.

”மாமோய்!… நான் வேணுமுன்னா இங்க வந்தேன்?… தவிச்ச வாய்க்கித் தண்ணி தாரதுக்கு எனக்கு ஒரு நாதி இல்லேயே! அந்த மனுஷங் கோவத்துல ஆரையோ வெட்டிச் சாய்க்கப் போயி ஊருக்குள்ள கெடந்து நாமுல்லா சீரழியுதேன்… என்னையும் அந்தப் பன்னருவாளால வெட்டிக் கொன்னுருக்கக் கூடாதா அந்தப் பாவி மவென்? அந்த ஆறுமுகமங்கலம் சொடலைக்கிக் கூடக் கண்ணு இல்லாமே போச்சுதே…” என்று சத்தம் போட்டுப் புழங்கிப் புழங்கி அழுதாள் வண்டிமலைச்சி.

”கடவுளா வந்து ஒனக்கு நிக்கப் போறாரு?… அழாத அழாத! சரி. நீ ஒண்ணு பண்ணு… இந்தா ஒரு பத்து ரூவா இருக்கு. இத வச்சுக்க நாளைக்கிக் காலம்பறயே சாத்தாங்க கொளத்துக்குப் போறப்பட்டுப் போயிரு. நாளைக்கி ராவும் நான் சரக்க ஏத்திவுட வேண்டியிருக்கு… நாளன்னிக்கிக் காலம்பற பத்துமணி வண்டிக்கி நான் சாத்தாங்கொளத்துக்கு வந்துருதேன்… நீ ஒன் அண்ணங்காரன் அடிச்சாலும் புடிச்சாலும் அவேன் வூட்டுத் திண்ணையிலௌயே வூளுந்து கெட… கோவிச்சுக்கிட்டு வந்திராத. நான் வந்து எல்லாம் பேசிக்கிடுதேன்…” என்று அவளிடம் ரூபாயைக் கொடுத்தார்.

”இது எதுக்கு மாமா? வயசு காலத்துல நீங்களே புள்ள குட்டியள வச்சுக்கிட்டு அநேகம் பாடு படுதீய. இதுல எஞ் சொமை வேறயா ஒங்களுக்கு?…”

”ஏழைக்கி ஏழைதான் தொணை… என்ன பெரிய சொமை? பத்தோட பதினொண்ணுன்னு நீயும் எனக்கு ஒரு மவ. அம்புட்டுத்தானள்ளா!..”

மூன்று பேரும் டின்களைத் தலையில் வைத்துக் கொண்டு மெயின் ரோட்டை விட்டுத் தள்ளி ஒரு மைல் தூரத்துக்கும் மேல் உள்ள காட்டுக்குள் வேகமாக வேகமாக நடந்துகொண்டிருந்தார்கள். ஆளுக்குப் பத்து லிட்டர் வீதம் சுமந்து கொண்டு போகத் தலைக்கு பத்து ரூபாய் கூலி என்றுதான் பேச்சு. சங்கரபாண்டியும் மணியும், வண்டிமலைசி மேல் இரக்கப்பட்டு அவள் தலையில் ஆறு லிட்டர் மட்டுமே ஏற்றி விட்டனர். பாக்கி நாலு லிட்டரைத் தங்கள் டின்களில் நிரப்பிக் கொண்டார்கள்.

தலையில் சுமை இருந்தாலும், தேரிக்காட்டுக் காற்றும் நிலா வெளிச்சமும் சேர்ந்து வழியைத் தோற்றாமல் செய்து விட்டன. ஆறு மைல் போல நடந்திருப்பார்கள்.

கீரையூருக்குத் தெற்கே போகும் போது ஒரு வெட்ட வெளியில் சுமையை இறக்கி வைத்துவிட்டுக் கொஞ்ச நேரம் உட்கார்ந்தார்கள்.சங்கரபாண்டியும் மணியும், கொண்டு வந்திருந்த ஒரு அரைச் சிரட்டியில் சாராயத்தை ஊற்றிக் குடித்தார்கள் வண்டிமலைச்சி ஒரு பக்கத்தில் ஆயாசமாகப் படுத்துவிட்டாள். அவளையும் குட்டிக்கச் சொன்னார்கள். அவள் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

மணி அவளைக் குடிக்கச் சொன்னபோது அவளுக்கு சண்முகத்தின் ஞாபகம் வந்து விட்டது. அவனும் அவளும் எத்தனையோ தடவை குடித்திருக்கிறார்கள். சாராயத்துக்குக் கருவாட்டைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்.

”மணி என்ன இருக்கும்?…” என்று படுத்துக் கொண்டே கேட்டாள் வண்டிமலைச்சி. டின்னைச் சுமந்து வந்ததில் பிடரியும் தொள்களும் ரொம்பவும் வலித்தன.

மணி வானத்தை அண்ணாந்து பார்த்தான். “என்ன மிஞ்சி மிஞ்சிப் போனா ஒண்ணு ஒண்ணரை இருக்கும்!…” என்றான்.

”ஒடம்பு வலிக்கிற வலியில இந்தக் காத்தும், நெலா வெளிச்சமும் எம்புட்டுச் சொகமா இருக்குது தெரியுமா? அப்படியே படுத்துத் தூங்கிறலாமான்னு இருக்குது!…”

”அதுக்குத்தான் ஒரு ரெண்டு செரட்டை குடிச்சியானா கெச்சலா இருக்கும்…” என்றான் மணி.

”குடிக்கலாந்தான்… ஆனா வவுத்தல புள்ளண்டு ஒண்ணு கெடக்குதே. அது என்னம்பாவது ஆயிப் போச்சின்னா?…”

”நீ ஒருத்தி!… இந்தப் பெயகிட்டே போயி பெருசா வெளக்கம் பேசிக்கிட்டு இருக்கியே? கெர்ப்பமா இருக்கவ குடிச்சாள்னா கெர்ப்பம் கலைஞ்சி போயிரும்டா… ஒழுங்கா மொளத் தெரியாத பேய.. ஒனக்கு எதுக்குடா இதேல்லாம்?…” என்றான் சங்கரபாண்டி.பேசிக்கிண்டிருக்கும்போதே தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கிற மாதிரி இருந்தது. கொங்ச நேரம் கவனித்துக் கேட்ட பிறகு, குசுகுசுவென்று ரொம்பத் தாழ்வான குரலில் மனிதக் குரல்கள் பேசுவது கேட்டது.

“ஏலேய்!.. மோசம் போயிட்டமடா!… ஏட்டீ வண்டிமலைச்சி எந்திரி… எந்திரி… லே மணி, பக்கத்துல தங்கவேல் நாடார் வெளையில கெணறு இருக்குது. அதுல தூக்கிப் போட்டுட்டு ஓடிருவோம்… தூக்கு தூக்கு” என்று அவரப்படுத்தினான் சங்கரபாண்டி.

”நான் அப்பயே உட்காரப் போவயிலேயே சொன்னேன். நீ கேட்டியா?.. காட்டுக்குள்ள தேரத்துக்கு ஒரு தெசையில் இருந்து காத்து அடிக்கும், டின்னைத் தொறந்தா வாடை காட்டிக் குடுத்துரும்னு சொன்னேனே… கேட்டியா?… இப்ப எல்லாரையும் சேத்து மாட்டி வுட்டுட்டியே?…”

”செறுக்கி மவனே.. கூடச் சேர்ந்து குடிச்சுப் போட்டுப் புத்தியா சொல்லிக்கிட்டிருக்க? ஒரே இறுக்கா இறுக்கிப் பொடுவேன்… தூக்கிலே டின்னை…”

மறுநாள் திருச்செந்தூர் சப்-மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் சங்கரபாண்டி, மணி இவர்களோடு, வண்டிமலைச்சியும் உட்கார்ந்திருந்தாள்.

வெளியான ஆண்டு: 1980

Print Friendly, PDF & Email

1 thought on “துன்பக்கேணி

  1. துன்பகேனி எனக்கு நெருக்கமாக உணர செய்யும் நாதம் இதில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *