கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2012
பார்வையிட்டோர்: 6,663 
 

செவ்வாய்க்கிழமை விடிந்துவிட்டாலே கற்பகத்திற்கு ஏனோ உள்ளூர ஒரு பயம் தோன்றி விடும். ஏதாவது ஒரு சிறுவிபத்தோ அல்லது சோக நிகழ்ச்சியோ தவறாமல் நடந்தே தீருவது வழக்கமாகப் போய்விட்டது.

விடியற்காலையில் தினசரிக் காலண்டரில் தேதியைக் கிழித்தபோது அவள் ராசிக்கு ‘சோகம்’ என்று பலன் சொல்லியிருந்தது அவளை மேலும் அச்சுறுத்தியது. ஜோசியத்தில் அவளுக்கு அபார நம்பிக்கை.

பால்காரக்கிழவி பாக்கியம் பால் பாக்கெட்டைக் கொடுத்தபோது, “அம்மா விசயந்தெரியுமா?பாவம் ! பாங்க் ரமணி ஐயா காத்தாலே நாலு மணிக்கு ‘ஹார்ட் அட்டாக்’லே திடீர்னு செத்துட்டாராம்… அந்த மாதிரி நல்ல மனுசங்களை எதுக்காக சாமி சீக்கிரமே தன்கிட்ட கூப்பிட்டுக்கராருங்கறதுதான் வெளங்கமாட்டேங்குது” என்று வருத்தத்துடன் புலம்பிக் கொண்டே போனாள்.

அந்தச் செய்தி,கற்பகத்தின் நெஞ்சில் இடியாய் இறங்கியது . ஒரு நொடி அவள் நிலைகுலைந்து போனாள். விவரிக்க முடியாத துக்கம் அவள் தொண்டையை அடைத்தது. உலகமே இயக்கத்தை நிறுத்தி விட்டாற்போல் ஒரு பிரமை. அசதியும் பயமும் மேலிட மனப்பதற்றத்தில் செய்வதறியாது துவண்டு மூலையில் சாய்ந்தாள்.

ரமணியை இழந்துவிட்டதற்காக அவர் மனைவி கல்பனா சிற்¢தாவது கவலைப்பட்டு ஒரு சொட்டு கண்ணீர் கூட விடப்போவதில்லை என்பது ஊரறிந்த விஷயம்.

பணக்காரக்குடும்பத்தில் இருந்து வந்த அவள் திமிர் பிடித்தவள். என்றுமே கணவன் என்ற மரியாதையையோ தாம்பத்திய சுகத்தையோ ரமணிக்குத் தந்ததில்லை என்பதும் நூற்றுக்கு நூறு உண்மை. விதி அவர்களைச் சேர்த்து வைத்திருந்த போதிலும் கூட, இருவருக்குமிடையே இத்தனை வருஷஙகளும் ஒரு மௌன யுத்தம்தான் நடந்து வந்திருக்கிறது. பாசமோ பிணைப்போ இல்லாமல் ஏதோ நாட்களைக் கடத்திக்கொண்டிருந்தார்கள். கணவன் மனைவி உறவில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஒருவரை மற்றவர் ஜன்ம விரோதியாகக் கருதுமளவு ஆகிவிட்டது.

ஆனால் கற்பகத்திற்கு?

ரமணியின் திடீர் மரணம் ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பு.

அவளுடைய வசதியான வழ்க்கை. சந்தோஷம், பாதுகாப்பு உணர்ச்சி -அத்தனையும் அவள் தெய்வமாகக் கருதிய அந்த உன்னத மனிதர் ரமணி போட்ட பிச்சைதான் என்று அவள் அடிக்கடி பெருமையோடு சொல்லிக்கொள்வாள்.

அவளுடைய சின்னஞ்சிறிய சந்தோஷ உலகத்தை இப்படி ஒரு நிகழ்ச்சி நொடியில் நொறுக்கிச் சின்னாபின்னமாக்கும் என்று கனவில் கூட அவள் எதிர்பார்த்ததில்லை.

அவளுடைய கடந்த கால வழ்க்கையின் கசப்பான அத்தியாயங்கள் அவள் நினைவில் தோன்றி மறைந்தன.

துரதிருஷ்டவசமாகஅவளுக்குக் கணவனாக வாய்த்த ராஜாராமன் குடும்பப்பொறுப்பு இல்லாத ஊதாரி. பட்டினியிலும் வறுமையிலும் அவர்களைத் தவிக்கவிட்ட கிராதகன். குடிப்பழக்கத்திலும் தீய சாகவாசத்திலும் அவன் வருமானத்தைக் கரைத்து சந்தோஷம் அடைந்தவன். அவனிடம் கற்பகம் அனுபவித்த கொடுமைகள் சொல்லி மாளாது. சமையல் வேலை பார்த்து வந்தவன் ஒரு நாள் குடிபோதையில் ரோட்டில் லாரி மோதி ஸ்தலத்திலேயே மாண்டு போனான்.

கற்பகம் வயிற்றுப் பிழைப்புக்காக இரண்டு வீடுகளில் சமையல் வேலை செய்தாள். வீட்டிலேயே அப்பளாம் வடாம் தயாரித்து கடைகளிலும் வீடுகளிலும் விற்றாள். எவ்வளவு உழைத்தாலும் குடும்பச்செலவுக¨ளைச் சமாளிக்க முடியாமல் திணறிப்போனாள்.

முப்பதாவது வயதிலேயே கணவனை இழந்த ஒரு பெண் — அழகாகவும் இருந்துவிட்டால் – படும் வேதனைகளும் எதிர்கொள்ளும் பிரச்னைகளும் ஏராளம். தாயை இழந்த பச்சிளம் குழந்தையைப் போல் செய்வதறியாது கற்பகம் தவியாய்த் தவித்த போது தான் ரமணி அவளுக்கு அறிமுகமானார்.

நண்பர் ஒருவர் வீட்டிற்கு சமையலுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்த ரமணி கற்பகத்தை சந்தித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. அவளுடைய முழுக்கதையையும் கேட்டு பரிதாபப்பட்டார். மனமிரங்கி ஆதரவாகக் கைகொடுத்து பல வழிகளிலும் உதவினார். அத்தகைய தங்கமான மனிதரை அவள் கண்கண்ட தெய்வமாகக் கருதியது வியப்பில்லை.

ரமணியைப் பற்றி அந்த வட்டாரமே நன்றாக அறியும். பாங்க் வேலையிலிருந்து ஓய்வு பெற்றபின் சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஏழை எளியவர்க்கும் அனாதைகளுக்கும் அபலைகளுக்கும் தன்னாலான உதவியை செய்து நல்ல பெயர் எடுத்திருந்தார்.

கணவன் ஊரெல்லாம் கண்டபடி கடன் வாங்கியிருந்தது அவன் இறப்புக்குப் பின்தான் கற்பகத்திற்கே தெரிய வந்தது. கடன்காரர்கள் கற்பகத்திற்குப் பல விதங்களிலும் தொல்லை கொடுத்தபோது, ரமணிதான் மனிதாபிமானத்துடன் தலையிட்டு பணஉதவி செய்து கடனை சிறிதுசிறிதாகக் குறைத்து அவளுக்கு மன நிம்மதியையும் அளித்ததை அவள் உயிர் உள்ள வரை மறக்க முடியாது.

அவள் பெண் சுந்தரியை கல்லூரியில் சேர்த்து அவள் எதிர்காலத்திற்கு வழி செய்தார். பையன் கண்ணணின் பள்ளிப்படிப்பின் முழுச் செலவையும் வலிய வந்து அவரே ஏற்றுக்கொண்டதை அவளே எதிர்பார்க்கவில்லை.

அத்துடனா? ஆண் துணை இல்லாத வீடு என்பதால் அவ்வப்போது கற்பகம் வீட்டுக்குச்சென்று அவளுக்கும் குழந்தைகளுக்கும் ஆறுதலாகப்பேசி உற்சாகப்படுத்திவிட்டு வருவது வழக்கமாகிவிட்டது.

நாளாவட்டத்தில் இந்த நட்பு எல்லா விதத்திலும் நெருக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இதன் பிறகு ரமணி அடிக்கடி செல்வதும் அங்கேயே தங்குவதும் சகஜமாகிவிட்டது.

இப்போது? அவள் வழ்க்கையின் பொற்காலம் இன்றோடு முடிந்துவிட்டது. எதிர்காலமே பெரியகேள்விக்குறியாகி அவளை பயமுறுத்த ஆரம்பித்துவிட்டது.

குடும்பத்தலைவன் போல அன்போடும் பாசத்தொடும் பழகியவர் ரமணி. அவள் குடும்பப்பொறுப்புகளை எல்லாம் தன் சுமையாக ஏற்றுக்கொண்டு அவள் கவலைகளை மறக்கடித்து அவள் வாழ்வில் வசந்தத்தை ஏற்படுத்திய அந்த புண்ணிய ஆத்மாவின் முகத்தை கடைசியாக ஒரு முறை தரிசித்து விட வேண்டும் என்று அவள் மனம் துடியாய்த் துடித்தது. ஆனால் அது நடக்கக் கூடிய காரியம் அல்ல என்பதும் புரிந்தது.

அந்த நிலையில் அவர் வீட்டிற்குச் சென்றால்?

நினைத்துப் பார்க்கவே உடல் நடுங்கியது அவளுக்கு.

அங்குக் கூடியிருக்கும் ஜனங்கள் ஏளனத்தையும் வெறுப்பையும் பார்வையாலேயே உமிழ்வார்கள்; வாயாடிப்பெண்கள் சிலர் அவளைப்பற்றிக் கேவலமாக அவள் காதுபட பேசக்கூடும். அவள்மேல் சீறி விழுந்து வார்த்தைக் கணைகளால் காயப்படுத்தி, அந்த வீட்டு வாசற்படிகூட மிதிக்க விடாமல் அவமானப்படுத்தி விரட்டி அடித்துவிடவும் கூடும்.

எண்ணங்கள்தாறுமாறாக ஓடி அவளைக் குழப்பின.

வீண்வம்பை விலைக்கு வாங்குவானேன் ? அவமானத்தால் மூக்கறுபட்டு,மன அவஸ்தையுடன் வீடு திரும்புவானேன்? போகாமலிருப்பதுவே உசிதமாகப்பட்டது அவளுக்கு.

ஆனால் ரமணிக்கு எப்படியாவது தன் நன்றிக்கடனைச் செலுத்.தியே ஆக வேண்டும் என்று அவள் மனம் பிடிவாதம் பிடித்தது. அப்போதுதான் சட்டென மனதில் அந்த யோசனை உருவெடுத்தது.

கலைந்திருந்த உடைகளைச் சரி¦செய்து கொண்டாள். நெற்றிப் பொட்டை அழித்தாள். வீட்டைப் பூட்டிவிட்டுத் தெருவில் இறங்க்¢க் கண்ணம்மாபேட்டையை நோக்கி வேகமாக
நடந்தாள்.

அந்தத் தெருவில் வாடகை டெம்போக்கள் அணிவகுத்து நின்றன. தெருவின் ஒரு மூலையில் ஒரு கிழவி ஒருத்தி வாணலியில் மசால்வடையும் வாழைக்காய் பஜ்ஜியும் சுட்டுக்கொண்டிருந்தாள். ஆட்டோஸ்டாண்டில் டிரைவர்கள் காலைச் செய்திகளை அலசிக் கொண்டிருந்தார்கள். மெட்ரோ லாரியைக் கண்டதும் பெண்கள் பட்டாளம் சண்டைக்கு ஆயத்தமானது. குடிசைச்சிறுவர்கள் வாலறுந்து இறங்கிக்கொண்டிருந்த பட்டத்தை பிடிக்க போக்குவரத்தை கவனிக்காமல் ஓடிக்கொண்டிருந்தார்கள்.

சற்று தூரத்தில் சுடுகாடு தெரிந்தது. ரமணியின் குடும்பத்தாரும் நண்பர்களும் மயானக்கிரியைகளை முடித்துவிட்டு ஈர உடைகளுடன் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்ததை அவள் கவனிக்கத் தவறவில்லை.

தலையில் முக்காடு போட்டு முகத்தையும் லேசாக ம¨ற்த்துக்கொண்டு யார் கண்னணிலும் படாமல் உள்ளே நுழைந்துவிட்டாள்.

ரமணியின் சடலத்தைத் தீயின் செந்நாக்குகள் ஆக்ரோஷமாக விழுங்கிக் கொண்டிருந்தன. அந்த கோரக்காட்சியைக் காணச்சகியாமல் தலையிலடித்துக்கொண்டு ,’ஒ’ வென்று கதறி
மனம் விட்டு அழுதாள்.

” யாரம்மா அது? பொம்பிள்ளைங்களெல்லாம் இங்கெ வரக்கூடாது, தெரியுமில்லெ, போ, போ, இடத்தைக் காலி பண்ணு. இல்லாட்டி நான் பொல்லாதவனாயிடுவேன்,
கிளம்பு” வெட்டியான் ஓடிவந்து அவளை விரட்டிவிட்டு நகர்ந்தான்..

கற்பகம் தயங்கித்தயங்கி எரிந்து பஸ்பமாகிக் கொண்டிருக்கும் உடலைப் பைத்தியம் பிடித்தவளைப்போல் வெறி¢த்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஊருக்கெல்லாம் ஓடியாடி உபகாரம் செய்வதையே தன் பணியாக நினைத்த ஒரு ஒப்பற்ற மனிதர் இப்படித் தனியே தீக்கு இரையாவது அவள் மனதிற்கு தாள முடியாத வேதனையை அளித்தது.

“கடைசிவரை யாரோ என்று கவி கண்ணதாசன் பாடினான். நான் இருப்பேன் உங்களுக்குத் துணையாகக் கடைசிவரை.” அவள் உதடுகள் ஆவேசத்துடன் இந்த வார்த்தைகளை முணுமுணுத்தன.

அடுத்த நொடியே அந்தத் தீப்பிழம்பில் இன்னொரு உடல் பாய்ந்தது. தீயின் நாக்குகள் ஆதரவோடு அவளை முத்தமிட்டு அணைத்துக்கொண்டன.

வெளி உலகம் எதுவுமே நடவாதது போல் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

– அக்டோபர் 13 2005

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *