கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 6,967 
 
 

சியாமளாவுக்கு வயது ஐம்பத்தி எட்டு.

மூன்று மாதங்களுக்கு முன்புதான் எல்.ஐ.ஸி மயிலாப்பூர் கிளையிலிருந்து சோனல் மானேஜராக பணியாற்றி ஓய்வு பெற்றாள்.

அவளுக்கு இருபத்தி ஐந்து வயதில் கல்யாணம் ஆனது. இருபத்தியெட்டு வயதில் அவள் கணவர் ஸ்ரீராம் ஒரு விமான விபத்தில் இறந்துவிட்டார். அவருடன் வாழ்ந்த அந்த மூன்று வருடங்கள் மட்டுமே சியாமளாவின் உற்சாகமான நாட்கள். கணவர் இறந்த மூன்றாவது மாதத்தில் அவளுக்கு ஒரு மகன் பிறந்தான்.

அதன்பிறகு அவளது வாழ்க்கை ஒரு போராட்டமாக அமைந்தது.

நல்லவேளையாக கணவர் இறந்தபோது சியாமளா எல்.ஐ.ஸியில் அசிஸ்டெண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் ஆபீசராக இருந்தாள். குழந்தைக்கு அனந்தராமன் என்று பெயரிட்டு, வேலைக்காரிகளின் துணையுடன் குழந்தையையும் கவனித்துக்கொண்டு எல்.ஐ.ஸி வேலையையும் தொடர்ந்துகொண்டு, தனிமையில் மிகவும் தவித்தாள்.

சியாமளாவின் பெற்றோர்கள் அவள் கல்லூரியில் படிக்கும்போதே இறந்துவிட்டனர். ஒரே அக்கா கொல்கத்தாவில் கணவர் குழந்தைகளுடன் செட்டில் ஆகிவிட்டாள்.

தந்தையில்லாத அனந்தராமன் நன்கு படித்தான். அவன் ஒருத்தன்தான் தன் வாழ்க்கைக்கு ஊன்றுகோல் என சியாமளா மிகவும் நம்பினாள். ஸ்ரீராம் மறைவுக்குப்பின் எல்.ஐ.ஸி யிலேயே சிலர் அவளை மணந்துகொள்ள முன்வந்தனர். அதுதவிர அவளது தூரத்து உறவினர்கள் சிலரும் சியாமளாவை மணந்துகொள்ள விருப்பப் பட்டனர்.

குழந்தையுடன் தனிமரமாக இருந்த அவளை திருமணம் செய்துகொள்ள ஆண்கள் முன்வந்ததற்கு இரண்டு தெளிவான காரணங்கள் இருந்தன. ஒன்று சியாமளாவின் சொக்க வைக்கும் அழகு. அடுத்து அவளது நிரந்தரமான நல்ல வேலை.

சியாமளா அனைவரையும் புறந்தள்ளிவிட்டு தன் முனைப்பான வாழ்க்கையை அனந்தராமனின் முன்னேற்றத்திற்காக மட்டுமே செலவழித்தாள். அவனும் தஞ்சை சாஸ்தா இன்ஜினியரிங் கல்லூரியில் பி.ஈ கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து மிக நல்ல மார்க்கில் தேர்ச்சி பெற்றான்.

அதைத் தொடர்ந்து சென்னையிலேயே ஒரு பெரிய ஐடி கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியராக அவனுக்கு வேலை கிடைத்தது. அதேநேரத்தில் சியாமளாவுக்கு சோனல் மானேஜர் பதவி உயர்வும் கிடைத்தது. அவை சற்றே சந்தோஷமான நாட்கள்.

அடுத்த சில வருடங்களில் அனந்தராமனுக்கு ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்துவிட்டால், தன் கடமை முடிந்துவிடும். அதன்பிறகு ஒரு பேரனையோ, பேத்தியையோ கொஞ்சிக்கொண்டு தன் வாழ்நாளை சந்தோஷமாக ஓட்டி விடலாம் என்று கணக்குப் போட்டாள்.

ஆனால் அவள் போட்ட கணக்கு தப்பாகிவிட்டது.

அனந்தராமன் தன்னுடன் வேலைபார்க்கும் ரெஜினாவை காதலித்தான். அம்மாவிடம் தன் விருப்பத்தைச் சொன்னன். ரெஜினா கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவள் மட்டுமல்ல, அனந்தராமனைவிட எட்டு மாதங்கள் வயதில் பெரியவள்.

சியாமளா மகனின் காதல் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

அவளின் சம்மதமில்லாமல் ரெஜினாவை தேவாலயத்தில் திருமணம் செய்து கொண்டான். அதனால் உண்டான மன வருத்தத்தினால் தற்போது அவனுடன் பேச்சு வார்த்தை கிடையாது. இதே சென்னையில் மாம்பலத்தில் குடியிருக்கிறான். ரெஜினாவுடன் நடந்த திருமணதிற்குப் பிறகு மின்னஞ்சல் மூலமாக ஒரு கடிதம் எழுதி, அதில் தன் வீட்டு முகவரியைத் தெரியப் படுத்தினான். அதோடு சரி.

அதன்பிறகு ஐந்து வருடங்கள் ஓடிவிட்டன….

சியாமளாவுக்கு தன் வாழ்வின் எஞ்சிய நாட்களை ஒரேமகனான அனந்தராமனுடன் கழித்து விடவேண்டும் என்கிற ஏக்கம் அதிகரித்தது. ஒரு நல்ல துணை இல்லாது தன் நாட்களை தனிமையில் இனி தள்ளுவது மிகக் கடினம். தனிமையான வாழ்க்கை மிகக் கொடுமையானது என்று உணர்ந்தாள்.

சட்டென்று அவளுக்கு தான் அனந்தராமனிடம் பேசினால் என்ன என்று தோன்றியது.

இன்று சனிக்கிழமை வீட்டில்தான் இருப்பான்.

மனசும், உடம்பும் பர பரக்க தன் ஸ்மார்ட் போனில் அவன் மொபைல் நம்பரைத் தேடி அடித்தாள். சுவிட்ச் ஆப் செய்யப் பட்டிருந்தது. தன்னுடைய லாப் டாப்பை திறந்து இரண்டு வருடத்திற்கு முன் அவன் ஈ மெயிலில் அனுப்பிய முகவரியை எடுத்து வைத்துக்கொண்டாள். அவன் கடைசியாக எழுதிய மின்னஞ்சலை மீண்டும் படித்துப் பார்த்தாள்.

“அன்புள்ள அம்மாவுக்கு,
இக் கடிதத்தை தாங்கள் படிக்கும் தருணத்தில், எனக்கும் ரெஜினாவுக்கும் திருமணம் முடிந்திருக்கும். உங்களுக்கு, என்னுடைய காதல் புரியாதது மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையயும் அளிக்கிறது.

உங்களுடைய ஒப்புதலுடன், ஆசீர்வாதங்களுடன் இத்திருமணம் நடக்கும் என மிகவும் எதிர்பார்த்து ஏமாந்தேன். ரெஜினா நல்ல குடும்பத்துப் பெண். அவள் கிறிஸ்டியனாகவும், நான் இந்துவாகவும் பிறந்தது எங்கள் தவறல்ல. பரஸ்பர அன்பும், புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்தலும் எங்களுடைய பலம். கேவலம் அவள் வேறு ஜாதி என்கிற ஒரே அற்ப காரணம் எங்களுடைய இந்த பலத்தை, பலவீனப் படுத்திவிட முடியாது.

சந்தோஷமான சாம்ராஜ்யம் எங்களுடையது. ஒரு நேர்மையான ஆரோக்கியமுள்ள வாழ்க்கையை நாங்கள் நல்லபடியாக நடத்திச் செல்ல முடியும் என்கிற நம்பிகை எங்களிடம் ஏராளமாக இருக்கிறது.

என் மொபைல் போனில் தொடர்பு கொண்டால், நாங்கள் இருவரும் ஓடோடி வந்து உங்கள் காலில் விழுந்து நமஸ்கரிக்கும் ஏக்கத்துடன் காத்திருக்கிறோம். எங்களுடைய மாம்பலம் வீட்டின் முகவரி இந்தக் கடிதத்தின் மேலே உள்ளது.

நமஸ்காரங்கள்,
அனந்தராமன்

மணி தற்போது காலை பத்து. உடனே கிளம்பி மாம்பலம் சென்று அவனை நேரில் பார்த்து விட்டு வந்தால் என்ன என்று தோன்ற, தன் டிரைவருடன் காரில் சென்றாள்.

காரில் பயணித்த போது, ஓரு வேளை தனக்கு பேரன் பிறந்திருப்பானோ? பேரனைக் கொஞ்சும் அதிர்ஷ்டம் இன்று தனக்கு வாய்க்குமோ? என்று நினைத்து அந்தக் கற்பனை தந்த சுகத்தில் மகிழ்ந்தாள். .

அடுத்த நாற்பது நிமிடங்களில் அனந்தராமின் வீட்டைக் கண்டுபிடித்து காலிங் பெல்லை அமுக்கினாள்.

மாநிறத்தில் குதிரை வால் கொண்டையுடன் உயரமாக ஒரு பெண் சிறிதான இடைவெளியில் கதவைத் திறந்து சியாமளாவைப் பார்த்து, “யெஸ் ப்ளீஸ்” என்றாள்.

“நான் அனந்தராமனோட அம்மா…. அவன் இருக்கானா?”

உடனே அவள் முகம் மலர கதவை அகலத் திறந்து, ” அவர் இல்ல, ப்ளீஸ் உள்ள வாங்க… ” என்றாள்.

சியாமளா உள்ளே சென்று வரவேற்பறையில் அமர்ந்தாள்.

“மேடம், உங்களுக்குத் தெரியாதா? அவர் இப்ப நான்கு மாசமா ஆஸ்திரேலியாவில் ஒர்க் பண்றார்… எனக்கும் விசா கிடைத்து விட்டது. அடுத்த புதன் கிழமை அவர் சென்னை வருவார். வீ ஆர் வைண்டிங்கப் சென்னை பார் குட் ஆன் சண்டே… ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விடுவோம்..”

“உன் பெயர்தானே ரெஜினா? குழந்தைகள் ஏதாவது… ?”

“ஓ உங்களுக்கு ஒரு விஷயமும் தெரியதா? அவர் ரெஜினாவை மியூட்சுவல் டிவோர்ஸ் பண்ணிட்டாரு. என் பெயர் தீபா.”

சியாமளி சுத்தமாக அதிர்ந்தாள்.

“உனக்கு எந்த ஊர்? உன் பேரண்ட்ஸ் என்ன பண்றாங்க ?”

“என் முழுப் பெயர் தீபா ஜெய்சூர்யா. நான் இலங்கையில் பிறந்து, படித்து வளர்ந்தவள். அப்பா சிங்களவர்… அம்மா திருச்சி பக்கம், தமிழும் சிங்களமும் எனக்கு அத்துப்படி. ” சிரித்தாள்.

” உங்க ரெண்டு பேருக்கும் எப்ப திருமணம் ஆச்சு ?”

“இல்ல மேடம், எங்களுக்கு இன்னமும் திருமணமாகவில்லை. என்னை அவருக்கும், அவரை எனக்கும் பிடித்திருக்கிறது… ஆஸ்திரேலியாவில் நன்றாக செட்டில் ஆனவுடன் திருமணம். அதுவரை லிவ்-இன் ரிலேஷன்ஷிப்தான்…” புன்னகைத்தாள்.

சியாமளா ஆடிப் போனாள்.

“ஒருவேளை அவனுக்கு உன்னை பிடிக்காமலேயோ அல்லது உனக்கு அவனைப் பிடிக்காதுபோய் இந்த திருமணம் நடக்காது போனால்….?”

“ஸோ வாட்? நாங்கள் ஒரு நல்ல புரிதலுடன் பிரிந்து விடுவோம்… விசா, பாஸ்போர்ட் எல்லாம் தனித் தனியேதான இருக்கிறது.”

சியாமளாவுக்கு தலையைச் சுற்றியது.

எதற்காக இங்கு வந்தோமென்று நினைத்துக் கொண்டாள். உடம்பு பட படத்தது.

தீபாவுடன் எதுவும் பேசாமல் சோர்வுடன் அமர்ந்திருந்தாள். வாழ்க்கையே வெறுத்துப் போயிற்று. .

“மேடம் நான் கோப்பி போட்டுத் தரேன்.. அவரு இப்ப ஸ்கைப்பில் வர்ற நேரந்தான், நீங்க அவரிடம் பேசுங்க…” என்றாள்.

“இல்லம்மா, நான் அப்புறமாக அவனிடம் பேசுகிறேன்… ”

சுரத்தில்லாமல் அங்கிருந்து கிளம்பினாள்.

ஏராளமான எதிர் பார்ப்புகளுடன் வந்தவள், தொய்ந்து போய் காரில் சென்று அமர்ந்தாள்.

தன்னுடைய மகன் ஜாதி, மதம், மொழி, இனம், தேசங்களைத் தாண்டிப் போனதை எண்ணி நொந்து கொண்டாள். தான் ஒரு நல்ல தாயாக இருந்து மகனை ஒழுக்கத்துடனும், கண்டிப்புடனும் வளர்க்கவில்லையோ என்று நினைத்து வேதனைப் பட்டாள். அவனது கல்வியில் காட்டிய அக்கறையை மற்ற நல்ல விஷயங்களில் காட்டத் தவறி விட்டோமோ என்று வெட்கினாள்.

வீட்டிற்கு திரும்பி வந்துதும் சோர்வாக சுருண்டு படுத்துக்கொண்டு அழுதாள்.

தான் இதுகாறும் அவனுக்காக பூண்ட விரதங்கள், எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்து விட்டதை நினைத்து மிகுந்த ஆயாசமுற்றாள். தான் ஏமாற்றப்பட்டதாக எண்ணி குமைந்தாள்.

கண்களில் நீர் முட்டியது….

இனிமேல் தனக்காக மட்டுமே வாழ்வது என்று முடிவு செய்தாள்.

இத்தனை வருடங்களாக தினமும் பத்துமணி நேரங்கள் எல்.ஐ.ஸிக்காக உழைத்து, அதன் பலனாக சோனல் மானேஜர்வரை பதவி உயர்வும் பெற்று ஓய்வுபெற்ற பிறகு தற்போது தான் தனித்து விடப்பட்ட சுயபச்சாதாபம் அவளை ஆட்கொண்டது.

அவளது மனம் ஒரு நல்ல புரிதலுடன் கூடிய ஒரு துணைக்காக ஏங்கியது.
வாழ்வின் எஞ்சிய நாட்களை ஒரு நல்ல துணையுடன் சேர்ந்து வாழ்ந்துவிட வேண்டும் என்கிற தேடல் அவளுக்குள் ஊற்றெடுத்தது.

வாரங்கள் ஓடின….

அன்று தன் காரில் லீ மெரிடியன் சென்று பகல் உணவு அருந்தினாள். அவள் சாப்பிட்டதும் க்ரெடிட் கார்டில் பேமென்ட் செய்துவிட்டு கார்டுக்காக காத்திருந்தபோது, சியாமளாவை நோக்கி மிகவும் கண்ணியமான ஒருத்தர் வந்து எதிரே அமர்ந்தார்.

“மேடம் என் பெயர் ராமகிருஷ்ணன். நீங்கள் மூன்று வருடம் முன்பு எல்.ஐ.சியில் என் மனைவியின் ஹவுசிங் லோன் விஷயத்தில் உதவி புரிந்தீர்கள்….என்னை ஞாபகம் இருக்கிறதா? இப்பவும் மயிலாப்பூர் ப்ராஞ்சில்தான் இருக்கிறீர்களா?”

“ஓ ஞாபகம் இருக்கிறது. லோன் எடுத்திருந்த உங்களது மனைவி இறந்துவிட்டார் என்றும் அதனால் அடுத்து செய்யவேண்டியது என்ன என்றும் கேட்டீர்கள்….அவர்தானே நீங்கள்?”

“ஆமாம் மேடம் அதே ராமகிருஷ்ணன்தான். நான் உங்களை அடிக்கடி நங்கநல்லூரில் பார்த்திருக்கிறேன்.”

“அங்குதான் நான் குடியிருக்கிறேன். மூன்று மாதங்கள் முன்புதான் எல்.ஐ.ஸி யிலிருந்து ரெடையர்ட் ஆனேன்.”

“என்வீடும் நங்கநல்லூரில்தான்….ரோஜா மெடிக்கல்ஸ்க்கு அருகில். உங்களுக்கு நேரமிருந்தால் உங்கள் உதவியுடன் கட்டிய அந்த வீட்டை வந்து பாருங்களேன்.”

சியாமளிக்கு அவனது பணிவான பேச்சும், அழைப்பும் பிடித்திருந்தது. ஸ்ரீராம் உயிருடன் இருந்தால் இவரை மாதிரிதான் இருந்திருப்பார் என்று தோன்றியது.

“ஐ வான்ட் டு கம். பட் மை ட்ரைவர் இஸ் வெயிட்டிங் அவுட்சைட்.”

“யு ப்ளீஸ் கம் வித் மீ…. லெட் ஹிம் கோ டு யுவர் ஹவுஸ் அண்ட் வெயிட். ஐ வில் டிராப் யூ.”

சியாமளாவுக்கு அது சரியெனப்பட்டது.

அவருடன் கிளம்பி அவரது காரில் சென்றாள். ராமகிருஷ்ணன் வீடு மூன்று படுக்கையறைகளுடன் விஸ்தாரமாக சுத்தமாக இருந்தது. ப்ரிட்ஜிலிருந்து லிச்சி ஜூஸ் எடுத்துக் கொடுத்தார்.

“என் ஒரேமகன் கலிபோர்னியாவில் இருக்கிறான். ஏ.ஜி ஆபீஸிலிருந்து டிஏஜியாக ஓய்வு பெற்றுவிட்டேன். தற்போதைக்கு நான் மட்டும்தான் இந்த வீட்டில் வாசம். சீக்கிரமாக எனக்கு ஒரு துணை கிடைத்தால், வாழ்க்கையில் எனக்கு ஒரு பிடிப்பு கிடைக்கும்…”

“அதெப்படி சீக்கிரமாக?”

“ஒரு நல்ல துணை வேண்டும் என்று போன சண்டே பேப்பரில் விளம்பரம் கொடுத்தேன். அதற்கு இருபதுபேர் ஆர்வம் காட்டியுள்ளனர்.”

“விளம்பரத்திற்கான கடைசி தினம் முடிந்து விட்டதா?”

“கடைசிதினம் என்று எதுவும் கிடையாது….ஏன் மேடம்?”

“ஒன்றுமில்லை அதற்கு நானும் அப்ளை பண்ணலாம் என்று பார்க்கிறேன்.”

இதைச் சொன்னபோது சியாமளாவின் கண்களில் நீர் முட்டியது. உடம்பு படபடத்தது. நாக்கு வறண்டது.” தானா இப்படிப் பேசினோம்! என்று கூசினாள்.

பிறகு தன்னைப்பற்றிய அனைத்து உண்மைகளையும் ராமகிருஷ்ணனிடம் சொன்னாள். தனக்கு ஒரு துணை வேண்டிய அவசியத்தை உணர்ந்துகொண்டதாகவும் ஒளிவின்றி சொன்னாள்.

“ஐயாம் ஆனர்டு மேடம்….என் மகன் ஏற்கனவே எனக்கு க்ளியரன்ஸ் கொடுத்துவிட்டான்…..நீங்கள் ஒப்புக்கொண்டால் இப்போதிலிருந்தே ஒரு நல்ல தொடக்க முயற்சியாக நாம் நம் லிவ்இன் ரிலேஷன்ஷிப்பை ஆரம்பிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனால், என்னை உதறிவிட்டு நீங்கள் சென்றுவிடலாம்.”

“நீங்கள் பண்பானவராக இருக்கும்போது நான் ஏன் உங்களை விட்டு விலக வேண்டும்?”

“சேர்ந்து வாழ நமக்குள் நல்ல புரிதல் இருந்தால் போதும். திருமணம் என்கிற பந்தமும், எதிர்பார்த்தலும் இந்த வயதில் நமக்குத் தேவையில்லை.
அதன்பிறகு உங்கள் விருப்பம்… உங்களுடைய வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு என்னுடன் இங்கு வந்து விடுங்கள்.”

“நம்மிடம் நிறைய நேரமும், தேவையான பணமும், மரியாதையான புரிதலும் இருக்கிறது. நமக்கு வேண்டியது ஆரோக்கியமான துணை. வாழ்ந்துதான் பார்த்து விடுவோமே.”

அடுத்த வாரத்திலிருந்து இருவரும் சந்தோஷமான புரிதலுடன் ஒன்றாக வாழ ஆரம்பித்தனர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *