(1981ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
ராஜாத்தி மண்டையை போட்டுவிட்டாள். அவளுடைய மகன் ராசாங்கம் பாலூற்ற நீண்டநேரமாக தவித்துக் கொண்டிருந்த ஜீவதீபம் பொசுக்கென அணைந்து போயிற்று.
அந்த நார் உறிந்த கட்டிலில் கிழிந்த நாராகக் கிடந்த ராஜாத்தியை சுற்றி சூழ்ந்திருந்த மாதர் கூட்டம், இதற்கென தயாராக காத்திருந்ததைப் போல் ‘ஓ’வென குரலெடுத்துப் ஒப்பாரி வைத்தனர்.
‘அடியாத்தா…வாயிலே மண்ணையள்ளிப் போட்டுட்டீயே….’
”என்னைப் பெத்த எங்காத்தா…… ஏமாத்திட்டுப் போயிட்டீயே….’
‘பேரப்பிள்ளைகளை பேணிப்பேணி வளர்த்தீயே – எங்களைப் பேதலிக்க வைச்சுட்டு ஓடிட்டீயே ….’
குரலெடுத்து பெண்கள் அழுதனர். அந்த சப்த அலைஓசை நயமின்றி அவலக் கூச்சலாக அலறியது. நிகழ்ந்துவிட்ட மர ணத்தை பிரகடனப்படுத்துவதைப்போல.
அடர்ந்த புகையாகச் சூழ்ந்து நெருங்கிய அந்த அழுகைக் குரலலை ராசாங்கத்தை அழுவதற்கு நிர்ப்பந்தித்தது. அவனது தொண்டை கமறியது. ஆனால் அழுகை வரவில்லை.
‘பெத்துச்சீராட்டி பேணி வளர்த்தவள் செத்துக் கிடக் கிறப்போ பெருந்தூணா நின்னோங்கிற பேச்சு வந்துடுமே’ என எண்ணிய ராசாங்கம் வேஷத்துக்காகவாது அழவிரும்பினான். ஆனால் அழவில்லை. முகத்தில் சோகத்தின் ரேகைகள்கூட பதிய மறுத்தன.
ஏதோ மூன்றாம் மனுஷியைப் பார்ப்பதுபோல பற்கள் வெளித்தெரிய கிடந்த அம்மாவின் சுருக்கங்கள் நிறைந்த முகத்தைப் பார்த்தான். பாம்படம் போடுவதற்காக வளர்ந்து, நனைந்த சணல் கயிறாக துவண்டு கிடந்த காது நுனிகளை கவனித்தான்.
இதே காதில் கனத்த பாம்படம் ஊஞ்சலாட, வலிவு குன்றாத உடம்போடு தெம்பாக அலைந்த நாலைந்து வருடத்துக்கு முந் தைய அம்மாவை நினைத்துப் பார்த்தான். வெறுப்பில் ஊறிய நினைவுகள் நெஞ்சில் ஊர்த்தன.
அந்த பாம்படத்தின் மீது அவள் எத்தனை பாசம் வைத் திருந்தாள். வெறித்தனமான பாசம். மரணத்தின் இறுதி எல்லைவரை ஏன் மரண தினத்தன்றுகூட இந்த பாம்படம்தான் தனது கௌரவத்தையும் உணவையும் காப்பாற்றும் என்று மலைப்பாறை உறுதியான நம்பிக்கை வைத்திருந்தாள்.
இந்த பாம்படம் இல்லையானால் கடைசிக் காலத்தில் கஞ்சியூத்த நாதியற்றுப் போவோம். ஒரு ஈ காக்கைகூட எட்டிப் பார்க்காது. செத்த பிணத்தையும் சீந்த நாதியிருக்காது’ என்ற திடமான கணிப்புதான் அவளை அந்த தங்க ஜடத்தின் மீது அத்தனை பாசம் கொள்ள வைத்தது.
போன மூன்றாம் வருஷம், இந்த பிரதேசம் பூராவும் வறட் சித் தீயில் கருகிக்கொண்டிருந்த சமயம், தனது இரண்டு பிள்ளை களும் மனைவியும் எந்த வேலையும் கடனும் கிடைக்காமல் பட் டினிக் குளிரில் விறைத்துக் கிடந்த நேரம்.
“அம்மா அந்த பாம்படத்தைக்குடேன். அடகு வைச்சு…. ஒரு மாதச் சாப்பாட்டுக்காவது வழிபாத்துக்கிடுதேன்” என்று கெஞ்சினான். ஆனால் ராசாத்தி ஒரேயடியாக மறுத்து விட்டாள்.
“ஒன்னை ஒம்பதாக்குற உத்தமி வவுத்திலே பெறந்த நீ…. ஒன்னுக்கும் வழியத்துப்போய் நிக்கறே.ஒனக்கு வாய்ச்ச வளோ….அடியாத்தே…. ஒம்பதை ஒரு நொடிக்குள்ளே ஒன்னு மில்லாமே ஊதிக்காட்டுறவள். உங்களுக்கு எவ்வளவு போட் டாலும் அடைபடாதப்பா… என்று ஒரு மூச்சு திட்டினாள். திட்டு மழைக்குப் பிறகு கொஞ்சமாவது கருணைக்கசிவு நடக்குமென்ற நப்பாசையில் கோபத்தை அடக்கி மௌனமாயிருந்தான். அவ ளது அங்கலாய்ப்பு, அனுமான் வாலாக நீண்டது.
”….உள்ளது உரியதெல்லாம் வித்து உங்களுக்கே போட் டாச்சு. மிஞ்சி நிக்குது இது ஒன்னுதான். ‘சாவுமுதலு’க்கு கிடக்கிற இந்த பாம்படத்தையும் பிடுங்கிக்கிட்டு காதறுத்த சூர்பனகையா வுட்டுடணும்னு துடியா துடிச்சு நிக்கறே. வெறும் மூளியாக நிக்கணுமாக்கும்! அதென்ன தலையிலே கிழிச்ச எழுத்தா, எனக்கு?
“இதையும் ஓங்கிட்டே குடுத்துட்டா அவ்வளவுதான். அத்தோட தொலைஞ்சேன். யாரு என்னை ஏறெடுத்துப் பார்ப்பா? தாகத்துக்கு தண்ணி கேட்டால்… மேகத்துக்கு ஆளனுப்புவே…. வெந்த சோறு போடப்பான்னு கேட்டா… வெளையாத நெல்லைக் காட்டுவே… உயிரை விட்டுக் கிடந்தாலும் உருட்டிப் பார்க்க மாட்டே “தாயா இவள்? யாரோ தெரியலியே’ன்னு வாயலுங் காமெ சொல்லுவே….”
“போடா போ… புள்ளையாம் தாயாம்… எல்லாம் பொய்”
நீண்ட நெடிய அந்த அங்கலாய்ப்புக்குப் பிறகு, முற்றுப் புள்ளி இத்தனை இருட்டுக் கற்பனையாக வந்து விழும் என்று எதிர்பார்க்கவேயில்லை.
ராசாங்கத்துக்கு சண்டாளமாகக் கோபம் வந்தது. புள்ளை குட்டியோட நா பட்டினி கிடக்க… நீ காதுலே நகையைபோட்டு ஆட்டாணுமாக்கும் என்று கத்தலாமா என்று நெஞ்சு துடித்தது.
மார்பகத்துக்குள் ஒரு உக்கிரமமான எரிச்சல். கண்ணில் கொப்பளித்த உஷ்ணப் பெருக்கைத் தாங்கமாட்டாதவளாக ராஜாத்தி, புலம்பிக்கொண்டே, முனங்கிக்கொண்டே தலை கவிழ்ந்து அழுதுகொண்டே போய்விட்டாள்.
“வேஷக்காரி….” என்று அவன் உதடுகள் உச்சரித்தபோது அதில் எல்லையற்ற கோபமும், கையாலாகாத்தனமும் வெளிப் பட்டது.
‘இதோ செத்துக் கிடக்கிறாள்…என்ன சாவுமுதல் வைச்சி ருக்காள்… ஒன்னுமில்லே…. இன்னிக்கு அத்த பாம்படமா… இந்த பிரதேசத்துக்கு கௌரவமான சவ அடக்கத்தை செய்யும்? அது தான் மரணத்தருவாயில் ராஜாத்தியே வித்து தின்னு போட்டாளே…ஒன்னை ஒம்பதாக்குகிற உத்தமியாமே அவள்? சிறுக்கி..
எண்ணங்கள் சிலந்திப்பசையாக முடிவில்லாமல் நீண்டு வலை பின்ளிக் கொண்டிருந்தது. திடுமென ஏதோ பிரக்ஞை யுற்றவனைபோல விழித்தான். மனிதபிமான உணர்வு அவனது மன ஓட்டத்தைக் கண்டித்தது.
என்னதான் கோபதாபங்கள் இருந்தாலும், செத்துக் கிடக் கிற சடலத்தைப் பத்திப் பேசக் கூடாது…சொல்ற குற்றச்சாட் டுக்கு வந்து பதில் சொல்ல முடியாத ஒரு ஜீவனைப்பத்தி பேசற துக்கு எனக்கென்ன உரிமையிருக்கு?” என்று சுய விமர்சனமாக முணுமுணுத்துக் கொண்டான்.
மனைவி, மாதர் கூட்டத்துடன் சேர்ந்து அழுதுகொண்டிருந்தாள்.
ராசாங்கத்தின் மனதில் இது ஒரு கேள்வியாக முளைவிட்டு. வியப்பாக வியாபித்தது.
பின்னும் ஒருமுறை அம்மாவைப் பார்த்தான். வெற்றிலைக் காவிப்பற்கள் அசிங்கமாகத் தெரிந்தன. வெள்ளைத்திரை விழுந்த இடுக்கிய கண்களை இன்னும் யாரும் மூடவில்லை.
நனைந்த சணல் துண்டாக துவண்டு கிடந்த செவிகளின் அடிப் பாகத்தையும் பார்த்தான்.
நெஞ்சுக்குள் இனம்புரியாத அசூயையும் கோபமும் பரவி யது. வெளியே வந்தான். அதற்குள் சாவு விஷயம் தெரு பூராவும் படர்ந்துவிட்டது போலும்! வெளியே ஒன்றிரண்டு பெரிய மனிதர்கள் வந்து நின்றனர்.
துக்கம் விசாரித்தனர். அவர்கள் முகத்திலும் அப்படியொரு துக்க சாயல் வெளிப்படவில்லை.
“என்ன ஒடம்புக்கு சுகமில்லாமெ படுத்திருந்தாளா?”
“ஆம் மாமா… சும்மா சளிக் காய்ச்சல்னு படுத்தாள். நாலு நாள்தான் கிடந்தாள்……. மழைக் காலமாயிருக்கிறதுனாலே பொசுக்குன்னு சுருட்டிடுச்சி”
”சரி….யார் யாருக்கு தந்தி கொடுக்கணுமோ…அந்த வேலைகளைக் கவனிக்கக்கூடாது…?”
”கவனிக்கணும்” ராசாங்கம் அசிரத்தையாக முனங்கினான்
ஆட்கள் வரஆரம்பித்தனர். கூரை நிழல்களிலும், அவரைப் பந்தலுக்கடியிலுமாக கும்பல் கும்பலாக உட்கார்ந்து,மாகாண அரசியல். ஊர் விஷயம். பிற குடும்ப ரகசியங்கள் பேசிக் கொண்டிருந்தனர்.
“ஊர்லே எத்தனை அரசியல் கட்சிகள் இருந்து என்ன செய்ய? இத்த ஊருக்கு ஒரு ரோடுகூட இல்லாமெ தீவுபோல கிடக்கு” என்று ஒரு பெரியவர் ஆவேசமாகக் கத்தினார்.
ராசாங்கம் எதிலும் பட்டுக் கொள்ளாமல் மேல் துண்டை தலையில் போட்டு ஒரு ஓரத்தில் உட்கார்ந்தான். ஒரு பையனை விட்டு கடையில் வெற்றிலைக் கட்டும் பாக்கும் வாங்கிவரச் சொல்லி ஒரு பெட்டியில், நாட்டாண்மை முன்பு வைத்தான். அவர் ‘வெத்திலைச் செலவை’ செய்தார்.
ஒவ்வொருவராக அவனிடம் வந்து துக்கம் விசாரித்தனர். அவன் அவைகளை உள்ளூர வெறுப்புடன் வாங்கிக் கொண் டான். ஏதோ மனம் ஒட்டாத பதிலாக உதறினான்.
அவன் போட விரும்பிய சோக வேஷம், வரமறுத்தது.
வேலைகள் இவனை எதிர்பாரமல் சிறகுகட்டிப் பறந்தன. குழி தோண்ட ஆளனுப்பப்பட்டனர். நான்கு வாரி (தேக்குக் கம்பு)களை எடுத்து வந்து வீட்டின்முன் ஊன்றி, அகத்தி குச்சி களால் பின்னி, தென்னங்கிடுகுகளை போட்டு ஒரு பந்தல் போட் டனர். பந்தலில் அடியில் ஒரு வெள்ளைத் துணியைக் கட்டினர். நாவிதனும், ஏகாலியும் வந்து நின்றனர்.
ஒரு கிழவி அழுது முடித்து விட்டு வெளியே வந்தவள் ராசாங்கத்தினருகிலும் வில்லிலிருந்து விடுபட்ட அம்பாக பாய்ந்தாள்.
அடப்பாதகத்தி…ஒன்னை விட்டுட்டுப் போயிட்டாளே பாவஜன்மங்க எங்களை யெல்லாம் போட்டுட்டு, குருட்டுப் பய தெய்வம்…புண்ணியவதியை பூப்போல எடுத்துபோயிடுச்சே… என்று ஒரு மூச்சு புலம்பி அழுதாள். அதற்குப் பதிலாக அவ னும் குமுறி அழ வேண்டும். அதுதான் மரபு.
ஆனால் அழவில்லை. பிரக்ஞை யற்றவனைப் போல அந்தக் கிழவியை நிகைப்புடன் வெறித்தான். இவனது துக்கமற்ற நிலையை மனதுக்குள் கண்டித்துக்கொண்ட கிழவி, அதை மறை முகமாக சுட்டிக்காட்டுவதுபோல மேலும் பேசினாள்:
”உங்க அப்பா சாகும்போது ஒனக்கு வயது ஏழுதானிருக் கும். ஓந்தங்கச்சி கைப்புள்ளையாயிருந்தாள். அப்போ, இந்த கண் விழிக்காத பச்சை மண்ணுகளை வைச்சுக்கிட்டு அவபட்ட பாடு கொஞ்சமா!காட்லே ஒழைச்சு உயிரைக் குடுத்துட்டு வீட்டுக்கு வந்து சோளத்துக்கு காத்திருந்து வாங்கி இடுச்சி, சோறுகாச்சி உங்களுக்கு ஊத்துவாளே…”
“பட்டினியிலே தன் வயிறு காஞ்சாலும், புள்ளை முகம் வாடாமெ வளத்து சிறகு முளைக்க வைச்சாளே… உங்களை வளக்குறதுக்காக… வளர்த்து பெரிசாக்குறதுக்காக அவ பட்டபாடு…. ஒழைச்ச ஒழைப்பு…அனுபவிச்ச துன்ப துயரம்…அடட… நீங்க அவளை கோயில் கட்டி கும்பிடலாமே”
கிழவி போய்விட்டாள். அவள் எரிந்து விட்டுப்போன ஊசிகள் மனதுக்குள் குத்தி… ரணகாயத்தில் சீழ்வடியச் செய் தன. இதய மூலைகளில் புழுதி மண்டி முடங்கிக் கிடந்த பழைய நினைவுகள், தூசி பறக்க வெளிக் கிளம்பின.
தான் ஏழு வயதாகவும், தங்கை கைக்குழந்தையாகவும் இருந்த சமயத்தில், பொட்டிழந்த வெறுமையிடன், பொருளா தார சூன்யத்துடன் வாழ்க்கையை எதிர்த்து நின்ற அந்த வைராக்கியத்தின் வடிவம் அவனது நினைவுக் குளத்தில் மெல் லிய அலைகளாக விரிந்தன.
சிறுவயதில் ஆடு மேய்த்து, எவனிடமாவது அடிபட்டு தேம் பியழுது வந்த தனது தலையை அன்புடன் தடவி, தவிப்புடன் கண்ணீர் சிந்தி, ஆறுதலாக அணைத்துக் கொள்ளும் அந்தத் தாய்மையின் பாசதரிசனம்!
‘தீபாவளி’ ‘பொங்கல்’ போன்ற நல்ல நாட்களில் ஊரெல் லாம் தோசை பலகாரம் வடை நர்த்தனமாட, வெறுமையில் வெந்து, ஏங்கித் ததும்பும் தன்னையும், தன் தங்கையையும் சந் தோசப்படுத்துவதற்காக (போலியாகத்தான்) அவன் சொல்லும் ஆசை மொழிகள்…
“பொறுங்க…இன்னும் ரெண்டு நாள்லே தோசை சுட்டுத் தர்ரேன்’ன்னு சொல்ற பலகார வார்த்தைகள்… இப்படி புள்ளை களிடமே பொய் சொல்ல வேண்டியிருக்கிறதே என்கிற மன உறுத்தலும், வறுமையின் அவலமும் முகத்தைக் கறுப்பாக்கி, கண்களை கண்ணீர் குளமாக்கி விடுகின்ற கோரத்தை நினைத் துப் பார்க்கிறபோது,…
அவனது இருதயம் நனைந்து கசிந்தது.
அப்படி யெல்லாம் வறுமைக் காலத்தில் வாழ்க்கையை சவாலாக்கிக் கொண்டு, தனது உதிரப் பெருக்கில் உதயமான
(பக்கம் 41 இல்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)
சோலைமுத்து நாடார் ஊரில் பெரும்புள்ளி. செழிப்பான விவசாயம். ஆனாலும் வட்டியே தொழிலாகக் கொண்டவர். அதுவும் ‘லேசுமாசான வட்டில்ல.
சாதாரணமாக அவரைப்பற்றிக் கூறுவர்; ‘“அவன் கொடுக்கிறதுக்கென்னய்யா… ‘நூத்துக்குப் பத்து’ ஆசாமி யாச்சே!”
அப்பேற்பட்ட பகாசுர வட்டிப் பேர்வழி! அவரது கொடு மைகளையும் கஞ்சத்தனத்தையும், வஞ்சகத்தையும் எண்ணி எண்ணி ஏழைகள் குமுறுவார்கள்; புலம்புவார்கள். ஆனால் சோலைமூத்து நாடாரின் முகத்தைப் பார்த்தால் முகமெல்லாம் சிரிப்பாய் மலர்ந்துவிடும்; மனதுக்குள் நெருப்பு கொழுந்து விடும்.
ஏனெனில் ‘இழவு, காடேத்து’ போன்ற அவசர செலவுக்கு அவர் முன்புதான் போய் நிற்க வேண்டியதிருக்கும்.
ஆனால் ஓரு தடவை ராசாங்கம் கொடுக்கல் வாங்கலில்… இந்த கொடிய “நூற்றுக்குப் பத்து” வட்டியை சகித்துக் கொள்ள முடியாமல், முகத்துக்கு நேராகவே நெருப்பை காட்டி விட்டான். அதிலிருந்து இருவருக்குயிடையில் பேச்சு வார்த் தையே நின்று போயிற்று. பகை நிரத்தரமாயிற்று.
ஒரு பையன் அவிழ்ந்து தொங்கும் டவுசரை ஒரு கையால் பிடித்துக் கொண்டு நெருங்கினான்.
“சின்னையா….நாட்டாமைத் தாத்தா கூப்பிடுறாரு
ராசாங்கம் நிமிர்ந்தான். அவரைப் பந்தலின் அடியில் வெற்றிலைப் பெட்டி முன்பு உட்கார்ந்திருந்த நாட்டாண்மை கண்களாலேயே அழைத்தார். எழுந்தான்.
“என்ன சின்னையா…?”
”உக்காரு…” என்றவர் நிதானமாகக் கேட்டார்.
“சரி…. தேருகட்டித்தானே தூக்கணும்?”
“…” மௌனத்துடன் தலை கவிழ்ந்தான்.
“அதானே நம்ம ஜாதி வழமை! நிலைமை எப்படியிருந் தாலும் வழமைகளை மீற முடியாதே.”
நாட்டாண்மையின் முகத்தைப் பார்த்தான். ஏலாமையும், திகிலும் கண்களில் நிழலிருட்டாக கவிழ்ந்தது. இழவு, கல்யா ணங்களில் கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்கள் சடங்குகள் யாவும் ஏழ்மைக் கெதிரான ஆயுதபாணியாக அணி வகுத்து நிற்பது போன்றதோர் நினைவு, அவன் நெஞ்சில் அலைபுரண் டது. மனதைக் கலக்கியது.
அதிர்ச்சியில் நிலை மறந்து, மலைத்துப்போன ராசாங்கத்தை உசுப்பினார், நாட்டாண்மை.
“என்ன ராசு… பணத்துக்கு வழியைப் பாரு….”
மனதுக்குள் சீதம் (குளிர்) பாய்ந்தது. புதிய அதிர்ச்சிக்கு உள்ளாகிப் போனவனைப் போல ஒரேயடியாக வெலவெலத்துப் போனான். நெஞ்சில் ஒருவித நடுக்கம். உதடுகள் உலர்ந்தன:
“எம்புட்டு செலவாகும்?”
“எப்படியும் நூறு ரூபாயாச்சும் வேணும், மயானச் செலவுக்கு”
”ஐயய்யோ…”
அவனது மனத் திகில் வெளிப்பட்டது.
“ஏன்” ஒரேயடியாக மலைச்சுப் போனே? சோலைமுத்து நாடார் கிட்டே போய் விஷயத்தைச் சொல்லிக்கேளு. இல் லேன்னு சொல்ல மாட்டாரு. அந்த மனுஷனுக்கு குறி, வட்டி தானே”
அலட்சியமாக வழிகாட்டினார் நாட்டாண்மை. தேள் கொட் டியதுபோல் இருந்தது ராசாங்கத்துக்கு.
‘சோலைமுத்து நாடார் கிட்டேயா போய்க் கேக்குறது? சண்டைக்கார மனுஷனாச்சே. தரமாட்டாரே. பணத்துக்கு என்ன
(பக்கம் 44 இல்லை, உங்களிடம் இருந்தால் அனுப்பவும்)
– மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு.
– மானுடம் வெல்லும் (சிறுகதைகள்), முதல் பதிப்பு: ஏப்ரல் 1981, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, இரமநாதபுரம் மாவட்டம்.