துக்கமே செத்துப் போச்சு..!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 24, 2021
பார்வையிட்டோர்: 3,528 
 
 

பத்தடி தூரத்தில் வரும்போதே….குடிசை வாசலில் துவண்டு உட்கார்ந்திருந்த நான்கு வயது பிள்ளையைப் பார்த்ததும் செல்லாயிக்கு நெஞ்சு திக்கென்றது.

எட்டி நடை போட்டு அருகில் சென்றாள்.

“அம்மா ! பசிக்குது !…” அருண் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அழுதான்

இவளுக்குப் பெற்ற வயிறு பிய்த்துக்கொண்டு போனது.

சித்தாள் வேலைக்குச் சென்று வந்தவள் தன் சாப்பாட்டு தூக்குவாளி, சும்மாடு துணிப்பைகளை அப்படியே போட்டுவிட்டு…

“இதோ வந்துட்டேன்டா கண்ணா..!” மகனை வாரித் துக்கினாள்.

அவசரமாய் முந்தானையில் முடிந்திருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறந்தாள்.

காலையில் வேலைக்கு அவசர கதியில் விட்டுச் சென்ற வீடு அப்படியேக் கிடந்தது.

“செத்த இருடா கண்ணா. கொஞ்ச நேரத்துல காஞ்சி ஊத்தறேன்..”சொல்லி மகனைக் கீழ் இறக்கி விட்டு விட்டு விடு விடுவென்று வேலையில் இறங்கினாள்.

“ஹேய்…! அம்மா வந்துட்டாங்கடாடோய்…!” வெளியிலிருந்து கூவிக் கொண்டே… பத்து, எட்டு, ஏழு வயது மூன்று சிறார்கள் குனிந்து கூட்டிக் கொண்டிருந்த செல்லாயியை ஓடி வந்து கட்டிக் கொண்டார்கள்.

அவர்களுக்கு அம்மாவைப் பார்த்த மகிழ்ச்சி.

செல்லாயிக்கு அவர்கள் பிடிப்பு, இறுக்கம் மூச்சு முட்டியது.

அனைவரையும் பிரித்து, ஆசையாய் ஆளுக்கொரு முத்தம் கொடுத்து விட்டு…

“நீங்க படிங்க. அஞ்சு நிமிசத்துல அம்மா காஞ்சி காய்ச்சறேன்.. !” அன்பாய்ச் சொல்லிவிட்டு வேலைகளை பார்த்தாள்.

அவர்கள் வாசலுக்கு ஓடி கூரையில் தொங்க விட்டிருந்த பள்ளிக்கூடப் பைகளை எடுத்துக் கொண்டு வந்து அமர்ந்து புத்தகம் பிரித்தார்கள்.

செல்லாயி சிம்னி விளக்கை ஏற்றி அவர்களுக்கு அருகில் வைத்து விட்டு, அலுமினிய பானையில் தண்ணீர் சாய்த்து உலை வைத்து அடுப்பைப் பற்ற வைத்தாள் .

பின் வெளியில் விட்டு வந்த தூக்குவாளி , துணிப்பையை எடுத்து வந்து நடு வீட்டில் வைத்து விட்டு ஆணியில் மாட்டி இருந்த முறத்தை எடுத்துக் கொண்டு அதன் அருகில் அமர்ந்தாள்.

வாளி மூடியைக் கழற்றி மேலிருந்த மளிகை சாமான்களை எடுத்து வைத்து விட்டு அடியில் இருந்த அரிசியை முறத்தில் கொட்டி தூசு, தும்புகள் தட்டினாள்.

இடையில் குழம்பிற்கு புளி வாங்கி வராதது நினைவு வந்தது.

முந்தானையில் முடிந்து வந்த கூலி காசைப் பிரித்து எடுத்துக் கொண்டே..

“ஏ… ராசா !” பெரியவனை அழைத்தாள்.

“என்னம்மா..?” பத்து வயது பையன் புத்தகத்திலிருந்து தலையைத் தூக்கிப் பார்த்தான்.

“கடைக்குப் போய் புளி வாங்கி வா…”கையை நீட்டினாள்.

அவன் எழுந்து வந்து வாங்கிக் கொண்டு சிட்டாகப் பறந்தான்.

ஆள் திரும்புவதற்குள் அரிசியைக் கை பார்த்த செல்லாயி அதை களைந்து கழுவி கொதிக்கும் உலையில் கொட்டினாள்.

“அம்மா பசிக்குது !” உட்கார்ந்திருந்த கடைக்குட்டி பையன் அருண் அவள் தோளைத் தொட்டான்.

“செத்த இருடா கண்ணா. அம்மாவுக்குப் பத்து கையா இருக்கு…? ஆக்கித்தானேடா போடனும்…” வாஞ்சையாய் சொல்லி அவன் தாடையைத் தடவினாள்.

பிள்ளை அழுதான்.

“ரொம்ப பாசிக்குதா …?”பாவமாய்க் கேட்டாள்.

“ம்ம்…”தலையாட்டினான்.

“கொதித்தண்ணி தரவா…?”

“ம்ம்….”

பிள்ளைக்கு எவ்வளவு பசி இருந்தால் கொதி தண்ணி கேட்கும்..? பிள்ளைக்குச் சத்துணவுக் கூடத்தில் மதியான சோறு சரியாய்ப் போட்டார்களோ என்னவோ. இல்லை அவர்கள் வயிற்றில் போட்டுக்கொண்டார்களோ பாவிகள் ! – உள்ளுக்குள் சபித்துக் கொண்டே கரண்டியால் கொதி நீர் மொண்டு சட்டியில் ஊற்றி உப்பு போட்டு ஆற்றினாள்.

அதற்குள்..

“அம்மா…!” என்று அழைத்துக் கொண்டே பெரியவன் வந்து விட்டான்.

வாங்கி வந்த புளியை நீட்டி…

“அம்மா ! எனக்கும் காஞ்சி !” என்றான்.

“எல்லாருக்கும் தர்றேன்டா…”சொல்லி இன்னும் கொஞ்சம் கொதி நீர் மொண்டு…ஆற்றி ஆளுக்கொரு குவளை ஊற்றிக் கொடுத்து விட்டு மிச்சமிருந்ததை வாயில் ஊற்றிக்கொண்டு பரபரப்பாக வேலைகளை பார்த்தாள்.

அரை மணி நேரத்தில் சோறும் குழம்பும் தயாராகி விட்டது.

ஆளுக்கொரு அலுமினியத் தட்டில் போட்டு குழம்பு ஊற்றி வைக்க ஆவி பறந்தது.

மணக்க மணக்க சோற்று முகத்தைக் கண்ட மக்கள் ஆவலாய்த் தொட்டு கையைச் சுட்டுக்கொண்டார்கள்.

“ஆறவிட்டு மெல்ல சாப்பிடுங்க…”என்று சொன்னாலும் செல்லாயிக்குள் குடல் கொதித்தது.

‘ பாவி மக்களா..! இப்படியா பரிதவிக்கனும்..? என் வயித்துல பொறந்து இம்சைப்படனும்..? உங்களைப் பெத்த அப்பன் இப்போ என் கையில மட்டும் கிடைக்கனும்…’ குரோதத்துடன் கறுவி குழந்தைகளைப் பார்த்தாள்.

பாவி ! ஒரு நாளாவது மனைவி, மக்களிடம் பாசமாய் நடந்து கொண்டானா..? சம்பாத்தியத்தை எல்லாம் கொட்டிக் குடித்துவிட்டு தெனைக்கும் தலைகீழாய் வந்து நின்னான்.

“ஏன்யா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கிறே…?” கேட்டால்……

“நான் குடிப்பேன். உனக்கென்ன…?” முறைப்பு.

“புள்ளைங்களுக்கு கஞ்சி ஊத்த காசு குடுத்துட்டு குடியேன்..!”

“நானா உன்னைப் பெத்துக்கச் சொன்னேன்..?”

“அப்போ… நான் தானாப் பெத்துக்கிட்டேனா…?”

இவள் எதிர்பார்க்கவே இல்லை.

“அப்படி வேற பெத்துப்பியோ..நாயே…!!?” கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் கை இவள் கன்னத்தில் இறங்கியது.

செல்லாயிக்குப் பொறி கலங்கியது.

அப்புறம் பிள்ளைகள் கதறக்கதற மிதி. !

இப்படி அழிச்சாட்டியம் செய்த புருசன் புண்ணியவான் ஒழுங்காகவாவது இருந்தானா..?

இல்லை !!

என்றோ ஒருநாள் எவளோ ஒரு சிறுக்கியுடன் ஓடியவன் இன்றுவரைத் திரும்பவில்லை.

தொலைந்தது சனியன் ! என்று நிம்மதி பெருமூச்சு விட்டவளுக்கு அடுத்தவேளை சோற்றுக்கு வழி..? நினைக்க சொரக்கென்றது.

யோசிக்காமல் சித்தாள் வேலைக்கும் கிடைத்த கூலி வேலைக்கும் சென்றாள்.

படிப்பு, வயிற்று சோற்றிக்காக பிள்ளைகளைப் பள்ளிக்கூடம், சத்துணவு கூடங்களுக்கு அனுப்பினாலும்… தின்கிற வயது குழைந்தைகள். எப்படி பசி பொறுக்கும்…?!

“அம்மா ! சாப்பிடலை…?!” பெரியவன் தான் தின்று முடித்துவிட்டு கை கழுவிக் கொண்டு வந்து இவளை உலுக்கினான்.

திடுக்கிட்டு விழித்த செல்லாயி….

“இதோ….”சொல்லி தட்டில் சோற்றைக் கொட்டினாள். மடமடவென்று அள்ளி விழுங்கி கை கழுவினாள்.

வாசலில் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

“யாரு போய் பாரு..”பெரியவனைப் பார்த்தாள்.

அவன் வெளியே போய் பார்த்துவிட்டு வந்து…

“யாரோ ஒரு ஆளும்மா…” சொன்னான்.

‘யார்..? என்ன விசயம்…?’ என்று யோசித்து எழுந்து வந்தாள்.

வாசலில் பழைய மேஸ்திரி. இவள் கணவன் கன்னியப்பன் மேஸ்திரி. கையில் கைபேசியுடன் நின்றார்.

“செல்லாயி…!”

“சொல்லுங்கண்ணே…!”

“வந்து… வந்து….. ஒரு துக்க சேதி…”

“யாரு அண்ணே !”

“உன் புருசன் கன்னியப்பன்.”

“அவரா..? அந்த ஆளுக்கென்ன…?”

“செத்துப் போய்ட்டானாம்…!”

“அப்படியா..? எங்கே., யாரு சேதி சொன்னா…?”

“சென்னை சேப்பாக்கத்துல செத்துட்டானாம். அவனைக் கூட்டிக்கிட்டுப் பொன்னம்மாள் என்கிட்டே சேதிசொல்லி உனக்குச் சொல்லச் சொன்னாள்.”

“சரி அண்ணே… !”

“அம்புட்டுத்தானா…?”

“ஆமாம்ண்ணே…”

அருணாச்சலம் அடுத்து எதுவும் பேசாமல் திரும்பி நடந்தார்.

இவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டு மங்காத்தா…அவர் அகன்றபிறகு…. வீட்டிற்குத் திரும்பியவளை…

“செல்லாயி…!” அழைத்தாள்.

“என்னக்கா..?” நின்றாள்.

அருகில் வந்த அவள்….

“யாரு அவரு..?” கேட்டாள்.

“அந்த ஆள் மேஸ்திரிக்கா..!”

“வேலைக்கு அழைச்சாரா..?”

“இல்லே…”

”பின்னே…?”

“அந்த ஆள் செத்துப் போய்ட்டாராம்.!”

“யார்…?”

“கன்னியப்பன். !”

“என்னடி சொல்றே..?” கேட்டவள் பதறி துணுக்குற்றாள்.

“ஆமாம்க்கா..சென்னையில செத்துப் போயிருக்காம்.! இழுத்துக்கிட்டுப் போனவள் சேதி விட்டிருக்காள்..!”

“என்னடி இது. கட்டின புருசன் செத்திருக்கான். அழுது துடிக்காம இப்படி சாதாரணமா சொல்றே..? !” மங்காத்தா திகிலாய் செல்லாயி முகத்தைப் பார்த்தாள்.

“அதுதான் அஞ்சு வருசத்துக்கு முன்னாடியே செத்து… துக்கமே செத்துப் போயிடுச்சே.! இப்போ என்ன அதுக்குப் புதுசா அழுகை…?!.” என்றாள்.

“செல்லாயி….!” இவள் துணுக்குற்றாள்.

“அது ஒழுங்கா குடித்தனம் நடத்துனதுவரை புருசனாய் இருந்ததுக்கா. குடியில விழுந்ததும் பாதி செத்துப் போச்சு. அவளை இழுத்துக்கிட்டுப் போனதும் மீதி செத்துப் போச்சு. அன்னைக்கே தாலியெல்லாம் கழட்டி வறுமையில் வித்து தின்னாச்சு. இதோ பாரு. வெறும் கயிறுகூட இல்லாம வெறுங்கழுத்து. அதுக்கென்ன அழுகை ??…” சொல்லி செல்லாயி உள்ளே சென்றாள்.

நியாயம்தானே !! – அவள் சென்ற வாசலையே வெறித்துப் பார்த்தாள் மங்காத்தா.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *