கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 16, 2024
பார்வையிட்டோர்: 1,898 
 
 

தூரத்தில் ஒரு பறவையின் குரல் மெலிதாகக் கேட்டது.

பின் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வர ஆரம்பித்தது.

சட்டென ஒரு ரகசியம் போல் அவன் காதுக்களுக்குள் நுழைந்தது.

கனவின் இசையா?

பின்னங்கழுத்தில் ஒரு நரம்பு சுண்டி இழுக்க உடல் பதறி எழுந்து உட்கார்ந்தான்.

அலைபேசி அதிர்ந்து கொண்டிருந்தது.

நேரம் 1.30 என பச்சைநிறத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

இந்த நேரத்தில் யார்?

எடுத்தான்.

விஷ்ணு சித்தப்பா பெருங்குரலெடுத்து அழுதார்.

“என்ன சித்தப்பா?”

“அண்ணா போய்ட்டான்.”

சிறிது நேரம் மெளனமாயிருந்தான்.

“என்ன ரமணா?” சித்தப்பா அழுகையினூடே கேட்டார்.

“சரி.”

“என்ன ரமணா? சாதாரணமா சரின்னு சொல்றே?”

“என்ன பண்ணச் சொல்றீங்க சித்தப்பா? உங்கள மாதிரி கத்தி அழச்சொல்றீங்களா?”

“டேய் ரமணா. செத்துப் போனது உன் அப்பாடா.”

“இல்லே உங்க அண்ணன்.”

“அண்ணாவோட விதை நீ ரமணா?”

விதை.

சிரிப்பு வந்தது.

யார் வேண்டுமென்றாலும் விதைக்கலாம்.

வளர்வதும், அழிவதும் விதையின் விருப்பம்தானே. விருப்பத்தை தூண்டுவது சூழலும், அது வளர்வதற்கான தேவைகளும். அப்படி வளர்ந்தவன் தானே நான்.

“நான் அம்மா போட்ட விதை சித்தப்பா.”

“பகை பாக்கற நேரம் இது இல்ல ரமணா. புரிஞ்சுக்கோ. சாவு எல்லா தப்பையும் சரி பண்ணிடும்டா தம்பி.”

இது காலங்காலமாய் எல்லோரும் சொல்லி வரும் சமாதானம். சில கோபங்களை மரணம் மாற்றி விடாது. உள்ளூற எரியும் தீயை எந்த மரணமும் நீர் வீசி அணைத்துவிடமுடியாது.

”அது உங்களுக்கு சித்தப்பா. எனக்கில்ல..”

“இருபது வருஷமா உன் அப்பாவைப் பாக்காம இருந்தே. அது நியாயம்னு பட்டதால அது விஷயமா இதுவரைக்கும் உன்கிட்ட பேசினதில்ல..”

ஆமாம். அப்பாவைப் பார்த்து கிட்டதட்ட இருபது வருடங்கள். அந்த நியாயம் அறிந்ததால் தான் எவரும் அவனைக் கட்டாயப்படுத்தவில்லை.

“அதே மாதிரி இதையும் விட்டுடுங்க. எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு இருந்தேன். அப்படியே இப்பவும் இருந்துக்கறேன்.”

“எவ்வளவு வருத்தமும், கோபமும் இருந்தாலும் நீ அண்ணாவோட பிள்ளை இல்லேன்னு ஆய்டாது. அண்ணாவோட இறுதிச்சடங்கை செஞ்சுட்டுப் போய்டு.”

”மன்னிச்சுடுங்க. முடியாது. நா ஃபோனை வைக்கிறேன்,”

திரும்பவும் மொபைல் அழைத்தது.

சித்தப்பாதான்.

எடுக்கவில்லை.

திரும்ப திரும்ப அழைத்தார்.

ஏஸியின் குளிரை அதிகப்படுத்தி விட்டு போர்த்திக் கொண்டான்.

பொய்க்குளிரிலும் தூங்கலாம். அல்லது தூங்குவது போல் நடிக்கலாம். ஏன் நடிக்க வேண்டும். எனக்கு அன்ன ஆனது?

அழைப்பு மணி அலறியது.

புரண்டு படுத்தான். திரும்பவும் அழைப்பு மணி.

கதவைத் திறந்தான்.

வாசல்படியில் நந்தியாவட்டை உதிர்ந்திருந்தது.

கேட்டைப் பிடித்துக் கொண்டு சியாமளா நின்று கொண்டிருந்தாள். தலை கலைந்திருந்தது. ககலில் சுடர் போல் கோபம்.

“நாளைக்குதானே உன் செமினார் முடியுது. இப்ப வந்து நிக்குற?”

இடுப்பில் கை வைத்துக் கொண்டு முறைத்தாள்.

புரிந்தது. விஷயம் தெரிந்து அவசர அவசரமாய்க் கிளம்பி வந்திருக்கிறாள்.

“சித்தப்பா பேசினாரா?”

“ம்.”

உள்ளே வந்தாள். தலை குனிந்திருந்தாள்.

முகம் நிமிர்த்தினான். அழுது கொண்டிருந்தாள்.

“ஏன் அழற?”

“நீங்கதான் அழமாட்டீங்க?நானும் அழக்கூடாதா?”

“அழக்கூடாது. காஃபி போட்டு தர்றேன். ஃப்ரெஷாகிட்டு வா.”

”அவரு எனக்கு மாமா?”

“அதனால என்ன?”

“மரணம் எல்லாத் தவறுகளையும் மன்னிக்கும்னு சொல்றேன்.”

“இதென்ன சர்ச் ஃபாதர் பேசற மாதிரியே எல்லாரும் பேசறிங்க. நா மன்னிக்க மாட்டேன். வேற எதாவது பேசு.”

“எத்தன வருஷம் தான் அதையே நினச்சுட்டு இருப்பீங்க.”

“எத்தனை வருஷம் ஆனா என்ன, இப்ப நினைச்சாலும் என் உடம்பு ஆடுது.”

அருகில் போனாள். விரல்களைப் பற்றினாள்.

“கோபப்படாதீங்க. கொஞ்சம் யோசிங்க. நீங்க செய்ய வேண்டிய சடங்குகளை செய்யாம விட்டுட்டா அது நம் பிள்ளைங்களத்தான் பாதிக்கும்.”

“செண்டிமெண்ட் பேசாத சியாமா.”

அவள் விரல் உருவி உள் அறைக்குள் நுழைந்தான்.

வரும் போது கையில் ஒரு கடிதம்.

நூறு தடவைக்கு மேல் படித்திருப்பான். ஒவ்வொரு வார்த்தையு ம் மனப்பாடம் ஆகியிருந்தன.

அன்புள்ள அண்ணா,

பயமா இருக்கு. அப்பாவ பாத்தாலே பயமா இருக்கு. இது வரைக்கும்பாத்த அப்பா இவரில்லே. அம்மாவ அடிக்கிறார். என்ன அடிக்கிறார்.

நீ போனவாரம் வந்து பேசிட்டுப் போனபிற்கும் அவர் அப்படியே தான் இருக்கார். காதலிப்பது தப்பா அண்ணா? அப்பா ஜாதி பெருமை பேசறார். இளங்கோ நல்லவர் அண்ணா. நீ அவர் கிட்ட பேசித்தானே ஒத்துக்கிட்டாய். அப்பாகிட்டயும் சொல்லிட்டு தானே போனே. ஆனா அப்பா ஜாதி வெறி பிடித்து அலைகிறார்.

சித்தப்பாவும், மாமாவும் எவ்ளவோ சொல்லியும் கேக்க மாட்டேங்கிறார். எல்லார் கிட்டயும் கோபமாப் பேசறார். கோவத்தில் என் தலைமுடியை அறுக்க வந்தார். அம்மா குறுக்கே வந்தத்தால் அம்மாவின் முழங்கையில் கத்தியால் கீறி விட்டார். யார் இவர் அண்ணா? நம் அப்பா இல்ல இவர் வேறு யாரோ? ஒரு ராட்சஷன் போல.

நம்ப விரல் பிடிச்சு திருவிழாவுக்கு அழச்சிட்டு போன அப்பா இல்லே இது. இது வேற யாரோ . இது அப்பல்ல.. இது அப்பால்ல.

ரொம்ப பயமா இருக்கு . சீக்கிரம் வா அண்ணா. அப்பா கோவத்துல எதுவும் பண்றதுக்குள்ற வா.

சாகப் பயமா இருக்கு அண்ணா. நான் வாழணும்.

கயல்.

கடிதத்தில் முகம் புதைத்து அழுதான்.

“ஊருக்கு போறதுக்குள்ற எவ்வளவு நடந்திருச்சு. கயலை சாம்பலாத்தான் பார்த்தேன். பெத்த புள்ளையை நெருப்பு வச்சு கொன்னுருக்கான். ஒண்ணும் செய்ய முடியாம அம்மாவும் அதே மாதிரி நெருப்பு வச்சிக்கிட்டு செத்துப் போனதை நீ மறந்துட்டியா சியாமா?”

“இருபது வருஷம் ஆய்டுச்சு.”

“நான் அந்த ஆள அப்பவே தீ வச்சு கொன்னுருக்கனும்.”

அவனை மார்பில் சாய்த்துக் கொண்டாள். அவள் மார்பு ஈரமாகியது. கயல் பற்றி பேசும் ஒவ்வொரு தருணத்திலும் இப்படித்தான். சிறுகுழந்தையாகி அழுதுவிடுவான். பாவம். அம்மா இல்லாத குழந்தை இவன்.

சியாமளாவின் அலைபேசி ஒலித்தது. எடுத்து பேசினாள்.

“இங்க தான் இருக்கார். இதோ தர்றேன்.”

அவனிடம் கொடுத்தாள்.

“அப்பா பேசறார்”

சியாமளாவின் அப்பா. அம்மாவின் தம்பி.

“சொல்லுங்க மாமா?”

“அங்க என்ன பண்ணிட்டு இருக்கே?”

“ஏன்?”

“இங்க ஊரே உனக்காக காத்திட்டு இருக்கு. தெரியாத மாதிரி பேசாத. நம்ம ஊரப் பத்தி உனக்கு தெரியும் தானே. உடலை எரிக்கிற வரைக்கும் ஊர்ல யாரும் சாப்பிட மாட்டாங்க.”

“தெரியும். சித்தப்பாவ வச்சு காரியம் பண்ணுங்க. அது சரி. நீங்க அங்க என்ன பண்றிங்க? உங்க தங்கச்சியையும், பாப்பாவையும் மறந்துட்டீங்களா?”

”நா சாவற வரைக்கும் மறக்காது. ஆனா உன் சித்தப்பன் அழறான். நீதான் செய்யணும்னு சொல்றான். அவன் உன் அப்பா மாதிரி இல்லேன்னு உனக்கு தெரியும்ல.”

“அதுக்கு என்ன பண்ணனும்?”

சொன்னார்.

தலையசைத்துக் கொண்டேயிருந்தான்.

“ஃபோனை சியாமளிட்ட கொடு.”

“அவன் ரொம்ப கொந்தளிப்பா இருக்கான். அவன டிரைவ் பண்ணச் சொல்லாத. ஒரு டிரைவர் போட்டுக்கோ. உடனே புறப்படுங்க.”

“ஒத்துக்குவாரா அப்பா?”

“வருவான்.”

“அப்பா கிளம்பச் சொல்றார்.”

ரமணன் தலையசைத்தான்.

“அப்பா என்ன சொன்னார் உடனே ஒத்துட்டீங்க?”

“அத விடு. பசங்க.”

“அப்பா பேசிட்டாராம். காலேஜ்லேர்ந்து நேரா அங்க வந்துருவாங்க.”

மஞ்சள் கலரில் உதிர்ந்திருந்த செவ்வந்தி பூக்களை மிதித்துக் கொண்டு மேடையேறினான்.

அவர் விறகுப் படுக்கையில் படுத்திருந்தார்.

அவர் முகம் பார்த்தான். யாரோ அந்நியன் .

முகம் உலர்ந்து போய் சருகென தெரிந்தார். என்னாச்சு இவருக்கு? ஒரு மரம் பட்டுப்போய் வீழ்ந்து கிடப்பது போல் இறுதிப்படுக்கையில் கிடந்தார். அவர் கண் திறந்து பார்ப்பது போல் இருந்தது. தன் கண்களைக் கசக்கி விட்டு உற்று பார்த்தான். இல்லை கண்கள் மூடியிருந்தன. ஆனால் முழுவதாக மூடமுடியவில்லை போலும். சற்று கண் திறந்திருந்தது.

கையில் ஒரு தீப்பந்தத்துடன் மாமா வந்தார்.

காற்றில் சுழலும் தீப்பந்து.

“இந்தா பிடி. உன் நெடுநாள் ஆசை. உன் அப்பனுக்கு தீ வை.”

“கயல்.”

“அம்மா.” மாமா துண்டால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டார். அருகில் சித்தப்பா இவனைத் தொட்டுக் கொண்டிருந்தார். பையன் பின்னால் நின்றுகொண்டு இவனையேப் பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தாத்தாவை இப்போதுதான் முதல் தடவையாக பார்க்கிறான். எந்த சலனமின்றி இருந்தான். இது வரை தாத்தா பற்றி ஒரு வார்த்தை கேட்டதில்லை. அவன் அம்மா சொல்லியிருக்கக்கூடும்.

ரமணன் பெருங்குரலெடுத்து கதறி அவர் உடலுக்கு அடியில் தீப்பந்தம் செருகினான்.

கயல் இட்ட தீ.

அன்னை இட்ட தீ.

அவரைச் சூழ்ந்தது. இன்றிரவு அவன் உறங்கக்கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *