(1977ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
இப்பொழுதுதான் தீர்மானம் செய்தேன். இக் கட்டுரையை எழுதுவது என்றல்ல; பிரும்மராக்ஷஸாகப் போய்விடக் கூடாதென்று. லோபிகளுக்குள் ஞானலோபி களுக்குத்தான் மோசமான நரகம் என்கிறார்கள். எனவே, இப்பொழுது கிடைத்த ஞானமணிகளை இப்பொழுதே வினியோகம் செய்து விடுகிறேன். என்ன தலை முழுகிப் போகும் அவசரமென்றால், எங்கள் தெரு சுரைக்காய் பண்டாரம் பாடுவதுபோல்,
தூங்கையிலே வாங்குகிறமூச்சு,
சுழிமாறிப் போனாலும் போச்சு.
என்ற கதையாகிவிடலாம். என் அனுபவம் என்னுடன் மறைந்து போகும். அப்படி ஏமாந்து போகக் கூடாதல்லவா? அதிலும், இது சிரமப்பட்டு சம்பாதித்த சுயார்ஜிதம். அதன் பலனை நீங்கள் அனுபவித்தால் நான் பொதுஜன ஊழியம் செய்த இருமாப்படைவேன், எவ்வளவு சேவா புத்தி பார்த்தீர்களா?
இந்தத் தீர்மானத்திற்கு மூலகாரணம் என் கொசுவலை. சௌக்கியமாயிருப்பவனுக்கு கஷ்டத்தின் தன்மை தெரியாது. பணக்காரனுக்கு ஏழையின் மனோபாவம் தெரியாது. அதைப் போலவே, என் கொசுவலை முழுசாக இருந்திருந்தால், உங்களுக்கு தத்வோபதேசம் செய்யும் கஷ்டமே எனக்கு ஏற்பட்டிருக்காது.
சென்ற புதன்கிழமை இரவில் படுக்கப் போகுமுன், கொசுவலையை எடுத்துக் கட்டினேன். (ஊர் சொல்லாமலே விளங்கியிருக்குமே!) கொசுவலையின் மூலையில் இரண்டு கையகலம் பொத்தலிருந்தது. ‘கொசுவலை கிழியாமலிருக்கும் பொழுதே, எப்படியோ அவைகள் வலைக்குள் வங் நம்முடைய பிராணனை வாங்குகின்றனவே, இரவு எப்படி கழிப்பது’ என்று பத்து நிமிஷம் யோசித்தேன். வீட்டி எல்லோரும் படுக்கப் போய் விட்டார்கள். ஒரு யோச தோன்றிற்று. “டீ! டீ!” என்று மனைவியை எழுப்பினேன் (நான் கொஞ்சம் கர்னாடகம்).
“ஊம்” என்று படுத்திருந்தபடியே பதிலளித்தாள்.
“கொஞ்சம் ஊசியும் நூலும் வேணும்” என்றேன்.
“அழகாயிருக்கு. கேக்கறது?-தூக்கத்தைக் கலச்சு, என்றாள்.
அதே சமயத்தில் “உஸ், உஸ்! கேக்காதேடா ராத்ரி; ஆகாது” என்றாள் தாயார்.
என்ன செய்யலாம்? உயிரையும் உதிரத்தையும் பிறருக் காகக் தியாகம் செய்யவே அவதரித்தேனென்று கருத சரீரத்தைக் கொசுக்களிடம் ஒப்புவித்துவிட்டு பிரும்மானந்த மாய்த் தூங்கினேன். அடுத்த நாள் ஒரு பட்டணம்படி ரத்தம் குறைந்துவிட்டதாக என் இருதயம் என்மீது குற்றப் பத்திரிகை வாசித்து விட்டது, என்னுடைய வேட்டி முதவியன அந்தக் கேஸில் ருசுக்கள்!
இவ்வளவு தொல்லை இரவில் பட்டிருந்தும், காலையில் காப்பி சாப்பிட்ட பிறகு அந்த நினைவு மறந்து போயிற்று திரும்பவும் ஞாபகம் வந்தது. அன்று இரவுதான் தலைஎழுத்தை நினைத்துக்கொண்டே யூகலிப்ட்ஸ் தைலம் ஒரு அவுன்ஸை உடலில் பூசிக்கொண்டு தூங்கப் போனேன். (எனக்கு கணக்கில் மார்க் எம்பொழுதுமே ஒரு லக்கத்தில் தான். ஆகையால் ஒரு அவுன்ஸ் என்பது சரியா என்று கேட்க வேண்டாம். அன்று கொசுக்கள் கிட்டக்கூட வரவில்லை. ஆனால் தூக்கமும்தான் கிட்ட வரவில்லை. ஒரே எரிச்சல்! இரவு முழுதும் விழித்திருந்தேன்.
வெள்ளிக்கிழமை காலையில், கண்ணாடியில் முகத்தைப் பார்த்துக் கொண்டபொழுது சோளக் கொல்லை பொம்மை திரி இருந்தது. கண்கள் தூக்கமின்மையால் குழிந்திருந்த எனக்கே கண்ராவியாய் இருந்தது! தாமரை போன்ற தகரக்குவளைபோல் ஆகிவிட்டதே என்று வருந்தினேன். கொசுக்களின் மீது ஏற்பட்ட வெறுப்பால் திடீரென்றுபோய், நூல்பட்டையும் ஊசியும் வாங்கிக்கொண்டு வந்து தைப்பதற்காக கொசுவலையை அவிழ்த்தேன்.
“அதையேண்டா அவுக்கறே?” என்றாள் தமக்கை.
“தைக்கத்தான்” என்றேன்.
“அப்பா புத்திசாலிக் கொக்கே! போயும் போயும் வெள்ளிக்கிழமைதானா நாள் பார்த்தே? இருக்கிற தரித்திரம் போறாதா?” என்றாள். சரி என்று சும்மா இருந்தேன்.
அன்றைய தினம் இரவு யூகலிப்ட்ஸ் தைலம் இருக்கும். திக்கிற்கே போகவில்லை. கிழிந்த கொசுவலையை ஐந்தாறு ஹுக்குகளால் தைத்து ஒரு மாதிரியாகக் கட்டிக் கொண் டேன். ரத்தத்தில் நஷ்டம் இரண்டரை அவுன்ஸ் தவிர இன் ஜெக்ஷன் வலி இருந்தது.
சனிக்கிழமை எனக்குக் கொஞ்சம் ஜோலியிருந்தது. வெளியே போகும்பொழுது சமையலறையை நோக்கி உஸ்! உஸ்!! என்றேன். மனைவி தலையைக் காட்டினாள்.
“ஊசி நூல் அலமாரியில் இருக்கு. கொசுவலையைத் தச்சுவை.” என்று கம்பீரமாய்ச் சொல்லிவிட்டுப் பதிலை எதிர்பார்க்காமலே போய்விட்டேன்.
இரவு கொசுவலையை எடுத்துக் கட்டினபொழுதுதான் குறும்பு தேவதையின் வாய் தைக்கப்படவில்லை என்று தெரிந்தது. கிழிசல் பெரிய வாயைப் போல் என்னைப் பார்த்து ஏளனம் செய்தது! உனக்குப் புத்தி இருக்கா’ என்று சீறி விழுந்தேன் மனையாள்மீது.
‘இருக்கே’ என்ற அமைதியான பதில் வந்தது.
“அப்போ ஏன் தெக்கல்லே?”
மௌனம்.
“ஏன் தெக்கல்லை என்று கேட்டால் வீட்டு ஓட்டை எண்றயே?”
திரும்ப மெளனம். எனக்கோ எரிச்சல்.
“பதில் சொல்றயா இல்லையா?”
“நன்னாயிருக்கு! பிள்ளைத்தாச்சியைப் போய் தெக்க சொல்றே?…அப்புறம் உன் குழந்தை காதுலே முடிச்சு முடிச்சா இருக்கும் பார்த்துக்கோ” என்று என் பாட்டி குறுக்கிட்டாள். பிறகு நான் “என்ன செய்யக் கிடக்கிறது கடவுளே! நீ கொடுத்த சரீரம், சாமகான பக்தர்களிடமிருந்து என்னைக் காப்பது உன் கடமை” என்று பிரார்த்தனை செய்து விட்டுத் தூங்கினேன்.. தூக்கமேது?
ஞாயிற்றுக்கிழமை. வாரத்திற்கு ஒருநாள். பகலில் நண்பர்களுடன் கூடிப் பேசின பரவசத்தில் கொசுவலையின் ஞாபகம் வரவில்லை. இரவு சம்பூர்ண ராமாயணம். எனவே திங்கட்கிழமை காலையில்தான் திரும்பி வந்தது பிரயோஜனம்? இரவில்தான் தைக்கக் கூடாதே! பின்னும் ஒரு நான்கு அவுன்ஸ் ரத்தம் சிவதருமம்! ஆனால் அடுத்த நாள் காலையில் எழுந்திருந்ததும் பல்துலக்காமல் முதலில் தையல் வேலை என்று இரவிலேயே முடிவு செய்து கொண்டேன். அது என்ன ஞாபகமறதியோ சனியன்! அன்று பகலிலும் தைக்கவில்லை. செவ்வாய்க்கிழமை இரவில் மேல் வேஷ்டியில் ஒரு முடிச்சுப் போட்டுக் கொண்டேன் – ஞாபகம் இருப்பதற்காக. புதன்கிழமை இரவு சவுக்கத்தில் முடிச்சு அப்படியே இருந்தது. அட கடவுளே, என்று பின்னுமொரு முடிச்சுப் போட்டிருக்கிறேன். இதோ இருக்கிறது.
இன்றைக்காவது-? தெரிய வேண்டும்…
ஆனால் ஒன்று தெரிந்துவிட்டது. ‘காலம் தாழ்த்தாதே’ என்ற பழமொழியின் உண்மை.
– மனநிழல் (சிறு கதைகள்), முதற் பதிப்பு: மார்ச் 1977, எழுத்து பிரசுரம், சென்னை.