தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,902 
 
 

“”அந்த ஜாக்கெட்டை தைக்கக் கொடுக்கணும்ன்னு நினைச்சேன்… மறந்துட்டேன் பாருங்க…” என்ற வாசுகியின் வார்த்தைகள், அவள் கணவன் ஜெயந்திரனுக்குள் சுருக்கென்று பாய்ந்தன.
இரவு உணவை முடித்து, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து, மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தவன், அவள் அப்படி சொன்னதும், சட்டென்று எழுந்து, “”சரி… நான் போய் படுக்கறேன்; தூக்கம் வருது,” என்று, படுக்கையறைக்குச் சென்று விட்டான்.
சமையலறையில் அவள் பாத்திரங்களை துலக்கும் ஒலி, “டிங்…டிங்’ என்று, அவ்வப்போது அவன் காதில் விழுந்து கொண்டிருந்தது. அவள் சொன்னதை நினைத்துப் பார்க்கையில், கோபமாக வந்தது. அவன் அக்கா மகன் திருமணம், இன்னும் இரண்டு நாட்களில் நடக்க இருக்கிறது; ஆனால், அவனுக்கு இன்னும் அழைப்பிதழ் வரவில்லை. சில மாதங்களுக்கு முன், அவனுக்கும், அவன் அக்காவுக்கும் இடையே, தந்தை சொத்தை பாகம் பிரிப்பது பற்றி ஒரு சச்சரவு; அதில், இருவருக்குமிடையே சண்டையாகிப் போனது.
தீர்க்கதரிசிஅன்று சென்றவள் தான் அவள்… அதன்பின், இத்தனை மாதங்களாக, நேரிலோ, தொலைபேசியிலோ ஒரு பேச்சுக் கூட இல்லை; அவனும், வீராப்புடன் ஒதுங்கிக் கொண்டான். அந்த அக்காவின் மகனுக்குத் தான், இன்னும் இரண்டு நாட்களில் திருமணம்; அதுவும் அதே ஊரில். இன்னும் அழைப்பிதழ் வரவில்லையே என்ற ஆதங்கத்தைத் தான், அவன் மனைவி வாசுகியிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஆனால் அவளோ, சம்பந்தமேயில்லாமல் ஜாக்கெட்டை பற்றி பேசியதும், அவனுக்கு சுருக்கென்று கோபம் வந்து விட்டது.
இது முதல் முறையல்ல… இரு தினங்களுக்கு முன் கூட, “இன்னும் அழைப்பிதழ் வரவில்லையே…’ என, அவன் வாசுகியிடம் குறைபட்டுக் கொண்டிருந்த போதும், அவள் இதையே தான் சொன்னாள். அப்போது அவனுக்கு கோபமாக வந்தது. என்ன இவள்… நாம் ஒன்று பேசினால், சம்பந்தமேயில்லாமல் வேறொன்றை பேசுகிறாள். என்னுடைய ஆதங்கம் இவளுக்கு புரியவில்லையா… இல்லை என் அக்காவின் மேல் அவளுக்கு ஈடுபாடு இல்லையா என்று எரிச்சலடைந்தான்.
இன்று மீண்டும் அதே வார்த்தைகள்… உஷ்ணமாகி விட்டான். இனி, இவளிடம் இதைப்பற்றி பேசக் கூடாது. அக்கா அழைப்பிதழ் வைக்காவிட்டால் என்ன… போயிட்டுப் போகுது போ என, எழுந்து போய் விட்டான்.
ஆனால், அடுத்த இரு தினங்களும், அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. வாசலில் அழைப்பு மணியின் ஓசை அல்லது அலைபேசியின் ஓசையென்று எதைக் கேட்டாலும், “அழைப்பது அக்காவாக இருக்குமோ…’ என்ற ஆவல்; ஆனால், ஏமாற்றம் தான் மிஞ்சும். எதிர்பார்ப்பும், ஏமாற்றமும் அவனை பந்தாடிக் கொண்டிருந்தன. அந்த இரு தினங்களும், ஒவ்வொரு நொடியாக நகர்ந்து கொண்டிருந்தன.
மனைவியிடம் பேசி, தன் ஆதங்கத்தை தீர்த்து விடலாமா என நினைத்தான்; ஆனால், மீண்டும் ஜாக்கெட் கதையை கேட்க அவன் தயாராகயில்லை. ஒரு போராட்டமே போதும்… எதற்கு இரண்டு போராட்டம் என்று, இதைப்பற்றி வாசுகியிடம் பேசுவதை தவிர்த்தான்.
அன்று மாலை, அலுவலகத்திலிருந்து தாமதமாகத் தான் வந்தான். வந்தவனின் கண்கள், ஹாலில் உள்ள டீப்பாயை மேய்ந்தன. “ம்ஹூம்… அழைப்பிதழ் ஒன்றும் வரவில்லை…’ என நினைத்துக் கொண்டான். உடை மாற்றி, சோபாவில் சரிந்தான்.
“”அத்தான்… இந்தாங்க காபி…” என, அவன் முன் காபி டம்ளரை நீட்டினாள் வாசுகி.
தொலைக்காட்சியில் வைத்த கண்ணை எடுக்காமலேயே, காபியை வாங்கினான்.
“”அத்தான்… நான் டெய்லர் கடை வரைக்கும் போயிட்டு வந்திடறேன். புது ஜாக்கெட் தைக்க கொடுத்தேன்; வாங்கிட்டு வந்திடறேன்…”
அவன் பதிலுக்கு காத்திராமல், வாசலைக் கடந்தாள்.
அவளுடைய, “டக்… டக்’ என்ற செருப்பொலி, மெல்ல தேய்ந்து போனது. தொலைக்காட்சி சேனலை மாற்றினான்.
“ஏண்டா… இன்னுமா இந்த ஊரு, நம்மள நம்பிகிட்டிருக்கு?’ என்று, அடி வாங்கி, நார் நாராக கிழிந்து போயிருந்த வடிவேலு, ஒரு பாலத்தின் கட்டை சுவர் மேல் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். மனதிற்கு இதமாக இருந்தது. நகைச்சுவைக் காட்சியில் தன்னை மறந்து லயித்தான். இடையே வந்த விளம்பரங்களால், அவன் மனம் மீண்டும், அக்கா மகன் திருமணத்திற்குச் சென்றது.
இந்நேரம் எல்லாரும் மண்டபத்திற்கு வந்திருப்பர். நேரத்தைப் பார்த்தான்… 8:00 மணி. அநேகமாக, மாப்பிள்ளை அழைப்பு நடந்து கொண்டிருக்கும். இந்த அக்கா, என்னைப் பற்றி நினைப்பாளா… அவள் இப்ப எப்படி நினைப்பா… வருகிறவர்களை வரவேற்கவும், திருமண வேலைகளை செய்வதிலும் பம்பரமா சுத்திக்கிட்டு இருப்பா.
சே… என்ன மனுஷி இவ… தம்பிங்கிற பாசத்த, ஒரு நொடியில அறுத்தெறிஞ்சிட்டாளே… இந்நேரம் என் அப்பாவோ, அம்மாவோ உயிரோடிருந்தா, அவள் இப்படி விட்டிருப்பாளா… “மொதல்ல, உன் தம்பி வீட்ல பத்திரிகையை வச்சுட்டு, அடுத்த வேலையை பாரு…’ன்னு சொல்லியிருப்பாங்க…
அக்கா கூப்பிடாட்டி என்ன… நாமே போகலாமா என நினைத்தான். அவ ஏதாவது திட்டிட்டா… அது சரியா வராது… அவளுக்கு அப்படி என்ன திமிரு… அவளே வேணாம்ன்னு நினைக்கும் போது, எனக்கு மட்டும் தேவையா?
தொலைக்காட்சி விளம்பரங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன; சேனலை மாற்றினான்.
வாசலில் செருப்பு சப்தம்…
“”வாசுகி… சீக்கிரம் டிபனை ரெடி பண்ணு… எனக்கு பசிக்குது,” என்றான் தொலைக் காட்சியை பார்த்தவாறே.
அவளிட மிருந்து பதிலில்லை.
“”உன்னைத் தான்… டிபன் ரெடி பண்ணுன் னேன்…”
மீண்டும் பதிலில்லை.
திரும்பிப் பார்த்தான். ஒரு கணம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஏதோ வந்து, தொண்டையை, “கப்’ என்று கவ்வியது. பட்டுச் சேலையும், மினுமினுக்கும் தங்க நகைகளுமாக நின்று கொண்டிருந்தாள் அக்கா… சோபாவை விட்டு பொசுக்கென்று எழுந்தான்.
“”வாக்கா…” – தொண்டை அடைத்தது.
அவள் கையில், திருமண அழைப்பிதழ்.
“”இந்தா… இந்தப் பத்திரிகையை பிடி… என் மகனுக்குக் கல்யாணம்… அவசியம் குடும்பத்தோட வந்துடு…” – முகத்தை பக்கவாட்டில் திருப்பி வைத்துக் கொண்டு சொன்னாள்.
“”இதுக்கு, நீ வந்து கூப்பிடாமலேயே இருந்திருக்கலாம்…”
“”நானும் அதான் நினைச்சேன். ஆனா, என்ன பண்றது… ஊரே திரண்டு நிக்கிற கல்யாணத்துல, வாசல்ல, நீ வருவியான்னு தான் மனசு தவிக்குது… அதான் மனசு கேக்கல… நானே வந்துட்டேன்,” என்று, எந்நேரமும் உடைவதற்கு தயாராக இருக்கும் நீர்குமிழி போல பேசினாள்.
“”நான் மட்டும் என்னவாம்… பத்திரிகை வராதா, வராதான்னு பார்த்து பார்த்து, ஒரு வாரமா கண்ணே பூத்து போச்சு…” – செருமினான்.
“”ஒரு போன் பண்ணியாவது, கல்யாண வேலை எப்படி நடக்குது, என்னன்னு கேட்டியா நீ… நம்ம அப்பாவோ, அம்மாவோ இருந்திருக்கணும்டா… உன்ன கழுத்த புடிச்சு தள்ளி, என்னன்னு போயி பாத்துட்டு வரச் சொல்லி…” – நீர்குமிழி உடைந்தது.
“”நானும் அதான்கா நினைச்சேன்…”
அவன் மனதிலிருந்த ஆதங்கத்தையும், கோபத்தையும், பெருகி வந்த கண்ணீர், காட்டு வெள்ளம் போல் அடித்துச் சென்றது.
அடுத்த பத்து நிமிடங்கள், அழுகையும், பேச்சுமாகக் கரைந்தது.
ஒன்றுமே நடக்காதது போல, அவன் அக்கா பேசினாள்…
“”சரி ஜெயா… நான் மண்டபத்துக்கு கிளம்பறேன். நீ, உன் மனைவி வந்த உடனே, சீக்கீரம் கிளம்பி வந்துரு…” எனக் கூறிவிட்டு, அவசரமாக சென்று விட்டாள்.
விறுவிறுவென்று கிளம்பத் தொடங்கினான் ஜெயந்திரன்.
வீட்டினுள் நுழைந்த வாசுகி, பீப்பாயின் மேலிருந்த திருமண அழைப்பிதழைப் பார்த்தாள்.
“”வாசுகி… அக்காவும், மாமாவும் வந்திருந்தாங்க… நீ சீக்கிரம் கிளம்பு!” என்றான்.
மறுநாள் —
திருமணம் முடிந்து, அனைவரும் பந்திக்கு முந்திக் கொண்டிருந்தனர். வட்டமாக அமர்ந்திருந்த இளம் பெண்கள், தங்களை சுற்றி நடப்பதை மறந்து, சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களின் நடுவே பிளந்து கொண்டு, ஒரு சிறுவன் ஓடினான். அவனை துரத்திக் கொண்டு மற்றொருவன்.
“”டேய் பார்த்துடா… விழுந்துடு வீங்க…” – ஒரு பெரியவர், தன் சக்திக்கு மீறி கத்தினார்.
வந்தவர்கள் அனைவரையும் சாப்பிட அழைத்துக் கொண்டிருந்தான் ஜெயந்திரன்.
“”என்னாங்க… இந்த கவரை, உங்க அக்கா கொடுக்கச் சொன்னாங்க…” என்று, ஒரு கவரை அவனிடம் கொடுத்துவிட்டு சென்றாள் வாசுகி. அவள் அணிந்திருந்த ஜாக்கெட்டின் கையில், அந்தத் துணி கம்பெனியின் பெயர், பொன்னிற எழுத்துக்களில் அச்சடிக்கப்பட்டிருப்பதை, அப்போது தான் கவனித்தான் ஜெயந்திரன்.
“அட… இது தான் அந்த புது ஜாக்கெட்டா… கல்யாணத்துக்கு போட்டுக்கிறதுக்குதான் அவ்வளவு அவசரமா தைச்சிருக்கா… அப்ப, நாம கல்யாணத்துக்கு வருவோம்ன்னு அவளுக்கு முன்னாடியே தெரியுமா?’
பல கேள்விகள், அவன் மனதில் தோன்றின; அதற்கான பதில்களும் நடந்து முடிந்திருந்தன.
அப்பப்பா… என் மனைவி பெரிய தீர்க்கதரிசி தான் என மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.

– குடந்தை ச. ராமசாமி (ஜூலை 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *