(2000ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
வள்ளி பட்டுச் சேலை தழைய தழையக் கட்டிக் கொண்டு தலையில் நிறைய மல்லிகைச் சரமும் சூடிக் கொண்டு முகத்தில் எண்ணெய் வடிய வீட்டிற்குள் நுழைந்தாள்.
தீபாவிற்கு, வள்ளியின் ஆடை மிகவும் ஆச்சிரியத்தை கொடுத்தது. இருந்தாலும் உள்ளே எழுந்த ஆவலை மறைத்துக் கொண்டு, “எங்கே கொஞ்ச நாளாக ஆளையே காணோம். திடீரென்று தீபாவளி நாளும், கிழமையுமாக வந்திருக்கிறாய், எவ்வளவு வேலை கிடக்குது தெரியுமா?” என்று கேட்டாள் தீபா.
வெளியே பட்டாசு வெடிக்கும் சப்தம் கேட்டு காதுகளைப் பொத்திக் கொண்டு, “சரி சரி… மசமசன்னு நிக்காமல் போய் வேலைகளைப் பார்” என்றாள் தீபா.
“இன்றைக்கு தீபாவளி இனாம் வாங்கிட்டுப் போறதுக்குத்தான் அம்மா வந்தேன். நாளைக்கு வந்து வேலையை செய்கிறேனே?”
“சரி எங்கே கொஞ்ச நாளாசு காணோம். ஓடிப்போன உன் கணவன் திரும்பி வந்து விட்டானா?”
“அந்தாள் ஏன் வரப் போறான். கொஞ்சம் உடம்புக்குச் சரியில்லே. இதிலே வேற தூரத்து மொறை மாமன் பொண்ணு வந்திருந்தது. அதான் வரமுடியாமல் போச்சுது.”
“இந்தப் பட்டுச் சேலை ரொம்ப அழகாக இருக்கே, எங்கே வாங்கினாய்? ரெண்டாயிரம் கொடுத்திருப்பியா? இவ்வாவு பணம் ஏது உனக்கு” என்று வரிசையாக கேள்வி எழுப்பனாள் தீபா.
“ஏம்மா, இந்தச் சேலையைப் பார்த்தால் வெறும் ரெண்டாயிரம்தான் பெறுமா? இந்தச் சேலை நாலாயிரத்தி சொச்சம்.”
“யாருடி வாங்கிக் கொடுத்தார்கள்?”
“அவுகதான்”
“அவுகதான்னா? புதிசா யாரையாவது கல்யாணம் பண்ணியிருக்கேயா?”
“சும்மா கேலி பண்ணாதிங்க அம்மா. அய்யாதான் இந்தப் பட்டுச் சேலையை வாங்கிக் கொடுத்தாங்க.”
“அய்யாவா….அது யாருடி?”
“இது என்னடா வம்படியாகப் போச்சு. உங்க வூட்டுக்காரர்தாம்மா வாங்கிக் கொடுத்தாரு.”
“என்னது எங்க வீட்டுக்காரரா ? யாரு கோபாலனா வாங்கித் தந்தார்?”
“ஆமா.”
“அய்யோ நான் மோசம் போனேனே. இதை நான் இப்பவே என் மாமனார் கிட்டே போய்ச் சொல்லி இவரை உண்டு இல்லைன்னு பண்றேன் பாரு.”
“யாரு பெரிய்யா கிட்டேவா சொல்லப் போறீங்க.”
“ஆமா… அதுக்கென்னடி?”
“என்னம்மா நீங்க…. அவரும் எனக்கு தீபாவளிக்கு ஐயாயிரம் ரூபாய்க்கு பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்திருக்காரு. பெட்டியிலே வச்சிருக்கேன். வேணுமின்னா எடுத்துண்டு வந்து காட்டட்டுமா” என்றாள் அப்பாவியாக.
அந்தப் பக்கமாக வந்த ஜெயன், “என்ன அண்ணி? என்ன விஷயம்? ஏன் அழுது கொண்டிருக்கிறீர்கள்?” என்று தீபாவிடம் கேட்டான்.
“பாருடா… உங்க அண்ணாவும், உங்க அப்பாவும் செய்திருக்கிற காரியத்தை. நம்முடைய வீட்டில் வேலை செய்கிற இந்த வள்ளிக்கு தீபாவளிக்கு பட்டுச் சேலை வாங்கிக் கொடுத்திருக்காங்க” என்று புலம்பினாள்.
“ஏம்மா ? நீ ஜெயன் ஐயாகிட்ட போய் இதையெல்லாம் சொல்றிங்க. இவரும்தான், எனக்கு ஒரு பட்டுப் புடவை வாங்கிக் கொடுத்தாரு. நான் இன்னும் வீட்டிற்குகூட எடுத்திண்டு போகலே. இங்கே சமையலறையிலிருந்து வேணா எடுத்துண்டு வந்து காமிக்கிறேன்” என்றாள் வள்ளி.
“அப்படியா ஜெயன்?” என்று திரும்பிப் பார்த்தாள் தீபா. அங்கே ஜெயனைக் காணவில்லை.
“இதற்கு ஒரே வழி இனி நான் இந்த வீட்டை விட்டுப் போக வேண்டியதுதான். என் அப்பாவிடம் சொல்லி இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும்.
பாவிகள் எல்லோரும் சேர்ந்து ஒரு வேலைக்காரிக்கு பட்டுச் சேலையாக வாங்கித் தள்ளியிருக்கிறார்கள்.
இனி நான் இங்கே இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நரகம்தான். நான் வர்றேன்” என்று கிளம்பினாள்.
“என்னம்மா நீங்க எங்கே போறீங்க” என்றாள் வள்ளி.
“நான் எங்க வீட்டுக்குப் போறேன். அங்கே போய் இங்கே நடக்கிறத அக்கிரமம் அத்தனையையும் சொல்லப் போறேன். எங்கப்பாவிடம் சொல்லி எனக்கும், கோபாலனுக்கும் விவாகரத்து வாங்கச் சொல்லப் போகிறேன்” என்று ஆத்திரப்பட்டாள் தீபா.
“யாரு? உங்க அப்பா கிட்டே போய் நியாயம் கேட்கப் போறீங்களா? நல்ல பொண்ணுங்க நீங்க. போன தடவை உங்க வீட்டிற்கு அவர் வந்தபோது, நீங்க யாருமில்லே. அவர்தான் இந்த ஐயாயிரம் ரூபாய்க்கும் தீபாவளிக்கு பட்டுச் சேலை வாங்கிக்கன்னு காசு தந்து விட்டு போனார். நீ அவர்கிட்ட போய் நியாயம் கேட்கப் போறியா?” என்று வள்ளி சொல்ல ஒன்றும் புரியாத தீபா மயங்கி விழுந்தாள்.
– 26-10-2000