தீபாவளிப் பரிசு

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: வீரகேசரி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 10, 2014
பார்வையிட்டோர்: 7,642 
 
 

“சாந்தி! ஏன் உன் கன்னம் செவந்து கிடக்குது?”

“அம்மா அடிச்சுப் போட்டா.”

“ஏன் அடிச்சவ?”

“நான் தீபாவளிக்குப் பூச்சட்டை வேணுமெண்டு கேட்டன்… அதுதான் அடிச்சவ”.

“பூச்சட்டை கேட்டால் ஆரும் அடிப்பினமே?”

“அம்மாட்டைக் காசில்லையெண்டு தெரியாமல் நான் முரண்டு பிடிச்சன்…. அவவுக்குக் கோபம் வந்திட்டுது.”

சாந்தி கூறிய பதில் அவளது சினேகிதி ராணியின் பிஞ்சு உள்ளத்தில் வேதனையைக் கொடுத்திருக்க வேண்டும். அவளது முகம் கூம்பியது.

“உங்கடை அம்மா கூடாதவ; அதுதான் உனக்கு அடிச்சவ”.

“இல்லை… அம்மா நல்லவ…. ரொம்ப நல்லம்மா. எனக்கு இண்டைக்கு நல்ல ருசியாய்க் கஞ்சி காய்ச்சித் தந்தவ, தான்கூடக் குடியாம எனக்குத்தான் முழுவதையும் தந்தவ.”

குழந்தைகளின் சம்பாஷனையைக் கேட்டுக்கொண்டிருந்த நாகம்மாவுக்கு, அவளது மகள் சாந்தியின் பதில் உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்தது. விழிகளில் தேங்கி நிறைந்த கண்ணீரினூடாகத் தனது கைகளை வெறுப்போடு பார்த்தாள்.

அந்தப் பாழும் கைகள் தானே அவளது குழந்தையின் கன்னங்களைப் பதம் பார்த்தது! சாந்தியின் கன்னங்களைக் கன்றும்படி செய்தது!

குழந்தையின் மென்மையான உள்ளத்தில் எவ்வளவு ஆசைகள் பொதிந்திருக்கும்! அவள் எவ்வளவு ஆவலோடு தனக்குப் புதுச்சட்டை வேண்டுமென்று கேட்டிருப்பாள்! எப்படியெல்லாம் தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென்று கற்பனை செய்திருப்பாள்! ஏழையின் வயிற்றில் பிறந்துவிட்டதற்காக அவளுக்கு ஆசைகளே தோன்றா மலிருக்குமா?

இதையெல்லாம் கொஞ்சங்கூட எண்ணிப் பார்க்காது, ஆத்திரத்தில் குழந்தையை அடித்துவிட்டதை நினைக்கும்போது நாகம்மாவின் பெற்ற மனம் துன்பத்தால் துடித்தது.

ஆவேசமடைந்தவள் போல சாந்தியை அடித்துவிட்ட தனது கைகளை சுவரில் மோதிக்கொண்டு குலுங்கிக் குலுங்கியழுதாள். ஆனால் அவளது துன்பம்மட்டும் குறையவில்லை.

“அம்மா! அழாதேம்மா…. நான் எனிமே புதுச்சட்டை கேட்கமாட்டேம்மா”

தாயின் கன்னங்களில் வழிந்துகொண்டிருந்த கண்ணீரைத் தனது பிஞ்சுக் கரங்களால் துடைத்துக் கொண்டே கெஞ்சினாள் சாந்தி.

நாகம்மா சாந்தியை வாரியணைத்துக் கொண்டாள்.

“நான் எனிமே உனக்கு அடிக்கமாட்டன் சாந்தி! தீபாவளிக்கு வண்ண வண்ணப் பூச்சட்டையெல்லாம் நிறைய வாங்கித் தாறன்.”

“உன்னட்டை காசில்லை… எனக்கு வேண்டாமம்மா”.

“இல்லை சாந்தி! நான் பிள்ளைக்கு எப்படியாவது வாங்கித்தாறன்”

“நீ… நல்ல அம்மா.”

சாந்தியின் கன்னங்களை முத்தமிட்டு அவளை நெஞ்சோடு இறுக அணைத்துக் கொண்டாள் நாகம்மா.

விடிந்தால் தீபாவளி. அதற்குள் எப்படித்தான் அவள் தன் குழந்தைக்குப் புதுச்சட்டை வாங்கப் போகிறாள்? குழந்தையின் அன்புப் பிடிக்குள் சிக்கியிருந்த நேரத்தில் வாங்கித் தருவதாகக் கூறிவிட்டாள். இப்போ என்ன செய்வது? அவளது கையில் ஒரு சதங்கூட இல்லையே!

நேரகாலத்தில் உண்பதற்குக் கூட வசதியில்லாமல் தவிக்கும் அவளிடம் எங்கே பணமிருக்கப்போகிறது? அவளது வினைப்பயன் இளம் வயதிலேயே தாலியை இழந்துவிட்டாள். இப்போது அவளுக்கு இருக்கும் சொத்து சாந்தி ஒருத்திதான். சாந்திக்காகத்தான் இன்றும் நாகம்மா உயிரோடு இருக்கிறாள். இல்லாவிட்டால் அவளின் உடலுக்கும் உயிருக்கும் இடையில் பெரிய வெளியொன்று எப்போதோ தோன்றியிருக்கும்.

நாகம்மா சில வீடுகளுக்கு வாடிக்கையாக அரிசியிடித்தல், மா அரைத்தல், சமைத்தல் போன்ற வேலைகள் செய்து கொடுப்பாள். ஊரில் எங்காவது கல்யாணம் என்றால் தவறாது நாகம்மாவை அங்கு காணலாம். அவள் இல்லாமல் கல்யாணமே நடக்க முடியாதென்பது பலரது அபிப்பிராயம். நான்கைந்து நாட்களுக்கு முன்பே போய் தனது சொந்தவீட்டு வேலைபோல் எல்லாவற்றையும் செய்வாள். நாகம்மா மிகவும் நல்லவள். நம்பிக்கைக்குப் பாத்திரமானவள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். அதனால் எல்லோருடைய வீடுகளிலும் உள்வீட்டுக்காரியைப்போல் பழகுவதற்கு அவளுக்கு உரிமையுண்டு.

ஆனால் நாகம்மாவுக்குக் கிடைக்கும் வருமானம் மட்டும் மிகவும் சொற்பந்தான். அந்தச் சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கையை இழுத்துச் செல்வதற்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது. எத்தனையோ நாட்கள் பட்டினி கூடக் கிடந்திருக்கிறாள் நாகம்மா.

இந்த நிலையில் அவளால் சாந்திக்குப் பட்டுச்சட்டை வாங்கமுடியுமா?

சிலர் தங்கள் குழந்தைகளின் பழைய சட்டைகள் இருந்தால் இரக்கத்தோடு அவளிடம் கொடுப்பார்கள். அவற்றையெல்லாம் சாந்திக்கு அணிந்து அழகு பார்த்து மகிழ்ந்திருக்கிறாள் நாகம்மா.

அவள் தீபாவளியைக் கொண்டாடி எவ்வளவோ காலங்களாகி விட்டன. புருஷனை இழந்த அவளுக்குத் தீபாவளி அவசியமில்லைத் தான். ஆனால் குழந்தை சாந்தியும் அப்படியிருக்க முடியுமா?

தீபாவளி மலரப்போகிறது. எங்கும் மகிழ்ச்சி நிரம்பி வழியப்போகிறது.

எல்லோரும் புத்தாடை கட்டி புத்தொளியோடு விளங்கப் போகிறார்கள். குழந்தைகள் எல்லோரும் குதூகலிக்கப் போகிறார்கள்.

எல்லோருக்கும் மகிழ்வைக் கொடுக்கும் தீபாவளி, குழந்தை சாந்திக்கு மட்டும் துன்பத்தைக் கொடுக்கப் போகிறதா?அவளது ஆசைகள் நிராசையாகத்தான் போகிறதா? அவளது பிஞ்சு உள்ளம் வெதும்பத்தான் வேண்டுமா?

அப்படி நடக்கக் கூடாது. சாந்தியும் மகிழ்வோடு தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென விரும்பினாள் நாகம்மா. சாந்தி புதுச்சட்டை அணிந்துகொண்டு அதை ஆசையோடு தொட்டுத் தொட்டுப் பார்ப்பாள். தனது தாயிடம் அழகு காட்டி மகிழ்வாள். மற்றப் பிள்ளைகளோடு அவளும் சமமாக விளையாடுவாள். அப்போது நாகம்மாவின் உள்ளம் சந்தோஷத்தால் நிரம்பிப்போகும்.

ஆனால் நாகம்மாவின் ஆசை நிறைவேறுமா? அல்லது வரண்ட உள்ளத்தில் தோன்றும் வெறுங் கற்பனைகள் தானா?

ஊரில் உள்ள பெரிய மனிதர்களின் பிள்ளைகள் ஒருவருமே சாந்தியோடு விளையாடுவதில்லை. அதை அப்பெரிய மனிதர்கள் விரும்புவதுமில்லை. ஒர் ஏழைப் பெண்ணின் மகளோடு தங்கள் குழந்தை சேர்ந்து விளையாடுவதை அவர்கள் அவமானமாக நினைத்தார்கள்.

பக்கத்து வீட்டில் இருப்பவர் பொன்னம்பலம், நல்ல மனிதர், பெரிய செல்வந்தர். அவரது மகள் ராணி மட்டும் சாந்தியோடு சேர்ந்து விளையாடுவாள். பொன்னம்பலம் அதைக் குறைவாக எண்ணுவது மில்லை.

நாளை தீபாவளியைப் பொன்னம்பலம் வீட்டில் விமரிசையாகக் கொண்டாடுவார்கள். அதற்குப் பலகாரங்கள் சுடுவதற்கு உதவி செய்ய வரும்படி ஆளனுப்பியிருந்ததால் அங்கு சென்றிருந்தாள் நாகம்மா.

நன்றாக இருட்டிவிட்டது. வீட்டில் உள்ள பெரியவர்கள் முன்பக்கத்தில் உரையாடிக்கொண்டிருந்தார்கள். வீட்டின் எஜமானி மலரப் போகும் தீபாவளியை மகிழ்வோடு கொண்டாடுவதற்கு வீட்டை அலங்கரித்து மாக்கோலம் போடுவதில் முனைந்திருந்தாள். அவர்களது செல்லக் குழந்தை ராணி பக்கத்து அறையில் நிம்மதியாகத் தன்னை மறந்து நித்திரையில் ஆழ்ந்திருந்தாள்.

நாகம்மா இயந்திரம் போல் பலகாரம் செய்வதில் முனைந்திருந்தாளே தவிர, அவளது உள்ளத்தின் உணர்ச்சிகளுக்கு ஏற்ப முகத்தில் வேதனை ரேகைகள் கோடிட்டபடி இருந்தன.

அவளோடு அங்கு வந்திருந்த சாந்தி, தனது தாயின் முக மாற்றங்களைக் கண்டு சகித்துக் கொள்ள முடியாதவளாய் கண்களை மூடியவண்ணம் மூலையில் படுத்திருந்தாள்.

நாகம்மா ராணியையும் சாந்தியையும் மாறிமாறிப் பார்த்தாள். இப்போது அந்தக் குழந்தைகள் இருவரது வதனங்களிலும் எவ்வளவு நிம்மதி! எவ்வளவு சாந்தி!

விடிந்துவிட்டால்?

ராணி மகிழ்வோடு தீபாவளியைக் கொண்டாடுவாள்! சாந்தி சோகப் பதுமையாய் உட்கார்ந்திருப்பாள்!

நாகம்மாவின் நெஞ்சுக்குள் புகைமண்டலமொன்று குமைந்து படர்ந்தது.

மறுகணம் நாகம்மா தனது கண்களை மூடிக் கொண்டாள். அவளது உள்ளத்தில் ஏன் அந்தத் தீய எண்ணம் உதயமாகிறது? அவள் ஆண்டாண்டு காலமாகத் தேடி வைத்திருந்த நல்லவள் என்ற பெயரை இழப்பதற்கா?

சாந்தியின் மகிழ்ச்சி அவளது தோழியின் துன்பத்தில்தானா உதயமாகவேண்டும்! குழந்தை ராணி எவ்வளவு சலனமற்றுத் தூங்குகிறாள்! தீபாவளியைக் கொண்டாடுவதற்கு எப்படியெல்லாம் கற்பனை செய்திருப்பாள்! ராணியின் பிஞ்சு மனத்தில் வேதனையைப் பரப்பித்தானா சாந்தியின் மகிழ்ச்சியைக் காணவேண்டும்?

ஆனால் –

விடிந்ததும் புதுச்சட்டைக்காக அவளிடம் வரும் சாந்திக்கு என்ன பதில் சொல்வது? இன்றுபோலத் தீபாவளித் திருநாளிலும் சாந்தியின் கன்னத்தைப் பதம் பார்ப்பதா? அந்தப் பச்சிளங்குழந்தைக்குத் தீபாவளிப் பரிசாகக் கண்ணீரைத்தான் கொடுப்பதா?

அவள் செய்யத் துணிந்து விட்ட அந்தச் செயலை நினைக்கும் போது நாகம்மாவுக்கு வேதனையாகத்தான் இருந்தது. ஆனால் அவள் நினைப்பதுபோல் நடந்துவிட்டால் மட்டும், சாந்திக்கு எத்தனை வகையான புதுச்சட்டைகள்! எவ்வளவு மகிழ்ச்சி!

அப்போது ராணியின் நிலை?

நிச்சயம் அவள் துன்பப்படமாட்டாள். ராணி சந்தோஷமாக இருப்பதற்கு எவ்வளவு வசதிகள் இருக்கின்றன. ஒன்றில்லாவிட்டால் வேறொன்று! – நாகம்மாவின் உள்ளம் தனக்குச் சாதகமான சர்ச்சை களுக்குள் புதைந்து சிந்தனையைக் குறுக்கிக்கொண்டிருந்தது.

அடிமேல் அடிவைத்து ராணியின் பக்கத்தில் சென்றாள் நாகம்மா. அவளது நெஞ்சு வேகமாகப் படபடத்துக் கொண்டிருந்தது.

யாராவது பார்த்துவிட்டால்?

நாகம்மாவுக்கு எவ்வளவு இழிவான பெயர் கிடைக்கும். வெகுகாலமாக அவள் தேடி வைத்திருக்கும் நல்லவள் என்ற பெயர் அக்கணமே அழிந்து போகும். அவளை அன்போடு நடத்துபவர்கள் எல்லோருமே வெறுப்பார்கள். அவளைக் காணும்போது காறியுமிழ்வார்கள். யாரின் நலனுக்காக அவள் பாடுபடுகிறாளோ அச் சிறுகுழந்தைக்கும் அந்த அவமானத்தில் பங்கு கிடைக்கத்தானே செய்யும்!

ராணி அணிந்திருந்த சங்கிலியின் மேல் நாகம்மா கையை வைத்தாள்.

திடீரென்று யாரோ அவளது சேலையைப் பற்றியிழுத்தார்கள். திடுக்குற்றுத் திரும்பினாள் நாகம்மா. அவளது நெஞ்சு விறைத்துப் போயிற்று.

“அம்மா என்ன செய்யிறீங்க?”

“ஒண்டுமில்லை சாந்தி!” பதட்டத்துடன் கூறினாள் நாகம்மா.!

“நீ…. பொய் சொல்றே… ராணியின்ரை சங்கிலியைக் களவெடுக்கிறேம்மா.”

தான் பெற்றெடுத்த குழந்தையின் முன்பே குற்றவாளியாகக் கூனிக்குறுகி நின்றாள் நாகம்மா.

“ஏம்மா களவெடுக்கிறே?”

“…..”

“சொல்லும்மா”

“உனக்காகத்தான் சாந்தி…! நீ புதுச்சட்டை போட்டுக் கொண்டு சந்தோஷமாயிருக்கிறதைப் பார்க்கத் தான்…”

உணர்ச்சி வசப்பட்டுக்கூறிய போது நாகம்மாவின் வார்த்தைகள் தடுமாறின.

“எனக்குப் புதுச்சட்டை வேண்டாம் மா… ஆனா நீ களவெடுக்கக் கூடாதம்மா…களவெடுத்தா கடவுள் கண்ணைப் பிடுங்கிப் போடுவாரெண்டு நீதான் சொன்னியே… உனக்குக் கண்ணில்லாட்டி நான் அழுதழுது செத்துப் போவேம்மா.”

குறுகிய குவளைக் கண்களுக்குள் நீர் பளபளக்கக் கூறினாள் சாந்தி.

மறுகணம் சாந்தியைக் கட்டித் தூக்கித் தன்நெஞ்சோடு இறுக்கிக் கொண்டாள் நாகம்மா. பகுத்தறிவு மழுங்கி அவள் செய்யப் புகுந்துவிட்ட தீயசெயலிலிருந்து அவளைக் காப்பாற்றி விட்டாள் சாந்தி. தான் பெற்ற குழந்தையைப் பார்க்கும்போது அவளுக்குப் பெருமையாக இருந்தது.

“நான் களவெடுக்க மாட்டன் சாந்தி…. ஒரு போதும் களவெடுக்க மாட்டன்” தனது குழந்தையை இறுக அணைத்த வண்ணம் கூறினாள் நாகம்மா.

“நீ… நல்ல அம்மா” குழந்தை சாந்தி தனது பூப்போன்ற கன்னங்கள் குழியச் சிரித்தபடியே கூறினாள்.

தன்னை மறந்திருந்த நாகம்மா சுயநிலைக்கு வந்தபோது ராணியின் தந்தை பொன்னம்பலம் அவளருகில் நின்று கொண்டிருந்தார்.

நாகம்மா திகைத்துப் போனாள். சங்கிலியைத் திருட முயற்சித்ததை அவர் பார்த்திருப்பாரா? அல்லது இப்போதுதான் இங்கு வந்தாரா? எதையுமே நாகம்மாவால் நிதானிக்க முடியவில்லை.

ஒருவேளை அவர் பார்த்திருந்தால்?-

நாகம்மாவின் இதயத்திற்குள் ஏதோ புகுந்து, இதயச் சுவர்களை ஈய்த்துக்கொண்டிருப்பதைப் போன்ற வேதனை.

குனிந்தபடியே வீட்டை நோக்கி நடந்தாள் நாகம்மா. அவளது கால்கள் தடுமாறின.

மறுநாள் தீபாவளி மலர்ந்தது! குதூகலம்! எல்லோர் முகத்திலும் மலர்ச்சி! மங்கல ஓசைகள் காதில் விழுந்துகொண்டிருந்தன! குழந்தைகள் சந்தோஷமாக ஓடியாடி விளையாடிக்கொண்டிருந்தார்கள். எங்கோ பட்டாசுகள் அதிர்ந்தன.

நாகம்மாவை உடனடியாக வரும்படி பொன்னம்பலம் ஆளனுப்பியிருந்தார்.

நாகம்மாவின் நெஞ்சு துணுக்குற்றது. அவர் ஏன் அவளை அழைக்க வேண்டும்? அவள் செய்யமுனைந்த திருட்டைப்பற்றி விசாரிக்கப் போகிறாரா? எல்லோருக்கும் இன்பநாளாக இருக்கும் தீபாவளி அவளுக்கு மட்டும் துன்பநாளாகப் போகிறதா?

அவள் தலைகுனிந்தபடியே பொன்னம்பலத்தின் முன்னால் நின்றாள்.

“நாகம்மா! நீ ஆண்டாண்டு காலமாகக் கட்டிவளர்த்த நேர்மை யென்ற கோட்டையை உனது பிள்ளைப் பாசந்தான் தகர்த்தெறிந்தது.

ஆனால்.

உனது குழந்தை உனக்குக் கூடாத பெயரேற்படாது காப்பாற்றியிருக்கிறாள். அவளின் உயரிய உள்ளம் என்னை மிகவும் கவர்கிறது. நான் தரும் இந்தத் தீபாவளிப் பரிசை அவளிடம் கொடு, அவளைக் கடவுள் ஒரு குறையுமில்லாமல் என்றும் காப்பாற்றுவார்.”

பொன்னம்பலம் கொடுத்த பட்டுச்சட்டையை நடுங்கும் கைகளால் நாகம்மா பெற்றுக்கொண்டாள். அவளது இதழ்கள் துடித்தனவேயன்றி வார்த்தைகள் வெளிவரவில்லை. அவளது கைகள் அவரை நோக்கிக் குவிந்த போது, நன்றிப் பெருக்கால் கண்கள் கலங்கின.

எங்கிருந்தோ கோவில் மணியோசை காற்றில்கலந்து வந்து அவளின் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

– வீரகேசரி 1964

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *