தீபம்

 

மாமன் வீட்டு முகப்பில் காலொடிந்த ஆடு ஒன்று நின்றிருந்தது. சிம்பு வைத்துக் கட்டப்பட்ட காலுடன் ஜன்னல்கம்பியில் கட்டப்பட்டிருந்த அகத்திக்குழையைக் கடித்துக்கொண்டிருந்தது அசைவைக்கண்டு திரும்பிப்பார்த்து கூழாங்கல்போன்ற கண்களை மூடித்திறந்து ம்ம்பே என்றது. வாசலில் கிடக்கும் கருப்பனைக் காணவில்லை. மாமா காட்டுக்குத்தான் போயிருக்கவேண்டும். அத்தை இருக்கிறாளா என்று தெரியவில்லை. வீடே அமைதியாக இருந்தது

முருகேசன் வீட்டுமுற்றத்தில் தயங்கி நின்றான். அவன் பிறந்ததே அந்த வீட்டில்தான். அதன்பின் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஓடிவந்துவிடுவான். கறிசமைத்தாலோ எள்ளுருண்டையோ வெல்லமாவோ உருட்டினாலோ அத்தையே அவனை வரச்சொல்லித் தகவலனுப்பிவிடுவாள். வந்ததுமே முதலில் சமையலறைக்குப்போய் என்ன இருக்கிறதென்றுதான் பார்ப்பான். அவன் வீட்டில் எப்போதுமே எல்லாம் கொஞ்சம் பற்றாக்குறையாகத்தான் இருக்கும். மாமா குடிப்பதில்லை. மாட்டுத்தரகும் உண்டு. ஆகவே வீட்டில் தானியமும் பருப்பும் கருப்பட்டியும் எப்போதும் செழிப்புதான். அடுப்புக்குமேலே உத்தரம் வைத்து அதில் வைக்கப்பட்டிருக்கும் பனைநார்ப்பெட்டிகளில் உப்புக்கண்டம் கறி எப்போதுமிருக்கும்.

அப்போதெல்லாம் வீடு இன்னும் கொஞ்சம் சின்னது. இப்போது பக்கவாட்டில் இரு சாய்ப்புகளும் முன்பக்கம் ஒரு திண்ணை எடுப்பும் சேர்ந்து பெரியதாகி விட்டது. லட்சுமி வளர்வதைப்போல வீடும் வளர்கிறது என்று முருகேசன் நினைத்துக்கொண்டான். ஆனால் அவனும் அண்ணனும் வளர்ந்தபின்னாலும் அவர்கள் வீடு வளரவில்லை. வீட்டுக்குள் நான்குபேர் கைகால்நீட்டிப் படுக்க இடமில்லை. பெரும்பாலும் அப்பா முற்றத்தில் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டில் போட்டுப் படுத்துக்கொள்வார். அண்ணன் எங்காவது பம்புசெட்களில் தங்குவது வழக்கம். முருகேசனுக்கும் வெளியே படுத்துக்கொள்ள ஆசைதான். ஆனால் படுத்து எழுந்தாலே மூக்கு வீங்கி கனத்து தும்மலாக வரும். மறுநாளே தடுமன் பிடித்து ஒருவாரம் பாடாய்ப்படுத்தும்.

சாத்திய கதவு மெல்ல விரிசலிட்டது, உள்ளே லட்சுமியின் சிவப்புத்தாவணி அசைவது தெரிந்தது. ஏன் அது அத்தையாக இருக்கக் கூடாதா? இல்லை, அசைவே இல்லாமல் அவள் அங்கே நின்றால்கூட, அவள் நிற்பது கண்ணுக்கே தெரியாவிட்டால்கூட அவன் மனசுக்குத்தெரிந்துவிடும். அவள்தான். அவள் கையைத் தாழ்த்தியபோது வளையல்கள் மெல்லிய ஒலியுடன் மணிக்கட்டில் விழுந்தன.

முருகேசன் திண்ணையைப் பிடித்தபடி நின்றான்.

‘அம்மா இல்ல…அப்பா வண்டியூருக்கு வசூலுக்குப் போயிருக்காங்க’

‘ஓ’ என்றான் முருகேசன் . மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

‘திருணையிலே ஒக்கார்ரது…வந்த காலிலே ஏன் நிக்கணும்’

‘இல்ல…சோலி கெடக்கு’

’ம்ம்க்கும் மைனருக்கு ஆயிரம் தொழிலுல்ல’ மெல்லிய சிரிப்பு.

முருகேசன் அவளைப் பார்க்க முனைந்தான். அவள் கை கதவைப் பிடித்திருந்ததும் ஒரு காலும் மட்டும்தான் தெரிந்தது. காலில் வெள்ளிக் கொலுசு தெரிந்தது. அவன் பார்ப்பதைக் கண்டதும் அவள் காலை உள்ளே இழுத்துக்கொண்டாள்.

‘வெள்ளிக்கொலுசுபோல…புதிசா?’

‘ம்…செஞ்சது இல்ல. வாங்கினது…அப்பா போன பொங்கலுக்கே வாங்கிக் குடுக்கறேன்னு சொன்னார்…இப்பதான் சோளம்போட்ட காசு வந்திச்சுன்னு வாங்கிட்டுவந்தார்’

‘ம்’

அவன் கைநகங்களைப்பார்த்தான். போய்விடவேண்டும். ஆனால் போகவும் முடியவில்லை. திண்ணையைப்பிடித்தபடி நின்றான்

‘பிடிச்சிருக்கா?’

‘என்னது?’

‘கொலுசு’

‘நான் எங்க பாத்தேன்…’

‘பாருங்க’

அவன் மனம் படபடக்கப் பார்த்தான். கதவுக்குக் கீழே இருட்டுக்குள் இருந்து மெல்ல அவள் நீலப்பாவாடை அசைந்து முன்னால் நீண்டது. பின்பு அதற்குள் இருந்து அவள் கால் வெளியே வந்தது. அதில் வெள்ளிக்கொலுசு பளபளப்பாகத் தொய்ந்து கிடந்தது. அவன் பார்த்துக்கொண்டே இருந்தான்.

‘என்ன பார்வ?’

‘இல்ல’

‘என்ன இல்ல?’

‘ஒண்ணுமில்ல’

‘என்ன ஒண்ணுமில்ல…பிடிச்சிருந்தா சொல்றது’

‘பிடிக்காம இருக்குமா….’

‘வெள்ளிக்கொலுசு நல்லா செஞ்சிருக்கான் இல்ல?’

‘ம்’

அவள் அசைய கதவு முனகியது

‘காலு முத்துப் பல்லைக் காட்டி சிரிக்கிற மாதிரி இருக்கு…’

‘அய்யே… ’

‘இல்ல மல்லிச்சரம் மாதிரி’

’அய்யோ’ என்று அவள் சிரித்தாள்.

’காலு வெளியே வந்தது எப்டி இருந்திச்சு தெரியுமா…?’

‘ம்?’

‘முயல் பதுங்கி வர்ரது மாதிரி’

அவள் ‘உக்கார்ரது’ என்றாள்

‘இல்ல…உக்காந்தா நல்லாருக்காது…வீட்டிலே யாருமில்ல’

‘வீட்டிலதான் நாங்க இருக்கம்ல?’

‘நீ மட்டும்தானே இருக்க?’

‘ஏன் நான் பத்தாதா?’

‘இல்ல….அது மொறையில்லல்ல…’

‘மொறைதான் செஞ்சாச்சே…ஊருக்கே தெரியறாப்ல அய்யனாருமுன்னால பூவும் போட்டாச்சு…பிறவு என்ன?’

‘இல்ல…நான் வாறேன். மாமன் வந்தா மேலகரத்திலே வசூலுக்கு திங்கக்கிழமை போலாமான்னு அப்பா கேக்கச்சொன்னாருன்னு சொல்லிடு’

‘உக்காந்துட்டுப் போலாமே’

‘இல்ல’

‘எப்பவாச்சும் வாறது. வந்தாலும் சரியாப் பாக்கக்கூட முடியறதில்ல’

‘நீங்க அங்க நின்னு பாத்துக்கலாம்….நாங்க எங்க பாக்கிறோம்? எப்ப வந்தாலும் இருட்டயில்ல பாத்துட்டுப் போறம்…?’

‘சாமியக்கூட இருட்டிலதான் பாக்கிறீய’

‘சாமிய வெளக்கு கொளுத்திக் காட்டுறாங்களே’

’வெளக்குல காட்டினா கும்பிடுவீங்களாக்கும்?’

‘சத்தியமா’ என்றான் முருகேசன் . அவன் குரல் நடுங்கியது ‘கையெடுத்துக் கும்பிட்டிருவேன்’

‘பொய்யி’

‘எப்பவும் மனசுக்குள்ள கும்பிடுறதுதானே’

அவள் பேச்சில்லாமல் நின்றாள்

‘என்ன?’

‘ஒண்ணுமில்ல…’ அவள் குரல் மிகவும் தாழ்ந்திருந்தது

‘நான் வாறேன்’

‘போயிராதீங்க…’

‘ஏன்?’

‘ஒரு நிமிசம்’

அவன் அவள் உள்ளே செல்லும் ஒலியைக் கேட்டான். என்ன செய்கிறாள்?

பின் மெல்லிய குரல் ‘பாருங்க’

கதவு மிக மெல்லத் திறந்தது. உள்ளே லட்சுமி கையில் ஒரு விளக்குடன் நின்றிருந்தாள். சாமிகும்பிடும் லட்சுமி விளக்கு. அதன் சுடர் சிறிய சங்குப்பூவின் இதழ்போல அசையாமல் நின்றது. அதன் ஒளியில் அவள் கன்னங்களின் வளைவுகள், கழுத்தின் மென்மை, உதடுகளின் மெல்லிய ஈரம், காதோர மயிரின் சஞ்சலம், இமையின் படபடப்பு செம்பொன் நிறமாகத் தெரிந்தது. அவள் கண்களின் வெண்மையில் தீபச்சிவப்பு படர்ந்திருந்தது. கருவிழிகளுக்குள் இரு சிறு சுடர்கள் எரிந்து நின்றன.

பிறந்து இறந்து கொண்டே இருந்தான் முருகேசன்

மெல்லிய குரலில் லட்சுமி ’ பாத்தாச்சா?’ என்றாள்

‘இல்ல’

‘எவ்ளவு நேரம் பாப்பீங்க?’

‘கடசீ வரைக்கும்தான்’

அவள் பெருமூச்சுவிட்டபோது மார்புகளும் தீபமும் அசைந்தன.

‘சரி’ என்று அவள் விளக்குடன் உள்ளே சென்றாள். முருகேசன் அவள் போனபின்னரும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.

மீண்டும் கதவுக்கு அப்பால் அவளுடைய அசைவு.

‘நான் வர்ரேன்’ என்றான்

‘அடிக்கடி வர்ரது’

‘இனிமே எங்கயானாலும் ஒரு சாதாரண வெளக்கே போதும். உன் முகத்த நானே பாத்துக்குவேன்’ என்றான் முருகேசன்

அவள் மெல்ல சிரித்தது கேட்டது. முருகேசன் முற்றத்தில் இறங்கி அவள் பார்வை விரிந்த மண்ணில் நடந்து சென்றான். வேலியெங்கும் ஆவாரம்பூக்கள் மலர்ந்து நின்றிருந்தன. தூரத்தில் நீலமலரிதழ்கள் போல மலையடுக்குள் விரிந்திருந்தன. அதன் மேல் ஒளிரும் வெண்ணிறமாக சூரியன் பூத்திருந்தது.

- February 26, 2013 (நன்றி: https://www.jeyamohan.in) 

தொடர்புடைய சிறுகதைகள்
உள்வளவு அங்கணத்திண்ணையில் அமர்ந்து நல்லகுத்தாலிங்கம் பிள்ளை கஞ்சி குடித்துக் கொண்டிருந்தபோது நாகலட்சுமி அவசரமாக வாசலில் இருந்து உள்ளே வந்து ‘ ‘ அந்த அகமுடிவான் வந்திருக்கான். சொல்லியாச்சு, ஒத்த ஒரு காசு அவனுக்குக் குடுக்கப்பிடாது. குடுத்ததே போரும். இனி அவன் காசும் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன் காலை ஆறு மணிக்குத் தொலைபேசி அடித்தால் எரிச்சலடையாமல் எடுக்க என்னால் முடிவதில்லை. நான் இரவு தூங்குவதற்கு எப்போதுமே நேரமாகும். ஏப்ரல், மே தவிர மற்ற மாதமெல்லாம் மழையும் சாரலும் குளிருமாக இருக்கும் இந்தக்காட்டில் பெரும்பாலானவர்கள் எட்டுமணிக்கே தூங்கிவிடுகிறார்கள். ஏழரை ...
மேலும் கதையை படிக்க...
இரு காதுகளும் முழுமையாகவே கேட்காமல் ஆனபிறகுதான் சுத்த சங்கீதத்தின் வாசல் திறந்தது என்று ராமையா வெற்றிலை மீது சுண்ணாம்பை மென்மையாகத் தடவியபடி சொன்னார். கும்பகோணத்துக்காரர்கள் வெற்றிலை போடுவது தனி லாகவம். கும்பகோணம் வெற்றிலைகூட நன்கு முற்றிய நெல்லிக்காய் போல ஒரு கண்ணாடிப் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். ஆஸ்பத்திரிக்குச் செல்லும் வழியில் டிவிஎஸ் 50  உறுமிக்கொண்டு நின்றுவிட்டது. காலால் எற்றிக்கோண்டே சென்று ஓரமாக நிறுத்தினேன். சங்கிலி கழன்றுவிட்டது. சள்ளையாக இருந்தது. அதை கழட்டிமாட்டினால் கையெல்லாம் கறையாகிவிடும். என்னதான் கவனமாக இருந்தாலும் பாண்ட் சட்டையில் கறைபடியாமல் இருக்காது. சட்டை ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி ...
மேலும் கதையை படிக்க...
ஆனைமலை என்று பெயர் இருந்தாலும் அது சமநிலத்தில்தான் இருந்தது. அதிகாலையில் அந்த ஊரில் கார் நின்றபோது அவன் வினோதமான ஒரு பறவைக்குரலை முதலில் கேட்டு, அது என்ன என்ற உணர்வுடன் விழித்துக் கொண்டு, அதை நின்றுகொண்டிருந்த காருக்கு வெளியே ஒரு பால்காரரின் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். 1917 நவம்பர் ஏழு. அது கொடுமையான குளிர்காலம். அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி நான்கு மாதங்களும் ருஷ்யா பூமியிலிருந்து துண்டிக்கப்படும் மாதங்கள். விண்ணிலிருந்து மனம் உறைந்த இரக்கமற்ற பனிப்படலம் இறங்கி வந்து தன் உறைந்த வெண்விரல்களினால் அந்தப் பெரும் ...
மேலும் கதையை படிக்க...
வரலாற்றில் உள்ள நுட்பமான ஒரு சிக்கலை நாம் வரலாற்றாசிரியர்களில் பெரும்பாலானவர்களிடம் விவாதிக்க முடிவதில்லை. அவர்கள் உறுதியான தகவல்கள் மூலம் திட்டவட்டமாக உருவாக்கப்படுகிற ஒரு கட்டுமானம் போல்தான் வரலாற்றைக் கற்பிதம் செய்து கொள்கிறார்கள். தங்கள் வீட்டின் திண்ணையில் அமர்ந்து பேசுவதுபோல வரலாற்றை முன்வைத்து ...
மேலும் கதையை படிக்க...
பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலிய பெண்ணுக்கு புராதன மரச்சிற்பம் ஒன்றை காய்கறிவிலைக்கு வாங்கி பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில் . இன்று நான் நகரில் மிக முக்கியமான ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். திருவட்டார் ஆதிகேசவன் கோயிலருகே அன்று ஒரு நல்ல நூலகம் இருந்தது. ஸ்ரீ சித்ரா நூலகம். சித்திரைத்திருநாள் மகாராஜா சொந்த பணத்திலிருந்து கொடுக்கும் நிதியுதவி இருந்தமையால் அங்கே நல்ல நூல்கள் நிறையவே வாங்குவார்கள். நாங்கள் திருவட்டாரிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தள்ளி ...
மேலும் கதையை படிக்க...
பித்தம்
யானை டாக்டர்
ஏறும் இறையும்
கோட்டி
தாயார் பாதம்
உச்சவழு
புது வெள்ளம்
நச்சரவம்
முடிவின்மைக்கு அப்பால்
திருமுகப்பில்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)