(1902ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
முதல் ஐந்து தமிழ் நாவல்கள் – க.நா.சு.
என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல், முதற் பதிப்பு: செப்டம்பர் 1957.
நாவல் கலை தமிழுக்குப் புதிது. அதற்கு ஒரு மரபை ஏற்படுத்தித் தர முயன்றவர்கள் என்று இந்த ஐந்து ஆசிரியர்களையும் தமிழர்கள் போற்ற வேண்டும் , இலக்கியத்திலே எந்த முயற்சிக்குமே மரபு என்பதுதான் ஆணி வேர், மரபு என்று ஒன்று ஏற்படாத காலத்தில் எழுதுபவர்கள் பலவித கஷ்டங்களுக் குள்ளாகிறார்கள் . அந்தக் கஷ்டங்களைச் சமாளிப்பதற்கு முன்னோடிகளுக்குச் சாமர்த்தியம் மிகவும் வேண்டும். இன்று தமிழ்க் கலையுலகிலே நாவல் என்கிற விருக்ஷம் பரந்து விரிந்து ஒங்க வளருகிறது என்றால் அதற்கு வழி செய்து தந்தவர்கள் வேதநாயகம் பிள்ளையும், ராஜமையரும் , மாதவையாவும் , நடேச சரஸ்திரியும், பொன்னுசாமிப் பிள்ளையும்தான். அவர்களுடைய முதல் நாவல் (சில சமயம் ஒரே நாவல்) பற்றி அறிந்து கொள்ள என் சிறு நூல் தமிழர்களுக்குப் பயன்படும் என்று எண்ணுகிறேன். ஒரு நூறு பேர்வழிகளாவது என் சிறு நூலால் தூண்டப்பட்டு அந்த முதல் நாவல்களைத் தேடிப் பிடித்துப் படிப்பார்களானால் அதுவே என் முயற்சிக்குப் பயன் என்று திருப்தியடைந்து விடுவேன்.
– க.நா.சு, 05-04-1957.
முகவுரை
எத்தனையோ பெயர்கள் தமிழ்ப் பாஷையில் எத்தனையோ கதைகள் எழுதியிருக்கின்றார்கள். “ஒரே ஒரு ஊரில் ஒரு புருஷன் பெண்ஜாதி” என்று ஆயிரங் கதைகள் இதுவரையில் எழுதப்பட்டி ருக்கின்றன. கதை என்ற பாக்கியம் நமது ஜம்பூத்வீபத்திற்றான் முதல் முதல் உற்பவித்தது என்று ஆங்கிலேய சரித்திரக்காரர்களும் எழுதியிருக்கின்றார்கள். பஞ்ச தந்திரத்துக் கொப்பான கதை உலகத்திலேயே கிடையாதென்பதும், அப்பஞ்ச தந்திரத்தை முதல் முதல் நூஷீர்வான் என்ற ஸஸ்ஸேநிய சக்கிரவர்த்தி 6-வது நூற்றாண்டில் ஸம்ஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்க்கக் கட்டளையிட்டு அவ்வாறு செய்து முடித்து அவர் செய்த பேருதவியின் மூலமாய் பெர்ஷியா, அரேபியா, ஐரோப்பா தேசத்து நாடுகள் இவைகளெல்லாம் நமது தேசத்தின் கதைகளைத் தெரிந்து கொள்ளும் பாக்கியத்தைப் பெற்றன வென்பதும் சித்தாந்தம். இவ்வளவு தூரம் நாம் சொன்னதின் கருத்து நமது நாடு கதைகளின் களஞ்சியம் என்பதாம். நம்முன் வழங்கும் கதாஸரித்சாகரம் என்ற கிரந்தம் போன்ற கிரந்தம் இவ்வுலகத்திலேயே கிடையாது.
இவ்வாறிருக்க நாம் ஓர் புதுகதையை இப்பொழுது நமது நாட்டாருக்குப் பிரசுரம் பண்ணியனுப்புவது “கொல்லன் உலையில் ஊசி விற்பது போலாம்” என்று ஜனங்கள் எண்ணலாம். ஆனாலவ்வா றன்று நமது முயற்சி. ஆங்கிலேய பாஷையில் ஆயிரக்கணக்காக மாதந்தோறும் நாவல் என்று பெயரிட்டுள்ள கதைகள் எழுதப்படுகின்றன. நமது தேசத்தார்கள் “நாவல், நாவல் என்று சொல்லு கின்றார்களே! அதில் என்ன அவ்வளவு ருசி. அதுவும் ஒரு கதை தானே!” என்று இங்கிலீஷ் படிப்பவர்களைக் கேட்பார்கள். இவ்வாறு இங்கிலீஷில் அப்பியாசமில்லாத நமது நாட்டார்கள் நாவல் என்பது இவ்வாறிருக்கலாம் என்பதை ஒருவாற்றிந்துகொள்ளும் பொருட்டு நாம் நமது நாட்டார்களுடைய நண்பன் (சுதேசமித்திரன்) என்ற பெயரை வகித்திருக்கின்றோ மாகையால் தமிழில் ஓர் நாவல் எழுதிப் பிரசித்தம் செய்கின்றோம். “நாவல்” என்பதின் பதார்த்தம் “புதுமை” என்பதாம். அவ்வாறே இக்கிரந்தம் புதிய நடையில் எழுதப்பட்டிருக்கும் கதையாகின்றபடியால் ‘நாவல்’ என்ற பெயர் இதற்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. நமது தீனதயாளு தான் தமிழில் முதல் நாவல். இதை நமது நண்பர்கள் அபிமானத்துடன் அங்கீகரிக்கும் நோக்கத்தைக் கண்டு கொண்டதும் இவ்வாறு பல நாவல்கள் பிரசித்தம் பண்ண சித்தமாக விருக்கின்றோம்.
ஆற்காடு,
18-10-1902,
ச.ம.நடேச சாஸ்திரி.
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6
1. தந்தி சமாசாரக் குழப்பம்
“வருந்து முயிர் ஒன்பான்வாயிலுடம்பிற்
பொருந்துத றானே புதுமை.”
என்ன சங்கதியோ ஏதோ, தெரியவில்லையே.அம்மா, ஜானகி! குழந்தை இப்பொழுதுதான் சாப்பிட்டு விட்டு கச்சேரிக்குப் போனான். நான் அவன் சாப்பிட்ட இலையைக்கூட எடுக்கவில்லை. இதற் குள் ஒரு சேவகன் ஐயருக்கு தந்தி வந்திருக் கிறது என்று ஒரு தந்தி கொண்டு வந்தான். ஐயர் கச்சேரிக்குப் போயிருக்கிறார் என்று சொன்னேன். அவன் தந்தியைக் கச்சேரிக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டான். தண்டாயுதபாணி! ஒன்றுமில்லாமல் இருக்கவேண் டுமே! எனக்கு ஒன்றும் செய்யத் தோன்றவில்லையே! நான் என்ன செய்வேன் ஜானகி!மங்கலியப் பெண்டுகளா! என்வயிற்றில் நீங்கள் பால் வார்க்கவேண்டும். போனதடவை அந்த கடன்காரிக்குத் திவசம் நடந்த உடனே மங்கலியப் பெண்டுகளுக்கு இடு இடு என்று சொன்னேனே. கொஞ்சம் புத்தி மயங்கிப்போய் உடனே இடத் தவறினேனே. என் குழந்தையைக் காப்பாற்றுங்கள், மங்கலியப் பெண்டுகளா!
ஜானகி- ஏன் அம்மா தாயு! நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் அதற்கென்ன? போன தடவை மங்கலியப் பெண்டுகளுக்கு இடத் தவறினால் நாளை வெள்ளிக்கிழமை 10 ரூபாவுக்கு ஒரு புடவை வாங்கி 4-பெண்டுகளுக்குச் சொல்லி பெண்டுகளிட்டு ஒரு ஏழை சுமங்கிலிக்குக் கொடுத்தால் போயிற்று, நல்லது, ஏன் வீணாய் விசாரப்படுகிறீர்கள்? உங்கள் நல்ல குணத்திற்கும் உங்கள் ந்தை நல்ல குணத்திற்கும் ஒரு நாளும் ஒரு குறைவும் வரம் டாது. புருஷர்களுக்குள் எவ்வளவோ காரியங்களிருக்கும்.எ னத்திற்காகத் தந்தி வந்ததோ என்னவோ. ஏன் வீணாய் அலற்று கிறீர்கள். பயப்படாதேயுங்கள்.
தாயு- இல்லை யம்மா, தந்தி என்றால் என் அடி வயிறு குழம்பு கிறது. அந்தக் கட்டையில் போவானை கறுப்புச் சட்டையும் தோல் பட்டையுமாய்க் கண்டபோதே என் கண்களுக்கு யமதூதன் போலிருக்கிறதே! இன்றையதினம் யார் முகம் விழித்தேனோ! போயிற்று, குடி முழுகிப்போயிற்று! அதோ வந்து விட்டானே என் குழந்தை. முகத்தில் ஈ ஆடவில்லையே.
அடா டா டா! என்று சொல்லி ஜானகியை விட்டு மறைந்து தாயு தன் வீட்டுப்பக்கமாக ஓடினாள். ஜானகியும் என்னவோ ஏதோ என்று கொல்லைப்பக்கமாக தாயுவின் வீடு வந்து சேர்ந்தாள். இதற்குள் கச்சேரியிலிருந்து தாயுவின் தம்பிமகனான தீனதயாளு வும் வீடு வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதும் தாயு,என்னடா அப்பா என் குழந்தாய், என்ன சங்கதி? ஊரில் யாருக்கு என்ன உடம்பு, சொல்லு சொல்லு, என்று வெகு பரபரப்புடன் கேட்டாள். அடுத்த வீட்டுக் கந்தசாமி இந்தப் பரபரப்பான சத்தத்தைக் கேட் கும் முன்னமேயே தந்தி வந்ததைப் பார்த்திருந்தபடியால் தீன தயாளு ருவின் பின்னேயே வந்து அவனை விட்டுச் சொற்பம் ஒதுங்கி நின்று அவன் முகக்குறியை உற்றுப்பார்த்து அவன் வாயிலிருந்து என்ன வரப்போகின்றதென்று எதிர்ப்பார்த்தவனாக நின்றான்.
இவ்விருவரும் இந்த நிலைமையில் ஒரு நிமிஷந்தானிருந்தார்கள் என்றாலும் இவ்விருவருடைய முகத்தை உற்றுப் பார்க்கின்றவனுக் கே வித்தியாசம் விளங்கும். தீனதயாளுவின் முகம் ஏதோ தாங்கக் கூடாத துக்கத்தால் தத்தளித்துப் பரிதபித்துக் குன்றிக் குறுகி யிருந்தது. உலகத்திலுள்ள சகல வஸ்துக்களையுமிழந்தவன் துக் கம், கண்ணாடியில் பிரதிபிம்பிப்பதுபோல், அவன் வதனத்தில் விளங்கிற்று. வெகு சிரமப்பட்டு துக்கத்தை ஒருவாறு அடக்க முயன்று முடியாதவன்போல் அவன் கண்களிலிருந்து கண்ணீர் வரத்தொடங்கிற்று. கந்தசாமிக்கோ கபடதுக்கம். அயல்வீட்டுச் சம்பந்தத்தினால் மரியாதைக்குத் துக்கங்கேட்க வந்த ஜாடையும் வேண்டுமென்று தனது சினேகிதனுடைய முகக்குறிக்குச் சரியா கத் தன் முகத்தை வைத்துக்கொண்டாற்போல் அவன் முகம் காட்டிற்று. ஒருகால் நேரில் தனது முகத்தைக் காட்டினால் எங்கு தான் யதார்த்தமாய்த் துக்கிக்கிறவனல்லன் என்று வெளி யாய் விடுமோ என்பதாகச் சொற்பம் தன் முகத்தை மறைத்து வைத்துக் கொண்டிருந்தான். தாயு, என்னப்பா! என்ன சங்கதி என்று பரபரப்பாய்க் கேட்க, தீனதயாளு, ஒன்றும் சொல்லத் தெரியாதவனாய் கண்ணுங் கண்ணீருமாகத் தன் சட்டைப்பையிலி ருந்த தந்தியைக் கந்தன் கையில் எடுத்துக்கொடுத்தான்.
தாயு- என்னடா! கந்தா! படியடா!
கந்தன் – (தனக்குள்ளேயே தந்தியைப படித்துப் பார்த்துக் கொண்டு ) ஒன்றுமில்லை தாயு, விசாரப்படவேண்டாம். இவ்வளவு தானா?
தாயு-அடே என்னடா கந்தா ஒன்றுமில்லை என்கின்றாயே. என் குழந்தை முகத்தில் ஈயாடவில்லையே. (கந்தன் கவனியாதவன் போல்)
கந்தன்–நல்லது இந்தத் தந்தி வருவதற்குமுன் உன் தந்தை க்கு உடம்பு செளக்கியமில்லை என்று கடிதம் ஏதாவது வந்திருக் கின்றதா? வந்திருந்தால் என்னிடம் சொல்லியிருப்பாயே. அன்று அன்று சமாசாரம் என்னிடம் சொல்லாமலிராயே. அப்படி ஒன்றும் இதுவரையில் இல்லைப் போலிருக்கின்றதே. நன்றாயிருக்கிறது, ஏன் வீணில் விசனப்படுகின்றாய். தந்தியிற்றான் பயத்திற்கு என்ன இடமிருக்கிறது. போடா பைத்தியக்காரா! உனக்கு ஸ்வாமி ஒருநாளும் குறைவு பண்ணமாட்டார். அவருக்கு ஒரு நாளும் இம் மாதிரி கதி வராது. அவர் சிவபூஜை ஒன்று போதுமே, அவரை ரக்ஷிக்க.
தாயு:- அடே கந்தா என்னடா சிறுபிள்ளைத் தனமாய்ப்பேசு கின்றாய். தந்தி வந்திருக்கவாவது, பயப்படாதே பயப்படாதே என்கின்றாய்! அந்தத் தந்தி எப்படி அடித்திருக்கிறது, சொல்லித் தொலையடா?
கந்தன்:- அடி! போ நீ! பைத்தியக்காரி ! தந்தியில் என்ன இருக்கிறது. வேண்டுமானால் ஒவ்வொரு எழுத்தாய் அருத்தம் சொல்லுகிறேன், கேள். ஏன் உனக்கு வீண் பைத்தியம். இந்த தந்தியில் ஒன்றும் பயமேயில்லை. இதில் என்ன சொல்லுகிறது என்கிறாயோ, கேள்; “காலில் முள்தைத்து அஸாத்ய வீக்கம். மூன்று நாளாக ஜ்வரம். அன்னாகாரம் சரியாய் இறங்கவில்லை. பயப்படாதே. ஜாதக ரீதியாய் மாரகதசை யிது இல்லை. ஆனால் உன்னைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலிருக்கிறது உடனே புறப் பட்டு வா.”
தீனதயாளு – என்ன கந்தா ! நீ கூட பயமொன்றுமில்லை என் றாயே! இதைவிடப் பயம் வேறுவேண்டுமா. என் தகப்பனார் ஒரு நாள் கீழே படுத்து இருந்ததேயில்லை. மூன்று நாள் ஜ்வரமாம். அன்னாகாரம் இறங்கவில்லையாம். இதற்காக ஒருவர் தந்தியடிப் பாரா. உன்னைப் பார்க்கவேண்டும், என்று ஒருவர் தந்தியடிக்கவா வது! நான் நம்பவேயில்லை. இதில் ஏதோ மோசம் இருக்கிறது. நான் உயிருடன் என் தகப்பனாரைப் பார்ப்பேனா.
தாயு-உயிரிருக்கும்பொழுதே என் குழந்தை அவன் தந்தை யைப் பார்க்குமா. குடிமுழுகிப் போயிற்று! அடடாடா!
கந்தன்- வீண் விசனப்படவேண்டாம். ஸ்வாமி ஒருபொழு தும் உங்களுக்குக் குறைவு செய்யமாட்டார். ஜாதகம் பொய்யாகாது. மாரக தசை யிப்பொழுது இல்லை என்று தந்தியிலேயே கண்டிருக்கிறது. மனத்தை தைரியப் படுத்திக்கொண்டு ஆபீஸில் உத்தரவு வாங்கிக்கொண்டு வா. வண்டி முதலியவைகளைப் பற்றி நீ யோசிக்க வேண்டாம். நான் திட்டஞ்செய்து வைக்கிறேன். நீ முதல் முதலில் ஆபீஸ்போய் சீக்கிரம் வந்து சேர்.
தீனதயாளு – எல்லா ஆபத்தும் ஏககாலத்தில் வரும் என்பது நிச்சயம். பழைய துரையிருந்தா லிப்பொழுதே கச்சேரிக்குக்கூட போகாமல் ஒரு கடிதம் எழுதிவிட்டுப் புறப்பட்டுவிடுவேன். இப் பொழுது வந்திருக்கிறவனோ புது துரை. அவனுக்கு பிராமண னைக் கண்டால், அதாவது நெற்றியில் விபூதி அல்லது சந்தனத் தைக் கண்டால், அவன் முகம் கடுவம்பூனை போலாகிறது. அன்றி யும் இப்பொழுது ஆபீஸில் வருஷாந்தரக் கணக்கு முடிவுவேலை. இந்த மாதத்தில் எவ்விதமாய் எனக்கு உத்தரவு கொடுப்பானோ தெரியவில்லை.
கந்தன் – இந்தச் சமயத்திற்கு ஒருவரும் உத்தரவு இல்லை என்று சொல்லமாட்டார்கள். ஒரு வருஷத்திற்கு ஒருமாதம் உத்தரவு சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு உண்டு என்கிறார்களே. அப்படி உத்தரவு உனக்குக் கிடைக்காதா?
தீனதயாளு – சட்டத்தில் அப்படியிருக்கிறது நிச்சயந்தான். சட்டப்படி சரியாய் நடந்தால் மாதம் மும்மாரி பொழியாதா! உனக்கு லௌகீக நடவடிக்கை இன்னும் தெரியாது. எப்படி யிருந்தபோதிலும் யஜமான் தயவிருந்தாற்றான் எல்லாம் நடக்கும். எனக்கு நியாயமாய் 3 மாதத்திய உத்தரவு வாங்கப் பாத்தியமிருக் கிறது. கொடுக்கிறவர் யார். யஜமான் விசுவாஸமில்லாமல் 3-நாழி கைகூட உத்தரவு கிடைக்காதே.
கந்தன் – உன்னைப்போல் பயந்தவனாக விருந்தால் ஒன்றுந்தான் கிடைக்காது. அந்த இரண்டெழுத்தை எனக்குக் கொடு. நானிந்த ஊரைத் தென்வடக்காய் மாற்றிவிடுகிறேன். பீ.ஏ.,பீ.ஏ .என்று எல்லாரும் புஸ்தகத்தைப் படித்து பரீக்ஷை கொடுத்துவிட்டால் மட்டுமாய் விட்டதா !
தாயு – நன்றாயிருக்கிறது. ஆபத்து சம்பத்து இல்லையா. உழைக்கிற காலமெல்லாம் நாய்போல் உழைத்து விட்டு தகப்பன் சாகக்கிடக்கின்றான் என்றால் உத்தரவு கிடைக்காதா. நல்ல உத்தி யோகம்.
தீனதயாளு – உனக்கு என்ன தெரியும் அத்தை. நீ உன் காரியத்தைப் பார்.
தாயு – காரியத்தைத்தான் பார்க்கிறேன்! காரியம் கிடக்கட்டும். எனக்கு ஒன்றும் தெரியவில்லையே!இப்பொழுது என்ன செய்கிறது.
தீனதயாளு எல்லாவற்றிற்கும் ஈச னிருக்கிறார். ஆபீஸ் போய்வருகிறேன்.
தாயு – இந்தா, பழனியாண்டவன் விபூதி. கொஞ்சம் நெற்றி யிலிட்டுக்கொண்டு போ. அவர் மகிமையால் ஒன்றும் குறைவுவர மாட்டாது.
தீனதயாளு — ஆண்டவன் விபூதியை யணிந்தால் அப்புறம் ஆக்ஷேபமுமுண்டோ. அவர் அருளின்றி அணுவுமசையாது.
என்று சொல்லி ஆபீசுக்குத் தீனதயாளு புறப்பட்டான். அங்கு அவன் உத்தேசித்தபடியே உத்தரவு கிடைப்பது வெகு அசாத்ய மாக விருந்தது. கடைசியாய் 5-நாளைக்கு சிறு உத்திரவு ஒன்று வாங்கிக்கொண்டு வீடுவந்து சேர்ந்தான். விட்டது விட்டபடி எல் லாவற்றையும் போட்டுவிட்டுத் தாயுவும் அவள் மருமகனும் தங்க ளூருக்கு அன்று மாலையிலேயே புறப்பட்டு விட்டார்கள். அவர் களிருந்த இடம் பகாசுரகிரி என்ற ஒரு மலைப்பிரதேசம். அவ்விட மிருந்து 40-மையில் கட்டைவண்டியில் சென்று அப்புறம் ரயில் வண்டி ஏறி அவர்கள் தங்களூர் போய்ச் சேரவேண்டும். முற்றி லும் அவர்களுக்கு இரண்டு நாள் பிரயாணம் கடந்துதான் ஊர் வந்து சேரலாம். இவ்வளவு தூரமிங்கு இவர்களைப்பற்றி சொல்லிவிட்டு இவர்கள் யார் என்பதை அடுத்த அத்தியாயத்தில் இவர்கள் வழி நடக்கையில் சற்று விவரமாக நாம் விசாரிப்போம்.
2. தீனதயாளு யார்
“அன்பின் வழிய துயிர்நிலை; அஃதிலார்க்
கென்புதோல் போர்த்த உடம்பு.”
தீனதயாளு என்பவன் 25, 26-வயதுள்ள ஒரு சிறுவன். இக்கலிகாலத்தில் தப்பிப்பிறந்தவன். அவ னுடைய இளைமைப் பருவத்தில் அவன் தன் தாயை இழந்து தாயில்லாப் பிள்ளையாகவே வளர்ந்தவன் என்றாலும் அவனுடைய நற்குண நற்செய்கைகளால் அவனுடன் பழகிய ஒவ்வொரு பெண்பிள்ளைகளும், அவனுக்கு ஒரு தாயாக நின்று அவனை ஆதரித்து வந்தார்கள். இவர்களுள் தாயு என்ற தீனதயாளுவின் அத்தை இவனை 5-வயது முதல் தோளில் தூக்கியும், ஒருநாளைக்கு 5 தடவை அன்னம் ஊட்டியும், பால் புகட் டியும், வளர்த்தவளாகையால் அவள் தீனதயாளுவினிடம் விசேஷ விசுவாஸம் பாராட்டி வந்தாள். தீனதயாளுவின் தகப்பனார் தனது மூத்த சம்சாரம் தப்பின பிறகு மற்றொரு பெண்ணை மணர்ந்தார். உலக வழக்கப்படி இளையாள் குமா ரன் குமாரத்திகள்மேல் விசுவாஸம் பாராட்டி மூத்தாள் வயிற்றுப் பிள்ளையை அலக்ஷியம் செய்யாமல் அவர் தனது அன்பு முழுமை யையும் தீனதயாளுவிடம் வைத்திருந்தார். ஒரு பிராணிக்குக் கூட வித்தியாசமில்லாமல் நடக்கப்பட்டவர். மூத்தாள் குமாரனான தீன தயாளுவிடம் விசுவாஸம் என்றதனால் இளையாளிடமும், அவள் குழந்தைகளிடமும் விசுவாஸக் குறைவு என்பது நம் கருத்தன்று. யாராரிடம் எவ்வெவ்மாதிரி அன்பு பாராட்ட வேண்டுமோ அவ்வவ் மாதிரி நடக்கப்பட்டவர். எல்லாரைக் காட்டிலும் அவர் தீன தயாளுவிடம் மிக்க அன்பு வைத்தவர். ஏனெனில் இனி உலகத் தில் அவ்வித அந்நியோந்நியமான தகப்பன் பிள்ளைகள் காண்பதரிது. தாயில்லாக் குழந்தை என்று தீனதயாளு அதிக கருணைக்கு பாத் திரனா யிருந்தபோதிலும் வெகு வினயமுள்ளவன். தன் தகப்ப னார் முன்னின்று ஒருவார்த்தையாவது உரக்கப் பேசான். ஸ்தா புஸ்தகமும் கையுமாக இருப்பான். ஒரு நிமிஷமாவது வீண்காலம் போக்கான். தகப்பனார் எள் என்பதற்கு முன்னர் எண்ணெய் என் னும் வண்ணமாய் நிற்பான். சிறுபிராயத்திலேயே சொற்பம் புத்தி மானாகக் காணப்பட்டபடியால் தீன தயாளுவை அவன் தகப்பனார் தன்னிடம் வைத்துக்கொள்ளாமல் கும்பகோணத்திற்குப் படிப் பிற்கு அனுப்பிவிட்டார். அப்பொழுதும் அவன் கூடப்போயிரு ந்து அவனுக்குச் சமையல் செய்து போட்டவள் தாயுவே. தனது சொந்தப் பிள்ளையிடம் ஒரு தாய் எவ்வளவு விசுவாஸமாக விருப் பாளோ அதற்கு மேலாக தாயு தீனதயாளுவிட மிருப்பாள்.ஒருநாள் சரியான காலத்தில் குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிவர நாழிகையானால் என்னவோ ஏதோ என்று விசாரப்படுவாள். அவ னுடன் படிக்கும் மற்றப் பிள்ளைகள் வீடு சென்று என் குழந்தை யைக் கண்டாயா என்பாள். “பாட்டி அவன் உபாத்தியாயர் வீடு போயிருக்கிறான். அஸ்தமித்து 1- நாழிகைக் கெல்லாம் வந்து விடுவான். விசாரப்படாதே” என்றாலும் அவனைக் காணும்வரை யில் இவள் மனம் நிலைநிற்காது. குழந்தை உடம்புக்குத் தக்கபடி ஒரு நாள் வற்றல் குழம்பு, ஒருவேளை பருப்புக்குழம்பு சமையல் செய்வாள். குழந்தை படித்துவிட்டு உறங்கப்போகும் முன்னம் தாயு விழித்திருந்து கணத்தெண்ணெய் அவன் நெஞ்சுநனையஊற்றி விட்டுத்தான் தான் நித்திரை செய்வாள். எப்பொழுதும் குழந்தை குழந்தை என்று தீனதயாளுவைக் கூப்பிடுவாளே யல்லாமல் பெயர் சொல்லி அவள் அழையாள். இவனுக்கு வயது 25,26 ஆன போதிலும் குழந்தை என்று தான் அழைப்பாள்; இதைச் சில் சமயத்தில் பெரியவர்கள் கேட்டுச் சிரிப்பார்கள். யார் என்ன சொன்னால் தான் இவளுக்கு என்ன நஷ்டம். அவனை எடுத்து வளர்த்த அபிமானம் இவளுக்கு அல்லவோ தெரியும். தீனதயாளு வும் படிப்பில் மேன்மேலும் விருத்தி அடைந்து அநேக பரீக்ஷை களிலும் தேறித் தனது 20-வது வயதில் 25 ரூபாயுள்ள ஒரு உத்தி யோகத்தில் அமர்ந்தான்.
இவன் பள்ளிக்கூடத்தில் படித்தகாலத்தில் விடுமுறை தோறும் தனது தந்தையிடம் வந்து 1- மாதகாலம் வசிப்பான். இவ னுடைய தகப்பனாரும் இவனைக் குழந்தை யென்றே அழைப்பது வழக்கம். குழந்தை வரப்போகிறான் கோடைலீவுக்கு, என்று கடிதம் வந்துவிட்டால் இவன் தகப்பனாருக்கு அவர் தேகமே ஒரு சுற்றுப் பருத்துவிடும். தன் பந்துக்கள் இஷ்டமித்திரர்கள் எல்லாரிடமும் அந்தக் கடிதத்தைக் காட்டுவார். கொல்லையில் பயிர்க் குழிபோடும் பைத்திய மிவருக்கு மிக்கவுண்டு. இளங்காய் வர்க்கங் களைக் குழந்தைக் கிருக்கட்டும் என்று நிறுத்திவைப்பார். அவன் வந்ததும் தந்தையை நமஸ்காரம்பண்ணி நின்றால் அம்மாதிரி செய்து அவன் எழுந்திருக்கும் முன்னம் அவனை ஒரு தடவை அவர் கட் 49 க்கொள்ளுவார். அப்படிச் செய்யும் பொழுதே இத்தனை நாள் அவனைத் தீராதபடி விட்டுப் பிரிந்திருந்ததற்காக அவர் கண்களி லானந்தபாஷ்பம் ததும்பும். அவர் வெகு கோழை மனமுள்ளவர். உடனே தன் குமாரனைக் கொல்லைப் பக்கம் இட்டுக்கொண்டு போய் “பார்த்தாயா குழந்தாய், நீ வரப்போகிறாய் என்றே 10-நாளாக இந்த அவரை பந்தலில் ஒரு பூப்பிஞ்சுகூடப் பறியாமல் நிறுத்தி வைத்திருக்கிறேன். அடியே! யாரடி அங்கே இந்தா! குழந்தை க்கு இன்று அவரைக்காய் பறித்து பொரித்த குழம்பு பண்ணு, அந்த ஆள் மொச்சைக்காய் கொண்டுவந்தானா? அவனிடம் நமது ஊரில் யார் கொல்லையிலிருந்தாலும், சரி, கொஞ்சம் கொண்டுவா வென்று நேற்றைத்தினம் சொல்லி யிருந்தேனே’ என்பார். உடனே அப்படியே ஆகட்டும், கொண்டுவந்து கொடுத்தான். ‘ஆனால் வெகு கொஞ்சம்’ என்ற மறுமொழி வரும். இதைக் கேட் டதும் அவர் தனது மகனைப்பார்த்து, இன்னும் இந்தவெளியில் மொச்சை நன்றாய்க் காய் பிடிக்கவில்லை. நல்லது நாளையதினம் புற்புலத்திற்கு சொல்லியனுப்பி ஒரு கூடைகாய் வரவழைக்கிறேன, என்பார். நல்லது முதலில் ஸ்நானஞ் செய்து சாப்பாட்டுக்குச் சித்தமாயிரு, அதற்குள் நான் பூஜையை முடிக்கிறேன். அப்புறம் மற்றச் சங்கதிகளைப்பற்றிப் பேசிக்கொள்வோம், என்பார். தன் குழந்தை குடல்வாட ஒரு நிமிஷமாவது சகியார். தீனதயாளு விடம் மாத்திரம் அவ்வளவு அதிக அன்பு என்று எண்ணவேண் டாம். எல்லாரிடமும் அவர் அதேவிதம். மகாதேவர் கோழை நெஞ்சர் என்பது, அந்த ஊரில் மாத்திர மன்று, எங்கும் பிரஸித்தம்.
மகாதேவர் என்பவர் தனது சிறுபருவத்தில் வெகு தேசங்க ளில் உத்தியோகம் பண்ணிப் பணம் சம்பாதித்தவர். ஆனால் அவர் ஸ்வபாவம் வரவு ஒன்றாக விருந்தால் செலவு மூன்று. பிராணியா அவரை யடுத்தவர்கள் அநேகர். வெகு உதாரி. ஒரு வது பசித்திருக்கக் காணப்பொறார். ரவோ, பகலோ, காடோ, நாடோ மகாதேவரிடம் குறைந்த பட்சம் பத்துப் பெயர்களாவது கூட உட்கார்ந்து புசிக்காத நாளே கிடையாது. சொற்பம் போஜ னப் பிரியர் என்றே சொல்லலாம். நன்றாய் உப்பும் உறைப்புமாக இரண்டொரு காய்குழம்பு, ரசம் இவ்வளவாவது இல்லாமல் ஒரு காலும் புசியார். சிவபூஜா துரந்தரர். ஸர்க்கார் வேலை என்ன விருந் தாலும் சரி, சொந்த வேலை எப்படிப்போனாலும் சரி, காலத்தில் ஸ்நானஞ் செய்து, நித்யகர்மானுஷ்டானங்கள், சிவபூஜை இவை களில் ஒரு அணுகூடத் தவறமாட்டார். மகாதேவர் ஒரு நாழிகை கச்சேரிக்கு வரவில்லை என்றால் அன்று வேலையில் பாதி நிற்கவேண்டி யது தான். ஆயிரம் இரண்டாயிரம் சம்பளம் வாங்கும் துரைகள்கூட மகாதேவரைக் கேட்காமல் ஒரு காரியம் த்தமாட்டார்கள். ஏனெனில் அவ்வளவு தீர்க்காலோ சனையும் வேலையில் பழக்கமும் மகாதேவருக்கு உண்டென்பது நாடறிந்த சங்கதி. அம்மாதிரி தான் அவர் செல்வாக்கும், கீர்த்தி யும், வருமானமும், செலவும்; அவ்வளவுக்குங்காரணம் அவரது சிவ பூஜை மகாத்மியம் என்றே ஜனங்கள் ஒரே வாக்காய்ச் சொல்லு வார்கள். கடைசியாய் வைதீகம் அதிகரிக்கவே அவர் இக்காலத்து உத்தியோகத்திற்கும் நம்பூஜைக்கும் சரிப்படாதென்று கீக்கிரமாக உபகாரசம்பளம் (பென்ஷன்) பெற்று சணற்கால் என்ற தன் பூர்வீ காளுடைய கிராமத்திற்கு வந்துவிட்டார். அவர் உபகார சம்பளம் பெற்றதற்கு மற்றொரு காரணமும் உண்டு. தன் மூத்த குமாரன் தீனதயாளு உத்தியோகத்தில் அமர்ந்துவிடவே இனி நமக்கு உத்தி யோகம் எதற்கு. குமாரன் தலையெடுத்து விட்டான் என்ற எண்ண மும் மேலிட்டிருந்தது. இப்படிப் பட்டவர் உடம்பு அஸௌக்கிய மாயிருக்கிறார் என்று சமாசாரம் தந்தி மூலமா யறிந்து தான் தீன தயாளுவும் அவனது அத்தையும் பகாசுர மலையை விட்டு அவ்வளவு பரபரப்பாய்ப் புறப்பட்டனர்.
3. தீனதயாளு சணற்கால் சேர்ந்தது
“இட்டமுட னென்றலையி லின்னபடி யென்றெழுதி
விட்ட சிவனுஞ் செத்து விட்டனோ – முட்ட முட்டப்
பஞ்சமே யானாலும் பாரமவனுக் கன்னாய்
நெஞ்சமே யஞ்சாதே நீ”
தாயுவும் அவளுடைய மருமகனும் பகாசுரகிரியை விட்டுப் புறப்பட்டு 40 மைலிலிறங்கி அப்புறம் புகை வண்டி மார்க்கமாக மகாதேவரிருந்த சணற்கால் என்ற ஊருக்கு வரவேண்டியதாயிருந்தது. பகாசுரகிரியை இவர்கள் விட்டுப் புறப்பட்டது முதல் கோ என்று மழை சப்தமேகங்களுங் கூடி வருஷித்தாற் போல் வருஷித்துக் கொண்டிருந்தது. மலைத் தேசம்,மழைபொழிந்தவுடன் காட்டு ஓடைகளும் ஆறுகளும் வெள் ளத்தால் நிரம்பும். இவர்கள் புறப்பட்டது முதல் ஒரேமழை. நான்கு பக்கங்களிலேயும் ஆறுகள் நிரம்பி ஓடின. வெட வெட் வென்று குளிர் நடுக்க ஆரம்பித்தது. என்னசெய்வார்கள். ஒரு பக்கத்தில் தள்ளக்கூடாத துக்கம். ஒரு பக்கத்தில் அடிக்கும் மழைக்கோ கணக்கில்லை. சொட்டு சொட்டு என்று இவர்கள் உட் கார்ந்திருந்த வண்டி ஒழுக ஆரம்பித்தது. எவ்விதமாய் இரவுவழி தொலைந்து காலையில் ரயில் ஏறுவோம், எவ்விதமாய் மகாதேவரை உயிருடன் பார்ப்போம் என்று ஏங்கிவிட்டார்கள்.
தாயு:-நாம் போய்ச் சேருகின்றவரையில் ஒன்று மில்லாம லிருக்குமா? நல்ல உயிர் நாற்பது நாள் கிடக்கும் என்பார்களே.என் தம்பியை உயிருடன் பார்ப்பேனா. உன் தந்தையை அவன் உயி ருடனிருக்கும்போது பார்ப்பாயா?
தீனதயாளு – இனி விசாரப்பட்டு என்ன செய்கிறது. வழி நடந்துதானே திரவேண்டும். எனக்கும் உனக்கு மிருக்கிற ஆவ லில் இப்படியே நம்மிருவரையும் யாராவது தூக்கிச் சணற்காலில் கொண்டுபோய் வைத்துவிட்டால் நலம். ஆனால் அது ஒரு பொழுதும் முடியாதே. ஈசன் விட்ட வழிவிடுகிறார். நாம் என்ன செய் கிறது, அப்பா மட்டில் என்பேரில் வைத்திருக்கிற விசுவாஸத்திற்கு என்னைக் காணாமல் தன் பிராணனை விடமாட்டார்.
தாயு- அவன் நெஞ்சமும் வேகவேமாட்டாதே. என் குழந் தையைக் கண்டு ஒரு பேச்சாவது பேசிப் பிராணணை விட்டால் அவன் கட்டை வேகும். இல்லாவிட்டால் குறைக்கொள்ளிதானே.
தீனதயாளு – உலகத்தில் மனிதன் பிறக்கிறதும் இறக்கிறதும் சகஜம். தீராது வந்து விட்டால் நம்மால் செய்யப் போகிறது என்ன இருக்கிறது. ஆனாலினி அப்பாவைப்போல் பிராணி நான் எந்த ஜென்மத்தில் காணப்போகிறேன்.
தாயு- தகப்பனார் என்றால் எல்லோரும் தகப்பனாரா! தன் குழ ந்தைகள்மேல் ஈமொய்க்கச் சகிக்கமாட்டான் என்தம்பி. ஒவ்வொரு குழந்தையையும் கண்ணுக்குள் வைத்து இமையால் மூடியல்லவோ பாதுகாத்து வந்தான். இனி அதிகமாய்ச் சொல்ல என்னவிருக் கிறது. அவனோடு இந்தக் குடும்பமே குலைந்தது. இதுவரையில் ஏதோ கெளரவமாய் நடந்துவந்தது இனிமேல் குடித்தனம் தாறு மாறுதான்.
தீனதயாளு – அதேனம்மா அப்படி சொல்லுகின்றாய்? ஸ்வாமி தயவால் ஒரு நாளும் நமக்குக் கஷ்ட காலம் வரப்போகின்றதில்லை. தீராது வந்துவிட்டால் அதேனப்படி, குலைந்தது குடித்தனம் என்கிறாய்.
தாயு-அடா ! குழந்தாய் உனக்கு ஒன்றும் தெரியாது.நீ ஒரு நாள்கூட ஊரிலிருந்தவனல்லன். நீ வெகு சாது; வெளுத்த தெல்லாம் பால், கறுத்ததெல்லாம் நீர் என்றிருக்கிறாய், அந்த மகானுபாவன் அவ்வளவு சீராயிந்த குடித்தனத்தை நடத்திக் கொண்டு வருகிறான். அவன் ஒன்றும் செய்யவேண்டாம். வாயிலில் உட்கார்ந்திருந்தால் போதுமே. வீடு முடிய கிடு கிடு என்று நடுங்குமே. இனி அந்த ஜம்புநாத புலத்தாள் ஒரு தூசு உன் கண்ணில் காட்டுவாளா.அவளை நீ என்ன என்றிருக்கிறாய்.
தீனதயாளு – அதென்ன அப்படி பேசுகின்றாய் அம்மா. இவ் வளவு பைத்தியக்காரி நீ என்று நான் எண்ணவில்லை. நீ சிற்றாத்தாளைப்பற்றி இவ்வளவு கெட்ட அபிப்பிராயம் வைத்திருப்பாய் என்று நானிதுவரையில் நம்பவேயில்லை.
தாயு-ஐயோ! குருடன் கண்ணைத்தானே வேண்டுகின்றான். எப்படியாவது அவள் சரியாகவிருந்து எப்பொழுதும்போல் இந்தக் குடும்பத்தை நடத்திவந்தால் கௌரவமாகத்தா னிருக்கும். உனக் கென்ன! நீ தலையெடுத்திருக்கின்றாய்.புருஷன்,அப்பொழுது மில்லை இப்பொழுதுமில்லை என்பது போல் எங்கேயோ கண்ணுக்குத் தெரியாத நாடுகளில் உத்தியோகம் பண்ணுவாய். எங்களைப் போன்ற கிழங்கட்டைகளுக்கு ஆதரவு இனி யார்?
தீனதயாளு :- இது என்ன பைத்திய முனக்கு, இந்த உலகத் தில் யாரால் யாருக்கு என்ன நடக்கிறதென்று எண்ணுகிறாய். எல் லாம் ஈசன் செயல். அவன் அருளிருந்தால் எல்லாம் சரியாய் நடக் கும். யாரால் யாருக்கு என்ன ஆக இருக்கின்றது. சக்கரம் அறுக் கின்றது. கபாலம் ஏந்துகின்றது. மேலும் நானுள்ள வரையில் உனக்கு என்ன விசாரம்.
தாயு:-அடா என் கண்ணே! இப்படி உலக ரீதியே தெரியா மல் எல்லாம் ஒன்று போல் எண்ணி யிருக்கிறாயே. அடா! உன் பைத்தியக்காரத் தனத்திற்காவது உன் தகப்பன் உயிருடன் இருக்க வேண்டும்.
இம்மாதிரி பல விஷயமாய்ப் பேசிக் கொண்டு தீனதயாளுவும் தாயுவும் இரவுப் பொழுதைத் தூங்கியும் தூங்காமலும் போக்கிக் காலையில் மலையை விட்டு இறங்கி விட்டார்கள். வழி நடந்து தானே தீரவேண்டும். வயிறும் ஏதாவது போட்டால் தானே கேட்கும். எந்தத் துக்கம் எப்படி யிருப்பினும் ஆகாரம் உண்டே தீரவேண்டு மல்லவா.
தாயு:- அப்பா குழந்தாய், ஒரு வழி தொலைந்தது. இன்னும் ஒரு இராத்திரி ஒரு பகல் புகை வண்டியில் பொசுங்கவேண்டும். நேற்று இரவெல்லாம் கட்டை வண்டியில் விறைத்தாய் விட்டது. உனக்கு என்ன இஷ்டமா யிருக்கும். இரண்டு எலுமிச்சம் பழம் வாங்கி வந்து அந்த ரசத்தால் சாதம் பிசைந்து வைக்கட்டுமா.
தீனதயாளு :- இதற்கெல்லாம் என்னைத் தொந்தரை செய்ய வேண்டுமா. ஏதோ ஒரு சாதம் பிசைந்து கொள்.
பகாசுர கிரியை விட்டு 40-மைல் கீழ் இறங்கி அப்புறம் கோட் டுப் பாளையம் என்ற ஊரிலிவர்கள் வந்து ரயிலேற வேண்டும். கோட்டுப் பாளையத்திலிருந்து ஒரு இரவு ஒரு பகல் ரயில் மார்க்க மாய் வழி நடந்து பெருஞ் சீரகவல்லி வந்து சேர வேண்டும். அவ் விடம் ரயிலை விட்டுக் கீழே யிறங்கி 5, 6- நாழிகை வழி நடந்து சணற்கால் வந்து சேர வேண்டும்.
இவ்விருவரும் என்னென்னவோ பேசிக் கொண்டு பெருஞ் சீரகவல்லி வரையில் வந்து சேர்ந்து விட்டார்கள். அங்கு ரயிலை விட்டு இறங்கினதும் யாராவது சணற்காலி லிருந்து ரயிலேற வந் திருக்கிறார்களா, அவர்களைக் கேட்டால் நமது வீட்டுச் சமாசாரம் தெரியும், என்று ஆவலுடன் எதிர் பார்ப்பார்கள். அங்கு ஒருவரும் நிற்கக் காணோம். எல்லாம் ஈசன் விட்டவழி என்று ரயில் சாவடியை விட்டு வெளியே வந்து ஒரு கட்டை வண்டி வைத்துக் கொண்டு சணற்காலை நோக்கிப் பிரயாணமானார்கள்.
நமக்கு அறிமுகமான ஒருவனாவது வழியில் வரமாட்டானா என்று ரஸ்தாவைக் கண்கொட்டாமல் பார்ப்பார்கள். சணற்காலில்லா மல் அதற்கடுத்த வம்பில் என்ற ஊர் சாஸ்திரி ஒருவன் தன் தலை யின்மேல் மடிசஞ்சி வைத்து வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும்
தாயு:-ஐயா! உங்களைத் தான் கூப்பிடுகிறேன்.சணற்கால் சமாசாரம் ஏதாவது தெரியுமா?
வம்பில் சாஸ்திரி:- என்ன சமாசாரம்! இன்று மத்தியானம் அங்கு சாப்பிட்டு விட்டுத் தான் புறப்பட்டேன்.
தாயு:- ஊரில் ஒன்றும் விசேஷமில்லையே, மகாதேவரகத்து சங்கதி ஏதாவது தெரியுமா?
சாஸ்திரி:- அவரகத்திற்கு அடுத்த அகத்திற்றான் நான் சாப்பிட்டேன்.
தாயு:- அவரகத்தில் எல்லாரும் செளக்கியமா?
சாஸ்திரி:- ஒன்றும் பிசகில்லை. ஏதோ 4,5-நாளாக அவரு க்கு உடம்பு சௌக்கியமில்லை என்று கேள்வி. ஆனால் ஒன்றும் அப்படி பயப்படும் படியாக வில்லை.
தாயு:- அப்படிச் சொல்லுங்கள்! நீங்கள் மகாராஜராக வாழ வேண்டும். அடா குழந்தாய் நீ அழவேண்டாம். பயமில்லை. என் மங்கலியப் பெண்டுகாள்! குழந்தையைக் காப்பாற்றுங்கள். வெங் கடாசலபதி! உமக்கு அடுத்த புரட்டாசி சனிக்கிழமை ஒருபடி நெய் வைத்து தீபம் ஏற்றுகின்றேன்.
தீனதயாளு :- பயமொன்றுமில்லையே?
சாஸ்திரி:- ஒன்றுமில்லை, பயப்பட வேண்டாம். நான் உங் களைச் சிறு குழந்தையாயிருக்கும் போது பார்த்தது. இப்பொழுது அடையாளம் தெரியவில்லை. நீங்கள் நமது சீமையிலிருந்ததே யில்லை. சர்க்கார் உத்தியோகம் என்றால் இலேசா?
தீனதயாளு :- ஆம். எங்கு நமக்கு இரண்டு காசு வருமோ அந்த இடத்தில் தானே யிருக்க வேண்டும். நல்லது நாழிகையாகிறது, ஓட்டப்பா வண்டியை.
சாஸ்திரி:- – நல்லது, போய் வாருங்கள்: உங்களுக்கு ஒன்றும் குறைவு வராது.
அம்மாதிரி நடுவழியில் ஆசுவாஷிக்கப்பட்டு தீனதயாளுவும் தாயுவும் அதுவரையிலடைந்திருந்த விசாரம் ஒருவாறு நீங்கினவர் களாய் வண்டியை சணற்காலுக்கு வேகமாய் நடத்தினார்கள்.
தாயு:- இன்னும் பயமில்லாமலிருக்கும் பட்சத்தில் ஏன் தம்பி தந்தியடித்தான்.
தீனதயாளு :- இன்னும் 4 நாழிகை வழிதானிருக்கிறது. விசா ரப்படுவதில் இலாபமில்லை. ஈசனிருக்கிறார். அவர் திருவுள்ளப் படி நடந்தே தீரும்.
தாயு:- பயப்படாதே. கருட தரிசனமாகிறது. ஆண்டவன் நம்மைக் காப்பாற்றுவார்.
இம்மாதிரி சகுனங்களைப் பார்த்துக் கொண்டும், அநேக குடும்ப சங்கதிகளைப்பற்றிப் பேசிக் கொண்டும், சூரியாஸ்தமத்திற்கு இரண்டு நாழிகையிருக்கும் வேளையில் இவர்கள் சணற்கால் வந்து சேர்ந்து, அங்கு வீதியிலிருந்த இரண்டொரு பந்துக்கள் பயமில்லை என்று சொல்லச் சந்தோஷத்துடன் அவர்களால் தொடரப்பட்டு வீடு வந்து சேர்ந்தார்கள்.
– தொடரும்…
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
– தீனதயாளு (நாவல்), முதற் பதிப்பு: 1902, ஐந்தாம் பதிப்பு: 1922, சுதேசமித்திரன் ஆபீஸ்.