(1902ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15
13. தீனதயாளுவின் வறுமை
“நெருப்பினுட்டுஞ்சலு மாகு நிரப்பினுள்
யாதொன்றுங் கண்பாடரிது.”
என்று நாயனார் பாடிய குறள் யாரிடம் உண்மையாக விருந்த தென்றால் தீனதயாளுவினிடந்தான். தன்னிடம் ஒரு நிமிஷமாவது ஒட்டாமல் எப்பொழுதும் குற்றமும் குறைவுமே சொல்லிக் கொண்டிருந்த காந்தியையும் சங்குவையும் தன்னைவிட்டுப் பிரித்து தனது பிதா சம்பாதித்த பொருளில் ஒன்றுவிடாமல் எல்லாவற்றையும் அவர்களுக்கே கொடுத்து தீனதயாளு அவர்களை சணற்காலுக் கனுப்பினான். மாந்தி எக்காலத்திலும் தீன தயாளுவிடம் ஒட்டிக்கொண்டு அவன் படும் கஷ்டத்தைப் பார்த்து சிறு பெண் ணானாலும் பரிதவித்தவளாகையால் அவள் தன்னைவிட்டுப் போகும் படி நேரிட்டதில் அவனுக்கு வெகு வருத்தம். காந்தி தன் பெண் தன்னுடனிருக்கவேண்டும் என்று பிடிவாதமாக அவளை அழைத் துப் போய்விட்டாள். என்னவாயிருந்த போதிலும் மாந்தி தனது புருஷனுடன் போயிருக்க வேண்டியவளாகையால் சொற்பகாலங் தான் காந்தியினிடமிருப்பாள் என்றும் அதன் பின்பு அவள் புருஷனுடனிருக்குங் காலத்தில் தானடிக்கடி அழைத்து அவளுக் குச் செய்யவேண்டியதைச் செய்யலாம் என்றும் ஒருவாறு தனது மனத்தை தீனதயாளு தேறுதலை செய்துகொண்டான். தனது தந்தையின் ஞாபகம் தனக்கிருக்கும்படி அவர் கையாண்டபொருள் ஏதாவதொன்று தனக்கு வெகுமதி கொடுப்பதாக எண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தனது சிறுதாயாரை வேண்டினான். அப்படியே ஆகட்டும் என்று அவ்வம்மணி சொல்லிப்போய் ஒன்றாவது அனுப்பவேயில்லை. ஐயோ! அவர் கையாண்டபொருளைக் கண்டு தானா களிக்கவேண்டும்! அவர்கள் ஞாபகம் என்னைவிட்டு நீங்குமா! இவ்வண்ணம் பைத்தியக்காரத்தனமாகக் கேட்டோமே! என்று ஒருவேளை தீனதயாளு தன்னைத்தானே நொந்துகொள்வான்.எவ்வளவோ அன்பு மகாதேவர் தனது காலத்தில் தீனதயாளுவிடம் வைத்திருந்தார் என்பது எல்லாருக்கும் தெரிந்தவிஷயமாக விருந் தும் அவர் பொருளில் ஒருதூசுகூட தீனதயாளுவுக்குக் காந்தியும் சங்குவும் காட்டவேயில்லை. அவனாகவே எவ்வளவோ எடுத்துக் கொண்டிருந்தால் ஏன் எடுத்துக்கொண்டாய் என்று கேட்பாரே யில்லை. ஆனாலவன் அப்படிச் செய்யப்பட்டவனல்லன். பிறந்த மேனியாய் மிகுந்தான். இவ்வளவுடனிருந்தால் பாக்கியமென்றே சொல்லலாம். இது கூட இல்லாமல் கடனும் குடும்பபாரமுமல்ல வோ அவனை மூடிக்கொண்டு வருத்தப்படுத்தின!
பாகமேற்படுத்திக் காந்தியை சணற்காலுக் கனுப்பியபின் தீனதயாளுவுக்கு மிகுந்தது தனது பெருங் குடும்பமும் 2000-ரூபா கடனுந்தான். இக்கடனை அடைக்க அவனுக்குத் தன்னைத்தவிர வேறு முதலேயில்லை. அவனுக்கு உத்தியோகத்திலிருந்து கிடைத்த சம்பளமோ புன்னையில் காலக்ஷேபத்துக்கே பற்றுமோ பற்றாதோ வென்றிருந்தது. என்ன செய்வான்! அவன் கொள்கை யோ பெரும்பாலும் ஜனங்களுடைய கொள்கைபோலப் பணம் சம் பாதித்து மிகுத்துவைக்க வேண்டும் என்பதன்று. வயிறு பசிக் காமல் கஞ்சியோ கூழோ குடித்து குழந்தைகளுக்கு தகுந்த படிப் புப் போட்டுவைத்து அவர்களை ஆட்களாக்கிச் சம்பாதிக்க விட்டு விடவேண்டும் என்பதாம். அதற்கு யாதொரு குறைவுமின்றி ஈசன் நமக்குச் செலவுக்குக் கொடுக்கவேண்டுமே என்று இரவும் பகலும் வருத்தப்படுவான். இவ்வுலகத்தில் 4 பெயர்கள் தனவான்களிருந் தால் 96-பெயர்கள் தினம் கூலிதேடிப் புசிப்பவர்களாயிருக்கின்றார்கள். ஆகையால் அதிக ஜனாசமூகத்தில் சேர்ந்திருப்பதால் தானும் ஒரு ஏழையென்றும் ஏதோ ஈசன் அருளால் தினக் கூலிக்குச் சரியாகத் தனக்கு மாசக்கூலியாவது அவர் அளித்தாரே என்றும் சந்தோஷப்பட்டவனாக இருந்தானே யன்றி தன் மனத்துள் தனது வறுமைக்கு ஒரு நிமிஷமாவது அவன் வருத்தமே படவில்லை. ஆனால் தான் தனது உத்தியோகமுறைமையில் ஏணிவாளனிட மிருந்தபடியால் அந்தப் பிரபு தனக்கு அச் சம்பளத்துக் காவது குறைவு வைக்காமல் நடத்தவேண்டுமே! அதுவும் குறைந்து விட்டால் என்ன செய்கின்றது என்று மட்டும் சிற்சில வேளைகளில் வருத்தமடைவான். நாமாய்ச் செய்து கொள்வதொன்றுமில்லை. எல்லாம் ஈசன் செயல். அவர் திருவுள மிருந்தால் நமக்கு ஒருவிதக் குறைவும் வராது என்று தேர்ச்சி செய்துகொள்வான். கடன் எப்படித் தீரும், அதற்கு வழி என்ன, மாதச்சம்பளம் சாப்பாட்டுக்குப் போதுமோ போதாதோ என்றி ருக்க கடன் அடைவது எவ்வாறு; அவன் பல பெயர்களிடம் கைம் மாற்றாக வட்டியின்ற பெருந்தொகைகள் வாங்கியிருந்தான். அவர் களிடம் அதிக காலம் நிறுத்திவைக்க அவனுக்கு மனமில்லாமல் மறுபடியும் தனது பந்துக்களாகிய சில தனிகர்களை தனக்கு ஒத் தாசை செய்யும்படி வேண்டாத வண்ணம் வேண்டிக்கேட்டான். ஒருவராவது உபகாரம் பண்ணவில்லை. அப்பொழுதுதா னவனுக்கு இவ்வுலகத்தின் உண்மை தெரியவந்தது. அதுவரையில் எல் லோரும் தன்னைப்போலவே பெரும் எண்ணமுள்ளவர் என்றெண்ணி யிருந்தான். அதிகமாகப் பண விஷயமாய் அவர்களிடம் பழகப் பழக எல்லாரும் பொய்சொல்லிப் பணமில்லை என்று பலவித வீண் காரணங்கள் எடுத்துரைத்து அவனை அனுப்பிவிட்டார்கள். அதே பந்துக்கள் எவனாவது ஈடுவைத்து கடன் கேட்கவந்தால் அவன் கேட்குமுன் பொருள் கொடுக்க ஆரம்பித்தார்கள். தீனதயாளுவுக்குத் தனது வறுமையின் கொடுமை அப்பொழுதுதான் விளங்கி அவன் மனத்தை வருத்திற்று. அவன் அத்தை முதலிய பந்துக் கள் அவன் யாரிடமாவது பணங்கேட்டு அவனில்லை என்றுவிட் டான் என்று திரும்பி வரும்பொழுது தமது பேதமையால் “அந்த சணற்கால் வீட்டில் பாதியிருந்தால் பணமில்லை என்று அவன் சொல்லுவானா” என்று கேட்பார்கள். அப்பந்துக்கள் சகஜமாகக் கேட்டபோதிலும் அது தீனதயாளுவின் மனத்தை வருத்தும். அதுவரையில் அவன் குடும்பத்தில் அதிகச் செலவில்லை. அதிகச் செலவெல்லாம் பாகம் ஏற்பட்டதின்மேல் நடக்கவேண்டிய செலவு களாயிருந்தன. அவனுடைய இரண்டு ஆண்குழந்தைகள் பூணூ லுக்குக் காத்திருந்தார்கள். இரண்டு பெண் குழந்தைகள் விவாகத் துக்கு என்று நின்றிருந்தார்கள். முன்னமே இவனுக்கு 2000ரூபா கடன். இனி நடக்கவேண்டிய செலவோ வருஷம் ஒன்றுக்கு ஒரு ஆயிரமாவது கையில் மிகுந்திருந்தாற்றான் சரிவர நடக்கமுடியும். அவன் குஞ்சு குழந்தைகளோ உணவு என்பதைத் தவிர வேறு ஒருவிதச் செல்வமு மில்லாமலிருந்தன. ஆண் குழந்தைகளுக்குச் சம்பளம் சரிவரக் கொடுத்து பள்ளிக்கனுப்புவான். பெண் குழந் தைகளும் ஆண்குழந்தைகளைப் போலவே படிக்கவேண்டும், அவர் களுக்கும் ஈசன் புத்தியைக் கொடுத்திருக்கின்றார், ஆகையால் படிப் பால் அதைச் சீர்திருத்தாமல் விடுவது பாவம் என்பது அவன் கொள்கை. ஆகையால் அவர்களின் படிப்புக்காக வீட்டில் ஒரு உபாத்தியாயர் ஏற்படுத்தி அவருக்கு மாதம் 5 ரூபா சம்பளம் கொடு த்துவந்தான். தனது கஷ்டம் என்னவாயிருந்தபோதிலும் சம் பளம் வந்த முதல் நாள் சணற்காலுக்குக் கிழவிகளின் போஷணைக் காக மாதம் 7 ரூபா அனுப்பிவந்தான். அவர்களுக்கு அனுப்பு வதை நிறுத்தினால் ஈசன் தனது சம்பளத்தையும் நிறுத்திவிடுவார் என்பது அவனுடைய அந்தர்கதமான அபிப்பிராயம். ஏனெனில் தான் அவர்களைக் காப்பாற்றாவிடில் தன்னை ஈசன் எப்படிக் காப் பாற்றத் துணிவார் என்பான். அவன் மானி, என்றையத்தின மாவது நமது பணத்தை அவன் கொடுப்பானேயன்றி மோசம் செய்யான் என்பதாக அவனுடைய நண்பர்கள் அவனை ஒரு வார்த் தைகூடப் பணவிஷயமாகக் கேட்காமல் விட்டுவிட்டார்கள்.
இவ்வாறவன் அவஸ்தைப்படும் பொழுதெல்லாம் அவனுடன் கூட நின்று பரிதபித்தவர்கள் தாயுவும் அவன் மனைவியுமாகிய பனி மொழியாளுமாம். பனிமொழியாளும் தீனதயாளுவும் குழந்தைப் பருவம் முதல் ஒரே வீட்டில் விளையாடி வளர்ந்து அதன்பிறகு இல்வாழ்க்கையில் அமர்ந்தவர்கள். இவ்விருவருடைய தாம்பத்தி யம் வெகு சிறப்பானது, வறுமையொன்று நீங்கலாக அவ்விருவர் பாக்கியத்துக்கு ஒப்பான பாக்கியம் காண்பதரிது. அவ்வறுமையும் அவ்வம்மணியின் குணங்களை மேலெடுத்துக் காட்டிற்று. வறுமை என்பது மனைவியின் குணத்தை அளந்து கண்டுபிடிக்கும் ஓர் அளவு கோல் போலாம். தன் புருஷன் படும் சிரமமெல்லாம் தனது சிரம மாக எண்ணி வீட்டில் தீனதயாளு கொண்டுவந்து போடுவதைச் சந்தோஷமாகப் பெற்றுக்கொண்டு முதலில் குழந்தைகள் வயிறு வாடாமல் அமுதளித்து மிகுந்ததை புருஷனுக்கிட்டு தனக்கு இருக்குமோ இருக்காதோ இல்லையென்று வாய்திறவாமல் அவள் காலங்கழித்து வந்தாள். அவள் காலம் அதிகமாகக் குழந்தை களைப் பெற்று அவைகளைப் பாதுகாப்பதிலேயே கழிந்துகொண்டி ருந்தது. தாயுவினிடம் பனிமொழியாளுக்குத் தேவதா விசுவாஸம். தாயுவுமிவளை அருந்ததி என்று கருதி நடத்திவந்தாள். “தெய் வத்துக்குக் கண்ணில்லையா! நீயும் உன் குழந்தைகளும் இவ்வாறு வருந்தவேண்டுமா! இக்காலம் மாறாதா! பாலசந்திரனுக்குக் காது கூட குத்தவில்லையே! நல்ல சிவப்பில் ஒருசோடி கடுக்கன் போட்டால் அவன் முகம் சந்திரபிம்பம்போல் விளங்குமே! எத்தனை நாள் இந்த கஷ்டமிப்படியே யிருக்கும்! நேற்றையத்தினம் உத்தியோகமானவர் களுக் கெல்லாம் 200-300 வேலை யுயர்ந்ததே! அவன் அதிர்ஷ்ட மிப்படி யிருக்கவேண்டுமா!” என்று கண்ணீர் வடிப்பாள். அதற்கு பனிமொழியாள், “அம்மா வயிறு நிரம்பப் புசிக்கவேண்டும்; அரை நிரம்ப உடுக்கவேண்டும்; நகை யென்றால் நமது யஜமானுக்குப் பிடிக்காது, நகைக்குத்தான் எங்குபோகிறது. செலவு நடந்தால் பெரும்பாக்கியம்” என்பாள்.
பாகம் நடக்கும்முன் “நாம் குடும்பிகளாயிற்றே; பாதிவீடாவது தங்கவிடம் ஒன்று நமக்கு என்று வைத்துக் கொள்ளவேண்டாமா” என்று சொற்பம் குடும்பினி என்ற அதிகாரமுறைமையில் அவள் மெதுவாகத் தீன தயாளுவைக் கேட்டாள். அதற்கு அவன் “பைத் தியக்காரி! நம்மால் அவர்களுக்குக் குறைவு வந்தது என்பது வேண்டாம். சணற்கால் வீடு இருவருக்கு என்றிருந்தால் அவ்வீட்டின் விலை குறைவுபடும். ஒருவரும் வாங்கமாட்டார்கள். 5 காணி நில த்தைமட்டும் சங்கு வைத்துக் கொண்டு என்ன செய்வான். அப் பெரும் வீட்டை அவன் விற்று வேறொரு சிறு வீடு வாங்கிக் கொண்டு மிகுந்த பணத்தால் இன்னும் 5,6 – காணி நிலமாவது வாங்கிக் கொண்டாலல்லவோ அவன் காலம் நமது கையைப் பார்க்காமல் நடக்கும். தனியாகப் போனான் என்றாலும், நம் மிடம் ஒட்டாமலிருக்கிறான் என்றாலும், நம்மால் செய்யவேண் டியதை செய்து விட்டாலல்லவோ உலகம் நம்மை குற்றஞ் சொல்லாமலிருக்கும். நமது உண்மையான நிலைமையை யாரறிந் திருக்கிறார்கள்! நம்மிருவருக்கு மல்லவோ தெரியும். உலகத்தார் தீனதயாளுவுக் கென்ன அவன் உத்தியோகம் பண்ணுகின்றான்! இளையாளையும் அவள் குழந்தைகளையும் ஓட்டிவிட்டான் என்பார் கள். அப்படி யில்லாமல் நமது தந்தை சொத்தில் நாம் ஒரு தூசு கூட எடுக்காமல் எல்லாம் அவனுக்கே கொடுத்துவிட்டால் அப்பு றம் அவன் அதிர்ஷ்டம் உள்ளபடி நடக்கின்றது. நம்மை குற்றங் கூறுவதற்குப் பதிலாக உலகத்தார் புகழுவார்கள்,” என்றான். அத னுடன் பனிமொழியாள் ஒன்றும் ஆக்ஷேபிக்காமல் “தங்களுக்குத் தெரியாதென்று நான் ஒன்றும் சொல்லவில்லை. ஏதோ பெண் புத்தியால் சொல்லத் துணிந்தேன். தாங்கள் எடுத்துக் காட்டும் காரணங்கள் நன்றாக விருக்கின்றன. தங்களிஷ்டப்படி செய்ய யாதொரு தடையுமில்லை” என்று சொல்லி சந்தோஷமாக இருந்துவிட்டாள்.
புன்னையில் இக்குடும்பம் இப்படியாக விருந்தது. பனிமொழி யாள் நமது நோன்பு உண்மையென்ற பக்ஷத்தில் நம்மை என்றென் றைக்கும் ஈசன் கைவிடமாட்டார்! இக்காலம்.இப்படியேயிருக் காது! என்று தைரியத்துடன் வறுமையில் வருந்திக்கொண்டிருந் தும் சந்தோஷமாகவே யிருந்தாள். அப்படியே தீனதயாளுவும் தனக்கு எப்படியாவது நல்ல காலம் ஒருபொழுது வந்தே தீரும். நம்மிடம் அதிக அன்பில்லாத எணிவாளரே நம்மிடம் மனமிரங்கு வார் என்று நம்பி அக்காலத்தை எதிர்பார்த்தவனாகக் கஷ்டப்பட் டுக்கொண்டிருந்தான்.
14. சங்கு பலவிதமாகக் கேட்டது
“கடுஞ்சொல்லன் கண்ணில னாயி னெடுஞ்செல்வம்
நீடின்றி யாங்கே கெடும்.”
தீனதயாளு இவ்வண்ணம் புன்னையில் பெருந்துயரம் பட்டுக்கொண்டிருந்த காலங்களில் சணற்காலில் அவன் தம்பி சங்கு என்னவானான் என்பதைப்பற்றி விசாரிப்போம். அவனோ படிப்பில்லாதவனென்றும் மற்றவிஷயமாய் சகல துர்க்குணங்களோடும் கூடியவனென்றும் சொல்லியிருக்கின் றோம். அவன் வெகு புத்திமான் என்பதற்கு ஐயமேயில்லை! ஆனால் அவன் புத்தி அவ்வளவும் தீயவழியிற் சென்றதேயன்றி நல்ல வழியில் புகவில்லை. கையாந்தகரை தனது தாயைச்செய்த த மோசத்தை ஒரு நொடியிலவன் அறிந்துகொண்டான் என்றாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் ஏதோ கலியாணம் செய்து வைப்பதாகச் சொன்னானே, அதைப் பார்ப்போம் என்று வாய்திற வாமல் அதுவரையில் நடந்த மோசத்துக்கு மேல் அதிக நஷ்டம் வராமல் பார்த்துவந்தான். சங்கு வெகு உழைப்பாளி. சிறு பரு வத்தில் படிப்பில் கவனம் வைக்காமல் போனானேயன்றி படித்தி ருப்பானேயானால் அவன் தீனதயாளுவுக்கு மேலான புத்திமானாக விருப்பான். கண்ணைக்கெடுத்த தெய்வம் மதியைக் கொடுக்கும் என்றபடி அவன் படிப்புக்குறைவானது அவன் புத்தியை வியவ சாயத்தில் அதிகக் கூர்மையாகச் செய்தது. அவன் தொட்டநிலம் பொன்னாக விளைந்தது. தனது தாய் காந்தி, தங்கை மாந்தி, அவர்களுடன் வெகு க்ஷேமமாக அவன் சணற்காலில் வாழலானான். கையாந்தகரை தான் சொன்ன சொற்படி அவன் விவாகத்தை நட த்தி வைத்தான். பெண் 10-வயதுள்ள சிறு பெண். அவ்விவா கத்துக்கு மரியாதைப்படி தீனதயாளுவும் பனிமொழியாளும் வந்து 4-நாளிருந்து தம்பதிகளை ஆசிர்வதித்துச் சென்றார்கள்.
இவ்வாறு சங்கு கை தீனதயாளு கையைவிடப் பலவிதமாக ஓங் கிற்றென்றே சொல்ல வேண்டும். கடன் ஒரு தூசுகூட சங்குவுக் குக் கிடையாது. குடும்பமோ 4-பெயர்கள் அடங்கிய சிறு குடும் பம். கிராமவாசத்தில் அதிகச் செலவில்லை. கொல்லையில் கீரைப் பாத்தியும் கொட்டிலில் ஒரு எருமையுமிருந்து களஞ்சியத்தில் மாத மிருகல நெல்லுக்குக் குறையாமலிருந்தால் கிராமவாசிக்கு அதிகத் தேவை ஒன்று மில்லை. நகரவாசிகள் போல வண்ணான், அம்பட் டன், தயிர்க்காரி, பால்காரன், ஒட்டன், கூட்டுகிறவள், வெற்றிலைக் காரி, பூக்காரி,என்று மாதந்தோறும் ரூபா அவிழ்த்துக் கொடுக்க வேண்டாம். இவ்வளவு சுகமாய் தனது தம்பி யிருக்கின்றான் என் பதைக்கேட்டு தீனதயாளு அதிகச் சந்தோஷமடைந்தான். படிப் பில் ஒருவனிருந்தால் விவசாயத்தில் ஒருவனிருக்கவேண்டியது அவசியம்தானே. அதில் நற்காலமவனுக்கு வருமாயின் அது நமக்கும் நல்லது தானே என்று மனம் பூரித்து ஒருவாறு தனது வருத்தத்தையும் சங்கு க்ஷேமமாயிருக்கின்றானென்ற சந்தோஷத் தால் தீனதயாளு மறந்தான்.
கையாந்தகரையின் உண்மையான குணத்தை சங்கு அவனுக்கு எடுத்துக்காட்டி நீங்களிதுவரையில் பந்துவாகவிருந்து எங்களை முன்னுக்குக் கொண்டு வந்தது போதும்! எனது தமையனார் சிர மப்பட்டு சம்பாதித்த பணத்தை இவ்வண்ணம் நீங்கள் அழித்தீர் களே! அப்பாவங்கள் தங்களைச் சூழாமலிருக்க நீங்கள் தவம் புரியுங் கள்! என்று சொல்லி அவனை விலக்கினான். பாகம் பிரிந்த ஒரு வருஷகாலம் சங்கு குடித்தனம் பண்ணினதைப் பார்த்த எல்லாரும் அவனை மெச்சி மகாதேவர் பெயருக்கு ஒருவிதக் குறைவின்றி நடப் பான் என்று எண்ணினார்கள். அவ்வளவு தான் அவன் நற்காலம், என்று சொல்லவேண்டும்.
சணற்காலில் * அகம் படியார் ஜாதியைச் சேர்ந்த ஓர் சிறுமி வெகு பணக்காரியாக விருந்தாள். அவள் 7-வயதில் ஒரு பணக்கார னுடைய ஒரே குமாரனுக்கு வாழ்க்கைப்பட்டுக் குறைபட்டு கைம், பெண்ணானாள். பணத்தின் செருக்கால் அவள் அநேக சிறுவர்களை தனக்கிஷ்டமானபடி யெல்லாம் தன்னிடம் சேர்த்துக்கொண்டு உல் லாசமாக விருப்பாள். இவ்வக்கிரமங்கள் ரகசியமாக நடக்கும். ஏதாவது சொற்பம் வெளிக்கு வந்தால் பணத்தைக் கொடுத்து அடக்கி விடுவாள். ரகஸ்யம் ரகஸ்யம் என்று ஊராரெல்லாம் அவளைப்பற்றிப் பேசுவார்கள். பொழுது விடிந்தால் ஆற்றங்கரை சென்று அச்சிறுமி ஸ்நானம் அனுஷ்டானங்கள் எல்லாம் வெகு ஆசாரமாகப் பண்ணி வெண்பட்டு உடுத்துக்கொண்டு வெகு பக்தி யுடன் வேதியர்களையும் வணங்குவாள். பொழுது புகுந்தால் சிறு வர்கள் அவள் மனைக்குள் உல்லாசமாக விருப்பார்கள். சங்கு தனது இயற்கைக் குணம் போகாமல் முதலில் சொற்ப நாள் நல்லவன் என்று பெயரெடுத்து விட்டு அச்சிறுமி யின் வலையில் சிக்கிக் கொண்டான். அவளோ வெகு பெயர்களை வஞ்சித்தவள். சிறிதாவது படிப்பும் புத்தியுமில்லாத சங்குவை வஞ்சிக்க அவளுக்கு எத்தனை நாள் செல்லும்! அவள் பணக்காரி என்றோமே ஆகையால் அவளுக்குப் பணத்தாசையில்லை. புருஷவாஞ்சை மட்டுந் தான். அப்படி யிருந்தபோதிலும் அவளை நாடி நின்ற வாலிபர்கள் கூட்டத்தில் அவன் விழவே அவர்கள் மூலமாக பலவிதப் பணச்செலவுகள் சங்குவுக்கு நேரிட்டன.
காந்தி அவன் நடத்தை மாறியதைக்கண்டு கண்டிக்கலானாள். அவள் பேச்சை ஒரு பொருட்டாக அவன் லக்ஷியம் பண்ணவில்லை. மாந்திக்குத் தகுந்த வயது இதற்கு முன்னமே வந்துவிட்டபடியால் அவள் தனது புருஷன் வீடுபோய்ச் சேர்ந்தாள். சங்குவின் மனைவி வீடுவரக் காலம் சமீபித்ததாகக் காணப்படவில்லை. குலத்துக்கும் பெயருக்கும் கெடுதல் வரக்கூடாதென்று காந்தி சொல்லச் சொல்லச் சங்குவுக்கு ஆவேசம் அதிகமாகப் பொங்கிற்று. காந்தி ஏதாவது சொன்னால் சங்கு அவளை நிந்திப்பான். அப்பொழுது அவள் வாய்மூடாமல் கண்டித்து வரவே, அவளைக் கையை ஒ அடிக்கத் துணிந்தான். தனது வீட்டின் ஒரு மூலையில் ஜடாயுஸ், சம்பாதிபோல வயது முதிர்ந்தவளாக ஒண்டிக்கொண்டிருந்த ரண்டு கிழங்களையும் ஐப்பசி மாதம் அடை மழை காலம் பார்த்து வீட்டை விட்டுச் சங்கு ஓட்டினான். அவனுடைய சொந்தத்தாய் காந்தியே அவன் செய்த அக்கிரமங்களைச் சகிக்கமுடியாமல் நீ எக்கேடும் கெட்டுப்போ! என் வயிற்றில் நீ பிறந்த போதிலும் நீ என் பிள்ளையல்ல! தெரியாதவிதமாய் என் தீனதயாளுவை நான் வஞ்சித்தேன்! உன்னை நம்பி நான் வீண்பாவம் கட்டிக்கொண்டேன். திரும்பி நானவனிடம் சென்றால் என்னை அவன் கழுத்தைப்பிடித் துத் தள்ளமாட்டான். பனிமொழியாள் கையால் கஞ்சி குடித் தாலும் அது அமிருதத்துக்கு ஒப்பாம்! என்று வாய்விட்டுச் சங்கு விடம் சொல்லிவிட்டு புன்னைக்கோடி விட்டாள். அதுவும் ஒரு நற்காலமென்றே அக்கொடும்பாவி தன்னிடம் அபிமானம் வைத் திருந்த அச்சிறுமியை, வெட்கம் மானம் என்பவைகளை விட்டுத் தன் வீட்டுக்கே அழைத்து வந்து அவ்விடம் வசிக்கும்படி செய்தான். தனது தந்தை கட்டிய வீடு பெரிய வீடாகையால் அச்சிறுமி அதை விலைக்கு வாங்கினாற்போலும் ஒரு சாசனம் பண்ணிப் பதிந்து அம் மனையை அவள் சுவாதீனம் பண்ணினான். அதற்குப் பதிலாக அவள் சிறு மனை ஒன்றைத் தான் சொற்பத்தொகைக்கு வாங்கிக் கொள்வதுபோல் வாங்கி மிகுந்த பணத்துக்கு அவள் காணிக ளிரண்டையும் வாங்கிக்கொண்டான். அவன் செய்த காரியங்கள் ஒன்றாவது ஒருவருக்காவது பிடிக்கவேயில்லை. அச்சிறுமியு மது வரையில் ஏதோ மறைவாக விருந்தவள் அப்பொழுது பயிரங்கமாக தான் வாங்கிய வீடாகிய சங்குவின் வீட்டின் நடுவில் வசிக்கலானாள். பணத்தின் ஒத்தாசையால் அவள் சணற்காலில் தானும் ஒரு உத்தமி போல் வாழலானாள். உலகச்சொல்லும் மெய்யாயிற்றே:- “பணக் கார அவிசாரி பந்தியிலே; அதில்லாத அவிசாரி சந்தியிலே” ஆகா! எவ்வளவு உண்மை!!
இப்படிச் சங்குவின் நடத்தை மாறியது காந்தியாலும் மற்றவர் களாலும் தீனதயாளு கேள்வியுற்று விசனமடைந்து நமது குலத் தின் பெயரைக் கெடுத்தவனைப் பற்றி நாமினிச் சிந்திப்பதில் பிர யோசனமில்லை. நாம் புத்தி சொன்னாலும் அது பயன்படாது, என்று ஒதுங்கிவிட்டான். பெற்ற மனம் பித்து என்ற பழமொழிப் படி காந்தி அடிக்கடி தீனதயாளுவை வேண்டுவாள். இரண்டொரு முறை தீனதயாளு ஒரு அத்தியாயம் கடிதமெழுதிப் பார்த்தான். அக்கடிதங்களுக் கெல்லாம் சங்கு அப்படித்தான் ஒருபொ ழுதும் நடக்கப்பட்டவனே அல்லனென்றும், வீண் அபவாதம் என்றும் அதைத் தன் தமையன் நம்பக்கூடாதென்றும் வெகு வணக்கமாக மறுமொழி எழுதினான்.சங்குவின் நடத்தை மாறு படவே அதனுடன் பொய், சூது முதலிய துர்க்குணங்கள் யாவும் அதிகமாக அவனிடம் வந்துவிட்டன. அப்படி அவன் கெட்டுப் போன பிறகு அவனுக்குப் புத்தியுரைப்பதும் பிசகு என்று தீன தயாளு ஒதுங்கிவிட்டான்.
இவ்வளவுடன் இக்காரியம் நிற்குமா. வீடு விற்றதால் சங்கு வுக்கு முதல் முதலில் ஒருவித நஷ்டமுமில்லை. இவன் பிறகு சிறுகச் சிறுகத் தனது நெறிநீங்கிய தோழர்கள் புத்தியின்படி, தனது காணி முதலியவைகளை விற்றான். சணற்காலிலிருந்து இரவு தப்பாமல் தனது தோழர்களுடன் புறப்பட்டு சங்கு பெருஞ் சீரக வல்லிக்கு நாடகம் பார்க்கப்போவான். அங்கு கண்டவைகளெல் லாம் வாங்குவான். வரும்பொழுது தனது அன்பான சிறுமிக்கு இரண்டொரு ரூபாவுக்கு நெய்யில் சுட்ட பணியாரங்கள் வாங்கி வருவான். இவ்வாறாக ஒருவருக்கும் அஞ்சாமல் சங்கு தனது போக்குப்படி எல்லாவித அக்கிரமங்கள் செய்து பொருளெல்லா மிழந்து தனது கேத்தையும் பலவித நோய்களுக்கு உள்ளாக்கி உடம்பு கருத்துத் துரும்பாய் வாடி வதங்கினான். அவ்வளவு அவஸ்தைக்குப் பிறகு தான் சங்குவுக்குத் தனது உண்மையான ஸ்திதி வெளிப்பட்டது. தன் வீடும் பூமியும் போய் ஒரு சிறுவீடும் 1-காணி நிலமும் அப்பொழுது அவ்வளவையாவது தன் வசத்தி லிருந்து நீங்கிப் போகாமல் வைத்துக் கொண்டால் பிழைக்கலாம் என்று நினைத்து தனது பிழையைப் பொறுக்கும்படி காந்திக்கும் தீனதயாளுக்கும் எழுதினான். அவர்களிவனை மதித்து பதில்கூட போடவில்லை. தீனதயாளுமட்டும் வெகு ரகஸ்யமாக வேங்கையூர் வைத்தியருக்கு ஒரு கடிதம் எழுதி சங்குவின் தேகத்தைப் பிணியி லிருந்து நீக்கி வைக்கும்படிக்கும் அதற்கு வேண்டிய செலவு தான் கொடுப்பதாகவும் தெரிவித்தான். அவரும் தீனதயாளுவின் கம்பீர குணத்துக்கு வியப்புற்றுச் சங்குவை அழைத்து வைத்தியம் முதலி யவை பண்ணி ஒருவாறு உருவாக்கிவிட்டார்.
சங்குவை அந்த ஸ்திதிக்கு கொண்டுவந்து விட்ட அச்சிறு மியே அவன் தேகம் மெலிந்ததும் செங்குழம்பு பிழிபட்ட பஞ்சை சுழற்றி எறிவதுபோல் சங்குவை தன்னிட மிருந்து அகற்றிவிட் டாள். கேட்பதற்குக் காது கூசுகின்றவும் பாவமுமான இவ்விரு வர்கள் சரித்திரத்தை யினி அதிகமாகச் சொல்வதில் என்ன பிரயோ ஜனம். சொற்பம் தனது தேகம் தேறியதும், சங்கு வெட்கின முகத்துடன் புன்னை வந்து சேர்ந்தான். அவன் சங்குவென்று அவனுடைய அடையாளம் ஒருவருக்காவது தெரியவில்லை. எப்பொ ழுதும் இரக்கமுள்ள தீனதயாளு தனது வீட்டுக்குள் நுழைந்து தனது தம்பி அவ்வாறு மெய் ஒடுங்கி வருவதைக் கண்டு மனம் வாடிக் கண்ணீர் வடித்தான்.தாயுமாத்திரம் தீனதயாளுவைத் தனிமையில் அழைத்து “அப்பா, சங்குவை நீ சேர்க்காதே. அவனுக்கு ஏதாவது பொருளுதவி செய்வதாக விருந்தால் அதைச் செய்து அவனை ஊருக்கனுப்பிவிடு. ஏனெனில் அவன் நடத்தை என்றைக்கு அழிந்ததோ அன்றைக்கே அவன் மரியாதை யிழந்த வன். உன் சமீபத்தில் மட்டு மவனிருந்தால் உன் பெயருக்கும் புகழுக்கும் அழுக்குண்டாகும்” என்றாள். தீனதயாளு சங்குவைப் பார்த்து “அடா சங்கு! நீ செய்த அவ்வளவு குற்றங்களையும் நான் எப்படியோ சகித்துக்கொண்டேன். அக்கிழங்களோ இன்றைக்கோ நாளைக்கோ என்று தங்கள் உயிர்களைத் தங்களுடைய உயிர்களாக எண்ணாமல் பழுத்துத் தொங்கும் பழங்கள்போல் கீழே விழக்காத் துக்கொண்டிருக்கின்றன. அவைகளை வீட்டை விட்டு ஒட்டினாயே அப்பாவம் பொல்லாததாயிற்றே! நான் என் நண்பனாகிய கண்ணுச் சாமிக்கு எழுதாமலிருந்தால் அக்கிழவிகள் கதி என்னவாக விருக் கும், எனக்காக அவனல்லவா அவ்விருவருக்கும் வீடு கொடுத்து ரக்ஷித்து வருகின்றான்” என்றான்.
அதன் பிறகு தாயு சொன்ன சொல்லை நன்றாக ஆலோசித்துப் பார்த்து தீனதயாளு தானும் புன்னையை விட்டுப் புதுவேர்க்காட் டுக்கு பெரிய உத்தியோகத்தில் மாற்றலாய் போகும்படி உத்தரவு வந்திருந்தபடியால் சங்குவை நோக்கி “அப்பா! நான் இன்னும் ஒரு வாரத்தில் இவ்விடத்திலிருந்து 20 காதவழிக்கப்பாலுள்ள புது வேர்க்காடு போகின்றேன். அங்கு உன்னுடம்புடன் நீ வரு வது நியாயமன்று. நீ நடத்திய மரியாதைக்கு உன்னுடன் உன் கனுப்புவதும் நியாயமே தாயாரை நான் மறுபடி சணற்காலுக் யில்லை. அப்படி யிருந்தபோதிலும் இனி நீ பிழைக்க உன் தேகத்தை ஒருவர் யாராவது உன் கூடவே யிருந்து பார்க்க வேண் டியது அவசியமாகையால் காந்தியையே உன்னுடன் கூட அனுப்பு கின்றேன். உங்கள் செலவுக்கு மாதம் 10- ருபா அனுப்புகிறேன். இதை வைத்துக்கொண்டு நிலத்தில் வரும் வருமானத்தையும் வைத் துக்கொண்டு இனியாவது மானமாகப் பிழைப்பாயானால் இன்னு மொரு தடவை நீ வந்தால் நானுன்னை என் பந்துவாக வெண்ணி உன்னிடம் பேசுவேன். இல்லாவிடில் நீ வேறு நான் வேறு. கொஞ்சமேனும் உன்னைக் கண்டு மனமிரங்கவே மாட்டேன். காந்தி யிடம் நான் சொல்லியிருக்கின்றேன். எந்த நிமிஷம் நீ அவளை மரி யாதைக் குறைவாக நடத்த எத்தனிக்கிறாயோ அந்த நிமிஷம் அவள் உன்னை உதறிவிட்டு என்னிடம் வந்துவிடுவாள்.அப்புறம் உன் முகத்தில் ஒருபொழுதும் விழிக்கவே மாட்டாள்” என்றான்.
காந்தி முற்காலத்தில் இருந்தபடி யில்லாமல் அப்பொழுது தீனதயாளுவினிடம் வெகு அன்பாயும் அவன்தான் மரியாதையுள்ள தன் பிள்ளையென்றும் எண்ணி ஒட்டிக்கொண்டிருந்தாள்.தீன தயாளுவுடன் கூட அவன் காடு சென்றாலும் சந்தோஷமாய் அவன் குழந்தைகளை ஆதரித்துக்கொண்டு செல்லப்பட்டவளாக இருந் தாள். பொருளாசை யெல்லாம் அவளுக்கு அடங்கிவிட்டது. எங்கிருந்தாவது தனக்கு எதாவது தனம் கிடைத்திருக்கு மாயின் அத்தனத்தை தீனதயாளுவிடம் இதோ எடுத்துக்கொள் என்று ஒரு தூசு ஒளியாமல் அவள் கொடுத்திருப்பாள். அப்படிப்பட்ட வளை சணற்காலுக்குப்போ என்றால் அவளுக்கு எவ்வாறு மனம் வரும். சங்கு என்பிள்ளை யல்லன். சணற்காலும் எனக்கினி கிராமமல்ல! அது சுடுகாடு, என்னைக் கைவிடலமா என்று அவள் தீனதயாளுவிடம் வெகு பரிதாபமாகச் சொல்லி, பனி மொழியாளி டம் சென்று “நீ எங்குப்போனாலும் நானுன்னுடன், வருவேன்; உன் யஜமானிடம் சொல்” என்றாள். தீனதயாளு காந்தியை நோக்கி வெகு தர்மமாக பல புத்திகள் சொல்லித் தான் ஒருபொழுதும் மனப்பூர்வமாகத் தனது சிறு தாயார் தன்னை விட்டுப்போகக் கருதி அவ்வேற்பாடு செய்தவனல்ல னென்றும், சங்குவை நல் வழிக்குக் கொண்டுவர வேண்டியே அவளை மறுபடியும் சணற்கா லுக்கு அனுப்பி அவன் உடம்பும் தேறி அவன் மனைவியும் வீடு வந்த பிறகு ஒரு நிமிஷமாவது தாமதிக்காமல் காந்தி தன்னிடம் வந்து விடலாம என்று நற்புத்தி சொல்லி அவளையும் சங்குவையும் சணற்காலுக் கனுப்பினான். மாதம மாதம் கிழங்களுக்கு 7-ரூபா அனுப்புவதுடன் இவர்களுக்கு 10-ரூபா அனுப்புவதாக ஒப்புக் கொண்டான். முற்காலத்தில் பணம் போதாதென்று எப்பொழுது பிடிவாதம் பண்ணி அதிக ரூபா மேன்மேலும் அபகரித்த அதே காந்தி “அப்பா, இவ்வளவு கடனும், செலவும், குழந்தைகளும் வைத்துக்கொண்டு நீ எப்படி எங்களுக்கு 10-ரூபா அனுப்புவாய். முதல் முதல் 10-ரூபா அனுப்பு. அதை நான எத்தனை நாள் வைத் துக்கொண்டு செலவிடலாமோ அத்தனை நாள் செலவிட்டுப் பார்க்கின்றேன். மாதம் 6- ரூபா யிருந்தால் போதும்” என்று சொல்லலானாள்.
அவ்வாறு ஒருவித ஏற்பாடு செய்துவிட்டு தீனதயாளு தனது குடும்பசகிதம் புதுவேர்க்காட்டுக்கு பிரயாணப்பட வேண்டிய முயற்சிகளைச் செய்யலானான். அந்தக் காரணத்தை அடுத்த அத்தியாயத்தில் விசாரிப்போம்.
15. தெய்வம் கண்திறந்தது
“தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார்
தோன்றமித் றோன்றாமை நன்று.”
தீனதயாளுவுக்கு புதுவேர்க்காட்டில் பெரிய உத்தியோகமாவதென்ன. இதைச் சற்று விசாரிப்போம்.
பலவிதமாய் ஏணிவாளன் தீனதயாளுவைப் பரி சோதித்துப் பார்த்தான். தனது சுறுசுறுப்பா லும் வித்தையின் பலத்தாலும் அவ்வளவுக்கும் தீனதயாளு ஈடுகொடுத்து வந்தான். புன்னை நகரிலிருந்து 200-மைல் தூரத்தில் தெலுங்கு தேசத்தில் புது வேர்க்காடு என்ற பட்டணமொனறுண்டு, அது எப்பொழும் வெகு செழிப்பாக விருந்தபட்டணம். ஏதோ காரணத்தால் அந்தத் தேசத்தில் க்ஷாமம் வந்தது. ஏழை ஜனங்கள் பெரும்பாலும் பிழைக்க வழியில்லாமல் ஓடத் தலைப்பட்டார்கள். பசியின் கொடுமையால் பலர் மாண்டார்கள். இவ்வித கஷ்டங்கள் அங்கு உண்டாகவே ராஜாங்கத்தார் மனமிரங்கி எழை ஜனங்களுக்குப் பஞ் சம் தெளிகின்ற வரையில் கஞ்சி வார்க்கத் தர்மசத்திரம் ஏற்படுத்தி னார்கள். அதில் அமர்ந்த உத்தியோகஸ்தர்கள் தங்கள் சொந்த க்ஷேமத்தையே பெரியதாக வெண்ணி ராஜாங்கத்தாரிட மிரு ந்து கிடைக்கும் பணத்தில் 4-ல் ஒன்றை கஞ்சிக்குச் செலவிட்டு மிகுந்த பணத்தை எடுத்துக்கொண்டு தங்கள் மனைவிகளுக்கு நகை பண்ணுவதிலும் காணி பூமி வாங்குவதிலும் செலவிட்டார்கள். இவ்வநியாயங்கள் எத்தனை நாள் நடக்கும்! ராஜாங்கத்தார் இவ்விஷயமாய்விசாரணை பண்ணி அப்பாதகர்களைத் தண்டித்தார்கள். அன்றியும் கஞ்சித்தொட்டி தர்மத்தைச் சரியாக வைக்க வெகு யோக்கியனான உத்தியோகஸ்தன் ஒருவன் வேண்டு மென்று புன்னைக் கெழுத, புன்னையிலிருந்த பெரிய உத்தியோகஸ் தர்கள் தினதயாளுதான் சரி என்று அவனைக் குறிப்பாக எடுத்து அவ்வுத்தியோகத்திற்கு சிபார்சு பண்ணியனுப்பினார்கள்.
இவ்வதிகாரத்தில் தீனதயாளுவுக்கும் மாதம் 300 ரூபா சம்பளம். இதுவும் நமது நற்காலத்துக்கு ஒரு அடையாளம். ஏழைகளை நம்மக்கட்போல் காப்பாற்றுவதால் நமக்கு ஈசன் அருளுமுண் டாகும் என்று தீனதயாளு கருகி வெகு சந்தோஷமாக தனது குடும்ப சகிதம் புதுவேர்க்காடு சென்றான், அவன் வெகு பரிசுத் தன். பூததயை அதிகமாகவுள்ளவன். அவன் அந்தணன் என்றா லும் பள்ளுபறை முதலிய எல்லா ஜாதியாரிடமும் இரக்கமு மன்பு முள்ளவன். தான் ஒப்புக் கொண்ட காரியத்தை வெகு தர்மகாரிய மாக வெண்ணி அந்த விஷயமாகச் செலவுக்கு வரும் பொருளை ஒரு தூசுகூட ஒளியாமலும் வீண் செலவு செய்யாமலும் சரியாய்ச் செல விட்டும் பட்சபாதமின்றியும் வித்தியாசமின்றியும் எல்லா ஏழை களுக்கும் சரியாகக் கஞ்சி வார்த்து அவர்கள் பசியை ஆற்றி அவர் களால் புகழப்பட்டான். எல்லா ஏழைகளுமவனைத் தெய்வமென்றே எண்ணினார்கள். சந்தோஷத்துடன அவரவர்களுடைய வேண்டு தலை விசாரிக்கும் இவ்வுத்தமனைக் கண்டால் எல்லா ஏழை ஜனங் களும் தங்கள் தந்தை தாய்களைக் கண்டது போல உல்லாசத்துடன் பேசுரர்கள். ராஜாங்கத்திலுள்ள மேலதிகாரிகள், அவன் செய்த ஏற்பாடுகளையும், அவன் வைத்த கணக்குகளின் அழகையும், எல்லா ஜனங்களும் ஒரே விதமாய் அவனைப் புகழும் புகழையும் பார்த்தும் கேட்டும் அவனிடம் ஆச்சரியமடைந்து இவ்வளவு யோக்கியதையும் சனமுமுள்ள உத்தம உத்தியோகஸ்தன் கிருக்குங் கச்சேரியில் ஏணிவாளனிடம் சிக்கிக் கொண்டிருந்ததை நினைத்து வருத்தப்பட்டார்கள்.
தீனதயாளுவின் குணத்தின் மகிமையோ! மற்ற எந்தக் கார ணமோ! அவன் புதுவேர்க்காடு சென்ற 2 வருஷத்துக்குள் பஞ்சம் முற்றிலும் தெளிந்து விட்டது. ஸப்த மேகங்களும் கூடி வருஷிப் பனபோல் மிக்க மழை பொழிந்து நாடெங்கும் செழிக்கலாயிற்று. ஏழை ஜனங்களும் கஞ்சித்தொட்டி ஏற்படுத்தப்பட்டிருந்த த்தை விட்டுக் கலைந்து தங்கள் தங்கள் ஊருக்குச் சென்று கிருஷி முதலிய தொழில்களில் அமர்ந்தார்கள். பஞ்சும் தெளிந்ததும் ராஜாங்கத்தார் தீன தயாளுவை கொச்சி சமஸ்தானத்துப் பேஷ்கார ராகப் பண்ணி மாதம் 1000 ரூபா சம்பளம் ஏற்படுத்தி யனுப்பினார் கள். இனி அவன் பாக்கியத்திற்குச் சொல்லவும் வேண்டுமா. நற் பிறப்பில் பிறந்து வித்தையின் அவதாரமாகிய தீனதாயளு தனது மேலான குணங்களால் எல்லாருக்கும் நல்லவனாகப் பெயரெடுத்தான். தனது பந்துக்களை ஒருவர் விடாமல் தன்னிடம் சேர்த்து வைத்துத் தனது காம்பீரியத்தால் அவர்கள் மனம் வருந்தாமல் நடந்தான். முதலில் சொற்பம் சிரமப்பட்டு பொருள் சேர்த்து தனது தந்தை மகாதேவர் போன காலத்தில் தனது பிதுரார்ஜிதம் என்று ஏற்பட்டிருந்த நிலங்களையும் பூமிகளையும் மீட்டுக்கொண்டான். தனது தம்பி யிழந்த வீட்டையும் வாங்கினான். அதில் சங்குவையும் அவன் மனைவியையு மிருத்தி வியசாயம் பார்க்க ஏற்பாடு செய்து, காந்தி, மற்றக் கிழவிகள் எல்லாரையும் தன்னிடம் தரிவித்துக் கொண்டான். சங்குவுக்கும் நற்புத்தி வந்து விட்டபடியால் தன் தமையனிடம் அடங்கி அவனுக்குக் கீழ்படிந்து தனது துர்நடத்தைகளைவிட்டு முற்றிலும் நீங்கினவனாய் நல்வழியில் நடந்தான். மாந்திக்கு ஒரு விதக் குறைவின்றி நடந்து அவள் புருஷனுக்கும் பெரிய வேலைகளும் பண்ணிக் கொடுத்தான். தீனதயாளுவின் குழந்தைகளெல்லாம் தங்கள் சிறுமையை விட்டு நீங்கிக் கவலையற்றுப் படித்து வித்வான்களானார்கள். அவன் கொள்கையெல்லாம் எல்லா ருக்கும் சரியாய் வித்தையைப் பயின்று கொடுத்து தாங்கள் சொந் தமாக சம்பாதித்து முன்னுக்கு வரும்படி செய்யவேண்டியது தான் ஒவ்வொருவருடைய கடமை என்பதேயாம். பனிமொழியாள் கற்பின் மகிமையாலும், தீனதயாளுவின் கம்பீர குணங்களாலும் அக் குடும்பம் அவ்விதமாய்ச் சிறப்படைந்தது.
அன்பறிவு தேற்ற மவா வின்மை யிந் நான்கு,
நன்குடையான் கட்டே தெளிவு.
என்றபடி இந்நான்கு குணங்களும் தீனதயாளுவிடம் நீங்காமலிருந்த படியால் அவனுக்கு ராஜாங்கத்தில் எப்பொழுதும் அதிக கீர்த்தி யுண்டாய் அவன் புகழை எங்கும் பரவச் செய்தன.
முற்றிற்று.
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
– தீனதயாளு (நாவல்), முதற் பதிப்பு: 1902, ஐந்தாம் பதிப்பு: 1922, சுதேசமித்திரன் ஆபீஸ்.