(1902ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9 | அத்தியாயம் 10-12
7. தீனதயாளு செய்த பிதிருயக்ஞம்
“மகவான் மேலைப் பதமுறுந்
றென் புலத்தார் கடனை மாற்றுவது
மகாவா னன் றியில்லை யென வகுத்தான்
றெரித்துக் கண்ணுவனே”.
மகாதேவர் கண்விழியாத் தூக்கம் தூங்கவே அவருக்கு வந்த நிலைமையைப் ‘பார்த்து மனம் வெந்தவர்கள் அவ்வீட்டிலிருந்த ஒவ்வொருவருந்தான் என்றா லும் தீனதயாளுவும் தாயுவும் மாளாத்துயரத்தில் மூழ்கினவர்க ளாகக் காணப்பட்டார்கள். வாயிலில் தென்றிசையை நோக்கி எல் லாரும் விழுந்து புலம்பிக்கொண்டு எழுந்திருந்து உட்சென்று மகா தேவர் தேகத்தைக் சூழ்ந்து நின்று பலவாறு புலம்பலானார்கள். தலைமாட்டில் தனது தந்தையின் முகத்தை நோக்கி அழுது கொண்டு “இக்கதியை எப்படி ஈசன்மனத்துடன் நமக்களித்தார்” என்று ஏங்கி யுட்கார்ந்திருந்த தீனதயாளுவைச் சிலர் கட்டிக்கொ ண்டு துக்கங் கேட்கின்றவாறு “குழந்தாய், நீ பட்ட சிரமமெல்லாம் வீணாயிற்றே” என்று புலம்பி யழுதார்கள். அவர் மாண்டுவிட்ட ஒரு ஜாமநேரம் வரையில் அவ்வீடு முழுமையும் ஒரே புலம்ப லாகவே கேழ்க்கப்பட்டது. அக்குழப்பம் சிறிது ஓய்ந்ததும் ஊரார் நாட்டார் பெரியோர் சிறியோர் எல்லாரும் வந்து துக்கங் கேட்டுவிட்டு மகாதேவருடைய உத்தரகிரியைக்கு வேண்டிய ஏற் பாடுகளைச் செய்தார்கள். “கடல்ஞாலம் பித்துடைய தல்லபிற என்று கவிகள் பாடியது எவ்வளவுண்மை. மகாதேவரோ மாண்டு விட்டார். அவர் தேகம்கூட இன்னும் எடுபடவில்லை. இதற்குள் ளவருக்கு கடன் கொடுத்திருந்த பல பெரிய கனவான்களும் பந்துக் களும் அங்கு கூடி தீனதயாளுவிடம் வெகு துக்கத்துடன் துக்கம் விசாரிப்பவர்கள்போல முதல் முதல் விசாரித்துவிட்டுத் தங்களிடம் மகாதேவர் கடன்வாங்கிய தொகையைச் சொல்லி அதற்கு ஒருவித ஏற்பாடு செய்துவிட்டுத்தான் சவத்தை எடுக்க வேண்டும் என்றார் கள். பார்த்தான் தீனதயாளு! அவனுக்கு ஒரு சங்கதியும் புலப் படவில்லை. முதலிலவின் தனது தந்தை கடன்வாங்கியிருப்பார் என்று எண்ணவே யில்லை. அப்படியேதீராது குடும்ப விஷய மாயும் புதுவீடு ஒன்று கட்டின காரணமாயும் ஏதோ வாங்கியிருக்க லாம் என்றாலும் அது மிகவும் சொற்பமாகவிருக்கும் என்று கருதி யிருந்தான். அதிகக் கடன் உண்டு என்று இவன் தந்தை உடம்பு அசௌக்கியமாக விருந்தபொழுது பல பெயர்கள் எச்சரித்திருந்த போதிலும் அப்பொழுது இவன் அவ்விஷயமாக யோசிக்கவே யில்லை. இனிமேலப்படியாக அலக்ஷியம் பண்ணாதவண்ணம் மகா தேவர் சவம் எடுபடும்முன் பெருத்த கடன்காரர்கள் அவர் மூத்த குமாரனாகிய தீன தயாளுவைக் கண்டித்துக்கேட்கவே அவன் தனது தலையில் அடிபட்ட சர்ப்பம்போல் சீறி “ஐயா கடன்காரர்களே, நீங் கள் எல்லோரும் ஈட்டின்மேல் கடன்கொடுத்திருக்கிறபடியால் நானும் இந்நிமிஷம் மாண்டேன் என்றாலும் உங்கள் பணம் மோசம் போகாதே? ஈடு உங்கள் பொருளை உங்களுக்குக் கொடுக்கு மல் லவா? அப்படி இருக்க நீங்கள் இவ்வளவு அகௌரவமாய் சமயா சமயம் பாராமல் கேட்பது தருமமா? என் தந்தைதானே இப்பொ ழுது போய்விட்டார். அவருடைய ஆஸ்தி அழியவில்லையே” என் றான். குத்துண்ட சிங்கம்போலிவன் இவ்விதமாக கர்சித்ததை அவர்கள் பார்த்துச் சொற்பம் வெட்கமடைந்து தங்கள் பொரு ளுக்கு மோசமில்லை என்றிருந்தார்கள். அவ்வண்ணம் அங்குண் டான அவநம்பிக்கையைத் தீனதயாளு ஒருவாறடக்கித் தனது தந்தையிருந்த நியமநிஷ்டைக்கும் அவர் புகழுக்கும் பெயருக்கும்ஒரு விதக்குறைவுமின்றி அவருடைய உத்திரகிரியைகளைச் சரிவர நடத்தி முடித்தான். 13 நாள் காரியம் நடந்தது. அவைகளை விவரமாக இவ்விடம் சொல்வது அனாவசியம். சங்கு வென்பவன் இளைய குமாரனாகையால் அவன் தீனதயாளுவுடன் பாவனைக்குச் சடங்குகள் தோறும் நின்று வந்தான். மாந்தி வெள்ளிக் கிண்ணத்தில் பிண் டம் எடுத்தாள். முதலிரண்டு மூன்றுநாள் கிரியை முடிந்ததும் ஜம்புனாத புலத்தாளாகிய காந்தி “ஐயோ! இளையாளாக என்னை மணந்து விட்டு என் கணவன் மாய்ந்தாரே! இனி என் சங்குவுக்கும் மாந்திக்கும் கதி என்ன. என்ன தான் தீனதயாளுநல்லவன் என்றாலும் மூத்தாள் கூறு இளையாள் கூறு என்ற வித்தியாஸமில்லாமற்போமா. என் செய்வேன்” என்று ஏங்கி ஒருவருக்கும் தெரியாமல் ரகசியமாக தன்னிடமிருந்த நகைகள் நாணயங்கள் வெள்ளி பாத்திரங்கள் இவைகளை யெல்லாம் ஜம்புனாத புலத்துக்கு அனுப்பிவிட்டாள். துக்கம் ஒன்றே மேலிட்டிருந்த தீனதயாளுவுக்கும் மகாதேவர் தமக் கைகளுக்கும் யாதொன்றும் தெரியாது.ஏதோ சந்தேகங்கள் சில காரணங்களால் அப்போதைக் கப்பொழுது தோன்றிய போதிலும், அவரே போய் விட்டார், இப்பண்டங்கள் போவதைத்தானா நாமிப் பொழுது கவனிக்க வேண்டும், என்று இருந்து விட்டார்கள்.
எல்லாச் சடங்குகளும் முடிந்து கிரயக்ஞமும் நடந்தது. அன் றைய தினமும் பல வேதியர்கள் பல பாடல்களியற்றி மகாதேவர் மகிமையைக் கொண்டாடினார்கள். தீனதயாளு அவர்கள் எல்லோ ருக்கும் தகுந்த மரியாதை செய்தனுப்பினான். சடங்குகள் நிறைவு பெற்றதும் தனது குடும்ப நிலைமை எவ்வாறிருக்கின்றது என்று தீனதயாளு பரிசோதிக்கலானான்.
இவன் அதிகமாகத் தந்தையிட மிருந்தவனல்லனென்பதை நாம் முன்னமேயே சொல்லி யிருக்கின்றோம். அன்றியு மிவன் பகாசுரகிரியிலிருந்து வந்தது முதல் தனது தந்தையின் வியாதி, சிறிய வைத்தியர், பெரிய வைத்தியர், இவ்விஷயங்களிலேயே தனது நினைவை முற்றிலும் செலுத்தியவன். அல்லாமலும் இவன் பெரும் குணமானது, இவனுடைய பந்துக்கள் மகாதேவர் உயிருட னிருந்த பொழுதே குடும்பத்தின் கொடுக்கல் வாங்கல் கணக்கைப் பார்க்க வேண்டும் என்று என்னதான் இடித் திடித்துச் சொன்ன போதிலும், அதைக் கவனிக்காமலிருக்கும்படி செய்து வந்தது. எப்பொழுதுமிவன் கம்பீர குணமுள்ளவனாகையால், ‘என்ன மோசம் நடக்கக்கூடும் என் தந்தையே போய் விட்டால் அதன் பிறகு என்ன லாப நஷ்டம் வந்தாற்றாலென்ன’ வென்று வெகு வெறுப்பாக விரு ந்து விட்டான். தான் செய்த பிரயத்தினங்கள் ஒன்றுங் கைகூடா மல் தன் தந்தை மாய்ந்துபோகவே இவன் அதிகமான துக்கத்தில் மூழ்கி ஒன்றும் செய்யப் புலப்படாமலிருந்து விட்டான். எல்லாச் சடங்குகளும் முடிந்த பின்பு இனி நமது கடமை யென்னவென்று யோசிக்கலானான்.
8. குடும்ப விசாரம்
“உற்றாரை யெல்லா முடன்கொண் டரசாளப்
பெற்றா லதின்மிக்க பேறுண்டோ.”
தனது தந்தையோ கண் மூடினார்; தன் செல்வமுமவருடன் குறைந்து விட்டது; சிறு வயதில் தாயை யிழ ந்த துக்கமென்பது தனக்கப்பொழுது சிறு வய தாகையால் தெரியாமலிருந்தது; ஆனால் இப்பொ ழுது நல்ல இளம் பிராயத்தில் தனது தந்தையை யிவ்வாறு இழந்தது தீனதயாளுவை முற்றிலும் துக்கத்தில் ஆழ்த்தி விட்டது. தனது பந்துக்கள் அனைவரும் தன்னைப் போல் அவ்வளவு துக்கத்திற் ஆழ்ந்திராமல் சிலர் பண்டங்களை மறைப்பதிலும், சிலர் பாத்திரங்களை ஒளிப்பதி லும், கருத்தாக விருக்கக் கண்ட தீனதயாளு தனது உண்மையான அத்தையை நோக்கி, “அம்மா!பார்த்தாயா, இவ்வுலகத்திலிருக்கும் பொருளாசையை, எனது தந்தை மாண்ட நிமிஷத்தில் எவ்வளவு வித்தியாஸம் இவ்வீட்டில் உண்டாய் விட்டது: இது வரையில் நான் ஒரு செல்வப்பிள்ளை போல் வளர்ந்தேன். இனிபாரம் உறைத்து விட்டதே. ஒரு தாய் வழிப்பட்ட குடும்பமில்லையே; நானெவ்வாறு இவர்கள் எல்லாரையும் ஒன்று சேர்த்துக் காப்பாற்றப் போகின் றேன்” என்றான்.
தாயு:- அப்பா,நானுனக்கு முன்னமேயே சொல்லி யிருக்கின் றேன்; உனக்கொன்றும் தெரியாது; உனது தந்தை போய் இன்னும் இரண்டு வாரங்கூட ஆகவில்லை; இதற்குள் இவ்வீட்டிலுள்ள எல் லாச்சாமான்களும் ஜம்புநாதபுரம் போய் விட்டனவே; ஓட்டை உடைந்தது என்று சொல்லப்படும் பாண்டங்கள் நீங்கலாக மற்றொன்றும் நிற்கவில்லையே; உன் துயரத்தின் நடுவில் இதை நான் சொன்னால் நீ என்னவென்று நினைப்பாயோ என்று சும்மாவிருந்தேன்,என்றாள்.
தீனதயாளு :- அம்மா, ஏதோ இரண்டொரு பாத்திரங்கள் ஒளிக்கப்பட்டால் அதில் அதிக நஷ்டம் வந்து விட்டது என்று ஏன் நீ மயங்குகின்றாய்! நமது குடியிப்பொழுது மூழ்கியிருக்கும் சங்கதி உனக்குத் தெரியுமா. நான் ஏதோ என்றிருந்தேன், கணக்கை யெடு த்துப் பார்க்கையில் இக்குடும்பத்திற்கு 20,000 ரூபா கடன் ஏற்படு கின்றது; அத்துடனில்லை. எல்லாக் கடன்காரர்களும் நான் அவர் களுடைய பணத்தைக் கொடுத்த பின்பு தான் பகாசுரகிரி போக வேண்டும் என்கிறார்கள்.
தாயு:- தெரியும் அப்பா தெரியும்! பிணம் எடுபடும் முன்னமே மன்னாகுடியான், புற்புலத்தான், இவர்கள் எல்லாரும் உன்னை மறை த்த சங்கதி எனக்குத் தெரியும்; எப்படி இவ்வளவு கடன் ஏற்பட் டதோ அதுதான் விளங்கவில்லை. உனக்கு ஏதாவது தெரியுமா?
தீனதயாளு:- அம்மா, எப்படி ஏற்பட்டிருந்தாற்றானென்ன? இவைகளவ்வளவும் எனது தந்தையால் ஏற்படுத்தப்பட்ட கடன்; அவரோ கெட்ட விஷயமாக ஒரு தூசுகூடச் செலவிட்டவரல்லர். கொஞ்சம் வைதீகத்தில் அதிகச் செலவிட்டதாலும், இப்பெரும் வீடு கட்டியதாலுமிக்கடனுண்டா யிருக்கலாம். ஆனால், 20,000 எப்படியா யிற்றென்பது தான் ஆச்சரியம்!
தாயு:- வட்டி விஷம்போல் ஏறுமப்பா; நீ சிறுவனாயிற்றே, இந்த ஊர் வைதீகர்களுடைய குணம் உனக்கு ஒன்றும் தெரியாது; மகாதேவருக்குச் சமமுண்டா என்று ஒரு முறை அவர்கள் சொல்லி விட்டால் உனது தந்தை அவர்களுக்கு வேண்டியதைக் கொட்டி விடுவார்; வெகு வைதீகர்கள் உனது தந்தையால் இந்த ஊரில் பிழை த்து வந்தார்கள்; அமாவாஸைதோறும் சிரார்த்தம்போ லிந்த வீடு விளங்கும் ஒவ்வொருவருக்கும் 1 ரூபாய் தக்ஷணை கொடுப்பார்; போனவரைப் பற்றி ஒன்றும் சொல்லக்கூடாது; ஏன் இவ்வளவு பெரிய வீட்டில் பதினாயிரம் கொட்டுவானேன்? கலியாணம் பண்ணினால் 11 கலியாணங்கள் ஊரிலிருக்கும் பந்துக்களை யெல்லாம் சேர்த்துப் பண்ணுவானேன்?
தீனதயாளு :- அம்மா, நீ இவ்வாறு என் தந்தையைப் பற்றி ஒருவித குற்றமும் சொல்ல வேண்டாம்; அவரோ பெருங்குணமும் உதாரமும் உள்ளவராக விருந்தார்; வெகு தேசங்களில் வாடகை வீடுகளிலிருந்து விட்டு நமது சொந்தமாக ஒரு பெரும் வீடு கட்டி நமது பந்துக்கள் மத்தியில் நாமும் ஒரு பெரிய தனிகராக வாழ் வேண்டும் என்று இந்த ஊரில் இப்பெரும் மாளிகையில் பதினாயிரம் செலவிட்டார். அவர் பந் துப் பிரியர் என்பது உனக்குத் தெரிந்த விஷயமே. தன் குடும் பத்தில் கலியாணம் நடக்கும்பொழுது தனக்குத்தான் செலவிட சக்தியில்லாத ஏழை பந்துக்கள் பிழைத்துப் போகட்டும் என்ற எண்ணத்துடன் அவர்கள் குழந்தைகள் விவாகங்களையும் சேர்த்துப் பண்ணினார். கொஞ்சம் செட்டாக விருந்திருக்கலாம்; அப்படியில் லாமற் போனதால் நாம் அவரைக் குற்றஞ் சொல்லலாகாது; இப் பொழுது தான் எனக்கு விளங்குகின்றது. அவர் இறந்துபோக 2,3 தினங்களிருக்கும் முன்னதாக ஐயோ? குஞ்சும் குழந்தையு மாக இப்படி விட்டுப்போகின்றேனே என்று இரண்டொரு தடவை அவர் சொல்லி விசனப்பட்டார். அதனால் கடனை அதிகமாக வனுக்கு விட்டுப் போகின்றோமே என்ற ஏக்கம் அவருக்கு வந்தது என்று நினைக்கின்றேன். இப்பொழுது என்ன பிசகு வந்தது; நமது வீடு, நிலங்களை இவைகளை எல்லாம் கணக்கிட்டுப் பார்த்தால் கடன்கள் கணக் 30,000 ரூபாவுக்கு சமானமாகச் சொல்லலாம். கிடப்பட்ட வரையில் 20,000 ஏற்படுகின்றன; ஆகையால் நமது விடவில்லை. ஏதோ தந்தை நமது ஆஸ்திக்கு அதிகமான கடன் அவருடைய கடன்களைச் சீக்கிரமடைத்து ஒருவித ஏற்பாடு செய் கின்றேன். சிற்றியின் அபிப்பிராயம் என்னவோ தெரியவில்லை. இனி தாமதிக்காமல் அவளபிப்பிராய மறிந்துகொண்டு எல்லாவித ஏற்பாடுகளுமுடனே செய்யவேண்டும்.
தாயு-இனித்தான் உனக்கு காந்தியின் உண்மையான குணம் விளங்கும். ஜம்புநாதபுலத்தாள் வெகு சாது என்று நீ நினைத் திருப்பதின் உண்மையை நீயே காணலாம். கைம்பெண்களாகிய எங்கள் 3 பெயர்களையும் காப்பாற்றவேண்டியவன் நீயே யல்லாது அவளி டம் காட்டி விடாதே. நானிதைப்பற்றி உனக்குச் சொல்லவேண்டி யது ஒன்றுமில்லை.
தீனதயாளு – உங்களைக் கைவிட்டால் ஈசன் என்னைப் பாதுகாப் பாரா ?நல்லது சமயம் பார்த்து சிற்றியை யழைத்துவா.
தாயு – இப்பொழுது தான் பொழுது விடிந்திருக்கின்றது, ஸ்நானம் சாப்பாடு இவைகள் எல்லாம் முடியட்டும்; மத்தியானம் இக்குடும்ப சமாசாரம் பேசுவோம். அதற்குள் நீ எல்லாம் யோசித் துக் கணக்குப் பார்த்து வைத்துக்கொள்; இந்த விஷயத்தில் உன் மொத்த அபிப்பிராயமென்ன? சேர்ந்த குடித்தனமா, அல்லது பாகம் என்று எண்ணமா?
தீனதயாளு – எனது தந்தை யிருந்தவரையில் எவ்விதமாக இக்குடும்பம் நடந்ததோ அதேவிதமாய் நானிதை நடத்தவேண் டும் என்ற எண்ணம் கொண்டிருக்கின்றேன். எல்லாரும் ஒன்று சேர்ந்திருந்தாற்றான் நமக்கெல்லாம் கௌரவம். அது தப்பினால் நமது கௌரவமும் குன்றும்.
தாயு-அப்பா, உன் பங்கில் ஈசனிருக்கவேண்டும். உனக்கு இவ்வுலகமே தெரியாது. எல்லாரும் உன்னைப் போல்
என்றிருக் கின்றாய். இனி அதிகமாக நான் சொல்லுவானேன். வெகு சடுதி யில் உனக்கே எல்லாம் விளங்கும். “குலத்தளவே யாகுமாம் குணம்” என்ற பழமொழிப்படி ஜம்புநாதபுரத்தாள் தனது குண த்தை வெகு சீக்கிரம் காட்டிவிடுவாள். காடு ஆறுவதற்கு முந்தி பாதி சாமான்களைத் தூக்கி ஊருக்கனுப்பினவள் எவ்வளவு கபட முள்ளவள் என்பதை உனக்குள்ளேயே ஊகித்துக்கொள்.இனிச் சேர்ந்திருப்பது என்பது ஒருநாளும் முடியாத காரியம். அப்புறம் உன் சாமர்த்தியம்.
தீனதயாளு – எல்லாம் வல்ல ஈசன் எப்படி விடுகின்றார் பார்ப் போம். எனக்கு எவ்வித நஷ்டம் வந்தாலும் சரி, எல்லாரும் சேர்ந் திருக்க என்ன ஏற்பாடுகள் பண்ணவேண்டுமோ அவைகளைச் செய்கின்றேன். நியாயத்தை விட்டு நான் ஒருபொழுதும் வழுவ மாட்டேன்.
9. குடும்பக் கடனைத் தீர்த்தது
“நலம்வேண்டி னாணுடைமை வேண்டுங் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு.”
தீனதயாளு தனது குடும்பத்தின் நிலைமையை நன்றாக அறிந்துகொண்டான். இதுவரையில் அவன் தான் தனவான் என்று சொற்பம் செருக்கடைந்தவன் என்று சொல்லலாம். செருக்கென்றால் கெட்டவிதமாக வன்று. நமது தந்தை நன்றாகப் பொருள் சம்பாதித்திருக்கின்றார்.நன்றாக நமது இனத்தார்களுக்கு அவர்கள் கேட்கின்றவைகளை நாம் கொடுக் கலாம், என்ற பெருங்குணத்தோ டிருந்தவன். இவன் சம்பாதித்த பொருளை இவன் தந்தை விரும்பவே யில்லை. அன்றியுமவர் இவன் கேட்ட பொழுதெல்லாம் பணம் கொடுப்பார். செல்வப் பிள்ளை யாக வளர்ந்தவன். இப்பொழுது இவன் கணக்குப் பார்த்த பிறகு தன்னைவிட எழை இவ்வுலகத்திலில்லை என்று கருதிவிட்டான். குடும்பமோ 12 பெயர்கள் நிரம்பிய பெரிய குடும்பம். ஆஸ்தியோ 30,000. கடன் 20,000. கடனை உடனே தீர்க்காமல் விட்டாலோ வருஷந்தோறும் வட்டி 2000 ரூபா ஏறிவிடும். இவைகளை யெல் லாம் தீனதயாளு நன்றாக யோசித்து தனது சிறுதாயாரை நோக்கி “சிற்றி, இனி நமது குடும்பத்துத் தலைவர் போய்விட்டார்; அவர் மட்டுமிருந்தால் இவ்வித விசாரம் நான் படவேண்டிய தில்லை. குடும் பத்தில் 20,000 ரூபா கடன் ஏற்பட்டிருக்கின்றது. கடனை வைத் துக் கொண்டால் நம்மால் ஒரு நிமிஷங்கூடத் தாங்கமுடியாது. பெரியவர் மட்டில் இன்னு மிரண்டு வருஷம் உயிருடனிருந்திருப் பாரேயானால் இக்கடன்களை ஊதியிருப்பார். அவ்வளவு சாமர்த்தி யம் எனக்கேது! நானோ தூரதேசத்தில் உத்தியோகம் பண்ணப் பட்டவன். நானிப்பொழுது இருக்கும் நாடோ செலவு வெகு அதிக மாகும் நாடு. கொடிக்குத் தன்காய் கனக்காது என்றபடி எந்த செலவு எப்படியிருந்தாலும், எல்லாரையும் என்னுடன் அவ்விடத்தி லழைத்துப்போய் ஒரே குடும்பமாக அங்கிருக்க நிச்சயித்திருக்கின் றேன்.அப்படி ஏற்படும் முன்பாக இக்கடன்களுக்கு ஒருவித ஏற் பாடு செய்யவேண்டும். நமது நிலங்களை அநேகமாகச் செலவு செய் தால் ஒழிய கடனை அடைக்க வழியில்லை. அதற்கு நான்மட்டும் போதாது, நீங்களும் என் தம்பி சங்குவுக்கு ரக்ஷகராக விருந்து கை யெழுத்துப் போட்டால் தான் வாங்குகின்றவர்கள் நிலங்களை பயமின்றி வாங்குவார்கள். இல்லாவிடில் வாங்கமாட்டார்கள். என் மனம் ஒத்து நீங்கள் நடக்க வேண்டும்” என்றான்.
காந்தி – அப்பா, நீ வேறு, சங்கு வேறு, என்று நான் எண்ண வே இல்லை. நீயும் என் வயிற்றில் பிறந்த பிள்ளை யென்றே யிருக்கின்றேன். ஆனால் தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு என்பார்கள். உனது தந்தை என்னை இளையாளாக மணந்து இரண்டு குழந்தைகளுடன் இச்சிறுவயதில் என்னை நிர்க்கதியாக விட்டுவிட்டார். உனக்கு ஒருவிதக் குறைவும் பண்ணவில்லை.உன் னைப் படிக்கவைத்துப் பதினாயிரம் செலவிட்டு ஒரு ஆளாக்கி இரண்டு காசு சம்பாதிக்கும் திறமையும் உண்டாக்கி விட்டார். என் சங்குவைச் செல்வங்கொடுத்து பேயனாக்கினார். உன் குஞ்சு குழந் தைகளிடம் அவர் எவ்வளவு அன்பு பாராட்டினாரோ அவ்வளவு அன்பு என்னிடத்திலாவது என் குழந்தைகளிடத்திலாவது அவ ருக்கு இல்லை. ஆனால் அதிக பிசகு ஒன்று மில்லை. நான் சொல் நல்லவன். எல்லாமறிந்தவன். லுவ தென்னவெனில் நீ வெகு இப்பொழுது இரண்டு காசும் சம்பாதிக்கப்பட்டவன். ஆகையாலும், இக்கடனில் பெரும் பாகம் உன் படிப்புக்காகவே ஏற்பட்டிருக்க வேண்டுமாகையாலும், இக்கடனை நீதான் ஒப்புக்கொள்ளவேண்டும். எப்படியாவது அந்த உபகாரம் பண்ணி அனாதைகளான என் சங்குவுக்கும் மாந்திக்கும் ஒரு ஏற்பாடு செய்துவை.
தீனதயாளு – சிற்றி, தாங்கள் சொல்லுவது எல்லாம் உண்மையே, ஏதோ பெண்கள் பேசுவதுபோல் பேசினால் காரியம் எப்படி முடியும். என் படிப்புக்காகவே என் தந்தை செலவிட்டார் என்றால் அதற்காகவே 20,000, ரூபா கடன் ஏற்படுமா? அப்படித்தான் ஏற் பட்டதென்றாலும், அதை நானேதான் ஒப்புக்கொள்ள வேண்டு மென்றால் அது சாத்தியமாமா. என்னால் அக்கடனை எப்படி அடைக்க முடியும். பொருளிருந்தால் நீங்கள் வாயைத் திறக்கு முன் கொடுத்துவிடுவேனே. எனக்கு வரும் சம்பளம் என் குடும்ப சம்ரக்ஷணைக்கே போதாதே. இருபத்தைந்து ரூபா சம்பளம் ஒரு வனுக்கென்றால் அதைக்கொண்டு அவனால் எவ்வளவு ஆஸ்திசேர்க்க முடியும்.என்னால் சாத்தியமில்லை என்று விட்டால் கடன்காரர்கள் நிலங்களை ஏலம் போட்டுக்கொண்டுபோய் விடுவார்கள். ஆகையால் நீங்களே யோசித்துப்பார்த்து நான் சொல்லுவதைச் சிறிது மனத்தில் வாங்கிக் கொள்ளுங்கள். கடன்காரர்கள் கடனைத் தீர்த்துவிடு என்று கேட்கும் முன்னமே நாமே தீர்த்துவிடவேண்டும். ஏனெனில் வட்டி வருஷம் 2000 ரூபா ஆகின்றது. அவ்வண்ணம் கொடுக்க நமக்குச் சக்தியோ இல்லை. என்னுடைய வருஷச் சம்ப ளமோ 300 ரூபா. சர்க்கார் கிஸ்தி போக நமக்கு நமது நிலங்களால் கிடைக்கும் மாசூல் இப்பொழுது விற்கும் விலைப்படி கணக்கிட்டுப் பார்த்தால் 1,500 ரூபா. அப்பாவின் உபகாரச்சம்பளம் அவருடன் போய்விட்டது. ஆகவே இக்குடும்பத்திற்கு இப்பொழுது ஒரு வருஷத்து வருமானம் 1,800 ரூபா. இந்த வருமானத்திற்குமேல் வட்டி யென்றிருந்தால் அப்புறம் அக்குடும்பம் எவ்வண்ணம் தலை யெடுக்க முடியும். சிற்றி, நீங்கள் இதை நன்றாக யோசித்துப் பாருங்கள். இப்பொழுது நான் செய்யப்போகிற தென்னவெனில் கடனுக்கு வேண்டிய நிலங்களைச் செலவுசெய்துவிட்டு மிகுந்ததை வைத்துக்கொண்டு எல்லாரும் ஏக குடும்பமாய் வாழவேண்டும் என்று எண்ணுகிறேன். தகப்பனார் காலத்தில் ஏற்பட்ட கடனுக் குக் குடும்ப சொத்தைச் செலவிடுவதில் ஒருவித சந்தேகமுமில்லை. நீங்களும் மனமொத்து என்னுடன் நின்றால் இவைகள் எல்லாம் காதும் காதும் வைத்தாற் போலச் சுலபமாக முடியும்.
காந்தி – தீனதயாளு, 20,000 ரூபா கடனுக்கு நிலங்களைச் செலவிட்டால் அப்புறம் மிகுந்து நிற்கும் நிலம் ஒரு குழிகூட இருக் காதே. உன் பாட்டில் நிலத்தை விற்றுக் கடனை அடைத்துவிட்டு நீ போய்விட்டால் அப்புறம் கைம்பெண்ணாகிய நான் என் சின்னஞ் சிறு குழந்தைகளுடன் எங்கு நிற்கின்றது. இவ்வீடு நமக்கென்னத் திற்கு. இதை என் செலவிட முடியாது.
தீனதயாளு – எவ்வளவோ ஆசையின்பேரில் என் தந்தை கட்டிய வீடு இது. இதில் அவர் 10,000 ரூபா கொட்டியிருக்கின் றார். இதை நாம் செலவிடுவதாக வாய் விட்டால் இதை இரண்டா யிரத்துக்குக்கூட இக்கிராமத்தில் ஒருவரும் கேட்கமாட்டார்கள். பஞ்சத்திற்கு பிள்ளை விற்பதுபோல இதை இப்பொழுது விற்பது நியாயமன்று.
இனி நமக்கு இப்பெரும் மாளிகை வேண்டியதில்லை என்பது உண்மையே. என்றைக்காவது ஒரு நாள் இதை நாம் விற்கத்தான் வேண்டும். ஏனெனில் நானோ அந்நிய தேசத்தில் உத்தியோகம் பண்ணப்பட்டவன். இங்கு 4,5 பெயர்கள் வசிக்க இவ்வளவு பெரும் வீடுவேண்டாம். ஆனால் இப்பொழுது நாம் ஒன்றும் அவசரப்படக்கூடாது. நிலங்களை விற்றுக் கடனை யடைத் துச் சொற்பம் நிலத்தையும் இவ்வீட்டையும் மிகுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சமயம் வரும்பொழுது இவ்வீட்டை விற்றுச் சிறுவீடு குடியிருக்க ஒன்று வாங்கிக்கொண்டு பாக்கி நின்ற பணத்திற்கு நிலம் வாங்கிவிடவேண்டும்.
காந்தி – அப்பா, நீ சொல்லுவது சரி, அப்படியே செய். எப்படியாவது என்னையும் என் குழந்தைகளையும் கைவிட்டு விடாதே நான் என் சங்குவை நம்பவே யில்லை. நீதான் என் குழந்தை என்று நம்பியிருக்கின்றேன், என்றாள்.
இவ்விதமாக காந்தி ஒருவாறு நல்வழிக்கு வந்தாள். காந்தி வறிய குலத்தில் பிறந்தவள் என்றாலும் புகுந்த விடம் பெரியவிட மாக விருந்தபடியால் நற்பழக்கங்களும் சொற்பம் படிந்திருந்தன.
அன்றியும் ஆராய்ந்து பார்க்குங்கால் தகப்பனார் பட்ட கடனைக் குடும்பச்சொத்தால் தீர்த்துக்கொள்ள ஆக்ஷேபம் என்ன. தீனத யாளு நனது தந்தை கடனை அடைக்க ஏற்பாடு செய்யாமற் போனால் கடன்காரர்களுக்கு வட்டி வளர்ந்து கொண்டிருக்குமேயன்றி அவர்கள் தொகைக்கு யாதொரு நஷ்டமும் வரமாட்டாது. கடனைத் தீர்க்காமல் நிறுத்தியிருந்தால் நஷ்டப்படவேண்டியவர்கள் தீனதயாளுவும் சங்குவுமே. இதைக் காந்தி நன்றாக அறிந்தவளா கையால் எப்படியாவது தீனம் கடனைத் தீர்த்துப் போடானா என்ற விசாரம் அவளுக்கு முற்றிலுமுண்டு. அதைத் தானே பயிரங்க மாகக் காட்டக்கூடாதென்று தனக்கிஷ்டமில்லாதவள் போல் நடித்து அதனால் தான் லாபமடையப் பார்த்தாள்.
தீனதயாளுவோ நிலம் விவசாயம் இவைகளில் அதிகப் பழக்கமுள்ள வனல்லன். ஆனால் ஒரு விஷயத்தில் அவன் பிரவேசித்து விட்டால் அதை முற்றிலும் ஊன் றிப்பார்த்து அவ்விஷயத்தில் எப்பொழுதும் ஆழ்ந்தி யிருப்பவர்கள் ஆச்சரியப்படும்படி நடப்பான். அவ்வளவு மேன்மை யான குணமவளிட மிருந்ததைச் சணற்காலர்கள் அவன் தனது தந்தைக்கு நடத்தின வைத்தியத்திலிருந்தே தெரிந்துகொண்டார் கள். அது அவ்வாறு பிரயோசனப்படாமற் போய் அவன் தான் பகாசுரகிரி போகும் முன் தனது குடும்ப நிலைமையைச் சீர்திருத்த ஆரம்பிக்கவே அவனுடைய உண்மைக்கும் யுக்திக்கும் வல்லமைக் கும் அவனை ஒவ்வொருவரும் புகழலானார்கள்.
வெகு சாமர்த்தியமாய்ப் புற்புலத்தில் தனது தந்தை பெய ரிலிருந்த காணி, பூமி இவைகளை யெல்லாம் ஒன்று விடாமல் விற்று அதில் கிடைத்த பணத்தைக் கொண்டு தனது தந்தைவிட்ட கடனை நிறுத்தாமல் தீனதயாளு அடைத்தான். ஒரு தூசாவது பாக்கி சரியான வயதுக்கு வராத தனது தம்பி சங்குவுக்குக் காந்தியைக் கார்டியனாக வைத்து இவ்விஷயமாய் உண்டான எல்லாவித தஸ்த வேஜுகளையும் தீனதயாளு செய்துமுடித்தான். “கடன் தீர்ந்தால் காற்றுப்போல்’ என்ற பழமொழியின் சுகத்தைத் தீனதயாளு தான் முற்றிலுமனுபவிப்பதாகக் கருதினான். காந்தி, தாயு, இவர் களுங்கூட சில சணற்காலர்கள் போல “அநியாயமாக வீண்செலவு செய்து மகாதேவர் இக்குடும்பத்திற்கு இவ்வளவு கடன் உண்டாக்கி னார்” என்று சில சமயம் சொல்லக்கேட்டால் தீனதயாளு அவர் களைக் கண்டிப்பான். தனது தந்தை செய்த செலவு ஒன்றாவது அதிகச் செலவன்று என்றும், தான் அவருடைய நிலைமையிலிருந் தால் அவரைவிட அதிகச்செலவு செய்திருப்பான் என்றும் அப் படியே அவர் அதிகச் செலவு செய்திருந்தபோதிலும் அதைப்பற்றிப்பேச மற்றவர்களுக்கு யாதொரு அதிகாரமுமில்லை என்றும், மகாதேவர் தன்னுடைய ஆஸ்திக்கு மேலான கடன் விடவில்லை என்றும், ஒவ்வொரு தந்தையும் தனது குமாரனுக்கு அளிக்கவேண் டியது படிப்பேயன்றி ஆஸ்தியும் அளிக்கவேண்டும் என்பது உடன் பாடென்றும், தீனதயாளுவின் கொள்கை. தனது தம்பி சங்கு வுக்குத் தனது தந்தை தான் உயிருடனிருந்த காலத்தில் எவ்வள வோ சிரமப்பட்டுப் படிப்பு முதலியவைகள் போட்டுப் பார்த்தும் அவைகள் ஒன்றாவது ஏறவில்லையாகையால், அவன் நிலைமையைப் பற்றித் தீனதயாளு அதிகக் கவலை கொண்டவனாய் தனது சிறு தாயை நோக்கிப் பின்வருமாறு சொல்லலானான்:-
தீனதயாளு – தாயே, ஏதோ நான் பகாசுரகிரியை விட்டுக் கீழே இறங்கின காலம் நற்காலமாகவிராமல் நான் என் தந்தையை இழந்து ஆஸ்தியையும் தோற்றுவிட்டேன். இனி சென்றுபோன விஷ யங்களைப்பற்றி யோசிப்பதில் பிரயோசனமில்லை. எனது ரஜா அநேகமாய் முடிந்துவிட்டது. இன்னும் ஒருவாரத்துக்குள் நான் என் வேலைக்குத் திரும்பிப் போகவேண்டும். அதைக் காப்பாற் றிக்கொண்டால் தானே நாம் சுகமாய்ச் சாப்பிடலாம். காணியும் பூமியு மதிகமாக விருந்தால் சர்க்கார் வேலையை அலட்சியஞ் செய்வ தால் சுகக்குறைவு வரமாட்டாது. என்னால் கூடியமட்டும் நான் நமது பெரியவர் விட்ட கடனை எவ்வளவோ சாமர்த்தியமாக அடை த்து இந்த ஊர் வீட்டையும் நிலங்களையும் மிகுத்து வைத்துக்கொண் டேன். இனி நாம் கடனுக்காக ஒருவனுக்காவது தலைகுனிய வேண்டியதில்லை. இவ்வூர் நிலங்களிலிருந்து நமக்குச் செலவு போக வருஷத்துக்கு 150, 160 கலம் நெல் கிடைக்கும். சராசரி 200, 250 ரூபா ஆயிற்று. இதை வருஷாவருஷம் நமக்கு ஒரு முதலாகப் பண்ணிக்கொள்ளுவோம். நாளை இந்தவூர் நிலங்களைக் குத்தகைக்கு அடைத்துவிடுகின்றேன். ஒரே குடும்பமாக பெரியவர் காலத்தி லிக்குடித்தனம் எவ்வாறு கண்ணியமாக நடந்து வந்ததோ அதற்கு ஒருவிதக் குறைவுமில்லாதவண்ணம் நடத்த நான் எண்ணியிருக்கிறேன். நீங்கள் எல்லாரும் என்னுடன் பகாசுரகிரி வந்துவிடவேண்டும். எல்லாரும் ஒரே குடித்தனமாக விருக்க வேண்டும். சங்குவுக்குப் படிக்க அவ்விடம் நான் தகுந்த ஏற்பாடு கள் செய்கின்றேன்” என்றான்.
காந்தி இதைக்கேட்டதும் “குழந்தாய், இனி அவர் காலஞ் சென்றபின்பு எங்களை யெல்லாம் காப்பாற்றவேண்டிய யஜமானன் நீ. நீ என்ன சொன்னாலும், கேட்கவேண்டும்; அவர்கள் காப்பாற்றி னதுபோல் எங்களை ஒருவிதக் குறைவுமன்றி நீ காப்பாற்றுவாய்; அதில் சிறிதேனும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் காடு இன் னும் ஆறவில்லையே! அதற்குள் இவ்வீட்டைவிட்டு நான் எவ்வாறு வெளிக்கிளம்பலாம். மேலும் ஒரு வருஷம் இவ்வூரைவிட்டு நான் அப்புறம் இப்புறம் அசையமாட்டேன். ஏதோ சணற்கால் நாற் சந்தியில் என்னை நிற்கவைக்காமல் உட்காருவதற்கு இவ்வளவு நிழ லாவது வைத்தார்களே! அதில் நானிருக்கின்றேன். நீ க்ஷேமமாய் உத்தியோகத்திற்குப் போய்வா. பகாசுரகிரி குளிர்நாடு என்கின் றார்கள். அவ்விடம்விட்டு மாற்றிக்கொண்டு நமது தேசங்களுக்கு வரக்கூடாதா? போனவர்கள் தெய்வமாக விருந்து அவ்வளவு தூரம் சகாயம் செய்யார்களா!” என்றாள்.
தீனதயாளுவுக்கும் பலவித காரணங்களால் அப்பொழுது தனது சிறுதாயார் சொன்ன சொற்கள் வெகு அன்புடன் அவள் யதார்த்தமாகவே சொல்லுவதாகப் புலப்பட்டது. பகாசுரகிரியில் அதிகப் பனிகாலமப்பொழுது ஆகையால் அக்காலத்தில் முதல் முதல் எல்லாரையும் அழைத்துப்போக அவனுக்குத் தைரியம் வர வில்லை. வெகு சீக்கிரத்தில் அவ்விடம்விட்டு வேறு சௌக்கிய மான விடத்திற்கு மாற்றிக்கொண்டு அவ்விடம் தனது குடும்பத்தை ஒன்று சேர்த்து வைத்துக் கொள்ள நிச்சயித்தான். அவ்வாறே தனது சிறு தாயாரிடம் தெரிவித்து,தனது அத்தைமார்களாகிய இரண்டு கிழவிகளை ஜாக்கிரதையாகப் பார்த்துவர காந்தியை வேண் டிக்கொண்டு தனது தம்பி சங்குவைத் தன்னுடன் கூட அழைத் துக்கொண்டு தீனதயாளு தனது சம்சாரத்துடனும் குஞ்சு குழந் தைகளுடனும் பகாசுரகிரி சென்றான். சணற்கால் செலவுக்கு நெல் ஏராளமாகப் போதுமாகையால் அவன் பணம் அனுப்பவேண்டு மென்பதேயில்லை. ஆனால் அவ்வளவு எளிதில் காந்தி அவனை விட வில்லை. அவனிடம் பஞ்சைப்பாட்டுகள் எவ்வளவோ பாடி முக்கியமாகக் கிழவிகளுடைய க்ஷேமத்துக்கு தான் ஒருவித குறைவும் பண் ணக்கூடாதாகையால் அவர்களுடைய சம்ரக்ஷணைக்கென்று தீன தயாளு தனக்கு மாதந்தோறும் ரூபா 10 அனுப்பவேண்டும் என்ற ஏற்பாடு செய்துகொண்டாள்; இவ்வாறு எல்லாவித திட்டங்களையும் செய்து முடித்து தீனம் சங்குவுடன் பகாசுரகிரி வந்து சேர்ந்தான். தீனத்தின் சம்பளம் 25 என்றால் இதில் 15 ரூபா, அவன் செலவுக்கு அவ்வூரில் எவ்வாறு போதும். அவன் தனது தந்தைகாலத்தில் எவ்வளவுக்கெவ்வளவு சுகப்பட்டானோ அவ்வளவுக் கவ்வளவு அவர் மாண்டகாலம் முதல் அவன் கஷ்டப் படலானான்; ஆனாலவன் மனோதைரியமே தைரியம் என்று மட்டும் சொல்லக்கூடாது. தன்னுடைய நல்நடைக்கையில் அவன் வைத் திருந்த நம்பிக்கை என்றும் சொல்லலாம். தான் எல்லாவிதத் லும் வெகு பரிசுத்தனாக விருக்கின்ற வரையில் ஈசன் தன்னைக் கைவிடமாட்டார் என்பது தீனதயாளுவின் முக்கியமான கொள்கை.
சங்குவோ ஒவ்வொரு விஷயத்திலும் தனது தமயனாருக்கு நேர்விரோதமான குணங்களுள்ளவனாக விருந்தான். படிப்பு என் பதேயில்லை. படிக்கவேண்டும் என்ற ஆசையு மவனுக்கு இல்லை தன்னைவிடச் சிறுவர்கள் அதிகமாகப் படித்திருந்ததைப் பார்த்து அவனுக்கு வெட்கமுண்டாயிற்று என்பதும் கிடையாது. அவன் புத்தி அவ்வாறிருக்க அவன் படித்தவர்கள் எல்லாரையும் “அவ னுக்கு என்ன தெரியும்! இவன் பெருமூடன்!” என்று தினந்தோ றும் இரண்டுமணிநேரம் பழிப்பான். நாடோறும் போஜனம் செய்தபின்பு பகலில் ஒரு ஜாமகாலமாவது தூங்காமலிருந்தால் அவன் உடம்புக்கு ஆயாசம் வந்துவிடும். தன்னைப்போன்ற நெறி நீங்கி தெரிகெட்டுத்திரியும் புத்தியீனர்களுடன் கூடி வீண்பேச்சு பேசிக்கொண்டே ஒவ்வொரு நாளையும் கழிப்பான்.
அவனைப் பள்ளிக்கூடத்தில் வைத்து அவன் படிக்க வேண் டிய ஏற்பாட்டைத் தீனதயாளு செய்தான். அவ்வளவுதான் அவன் செய்யமுடியும். சங்கு எவ்வளவு தூரம் படித்தான், என்று நமது நண்பர்கள் தெரிந்துகொள்ள விரும்புவார்கள். சங்கு தனது உபா த்தியாயர்களை ஏறவிழித்துப் பார்ப்பானேயானால் அவளைக் கண்டு உபாத்தியாயர்கள் பயந்து அவனை ஒன்றும் கேட்கமாட்டார்கள். அவன் பெரிய பையனாகையால் அவன் வகுப்புப் பிள்ளைகள் அவ னிடம் நடுங்குவார்கள். பெரிய போக்கிலி. ஒரு அக்ஷரம்கூட வரப்பெறாதவன் என்ற பட்டம் சங்குவுக்குப் பள்ளிக்கூடத்தில் வந்தது. வீட்டிலோ சங்குவைக்கண்டால் எல்லாருக்கும் நடுக்கம். அவன் சாப்பிட உட்கார்ந்தால் அது நன்றாகவில்லை, இது கெட்டுப் போயிற்று என்பான். தனது தமயனுடன் சாப்பிட உட்கார்ந்தால் அப்பொழுது ஒன்றும் சொல்ல முடியாதென்று நினைத்து அவன் சாப்பிட்டு விட்டுப்போன வேளை பார்த்து தான் சாப்பிட வந்துட் காருவான். இவ்வளவாவது கிட்டுகிறதே என்று சந்தோஷமே யில்லை. எல்லாவற்றையும் நிந்திப்பான். தமையனார் மலிவான காய்கறி வாங்குகின்றார், என்பான். பருப்பு குழம்பும் வறுவலும் தினந்தோறும் இவனுக்குச் செய்துபோட்டால் திருப்தியாகவிருக் கும். அப்படிச் சமையல் பண்ணினால் உடம்புக்காகுமா என்று தாயு வாயைத்திறந்தால் ‘அவளைத் திட்டுவான், உறைப்பு கொஞ் சம் தாழ்ந்திருந்தால் குழம்பு கஞ்சிபோலிருக்கின்ற தென்பான். இவ்வாறு எப்பொழுதும் குற்றங் கண்டுபிடித்துக்கொண்டு தனது நிலைமை யின்னதென்று அறியாத கசடனாக அவன் காலமிங்குச் சென்றுகொண்டிருந்தது. படிப்பு என்பது சிறிதேனும் கிடை யாது. எவனொருவன் தன் சிறுவயதில் உண்டியையே பிரதான மாகக்கொண்டு அதில் அதிகக் கவலைவைத்துப் படிப்பில் கவலை யற்று இருக்கின்றானோ அவன் பெரும்பாலும் புத்திமானாகப் படி க்கமாட்டா னென்பது உலகக்கொள்கை. சங்குவு மப்படியேதா னிருந்தான்.
சணற்காலில் காந்தியோ வெகு சாமர்த்தியமாகத் தன்னிட மிருந்த சில ஆபரணங்கள், உதவியற்ற சாமான்கள், இன்னும் என் னென்ன விலையாகுமோ அவைகளை யெல்லாம் விற்று ஒரு ஆயிரம் ரூபாவரையில் தன் கையில் முதல் சேர்த்துவைத்துக் கொண்டாள். இந்தத் தொகையாவது ஒரு கைம்பெண்ணிட மில்லாவிட்டால் அவளை ஒருவரும் கவனிக்க மாட்டார்கள் என்பது அவளுடைய கொள்கை. தனக்கு கஷ்டதசை வந்துவிட்ட தென்பதை அறிந்தவளாய் வெகு செட்டாக அவள் குடித்தனம் பண்ணிவந்தாள். ஒரு நாளைக்கு ஒரே வேளைதான். 15 நாழிகைக்குமேல் சாப்பிடுவாள். அவள் மகாதேவர் தமக்கைகளாகிய இரண்டு கிழவிகளைக் காப்பாற்ற வேண்டியதாக இருந்த தென்று நாம் முன்னமே சொல்லியிருந் தோமே. அவர்கள் விஷயமாக அவள் செய்த தொந்தரை சொல் லமுடியாததாக விருந்தது. அந்தக் கிழங்கள் பசிக்கின்ற தென் றால் “மஞ்சள் காணி கொண்டு வந்தவர்கள்கூட இப்படிக் கேட்க மாட்டார்களே. உங்களுக்கிட்டுத்தான் இக்குடித்தனம் இப்படிப் பாழாயிற்று” என்பாள். குளிர்காலத்தில் “குளிர் அதிகமாக இருக் சின்றது, ஒரு துப்பட்டி வாங்கிக் கொடு,” என்று அக்கிழங்கள் கேட்டால் “இரட்டைவிரியைப் போர்த்துக் கொள்ளுங்கள்’ பாள். புடவை கிழிந்து போய்விட்டது என்றால் “பூமியைக் குழி பறித்து அதில் உட்கார்ந்து கொள்ளுங்கள்” என்பாள். இவ்வ ளவுதான் என்று அளவிட முடியாமல் பலவிதமாய்ப் பேச்சிலும் போசனத்திலும் கழுகு பிடுங்கும் வண்ணம் வாயாலும் முகத்தாலும் காந்தி அக்கிழங்களை இமிசித்து வந்தாள். ஆனால் பகாசுரகிரிக்கு எப்பொழுதாவது கடிதம் எழுதும்பொழுது தான் வெகு ஆதரவாய் எல்லாரையும் நடத்துவதாகவும், மாதம் அனுப்பப்படும் 10 ரூபா மேல் செலவுக்குப் போதவில்லை யென்றும் எழுதுவாள். இவ்வித மாக ஒரு வருஷகாலமாயிற்று.
வருஷச் சடங்குகள் ஊரிலேயே நடக்க வேண்டும் என்ற வழக்கப்படி தீனதயாளு சணற்காலுக்கு வந்தான். இருந்த ஸ்திதியை அவன் கண்ணால் பார்த்தான். கிழவிகளின் கஷ்டம் அவனுக்குச் சகிக்கக் கூடவில்லை. அவர்கள் அவனைப் பார்த்து ”அப்பா! இத்தனை நாள் ஒரு சொல்லும் சொல்லாமல் உன் தந்தை எங்களை வெகு மானமாக காப்பாற்றி வந்தான்! இந்த ஒரு வருஷம் நாங்கள் பிறந்த நாள் முதல் இதுவரையில் கேட்க வேண்டிய அவ் வளவு சொற்களையும் ஜம்புநாத புலத்தாளிடம் கேட்டு விட்டோம்!! இனி சத்திரம் சாவடியில் நாங்கள் கஞ்சி காய்ச்சியாவது குடிப் போமே யல்லாது இவ்வீட்டிலிருக்க மாட்டோம். வயது அதிக மாகி விட்டபடியால் எங்களுக்கு முன்போல தேகத்தில் சக்தியில்லை மறுபடியும் இப்பாதகியினிடம் எங்களைக் காட்டிக் கொடுக்காமல் ஏதாவது ஒரு ஏற்பாடு செய். என்றையத் தினம் உன்னைக் கண்போம் என்று எதிர் பார்த்திருந்தோம். இந்த ஒரு வருஷம் எங்களுக்கு ஒரு யுகமாக விருந்தது” என்றார்கள். சங்கு தன் தாயாரிடம் பகாசுரகிரியில் தான்பட்ட குறையைத் தனது மனம் போனபடி வருணித்தான். காந்தி தீனதயாளுவைப் பார்த்து “அப்பா! நான் உன்னை என் வயிற்றிற் பிறந்த பிள்ளை போலவே எண்ணி யிருக்கின்றேன். உனக்கு 4,5 குழந்தைகளிருக்கின்றன. எனக்கிருப்பது இரண்டே. ஏதோ சுவாமி அளித்த பிச்சை இர ண்டு என்று எண்ணி யிருக்கின்றேன். சங்குவைச் சரியாக உன் ஸம்ஸாரம் நடத்தவில்லை என்று கேள்விப் படுகிறேன். அவனுக்குப் படிப்புப் போதும். அவனை இவ்விடத்திலேயே விட்டுவிடு. அவனுன்னிடமிருந்தால் உனக்கு அவன் படிப்புக்கும் சாப்பாட்டுக்கும் 6, 7-ரூபா ஆவது செலவாகுமல்லவா, அதை என் பெயருக்கனுப்பி விடு” என்றாள். என்ன செய்வான் தீனதயாளு! அவனோ மானி; அவனுக்குக் கிடைக்கும் 25, 30-ரூபா சம்பளத்தில் ஏற்கனவே 10- ரூபா அனுப்பி வந்தான். அது போதாதென்று 2,1 காந்தி கூட கேட்க ஆரம்பித்தாள். இப்பொழுது சங்குவைச் சணற்காலில் விட்டு விடு என்று சொல்லி, கூட 7-ரூபா கேட்கலானாள். நெல் முதலிய வைகளிவர்களுக்கு சணற்காலிலிருக்க அதனுடன் தீன தயாளுவி னுடைய சம்பளத்தின் பெரும்பாகத்தை அவர்கள் வாங்கிக் கொண்டு விட்டால் அவன் ஒருவித சகாயமுமில்லாமல் அம்மலைநாட் டில் எவ்வாறு எல்லாச் சாமான்களையும் காசுக்கு வாங்கி குடித்தனம் செய்வான். எல்லாரையும் காப்பாற்ற ஈசனொருவ னிருக்கின்றார்; தன்னைக் கைவிடமாட்டாரென்று அவன் எண்ணி அப்படியே செய் வதாக ஒப்புக்கொண்டு தான் வந்த முக்கிய காரியமான சடங்கு களைச் செய்து முடித்தான். தனது அத்தைகளைத் தனியாக அழை த்து இத்தனை நாள் பட்ட கஷ்டங்களை இன்னும் இரண்டொரு மாத காலம் எனக்காகப் படுங்கள். நான் அவ்விடம் விட்டு மாற்றிக் கொண்டு சீக்கிரம் நமது தேசம் வந்து விடுகிறேன். முன்னமே யிருந்த துரை என்னிடம் அவ்வளவு அன்புள்ளவனல்லன். இப்பொ ழுது புது துரை ஒருவன் வந்திருக்கின்றான்.அவன் வெகு நல்லவன்; என்னிடம் பட்சமாக நடக்கின்றான். அவளை வேண்டிக்கொண்டு நான் எப்படியாவது மலையை விட்டு வெகு சீக்கிரம் கீழே வந்து விடுகின் றேன். அப்புறம் நாம் எல்லோரும் சேர்ந்திருக்கலாம் என்று அவர் களுக்கு ஒருவாறு தைரியம் சொல்லி தீனம் பகாசுரகிரி சென்றான். இவ்வாறு தனது தந்தை போய் இரண்டாவது தடவை பகாசுரகிரி வந்தது முதல் எவ்விதத்திலாவது கீழ் நாட்டுக்கு தான் மாற்றிக் கொள்ளாவிடில் தனது மானத்துக்குக் குறைவு வரும் என்று தீன தயாளு கருதலானான்.
அன்றியும் படித்தவர் ஒருவரும் அதிகமாகக் குடியில்லாத மலைநாட்டில் கிணற்றுத் தவளைபோல் பதுங்கிக் கிடப்பதைக் காட் டிலும் புன்னைப் போன்ற ஏதாவது ஒரு நகரத்தில் ஜீவனம் செய் வதில் பலவித நன்மைகளுண்டு. நகரங்களில் பலவிதத் தொழில் களுண்டு. இரவிலும் பகலிலும் சிரமப்பட்டு ஏதோ கௌரவமாய் ஒருவன் தன் வாழ்நாட்களைக் கழிக்கலாம். காலையிலும் மாலையிலும் இரண்டு தனவான் வீடுகளில் அவர்களுடைய பையன்களுக்குப் பாடஞ் சொல்லலாம். உத்தியோக வேளை போக சிரமமில்லாத மற்ற வேளைகளில் இரவில் இரண்டொரு வித்தியா விஷயங்களைப் பற்றி எழுதலாம். நகரங்களில் ராஜபாஷைகளில் பத்திரிகைகள் பல உண்டு. இவைகளுக்கு ஒரு உத்தியோகஸ்தன் ராஜாங்க விஷ யத்தைப் பற்றி எழுதாமல் ஏதோ தேச நடை உடை பாவனை புரா ணம் இதிகாசம் காவ்யம் நாடகம் இவைகளைப்பற்றி மட்டும் எழுதுவ தாக ஏற்படுத்திக் கொண்டால் அவன் மாதம் 10-ரூபாவுக்குக் குறை யாமல் லாபமடையலாம். தனது சிறுதாயார் அதிகப் பணம் கேட்டதற்காக அந்த வழக்கத்தை அவன் கைப்பற்றி இரண்டொரு பத்திராசிரியர்களைச் சிநேகம் பண்ணிக் கொண்டால் அவர்களுடைய ஆதரவால் 10-ரூபா தனது சம்பளத்துக்கு மேலாக சம்பாதிக்கலாம் என்று எண்ணலானான்.
இவ்வித எண்ணங்கள் தீனதயாளுவுக்கு எப்பொழுதும் மேலிட் டிருந்தன. பலவித பிரயத்தினம் எப்பொழுதும் செய்து கொண்டே யிருப்பான். ஈசனவன் பங்கிலிருந்தார் என்று சொல்லவேண்டும். ஏனெனில் அவன் செய்த முயற்சிகள் ஒருவாறு கைகூடின. னுக்கு வேண்டிய வித்துவானான ஒர் துரை பகாசுரகிரிக்கு வந்திருந்த பொழுது தீனதயாளுவைப் பார்த்து அவனறிவைக்கண்டு தனக்குள்ளேயே மகிழ்ந்து புன்னையில் ஓர் வேலை யவனுக்குச் செய்து கொடுத்தனர். அவர் உதவியால் தீனதயாளு புன்னை நகர் வந்து சேர்ந்தான். அவன் அவ்வாறு புன்னையில் அமர்ந்த வேலைக்கு அதிகச் சம்பளமாகையால் அவன் கஷ்டமும் கொஞ்சம் நீங்கும் காலம் வந்ததென்று நாம் சொல்லலாம்.
புன்னை வந்ததும் தனது அத்தைகளுடன் தனது சிறுதாயார், தம்பி, தங்கை எல்லோரும் தன்னுடன் கூடவந்திருக்க வேண்டும். எல்லாரும் ஒரு குடும்பமாகவே இருக்க வேண்டும், என்று தீன தயாளு சணற்காலுக்குச் சொல்லியனுப்பினான். அத்தைகள் மட் டில் வந்து சேர்ந்தார்கள். சிறுதாய் முதலியவர்கள் வரவில்லை. வந்து விட்டால் தீனதயாளுவிடமிருந்து ரூபாவாகப் பெறுவது நின்று விடும் என்ற பயம் காந்திக்கு வெகு அதிகமாக விருந்தபடியா லவள் ஊரை விட்டு புறப்படவில்லை. முன் போல வீட்டை விட்டு வெளிக்கிளம்பக் கூடாதென்று அவள் சொல்ல முடியாது. னில் ஒரு வருஷம் என்று ஏற்பட்டிருந்த கெடு முடிந்தது. ஆகை யாலவனிட மிருந்து வரும் ரூபா போய்விடும் என்ற பயத்தைத் தவிர வேறு ஒரு காரணமுமில்லை.
இவ்வண்ணம் தீனதயாளு தனது தந்தை காலஞ் சென்ற 14, 15. மாதங்களுக்குள் தான் உத்தியோகம் பண்ணிக்கொண்டிருந்த மலை நாட்டை விட்டுக் கீழே யிறங்கி புன்னைமா நகர் சேர்ந்து அதிகச் சம் பளமும் பெற்று அத்தை முதலிய தனது பழைய பந்துக்களையும் தன திருப்பிடம் வரவழைத்துக் கொண்டான். சணற்காலி லிருந்த தனது சிறு தாயார், தம்பி, தங்கை இவர்களுக்கும் ஒருவிதக் குறைவு பண்ணாமல் அவர்கள் என்ன கேட்டபோதிலும் ஏன் என்ற கேள் வியே யில்லாமல் கேட்டவைகளை யெல்லாங் கொடுத்து வந்தான். அவனும் ஒரு பெரிய சமுசாரியாகையால் அவன் நல்ல எண்ணத் துக்கும் உதாரச் செலவுக்கும் அவன் எவ்வளவு விதமாக சம் பாதித்தபோதிலும் கொஞ்சமேனும் கட்டாமலே யிருந்தது. புன்னை மாநகர் பலவிதத்தில் எல்லோரும் சௌக்கியப்படத்தகுந்த நகரம் என்றாலும் வேப்பிலை முதல் விளாவிலை வரையில் எல்லாம் காசுக்கு வாங்கித்தான் குடித்தனம் செய்யவேண்டும். பெருந்தன்மையில் வள ர்ந்தவனாகையால் தீன தயாளுவுக்குச் செட்டென்பது தெரியவே தெரி யாது. அப்படியேதான் அவன் மனைவிக்கும். தான் எப்படியிருந்த போதிலும் அதை ஒருபொழுதும் குறைவாகக் கருதமாட்டான். தன் குழந்தைகளும் தன்னைச் சேர்ந்தவர்களும் வெகு சௌக்கியமாக விருக்கவேண்டுமென்பது எப்பொழுது மவனுடைய கொள்கையாகை யால் அவர்கள் எல்லாரையும் வெகு பிரயாசைப்பட்டுக் காப்பாற்று வான். அவன் எண்ணங்கள் வெகு கம்பீரமான எண்ணங்கள். நாம் ஏழையாய் விட்டோம் என்றகஷ்டத்தை நமது குழந்தைகள் அறிந்து கஷ்டப்படக் கூடாதென்று அவர்களுக்கு உணவிலும், ஆடையிலும், வித்தையிலும், ஒருவித தாழ்வின்றி நடத்தி வருவான். இவ்வாறு ஒருவருஷகாலம் புன்னையில் சென்றது. ஏற்கனவே அதிகமாகப் பணம் கேட்டுவந்த காந்தி அவன் அதிக சம்பளத்தில் புன்னைவந் ததும் தனக்கு 25-ரூபா அனுப்பவேண்டும் என்று எழுதியனுப்பி னாள். ஐயோ பேதை! எப்படியாவது பிழைக்கட்டும் என்று தன் கஷ்டத்தைக் கொஞ்சமேனும் யோசிக்காமல் அப்படியே தீன தயாளு செய்யலானான். ஆகையால் அவன் புன்னையில் ஜீவித்த ஜீவனம் கஷ்டஜீவனம் என்றே சொல்லவேண்டும். அப்படி யிருந்த போதிலும் எப்பொழுதும் சிரிப்பு முகமாயிருந்து கொண்டு தீன தயாளு வெகு சந்தோஷமாகவே யிருப்பான். தான் நன்னெறியை விட்டு வழுவாது கடவுளை நம்பியிருக்கும்வரையில் தனக்கு ஒரு விதக் குறைவும் வராது என்று அவன் ஒரே உறுதியாய் நம்பியிருந்தான்.
– தொடரும்…
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
– தீனதயாளு (நாவல்), முதற் பதிப்பு: 1902, ஐந்தாம் பதிப்பு: 1922, சுதேசமித்திரன் ஆபீஸ்.