(1902ல் வெளியான நாவல், ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
அத்தியாயம் 1-3 | அத்தியாயம் 4-6 | அத்தியாயம் 7-9
4. மகா தேவர் பிணியும் அவர் குடும்ப ஸ்திதியும்
“எல்லாப் படியாலு மெண்ணினா லிவ்வுடம்பு
பொல்லாப் புழுமலி நோய் புன்குரம்பை.”
இவர்கள் வந்து சேர்ந்த சமயமானது மகாதேவர் சொற் பம்பத்தியம் உட்கொண்டு களைப்பு மேலிட்டு உறங்கும் சமயமாகவிருந்தது. வாயிலிலிருந்து பின் தொடர்ந்த இரண்டொரு பந்துக்கள் அவரை எழுப்பப் போனார்கள்.
தீனதயாளு :- தொடாதேயுங்கள்: அவர்கள் எழுந்திருக்கும் போது எழுந்திருக்கட்டும்.
சாமி:- அது கெட்டது! குழந்தை குழந்தை என்று சதா மகாதேவர் புலம்பிக்கொண்டிருக்கிறார். உன்னைக் கண்டால் அவருக்கு போன பிராணன் திரும்பி வந்து விடுமே ! பாதி வியாதி தெளிந்து விடுமே!
ராமன் – ஒய் சாமி ! உமது படபடப்பு ஒருநாளும் போகிறதே யில்லையே! என்ன வயதாய்த்தா னென்ன, இப்பொழுதுதானே அவர் கண் மூடியிருக்கிறார்.
இப்படி யிவர்கள் விவாதம் பண்ணிக் கொண்டிருக்கையிலேயே இந்த சத்தத்தால் மகாதேவர் கண் விழித்துப்பார்த்து, ஆவலாய் தான் எதிர்பார்த்திருந்த தனது குமாரன் எதிர் நிற்கக்கண்டு, கண் ணுங் கண்ணீருமாக எழுந்துட்கார்ந்து “அப்பா குழந்தாய் வந்தா யா” என்று நாவு எழாதவண்ணம் துக்கத்தால் கேட்டார். அவர் முகத்தில் உண்டான துக்கத்தையும் அவரிருந்த இளைப்பையுங் கண்டு தீனதயாளு கண்ணீர் வடித்து விட்டான். இம்மாதிரி தகப் பனாரும் பிள்ளையும் ஒருவரை யொருவர் சந்தித்துச் சகிக்க முடி யாத துக்கத்தால் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கையில் மற்றவர்கள் வந்துதான் இவர்களை சாந்தப்படுத்த வேண்டியதாக விருந்தது.
சாமி – என்ன தீனதயாளு! இவ்வளவுதானா உன் படிப்பு! சைய்! விடு! நீ இவ்வளவு பைத்தியக்காரன் என்று எனக்குத் தெரியாது. என்ன முழுகிவிட்டது. எதற்காக விசனப்படவேண்டும். மனித சரீரம் என்றால் நோயும் உண்டன்றோ! தலைவலி, கால்வலி என்று ஒருவன் படுக்கிறது இல்லையா.
ராமன் – ஆம்! சகஜமாய்க் காய்ச்சல் கறுப்பு என்று அடிக்கடி ஒருவன் படுப்பது வழக்கமாக விருந்தால் அது தோன்றவே தோன் றாது. மகாதேவர் சரீரம் வச்சிர சரீரமல்லவா. ஒரு நாள் கால் வலித்தது, தலை வலித்தது என்று அவர் படுத்ததே யில்லையே.
சுப்பன் – ஓய் அத்தான்! மார்கழிமாதம் ஊதல் சாரலடிக்குமே. அப்பொழுது அவர் சரட்டாற்றில் ஸ்நானஞ் செய்ய விடியசாமத் திற்குப் போய்விடுவாரே. அவர் பலமும் தேகக்கட்டும் யாருக் குண்டு.
சாமி – வாருங்கள் நாமெல்லாம் வெளியில் போய் வருவோம். தீனதயாளு சூரியாஸ்தமனத்திற்கு முந்திச் சொற்பம் ஆகாரம் பண் ணிக்கொள்ளட்டும் என்று சொல்லி அவர்கள் வெளியிற் சென்றார்கள்.
தீனதயாளுவும் தனது தந்தையைக் கண்ணாரக்கண்டு அவர் தேகஸ்திதியை நன்றாக அறிந்து கொஞ்சம் விசனமடைந்தான். வெளியில் அதிகமாகக் காட்டிக்கொண்டால் எங்கு ஒருகால் தனது தந்தை ஏக்கப்படுவாரோ வென்று அக்காலத்திற்கு தக்கப்படி தான் அவ்வளவு அவநம்பிக்கைப் படாதவன் போலும்நடந்துகொண்டான். அன்று மாலைப்பொழுதான போதிலும் தனது தந்தையைச் சொற்ப மிளைப்பாரவிட்டுத் தனது பந்துக்களுடன் கலந்து பெரியவருக்கு வந்த வியாதியையும் அதற்கு நடந்து வரும் மருந்து விஷயங்களை யும் பற்றி விசாரிக்கலானான்.
தீனதயாளு – சிற்றி! அப்பாவுக்குக் காலில் இரணம் கண்டு எத் தனை நாளாயிற்று? யார் வைத்தியம் பண்ணுகிறான்? வைத்தியன் என்ன சொல்லுகிறான்?
தாயு-என் குழந்தை கேட்கிறதற்குச் சரியான பதில் சொல் லம்மா காந்தீ. என் குழந்தை நேரில் வந்த பின் இனி என் தம்பிக்கு மோசமில்லை. எப்படியாவது என் குழந்தை என் தம்பியைப் பிழைக்கவைப்பான்.
காந்தி- என் தீனமே! கேள், ஒன்றுமில்லை. அப்பா படுக்கை யில் படுத்து இன்றைக்கு எட்டுநாள் தானாயிற்று. போன வெள்ளிக் கிழமை சிராவணத்துக்கு எல்லாரோடும் கூட சரட்டாற்றுக்குப் போய் பூணூல் போட்டுக்கொண்டு வந்தார். மறுநாள் சனிக்கிழமை கால் வலிக்கிறது, என்னால் சரட்டாற்றுக்குப் போகமுடியாது. அகத்தில் கிணற்றடியிலேயே ஸ்நானம் செய்துவிட்டு காயத்திரி ஜபம் பண்ணுகிறேன் என்றார். அப்புறம் உன் அத்தான் வக்கிர மணியன் வந்து “நன்றாக விருக்காது, வருஷத்துக் கொருநாள் ஆற்றங்கரையில் ஜபமண்டபத்தி லுட்கார்ந்து தான் ஜபம் பண்ண வேண்டும்” என்றான். அப்படியே ஆகட்டும் என்று மடிசஞ்சியை வக்கிரமணியன் எடுத்துவர அவர் ஈரட்டாறு சென்று எல்லாருட னும் ஸ்நானம் செய்து ஜபம்பண்ணிவிட்டு எல்லாருடனும் பொழுது அடியிறங்குமுன் திரும்பி வீடுவந்துவிட்டார். ஆனால் வரும் பொழுது மாத்திரம் சொற்பம் கெந்திக் கெந்தி நடந்துகொண்டு, கைத்தடி ஒன்று பிடித்துவந்தார். நான் ஓடி வந்து “என்ன என்ன! காலில்!” என்று கேட்டேன். ஒன்றுமில்லை. உள்ளங்காலில் ஏதோ சொற்பம் முள் தைத்தாற்போல் வலிக்கிறது. நாளை பெயர் சொல்லாதவனைக் கூப்பிட்டு சோதித்துப் பார்க்கவேண்டும். என்றார். நான் பைத்தியக்காரி என்பது உனக்குத் தெரியுமே.இவ்வளவு தானே என்று இருந்துவிட்டேன். எனக்குப் பயமே தோன்ற வில்லை. அன்று நன்றாகச் சமையல் பண்ணியிருந்தேன். எல்லாக் குழந்தைகளையும் கூடவைத்துக் கொண்டு நன்றாகப் போசனம் பண்ணிவிட்டுப் படுத்தார். அன்று படுத்தவர்தான் இன்னும் இலை போட்டு உட்கார்ந்து உன் தகப்பனார் சாப்பிடவில்லை. நான் என்ன செய்யப்போகிறேனோ, தெரியவில்லை.
தீனதயாளு – சிற்றி! காயத்திரி ஜபத்துக்கு மறுநாள் காலை சோதித்துப் பார்த்தாரா?
காந்தி- ஆமாம், நமது வேலாயுதம் உனக்குத் தெரியாதா. அவன் போன ஞாயிற்றுக்கிழமை காலமே வந்து காலைச் சோதித் தான். வலம் உள்ளங்காலில் ஒரு சிறு முள்ளிருந்தது. அதை வாங்கிவிட்டான். கொஞ்சம் சீழ் வந்தது. அத்துடன் ஆபத்து விட்டதென் றிருந்கேன். முள்ளெடுத்த 5 – நாழிகைக் கெல்லாம் கால் அப்பமாக வீங்கிற்று. அன்று ஆரம்பித்த காய்ச்சல் இன்னும் நிற்கவேயில்லை. பகலெல்லாம் கைபொரியும்படி வெகு வேகமாக அடிக்கிறது. இரவில் கொஞ்சம் தணிகின்றது. அது என்ன மாயமோ. என்னமாய் முடியுமோ. என் தலை யெழுத்து எப்படி யிருக்கிறதோ.
தீனதயாளு – அப்பாவுக்கு எப்படி முள் தைத்தது. என்ன முள். சாதாரண முள்ளாகவிருந்தால் அது எடுக்கப்பட்டவுடன் உபாதி நீங்கிவிடுமே. வைத்தியன் காய்ச்சலைப்பற்றி என்ன சொல்லு கிறான்.
காந்தி – எல்லாம் மாயமாக விருக்கிறது. அந்த முள் சப்-பாத்து முள்ளாம். காலில் புரை கொஞ்சம் ஓடியிருக்கிறதாம். அது பட்ட முள்ளாம், தைத்தபிறகு சில நாளாய் காலிலேயே யிருந்துவிட்டதாம். அதை உடனே எடுத்திருந்தால் இந்த அவஸ் தை ஒன்றுமில்லையாம். இதெல்லாம் உன் அத்தான் வக்கிரமணி யன் குசு குசு என்று சாமி ஐயருடன் சொல்லக்கேட்டேன்.என்னை யார் லக்ஷியம் பண்ணி உள்ள சங்கதியை சொல்லுகிறார்கள்.
தாயு- அடி நாகு, அடியே சுந்தரி, வக்கிரமணியன் எங்கே போனான். அவனை குழந்தை வந்திருக்கிறான் என்று சொல்லி யாராவது ஒடிப்போய் அழைத்து வரக்கூடாதா?
சுந்தரி – தீனதயாளு வந்தது ஊரெல்லாம் தெரியுமே, அவ னுக்கு மட்டும் தெரியாமல் போய்விட்டதா, அவனைப் போய்க் கூப்பிடவேண்டுமா. அவன் ஒய்யாரம் ஒருநாளும் போகிறதில்லை.
நாகு – சுந்தரி, என்ன நீ எப்பொழுதும் இப்படி பேசுகிறாய், வக்கிரமணியன் களத்துக்குப் போயிருக்கிறான். அவன் அகத்தி லிருக்கமாட்டான். (இப்படி யிவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே வக்கிரமணியன் வந்து சேர்ந்தான்.)
வக்கிரமணியன் – வா, அம்மாஞ்சி. நீ விசாரப்பட்டு வந்து விடுவாய் என்று, எனக்கு அப்பொழுதே தெரியும், நான் தந்தி யடி க்கவேண்டாம், கடிதம் எழுதினால் போதும் என்று பல தடவை சொன்னேன். போனது போகட்டும். பணச்செலவு காலம் இப் போது. அவ்வளவுதானே ஒழிய நீ அஞ்சாதே.
தீனதயாளு – என்ன அத்தான் ! அஞ்சாதே என்கிறீர்கள். இங்கிருக்கின்ற ஸ்திதியைப் பார்த்தால் பயமாக விருக்கின்றதே.
வக்கிரமணியன் – போ! நீ! பைத்தியக்காரா. இந்த அசடு கள் சொல்லுவதை நம்பாதே. வேலாயுதம் வெகு கெட்டிக்காரன். இதுவரையில் சுகமாக உத்தியோகம் பண்ணிவிட்டு கொஞ்சம் விவ சாயத்தில் வயற்காட்டில் அதிகமாக அலைந்து திரிந்தார். அதன் மேல் உடம்பு பலங்குறைந்து வாடிற்று. இரண்டு மூன்றுநாள் சிரா வணம் காயத்திரி ஜபம் இவைகள் அடுத்தடுத்து வந்தன. ஸ்நா னம் பண்ணினார். நீர் கோத்துக்கொண்டு அதிச ஜ்வரம் வந்து விட்டது. இன்றையத்தினம் அவரைப் பார்த்து நீ பயப்படுகிறாயே. 4-நாளைக்குமுன் மட்டும் நீ பார்த்திருந்தால் சகிக்கவே மாட்டாய்; முந்தாநாள் தாபஜ்வரம். எள்ளுப்போட்டால் பொரியும். வேலாயுதம் ஒரு கலிக்கம் போட்டான். பாதி நீர் கரகர வென்று கண்கள் வழியாய் வடிந்தது. இன்று ஜ்வரஸஞ்சீவி இழைத்துக் கொடுத்திருக்கிறான். நாளை எழுந்துட்கார்ந்து சிவபூஜை பண்ணு வார். நாங்கள் எல்லாரும் என்னத்திற்கு இங்கு இருக்கிறோம். பயப்படாதே.
தீனதயாளு – வயற்காட்டில் சப்பாத்து முள்ளெங்கு வந்தது. கண்ணுக்குக் கலிக்கமாவது. இங்கிலீஷ் வைத்திய மறிந்த டாக் டர்கள் சமீபத்தில் ஒருவருமில்லையா? சாதாரண ஜ்வரமாக விருந்தால் கலிக்கம் மாத்திரை இவைகளில் தீரும். காலில் இரணத்துடனே இப்பொழுது நோய் கண்டிருக்கிறது. அதைப்பற்றி நீங்கள் யோசிக்கவில்லையா.
வக்கிரமணியன்- அதற்கென்ன. இதோ ஒருமைலுக்குள் வேங்கையூரில் டிரெஸ்ஸர் ஒருவனிருக்கிறான். அவனைக் காலமே கூப்பிட்டு வருவோம். அவன் கேட்ட பணம் கொடுப்பது ஒன்று தான் நாம் காணப்போகிறதே ஒழிய வேறொன்றுமில்லை. குப்பி யில் அவ்வளவு தண்ணீர் அடைத்துக் கொடுப்பான். அதுவும் யார் தொட்ட தண்ணீரோ. சிவபூஜை பண்ணும் பிராமண ஜன்மம் கெட்டுப்போகும். பிரயோஜனம் வேறொன்றுமில்லை. வேலா யுதத்தின் பலமான மாத்திரைகளுக்கு மேலா ஆஸ்பத்திரி குப்பித் தண்ணீர்!
தீனதயாளு — அப்படிச் சொல்லவேண்டாம். என்னவென்றாலும் இரண வைத்தியத்தில் இங்கிலீஷ் முறை சிலாக்கியமானது. நமது வேலாயுதனைப் பற்றி நான் இகழ்ச்சியாகச் சொன்னதாக எண்ணவேண்டாம். நமது அப்பாவுக்குக் காலில் இரணத்துடன் தாப ஜ்வரமிருப்பதால் டிரெஸ்ஸரை கூப்பிட்டு ஒரு தடவை பார்ப் பது தான் நலம்.
வக்கிரமணியன் – அதற்கென்ன, நாளைகாலை போவோம். அந்த விதமாயும் பார்த்துவிடுவோம். நீயோ இங்கிலீஷ் படித்து உத்தியோகம் பண்ணப்பட்டவன். இங்கிலீஷ் முறைப்படி பார்க்க வேண்டும் என்கிறாய். உன் தங்கையோ அப்பாவுக்கு யாரோ பார்வை பார்த்திருக்கின்றான். அதற்கு ஒரு கழிப்புக் கழிக்க வேண்டும் என்கின்றாள். வேலாயுதமோ ஐயர் நாளை எழுந்துட் கார்ந்து சிவபூஜை பண்ணாமற்போனால் நான் வைத்திருப்பது பூர மன்று, பூராங்காவிக்கல் என்கின்றான். எனக்கோ வேலாயுதம் கைராசிக்காரன். ஒருவிதப் பிசகும் வரமாட்டாது. ஸ்வாமி காப் பாற்றுவார், என்று தோன்றுகின்றது.
தீனதயாளு – மணிமந்திர ஒளஷதங்கள் என்று சொல்லுகின் றார்களே. அவ்விஷயங்களில் ஒன்றும் குறைவு வேண்டாம்.எப் படியாவது செய்து எவ்விதத்தாலாவது அப்பா உடம்பு அனுகூல மாகவேண்டும். காலமே டிரெஸ்ஸரைக் கூப்பிட்டு வந்து பார்த்து விட வேண்டும்.
இதற்குள் இரவாய்விட்டது. ஆகாரம் பண்ணிவிட்டு மறு படி சந்திப்பதாக அங்கிருந்தவர்கள் பிரிந்தார்கள். தீனதயாளு வக்கிரமணியனிடம் வரும்பொழுது வேலாயுதத்தைக் கூட்டிவரும் படி சொன்னான். அதற்கு அவன் இராத்திரி ஜாமத்துக்கு ஒரு ஒளஷதம் கொடுப்பதாக வேலாயுதம் சொல்லியிருப்பதாகவும் அத ற்குத் தப்பாமல் வருவான் என்றும் சொல்லிப்போனான். தீனதயாளுவுக்கோ தனது தந்தையின் தேகஸ்திதி ஒன்றே மேலிட்டிருந்தது. வேறொன்றும் அதிகமாகத் தோன்றவில்லை. ஒரு 10 நிமிஷகாலம் உட்சென்று தன் ஸ்நானம் அனுஷ்டானம் இவற்றை முடித்தான். இதற்குள் மகாதேவர் தனது நித்திரை தெளிந்து எழுந்தார். குழந்தை எங்கே எனவே, அவர்முன் வேகமாக ஓடி வந்து தீனதயாளு நின்றான். பெரியவர் அவன் உத்தியோகத்தைப் பற்றியும் அவனுக்குக் கிடைத்த அனுமதியைய் பற்றியும் பலவித மாகக் கேள்வி கேட்டார். சர்க்கார் வேலை தான் நமக்கு முக்கியம். துரை கோபித்துக்கொள்வார் என்றால் சீக்கிரம் நீ புறப்பட்டுப் போய் பெரும் ரஜா வேண்டுமாயிருந்தால் எடுத்துவர். எல்லாரும் சொல்லுவதைப் பார்த்தால் இன்னும் இரண்டொரு நாளில் என் தேகஸ்திதி சரிப்பட்டுவிடும் என்று தோற்றுகிறது. மேலும் எனக்கு மதகடி ஜோஸ்யரிடம் வெகு நம்பிக்கை. அவர் என் ஜாதகத்தைச் சுக்கிரநாடிக் கணக்கு பிரகாரஞ் சோதித்துக் கொடுத்திருக் கின்றார். அதைப் பார்த்தால் மாரக தசை எனக்கு இப்பொழுது இல்லவேயில்லை. உன் ஜாதகப்பிரகாரமும் இப்பொழுது கர்மத் துக்கு அதிகாரமில்லை. ஜாதகம் பொய்யாகுமா! ஜோஸ்யம் பிச குமா! அதிலும் இதுவரையில் மதக்டி ஜோஸ்யர் தவறினார் என்று ஒருவரும் சொல்லக் கேட்டதில்லை.
தீனதயாளு – அப்பா! ஏன் உங்களுக்கு இந்த ஸ்திதியில் வளவு கவலையுண்டாக வேண்டும். இரண்டு மாதச் சம்பளந்தானே போகும். நான் முழுச்சம்பளம் பிடித்தத்தில் லீவ் வாங்கிக் கொண்டு விடுகிறேன். தாங்கள் எப்பொழுதும்போல் எழுந்துட் கார்ந்து சரியாய் நடமாடும் வரையில் இவ்விடம் விட்டு நான் அசை வேனா! உத்தியோகம் முக்கியந்தான். தகப்பனாரைவிட அதிகமா குமா!எல்லா விதத்தாலும் நமக்கிப்பொழுது பணம் நஷடுமாகின்ற வேளை. அதனுடன் ஈசன் மனமிரங்கட்டுமே. ஜாதகங்களும் ஜோஸ்யங்களும் பிசகாகாமல் என்னையும் தங்களையும் பாதுகாக்கட் டுமே. நானிப்பொழுது ஒரு சங்கதி சொல்லுகிறேன். அதைமட் டும் தாங்கள் கேட்க வேண்டும். தங்களுடைய உடம்பு பழைய ஸ்திதிக்கு வருகிறவரையில் தாங்கள் ஒரு விஷயத்தைப்பற்றியும் கவலையே படக்கூடாது. அப்படி யிருந்தால்தான் ஒளஷதங்கள் பலிக்கும்.
மகாதேவர் – குழந்தாய், உன்னைக் கண்ட பிறகு எனக்கு இனி கவலையென்பதேது. இன்னும் நீ சாப்பிடவில்லைபோல் கண்கிறதே. யாரடி அங்கே! குழந்தைக்கு என் எதிரில் இலை கொண்டுவந்து போடு. என்னுடன் பேசிக் கொண்டே குழந்தை சாப்பிடட்டும்.
யஜமான் அவ்வாறு கட்டளை யிட்டதும் காந்தி வெகு பரபரப் பாய் இலை ஒன்று கொண்டுவந்து போட்டு உண்டி பரிமாறலானாள். தீனதயாளுவையும் அவ்வாறு விட்டு விட்டு அக்குடும்பத்தைப்பற்றி சற்று விசாரிப்போம்.
5. மகாதேவர் குடும்பம்
“கல்லாது நீண்ட ஒருவன் உலகத்து
நல்லறி வாளர் இடைப்புக்கு, மெல்ல,
இருப்பினு நாய் இருந் தற்றே இராஅ
துரைப்பினு நாய்குரைத் தற்றே.”
மகாதேவர் குடும்பத்தைப் பற்றி முன்னமேயே சுருக்க மாகச் சொல்லி யிருக்கின்றோம். அவருடைய மூத்த மனைவியின் மகன் தீனதயாளு. இவன் சிறுவயதில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் வருஷத்தி லிரண்டுமுறை இரண்டு மூன்று மாதம் தகப்பனாரிடம் வந்திருந்து போவான். மற்றைக் காலங்களில் தாயு தீனதயாளுவும் தனிக் குடித்தனம் கும்ப கோணத்திலோ அல்லது இவன் உத்தியோகம் பண்ணுமிடத்திலோ இருப்பார்கள். சணற்காலிற் மகாதேவர் இளைய ஸம்ஸாரம் காந்தி என்பவளும் அவள் வயிற்றிற் பிறந்த இரண்டு குழந்தைகளும் அவர் கூட இருந்தார்கள். இவர்களுடன் மகாதேவருடைய தமக் கையார்கள் இரண்டுபெயர்கள் வெகு வயது சென்றவர்களுண்டு. இவ்விருவருக்கும் வேறு குஞ்சு குழந்தைகள் கிடையாதாகையால் வெகு காலந் தொடங்கி தங்கள் தம்பியாகிய மகாதேவரையே தஞ் சமாக அடைந்தவர்கள். அன்றியும் அவ்விரு தமக்கையார்களிடமும் அவர் அதிக பட்சமாக விருந்தார்.
காந்தி யென்பவள் ஜம்புநாதபுரம் என்ற ஒரு கிராமத்திய வறிய அந்தணருடைய குமாரத்தி. மகாதேவர் தமது மூத்த மனைவி காலம் சென்ற பிறகு தமது வைதீக காரியங்களுக்கு ஒரு வித குறைவும் வரக்கூடாதென்று தமது கிரகஸ்தாசிரம தருமம் வழுவாதிருக்க இச்சிறுமியை அதிகபணம் செலவிட்டு மணந்தார். அவ்வம்மணியும் மகாதேவரிடம் வெகு அன்பும் ஆதரவுமாக விருந்து அவரிடமிரண்டு குழந்தைகளையும் பெற்றிருந்தாள். இவர்களில் ஒன்று ஆண், சங்கு என்று பெயர். மற்றொன்று பெண், மாந் என்று பெயர். ஆகவே சணற்காலில் மகாதேவர் வீட்டில் அவர் மனைவி அவருடைய இரு குழந்தைகள். அவரது இரு தமக்கைகள் எப்பொழுதும் ஸ்திரமாக வசித்து வந்தார்கள். அவருடைய மற்றொரு தமக்கையும் மூத்த மனைவியின் குமாரனும் அவரை விட்டுப் பிரிந்து வேறு இடங்களில் வசித்துக் கொண்டும் காலா காலங்களில் அவரிடம் வந்து கொண்டுமிருந்தார்கள். ஆனா லிவ்விருவரி டந்தான் மகாதேவருக்கு அதிக அன்பு; அதிக நம்பிக்கை. தீன தயாளு 25, 26-வயதுள்ளவன்தா னென்றாலும் இளம்பிராயத்தி லேயே இவனுக்கு கலியாணமாய் விட்டபடியால் இவனும் குடும்பி யாய்விட்டான். மகாதேவருக்கு தீனதயாளுவிடம் எவ்வளவு அன்போ அதைவிட பதின்மடங்கு அவனது குழந்தைகளிடமும்; தமது நாட் டுப் பெண் பிரஸவத்திற்கு அவளுடைய பிறந்தகம் சென்றால் எங்கு அவளுடைய சம்ரக்ஷணை நன்றாக நடக்க மாட்டாதோ வென்று நினைத்து ஒவ்வொரு பிரஸவத்திற்கும் சணற்காலுக்கே வரவேண்டும் என்று ஏற்பாடு செய்வார். தீனதயாளுவும் தனது தந்தை கட் டளை தவறாத உத்தமனாகையால் அப்படியே நடந்து கொள்ளுவான். மகாதேவர் உடம்பு அசௌக்கியமாக விருந்தகாலம் அவரது நாட் டுப் பெண் 4-ம் பிரஸவமாய் 2 – மாதமான காலம். ஆகவே அப்பொழுது சணற்காலில் தீனதயாளுவின் மனைவியும் அவருடைய 4- குழந்தைகளும் வசித்து வந்தார்கள். காந்தியோ தனது புருஷன் மனம் கோணாமல் அவர் நோக்க மறிந்து நடப்பதில் வெகு சாமர்த்தியக்காரி யாகையால் தீனதயாளுவைத் தன் குழந்தையைப்போலும், அவனது மனைவியைத் தன் வயிற்றிற் பிறந்த பெண்ணைப்போலும் நடத்திவந்தாள். தீனதயாளுவின் குழந்தைகள் பார்ப்பவர்கள் மனத்தை எல்லாம் கவரும். அழகான சிறு குழந்தைகளாகையால் அக்குழந்தைகளிடம் அவளாதரவா யிருந்தாள் என்பது ஆச்சரியப்படத்தக்கதன்று. எப்படியிருந்தா லும் காந்தி மகாதேவருடைய இளைய மனைவி. பழமொழியோ “இளையாளே வாடி மலையாளம் போவோம். மூத்தாளே வாடி முட்டிக்கொண்டு சாவோம்.” எல்லாரும் இளையாளிடம் அதிக அன்பு பாராட்டலாம். மகாதேவரும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். காந்தியும் அப்பதவியைப் பெற்ற காரணத்தால் அதிக அதி காரம் வகித்து விடலாம். ஆனால் மகாதேவர் உலகவழக்கத்தை நன் றாக அறிந்தவராகையால் எல்லாரையும் தமது கட்டளைக்கு அடக்கி ஆண்டு வந்தார். அன்பு ஆதரவு விஷயங்களில் ஒருவித குறைவு மின்றி எல்லாரும் தம் சொற்படி நடக்கும்படி செய்து வந்தார். இவர் குடும்பம் மூத்தாள் இளையாள் குழந்தைகள் என்ற வித்தி யாஸமில்லாமல் எவ்வளவு அழகாக விருக்கின்றது என்று எல்லாரும் சொல்லும்படி நடந்துவந்தார். சங்கு என்பவனுக்கு 14,15-வயது. சொற் இளைய ஸம்ஸாரத்தின் மூத்த மகனாகையால் அவன் சொற்பம் செல்லப் பிள்ளையென்றே சொல்லலாம். அவன் படிப்பு எவ்வளவோ சிரமப்பட்டார். பல விஷயமாக மகாதேவர் ஊர்களிலும் பல பந்துக் களிடம் படிக்க வைத்துப் பார்த் விட்டுப் பார்த்தார். தீனதயாளுவிடம் சொற்ப காலம் விட்டுப் பார்த்தார். சிறு வயது முதல் பிடிவாதத்திலேயே சங்குவுக்கு அதிகத் தேற்றமாகையால் ஒரு இடமும் சரிப்படாமல் ஊர் வந்துவிட்டான். மகாதேவருக்கு சிறு குழந்தைகளிடம் அன்புமுண்டு, கோபமு முண்டு. சங்கு ஏதாவது ஒரு வடையோ அல்லது முறுக்கோ வேண்டுமென்றால் அவனுக்குக் கொடுக்கக் கட்டளையிடுவார். அது போதாதென்று அவன் அழுவான். இன்னு மதிகமாகக் கொடுக்க உத்தரவிடுவார். அதையும் பெற்றுக்கொண்டு விம்மி விம்மி அழு வான். சங்குவின் கையில் இரண்டு மூன்று பெயர்களுக்கு போது மான பட்சியங்களிருந்தும் அவன் அழுவதை மகாதேவர் பார்த்து வேண்டாம் அழாதே அடிப்பேன் என்று பலவாறு பயமுறுத்துவார். என்ன சொல்லியும் கேட்காமல் சங்கு அழுவான். உடனே மகாதேவருக்குக் கோபம் பொங்கிவிடும். கையினண்டை யிருப்பது எதாகவிருப்பினும் அதை யெடுத்துக்கொண்டு சங்குவை நையப் புடைத்து விடுவார். என்ன தான் அடித்தாலும் அவன் அழுகை யும் ஓயாது. போதும் என்ற பதமும் அவன் நாவிலிருந்து வரமாட் டானு. மகாதேவர் தமக்கையார்கள் ஓடிவந்து சங்குவைக் கொல் லைப்பக்கம் தூக்கிப்போய் வீட்டில் முறுக்கு வைத்திருக்கும் பாத் திரத்தையே எடுத்துவந்து அவன் முன்பாக வைத்து ‘இந்தா! கொட்டிக்கொள்!’ என்பார்கள். அப்போது அவன் அழுகை நின்ற தென்றாலும் அதன் அதிர்ச்சியாகிய விக்கல் நிற்க ஒரு ஜாமம் செல்லும். இப்படியாகச் சங்கு பிடிவாதத்திலும் செல்லத்திலும் வளர்க்கப்பட்டுக் கெட்டுப்போன சிறுவன். இவனிடம் மகாதேவ ருக்கு அதிக நம்பிக்கை கிடையாது. ஆனால் காந்தி என்ற பெண் ணிடம் அதிக விசுவாஸமுண்டு. இனிமேல் நடக்கப்போகிற சங்கதிகளை நாம் அறிய நமக்கு எச்சங்கதிகளெல்லாம் தெரிய வேண்டுமோ அவைகளைப்பற்றி இவ்விடம் சுருக்கமாகச் சென் னோம். விளையும் பயிர் முளையிலேயே அறியலாம் என்ற உலகச் சொல்பிரகாரம் சிறு வயதிலேயே சங்குவின் பிடிவாதத்தையும் மற்றைய குணங்களையும் மகாதேவர் ஒருவாறு அறிந்தவராய் ஏதோ தன்னாலியன்றமட்டும் அவனை நல்வழியில் கொண்டுவர முயன்று முடியாமல் விட்டுவிட்டார்.
6. தீனதயாளு நடத்திய வைத்தியம்
“உறுதி பயப்ப கடைபோகா எனும்
இறுவரை காறு முயல்க; இறும் உயிர்க்கும்
ஆபுண் மருந்தொழுக்க றீதன்றால்; அல்லனபோல்
ஆவனவும் உண்டு சில.”
தீனதயாளு பகாசுரகிரியை விட்டு வெகு வேகமாய் வந்து தனது தந்தையிருந்த நிலைமையைக் கண்டதும், அவருக்கு அதுவரையில் நடந்துவந்த வைத்தியம் முதலியவற்றைக் கேட்டதும், தனக்குள்ளேயே சில சந்தேகங் கொண்டுவிட்டான். தான் மனங்கலங் கினால் எல்லாரும் மனங்கலங்கி விடுவார்கள் என்ற எண்ணம் அவனுக்கிருந்த படியால் உள்ளத்தில் எவ் வளவோ அச்சமிருந்தபோதிலும் அதை வெளிக்காட்டிக்கொள் ளாமல் மறுநாள் முதல் தான் தனது தந்தைக்கு நடக்கவேண்டிய வைத்தியத்தைப் பற்றித் தீர்மானித்துக்கொண்டான். சணற்காலில் இவனுக்குப் பலர் பந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு சமயங் களில் கிடைக்கும் லாபங்களை மட்டும் கைப்பற்றி மற்றைக் காலங்களில் மறைவாகத் திரியும் குணமுள்ளவர்களாக விருந்தார்கள். இவர்கள் எப்பொழுதும் காத்திருந்தார்களே யன்றி செய்யவேண் டியவை இன்னவை யென்ற பகுத்தறிவற்றவர்கள். இவர்களெல் லாரும் ஒரு மனிதனுக்குச் சங்கடம் வரும்பொழுது ஒருவித காரி யத்துக்கும் உதவாதவர்கள். இவ்விதமான பந்துக்களிடம் நமது தந்தையை விடாமல் நாம் நேரில் வந்தோமே என்று தீனதயாளு தன் மனத்தில் திருப்தியடைந்தான். நாம் நமது தந்தையிடம் இரவு பகல் விட்டுப் பிரியாமலிருந்து வேளை தவறாது ஔஷதங்கள் செலுத்தி அவர் வியாதியைக் கண்டிக்கவேண்டும் என்று கருதி னான். தான் சணற்கால் வந்துசேர்ந்த இரவே அவன் வேலாயுதத் துக்கு சொல்லியனுப்பி அவனைச் சில கேள்விகள் கேட்டு அவனுக்கு வைத்தியம் அதிகமாகத் தெரியாதென்றும்,ஏதோ தனது கையிலி ருக்கும் பழைய மருந்துகளின் பெருமையால் புகழ்பெற்றவன் என்றும் அறிந்துகொண்டான். மறுநாட்காலை வேங்கையூர் சென்று அவ்விடத்திய டிரஸ்ஸரை அழைத்து வந்தான்.
நமது நாட்டிலிருக்கும் டிரஸ்ஸர்கள் பெரும்பாலும் வெகு நல்லவர்கள். வேங்கையூர் டிரஸ்ஸர் மட்டும் இவ்வினத்தை விட்டுச் சிறிது விலகியிருந்தார். இவர் மனத்தில் தாம் அந்நாட் டையே வியாதியிலிருந்து நீக்கவந்த தந்வந்திரி என்ற எண்ணமிருந் தது. இதற்கு அவ்வூரார்கள் மற்றொரு காரணமும் சொல்வ துண்டு. இந்த டிரஸ்ஸர் வேங்கையூருக்கு 10 வருஷங்களுக்கு முந்தி வந்தவர். அவர் வந்த இரண்டு வருஷத்திற்கெல்லாம் அவ ருக்குக் குஷ்டரோகம் வந்ததாம். எவ்வளவோ தமக்குத் தெரிந்த மட்டும் இங்கிலீஷ் வைத்தியங்கள் பண்ணி அதில் ஒன்றும் பலிக் காமல் நாட்டு வைத்தியம் அப்பியசித்து அதன் பிரகாரம் மூலிகை கள் புசித்து பத்தியங்களிருந்து தமக்கு வந்த குஷ்டரோகத்தை நீக்கிக் கொண்டாராம். ஆகையால் அவர் தந்வந்திரியின் அவ தாரம் என்பதற்கு ஆக்ஷேபம் உண்டா என்று அவ்விடத்திய ஜனங்கள் சொல்லுவார்கள். இந்த ரோகம் அவருக்கு முதலில் வந்து, பின் அவரைவிட்டு நீங்கியது பொய்யோ மெய்யோ,அது ஈசனுக்குத்தான் தெரியும், அக்காரணத்தால் அவருக்கு நாட்டுவைத்தியம் இங்கிலீஷ் வைத்தியம் இரண்டும் நன்றாக வரும் என்ற பெயர் மட்டும் வெகு பிரசித்தமாயிருந்தது. அப்பெயரால் அவர் வெகு தனவானாய்விட்டார் என்பது மட்டும் திண்ணம். யாராவது அவரிடஞ் சென்று அவஸரம் என்று அழைத்தால் 100 ரூபாவுக் குக் குறையாமல் தமக்குச் சேரவேண்டிய கூலியைப் பேசிக் கொண்டு அதில் பாதிவாங்கிப் பெட்டியில் வைத்துப் பூட்டிவிட்டுத் தான் தம் வீட்டைவிட்டுப் புறப்படுவார். தயை, தாக்ஷண்ணியம், கருணை என்ற குணங்கள் அவரிடம் எள்ளளவேனும் கிடையாது. சமயத்தில் பணம் கைப்பற்றிக் கொள்ளாவிட்டால் சமயம் கடந்து போனபிறகு ஒருவரும் தமக்குக் கொடுக்கமாட்டார்கள் என்பது அவருடைய சித்தாந்தம். வேங்கையூர் ஆஸ்பத்திரியை வெகு கிரா மங்கள் நம்பியிருந்தபடியால், கிராமத்தார்களில் சிலர் இங்கிலீஷ் வைத்தியத்தில் நம்பிக்கையில்லாதவர்களா யிருப்பார்கள் என்ற எண்ணத்தால், இந்த டிரஸ்ஸர் தனக்கு நாட்டுவைத்தியம் யூனானி வைத்தியம் எல்லாம் ஸாங்கோபாங்கமாகத் தெரியும் என்று சொல்லி அம்முறைப்படியே மருந்து கொடுப்பதாக மருந்துகள் கொடுத்து தமக்குச் சேரவேண்டிய கூலியைக் குறைவின்றிப் பெற்றுக்கொள்ளுவார். டிரஸ்ஸர் உத்தியோகத்தின் கௌரவத்தா லிவருக்குப் பலவித அதிகாரங்கள் உண்டு. சில சிறு குழந்தைகள் தாங்கள் சில பரீ க்ஷைகளுக்குப் போகுமுன் அம்மை குத்தப்பட்ட சர்டிபிகேட் வாங் கவந்தால் அவர்களுக்கு அம்மை சரியாகக் குத்தப்பட்டு பலித் திருந்தபோதிலும், அவர்களுக்கு அம்மையே போட்டியிருந்தபோதி லும், 1000 வடுக்கள் முகத்தில் காணப்பட்டபோதிலும் ஒவ்வொருவரிடமும் 5 ரூபா கூலி தவறாமல் வாங்கிக்கொண்டே ஸர்டிபிகேட் கொடுப்பார். சர்க்கார் மூலமாய் ஏதாவது அடிதடி கொலை முதலிய வியவகாரங்களுக்கு இவர் போய் பார்த்து சர்டிபிகேட் கொடுக்கும்படி உத்தரவு வந்திருந்தால் அதில் நியாயம் எப்படி யிருந்தபோதிலும் தமக்கு அதிகக்கூலி கொடுக்கப்பட்டவனுக்கு நல்ல சர்டிபிகேட் கொடுப்பார். ஏதாவது மொட்டை விண்ணப் பங்கள் போய் மேலான அதிகாரிகள் தன்னைப் பரிசோதிக்க வந்தால் அவர்களுக்கு வாய்க்கினிமையான தாதுபுஷ்டி லேகியங்கள் கூலி கேட்காமல் கொடுத்தும் மற்றவிதமாக நடந்துகொண்டும் அவர்கள் தன்னைப்பற்றி நல்ல அபிப்பிராயங்கொண்டு திரும்பும்படி. செய் வார். இவர் சட்டப்படி யூனியன் சேர்மன். அந்த அதிகாரத்தால் எங்கு ஒருகால் ஜாஸ்தி வரிபோட்டு விடுவாரோவென்று ஜனங்களி வரிடம் பயந்து நடப்பார்கள். இவருக்கு மாதச்சம்பளம் 40 ரூபா வென்றாலும் 10 வருஷங்களுக்குள் 40 ஆயிரம் சம்பாதித்திருந் தார் என்றால் வைத்தியத்தால் வரும் லாபமே லாபம்.
இந்த டிரஸ்ஸரிடந்தான் தீனதயாளுவும் சென்றது. இவன் தம்மை நாடிவந்ததை அவர் அறிந்து கொண்டு, அதற்கு முன்ன மேயே இன்ன ஊரில் இன்னார் உடம்பு செளக்கியமில்லாமலிருக் கின்றார்கள் என்ற சங்கதியு மிவருக்குத் தெரிந்த விஷயமாகையால். தீனதயாளு வந்த காரணத்தையு மறிந்துகொண்டார். வெகு யுக்தி யாக முதல் முதலில் டிரஸ்ஸர் தீனதயாளுவிடம் பகாசுரகிரியின் நீர்வளம் நிலவளம் முதலியவைகளைப்பற்றி விசாரித்தார். அதன் பிறகு, அவனுடைய உத்தியோகம் சம்பளம் இவைகளைப் பற்றியும் விசாரித்தார். தீனதயாளு தான் அதற்கு முந்திய இரவு தான் வந்ததாகவும் தனது தந்தை தேகஸ்திதி நன்றாகவில்லை யென்றும் டிரஸ்ஸர் அவசியமாக வந்து பார்க்கவேண்டும் என்றும் வேண்ட, அதற்கு டிரஸ்ஸர், ஆம் நல்லது மகாதேவருக்கு உடம்பில் நோய் கண்டு இப்பொழுது எத்தனை நாளாயிற்று, என்ன நோய்? என,
தீனதயாளு – ஐயா எனது தந்தை கீழே படுத்து 8-9 நாளா யிற்று என்கிறார்கள். விடாஜ்வரமாம். அதனுடன் வலக்காலில் ஏதோ முள் தைத்த காரணத்தால் அதிக வீக்கமும் வலியுமாம். இவ்வளவு மட்டும் தான் எனக்குத் தெரியும். தாங்கள் வந்து தங்களுடைய வைத்தியக்கண்களால் பார்த்தாலல்லவா மற்றவைகள் வெளியாகும்.
டிரஸ்ஸர்–8, 9 நாளாக விடாக்காய்ச்சல், கால் வீக்கம், முள் தைத்தகால், நல்லது இதுவரையில் வைத்தியம் பார்க்கவே யில்லையா?
தீனதயாளு – தெரியாதா தங்களுக்கு, ஊருக்கு ஒருபரிகாரி யிருக்கின்றான். ஏதோ வேலாயுதம் அம் முள்ளை எடுத்து காய்ச்சலுக்கு மாத்திரை கொடுத்து வருகிறானாம். நானே நேற்றுத்தான் வந்தேன்.
டிரஸ்ஸர்– இவ்விடத்திய வழக்கம் உங்களுக்கு நன்றாகத் தெரியாமலிருக்கலாம். இக்கிராமத்தார்கள் எல்லாவித வைத்தியங் களும் முதல் முதல் கடைசிவரையில் பார்த்துவிட்டு இனி சாத்திய மில்லை என்ற பிறகுதானிவ்விடம் வருவது வழக்கம்.
தீனதயாளு – அவ்வழக்கம் எனக்குத் தெரியக் காரணமில்லை. நானே நேற்று வந்தவன். பலவிடங்களில் நான் இங்கிலீஷ் முறை யில் வைத்தியம் பண்ணி நோய் தீருவதைப் பார்த்திருக்கப்பட்ட வனாகையாலும், காலில் ஒரு காயத்துடனும் வீக்கம் வலி யிவை களுடனும் ஜ்வர மிருப்பதால் ஒருகால் காலில் ஏதாவது கட்டி புறப்படு கின்றதோ என்ற சந்தேகத்தாலும், தாங்கள் வந்து பார்க்க நான் வேண்டிக்கொள்ளுகின்றேன். நாட்டு வைத்தியர்கள் சஸ்திர வைத்தியத்தில் தேர்ந்தவர்களில்லை யென்றும் சஸ்திர வைத்தியம் இங்கிலீஷ் முறையில் நன்றாக விருக்கின்ற தென்றும், எனது கொள்கை யாகையால் தங்களிடம் வந்தேன்.
டிரஸ்ஸர்– இது தான் தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர் களுக்கு முள்ள வித்தியாஸம். தாங்கள். எல்லாம் தெரிந்தவர்களா யிற்றே. வைத்தியம் என்பது வெகு பொல்லாத வேலை. ஏதோ எங்கள் சிரமத்துக்கு ஏதாவது கொடுக்கவேண்டு மல்லவா. உங்களை நம்பித்தானே ங்களிந்த சாஸ்திரத்தி லிவ்வளவு சிரமப்பட்டிருக் கின்றோம். அந்த விஷயமாய் ஒரு ஏற்பாடு செய்துகொண்டு தான் நான் வெளிக்கிளம்புகிறது. ஏனெனில் வழவழ வென்றிருப் பதைக்காட்டிலும் எதிலும் கண்டிப்பாக விருக்கிறது எல்லா வற்றிற் கும் நன்மை.
தீனதயாளு – அதற்கு என்ன ஆக்ஷேபம். தாங்கள் முதல் முதல் வந்துபார்த்து இவ்விதமான நோய் இது, இதற்கு இவ்வளவு ரூபா எனக்குக் கூலி கொடுக்கவேண்டும், என்று சொல்லுங்கள் அந்தப்படி நடத்த நான் சித்தமாக விருக்கின்றேன். அதில் தாங்கள் சந்தேகப்படவேண்டாம்.
டிரஸ்ஸர்- இப்படித்தான் வெகு பெயர்கள் என்னிடம் தேனா ழுகப்பேசி அழைத்துப்போவது வழக்கம். வியாதி இன்ன தென் பதை யறிந்துகொண்டு அதன் பிறகு எனக்குச் சொல்லியனுப்பா மல் வியாதிக்குத்தக்கபடி நாட்டுவைத்தியம் செய்தோ அல்லது கைம் மருந்து கொடுத்தோ வியாதியைச் சௌக்கியப்படுத்துவது வழக்கம் அப்படி அநேக விடங்களில் நான் மோசம் போயிருக்கின்றேன். ஆகையால் முதல் முதல் நான் வந்து பார்த்து வியாதியின் பெயரை மட்டும் சொல்லி விட்டுத் திரும்புவதாக விருந்தால் எனக்கு 25 ரூபா இப்போதே கொடுத்து தாங்களே வண்டி வைத்து அழைத் துப் போகவேண்டும். இல்லை, நானே பார்க்கலாம் என்று உங் களுக்கு மனமிருந்தால் எனக்கு 100 ரூபாவுக்குக் குறையாமல் கொடுக்க வேண்டும். அதில் பாதி புறப்படும் முன் செலுத்த வேண்டும். மற்றத்தொகை வியாதி அனுகூலமான பிறகு செலுத் தினால் போதும். அதன் பிறகு தாங்கள் என் சிரமத்திற்காக என்ன வெகுமானம் பண்ணினாலும் பெற்றுக்கொள்ளக் காத்திருக்கின்றேன்.
தீனதயாளு – இதோ ரூயா 50, வாருங்கள், என்றான்.
ஏனெனில் இவன் அதற்கு முதல் நாள் இராத்திரியே தான். காலையில் பார்க்கப் போகும் டிரஸ்ஸரைப் பற்றி எல்லாம் விசாரித்து அவர் 50 ரூபா வாங்கிக் கொண்டு தான் புறப்படப்பட்டவர் என்ற சங்கதியையு மறிந்திருந்தான். இவனுடைய மனோவேகம் தனது தந்ை த சௌக்கியமாக வேண்டு மென்பது ஒன்றைவிட வேறில்லை. அவருடைய காலில் கண்டிருந்த ராஜப்பிளவை என்ற கட்டி யொன் றும் அதை சோதித்துத்தான் ஆற்றவேண்டும் என்றும், அந்த வேலை இங்கிலீஷ் முறையாகத்தான் நடக்கவேண்டும் என்றும் இவ னுக்கு நன்றாக மனதிற்குள்ளேயே விளங்கிவிட்டது. அந்தப்படி செய்ய வேங்கையூர் டிரஸ்ஸரைவிட வேறொருவரும் சமீபத்தி லில்லையாதலால் அவரைக் கொண்டு தான் பார்க்க வேண்டும் என்ற நிச்சயம் செய்து விட்டான். வ்வாறு நிச்சயித்த பிறகு அவருக்குக் கொடுக்கவேண்டிய விஷயத்தில் பின் வாங்குவதால் ஒருவித பிராயோசனமில்லை என் று கருதினான். சில வைத்தியர்கள் முதல் முதல் நோயாளியைப் பரீக்ஷித்து விட்டு அப்புறம் கூலி பேசிக்கொள்வார்கள்; ஆனால் வேங்கையூரார் வழக்கம் வேறாக விருந் தது. அப்படியே தீனதயாளுவும் மனப்பூர்வமாய் நடந்து கொண் டான். அதற்கு மேலும் அவன்,
ஐயா டிரஸ்ஸரே! தாங்கள் ஏதோ நான் பணம் கொடுத்து உங்களை சிகித்ஸை செய்ய வேண்டிக் கொள்வதாக நினைக்க வேண் டாம். என் தந்தையையே தங்களிடம் ஒப்பி வைத்தேன். அவ ரைக் காப்பாற்றி விட்டு அதன் பிறகு நீங்கள் என் பிராணனை அதற் குக் கூலி என்று சொல்லிக், கேளுங்கள். அதையும் நான் கொடுக் கச் சித்தமாக விருக்கின்றேன் என்றான். டிரஸ்ஸர் இச் சிறுவன் சொன்னதைக் கேட்டதும் மனமிளகி விட்டார். முன்பின் யோசி யாமல் இவர் கேட்டமாத்திரத்தில் அலக்ஷியமாய் 50 ரூபாயை அவ்வளவு எளிதாய் இதுவரையில் ஒருவனாவது எடுத்துக் கொடுத் ததை அந்த டிரஸ்ஸர் கண்டதே யில்லை. மேலும் தீனதயாளு வெகு பரிதாபமான தோற்றத்துடன் என் தந்தையைக் காப்பாற்றி விட்டு நீங்கள் என் பிராணனைக் கேட்டாலும் கொடுப்பேன் என்று சொன்ன சொல் அவன் பஞ்ச பூத சாக்ஷியாயும் தனது தந் தையின் மேல் தான் வைத்திருந்த பூர்ண அன்பாலும் சொல்லப் பட்ட சொல்லென்று விளங்கி விட்டபடியால் இவ்வளவு உண்மை யான உத்தம புத்திர னொருவனுக்கு நாம் சரியாய் நடக்காவிட்டால் தெய்வம் நம்மைக் கெடுத்து விடும் என்று அஞ்சலானார். இவ்விரு காரணங்களுக்கும் மேலாக தீன தயாளு ஒரு சர்க்கார் உத்தியோகஸ் தன் ஆகையால் அவனுக்கு நாம் சரியாக நடந்து கொண்டால் நமக்கு க்ஷேமமுண்டென்றும் அவர் மனத்தில் தோன்றிற்று.
டிரஸ்ஸர்- ஐயா! ஐயா! இதோ புறப்பட்டு விட்டேன், வாருங் கள், என்னால் என்ன ஆகவேண்டுமோ அதில் ஒருவித குறைவு மில் லாமல் நடந்து கொள்ளுகிறேன், அப்புறம் ஆண்டவன் செயல், என்று சொல்லி, தனது வைத்தியப் பெட்டி சகிதம் புறப்பட்டுவிட் டார். இவ்விருவரும் சடுதியில் சணற்கால் வந்து சேர்ந்தார்கள். தினதயாளு தான் டிரஸ்ஸரை அழைத்து வருவதாகச் சொல்லிப் போனவனாகையால் அவ்வைத்தியர் வரும் காக்ஷியை அவ்வூரார்களெல்லாம் எதிர் பார்த்து நின்றார்கள். அவருடைய வண்டி மாடுகளின் அழகை மெச்சியவர்கள் சிலர். அவருடைய வில்வண்டியின் அமைப்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் சிலர். இவர்க ளெல்லாரும் பலமுறை அவருடைய வண்டியையும் பார்த்திருந்தவர் கள் என்றாலும் தங்களுடைய ஊருக்கு டிரஸ்ஸர் வந்த பொழுது நேராக ஒருமுறை அவைகளைத் தாங்கள் புகழ்ந்தாற்றான் பெருமை யென்பது இவர்களுடைய கொள்கை. ஒருவன் மாட்டுக் கொம்புக ளில் தைக்கப்பட்டிருந்த குமிழ்களைப் பார்த்து இவைகள் கும்பகோ ணத்தில் தான் உண்டு என்றான்; மற்றொருவன் நமது ஊருக்கு அடுத்த சிறு குழைச் சாவியில் ஒரு பாதிரி யிருக்கின்றாரே அவரு டைய பெட்டிவண்டி அழகு, இதனினும் அவருடைய மாடுகளின் கொம்பில் கட்டியிருக்கும் குமிழ்கள் சீர்மையிலிருந்து நேராக வந்த வைகள் என்றான்.
வெளியிலிவ்வாறு ஜனங்கள் பேசட்டும். மகாதேவருடைய வீட்டில் என்ன நடந்த தென்பதைச் சற்று விசாரிப்போம். டிரஸ் ஸர் தாம் மகாதேவரைப் பார்த்ததும் அவரை வணங்கிவிட்டு தம் மைத் தீன தயாளு அழைத்து வந்ததைச் சொல்லி “நான் என்னால் கூடிய மட்டும் முயன்று எப்படியாவது தாங்கள் இன்னும் ஒரு வாரத்தில் எப்பொழுதும்போல் நடமாடும் நிலைமைக்குக் கொண்டு வந்து வைக்கின்றேன்” என்றார்.
மகாதேவர் – குருடன் கண்ணைத்தானே வேண்டுகின்றான். எப்படியாவது என் கால்வலி நீங்கி நான் நடமாடும்படி செய்யுங்கள். எனக்கோ இனிச் சிரஞ்சீவியா யிருக்கவேண்டும் என்ற ஆசையில்லை. எல்லாவித சௌக்கியங்களும் நான் அனுபவித்தாய் விட்டது.இன் னம் கொஞ்ச காலமிருந்து என் தீனம் நல்ல பதவியிலிருக்கிறதை இக்கண்களால் பார்த்துவிட்டு அவன் ஸம்ஸாரம் அன்பாக அளிக் கும் போசனத்தை அவனுடனிருந்து கொண்டு 6 மாதகாலமாவது சாப்பிட்டுவிட்டுப் பிராணனை விடவேண்டும். அப்படியின்றி மாண்டு விடுவேனேயானால் என் நெஞ்சம் வேகாது. பிள்ளையென்றால் எல் லாரும் என் தீனதயாளு ஆவார்களா. பெண்ணென்றால் எல்லாப் பெண்களும் என் நாட்டுப் பெண்ணாவார்களா?
டிரஸ்ஸர்- ஐயா, தாங்கள் சிறிதேனும் சிந்திக்க வேண்டாம். தாங்கள் சிவபூஜா துரந்தரர். தங்களுக்கு ஆண்டவர் ஒரு நாளும் குறை செய்யார். பலவருஷம் தங்கள் குழந்தையிடம் தாங்கள் வாழ் ந்து அவ்வம்மணி அளிக்கும் அமுதைப் புசிக்கலாம். நானிப்பொழுது தங்களை நன்றாகப் பரீக்ஷித்துப் பார்த்து அதன்மேல் சிகித்சை நடத் தவேண்டும். இப்பொழுது இவ்விடத்தில் ஒருவரும் அதிகமாக விருக்கக்கூடாது. தங்கள் குமாரர் மட்டு மிருந்தால் போதும்.
இப்படி வைத்தியர் சொன்னதும் தீனதயாளு தன்னைச் சுற்றி ஒரு தடவை ஒரு பார்வை பார்த்தான். எல்லாரும் அப்படி அப்படி ஒதுங்கி வாயிலிலும் திண்ணையிலும் நடையிலும் போய் நின்றார்கள். அதன்றோ நற் குடும்பத்தின் நடவடிக்கைக்கு அடையாளம். காந்தி மட்டும் அருகாமையில் சொற்பம் ஒதுங்கி நின்றாள். முதல் முதல் வைத்தியர் கொஞ்சம் நீர் வாங்கி அதை பரீக்ஷித்து பார்த்தார். அதன்மேல் தாது பரீக்ஷை, இருதய பரீக்ஷை, தேக பரீக்ஷை, முத லியவைகளை நன்றாகச் சாவகாசமாய்ச் செய்தார். மகாதேவருடைய காலை வெந்நீரால் நன்றாகத் தேய்த்துக் கழுவி விட்டு அதை எவ்வளவு விதமாகச் சோதிக்க வேண்டுமோ அவ்வளவு விதமாகச் சோதித்தார். முள்ளெடுத்த இடம் மூடி நன்றாக கால் வீங்கியிருந்தது. வைத்தியர் அதைத் தொட்டுப் பார்க்கும் பொழுதெல்லாம் அதிக வலி. மகாதேவர் எப்படியாவது இவர்கள் நன்றாக பரீக்ஷிக்கட்டும் என்று பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டிருந்தார். எல்லா பரீக்ஷைகளும் முடிந்துவிட்டன. வைத்தியர் தனது கைகளைச் சுத்தி செய்து கொண்டு பயப்படவேண்டாம். எல்லாம் இன்னும் 4,5 நாளில் அனுகூலத்துக்கு வந்துவிடும் என்று தைரியம் சொன்னார். இவர் சொன்னதைக் கேட்டதும் எல்லாரும் ஓடிவந்து வெகு ஆவலுடன் எப்படியாவது மகாதேவரை முன்நிலமைக்குக் கொண்டு வந்து வைப்பது உங்கள் தயவு என்றார்கள். இவர்களுள் தீன தயாளு, காந்தி, தாயு இம்மூவர்கள் மனம் பதைத்த பதப்பை யாரால் கணக்கிடக்கூடும். சொற்பம் குழப்பம் நின்றதும் வைத்தி யர் காலில் ஒரு சிறு சிரங்கு புறப்படுகின்றது. அது இன்னும் பழுக்கவில்லை. காயாக விருக்கின்றபடியாற்றான் இவ்வளவு குத்தலும் வலியும். அநேகமாய்ப் பழுதுவிட்டது. மேலுக்கு இன்று ஒரு எண்ணெய் தடவி போஸ்தக்காய் போட்டு வெந்நீர்வைத்து ஒற்றிடம் போட வேண்டும். வலிக்கு வெகு இதமாக விருக்கும். உள்ளுக்கும் மருந்தனுப்புகிறேன். இதை இரண்டுமணிக் கொரு முறை நான் சொல்லியனுப்புகிறபடி சாப்பிடவேண்டும். நாளைக் காலையில் 5 நாழிகைக்கு நான் வந்து அதைச் சோதித்துப் பார்க் கின்றேன். கையாடலாம். கையாடி சீழ் வெளி வந்து விட்டால் உடனே அனுகூலம் என்றே சொல்லலாம்.என்று தெரிவித்து விட்டுத் தீனதயாளுவை மட்டும் தன்னுடன் ஆஸ்பத்திரிக்கு வரும் படி அழைத்துக்கொண்டு புறப்பட்டார். தான் ஒரு நாழிகைக்குள் திரும்பி வருவதாகவும் அதற்குள் எல்லாம் சித்தமாக விருக்கட்டும் என்றும் தான் வந்து தனது தந்தைக்கு பத்தியம் கொடுப்பதாகவும் தீனதயாளு சொல்லிவிட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றான். ஊரை விட்டுச் சாலையில் வந்து வண்டியில் உட்கார்ந்ததும் வைத்தியரைப் பார்த்து,
தீனதயாளு – ஐயா, தாங்கள் என் தந்தையைப் பரிசோதிக் கும்பொழுது நான் தங்களை நன்றாகக் கவனித்துப் பார்த்தவன். ஒவ்வொருவித பரீக்ஷையிலும் தங்கள் முகம் அதிகமாக வாடிற்று. “புண்வைத்து மூடார் பொதிந்து” என்ற கொள்கைப்படி இரணம் கண்டால் அதை அறுத்தே ஆற்றவேண்டும் என்பது திண்ணம். ஆனாலிந்த விஷயம் சுலபமான விஷயமா? சுலபம் என்றிருந்தால் அதற்குத் தகுந்த தைரியம் உங்களிடம் விளங்குவதாக எனக்குத் தோன்றவில்லையே. ஏதோ நான் சிறு பிள்ளைத் தன்மையால் அதிக பயம் பயப்படலாம். எல்லாவிதத்திலும் என்னை விட என் தந்தை யின் நன்மையைக் கருதினவன் ஒருவனுமில்லை. ஆகையால் உள் ளதையுள்ளபடி ஒன்றும் ஒளியாமல் என்னிடம் தாங்கள் சொல்லலாம்.
வைத்தியர் – தாங்கள் சிறுவர் என்றாலும் உலகத்தில் நன்றா கப் பழகினவர்கள். உங்களுடைய முகம் எனக்கு பார்க்கவே முடியவில்லை. இந்த விஷயத்தில் தாங்கள் வெகு ஏக்கங்கொண் டிருக்கின்றீர்கள். உங்கள் நன்மைக்காகவே ஈசன் உங்கள் தந்தையைப் பிழைப்பிக்க வேண்டும். என்னைப்பற்றி பல பெயர்கள் பல விதமாக தங்களிடம் சொல்லியிருக்கலாம். ஏனெனில் வைத்தியன் என்றிருந்தால் ஒருவன் எல்லாருக்கும் நல்லவனாக விருப்பது வெகு வருத்தம். நிற்க தங்களைப்போ லொருவரை நானிதுவரையில் கண்டதேயில்லை. உங்கள் பணத்தில் எனக்கு ஒருதூசு கூடவேண் டாம். என் மனப் பூர்வமாகச் சொல்லுகின்றேன். நான் ஒருவித பிரயோஜனத்தையும் அபேக்ஷிக்காமலே என்னென்ன செய்ய வேண்டுமோ அவ்வளவையும் செய்து தங்கள் தகப்பனாரை சௌக் கியப்படுத்த கடமைப்பட்டவனாக விருக்கின்றேன். இரவோ பகலோ எந்தச் சமயமோ அந்தச் சமயத்தில் நான் தங்களுடன் கூட நின்று தங்கள் தந்தைக்கு வைத்தியம் பண்ணுகின்றேன். இதைப் பற்றித் தாங்கள் சந்தேகமே படவேண்டாம். தங்கள் தந்தையின் நோய் வெகு பலமான நோய். நீர்ரோகம் வெகு ஜாஸ்தியாக விருக்கின்றது. அதை நீர்ப்பரீக்ஷையால் நான் அறிந்தேன். இரணம் கண்டிருக்குமிடமோ உள்ளங்கால், வெகு அபாயமான ஸ்தலம். நான் கையாடி ஏதாவது பிசகு வந்துவிட்டால் தங்கள் சாபம் என க்கு வந்துவிடுவதுடன் என் குடியே மூழ்கிவிடும். ஏனெனில் எல் லாரையும்போல் நான் தங்களை யெண்ணவில்லை. அதிக நன்மை யும் அதிக செல்வாக்கும் உள்ளவர்கள் தாங்கள்; அன்றியும் மனித யத்தினத்தில் என்ன செய்யவேண்டுமோ அதில் சிறிதும் குறைத் தோம் என்ற பெயர் நம்மிருவருக்கும் வரக்கூடாது. ஆகையாற் றான் தங்கள் தந்தை நோய்விஷயமாக ஒருவித கூலியும் எனக்கு வேண்டாம் என்று நான் சொன்னேன். பெருஞ்சீரகவல்லியில் பெரிய டாக்டரிருக்கின்றார். அவருக்குத் தாங்கள் எனக்குக் கொடுக்கிற கூலியைக் கொடுத்தழைத்து வந்து காட்டினால் என் மனத்திற்கு வெகு திருப்தியாக விருக்கும். கையாடுவதில் அவ ருக்கு அதிக பழக்கம். அவரே வந்து கையாடிவிட்டால் நான் அருகே நின்று எல்லாம் பார்த்துக்கொண்டு அவரிடம் கேட்க வேண்டியவைகளைக் கேட்டுக்கொண்டு வைத்தியத்தை நடத்து வேன். என் மனப்பூர்வமாய் நானிந்த விஷயமாகத் தங்களிடமிரு ந்து ஒன்றும் அபேக்ஷிக்கவில்லை. இன்றையத்தினமே கையாடலாம். நான் செய்தால் எங்கு ஏதாவது பிசகு நேரிடுமோ என்ற தைரியக்குறைவால் பின்வாங்குகின்றேன். மற்ற விடமாக விருந் தால் இதற்குள் எல்லாம் செய்து முடித்து கட்டுக்கட்டி வந்திருப் பேன். இந்த இடத்தில் எனக்கு ஏதோ மனம் கூசுகின்றது. எப் பொழுது பெரிய டாக்டர் வருகின்றாரோ அப்பொழுது எல்லா காரி யங்களையும் விட்டு அவர் பிடிக்கின்ற நோய்விஷயமாக நாங்கள் கை கட்டிக்கொண்டு நிற்கவேண்டியது எங்கள் கடமை. ஆகையால் தாங்கள் ஒன்றும் சிந்திக்கவே வேண்டாம். நான் கொடுக்கும் தைலத்தைமேற்பூசி சுடுதண்ணீர் ஒற்றிடம் கொடுத்துக் கொண் டிருக்கத் திட்டஞ்செய்துவிட்டு தாங்களே சென்று பெருஞ்சீரக வல்லியில் டாக்டரைக்கண்டு நாளை யவர் வந்துசேரும் வழியைப் பாருங்கள். கட்டி அநேகமாய்ப் பழுத்துவிட்டபடியால் இனித் தாமதிப்பது பிசகு. நீர்ரோகமு மிருக்கின்றபடியால் எவ்வளவு வேகமாக சிகித்ஸை செய்கின்றோமோ அவ்வளவும் நன்மை,என்றார்.
தீனதயாளு :-ஐயா, உள்ளதை உள்ளபடி சொன்னீர்களே. வெகு திருப்தி. எத்தனையோ பணம் வருகின்றது, செலவுமாகின்றது. பணத்தாசை கொண்டவன் நான் என்றாவது, அல்லது அதைச் செலவிட மனம் பின் வாங்கினவன் என்றாவது எண்ணவே வேண்டாம். வைத்தியர்களிடம் கொடுத்ததைத் திரும்பி வாங்கு வது என் வழக்கமேயில்லை. ஆகையால் நான் கொடுத்தது தங்க ளுக்கே இருக்கட்டும். இன்னும் வேண்டுமென்றால் என்ன கேட் பீர்களோ அதைக் கொடுக்க சித்தமாக விருக்கின்றேன். மருந் தைக் கொண்டுபோய் அதைத் தந்தைக்குப்போட ஏற்பாடு செய்து விட்டு நான் உடனே பெருஞ்சீரகவல்லி போய் பெரிய வைத்தியரை ஒரு நொடியில் அழைத்து வருகின்றேன். இனி நான் தங்களைப் பார்க்கமாட்டேன். பெரிய வைத்தியர் இந்த வழியாகத் தான் சணற்கால் வருவாராகையால் அவர் வருகின்றார் என்ற சமாசாரம் தங்களுக்குத் தெரிந்ததும் தாங்கள் கூடவே வரவேண்டும்.
டிரஸ்ஸர்:- அதைப்பற்றி உங்களுக்கு விசாரம் வேண்டாம். என் சேவகனைத் தங்கள் வண்டியிலேயே நான் அனுப்புகிறேன். பெரிய வைத்தியர் ஒப்புக்கொண்டுவிட்டார் என்றால் என் ஆளைத் திரும்பி அனுப்பிவிடுங்கள். நான் அவரிங்கு வருவதற்கு ஜாம் நேரத்துக்கு முந்தியே சணற்காலுக்குப்போய் தங்கள் தந்தையிடம் காத்துக்கொண்டிருப்பேன்.
தீனதயாளு வேங்கையூரைவிட்டு மருந்துடன் புறப்பட்டு தனது தந்தையிடம் வந்து அவருக்கு மருந்துமேற் பூசவும் உள் ளுக்குக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துவிட்டு ஒரு நிமிஷங்கூடத் தாமதமின்றிப் பெருஞ்சீரகவல்லிக்குப் புறப்பட்டான். தாயுவும் காந்தியும் சாப்பிட்டுவிட்டுப்போ என்று என்ன வேண்டியும் இவன் கேட்கவில்லை. மகாதேவர் தம் கால்வலியில்கூடக் கவனமின்றி “அப்பா குழந்தாய்! உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே. தாயு பேச்சைத்தட்டாதே. அவள் எப்பொழுதும் நாம் வணங்கவேண் டியவள். நானோ கீழே படுத்துவிட்டேன். இனி உன் தேகத்தில் கவலையுள்ளவள் அவள் தான் அப்பா!” என்றார். இப்படி யிவர் சொல்லிக்கொண்டிருந்த பொழுதே தாயு ஏதோ வீட்டிலிருந்த உணவை ஒரு சிறு சவுக்கத்தில் முடிந்து அவன் முன் கொண்டு வந்து வைத்தாள். தீனதயாளுவை வளர்த்த அருமை யிவளுக் கல்லவோ தெரியும்! தந்தை தன்னைக் கட்டளையிட்டபடியே தீன தயாளு அவ்வுணவை யெடுத்துக்கொண்டு தனது வண்டியிலேறி வெகு வேகமாய் வண்டியை ஓட்ட வண்டிக்காரனைத் திட்டஞ் செய்துவிட்டுப் புறப்பட்டான். இவன் மனத்திலிருந்த விசாரம்ஈச னால்கூட கணக்கிடமுடியாது. எந்த நிமிஷத்தில் வேங்கையூர் வைத் தியர்பெரிய வைத்தியர் வந்துதான் கட்டியைக் கையாடவேண்டும் என்று சொன்னாரோ அந்த நிமிஷத்திலேயே இவன் உயிர் பாதி போய் விட்டதென்று சொல்லலாம். சாதாரண கட்டியாக விருந்தால் சிறு வைத்திய ரஞ்சார்! பெரிய கட்டி! ஏதோ ஆபத்து! ஆகையால் டிரஸ்ஸர் பயந்தார்,என்ற பீதி தீனதயாளுவின் உள்ளத்தில் அதிக மாகத் தோன்றிற்று. இவன் முன் வண்டியின் பெட்டியின்மேல் சிறு வைத்தியருடைய சேவகன் உட்கார்ந்து கொண்டு வண்டிக்கார னுடன் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தான். ஒன்றும் தீன தயாளுவின் காதில் விழவேயில்லை. எந்த வைத்தியம் பண்ணினால் தனது தந்தை பிழைப்பார் என்ற யோசனையிலேயே உழன்று கொண்டிருந்தான். பெருஞ்சீரகவல்லி ஒரு நாழிகை வழி தூரமிருக்கும்பொழுது வண்டிக்காரன் “ஐயா, பகல் பாதி பொழுதுக்கு மேலாய்விட்டது. உங்களைப் பார்த்தால் இன்னும் பல்லுகூட விளக்கவில்லை போலிருக்கின்றதே. இவ்விடம் ஆற்றங் கரை ஒழிந்திருக்கின்றதே. கொஞ்சம் வண்டியை நிறுத்துகின் றேன். ஊருக்குள் போகும் முன் உணவையிங்கேயே புசித்துவிட் டால் நமது வேலையில் ஒரு நாழிகை அதிகமானாலும் குறைவானா லும் இந்தக் காரியம் அதற்கு விலக்காய் நிற்காது” என்றான். அதற்குத் தீனதயாளு நீங்களிருவரும் என்ன செய்தீர்கள் அவர்கள் நாங்கள் காலையில் பழைய அமுது சாப்பிட்டு விட்டோம். இரவு வரையில் எங்களுக்குப் போஜன விசாரமில்லை, என்றார்கள். விசாரங்கள் எவ்வளவோ யிருப்பினும் அக்காலத்தில் வண்டிக்காரனை யும் சிறு வைத்திய சேவகனையும் பற்றி முதல் விசாரம் தீனதயாளுவுக்கு வந்ததே. அவன் குணம் என்ன உத்தம குணம்! சோற்று மூட்டை யொன்றைக் கையுடன் வைத்திருக்க இவனுக்கு இஷ்ட மில்லை யாகையால் ஆற்றங்கரையில் வண்டியை நிறுத்தி வாயில் லாச் சீவன்களாகிய மாடுகளுக்கு நீர் காட்டிச் சொற்பம் வைக்கோல் போடத் திட்டஞ் செய்து தீனதயாளு ஆற்றிலிறங்கித் தந்த சுத்தி பண்ணி ஸ்நானஞ் செய்து தனது அனுஷ்டானங்களை முடித்துக் கையிலிருந்த உணவில் பாதி சாப்பிட்டுவிட்டு மிகுந்து நின்றதை வண்டிக்காரனிடங் கொடுத்து நீங்களிருவரும் ஆளுக்கு ஒரு வாயா வது சாப்பிடுங்கள் என்றான். அவர்களும் அப்படியே செய்தார் கள். மறுபடி வண்டி பூட்டி பெரிய டாக்டர் வீட்டுக்கு இம் மூவரும் 20- நாழிகைக்கு வந்து சேர்ந்தார்கள். அவர் ஹூண வைத்தியர். சஸ்திரங்களைக்கொண்டு காயங்களை ஆற்றுவதில் வெகு கீர்த்தி பெற்றவர். எச்சமயத்தில் யார் வந்து அழைத்தாலும் அவனுக்கு வெகு பொறுமையுடன் பதில் சொல்லி அவனிஷ்டப் படி நடக்கப்பட்டவர். தனது சிரமத்துக்குத் தக்கபடி கூலிவாங் கப்பட்டவர், என்றாலும் புத்திமானாகையால் தான் எடுத்துக் கொண்ட வியாதி சௌக்கியப்படுகிறவரையில் அதில் முற்றிலும் கவலையாக இருக்கப்பட்டவர். தீனதயாளு லௌகீகத்தில் வெகு சாமர்த்திய முள்ளவனாகையால் அவன் அவர் வீடு சேர்ந்ததும் அவ ரைக்கண்டு தான் வந்த காரியத்தை எவ்வளவு குறைந்த சொற்களால் விவரமாகச் சொல்லவேண்டுமோ அவ்வாறு சொல்லி அவர் உதவியை வேண்டினான். அவரும் தனது முறைப்படி கூலி விஷ யங்களைப் பேசிக்கொண்டு மறுநாள் காலை 7 நாழிகைக்குள் சணற் கால் வருவதாகச் சொல்லி அவனை விடைகொடுத்தனுப்பினார். வந்த காரியம் முடிந்ததும் தீனதயாளு புறப்பட்டு வெகு வேக மாகத் தனது தந்தையிடம் வந்து சேர்ந்தான். இவன் வந்த ஒரு நாளைக்குள் இவன் பட்ட விசாரமும் இவன் செய்த ஏற்பாடுகளும், எல்லாரும் வியப்படையத் தக்கவைகளாக விருந்தன. இவனல்ல வோ சற்புத்திரன். தம்மாலியன்ற மட்டும் முயன்று அப்புறம் ஈசனி ருக்கின்றார் என்று விடுவது மனதிற்கு எவ்வளவு திருப்தி. மகா தேவரும் இதற்குத்தான் என் குழந்தைக்கு நான் தந்தியடிக்கச் சொன்னது, இத்தனை பெயர்கள் என்னைக் காத்துக் கொண்டிருந் தார்களே, இவர்களில் யாருக்காவது காலில் வந்திருக்கும் கட்டி விபரீதமான கட்டி, அதற்கு பெரிய டாக்டர் வந்துதான் பார்க்க வேண்டும் என்று தோன்றிற்றா, என்று சொன்னார். அன்று இரவுப் பொழுது போனால் மறுநாட் காலையில் டாக்டர் வந்து கட்டியைக் கீறி விடுவார் என்றும், சீழ் வெளியாய் விட்டால் அப்புறம் வலியும் நின்றுவிடும் என்றும், தீனதயாளு தனது தந்தைக்குத் தைரியஞ் சொல்லிக் கொண்டு அவர் சமீபத்தில் காலுக்குத் தைலம் தடவிக் கொண்டும் போஸ்தக்காய் வெந்நீர் ஒற்றிடம் கொடுத்துக் கொண்டு மிருந்தான். மகாதேவரும் சொற்ப நாழிகை யிவனுடன் பல சங் கதிகளைப் பற்றிப் பேசி விட்டு வெந்நீர் இதமாய் ஒற்றப்பட்ட கார ணத்தாலும் கட்டி அநேகமாய் பழுத்துவிட்ட படியாலும் கொஞ்சம் கண்ணயர்ந்தார்.
அன்றிரவு மகாதேவர் வீட்டில் அவர் நோயை அகற்ற சில ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருந்தன. மகாதேவர் பல தேச ங்களில் உத்தியோகம் பண்ணி விட்டு சணற்கால் வந்தவர் என்று சொல்லி யிருக்கின்றோமே. இவர் வெகு கௌரவமான வம்சத்தில் பிறந்தவராயினும் ஏழையாய் உத்தியோகம் பண்ணச் சென்றவர். 20, 25 வருஷகாலம் உத்தியோகம் பண்ணி நன்றாகச் சம்பாதித்து விட்டுத் தமது பணக்கார தாயாதிகள் குடியிருந்த சணற் காலி லேயே தாமும் 10,000 ரூபா செலவு செய்து பெரிய மாளிகை ஒன்று கட்டிக் கொண்டு அவ்வூரிலேயே நிலங்கள் வாங்கிக் கொண்டு அவ்வூர் தனவான்களைப் போலத் தாமும் அவ்விடத்தில் உபகார சம்பளம் பெற்று வந்து சேர்ந்தவர். இவர் அவ்வளவு பாக்கியவா னாக வந்தார் என்பதைக் கண்டு இவரிடம் அசூயைப்பட்டவர்கள் சிலருண்டு. அவர்களில் யாராவது ஒருவன் மகாதேவருக்குச் சூனி யம் வைத்திருக்கலாம் என்பது காந்தி முதலிய பெண்களின் அபிப் பிதூயம். அதை யவர்கள் தீனதயாளுவிடம் அவன் வந்த அவ் விரவே தெரிவித்திருந்தார்கள்; அவனுக்கு இவ்வித அபிப்பிராயங் களில் எள்ளளவேனும் நம்பிக்கையேயில்லை. தனது மனத்தின் உறுதி எவ்வாறாக விருப்பினும் பெண்கள் மனம் கோழை மனம். அவர்களுக்கு என்ன செய்தால் தைரியம் வருமோ அந்தப்படி செய்ய வேண்டும், என்று கருதி அவ்வாறு சூனியம் வைத்திருந் தால் அதை எடுக்க என்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமோ அவை களைச் செய்யத் திட்டம் பண்ணியிருந்தான். பெண்டீரும் வக்கிரமணி யன் மூலமாய் ஒரு மந்திரவாதியை வரவழைத்து அவனைக் கொண்டு கழிப்பு ஒன்று கழிக்க ஏற்பாடு பண்ணி யிருந்தார்கள். மந்திர வாதியும் முதலில் செலவென்று 25 ரூபா கைப்பற்றிக் கொண்டு மாவினால் புருஷ உருவம் ஒன்று பண்ணி நடு ராத்திரியில் அதின் காலின் முள்ளொன்றை ஏற்றி அப்பதுமையை மகாதேவர் கொஞ் சம் கண் மூடிய சமயம் பார்த்து அவர் தலை முதல் கால் வரையில் சில மந்திரங்களை ஓதிக்கொண்டு சுழற்றி ஒரு முச்சந்தியில் கொண்டு போய் போட்டு வந்து இன்னும் 10 ரூபா வாங்கிக் கொண்டு தனது இருப்பிடம் போய்ச் சேர்ந்தான். இவ்வண்ணம் அப்பதுமையைச் செய்ததின் கருத்து சூனியம் வைத்தவனுக்கு அவ்வண்ணம் அவஸ் தை சம்பவிக்கட்டும் என்றும் அவன் வைத்த சூனியத்தின் பலத்தாற் றான் மகாதேவருக்குக்காலில் முள்தைத்த படியால் அம்முள்ளாலுண் டாகிய வியாதி இவ்வித மந்திரத்தால் நீங்கி விடட்டும் என்பதாம்.
இது முடிந்ததும்,காந்தி தீனதயாளுவைக் கூப்பிட்டு, “குழந் தாய்! இன்றிரவு கழிப்புக் கழித்தாய் விட்டது, நாளைக்காலையில் டாக்டர் வரப்போகிறார். இன்னும் உன் தந்தை விஷயமாய்ப் பார்க்க வேண்டியது ஒன்றே ஒன்று மிகுந்திருக்கின்றது. நமது ஊரிலிருந்து ஒரு காதவழி தூரத்தில் மதகடி என்ற கிராமமிருக்கின்றது. அதில் வெகு கெட்டிக்காரனாக ஒரு ஜோஸ்யனிருக்கின்றானாம்; அவனைக் காண யாராவது ஒருவன் போனால் அவ்வண்ணம் வரப்பட்டவனைக் காணும் பொழுதே அவன் காரியம் இன்னதென்று சொல்லி விடுகின் றானாம். நாளையத் தினம் நல்ல நாள் உன் ஜாதகத்தையும் அவனு க்கு அனுப்ப வேணும். உன் ஜாதக ரீதியாகவாவது அல்லது அவர் ஜாதக ரீதியாகவாவது இப்பொழுது ஒன்றும் பயமில்லை யென்று அந்த ஜோஸ்யன் மட்டும் சொல்லி விட்டால் நமக்கு அப் புறம் பயமேயில்லை. அதற்கு ஏற்பாடு பண்ண வேண்டும்” என்றாள். “இதற்கென்ன, நாளை பெரிய டாக்டர் வந்து காலைப் பார்க்கட்டும். அதுவரையில் என் புத்தி ஒன்றிலும் பிரவேசியாது, அந்தக் காரி யம் நடந்ததின் மேல் எனக்குத் தாங்கள் ஞாபகப் படுத்துங்கள், நான் தப்பாமல் ஏற்பாடு செய்கிறேன்” என்று தீனதயாளு சொன் னான். இவ்விதமாய் பலவித யோசனைகளிலும் பலவித ஏற்பாடுகளி லும் அன்றிரவு ஒருவாறு கழிந்தது.
சூரியோதயமானவுடன் வேங்கையூர் வைத்தியர் பெரிய டாக் டர் வரும் முன் தாம் வந்திருந்து எல்லா ஏற்பாடுகளையும் சித்தம் பண்ணிவைக்கக் கடமைப்பட்டவராகையால் வந்து சேர்ந்தார். அதல் லாமலும் அவர் தீனதயாளுவைக் கண்டு நடுங்கிவிட்டார். எல்லாந் தெரிந்த சிறுதழலிது. நாம் பிசகி நடந்தால் நம்மை எரித்துவிடும். எவ்வளவு விரைவில் பெரிய டாக்டரைக் கண்டு அவர் வரும்படி ஏற்பாடு செய்து வந்தான் இவன் என்று அஞ்சினார். காலப்படி நிமிஷம் தவறாமல் நடக்கப்பட்டவர்கள் ஹூண வைத்தியர்கள். தீனதயாளுவிடம் தான் ஒப்புக் கொண்டபடி பெரிய டாக்டர் அன்று 7-நாழிகைக்குச் சரியாய் சணற்கால் வந்து சேர்ந்தார். அன்று வெள்ளிக்கிழமை. தியாச்சியம் ராகுகாலம் ஒன்றுமில்லாமலிருந் தன. இவைகளிருப்பினும் அவ்வைத்தியர்க ளவைகளைக் கவனிக்கப் பட்டவர்களல்லர். அப்படி யிருந்த போதிலும் அவைகளில்லாம லிருந்ததே ஒரு சுபக்குறியாக எல்லாரும் எண்ணினார்கள். பெரிய டாக்டர் வந்ததும் அவர் மகாதேவரிடம் வந்துட்கார்ந்து அவரை நன் றாகப் பரீக்ஷை செய்து பார்த்து, அவர் நீரையும் சோதித்து விட் டுக் கட்டியை, நான்கு பக்கங்களிலேயும் அதுக்கிப் பார்த்தார். பிறகு தீனதயாளுவைக் கூப்பிட்டு “ஐயா, உங்களுக்கு ரத்தத்தைப் கொடுக்க பார்த்தால் களைப்புண்டாகாதென்றால் என்னருகாமையில் உட் காருங்கள். நீங்கள் நோயாளியின் குமாரர். எல்லாவற்றிற்கும் கூட நிற்கக் கடமைப்பட்டவர்; சிறு வயித்தியரோ எங்கள் நூல்படி என் சமீபத்திலிருந்து நான் கேட்பவைகளைக் வேண்டியவர். மற்றவர்கள் ஒருவரு மிங்கு இருக்க வேண்டாம். கூட்டமே கூடாது” என்றார். அப்படியே எல்லாரும் ஒதுங்கிவிட, பெரிய டாக்டர் மகாதேவரை “ஐயா, நீங்கள் ஒன்றுக்கும் அஞ்சவேண்டாம், கட்டி நன்றாகப் பழுத்துவிட்டது, காயைக்கீறினாற்றான் வலி, பழுத்ததைக்கீறி அங்கு விம்மி நிற்கும் தோலை விண்டுவிட்டால் அதுவே பாதிவலியை நீக்கிவிடும்” என்று தைரியம் சொல்லித் தமது வேலையை ஆரம்பித் தார். மேலாகக் கீறுவது பிசகென்றும் ஆழக் கீறினாற்றான் புண் ணாற்றல் எளிதென்றும் இவர்களின் மதம். அப்படியே சிலாக்கை ஆழவிறக்கினதும் வழிந்த சீழ் அபரிமிதம். மருந்து நீராலும் எண்ணெயாலும் பீச்சாங்குழலடித்து சீழை வெளிப்படுத்தி இன் னும் ஏதாவது நின்றாலும் அதெல்லாம் வெளிவரும்படி திரியேற் றிக் காயங்கட்டிப் பெரிய வைத்தியர் சிறியவரிடம் அக்காய விஷய மாய் அவர் நடத்தவேண்டிய முறைகளைச் சொல்லி உள்ளுக்கு ஒளஷத ஜாபிதாவும் கொடுத்தார். பிறகு பெரியவரிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியே வந்து தீனதயாளுவைத் தனிமையி லழைத்துப்போய் “ஐயா, நான் செய்ய வேண்டியதைச் செய்துவிட் டேன். உங்களுடைய தந்தைக்கோ பலமான நீர்ரோகம். இந்த ரோக மிருக்கும்பொழுது பிளவை காண்பது நற்குறியன்று. அத னுடன் அபாயஸ்தலம் என்று சொல்லப்படும் வலங் குதிகாலில்கண் டிருக்கின்றது. பழுத்த கட்டியை அறுத்தே தீர்க்கவேண்டும். அறுக்காவிடில் சீழ்ரத்தத்தில் கலந்து விஷம் வைத்துக் கொல்லு வதுபோல் ஆளைக் கொன்றுவிடும். ஆகையால், கட்டியை அறுத் ததில் யாதொரு பிசகுமில்லை. நீர் ரோகத்துடன் கட்டி வந்திருப் பதால் நினைத்தவிட மெல்லாம் புரையோடும். அதனுடன் தங்கள் தந்தை வெகு துர்பலமாக விருக்கின்றார். அவர் பென்ஷன் வாங் கிய காலம் முதல் அதிக வியாயாமமின்றி தேகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றார். ஆகையால் நீங்கள் வெகு ஜாக்கிரதையாகப் பார்க்கவேண்டும். ரத்தத்தைப் பரிசுத்தம் பண்ணவும் புரையேறா மலிருக்கவும் நான் மருந்துகள் எழுதிக் கொடுத்திருக்கின்றேன். அம்மருந்தைக் குறித்த காலத்தில் கொஞ்சமேனும் தப்பாமல் அவ ரைப் புசிக்கச் செய்யவேண்டும். அமாவாஸைக்கு இன்னும் நான்கு தினங்க ளிருக்கின்றன. எங்கள் வைத்தியம் இங்கிலீஷ் முறை யென்றாலும் நாங்களும் அமாவாஸை பூரணை இவைகளைக் கனத்த நாட்கள் என்று ஒப்புக்கொள்ளுகின்றோம். இனி என் சகாயம் ஒன்றும் உங்களுக்கு வேண்டாம். வேங்கையூர் வைத்தியர் எல்லாம் சரிவரச் செய்வார். அமாவாஸை வரையில் ஒருவிதப் பிசகுமின்றி மருந்துகள் பிடித்து காயம் புரை யோடாமல் வந்தால் தங்கள் தந்தைக்குப் பயமேயில்லை. இன்னுமொரு சங்கதி : தங்கள் தந்தை யின் தேகம் பருத்த தேகம். வாத சரீரமுமாம்; பலக்குறைவாகை யால் படுக்கையில் ஒரே பக்கத்தில் படுத்திருந்தால் ஒரு பக்கமாகச் சுரக்கும். அப்படி யில்லாமல் அடிக்கடி படுக்கையில் அவர் திரு ம்ப ஏற்பாடு செய்யுங்கள். என் சகாயம் அவசியம் என்று தோன்றுமே யானால் சொல்லியனுப்பினால் நான் சித்தமாக வருகின் றேன். இந்த நோயைத் தீர்த்து வைப்பதால் எனக்கும் கீர்த்தி யுண்டு” என்று சொல்லிப் போய்விட்டார்.
தீனதயாளுவுக்கு விசாரம் வெகு அதிகமாய்விட்டது. கனத்த தினமாகிய அமாவாஸை போகவேண்டும் என்று டாக்டர் சொன் னதும், இனி நமது தந்தையை நாம் உயிருடன் காண்பதெல்லாம் நான்கு நாட்கள் தான் என்று தன் மனத்திற் கலங்கிவிட்டான். அந்த நிமிஷம் முதல் தனது தந்தையிடமவன் இடைவிடாது காத் திருந்து மருந்துகள் விஷயத்திலும் பத்திய விஷயத்திலும் ஒரு பிதக் குறைவுமின்றி நடந்துவந்தான். டாக்டரை யனுப்பிய பிறகு தனது ஜாதகத்தையும் தன் தந்தை ஜாதகத்தையும் மதகடி ஜோஸ் யருக்கனுப்பினான். அவ்விடம் போய்த் திரும்பினவன் ஜோஸ்யர் இன்னும் எட்டு நாட்கள் கழிந்த பிறகு இவ்விரு ஜாதகங்களையும் தம்மிடம் கொண்டுவந்தால் தாம் பார்ப்பதாகவும், அதற்கு முன் பார்க்க முடியாதென்றும் சொல்லியனுப்பி விட்டார். இப்படி இவர் சொல்லி யனுப்பியது காந்திக்கும் தீனதயாளுவுக்கும் பெருங் குழப்பமாக விருந்தது. அதற்குள் தாயு ஓடிவந்து “அப்பா, குழந்தாய், இனி உனக்குப் பைத்தியமா, எப்பொழுது எட்டுநாளைக் குப் பிறகு ஜோஸ்யன் இந்த ஜாதகங்களைக் கொண்டு வாவென்றானோ அப்பொழுதே இந்த உயிருக்கு எட்டுநாளில் கண்டம் ஒன்று இருக் கின்றது என்று அருத்தம். அக்கண்டம் தப்பினால் பிறகு பார்ப் பேன் என்று சொல்லி யனுப்பிவிட்டான். அன்றியும் நேற்று இரவு கழிப்புக் கழித்தபொழுது, நீ கவனித்தாயோ இல்லையோ, உனது தந்தை படுத்துறங்கும் அறைக்கு நேராக ஆகாயத்தில் ஒரு சாகுருவி கத்திக்கொண்டு பறந்தது. அதைக் கேட்டது முதல் என் மனம் விட்டு விட்டது. குழந்தையிடம் சொன்னால் எங்கு அதிகமாய் ஏங்கிவீடுவானோ என்றிருந்தேன். அந்த ஜோஸ் யனும் அப்படி சொல்லி யனுப்பிவிட்டான். டாக்டரும் கனத்த நாள் தப்பவேண்டும் என்று சொல்லிவிட்டார்.
தீனதயாளு – அம்மா, உங்களைப்போன்ற பெண்களுக் கியல் பான அறியாமை விடுகிறதேயில்லை. நமது கிரகத்துக் கடுத்த பெருமாள் கோயிலில் ஒர் ஆயிரம் சாகுருவி வந்தடைகின்றன. அவைகள் எல்லாம் இரவில் கத்திக்கொண்டே யிருக்கின்றன. அதற்காகப் பயப்படவேண்டியதாக இருந்தால் தினந்தோறும் 100 சாவு இந்தக் கிராமத்தில் நடக்கவேண்டும். வீணாக நீ பிதற்றாதே.
தாயு-நான் அப்பொழுதே வேண்டாம் தம்பி, நமக்கு இந்த வீடு வேண்டாம், இது சந்துக்குத்து, சந்துக்குத்து,என்று இடித்திடித்துச் சொன்னேனே. என் சொல்லைக் கேட்டானா உன் தந்தை. ஒருகால் அந்தக் குற்றமாக விருக்குமா?
தீனதயாளு – அம்மா, உனக்கு இதென்ன வீண்பைத்தியம். ஒரு ஊர் என்றிருந்தால் சந்தில்லாமற் போகுமா. சந்து வீட்டுக்கும் ஒரு யஜமான் ஏற்படத்தான் வேண்டும். நல்லது இந்தச் சந்து வீட்டிற்றானே போனவருஷம் 11 கலியாணங்கள் 12 பூணூல்கள் ஒரே பந்தலில் நடத்தினார். சந்துக்குற்றம் என்றிருந்தால் சுபங்கள் நடக்குமா.
தாயு-அப்பா, குழந்தாய், அந்த கலியாணங்கள் தான் உன் தந்தையை இப்படி செய்துவிட்டன. உனக்கு இன்னும் காதில் விழவில்லையா ?உனது தந்தைக்கு கடன் அதிகமாய் விட்டதாம். கலியாணத்திற் குவிந்த கடன் 5000. வீடு கட்டுவதிலுண்டான இரணம் 5000-க்கு மேலாம். இவ்வளவு கடனை எப்படி அடைப் போம் என்ற ஏக்கமே உன் தந்தையின் பிணிக்குப் பாதிக்காரணமாம்.
தீனதயாளு – நல்லது இந்த சங்கதிகளைப் பற்றி இப் பொழுது ஒன்றும் பேசாதே. கடனிருந்தால் என்ன. அதை அடைக்கத் தகுந்த ஆஸ்தியில்லையா. நல்லது என்ன விதமாய்க் கடன் வந்தது! நல்ல விஷயத்தில் செலவிட்டுத்தானே வந்தது. அதில் என்ன பிசகு.
தாயு:- என்ன மனதடா உன் மனது. ஒரு விஷயத்தைப் பற்றியும் வாயைத் திறவாதே என்கிறாயே. அதற்கென்ன இன்னு மதிகமாகக் கொடுத்தால் கீழத்தெரு வைதீகர்களெல்லாரும் மகா தேவரைப்போல் நல்லவர் உண்டா என்கின்றார்கள். வைதீகத்தில் செலவிட்டே உன் தந்தை யிப்படியானார். நாளை நீ என்ன செய்யப் போகின்றாய்.
தீனதயாளு :- அம்மா, நீ யென்ன சமய மறியாமல் பேசுகின் றாய். ஒரு பெரியவர் மலை சாய்ந்ததுபோல் நோயால், படுத்திருக் கின்றார். இப்பொழுதுதானா இவ்விதமாக வார்த்தையாடுவது. அதோ அப்பா ஏதோ எழுந்திருக்கின்றார். ஜலமோசனத்துக்குப் போக வேண்டும்போல் காண்கின்றது, என்று சொல்லிவிட்டு ஒரு பித்தளைச்சட்டி எடுத்துவந்து அவரண்டை வைத்து ஒதுங்கிநின் றான். அவன் நினைத்தது உண்மையே. மகாதேவருக்கு நீர்ரோகம் என்று சொன்னோமே. அது அதிகரித்துக்கொண்டே இருந்தது. அப்பொழுது இறங்கிய நீர் மூன்று நான்கு பெயர்களுடைய நீரின் அளவாக விருந்தது. இதைக் கண்டதும் தீனதயாளு வாடிவிட்டான். மருந்துகள் குறித்த காலம் தவறாமல் ஏற்றிக்கொண்டே வந்தான் சிறு டாக்டர் காலையும் மாலையும் வந்து கட்டவிழ்த்து மறுபடி முறைப்படி காயத்தைக் கழுவிக் கட்டிப்போவார். காயம் வெகு நன்றாக ஆறிக்கொண்டே வந்தது. வீக்கமும் வாடிற்று. நீர் இறங் குவதுமட்டும் நிற்கவில்லை. சிறு வைத்தியரே ஒரு தடவை பெருஞ் சீரகவல்லி சென்று பெரிய வைத்தியரிடம் கலந்துபேசி நீரை நிறுத்த இன்னும் பலமான மருந்துகள் வாங்கிவந்தார். பெரிய டாக்டரும் இன்னும் ஒரு முறை வந்து பார்த்துச் சென்றார். இந்த முறை டாக்டர் முகமும் வாடிற்று. அவர் தீனதயாளுவைப் பார்த்து ”ஐயா, உமது தந்தையின் காயம் வெகு அழகாக வாடி ஆறிவரு கின்றது. நீர்ரோகம் இன்னும் பிடிபடவேயில்லை. கனத்த தேகத் தில் நீர்ரோகம் எளிதில் நமது உத்தேசப்படி அடங்காது.இது து வரையில் பலமான மருந்து என்னென்ன கண்டுபிடிக்கப்பட் டிருக் கின்றனவோ அவ்வளவையும் நான் கொடுத்திருக்கின்றேன். நாளை அமாவாஸை. நாளை ஒருபொழுது தப்பினால் உமது தந்தைக்குப் பயமேயில்லை. வெகு ஜாக்கிரதையாகப் பார்த்து வாருங்கள். அப்புறம் ஈசனிருக்கின்றார்’ என்றார். இனிமேல் சொல்லவேண்டியது என்ன விருக்கின்றது. தெய்வ யத்தினத்தால் மகாதேவர் பிழைக்க வேண்டுமே யல்லாது மனிதயத்தினத்தால் முடியாதென்பது கருத்து. அமாவாஸையும் வந்தது. அன்று வழக்கம்போல மருந்துகள் கொடுக்கப்பட்டன. ஒருவித பயத்துக்கு இடமில்லா மலே யிருந்தது. அமாவாஸை கழிந்துபோகவே எல்லாருக்கும் கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. மகாதேவரும் “என்ன குழந் தாய், நான் பிழைப்பேனா? டாக்டர் என்ன சொல்லுகின்றார்?” என்றார். அன்றியு மவர், “இனி எனக்கு என்ன இருக்கின்றது நான் இவ்வுலகத்தி லடையவேண்டிய சுகங்கள் எல்லாம் அடைந் தாய்விட்டன. மறுமைக்கு வேண்டிய சுகங்களும் ஏதோ தேடிக் கொண்டுவிட்டேன். உன்னைமட்டும் குஞ்சும் குழந்தையுமாக இவ் வண்ணம் விட்டுப்போகிறேனே என்ற விசாரம் மட்டு மிருக்கின்றது என்று சொல்லிச் சொற்பம் துக்கப்பட்டார். அதற்குத் தீனதயாளு வேண்டியபடி ஆறுதலை சொல்லி ஒன்றுக்கும் பயப்படவேண்டாம், அமாவாஸையும் கழிந்துவிட்டபடியால் இனிப் பயமிருக்காதென் றான். காந்தி தீனதயாளுவைத் தனிமையிலழைத்து “எல்லாவற் றிற்கும் கொடுக்கல் வாங்கல் கணக்கு என்னவென்று உன் தந்தை யைக் கேள். வாயும் வார்த்தையுமாக விருக்கும்பொழுதே கேட்டுக் கொண்டால் எல்லாவற்றிற்கும் நன்மை” என்று எவ, தீனதயாளு “ஆகா! நொந்த தேகத்தைக் காக்கை கொத்துவதுபோல் இத்தரு ணத்திலா என் தந்தையை நான் கொடுக்கல் வாங்கல் கணக்குக் கேட்கின்றது. லாபமோ நஷ்டமோ என் தந்தை எனக்கிருந்தால் போதும். அவருக்கே ஆபத்து வந்ததென்றால் எந்தக் கணக்கு எப்படிப்போனாலென்ன” என்று சொல்லிவிட்டான். இப்படியிருக்க அமாவாஸை கழிந்த மறுநாள் பிரதமையில் காய மவிழ்க்கும்பொ ழுது சீழ் உள்நோக்கிவிட்டது; வெளியில் வரவில்லை. வைத்தியர் மலைத்துநின்றார். மகாதேவர் முகம் கொஞ்சம் தெளிவாக விருப்ப தாக சிலர் சொன்னார்கள். தாயுமட்டும் தூரநின்று தீனதயாளு வைக் கூப்பிட்டு “நீ நம்பாதே, வியாதி காடேறிற்று என்றும் குறியைச் சொல்லலாம்,” என்றாள். வைத்தியர் கட்டுக் கட்டிவிட்டு எப்பொழுது என் உதவி வேண்டுமோ அப்பொழுது சொல்லியனுப் பினால். சித்தமாய் வருகின்றேன், என்று சொல்லி வீடு சென்றார். எல்லாரும் அன்று மகாதேவரிடம் காத்திருந்து அவருக்கு எதில் இஷ்டமோ அதைப் புசிக்கக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். நற் புசிப்பு வியாதிக்காரனுக்கு ஏது. ஏதோ ஆசை! உணவு மட்டும் செல்லுகின்றதில்லை. அன்று பொழுதுபோக ஒரு ஜாமமிருக்கும் பொழுது மகாதேவர் உதடு கறுக்க முதல் முதல் தீனதயாளு பார்த் தான். உடனே வைத்தியருக்குச் சொல்லி யனுப்பவே அவர் வரும் முன் மகாதேவருக்கு மயக்கம் வந்துவிட்டது. வைத்தியர் ஓடி வந்து இது ஜன்னியின் குறி என்று சொல்லிப் பலவித எண்ணெய் களும் தைலங்களும் தேய்த்தார். நாட்டு வைத்தியர்கள் 5 நிமிஷந் தோறும் கைபிடித்துப் பார்த்தார்கள். ஜன்னி காயத்தின் மேல் கண்ட ஜன்னியாதலால் வெகு வேகமாய் நோயாளியைக் கவர்ந்து கொண்டது. இனி ஒளஷதத்தால் ஒரு பயனுமில்லை என்று எல் லோரும் அபிப்பிராயப்படும் வரையில் மேலுக்கும் உள்ளுக்கும் பல ஒளஷதங்கள் கொடுத்துவந்தார்கள். மனித முயற்சிக்கு அதிக மாய்விட்டது. ரோகம் நீங்கவில்லை. சுவாஸம் அதிகமாக வாங்க லாயிற்று. இனி ஔஷதங்களை நிறுத்திச் சடங்குகளைச் சரிவர நடத்தலாம் என்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும்படியான காலம் வந்துவிட்டது. தீனதயாளு இக்கதியும் நமக்கு வருமாவென்று திகைத்து உட்கார்ந்துவிட்டான். அதுவரையில் அவன் ஒரே முயற்சியாக விருந்து தனது தந்தைக்கு எவ்வளவோ செய்து பார்த்தும் ஒன்றும் பலிக்காமல் போய்விட்டதே என்று திகைத்துத் துக்கம் மேலிட்டுத் தயங்கினான். அப்பொழுது அவ்வீட்டில் எங்குபார்த்தாலும் ஏக சத்தமாய் அழுகைக் கோலமாக விருந்தது. அவ்வளவு துக்கத்தையும் ஒன்று சேர்த்து தீனதயாளுவின் மனத்திலிருந்த துக்கத்துக் கொப் பிடில் அவ்வளவும் அவனுடைய துக்கத்தில் ஒரு எள்ளளவாகாது. பெண்டீர் அடித்துக் கொண்டோடிவந்து ஒரு நாழிகைக்கப்பால் போகும் பிராணனை முன்னமேயே போக்கிவிட வந்த ராக்ஷஸிகள் போல் மகாதேவர்மேல் விழுந்தழ வந்தார்கள். தீனதயாளுவோ காயம்பட்ட சிங்கம்போல் ஒரு சீறு சீறி எல்லாரையும் அப்புறப் படுத்தி “எனது தந்தை மூச்சு முற்றிலும் நின்றுவிடுகிறவரையில் ஒருவரும் இவ்வீட்டிலழக்கூடாது” என்று கட்டளையிட்டான். அப் பொழுது அங்கிருந்த காசியபசாஸ்திரி தீனதயாளுவிடம் வந்து “குழந்தாய்! இதுவரையில் உன் தந்தைக்கு நீ சிச்ரூஷை இவ்வுலக வழக்கப்படி செய்தாய். இனி அவர் ஈசன்பதம் சேர என்ன செய்யவேண்டுமோ அவைகளைக் குறைவில்லாமல் செய். இதை நம்மவர்கள் பிதிருயக்ஞம் என்று சொல்லுகின்றார்கள். இத்தரு ணத்தில் தான் கர்ணஜபம் செய்யவேண்டும். ஓய் வெங்கட்டராம சாஸ்திரிகளே, ஏன் உட்கார்ந்திருக்கின்றீர்கள், எழுந்திருந்து மகா தேவருக்குக் காலத்தில் நடக்கவேண்டிய மந்திரங்களை நடத்துங் கள். அவர் குமாரன் சமீயத்தி லிருக்க வைதீக கிரியைகளில் ஒரு வித குறையும் வேண்டாம்’ என்று கட்டளையிட்டார்.
மரணவலி என்பது உலகச்சொல்லாய் வந்திருப்பது எல்லா ருக்கும் தெரிந்த விஷயம். அவ்வவஸ்தையிலிருக்கும் தனது தந் தைக்கு ஒருவித சிரமுமில்லாமல் அவர்மேல் ஒரு தூசுகூட படா மல் பாதுகாத்துக்கொண்டு தீனதயாளு அவர் தலைமாட்டில் உட்கார் ந்து கணீர் என்று வேதோக்தமாய் கர்ணஜபம் ஜபித்தான். அது பாதியாய்க்கொண்டிருக்கும்பொழுது மகாதேவர் சுவாஸம் நின்றது. எல்லோரும் வெளியிற்சென்று மகாதேவருடைய உயிரை வதைக் காமல் கொண்டுபோகும்படி பிரார்த்திக்கும்வண்ணம் தென் திசை யை நோக்கி தர்மராஜரை வேண்டிக்கொள்ளுவதுபோல் வந்தனம் பண்ணினார்கள். இனி ஆகவேண்டியதென்ன இருக்கின்றது. மகாதேவர் வைத்தியர்கள் உதவி வேண்டாத நாடு சென்றார்.
– தொடரும்…
– க.நா.சு. அவர்கள் எழுதிய முதல் ஐந்து தமிழ் நாவல்கள் (முதற் பதிப்பு: செப்டம்பர் 1957) என்ற நூலில் நான்காவதாக இடம்பெற்ற நாவல்.
– தீனதயாளு (நாவல்), முதற் பதிப்பு: 1902, ஐந்தாம் பதிப்பு: 1922, சுதேசமித்திரன் ஆபீஸ்.