தி லாஸ்ட் செல்பி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 5, 2016
பார்வையிட்டோர்: 7,563 
 
 

intro

இந்தப் பயணத்தின் முடிவு எப்படி இருக்குமோ எனக்கு தெரியாது…. இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடோ ஆசையோ இல்லை…

போகி…………………….றே………………………..ன்…

என் சொந்த ஊருக்கு, நான் பிறந்த மண்ணுக்கு… நீண்ட நாட்களுக்கு பின்.. இல்லையில்லை நீண்ட வருடங்களுக்கு பின்…போகிறேன்.. மனதுக்குள் ஏதேதோ மாற்றங்கள்.. நொடிக்கொரு தரம் மாறும் மனநிலைக்குள் நான் எந்த நொடி என்பதுதான் எனது பதிலாக இருக்கிறது, மாறாக கேள்வியும் கூட…கேள்விகளினூடாக நினைவுகளும் பயணிக்கத்தான் செய்கிறது….பயணங்களின் ஊடாக நினைவுகளும் நிலைக்கண்ணாடி சுமக்கத்தான் செய்கிறது….

எங்கள் ஊருக்கு ஜீன்ஸ் பேண்டை அறிமுகப் படுத்தியவன் நானே.. கான்வாஸ் ஷூ.. குளிர் கண்ணாடி.. ஒற்றைக் காதுக் கடுக்கன் என்று 90களின் உலகத்தை ஊருக்குள் கொண்டு சென்றவன் நானே.. அதன் மூலமாக எனக்கு கிடைத்த பெண் தோழிகளின் எண்ணிக்கை அதிகம்.. அதே போல் அதைக் கண்டு பொறாமை கொண்டு எனை வாய்ப்பு கிடைத்தால் அடித்து துவைக்க காத்துக் கொண்டிருந்த ஆண் நண்பர்களுக்கும் பஞ்சமில்லை…ஆனாலும் நானே.. இளவரசன் என்பது போலதான்….. பைஜாமா போட்டுக் கொண்டு ஊர் சுற்றுவதாக இருந்தாலும் சரி…தொடை ஒட்டிய ஷார்ட்ஸ் போட்டுக் கொண்டு வீதி வலம் வருவதாக இருந்தாலும் சரி… நானே… நாகரிகத்தின் குறியீடாக இருப்பது போலக் காட்டிக் கொள்வேன்.. மற்றவர்களும் காண்பார்கள்….

எல்லாரும் சாதாரண மிதி வண்டி ஓட்டியபோதே நான் பைக் மாதிரியான மிதி வண்டியை ஓட்டியவன்.. கொஞ்சம் ஆங்கிலமும் தெரிந்தவன் என்பதால் என்னை சுற்றி எப்போதும் படிப்பு தொடபான விஷயங்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.. ஊருக்குள் பல பேருக்கு கடிதம் எழுதிக் கொடுத்தும், படித்தும், பேர் வாங்கிய கொஞ்சம் புத்திசாலியும் கூட…..ஊரில் இருக்கும் என்ன மாதிரி பசங்க எல்லாருமே பயந்து கொண்டிருந்த குடுகுடுப்புக் காரனை…. பேயை போல வேஷம் போட்டு ஊர்க்கோடி வரை விரட்டி கொண்டுபோய் விட்டு வந்த கில்லி என்று பெரியவர்கள் மெச்சுவார்கள்….

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் சொல்ல மறந்து விட்டேன்.. நான் எங்களூருக்கு இப்போது போவது எதற்கென்றால்……?……

சேப்டர் ஒன்

அது உங்களில் பல பேருக்கு மொக்கையாக் கூட இருக்கலாம். என்ன செய்வது எனக்கு மொக்கையாக இருப்பது உங்களுக்கு பிடிக்கலாம். உங்களுக்கு மொக்கையா இருப்பது அவருக்கு பிடிக்கலாம்… எல்லாமே சமநிலை யதார்த்தம்தானே…அப்ப,டி அது எனக்கு ஹாபி… இந்த ஸ்டாம்ப்ஸ் எல்லாம் சேர்த்து வைப்பது போல… இந்த பழைய கால நாணயங்களையெல்லாம் சேகரிப்பது போல… சரி அப்படி என்ன ஹாபி என்று யோசிப்பவர்கள் பின் தொடருங்கள்…… சொல்கிறேன்..சொல்லுதல் எல்லாமே சொல்லி விட்டவைகளின் நீட்சி என்று நான் நம்புவதே இல்லை..நம்பியவைகளை எல்லாம் சொல்லிவிடுவதும் இல்லை… ஒரு புதிருக்குள் தலையை மட்டும் விட்டு விட்ட உடலின் வாலின் துடித்தலைப் போலதான் இங்கு வாழ்வின் இரண்டாம் பாகம் துடித்துக் கொண்டேயிருக்கிறது…..

சுழற்சிகளின் தத்துவ சாரத்தோடு பேருந்தை விட்டு இறங்கிய நான், ஊர்க்கோடியில் இருந்த அந்த மரத்தை நோக்கித்தான் சென்றேன்…. என்னை தாண்டிய சிலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை… நானும் கண்டு கொள்ளவில்லை… என் மனம் முழுக்க அந்த மரமே வியாபித்திருந்தது…இந்த மரத்தின் யோசனை எத்தனை இரவுகளில் கிளை அசைத்திருக்கும்……மனம் அசைய அசைய மரத்தை பார்த்தும் விட்டேன்….பார்க்க பார்க்க பரவசம்… என் கண் முன்னால் விதைந்து… செடியாகி.. மரமாகி இத்தனை காலத்துக்கு அப்புறமும் இங்கு இப்படி நிற்கிறதே….. காலத்தின் கிளைகளை என்னவென்று வர்ணிப்பது…! அடுப்பில் சட்டினியை வைத்துக் கொண்டு…. “குட்டி…. ஓடிப் போய் கருவாபுல்ல புடிங்கிட்டு வா” ன்னு அத்தை சொல்ல சொல்ல, நான் பாதி மரம் ஏறி இருப்பேன்… அடுத்த கணம் பிடுங்கிய கறிவேப்பிலை சட்டினியில் மணக்க மணக்க வதக்கப் படும்… இன்றும் மணக்கும் நினைவுக்குள் மரம் இன்னும் பெரியதாகி இருந்தது…. இருக்கிறது….இருக்கும்……

சுற்றும் முற்றும் பார்த்தேன்.. யாரும் இல்லை… பறந்து கிடந்த வெளி எங்கும் வெறும் கட்டடங்களால் சூழ்ந்த ஒரு வேறு பகுதி போல தோன்றினாலும் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கொண்டது புதியதாக இருந்தது…இரவு பகல் பாராமல் வாசல் எங்கும் மக்களின் கூட்டமும்…அப்பத்தாவின் கதையும்…வெண்ணிலவின் குளிரும்.. அடர் வெயிலின் நிறமும்…. தங்கிக் கிடந்த நாட்களை நினைக்காமல் இருக்க முடியவில்லை…. தொலைக்காட்சியை முடக்கி வைத்துக் கொண்டார்கள் போல…. ஜன்னல்கள் கூட அடைபட்டே கிடந்தன……மள மளவென ஏற முடியவில்லை என்றாலும்.. பார்த்து பார்த்து ஏறினேன்… அப்பிடி இப்பிடி என்று கறிவேப்பிலை மரத்தின் உச்சிக்கே சென்று விட்டேன்… ஏனோ காலத்தில் பின்னோக்கி ஏறி நடந்து வந்து என் பால்யத்தை அடைந்தது போலவே ஒரு மிரட்சி… மனதுக்குள் மட்டும் கறிவேப்பிலையின் இலையில் தங்கிய நேற்று பெய்த மழையின் குளிர்ச்சி…

எனக்கு புன்னகையை அடக்கவே முடியவில்லை…சிறு பிள்ளையின் இனிப்புத் தேடல் போல எனது மனம் அலைந்தது….எடுத்தேன் என் செல்போனை… முகத்துக்கு நேராக நீட்டினேன்.. கறிவேப்பிலை மரத்தின் உச்சியிலிருந்து கறிவேப்பிலை பழங்களினூடாக என் முகம் விழுவது போல ஒரு செல்பி எடுத்தேன்… நான் முன்னமே சொல்லாமல் சொன்னது போல என் ஹாபிக்கு என் நினைவுகளின் துளியை விதைக்கும் பயணம் இது என்பது போல… வாழ்வின் சாட்சியாய்…. ஒரு பால்ய நண்பனைப் போல நான் எடுத்துக் கொண்ட இந்த செல்பி… என்னை தாலாட்டியது போல இருந்தது….. தூரத்தில் இன்னுமும் ஏதோ ஒரு வீட்டில் “எந்தன் கைக்குட்டையை யார் எடுத்தது”…பாட்டு பாடிக் கொண்டிருந்தது….. மெய்மறந்த, என் பிடி விலக… சர சரவென கீழே………..

சேப்டர் டூ

நீண்டு கிடந்த தனிமைக்குள் மீண்டும் நான் தேடிக் கொண்ட தனிமையோடு அமர்ந்திருந்தேன்… இதே ரயிலடியில் எத்தனை நாள் விளையாடி இருப்பேன்.. எப்போதாவது வரும் அந்த ஒற்றை ரயிலைக் காண எத்தனை நேரம் காத்துக் கிடந்திருப்பேன்.. ரயில் மீது இனம் புரியாத அச்சம் கொண்ட ஆசை மனதுக்குள் ஓடிக் கொண்டேயிருக்கும், இழுக்காத நிறுத்தல்களைக் கொண்ட குறியீட்டு சொப்பனமாய் நான் மீண்டும் மீண்டும் ஒரு ரயிலின் பாதையாய் இருப்பது போல இன்று அமர்ந்திருந்தேன்…..

என் இடது பக்க விலா சதையில் இருந்து ரத்தம் கசிவதை துடைத்துக் கொண்டே அமர்ந்திருந்தேன்……கறிவேப்பிலை மரம் செல்பியில் கிடைத்த விழுதலில் இன்னும் கொஞ்சம் கீழே நகர்ந்திருந்தால் சதையை கிழித்த கூர் வாது.. வயிற்றுக்குள்ளும் சென்றிருக்கும்… கடைசி நேரத்தில் கிடைத்த இன்னொரு கிளை உயிர் காத்தது…நினைக்கவே உடல் வேர்த்தது….

எத்தனை யோசித்தாலும்… என் சிறு வயது ரயிலுக்கு வண்ணம் பூசவே முடியவில்லை….. ஒரு கருப்பு வெள்ளை சினிமா படம் போலதான் ஓடி வந்து என்னைத் தாண்டி செல்லும் ரயிலை நினைக்க முடிகிறது…. ரயிலின் ஞாபகங்கள் எப்போதுமே தாலாட்டும் காலங்களைக் கொண்டவை… ஆனால் இன்று வரை நான் ரயிலில் பயணம் செய்ததே இல்லை என்பதை யோசிக்கும் போது, அன்று ரயிலைப் பார்க்க காத்திருந்த ஆசைக்கு கை கால் முளைத்து ஓட வைத்தது போலத்தான் நினைக்கிறேன்…..

கண்களாய் நீண்டு விட்ட போதும் முழுக்க தண்டவாளத்தின் நீட்சியே….. ஒரு நதி போல திரும்பி பார்த்த பின்னும் வாலின் திரும்புதலாய் மீண்டும் நீண்டு கிடக்கும் இம் முனையை… இன்னும் கொஞ்சம் நீட்டித்துக் கொள்ளும் கற்பனையோடு இனம் புரியாத புள்ளிக்குள் அடைபட்டவனாக மிதந்தேன்…. தூரத்தில் கேட்கும் ரயிலின் ஓசையை துல்லியமாக இதயம் உள் வாங்கி எதிரொலிப்பதாக நினைத்த மாத்திரத்தில் ஒரு சதுர புள்ளியாக வரத் தொடங்கி இருந்தது ரயில்….

‘அதே ரயிலா’- என்று கேட்ட மனதோடு எழுந்து நின்றேன்……. தண்டாவாளத்தில் நடுவில் நின்ற போது மனதுக்குள் ஏதேதோ கிளிக்கியது….. ‘இது என் ரயில்’- என்ற ஒரு வகை இருள் மாப்புடன் என் செல்போனை எடுத்து என் முகத்துக்கு நேராக நீட்டி செல்பி எடுக்கத் தயாராக இருந்தேன்… ரயில் என் அருகே வரும் போது செல்பி எடுத்து விட்டு எட்டிக் குதிப்பதுதான் திட்டம்….

ரயில் நெருங்கிக் கொண்டிருந்தது… நன்றாகவே சத்தத்தையும்.. வேகத்தையும் உள் வாங்க முடிந்தது…… ஏனோ கை நடுங்கத் தொடங்கியது… காதோரம் வியர்வை கொப்புளங்கள் உடைந்து வழிந்தன……. கால்கள் பலம் இழப்பது போல ஒரு நிஜம் என்னை சுற்றி அலையடித்தது…ரயிலின் பெரும் ஓலம் மிக அருகில் கேட்டது… என் பெரு விரல் வேலை செய்யாமல் இருப்பது போல தோன்ற, நொடியில் ஒரு முறை கிளிக் செய்தேன்… தொடுதிரையில் விரல் படாமலே வேகமாக தன் தலையை எடுத்துக் கொண்டது போல இருந்தது… என்ன செய்வதென்றே தெரியவில்லை.. எதற்கு நிற்கிறேன் என்றே மறந்து போனது…இன்னும் ரயிலின் நேரக்கத்தின் தூரம் குறைந்தது ….மனதை ஒரு நிலைப் படுத்தி, ஒரு சதுரத்தில் குவித்து… கண்களை கூர்மையாக்கி…கிளிக்கி விட்டேன்…. ஆனால் என் உடல் நடுக்கத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆடி விட.. மீண்டும் மீண்டும் முயற்சிகளில் கிளிக்கிக் கொண்டேயிருக்க…………… இருக்க…………………. க்க……………………. ரயில் என் முதுகுக்கு அருகே வந்து…வந்து……ந்து…………து…. வந்து விட்டதை செல் போன அப்படியொரு பயங்கர சத்தத்தோடு பிரதிபலித்தது……. இதோ.. இதோ.. அடுத்த நொடி….

சேப்டர் 3

எல்லா கிராமத்திலும்.. ஒரு கதை சொல்லி இருப்பார்கள்…. கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு தெரிய வாய்ப்பிருக்கும்… இந்த வீடு.. எங்கள் ஊர் கதை சொல்லியின் வீடு.. இந்த திண்ணையில்தான் கதை சொல்லியான எங்கள் எல்லாருக்கும் சொந்தமான, பொதுவான அப்பத்தா உட்கார்ந்திருக்கும்… விடிய விடிய சுவற்றைப் பார்த்து விட்டு விடிந்த பின், “இன்னுமா படம் போடறானுங்க.. நான் போறேன்”- என்று எழுந்த போதுதான்.. தான் திரையைப் பார்க்காமல் திரும்பி அமர்ந்திருந்ததை உள் வாங்கி கொள்ளும் அளவுக்கு ஏதோ ஒரு கதையின் ஓட்டத்தை மனதுக்குள் ஓட விட்டுக் கொண்டேயிருக்கும், ஒரு சுவாரஷ்யமான கதாபாத்திரம் எங்கள் அப்பத்தா………

வெள்ளிக்கிழமை இரவென்றால் அது பேய் கதைக்கான நாள்.. அதுவும் அடுத்த இரண்டு நாட்கள் பள்ளிகள் விடுமுறை என்பதால் பள்ளி விட்டதுமே வீட்டுக்கு சென்று துணி மாற்றிக் கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று என்னைப் போல உள்ள பசங்களையும், பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு ஏதோ திருவிழாவுக்கு போவது போல படை திரட்டிக்கொண்டு வரும் நான் ஒரு கதாநாயகனாகவேதான் தோன்றுவேன்.. அப்படி ஒரு நினைப்பு….. அப்பத்தாவும்.. கதை சொல்லும் போதெல்லாம் அதிகமாக, என்னையேதான் பார்த்து பேசும்.. அடிக்கடி உதாரணதுக்கு.. “இப்போ இவன் இருக்கானே…” என்று என்னைத்தான் கை காட்டி பேசும்… ரயிலில் அடி பட்டு இறந்த யானை பேயின் கதையை சொன்ன நாளில்தான்.. ஊருக்குள் முதன் முதலாக ஒரு முக்கியமான நபர் வந்தார்… நாங்கள் அவரை கண்டு கொள்ளாமல் யானைப் பேயின் கதைக்குள் மூழ்கிக் கிடந்தோம்……

அப்பத்தா கதை சொல்ல சொல்ல கதாபாத்திரங்கள் நம் அருகே செல்வதைப் போலவே இருக்கும்…. நம்மோடு கலந்து உரையாடுவது போல இருக்கும்… பேய்க் கதைகளின் பேய்கள் நம்மை ஊடுருவி பார்ப்பது போலவே இருக்கும்…… அப்படி ஒரு ஆளுமை.. வார்த்தை பிரயோகம்… கதைகள், காடு மலைகளைத் தாண்டி ஒரு தேவதையைத் தேடி ஓட வைக்கும்… இரவெல்லாம் விரட்டிய பேயிடம் மாட்டிக் கொள்ளாமல்… கிராமம் கிராமமாக ஓடிக் கொண்டேயிருக்கும் கதை நாயகன் பேயிடம் மாட்டிக் கொண்ட கதையைக் கூட காப்பாற்றியபடியே ஓடிக் கொண்டிருப்பான்……. அவன் ஓட்டம் தடை படும் நேரத்தில் எல்லாம்.. எங்களின் வாய் பிதுங்கும்…… விட்டால் அழுகையே வந்து விடும்…. எங்களின் முக குறிப்பை புரிந்து கொண்டு கதையை சாமர்த்தியமாக நீட்டிக் கொண்டு செல்லும் அப்பத்தா…. புதிர்களின் முடிச்சாகவேதான் தெரிந்தது…..

ஒரு கதையில்கூட கெட்டவன் வெற்றி பெற்றது போல அப்பத்தா, கதையை முடிக்காது…..

“தர்மம்தான் ஜெயிக்கணும்..”- என்று அடிக்கடி சொல்லும்.. “தீமை அழியத்தான் வேணும்….. நல்லவனா இருக்கத்தானே இந்த பொறப்பு.. அது கதையா இருந்தா என்ன… நிஜமா இருந்தா என்ன…?.. ரெண்டும் ஒன்னுதான்”- என்று அடிக்கடி அடிக் கோடிட்டு கதையை துவக்கும்… அல்லது முடிக்கும்…..

அப்பத்தாவுக்கென்று யாரும் சொந்த பந்தங்கள் கிடையாது.. எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து இந்த வீட்டில்தான், அதுவும் இந்த திண்ணையில் தான் உட்காந்திருக்கும்.. தூங்கும்.. பெரும்பாலும் பகலில் தூங்கிக் கொண்டேயிருக்கும்…இரவில் விழித்துக் கொண்டே கதை தேடிக் கொண்டிருக்கும்….கேட்டால் சொல்லும்…. “கதைங்கறது கதையில்ல, அது நிசம்…. அதை தேடிட்டே இருக்கனும்…. விட்டா உசுரு மாதிரி ஓடிப் போய்டும்…”- என்று தொடர்ந்து பேசும்.. பேச பேச பேசிக் கொண்டே இருக்கும் சொற்களின் கூட்டாஞ்சோறுக் குவியலாய் எங்களுக்கு மட்டும் ருசி சேர்ந்து கொண்டேயிருக்கும்……

சிறுகதை… குறுங்கதை.. தொடர்கதை.. ஒப்பாரிபாட்டு.. பிறந்த நாள் பாட்டு… நாற்று நட பாட்டு… சமைந்த பெண்ணுக்கு பாட்டு…இறப்புக்கு பாட்டு என்று எப்போதும்.. கதைகளும் பாட்டுகளும்தான்….. இவை அனைத்தும் இலக்கியங்கள் என்று தெரியாமலே இங்கேயே வாழ்ந்து இங்கேயே முடிந்தும் போன அப்பத்தாவை நினைக்க நினைக்க மனதுக்குள், விட்ட கதை தொட்ட கதை விடாமலும், தொடாமலும்.. துரத்துவதை உணர முடிந்தது….எத்தனையோ அப்பத்தாக்கள் சொல்ல முடியாத கதைகளோடு, கதைகளாய் ஆகி விடுவதை கோடிட்டுக் கொண்டே இருந்த மனதோடு……ஊருக்குள் தனித்துக் கிடந்த வீட்டில் யாருமில்லாமல் இடிந்து பாழடைந்து கிடந்த திண்ணையின் ஓரத்தில் அமர்ந்தேன்….மனக் கண் முன்னால் அப்பத்தா திண்ணையில் அமர்ந்திருப்பது போலவும் நாங்கள் கீழே அமர்ந்து அப்பத்தாவையே பார்த்துக் கொண்டிருப்பது போலவும் காட்சிகள் முன் பின்னாக ஓடின..அடித் தொண்டையில் அடிக்கடி சிரிக்கும் அப்பத்தாவின் குரல் கூட கேட்பது போலதான் இருந்தது அந்த நிமிடம்…

அப்பத்தாவின் ஆன்மா எனக்குள் ஏதோ ஒரு கதையை சொல்ல முயற்சிப்பதாக நினைக்கத் தூண்டியது.. அங்கு சட்டென வீச ஆரம்பித்த கறிவேப்பிலை வாசம்…. கறிவேப்பிலை துவையல் மீதிருந்த அப்பத்தாவின் ஆசையை ஞாபகமூட்டியது…

கதைசொல்லிகளின் மனதில்தான் கதைகளின் ஆரம்பவும் முடிவும் கணக் கச்சிதமாக அமர்ந்து விடுகின்றன……. மனம் கனத்த மௌனத்துக்குள் செல்ல செல்ல.. நான் என் செல்போனை எடுத்தேன்.. ஏற்கனவே எடுத்த செல்பிகளை மீண்டும் தொடுதிரை நகர்த்தி நகர்த்தி பார்த்தேன்….மனம் ஒரு வித அலைக்குள் தடுமாறி ஆழ்ந்த மூச்சு விட்டு தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டது போல உணர்ந்தேன்….. … கறிவேப்பிலை மர உச்சியில் எடுத்த செல்பி.. என்னை ஒரு சிறு பிள்ளையாக காட்டியது போல இருந்தது….. அடுத்து…………. நகர்த்தினேன்…..அடுத்து…………. நகர்த்தினேன்…. ரயிலின் முன்னால் நொடிகளில் உயிர் தப்பிய செல்பி…. பட படக்கும் காற்றில் மிதந்து செல்லும் ஒரு போர் வீரனைப் போல காட்டியது….. புன்னகைக்க தோன்றியது…. திக் திக் நொடிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பின் ஒரு சமயம் பார்க்கும் போது… கிடைக்கும் திர்லிங்… கைகளின் மயிர்கால்கள் நட்டுக் கொண்டன……. மைக்ரோ நொடிகளில் உயிர் தப்பிய ….செல்பியல்லவா…!

சிரித்துக் கொண்டே … மெல்ல தலையை சாய்த்து.. அப்பத்தா அமர்ந்திருக்கும் இடத்தோடு தலையைக் காட்டி ஒரு செல்பி எடுத்தேன்.. எடுக்க எடுக்கவே உடலை வளைத்து நின்ற கால்கள்… தடுமாறி…திரும்பி..

“என் கண்கள்… என் கண்கள்… அப்பத்தா……”………………………… கத்தினேன்…..

சேப்டர் 4

“நான் வந்த ரயிலில் தான் அந்த யானை அடி பட்டு செத்து போச்சு”- என்றுதான் எங்களிடம் பேசவே ஆரம்பித்தது ஷைலஜா… எனக்கு ஷைலஜாவைப் பார்க்க பார்க்க ஒரு புது மாதிரியாக இருந்தது…..

சைலஜா…. எப்டி இருக்கும் என்று எப்படி சொல்வது……?…!….

இந்த சினிமாக்களில் ஒரு கிராமத்தில் ஒரே ஒரு படித்த பெண், தாவணி பாவாடையில் வெல வெலவென ஒல்லியாக, வளர்ந்து ஜடையை தூக்கி முன்னால் போட்டுக் கொண்டு, மாலை நேரங்களில் சிறுவர்களுக்கு பாடம் எடுப்பார்களே.. அந்த மாதிரி ஒரு பெண்… அந்த மாதிரி எங்கள் ஊரில் எந்த பெண்ணும் இருந்ததில்லை. எப்போதும் குளித்து, தலை முடியை காற்றில் அலைய விட்டு… உதட்டு சாயம் பூசி… பள பளக்கும் குட்டிகுரா பவ்டர் போட்டு… அதுவும் அவ்ளோ உயரத்தில் பார்க்கவே, பார்த்துக் கொண்டே இருக்க தோன்றும் அழகு….

தூரத்தில் வந்தாலும் மினுங்கும் ஒற்றை மூக்குத்தி… முகத்தை இன்னும் அழகாக்கி காட்டும்.. நான் நிறைய தடவை நேராகவே, “அக்கா நீங்க ரெம்ப அழகு” என்று கூறி இருக்கிறேன்… ஷைலஜா என்னை பிடித்து இழுத்து என் கன்னத்தில் ஆழமாக ஒரு முத்தம் பதித்து…. “என்ன அக்கானு எல்லாம் கூப்ட வேண்டாம்… ஷைலுனு கூப்டு, அதான்.. அழகா இருக்கும்” என்று கண்ணடித்தது..

நானும்.. முதலில் தயங்கி தயங்கி ‘ஷை…ல் …லு….” என்று மெல்ல முணங்கிக் கொண்டே அழைத்தேன்…. வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில் “ஷைலுலுலுலுலுலுலுலு……………..” என்று சத்தமாக கூப்பிட்டு கூப்பிட்டு பார்த்தேன்… மெல்ல பழகியது…… பல நாள் இரவுகளில் வெண்ணிலா முகம் பிரகாசிக்கும் மொட்டைமாடியில்… நான் அப்பத்தா கூறிய பேய்க் கதைகளை கூறுவேன்… கண்கள் அகல விரிந்து… பின் மெல்ல சுருக்கி … உதடு குவித்து… பின், கதையின் போக்குக்கு தகுந்தார் போல முகம் மற்றும் உடல் விரியும் ஒரு மோகினியைப் போல மாற்றிக் கொள்ளும் ஷைலுவின் பாவங்களை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே செய்யாது…

“அப்பத்தா கதை சொன்ன அந்த வெள்ளிக் கிழமையில் வந்த அந்த முக்கியமான ஆள் இந்த ஷைலுதான்…” என்று குழந்தையின் கன்னத்தை பிடித்து இழுப்பது போல நான் அவ்வப் போது செய்வது ஷைலுவுக்கு ரெம்ப பிடிக்கும்…

“அது ஏன் ஷைலு…….தினமும்.. நம்மூர் ஆம்பளைங்க எல்லாம் தெரியாம தெரியாம இங்க வராங்க.. அப்போ மட்டும் நீ என்னை வீட்டுக்கு போக சொல்லிர்ற….. ஏன்?…..” என்று கேட்ட போது.. என்னை சற்று நேரம் முறைத்து பார்த்து விட்டு,……. ‘வா’…… என்று அருகே அழைத்து இறுகக் கட்டிக் கொண்டது…. அதன் பிறகு நான் கேட்பது இல்லை…….

ஒரு நாள் நீண்ட நேரம் அழுது கொண்டிருக்கும் போல…. முகம் வீங்கி கண்கள் சிவந்திருந்தது….

“ஏன் சைலு அழுதிருக்க…. என்னாச்சு….?”- என்று கேட்டேன்..

என்னைப் பார்க்காமல் எங்கேயோ பார்த்தபடி “சீக்கிரம்… தம்பி பாப்பா பொறக்க போறான்.. எனக்கு பயமா இருக்கு…. இன்னைக்கு என் கூடயே படுத்துக்கோ”- என்று என்னை அணைத்து என் வயிற்றில் முகம் புதைத்து தூங்கிப் போனது…. நான் தூக்கம் வராமல்.. வெகு நேரம் விழித்துக் கிடந்தேன்…

காலையில், “ஆமா உனக்கு வயசென்னடா.. உன் உயரத்தை வச்சு சொல்லவே முடியல” என்று கேட்டது…

நான் ’13’ என்றேன்.. மெல்ல திறந்த புன்னகையோடு.

சிரித்துக் கொண்டே கன்னம் பிடித்து கிள்ளியது ஷைலு…

அதன் பிறகு…. நான் ஊரை விட்டு போக வேண்டியதாய் இருக்க, எல்லாவற்றையும் விட்டு சென்றது போல ஷைலுவையும் விட்டு சென்றேன்.. காலத்தின் ஓட்டத்தில் மறதி என்பதை விட.. ஞாபகம் என்பதே அதிகம் இருந்தாலும்… தூரம் அதிகமானது போலதான் இருந்தது… என்று யோசித்துக் கொண்டே ஷைலுவைப் பார்க்க சைலுவின் வீட்டு பக்கம் போய்க் கொண்டிருக்கும் போதுதான்.. ஆங்காங்கே சிலர் நிற்பதும், குனிந்து கொண்டு போவதும் வருவதுமாக இருந்தார்கள்….

கண்களில் பட்டாம் பூச்சிகள் சிறகில்லாமல் பறப்பது போல ஒரு பிரமை…என் கண்ணுக்கருகே வலித்த கன்னப்பரப்பை கையால் தேய்த்துக் கொண்டே முன்னேறினேன்….. அப்பத்தாவை திண்ணையில் கட்டி வைத்திருந்த கம்பி வளையத்தின் முனையில் என் பேண்ட் மாட்டவில்லை என்றால் அப்பத்தாவின் திண்ணையை செல்பி எடுத்த போது உடல் வளைந்த நொடிகளில் தடுமாறி சரிந்து.. பின் சரி செய்து கொள்ள திமிறியதில் அப்பத்தாவின் திண்ணையில், மேல் சட்டத்தில் அடித்திருந்த ஆணி என் தடுமாற்ற விழுதலில் என் கண்ணுக்குள் போயிருக்கும்… கால் தடுமாறியதில் காலம் மெல்ல நகர ஆணிக்குள் போக வேண்டிய கண்ணுக்கு பதில் கன்னம் உரசிப் போனது…

நினைக்கும் போதே கண்ணுக்குள் ஊசி குத்துவது போல இருந்தது… ஒரு முறை கண்ணை தடவிக் கொண்டே, அப்பத்தாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டே நடந்தேன்…. யாரும் என்னை கண்டு கொள்ளாமல் வேலையைப் பார்த்தபடி இருந்தார்கள்… சொல்லப்போனால் யாருமே யாரையுமே கண்டு கொள்ளவில்லை…ஒரு வேளை என் முகம் மறந்திருக்கலாம்… ஷைலுவின் வீட்டு முன் ஒரு துக்க வீட்டைப் போல, நின்றவர்களின் பாவனை இருந்தது…..

ஆம்.. அது துக்க வீடுதான்..

ஷைலு இறந்து விட்டதாம்…. கேட்ட நொடி திக் என்று நின்று யோசித்து… அழுகை, முடியாத மன நிலையில் நான் மெல்ல வீட்டுக்குள் சென்றேன்… வயதான ஷைலுவின் முகம் இன்னும் பழைய முகமாகவே இருந்தது…. கூட்டம், என்னை யாரோ ஒரு வாடிக்கையாளன் என்று கூட நினைத்திருக்கலாம்…. நினைப்பது தானே… நினைப்புக்கு ஏது தொடக்கம் அல்லது முடிவு… யாரும் கண்டு கொள்ளவில்லை.. எனக்கு ஷைலுவைக் கட்டிக் கொள்ள வேண்டும் போல இருந்தது…கண்டிப்பாக ஆசை தீர அழுகை தீர கட்டிக் கொள்ள வேண்டும்…எப்படி கட்டிக் கொள்வது…? ஆனால் கட்டிக் கொள்ள வேண்டும்… ஆன்மாவுக்குள் கேட்கும் அலறல் சத்தம் ஷைலுவுக்கு கேட்டிருக்கும்….. நெற்றியில் ஆழமாய் ஒரு முத்தம் பதிக்க வேண்டும்… எத்தனை கதைகளை சொல்ல நினைத்து வந்தேன்… சொல்லவும் முடியாமல்.. சொன்னாலும் கேட்க முடியாத இடத்தில் நான் ஷைலுவைப் ஆழமாய் பார்க்க ஷைலுவும் என்னை மட்டுமே பார்ப்பது போல இருந்தது….

“என்னதான் இருந்தாலும் அவ பையன் வராம, பொணத்தை எடுக்கறது நியாயம் இல்ல.. அவன் வந்த பின்னால எடுத்துக்கலாம்..வந்துட்டு இருக்கானாம்”- என்ற கூட்டம் மெல்ல கலையத் துவங்கியது…ஏனோ பிணம் காக்கும் இரவில்தான் அதிகமாக பசிக்கிறது….. எனக்கு ஒப்பாரி வைத்து அழ வேண்டும் போல தோன்றியது ….சில பாட்டிகள் ஆங்கங்கே சிணுங்கிக் கொண்டிருந்தார்கள்…

இரவை துளைத்த நேரத்தில் பிணம் இருந்த அறைக்குள் யாருமே இல்லை… நான் உள்ளே போனதையும் வெளிய தூங்கிக் கொண்டிருந்த சில பெருசுகள் கண்டு கொள்ளவில்லை… நான் உள்ளே சென்று கதவை நன்றாக சாத்தி விட்டு ஓடிச் சென்று ஷைலுவை வாரி அணைத்துக் கொண்டேன்…… கனமாக இருந்து ஷைலுவின் …. காதுக்குள் ரகசியமாய் கூறினேன்..

“நான் தான் நான்தான் என்று..”

ம்ஹும்.. அசைவே இல்லை…. எத்தனை அன்பும் அரவணைப்பும் இறந்த உடலை ஒன்றுமே செய்வது இல்லை… கன்னம் பிடித்து கிள்ளிப் பார்த்தேன்….. ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பது போல கிடந்தது ஷைலு…. நன்றாக அணைத்து என் மார்போடு ஷைலுவின் தலை இருக்கும்படி வைத்துக்கொண்டேன்.. காலம் முழுக்க யார் யார் தலையையோ தாங்கிய மார்பு இது….. இன்று துக்கப் பட்டு விசனப் பட்டு நொந்து சுருங்கிக் கிடந்தது…. எனக்கு நண்பர் ஒருவர் எழுதிய ஒரு கவிதைதான் ஞாபகம் வந்தது…….

மென் முலைகள்
பருத்து, நின்று
வசீகரித்து,
செவ்வரிகளாகி, சிவந்து
காலை மாலை எவ்வேளையும்
கண் நிரப்பும்
சிறு மலையாகி
பின், மெல்ல மெல்ல
சரிந்து, விழுந்து
மறந்து போகும்
நாளில்
மாராப்பு சரி செய்ய
தோன்றாத
மென் நடையோடு
எங்கள் வீதி அழகி ஒருத்தியின்
கதையை
முடித்து வைக்கிறோம்….

ஷைலுவை சாய்த்துக் கொண்டு தாலாட்டினேன்…ஒரு குழந்தையைப் போல முகத்தை ஏந்திக் கொண்டேன்…தலையின் கனம் நேரம் கூட கூட அதிகமாகிக் கொண்டேயிருக்க தலையை நேராக சாய்க்க நான் சற்று என் உடலைத் திருப்பினேன்… யாரோ என் தலையை இன்னும் சற்று ஷைலுவின் முகத்தைப் பார்த்து வேகமாக இழுத்தது போல இருந்தது ….

“ஷைலுலுலுலுலுலு” என்று சத்தமே வராமல் கத்தினேன்…

சேப்டர் 5

இறுதிச் சடங்குக்கான வேலைகள் நடந்துகொண்டிருக்க, நான் பிணம் போல அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன் … சட சடவென எல்லாம் நடந்தது.. ஷைலுவின் பையன்… வேண்டா வெறுப்பாக தீ மூட்டி விட்டு வேகமாக போய்க் கொண்டிருந்தான்…..ஊரும் அவன் பின்னால் ஒழுக்கத்தின் வரிசையைப் போல போய்க் கொண்டிருந்தது….நான் ஷைலு எரிவதைப் பார்த்துக் கொண்டு கரைந்து கொண்டிருந்தேன்…..கரைதலில் நேற்றைய இரவு மூளைக்குள் கொட்டியது….. நேற்று ஷைலுவை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு செல்பி எடுத்த போதுதான் அந்த செந்தேள், மேலே சிதிலமடைந்த கரும்புகை அப்பிய ஓட்டில் இருந்து நேராக என் முகத்தை நோக்கி விழுந்தது….. கண நேரத்துக்குள் யாரோ இழுத்தது போல நான் என் தலையை இடம் மாற்றியதில் அந்த செந்தேள் என் தலை இருந்த இடத்தில் விழுந்தது….என் தலை தப்பியது…

அடிக்க எதுவும் கிடைக்காத போது… ஷைலுவின் கையைக் கொண்டே செந்தேளை நசுக்கினேன்…. மனதுக்குள் பெரும் புயல் ஓயாமல் வீசிக் கொண்டே யிருப்பது போல என் செல்பி ஆசையும்..உச்சி மழைக் காற்றாய் வந்து போனது…. நினைக்க நினைக்க என் மனநிலை மேல் எனக்கு சந்தேகம் வரத்தான் செய்தது….. எரிய எரிய மெல்ல எழுந்து அமர்ந்த ஷைலுவின் நெஞ்சில் ஒருவன் ஓங்கி ஓங்கி தடியால் அடித்தான்..

“அட …பாவி…மார்புகளின் சுமையை இறக்கி வைக்கவே விரும்பியவள் ஷைலு…. இன்று இறுகிப் போன பின் இத்தனை அடி எப்படி தாங்குகிறாள்…”-என்னால் அங்கு அமர முடியவில்லை…. எழுந்து நடந்தேன்…. வேகமாக நடந்தேன் ….

சற்று தூரம் தள்ளி ஒரு தம்பதி ஒரு குழந்தையை அழுதுகொண்டே குழிக்குள் போட்டு மண்ணை தள்ளத் தொடங்கியிருந்தார்கள்…. மரணங்களிலேயே குழந்தையின் மரணம் மிக கொடுமை ஆனது என்று மனம் வேறு திசையில் பயணிக்க தொடங்குகையில் சட்டென உள்ளே இருந்த பிசாசு விழிக்கத் தொடங்கியது…என் செல்போனை எடுத்துக் கொண்டு அந்த குழந்தையின் அருகே செல்பி எடுக்க சென்றேன்…”செல்பி எடுக்காவிட்டால் அந்தக் குழந்தை உயிர் பெற்று விடுமா என்ன?” என்று சமாதானம் வேறு சொல்லிக் கொண்டது மனம்…. அப்போதுதான் ஒன்றை …கவனித்தேன்… அந்த குழந்தை மிகக் குறைவாக மூச்சு விட்டுக் கொண்டிருப்பதை நன்றாகவே பார்க்க முடிந்தது……. அது தெரியாமல் கணவனும் மனைவியும் மண்ணை அள்ளி அள்ளி போட்டுக் கொண்டிருந்தார்கள்……

நான் கத்தினேன்..

“டேய்… குழந்தை இன்னும் சாகலடா… இன்னும் சாகலடா……..ஏம்மா…. நிறுத்துமா.. குழந்தை சாகல.. உயிர் இருக்கு…”

யாருக்குமே நான் கத்துவதோ அங்கு நான் இருப்பதோ, கேட்கவில்லை…………… தெரியவில்லை…………………

சேப்டர் ?

நேற்றிரவு ஷைலு வீட்டிலிருந்து எங்கள் வீட்டுக்கு (அதுவும் பாழடைந்த பழைய வீடுதான் ) சென்று இருட்டுக்குள் வெகுநேரம் அமர்ந்திருந்தேன் ,…. ஒரு கரப்பான் பூச்சி என் கன்னத்தில் உரசுவதும்….பறப்பதுமாக இருக்க ஜன்னலோரம் மெல்ல நகர்ந்து சென்று திறந்திருந்த சாளரத்தின் விளிம்பில் சாய்ந்து நின்றேன்.. அப்போதுதான் நிலா தன்னை வெளிச்சமாக்கிக் கொண்டிருந்ததோ என்னவோ… பளிச்சென ஒரு இரவைக் கண்டேன்…

வந்து வந்து போய்க் கொண்டும்.. கன்னம் காது மூக்கு நெற்றி என்று பட்டும் படாமல் சிறகடிப்பதுமாக இருந்த கரப்பான் பூச்சியியோடு ஒரு செல்பி எடுக்க சட்டென்று ஒரு குரங்கு மனதுக்குள் தாவியது… கரப்பான் பூச்சி கன்னம் உரசியவுடன் செல்பி எடுப்பதுதான் எனது திட்டம்… திட்டதை தாண்டியும் கரப்பான் பூச்சி என் மூக்கின் நுனியிலே அமைந்தது.. நிலா வெளிச்ச நேரத்தில் சிலு சிலு காற்றில்… தனிமை இருளுக்குள் மௌன சாட்சியாக அந்த கரப்பான் பூச்சி என்னிடம் கொண்ட நட்பின் சாட்சியை செல்பியாய் எடுத்த மறுகணம்… நான் சற்றும் எதிர்பார்க்காத நொடியில் கரப்பான் பூச்சி என் மூக்கினுள் நுழைந்தது, படு வேகமாக….. அவ்ளோ தான்… தலைக்குள் பம்பரம் சுழல்வுது போல நான் கிறுகிறுத்து தடுமாறி…… திரும்பியதில் சுவற்றில் அடித்திருந்த ஆணியில் என் நெற்றியைக் கொண்டு சொருகினேன்…….. சூடாக என் மூக்கில், கன்னத்தில் வழிந்த குருதியை தொட, தொடவே நெற்றியை வேகமாக வெளியே உருவின சற்று நொடியில் கிறுகிறுத்த தலை சாளரத்தை தாண்டி கீழே சரிய, முழு உடம்பும்…….கீழே சரிந்தது…மாடியில் இருந்து சரிந்த நான் கீழே இருந்த ஒரு கறிவேப்பிலை மரத்தின் நடுவே விழ, குத்தி கிழிக்கப்பட்ட வயிற்றோடு வலி தாங்காமல் மாட்டிக் கொண்ட மரத்திலிருந்து எட்டிக் குதிக்க, நான் எகிறி இப்போது விழுந்தது என் வீட்டுக்கு பின்புறமுள்ள கறிவேப்பில்லை மரத்தை ஓட்டிப் போய்க் கொண்டிருக்கும் தண்டவாளத்தில்…….

கண நேரத்தில் வந்து போன ரயிலுக்குள் நான் வெறும் சதைகளாகக் கிடந்தேன்.. என்னோடு சில தேள்களும் செத்துக் கிடந்தன….

இந்த சேப்டர்க்கு நீங்களே எண் கொடுத்துக் கொள்ளுங்கள்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *