திறந்தவெளி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 16, 2013
பார்வையிட்டோர்: 9,622 
 
 

“மார்கழி திங்கள்…….” எங்கேயோ கேட்கும் இசை, ஊர் முழுக்க அடுத்த இரண்டு நாட்களுக்கு தன் முகத்தைமாற்றி கொள்ள போகும் இயல்பு, எங்கேயும் ஜனத்திரள், எல்லோர் முகங்களிலும் ஏற்படும் இயல்பான சிரிப்பு, இதெல்லாம் விட போலீஸ் கெடுபிடி என ஊரின் முகமே மாறிப்போகும் நிலை ஸ்ரீரங்கத்தில் நெருங்கி கொண்டிருக்கிறது… இதெல்லாவற்றையும் நிம்மதியாக அசை போட்டவாறே, வெளியில் திரிந்துகொண்டிருக்கும் அனாதையான பேய் பிடித்து அலையும் காற்றுக்கு தன் முகத்தில் கொஞ்சம் இடம் ஒதுக்கி கொண்டு, காதில் செறுகி இருந்த ஹெட் ஃபோன் வழியாக ஏதோ ஓர் பாடலை கேட்டு கொண்டு அவள் பஸ்ஸில் ஓர் ஜன்னலோர ஸீட்டில் அமர்ந்திருந்தாள்… இந்த நாட்களை கொண்டாடுவதில் ஸ்ரீரங்கத்து காரர்கள் தவற விடுவதில்லை… எங்கு திரும்பினாலும் பேச்சொலிகள், தன் வீட்டுக்காரரை கேட்பது போன்று மற்றவரிடம், “பெருமாள் எங்க இருக்கார்…?” என்று உரிமை கொண்டாடும் மாமாக்கள் மற்றும் மாமிகள், சபரி மலை கூட்டம், வேறு ஊரிலிருந்து வேனோ, பஸ்ஸோ வைத்து இரண்டு, மூன்று நாட்கள் டேரா போடும் கும்பல்கள், மடங்கள் அனைத்தும் ஈ மொய்ப்பது போல் திரியும் வெளியூர் மக்கள் என ஊரே களைகட்டும் ஸ்ரீரங்கத்திற்கு மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு மட்டம் போட்டு அவள் பயணமானாள்… இவள் செல்லாதிருப்பதினால் அங்கே ஒன்றும் கழண்டு விட போவதில்லை என்றாலும், இது போன்ற விஷேஷ நாட்களில் அவளும் அவளது பள்ளி தோழிகளும் சம்பவித்து பல் வேறு விஷயங்களை பரிமாறிக் கொள்ளும் சம்பாஷனைகள் இல்லாமல் போனால் அவர்களது நட்பு வளை சற்று அறுந்து போவதற்கு வாய்ப்புள்ளது… அவள் மனதில் இத்தனை விஷயங்களையும் தாண்டி தான் ஓர் பெரிய கூட்டத்தில் ஐக்கியமாக போவதையே பெரிதாக எண்ணி கொண்டிருந்தது… அப்பாவுடன் சேர்ந்து கோயிலை இரண்டு மூன்று முறை சுற்றி வலம் வந்து அனைத்து ஜனத்திரளையும் பார்க்கலாம், தோழிகளும் வந்திருந்தால் சொல்லவே தேவை இல்லை, வைகுண்ட ஏகாதசிக்கு முதல் நாள் இரவு, கோயில் மணல் வெளியிலேயே இரவு முழுவதும் அவர்களுடன் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டிருக்கலாம்… இவையெல்லாவற்றையும் நினைக்கையில், அவள் முகத்தில் அடித்து கொண்டிருக்கும் காற்று அவள் மயிற்கால்களை குத்திட்டு நிற்க செய்தன… அந்து சிலிர்ப்பு அந்த நினைவலைகளினாலா அல்லது அந்த காற்றினாலா என்று அவளுக்கு தெரியாது….

அதிகாலையில் பஸ்ஸை விட்டு இறங்கியதும், எவ்வளவு அழகாக புதுப்பித்து கொண்டிருந்தது ஸ்ரீரங்கம்… அந்த காலை நேரங்களில் எல்லா ஊர்களிலுமே ஒரு அழகு குடி புகுந்து விடுகிறது… வெயில் ஏற ஏற ஒவ்வொரு ஊரும் அதனதன் இயல்பு நிலைக்கு திரும்பி விடுகிறது…. எப்போதும் பஸ்ஸை விட்டு இறங்கியதுமே தூக்கத்தில் இருக்கும் தனது அப்பாவை எழுப்பி கஷ்டபடுத்தி, அவரை பஸ் ஸ்டாண்டிற்கு வர செய்து, வீட்டிற்கு ஸ்கூட்டியில் தான் எப்போதும் போவாள்…. ஆனால் இன்று இந்த அதிகாலை எப்பொதும் இருக்கும் ஊரை மிக அழகாக காண்பித்து அவளை நடக்க தூண்டியது…. இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும்…. அதை பற்றி அவள் கவலையே பட வில்லை…. முந்தைய நாள் இரவின் பஸ் பயண நினைவுகளுடன் அவள் நடக்க தொடங்கினாள்… என்றுமே பஸ்ஸை விட்டு இறங்கியதும் இருக்கும் களைப்பு அன்று அவளிடம் இல்லை…. ஒவ்வொரு வீட்டின் வெளியில் போட பட்டிருந்த க!
ோலங்களையும் போட்டு கொண்டிருக்கும் மாமிகளையும் பார்த்த படியே வந்து கொண்டிருந்தாள்…. சில வீடுகளில் முதல் நாள் இரவே கோலங்கள் போடப் பட்டிருப்பதையும் கவனித்தாள்…. தூரத்தில் ஒலிக்கும் அந்த மெல்லிய இசை, யார் பாடி இருப்பார்கள், எம். எஸ். சுப்பு லஷ்மியா? அவ்வளவு ரம்மியமாக ஒலித்துகொண்டிருந்தது… இதெல்லாம் அவள் வேலை பார்க்கும் ஊரில் சாத்தியமே இல்லை…. அவள் பெங்களூரில் வசிக்கும் வீட்டில் அவளையும் சேர்த்து நான்கு பேர்…. காலையில் எழுந்து புறப்படுவது, லாப்டாப்பில் தலையை விடுவது என நாட்கள் கடக்கின்றன…. ஸ்ரீரங்கத்திலேயே ஒரு சாஃப்ட்வேர் கம்பெனி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று அவள் பல முறை நினைத்திருக்கிறாள்…. அவளுக்கே சற்று வேடிக்கையாக தான் தோன்றும் இது போன்று எண்ணங்கள் வருவதை நினைத்து, என்ன செய்வது எண்ணங்களுக்கு யாரும் வேலி போட முடியாதல்லவா??

அவள் எப்போது நடக்க தொடங்கினாலும் இரண்டு பக்கமும் பார்த்து கொண்டே நடப்பாள், அது மெய்ன் ரோடாக இல்லாதிருப்பின்…. ஏதாவதொரு பக்கமோ, அல்லது இரண்டு பக்கங்களிலும் வீடு இருக்கும் தெருவாக இருந்து விட்டால் போதும் அவளுக்கு நடக்கும் அலுப்பே தெரியாது…. ஒவ்வொரு வீட்டின் முகப்பையும் பார்த்து கொண்டே வருவாள்…. அது எப்படி எந்த வீட்டை பார்த்தாலும் அதன் வெளி தோற்றம் அவளுக்கு பிடித்து விடுகிறது என்று தெரியவில்லை…. பஸ்ஸில் வரும் போதும் ஷன நேரும் கண்ணில் தங்கும் அனைத்து வீடுகளையும் பார்த்து கொண்டே வருவாள்…. அது குடிசையாக இருந்தாலும் சரி, பெரிய அடுக்கு மாடி வீடுகளாக இருந்தாலும் சரி, இடிபாடுகள் நிரைந்த யாருமற்ற கட்டிடமாக இருந்தாலும் சரி, அவளுக்கு அத்தனை வீட்டின் முகப்பின் மீதும், அதை வேடிக்கை பார்ப்பதிலும் பெரிய ஆசை இருக்கிறது… அவள் கண்களில் மட்டும் ஏதோ ஓர் அழகு எல்லா வீடுகளின் முகப்பிலும் தெரிந்து விடுகிறது…. இத்தனைக்கும் அவள் ஒரு பெரிய கவியோ, கண்ணில் தோன்றும் அழகுகளை எழுத்தில் கொண்டு வரும் வித்தகியோ கிடையாது…. அது அவளுக்கு பிடித்திருக்கிறது, அவ்வளவு தான்… ரசிப்பதற்கு காரணம் தேவையா என்ன?? இப்படி காரணம் தெரியாமல் ரசிப்பதற்கு எல்லோருள்ளும் பற்பல விஷயங்கள் இருக்கிறது….

வீட்டிற்கு வந்தவுடன் அவளுக்கு ஏற்பட்ட முதல் ஆச்சர்யம், வீட்டில் பாட்டி இருப்பதை கண்டு… எப்போதாவது தான் பாட்டி இவள் வீட்டில் இரண்டு மூன்று நாட்கள் தங்குவது வழக்கம்… வீட்டுக்கு சென்றவுடன், அவளிடம் அவளது அப்பா கேட்ட முதல் கேள்வி “நடந்தா வந்த, லூஸாடி நீ..?”… அவள் ஒரு சிரிப்பை பதிலாக தந்து உடைகளை மாற்ற ரூமுக்கு போனாள்… அம்மாவும், பாட்டியும் நலம் விசாரித்த பிறகு அவளுக்கு காப்பி போட்டு தந்து கொஞ்ச நேரம் உறங்க சொன்னார்கள்… படுக்க செல்லும் போது தான் அவளுக்குள் எப்போதும் ஏற்படும் மாற்றத்தை உணர்ந்தாள்……….

பாட்டி அவள் உறங்கி எழுந்ததும், “போ, இங்க வந்தவுடனே ஆயிடுத்து…” என்று ஆரம்பித்தார்…. பஸ்ஸிலும், நடந்து வரும் பொழுதும் இருந்த உற்சாகம் சற்று குறைந்து முகம் தொங்கி போய் விட்டது… அம்மா அவளை தனியாக அழைத்து கொண்டு பேச்சை ஒருவாறாக வாயில் வரவழைத்து கொண்டு,”ஏய், பாட்டி இருக்கா, கொஞ்சம் பாத்து இருந்துக்கோ, தீட்டு பயங்கரமா பாப்பா, உனக்கே தெரியும் இருந்தாலும் சொல்றேன்….” என்று இழுத்தார்…. அவளுக்கு முற்றிலும் விளங்கி விட்டது….

பாட்டி இல்லை என்றால் அவளுடைய அப்பாவும் அம்மாவும் ஒன்றும் இதை பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார்கள்…. தற்போது உள்ள நடைமுறையில் யாரும் இதைபெரிதாக எடுத்து கொள்வதில்லை என்றாலும், பாட்டி கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்று அவளுக்கே தெரியும்…. இருந்தாலும் அம்மா இப்படி தனியாக கூப்பிட்டு சொன்னதில் அவளுக்கு மேலும் ஒரு வித வேதனையையே கூட்டியது…. உடனே அவளுக்கு அவள் அடுத்த இரண்டு நாட்கள் போட்டிருந்த திட்டங்கள் ஞாபத்துக்கு வந்தன…. மனதில் கனம் ஏறியது… காலை உதறி கொண்டு “நான் கண்டிப்பா கோயில் போகனும்….” என்று அடம்பிடிக்க வேண்டும் போல தோன்றியது…. அப்படியெல்லாம் செய்ய வயது இடம்கொடுக்கவில்லை…. அப்படி அடம்பிடித்து விட்டால் மனதில் ஏறிய கனம் கொஞ்சம் குறைய வாய்ப்பிருக்கிறது… காலை உதறும் செயல் மனதிலேயே நடத்தி கொண்டிருந்தால்… மனதும் அலைபாய்ந்தபடி உதறிகொண்டே இருந்தது…. அவள் மறுபடியும் அம்மாவிடம் சென்று “ஏம்மா, 8 மணி நேரம் ட்ராவல் பன்னி ஒரு ரூமுக்குள்ள அடஞ்சு கிடக்கவா வந்தேன்?…” என்று கேட்டு விட்டாள்…. “புரியுதுடி, நானும் அப்பாவும் இருந்தா பிரச்சனையே இல்ல…. பாட்டி வேற இருக்கா… புரிஞ்சுக்கோ…. அப்படி இப்படினு இருந்தா உங்க மாமா மாமி கிட்ட போயி, எப்படி வளர்த்துக்கா பாருனு என்ன தான் சொல்லுவா….” அவ்வளவு தான், அவள் உண்மையாகவே முகத்தை தொங்க போட்டு, கீழ் மற்றும் மேலுதடுகளை மேலே தூக்கி, விடைபெற்றாள்….

கணிணியை இயக்கி முகநூலுக்கு அவள் நுழைந்ததும் கண்ணில் பட்ட முதல் ஸ்டேட்டஸ் “இன் ஸ்ரீரங்கம் நௌ….:)” தோழிகள் அனைவரும் விடுமுறைக்கு வந்திருப்பது பக்கத்தில் உள்ள ஆன்லைனில் பார்த்து தெரிந்து கொண்டாள்…. அப்போது தான் தீவிரமடைந்து கொண்டிருந்தது டெல்லி கேஸ்… அதை பற்றிய ஒரு சில பதிவுகளை படிக்க தொடங்கினால்…. “எப்போ பெங்கலூர்ல நடக்க போகுதோ…” மேலும் எரிச்சலை தான் கிளப்பி கொண்டிருந்தது முகநூல்…. என்ன செய்வதென்று அறியாமல் வீட்டில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்… டி.வி பார்க்கலாம் என்ற போது கரண்ட் கட் ஆனது…. “எப்பமா கரண்ட் வரும்….” “யாருக்கு தெரியும், அவன் நினச்ச நேரத்துக்கு நிப்பாட்டுறான்…. ஒரு நாளைக்கு 10 மணி நேரம் நிப்பாட்டுறான், இன்னொரு நாள் 16 மணி நேரம் நிப்பாட்டுறான், இப்பல்லாம் கணக்கே கிடையாது…. வைகுண்ட ஏகாதசினால இன்னிக்கும் நாலைக்கும் கொஞ்சம் கம்மியா நிப்பாடுவான்னு சொன்னா…” பாத்திரங்களை அலம்பி கொண்டே அவள் அம்மா….

வாசலில் வந்து உட்கார்ந்தால், வெயில் சுட்டெறித்தது… பிடிக்கவில்லை உள்ளே வந்தால்…. திரும்பவும் படுப்பதா, வேண்டாம் என்று தினசரிகளில் கவனத்தை செலுத்தினால்…. அதில் ஒரு தேர் படம் தென்பட்டது… அவளுக்கு எப்போதோ படித்த “நிலை” என்ற கதை ஞாபகம் வந்தது…. அதில் வரும் சிறுமியாகவே அவள் தன்னை இப்போது உணர்ந்தாள்… ஏன் இத்தனை பாவமாக தன்னை நினைத்து கொள்ள வேண்டும், அப்பா வரட்டும் ஏதாவது செய்யலாம் என காத்திருந்தாள்…. அம்மாவும் பாட்டியும் குடும்ப கதை பேச ஆரம்பித்தார்கள்… இவளும் பொழுது போகாமல் கேட்டு கொண்டிருந்தாள்… பின் நாளில் இவளுக்கும் உதவலாம் அல்லவா…

மணி நான்கை தொட்டது…. அப்பாவும் வந்தார்…. ஏதாவது சொல்லி அப்பா பாட்டியையும் அம்மாவையும் சமாளித்து விடுவார்…. எல்லாம் நன்றாக முடிந்து விட்டால், உதிரி பூக்கள் அஸ்வினி போல் வானத்தை நோக்கி மழை வருகிறதா என்று தான் பார்க்க வேண்டும்… இதில் விஜயன், பாட்டி தான் இப்போது… ஆனால் அன்பான பாட்டி, எப்போது இவளை பாத்தாலும் ஆசையாக நிறைய பேச நினைப்பார்…. நிறைய அறிவுறைகளும் வரும்…. ஆனால் இதெல்லாம் அவள் காதில் சென்றடைவதே இல்லை… ஜென்ரேஷன் கேப் வலுத்த நிலையில் இருந்தது அவர்கள் இருவருக்கும்…. அப்பா வந்தார், அவளும் அப்பாவிடம் சொல்லி புரியவைத்தாள்…. அப்பா நேரே சமையலறைக்கு சென்று(அம்மாவை வேறு எங்கும் காண இயலாது சமையலறையை தவிர்த்து), “ஏய் இங்க பாரு… குழந்த ஏதோ ஆச பட்றா… கோயிலுக்கு தான போயிட்டு வரட்டுமே…. ஊரே ஜேஜேனு இருக்கு, இவ ஃப்ரெண்ட்ஸ்லாம் வேற வந்திருப்பா…” என்று மெல்லிய குரலில் பாட்டி காதிற்கு விழாத வகையில் சொல்லி கொண்டிருந்தார்…. இவள், பக்கத்தில் அப்பாவின் தோலில் சாய்ந்து கொண்டு பாவபட்ட ஜந்து போல அம்மாவையே பார்த்து கொண்டிருந்தாள்…. “அய்யோ வேண்டாம்னா, பாவம்னா, தீட்டும் அதுவுமா போயிண்டு எதுக்கு தேவ இல்லாத வேல….” என்று குழைந்து அப்பாவை விட மெலிதாக கூறினாள்…. பாட்டி எதேச்சையாக காப்பி டம்ப்ளரை சமையலரையில் அலம்ப வர, அப்பா”சரி சரி சரி விட்டுடு….” என்று பேச்சை துண்டிக்க பார்த்தார்…. பாட்டி “என்னாச்சு…” என்று கேட்க ஆரம்பித்தார்…. அவள் சமையலறையில் நின்று கொண்டிருந்ததே பாட்டிக்கு பிடிக்காமல் இருக்கலாம்.. “ஒன்னும் இல்லமா, இவளுக்கு கோயிலுக்கு போகனுமாம், இவா ஃப்ரெண்ட்ஸெல்லாம் வந்திருக்கா லீவுக்கு, எப்பவும் வைகுண்ட ஏகாதசி அப்போ இவளும் இவா ஃப்ரெண்ட்ஸெல்லாம் சேர்ந்து பயங்கரமா ஊர் சுத்தும்… கோயில்ல கூட்டத்த பார்க்கனுமாம்…. அப்படின்னு இவா அப்பா வந்து ஸப்போர்ட் பண்ணிண்டு இருக்கா….” பாட்டி லேசாக சிரித்து கொண்டே”சரி தான்…” என்று இழுத்தவாறு,”பாவம் இவளும் ஊர்லேந்து வந்திருக்கா, இந்த நேரத்துல இப்படி ஆயிடுத்து…. கோயிலுக்கு மட்டும் வேண்டாமே, அத்தனையும் பாவம்…. வேற ஃப்ரெண்ட்ஸு வீட்டுக்குனா பரவா இல்ல… கோயில் தான் …….” என்று முடிக்க முடியாமல் திணறினார்…. அப்பா அவள் பக்கம் திரும்பி தலையை 45 டிகிரி சாய்த்து லேசாக புன்னகை செய்தார்….

மொட்டை மாடிக்கு வந்தால், மறுபடியும் தூரத்து “மார்கழி திங்கள்” இசை ஒலிபெருக்கியிலிருந்து…. கண்ணுக்கெட்டிய தூரம் வரை வேன்களும் பஸ்களும்…. ரோட்டில் பார்த்த போது ஏராளமான புது முகங்கள்…. அன்றைய நாள் அப்படியே கழிந்தது… இரவு நெருங்கி கொண்டிருந்தது… போன வருடம் செய்த அனைத்தும் அவள் ஞாபகத்திற்கு வர தொடங்கியது… அந்த நேரம் பார்த்து அவளது தோழிகள் தெருவில் ஸ்கூட்டியின் ஹாரன் அடித்து அவளை கூப்பிட்டு கொண்டிருந்தனர்… ஏண்டா இவர்கள் இப்போது வந்தார்கள் என்றிருந்தது அவளுக்கு… கீழே வந்து அவர்களிடம் கொஞ்ச நேரம் அரட்டை அடித்து விட்டு எல்லோருடைய வேலை பற்றியும் கேட்டு கொண்டிருந்தாள்… அதில் ஒருத்தி அவளை கோயிலுக்கு கிளம்பும் படி சொன்ன போது, அவள் சிரித்து கொண்டே சமாளித்து கொண்டிருந்தாள்… பிறகு கூட்டத்தில் ஒருவள்,”இதுக்கு போயா வரமாட்டேங்குற? என் வீட்டுக்கு வரனு சொ?!
??்லிட்டு வா… அப்டியே கோயிலுக்கு போயிட்டு வந்துடலாம்…” நல்ல யோசனை தான் அவளுக்கு இது மதியமே தோன்றியது…. ஆனாலும் ஏன் ஏமாற்றிவிட்டு செல்ல வேண்டும் என்று அவளுக்குள் தோன்றியது….அதுவும் பின்னால் அம்மாவுக்கு தெரிந்து விட்டால் அவ்வளவு தான் இருக்க போகும் இரண்டு நாட்களும் அம்மாவுடன் மூஞ்சை தூக்கி வைத்து கொள்ள வேண்டியது தான்.. அவள் மறுக்கவே கூட்டம் கலைந்து கோயிலுக்கு போக போவதாக கூறிவிட்டு நகர்ந்தன…

அடுத்த நாளும் வந்தது… வழக்கம் போல அதிகாலை 10 மணிக்கு(அவள் கணக்குபடி) எழுந்தாள்… வீடு ‘ஓ’ வென்றிருந்தது… வெளியில் வந்தால், சகிக்க முடியாத வெளிச்சமும் கூட்டமும் கண்ணை நிறைத்தன… சிலர் ஓடி கொண்டிருந்தனர், சிலர் பேசி கொண்டே சென்று கொண்டிருந்தனர்… பல மாமிகள் தங்களுக்குள்ளாகவே சிரித்து சிரித்து எதையோ உறக்க கத்தி கொண்டிருந்தனர்… அதை பார்க்கவே அவளுக்கு வித்தியாசமாக இருந்தது… அனைவரும் புது புடைவைகளில் மின்னினர்… ஓர் திறந்தவெளி ரோட்டில் இப்படி பெண்கள் சத்தமாக பேசி சிரித்து கொண்டு போவதே ரம்மியமாக இருந்தது…. ஊருக்கே ஒரு பண்டிகை கலை…. மதிய வேளையில் சைக்கிளை எடுத்து கொண்டு கொஞ்ச தூரம் சென்றதுமே ரோடே அடைத்து கொண்டது போல மனிதர்களால் அடைத்து கொண்டது…. இதில் பல காக்கி உடுப்புகள்… அப்படியே கோயில் வரை போகலாம் தான்… ஆனால் அந்த கூட்டத்தை தாண்டி சென்று அடைவது கடினம்…. வீட்டிற்கு திரும்ப வந்தாள்… எதிலுமே மனம் ஒட்டவில்லை…. தினசரியை புரட்டினாள், டிவியை நோண்னாள், பால்கனிக்கு வந்து நின்றாள், குடும்ப கதைகளை கேட்டாள்… இப்படியே பொழுது கழிந்தது…. அன்றைய சாயுங்காலம் அவளது தோழிகளுக்காக காத்து கொண்டிருந்தாள்… அவர்கள் வரவில்லை.. எப்படி வருவார்கள், கோயிலின் கூட்டத்தில் அல்லவா சிக்கி கொண்டிருப்பார்கள் இந்த நேரத்திற்கு….. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் கும்பல் கும்பலாக கிளம்பி கொண்டிருந்தனர்… இவளது அம்மாவையும் வந்து அழைத்தனர்… காரணத்தை சொல்லி அம்மா மறுத்து விட்டாள்…. எங்கு காணினும் கும்பல்…. இரவு கூட பிரகாசமாக மின்னி கொண்டிருந்தது ஸ்ரீரங்கம்…. இவள் மொட்டை மாடிக்கு வந்தாள்… தன்னுடைய வழக்கமான சுவர் இருப்பில் அமர்ந்து வேடிக்கை பார்க்க துவங்கினாள்….

அடுத்த நாள் வரை வேடிக்கையிலே கழிந்தது, அந்த நாள் மாலை பாட்டி புறப்பட்டு, அன்றிரவே அவள் கோயிலுக்கு அப்பாவுடன் புறப்பாட்டாள்… சாதாரண நாளின் இயல்புடன், சாதாரண மனித நடமாட்டமுடன், சாதாரண உற்சாகத்துடன் கோயில் இருந்த போதிலும் அவள் மனம் மட்டும் ஏதோ ஓர் தொலைந்த ஆழத்துக்கு போய் கொண்டிருந்தது…. மணல் வெளி வந்தது… பாலிதீன் பேப்பர்களும், கோயிலில் பிரசாதங்களாக கொடுக்கப்பட்டு அதன் மிச்சமான புளியோதரையும், வடையும், தயிரசாதமும், குட்டி இலைகளும் எங்கு பார்த்தாலும் சிதறிக் கிடந்தன…. கோயிலில் வேலை செய்பவர்கள் எல்லாவற்றையும் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்… ஒரு திறந்தவெளியில், சாட்சியங்கள் இருந்தன உண்மைகள் மறைந்து போயிருந்தன…

அடுத்த நாள் காலை 4 மணிக்கு (உண்மையான அதிகாலையில்) அவள் பேருந்து நிலையத்துக்கு போகும் வழியில் ராஜகோபுரத்தை கடக்கும் போது ஒலித்து கொண்டிருந்தது “மார்கழி திங்கள்………..”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *