கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 11, 2014
பார்வையிட்டோர்: 16,381 
 
 

மின் தூக்கியில் நான்காவது மாடிக்குப் போகும் வழியில், “நா பாஸாயிட்டேன்னு சொல்லிட்டாங்கல்ல. இன்னும் என்ன டெஸ்ட்ன்றீங்க?”, என்று தீவிர முகபாவத்துடன் கேட்ட கமலாவிடம், “இது மெடிகல் டெஸ்ட். நாளைக்கி தான் உனக்கு அப்பாயிண்ட்மெண்ட் கெடச்சிருக்கு”, என்றேன். நாங்கள் நேராக அங்கே போயிருக்க வேண்டியது. அலுவலகத்தில் உதவிக்கு ஆளில்லாமலிருக்கும் நிலையில், வேலையேனும் கொஞ்சம் ஆகட்டும் என்று அவளையும் கூட்டிக் கொண்டு வந்து விட்டேன்.

“இப்ப இந்த டெஸ்ட்ல பாஸாயிட்டேனில்ல, அப்ப சிங்கப்பூர்ல எந்த வேல வேணாலும் பார்க்கலாமில்ல நானு?”, என்று கேட்டவளைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்றே எனக்குத் தெரியவில்லை. இரண்டு நாளில் நான்கு முறை இதே கேள்வியை அவள் கேட்டு, “எந்தக் காலத்துலயோ ‘கரஸ்ல’ல படிச்சது, அதுல இன்னும் ரெண்டு பேப்பர் முடிக்க வேற இல்ல. நீ ஒரு ‘க்ராஜ்யுவேட்’னு உனக்கு யார் சொன்னாங்களோ, அத இப்படி உடும்பாப் பிடிச்சுகிட்டிருக்கியே, ம்? நான் தான் சொன்னேனே இந்தப் படிப்புக்கெல்லாம் இங்க மதிப்பே கிடையாதுன்னு”, என்று நானும் பதில் சொல்லியாகி விட்டது. தலையில் ஏறாததால் மீண்டும் மீண்டும் கேட்பதாகவும் தெரியவில்லை. மறுபடியும் மறுபடியும் கேட்பதைப் பார்த்தால், என் மீது நம்பிக்கையில்லாதது போலத் தான் தெரிந்தது.

அடிப்படை பாதுகாப்பு, குழந்தை மற்றும் மூத்தோர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு, பணிப்பெண் அறிந்திருக்க வேண்டிய உள்நாட்டு அடிப்படை சட்டங்கள் போன்றவை குறித்த கேள்விகளுக்கு விடையைத் தேர்ந்தெடுத்து எண்ணிடும் தேர்வு அது. எல்லாமே விடை தேர்தெடுத்து எண்ணியிடும் ‘பஞ்ச பாண்டவர்கள் எத்தனை பேர்?’ என்பதை விட மிகச் சுலபமான கேள்விகள். இந்தப் பணிப்பெண் வேலைக்குத் தேர்வெழுதிவிட்டு ஏதோ பெரிய பல்கலையில் முதுகலைப்பட்ட தேர்வெழுதியதைப் போன்ற பெருமையில் பேசிடும் அவளின் அறியாமையைக் கண்டு என்னில் ஏற்பட்ட அலுப்பை மறைத்துக் கொண்டு, “ஹ¥ஹ¤ம், இது பணிப்பெண் வேலைக்கான டெஸ்ட் கமலா. அங்க கேட்ட கேள்வியெல்லாம் பார்த்தீல்ல. எல்லாமே வீட்டு வேல சம்மந்தமானது. அப்புறம் எப்டி நீ வேற வேல பாக்கறது? இத நீ பாஸ் பண்ணவே என்னோட வேலையையெல்லாம் போட்டுட்டு உன்னோட அஞ்சு தடவ அலஞ்சிருக்கேன். பாஸாகவே மாட்டியோன்னு தான் நெனச்சிருந்தேன். ஒருவழியா பாஸாயாச்சு. உன்ன மாதிரி ஆளுங்களுக்கேத்தாப்ல தான் தேர்வெழுத எட்டு சந்தர்ப்பம் தராங்க போல”, என்ற என்னைப் பார்த்து, “எட்டு தடவை எழுதியும் பாஸே ஆகல்லன்னா?”, என்று கேட்டாள் குழந்தையின் ஆர்வத்துடன்.

“பறந்து போக வேண்டியது தான் இந்தியாவுக்கு. வேற என்ன? ஆமா, நீ ‘மெயிட்’ வேலைக்கி தான் வந்திருக்கன்றதே மறந்தே போச்சா உனக்கு. மறுபடியும் மறுபடியும் ‘வேற வேல வேற வேல’ன்றியே? ம்?”, என்ற என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டே, “இல்ல, ஊருல பக்கத்து வீட்டு அண்ணன் தான் சொன்னாரு. வந்து, நீ கிரஜுவேட், அங்க போயி நீ வேற நல்ல வேலையில சேந்துக்கலாம் கமலானு”, என்று இழுத்தாள். “உன்னோட புருஷன் கிட்ட பேசி விளக்கமாச் சொல்லி, நீங்களும் ஒத்துகிட்டு தானே நாங்க உன்னைக் கூட்டி கிட்டு வந்தோம். உனக்கென்ன இப்ப கொழப்பம்? தவிர, அங்க இருக்கறவங்களுக்கு இங்க உள்ள ரூல்ஸ் எப்டி தெரியும், ம்?”, என்ற என்னை இசைவாகவுமில்லாமல், மறுக்கவுமில்லாது ஒரு பார்வை பார்த்தாள். “சரி சரி, ஒக்காந்திரு. ஒரு மணி நேரத்துல வீட்டுக்குக் கெளம்பிடலாம்”, என்று சொல்லிவிட்டு கணித்திரைக்கு என் கண்களையும் கவனத்தையும் முழுமையாகக் கொடுத்தேன். கமலா ஏதோ யோசனையில் ஆழ்ந்ததை அவளின் தீவிர முகபாவம் காட்டியது. பாவம், வீட்டு நினைப்பும் குழந்தைகள் நினைப்பும் வரத் தானே செய்யும்.

அரை மணி நேரமானது, “அம்மா, எனக்கு ‘டாய்லெட்’ போகணும்”, என்றாள் கமலா. கணினியிலிருந்து கண்ணை எடுக்காமலேயே, “போய்ட்டு வாயேன்”, என்ற அடுத்த கணமே சிங்கப்பூருக்கு வந்து நான்கே தினங்கள் ஆகியிருக்கும் அவளுக்கு வழியெல்லாம் தெரியாதே என்று சட்டென்று நினைவுக்கு வந்தது. “சொன்னா வழி தெரியுமா? இரு, நானே கூட வரேன்”, என்றபடியே எழுந்து கொண்டேன். “இல்ல வழி சொல்லுங்க. நானே போயிட்டு வரேன்”, என்றவளை நிமிர்ந்து பார்த்தேன்.

அவளின் தன்னம்பிக்கையில் உள்ளூர சந்தேகம் இருந்தது. ஆனால், அந்தக் கட்டிடத்தில் சிறு குழந்தை கூடத் தொலைந்து போவதற்கு வழியில்லை என்ற எண்ணம் வந்ததுமே, “வலது பக்கம் போனீன்னா, அஞ்சாவது கடைக்குப் பிறகு லி•ப்ட் வரும் அதுல போனாலும் சரி, இல்லன்னா அது கிட்டயே படிக்கட்டிருக்கும். அதுல ரெண்டு மாடி எறங்கினா ரெண்டாவது தளத்துல இடது பக்கம் நாலஞ்சு கடை தாண்டினதுமே டாய்லெட் இருக்கும்”, என்றபடியே கூர்ந்து அவள் முகத்தைப் பார்த்த என் மூளையில் பாதியில் விட்ட பட்டியல் வேலை முணுக்முணுக்கென்று கூப்பிட்டது. சரிசரியென்று தலையை ஆட்டிக் கொண்டே வெளியேறிச் சென்றாள். கணினியில் உட்கார்ந்ததுமே என் மூளை மீண்டும் சுறுசுறுப்படைந்தது. ஐந்தே நிமிடங்களில் நமநமவென்று மீண்டும் கமலாவின் கவலை மூலையில் அரிக்கத் துவங்கியது. அரை மணியாகியும் கமலா வரவில்லை. கணினி மற்றும் மின்விளக்குகள் எல்லாவற்றையும் அணைத்து விட்டுப் பூட்டிக் கொண்டு கிளம்பினேன்.

***

மலாய் பெண்களுக்கான உடைகள் விற்கும் பக்கத்துக் கடை •பாத்திமாவினுடையது. “என்னோட ‘மெயிட்’ டாய்லெட் போயிட்டு இன்னும் திரும்பல்ல. எங்க போனாளா தெரியல்ல. போய்ப் பாக்கறேன். •பாத்திமா, அவ வந்தா இங்கயே ஒக்காத்தி வைங்க”, என்று சொல்லிவிட்டு ஓடினேன். இரண்டாம் தளத்தில் நின்றிருந்த ஓரிருவரும் பரிச்சயமற்ற முகங்களாக இருக்கவே, நேராக பெண்கள் கழிப்பறைக்குப் போய் ஒவ்வொரு அறையாகப் பார்த்தேன். ஒன்றிலும் ஒருவருமில்லை. மீண்டும் சுற்றுமுற்றும் பார்த்தபடியே வெளியேறி வந்த போது வளாகத்தின் செக்யூரிட்டியைப் பார்த்தேன். பார்க்கும் போதெல்லாம் சிரித்துவிட்டுப் போகும் இந்தியரான அவரிடம், விஷயத்தைச் சொல்லி, புடைவை, தேசல் தேகம், மிரண்ட பார்வை, நீண்ட முடி, கருப்பில் சேக்கக்கூடிய மாநிறம் என்று கமலாவின் அடையாளங்களையும் சொல்லி விசாரித்தேன். அப்படி யாரையும் பார்க்கவில்லை என்றார். ஆண்களுக்குரிய கழிப்பறையில் போய் பார்த்து விட்டு, “அங்க இருக்க மாட்டாங்கலா. இங்க தான் எங்கயாவது இருப்பாங்க. பார்த்தா நானே கூட்டிட்டு வரேன். எதுக்கும் ‘கார் பார்க்’லயும் போயி பாருங்க”, என்றபடியே போய் விட்டார்.

மின்தூக்கியைப் போய்ப் பார்த்தேன், பழுதாகிப் போனதோ என்று. மக்களைச் சுமந்து மேலும் கீழும் வழக்கம் போல சளைக்காமல் இயங்கிக் கொண்டிருந்தது. வேறொரு மின்தூக்கி அந்தக் கட்டிடத்துக்கு உண்டு. ஒருவேளை தவறுதலாக அதை எடுத்து வாகனங்கள் நிறுத்துமிடத்துப் போய் விட்டாளோ. பேசாமல் ஒருநடை அவளுடன் கூடப் போயிருக்கலாம். இதென்ன அநாவசிய தலைவலியென்று நொந்து கொண்டே அந்த மின்தூக்கியை அடைந்து, இரண்டாம் கீழ்த் தளத்திற்குப் போனேன்.

அங்கிருந்த காவல்காரர், “ஆமா, இங்க தான்லா நின்னிட்டிருந்தாங்க. சுத்திமுத்திப் பார்த்தாங்க. அப்புறம், ‘காடி’ங்க வெளிய போற வாசல் கிட்ட போயி நின்னுகிட்டு ரெண்டு மூணு கார்காரங்க கிட்ட கைகூப்பிக் கெஞ்சி என்னவோ கேட்டாங்க. நான் கிட்டப் போயி ‘பிச்சை எடுக்கக் கூடாது’னு சொன்னேன். ‘இல்ல, நா பிச்சை எடுக்கல்ல. எனக்கொரு வேல தான் கேக்கறேன்னு அவங்க கிட்ட’னு சொன்னாங்க. பேசினதுலயே உள்ளூர் இல்லன்னு எனக்குப் புரிஞ்சிச்சு. ஒரு பத்து நிமிஷமிருக்கும், விடுவிடுன்னு அதோ அந்தப் பக்கமா நடந்து போயிட்டாங்கலா”, என்றார். என் காதுகளையே என்னால் நம்ப முடியவில்லை. வேலை கேட்கிறாளா? நான் அவளைக் கூட்டி வந்தது பின் எதற்காம்? அவர் சொன்னதையெல்லாம் பார்த்தால் கமலா வழி தெரியாது போனாற்போலில்லை. தெரிந்தே தான் குருட்டு தைரியத்தில் போயிருக்கிறாள். ஆனால், அப்படித் தன்னந்தனியே கிளம்பிப் போக அவள் நினைத்து தான் ஏனென்று புரியவில்லை. மற்றவற்றை பிறகு யோசித்துக் கொள்வோம் என்று தீர்மானித்துக் கொண்டே, அவர் கைகாட்டிய வழியில் ஓட்டமும் நடையுமாகப் போனேன்.

அவள் போனது சிரெங்கூன் சாலையின் பக்கம். சாலை தீபாவளி ஆர்பட்டங்கள் முடிந்த களைப்பில் கிடந்தது சாலை. முன்னிரவு நேரம். தெரியாத ஊரில் மாட்டக் கூடாத ஆளிடம் மாட்டிக் கொண்டால்? நினைத்தாலே பயமாகி விட்டது. சாலை விபத்தில் கூட மாட்டலாமே. அவளுக்கு என் தொலைபேசி எண்ணையாவது நான் கொடுத்திருக்கலாம். பத்திரமாக கமலா கிடைத்தால் போதும். ஒரு வேளை, சிதம்பரத்திலிருந்து சென்னைக்குப் போவது போல நினைத்து விட்டாளோ. கூட்டத்தில் தானே தொலைந்து தானே வேறு வேலை தேடிக் கொண்டுவிட எண்ணமோ. கூட்டிக் கொண்டு வந்து வீட்டில் வேலைக்கமர்த்திக் கொண்டிருப்பவர் தான் அவளின் பாதுகாப்புக்கு முழுப்பொறுப்பு என்பதையோ, பாதுகாப்பான ஊரில் சட்டங்கள் கடுமையானது என்பதையோ எத்தனை எடுத்துச் சொல்லியும் புரிந்து கொள்ளவில்லையே. ஒவ்வொரு நேரம் எல்லாம் புரிந்தவள் போல பேசவும் நடக்கவும் செய்தவள், மற்ற நேரங்களில் மனப்பிறழ்வு கொண்டவள் போல நடந்து கொண்டாள்.

கிளிப்பச்சை நிறப் புடைவை கட்டியிருந்தாள். பரபரவென்று சுற்றுமுற்றும் என் அவ்வண்ணத்தையே கண்கள் தேடின. வந்த இரண்டு நாட்களிலேயே கமலா, “காலையில் சமைத்த சாதத்தை மாலையில் சாப்பிட மாட்டேன். எனக்கு ஒத்துக்காது. சுடுசோறு தான் சாப்பிடுவேன்”, என்பது போன்ற பல்வேறு வித அலட்டல்கள் செய்திருந்தாள். சரி, கொஞ்சம் விட்டுப் பிடிப்போம் என்று பேசாதிருந்தேன்.

“இனிமே இந்த ‘மெயிட்’ தலவலியே வேணாம்மா”, என்று ஒவ்வொரு முறையும் ரவி சொல்லி நானும் கேட்டுக் கொள்வதும் கொஞ்ச நாட்களிலேயே மீண்டும் பணிப்பெண்ணைத் தேடுவதும் என்று பதினைந்து வருடங்களாக நடந்து வந்திருக்கிறது எங்கள் வீட்டில். அறிந்தால் கோபப் படுவார். இருந்தாலும், ஒரு தைரியத்துக்காகவேனும் ரவிக்குப் போன் செய்துவிட நினைத்தேன். விஷயத்தைச் சொன்னதுமே, “என்னம்மா நீ, ஒரு நாள் ஆபீஸ¤க்கு போகாட்டி தான் என்ன? நேரா வீட்டுக்கே போயிருக்கலாமில்ல? வீட்டுலயும் பேக்கிங் வேலை இருக்கு. பேசாம அதையாவது செஞ்சிருக்கலாமில்ல. நான் இப்ப முக்கியமான மீட்டிங்க்ல இருக்கேன். சரி, இரு. கொஞ்ச நேரத்துல சொல்லிட்டு வரேன். தேடறத சேந்தே தேடுவோம். நீ நேர ‘ஜலான்பெஸார்’ காவல் நிலைத்துக்குப் போயி ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்துடு. அங்கயே இரு. நான் வந்துடுவேன்”, என்றதும் தான் புகார் கொடுக்க வேண்டியதன் அவசியமே உறைத்தது. எங்கே போயிருப்பாள்?

***

நீலச் சீருடையில் மிடுக்காக இருந்த சீன அதிகாரி நான் சொன்ன கதைகளையெல்லாம் கேட்டுக் கொண்டார். பிறகு, “நீங்க வீட்டுவேலைக்கி மெயிட் கொணாந்துட்டு உங்க ஆபீஸ¤க்குக் கூட்டிட்டு வந்தது எதுக்கு? வேற எடத்துல வேலையில் ஈடுபடுத்துவது சட்டப்படி குற்றம்னு தெரியாது?”, என்ற எடுத்த எடுப்பிலேயே காவல்துறைப் பார்வையும் கேள்வியும் பிரச்சனை மேலும் சிக்கலாகி வருவதை உணர்த்தியதுமே லேசாக கண்ணைக் கட்டியது. பயத்தில், காலையில் இரத்த அழுத்தத்திற்குரிய மாத்திரையை எடுத்துக் கொண்டேனா என்று ஒருமுறை நினைவு படுத்திக் கொண்டேன்.

“அவ செய்யற மாதிரி என்னோட ஆபீஸ்ல ஒரு வேலையும் இல்லயே. இப்ப தான் பிசினஸே ஆரம்பிச்சிருக்கறதால எனக்கே வேலை ரொம்பக் கம்மி”, என்று சொல்லிக் கொண்டே கமலாவின் தேர்வெழுதிய காகிதங்கள் மற்றும் மனிதவள அமைச்சின் வேலை அனுமதித் தாள்களையெல்லாம் காட்டிய பிறகு தான் நான் சொன்னவற்றை கொஞ்சம் நம்பினாற்போல் இருந்தது. வேறொரு அதிகாரி வந்து, மீண்டும் மீண்டும், “அவள் என்ன கேட்டாள்?”, என்றும், “நீங்க எப்டி வழி சொன்னீங்க?”, என்றும் துறுவித் துறுவிக் கேட்ட படியிருந்தார். பிறகு, விரிவாகச் சொன்னதையெல்லாம் எழுதிக் கொடுக்கச் சொன்னார். எழுதிக் கொண்டிருந்த போதே ரவி வந்து விட்டார். எங்களிருவரின் அடையாள அட்டை எண்கள் மற்றும் முகவரி ஆகியவற்றை எடுத்துக் கொண்டு போகச் சொன்னார்.

“என்ன? கொஞ்ச நேரம் தேடிட்டு வீட்டுக்குப் போவோமா?”, என்று கேட்டபடியே வாகனத்தில் ஏறினார். ஜலான் பெஸாரின் மறுகோடிக்குப் போய் வலப்புறம் திரும்பி சிரெங்கூன் சாலைக்குள் நுழைந்தோம். “படிப்பறிவுன்னு இல்லன்னாலும் பழைய மெயிட் இப்டியெல்லாம் துணிஞ்சதேயில்ல. ஏஜெண்ட் மூலமா எடுத்திருந்தா கூட, நேர போய் அவங்க கிட்ட சொல்லியிருக்கலாம். பாதிக்கிப் பாதியாவது நமக்கு சிக்கலில்லாம இருந்திருக்கும். இப்ப என்னடான்னா”, என்று ரவி சொன்ன போது, “ஏஜெண்ட் •பீஸ்ஸாவது மிச்சப் படட்டுமேன்னு நெனச்சோம். அதான் நேரடியாக நாமே கூட்டிட்டு வந்தோம். இப்படியெல்லாம் ஆகும்னு நெனச்சோமா, இப்ப கமலா பத்திரமா கெடச்சா போதும்னு இருக்கு”, என்று சமாதானம் சொல்லிய படியே இடது புறம் ஏதேனும் கிளிப்பச்சை கண்ணில் படுகிறதா என்று பார்த்த படியே அமர்ந்திருந்தேன். “கார வேணா ‘பார்க்’ பண்ணிட்டு கொஞ்ச நேரம் நடந்தே தேடுவோமா?”, என்ற ரவியிடம், “இல்ல வேணாம். நாந்தான் அப்பவே தேடிட்டேனே. பசங்க வந்திருப்பாங்க. அதுவுமில்லாம, ‘ரூபி’க்கி சாப்பாடு வைக்கிற நேரமும் ஆயிடிச்சு. வீட்டுக்கே போயிடுவோம்”, என்றேன்.

காரில் வீட்டுக்குப் போகும் வழியில் பெருமாள் கோவில் தாண்டியதுமே திடீரென்று ரவியின் தொலைபேசி அடித்தது. “ஹலோ, கமலானு,..ம், ஆமா, இங்க தான் இருக்காங்க. ‘ஸெலிகீ சென்டர்’ல, சீக்கிரம் வரீங்களா?”, என்ற ஆணிடம், “வரோம். நீங்க? உங்க பேரு?” என்று கேட்டுக் கொண்டிருக்கும் போது முழுவதும் ‘சார்ஜ்’ போய்விட்டது. தொலைபேசி இணைப்பு துண்டிக்கப் பட்டது. ஒரே தகவல் மட்டும் கிடைத்திருந்தது. என்னுடைய தொலைபேசி ஏற்கனவே சார்ஜில்லாமல் தான் இருந்தது. உடனே, வலப்புறம் லாவண்டர் திரீட்டில் திரும்பி மீண்டும் வலப்புறம் ‘ஜலான்பெஸார்’ருக்குள் புகுந்து ‘ஸெலிகீ சென்டர்’ரை நோக்கி விரைந்தோம்.

தேட வேண்டியிருக்கவில்லை. தெரியும்படி தான் நின்றிருந்தார்கள் கார் பார்க் அருகே. திருதிருவென்று விழித்த படியிருந்தாள் கமலா. நேரமாகும் போது அவளுக்கே பயமாகி விட்டிருக்கிறது. ஆகவே, யாரிடமோ போய் தொலைந்து போய்விட்டதாகச் சொன்னதும், நல்ல வேளை அந்த இளைஞர் நல்லவனாக இருக்கவே உதவ நினைத்து, கமலாவின் கணவனின் இலக்கத்திற்கு, இந்தியாவுக்குப் பேசி, ரவியின் தொலைபேசி எண்ணைக் கண்டு பிடித்திருக்கிறார். “முக்கிய வேலையா ஒரு எடத்துக்குப் போகணும் சார். இப்பவே எனக்கு ரொம்ப நேரமாயிடுச்சு. நான் வரேன்”, என்றபடியே உடன் நின்றிருந்தவர் போய்விட்டார். அவருக்கு நன்றி சொல்லிவிட்டு காருக்கு வந்தோம்.

“பொது இடத்துல ஒண்ணும் கேக்காத. வீட்டுக்குப் போய் பேசிக்கலாம்மா, சரியா”, என்றார் ரவி. வழியெல்லாம் காரில் ஒன்றுமே பேசவில்லை யாரும். நான் பார்க்காத போது முன்னிருக்கையிலிருந்த என் பக்கவாட்டு முகத்தைப் பார்ப்பதும், நான் பார்க்கும் போது முழ்க்கிய படியே தன் கைகளையே பார்ப்பதுமாக பின்னிருக்கையில் உட்கார்ந்திருந்தாள். பத்திரமாகக் கிடைத்தாளே என்ற ஒரே நிம்மதி. வழியில், காவல் நிலையத்திற்குப் போய் கிடைத்து விட்டாள் என்று சொல்லிவிட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வண்டியை நிறுத்திவிட்டு, மேலேறி மின்தூக்கியிலிருந்து நாங்கள் வெளியேறும் போதே குஷியில் குதித்துக் குரைக்க ஆரம்பித்து விட்டது ரூபி.

***

நீரூற்றாமல் இருந்த தொட்டிச் செடிகளும் என்னைப் பார்த்து நீர் கேட்டாற்போலத் தொன்றியது. ஒரு நாள் பாதுகாப்பாக புது வீட்டுக்குக் கொண்டு போய் வைக்க வேண்டும். வீட்டுக் கதவைத் திறந்தேன். உள்ளே போனதுமே, “என்ன கமலா இது. இவ்ளோ பொறுப்பில்லாம நீ பாட்டுக்குக் கிளம்பிப் போனா என்ன அர்த்தம்?”, “இல்ல வழி மறந்துடுச்சு”, என்று முணுமுணுத்தாள். “சும்மா பொய் சொல்லாத. சரி, வழி தெரியல்லன்னா, நீ அங்கயே நிக்க வேண்டியது தானே? எதுக்கு நெடுக நடந்து போன?”, என்று நான் கேட்டதற்கு, “எனக்கு வீட்டு வேல செய்ய வேணாம். நீங்க சாப்பாடு போடறதுக்கு நா உங்க வீட்டுல ரெண்டு மணிநேரம் வீட்டு வேல செய்யணும்னு தான் நெனச்சேன்”, என்றாள்.

“நீயா எத வேணா நெனச்சுக்கற. நாங்க சொல்றதுல உனக்கு நம்பிக்கையில்லயா. இவ்ளோ ரெண்டாங்கெட்டானா இருக்க. இங்க உள்ள சட்டம் பத்தி ஒண்ணுமே உனக்குத் தெரியல்ல. தெரிஞ்சதும் அரைகுறை. இதுல நீ ரூல்ஸ் பேசறியா? இங்கயே வாழற எங்களுக்கு தெரியுமா இல்ல உனக்கு தெரியுமா? ம்? எல்லாத்தையும் சொல்லித் தானே கூட்டிட்டு வந்தோம். இங்க அதுவும் எங்க வீட்டுல மட்டும் தான் செய்யணும். வேற எங்கயும் வேலை செய்யக் கூடாது. அப்படியெல்லாம் செஞ்சா பெரிய பிரச்சனையாயிடும். உனக்கு ‘லெவி’ நாங்க கட்டுவோம். உனக்கு சம்பளம் மாசம் இருநூத்தியிருபது வெள்ளி. உன்னோட மருத்துவ, சாப்பாட்டு, வேற செலவுகள் எங்களோடது. இதுக்கு ஒத்துகிட்டு இருந்தா இங்க இரு. இல்லன்னா, ஒழுங்கா ஊருக்குக் கிளம்பிப் போம்மா”, என்றேன்.

அப்படியே கூடத்துத் தரையில் உட்கார்ந்தவள் எழுந்திருக்கவேயில்லை. சாப்பிடும் போது வர்ஷாவும் விக்னேஷ¤ம், “என்னாச்சும்மா?”, என்று கேட்டுக் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். சொல்லச் சொல்ல விழிவிரித்து வியந்தார்கள். அழிச்சாட்டியம் செய்யும் எண்ணம் போலும். கமலா ஒரு வேலையும் செய்யாமல், கையில் கொடுத்ததை வாங்கிச் சாப்பிட்டாள். “எனக்கு வீட்டு வேல வேணாம். வேற வேல கெடைக்கும்னு தான் நான் இங்க கெளம்பி வந்தேன்”, என்றாள் தரையைப் பார்த்த படியே. “‘ஓஹோ, யாரோ சொன்னதை நம்பி இலவசமா டிக்கெட் கெடைக்கவும் கிளம்பி வந்தியாக்கும். இதெல்லாம் சரி வராது. உன்ன நாளைக்கே ஊருக்கு அனுப்பிடறேன்”, என்றபோது ஒன்றும் அவள் சொல்லவில்லை.

மறுநாள் புது வீட்டுக்கு வண்ணமடிக்கவும் சில்லறை வேலைகள் செய்யவும் ஆரம்பித்திருப்பதாக இருந்தோம். தொலைபேசியில் அழைத்து நான்கு நாட்கள் கழித்து ஆரம்பிக்கலாம் என்று சொல்லி விட்டேன். மதியம், “உனக்கு நாளைக்கி தான் கெடைச்சிருக்கு. காலையில உன்னை ஏர்போர்ட்டில் கொண்டு போய் விடறோம். உன்னோட வொர்க் பர்மிட் கான்ஸெல் பண்ணியாச்சு”, என்ற போது, “நா போக மாட்டேன்”, என்றாள் திடமாகவும் கோபமாகவும். சமையலறையில் வேலைகளைப் போட்டது போட்டபடி போட்டுவிட்டு போய் கூடத்துத் தரையில் உட்கார்ந்து கொண்டாள்.

அருகில் போய், “இதுல உனக்கென்ன கஷ்டம்? எனக்கு தான் கிட்டத்தட்ட ஆயிரம் வெள்ளி வெட்டியாச் செலவு. என் செலவுல சிங்கப்பூர் பார்த்துட்டுப் போகப் போற நீ, ஊருல ஏஜெண்ட் •பீஸ் கட்டினியா? ஒவ்வொருத்தர் மாதிரி அதுகெல்லாம் கடன் தான் வாங்கினியா? அப்படியெல்லாம் வாங்கியிருந்தா, அந்தக்கடனக் கட்டி முடிக்கணும்னு நீயும் இருந்திருப்பியோ என்னவோ ஒரு கட்டுப்பாட்டோட. போகட்டும், விடு,..”, என்று நான் முடிக்கு முன்னர் அழ ஆரம்பித்து விட்டாள். நிறுத்தாமல் ஒரே அழுகை. “எதுக்கு அழுகற? நீ தானே வீட்டு வேலைக்குத் தயாரில்லைன்னு சொல்லிட்ட. இப்ப அழுவுற?”, என்று கேட்டேன்.

மூக்கைச் சிந்தியபடியே, “ஊர்ல அக்கம் பக்கம், சொந்தக் காரங்க சிரிப்பாங்க. நா போக மாட்டேன். கொஞ்சம் தூக்க மாத்திரைகள் கொடுத்துடுங்க. செத்துப் போயிடறேன். இல்லன்னா பேசாம மேல் மாடியிலயிருந்து குதிச்சுடுவேன்”, என்றாள். ஐயோ, என்ன மாதிரியான வார்த்தை! எனக்கு பயங்கர அதிர்ச்சி. “ஏய் என்ன பேசற? புத்திகித்தி கெட்டுப் போச்சா? என்னவோ ஷாப்பிங் போவேன்ற மாதிரி ‘குதிச்சுடுவேன்’றியே? ஒழுங்கா ஊருக்கு, உங்க வீட்டுக்குப் போய் சேரும்மா. புண்ணியமாப் போகும்”, என்று சொல்லிவிட்டு நானே பரபரவென்று சமையலை முடித்தேன். மேலும் பிரச்சனையைக் குழப்ப வேண்டாம் என்று அவள் மனதிற்கு இசைவாகப் பேசிட முடிவெடுத்தேன்.

“உனக்கு ஊருல நல்ல வேலை கெடைக்கும் கமலா நிச்சயமா. நானே ஒரு நல்ல வேலைக்கி ஏற்பாடு பண்றேன். சரியா?”, என்ற என்னைக் கொஞ்சம் சந்தேகத்துடன் பார்த்தாள். “கமலா, நேத்தி உன்னோட வீட்டுக்காரரு பேசும் போது, ஒங்கொழந்த ‘அம்மா அம்மா’னு அழுவுதுன்னாரு. பாலு கூட குடிக்க மாட்டேன்னுதாம். நீ இப்பக் கெளம்பிப் போ. அதான் நல்லது. நானே என் மச்சினர் கிட்ட சொல்லி உனக்கு வேலைக்கு ஏற்பாடு பண்றேன். இதோ ரெண்டு வாரத்துல பொங்கலும் வருது. இப்போ போனா நீ குடும்பத்தோட இருக்கலாமில்ல?”, என்றேன்.

வீராப்பிற்காகச் சொன்னளோ என்னவோ, ஆனாலும் எசகுபிசகாக ஏதும் செய்து கொண்டால் பிரச்சனை பல மடங்காகிப் போகுமே. தவிர, எப்படியும் தார்மீகமான பொறுப்பு என்று ஒன்றுண்டே. இந்தியாவில் கமலாவின் குடும்பத்திற்கு பதில் சொல்வது எப்படி? வாழ் நாளெல்லாம் கொன்று விடுமே குற்றவுணர்ச்சி. தூக்கத்தை முற்றிலும் துறந்து இரவெல்லாம் ரவியும் நானும் ஒருவர் மாற்றி ஒருவர் அவளைக் கண்காணித்த படியே இருந்தோம்.

***

டாக்ஸியில் ஏர்போட்டுக்குப் போகும் வழியில், “கமலா, போனதும் என்னோட மச்சினர் சென்னை ஏர்போர்ட்டுக்கு வந்து உன்னைய கூட்டிட்டுப் போயி சிதம்பரத்துக்கு பஸ்ஸேத்தி விடுவாரு. நாங்க போன் பண்ணிக் கேட்டுக்கறோம்”, என்ற போது ‘உம்’ என்று கூடச் சொல்லாமல் உட்கார்ந்திருந்தாள். சில நிமிடங்களிலேயே, “டிக்கெட்டுலயே போட்டிருக்கு. நீங்க என்ன அடாப்ட் பண்ணிட்டீங்க. அப்ப நீங்க தானே எனக்குப் பொறுப்பு? இப்ப அனுப்பறேன்றீங்க?”, என்று கேட்டாள் லேசாக விசும்பிய படியே.

சீன ஓட்டுநர் என்னவோ ஏதோ என்று முன்னிருக்கும் கண்ணாடியில் பின்னிருக்கையைப் பார்த்தார். “ஐய்யய்ய,. அது அடல்ட். நீயெல்லாம் கிராஜுவேட்டா,. ம்? ‘அடல்ட்’டுக்கும் ‘அடாப்ட்’டுக்கும் உனக்கு வித்தியாசம் தெரியல்ல. எங்களுக்கென்ன கொழந்தையே இல்லையா? அப்படியே இல்லன்னாலும் முப்பது வயசு பொம்பளையையா தத்தெடுக்கப் போறோம்? யோசிச்சு தாம்பாரேன், ம்?”, என்று நான் கேட்டதற்கு ஒரு வித உணர்ச்சியுமில்லாமல் இருந்தாள். மேலும் சில நிமிடங்களில், “என்னோட பாஸ்போர்ட்ல செவப்புப் புள்ளி போடுவாங்களா?”, என்று திடீரென்று கேட்டாள். “எதுக்குக் கேக்கற? இல்லை, மாட்டாங்க”, என்றேன். தெரிய வேண்டியதெல்லாம் தெரிந்தும் அரைகுறையாய்த் தெரிந்திருந்தது அவளுக்கு.

பாதுகாப்பு சோதனை முடித்து, விமானச் சீட்டு வாங்கிக் கொண்டு விடைபெறும் முன்னர், “கமலா, அஞ்சு நாட்களுக்கான ஊதியத்தையும் கோபத்துல வீராப்பா வேணாம்னு சொல்லிட்ட. ஆனா, எனக்கு மனசு கேக்கல்ல. உன்னோட பொண்ணுக்கு ஒரு பொம்மை வாங்கியிருக்கேன். இந்தா வச்சிக்கோ”, என்று நீட்டினேன். “எதுக்கு? அனுப்பறதுன்னு முடிவு பண்ணிட்டு இது எதுக்கு? ம்,, நீங்க உங்க நாயைக் கூட முந்தா நாள் உங்க புது வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனீங்க. உங்க நாய விட கேவலமா நானு?”, என்று கேட்டுக் கொண்டே வாங்கிக் கொண்டாள். எனக்கு அழுவதா சிரிப்பதா என்றே தெரியவில்லை.

“சீச்சீ, எதுக்கு இப்டியெல்லாம் பேசற நீ? அன்னிக்கே சொன்னேனே ரூபிய வாங்கிங் கூட்டிட்டுப் போக வேண்டியிருந்ததால, வேற வழியில்லாம தான் ஏத்திகிட்டு போனோம். அதுவுமில்லாம உன்ன அங்க கூட்டிட்டுப் போகறதாயிருந்தோம் நேத்திக்கி. வழியெல்லாம் கொஞ்சம் காட்டித் தரணும்னு, வேலையும் கூட கொஞ்சம் இருந்திச்சு. ப்ச், அதுக்குள்ள எல்லாமே தலைகீழா மாறிடுச்சு. வெட்டி செலவும் தான் டென்ஷனும் எங்களுக்கு. சரி, அதெல்லாம் எதுக்கு இப்ப, நீ நல்ல படியா போய்ச் சேரு. அதுவே போதும்”, என்றேன். வலதுபுறமாக நடந்து சென்று D42 நுழைவாயிலை அடைந்திடும் வழியை மூன்று முறை விளக்கிச் சொன்ன போது தலையைத் தலையை ஆட்டினாள்.

கண்ணாடிக் கதவிற்குள் பாஸ்போர்ட் சோதனை மற்றும் குடிநுழைவு சடங்கு முடிந்ததுமே, நேர் எதிர்புறமாக இடப்பக்கம் திரும்பி விடுவிடுவென்று கமலா நடப்பதைப் பார்த்து எனக்கு அதிர்ச்சி! அங்கேயிருந்த இந்திய செக்யூரிட்டியிடம் சொல்லி போய் பார்க்கச் சொன்னேன். அவரும் உடனே ஓடினார். ஐந்து நிமிடங்களுக்குப் பின்னர், இருவரும் வலது பக்கம் போவதைப் பார்த்தேன். இந்திய செக்யூரிட்டி என்னருகில் திரும்பி வந்து, “அது தெரியாம போகல்லம்மா. தெரிஞ்தே தான் போகுது. வெளிய போற வழி எதுன்னு கேக்குது எங்கிட்டயே. பதுங்கிப் போகத் தான் நெனக்கிதுனு புரிஞ்சுது. கூட்டிட்டுப் போய் அங்க இருக்கறவங்க கிட்டயும் சொல்லிட்டு வந்துட்டேன். ஒண்ணும் பிரச்சனையில்ல”, என்றார்.

நான் வீடு திரும்பியவுடன் ரவி தன் தம்பிக்குத் தொலைபேசினார். “ஏத்தி விட்டுட்டோம்டா. ம், ஆமாம். உடனேயே, சிதம்பரத்துக்கு பஸ் ஏத்தி விட்டுடு. முடிஞ்சா யாரையாச்சும் கூட அனுப்புடா”, என்று சொன்னார். மதியத்திற்கு மேல் இந்தியாவிலிருந்து தொலைபேசினார் ரவியின் தம்பி. பேருந்தில் ஏற்றி விட்டதாகவும், சென்னை ஏர்போர்ட்டில் இரண்டு மணி நேரம் கழித்து எல்லோரும் வெளியே வந்த பிறகு தான் வெளியேறி வந்தாள் என்றும் சொன்னார். இரவில் ஒரு முறை கமலாவின் கணவனுக்கு தொலைபேச முயன்றோம். வந்து சேரவில்லை என்று சொன்னார்கள். அதைக் கேட்டு மீண்டும் இருப்பாய் இருக்கவில்லை எங்களுக்கு. தூங்காமல் காத்திருந்து மேலும் ஒரு மணிநேரம் ஆனதும், மீண்டும் முயன்ற போது, “வந்து சேர்ந்திடுச்சும்மா”, என்ற கமலாவின் கணவன் சொன்ன சொற்களைக் கேட்ட பிறகு தான் எனக்கு நிறைமாத வயிற்றுச் சுமையை இறக்கி வைத்த ஆசுவாசமும் அன்றிரவு நிம்மதியான தூக்கமும் ஏற்பட்டது.

நன்றி: ஆனந்த விகடன் தீபாவளி மலர் 2007
‘திரைகடலோடி’ சிறுகதைத்தொகுப்பு

Print Friendly, PDF & Email

1 thought on “திரைகடலோடி,..

  1. மனிதாபிமான உணர்வுடன் எழுதப்பட்ட சிறந்த கதை. முடிவைப் படித்தபின்னரே நிம்மதி, , கதைசொல்லிக்கு மட்டும் அல்ல. வாசகனுக்கும் கூட. வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *