திருமூர்த்தி சன்-ஆப் சித்தப்பா!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 9,011 
 
 

“பேரன் பேத்தி எடுத்த வயிசுல, கூத்தியா வெச்சுட்டு, கூத்தடிச்சுட்டுத் திரியறயே… நீயெல்லாம் ஒரு மனுசனா? அந்தப் பேத்துப் பிதுருகளே, உம்பட மம்முத லீலைகளைப் பாத்துட்டு சிரிப்பாச் சிரிக்குதுகளே… இன்னுட்டுமா உனக்கு புத்தி வல்ல?
“ஆளுதான் ஆறடி. ஏளங்கணத்துக்கு, பனை மரத்துல பாதி வளந் திருக்கறயே… தவுத்து, உனக்கு அறிவு, நெனவு இருக்குதா? சாதிக்கு ஆகத்த தொளி<லுத்தான் பண்றீன்னு பாத்தா… சாவுகாசம்மு அங்கயே வெச்சுட்டு, அந்த அருத சாதிக்காரி, அறுத்த மூளி கூட கும்மாளமடிச்சு, குதியாளம் போட்டுட்டி ருக்கறயே… உன்னைய என்ன பண்ணுனாத் தீரும்?
“உன்னையெல்லாம் சோத்துல, வெசம் வெச்சுக் கொன்னாலும் புண்ணியந்தான் கெடைக்குமே தவுத்து, பாவம் புடிக்காது. த்தூ… மானங்கெட்ட செட்டி!’
திருமூர்த்தி சன்-ஆப் சித்தப்பா!கட்டை, குட்டையாக கமுத்தி வெச்ச கரிச்சட்டியாட்டம் இருக்கிற லோகாம்பா, ஆட்டுவால் கூந்தல் அவிழ்ந்து விழ, ஆனைமலை மசாணக்கொள்ளையில், எலும்பு கடித்து ஆடுவது மாதிரி, ஆங்காரத்தோடு ஆடி, கணவன் சென்ற வழி பார்த்து காறித் துப்பினாள்.
ஊருக்கு வெளியே உள்ள, விளைநிலப் பகுதிகளில் களமும், தோட்டமுமாக உள்ள, விவசாயக் குடிகளில் ஒன்று, மேஸ்திரி செட்டியாருடையது. ஒன்றே முக்கால் ஏக்கர் மட்டுமே உள்ள குறுநில விவசாயத்தில், குடும்பம் மொத்தமும் ஈடுபடுகிற அளவுக்கு, வேலையோ, வரும்படியோ இராது.
எனவே, லோகாம்பாளும், மக்களும் மட்டுமே, அதை கவனித்து வந்தனர். இளைய இரண்டு பெண் மக்களுக்கும், மூக்கணாங்கயிறு குத்தி, தாட்டிவிட்ட பிறகு, மூத்தவனான திருமூர்த்தியும், காலங்கெட்ட காலத்தில் அண்ணாங்கால் போட்டுவிட்டு, அவனுக்கான பாகத்தை கிரயம் செய்து கொடுத்தாகி விட்டது. மிச்சத்தில், மகள்களுக்கான பாகத்தையும் சேர்த்து, இவர்களின் பாகத்தைப் பண்ணையம் பார்த்துக் கொண்டிருப்பது லோகாம்பா தான்.
மேஸ்திரி செட்டியாருக்கு தொழில்: வீடு கட்டுமானம். ராத்தலையும், வள்ளத்தையும் பிடித்து, யேவாரம் செய்கிற குலத்தில் பிறந்த அவருக்கு, ஏனோ இள வயது முதலே அதில் நாட்டமில்லை. குடும்பத் தொழிலாக இருந்து வந்த விவசாயமும், போதுமானதாக இல்லை. எப்படியோ கட்டுமானத் தொழிலில் நாட்டம் ஏற்பட்டு, கட்டுக்காரர்களோடு சேர்ந்து தொழில் பழகி, அவரே மேஸ்திரியாகவும் உயர்ந்து விட்டார்.
ஆறடி ஏளங் கணத்துக்கு செவச் செவன்னு வாட்ட சாட்டமாக இருக்கும் அவருக்கு, கமுத்தி வெச்ச கரிப்பானை ஒன்று, மனைவியாக வாய்த்ததற்குக் காரணம், சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது என்ற, அவரது ஆத்தாவின் விபரீத எண்ணம். அதற்கு பலியான அவரும், கல்யாணத்துக்குப் பின், 38 வருடம் ஏக பத்தினி விரதம் காத்த, தியாகச் செம்மலாகவே இருந்தார்.
இளமையும், நடுத்தரமும் முடிந்த, பேரன் பேத்திகள் எடுத்து, பெரிய மகள் புள்ளைக்கு மாப்பிள்ளை தேடிக்கொண்டிருக்கிற இந்த அறுபத்து சொச்ச வயதுகளில்தான், வயாக்ரா முழுங்குன சிட்டுக்குருவியாட்டம், மம்முத லீலைகளில் திளைத்துக் கொண்டிருக்கிறார்.
மம்முத ராணி வேறு யாருமல்ல; அவரது முதன்மை சித்தாள் அம்சவேணி தான்! டாக்டருக்கு – நர்ஸ், டைரக்டருக்கு- நடிகை, மேனேஜருக்கு – பி.ஏ., மேஸ்திரிக்கு – சித்தாள் என, இன்னாருக்கு இன்னாரென்று சும்மாவா எழுதி வைத்தான் இறைவன்?
அம்சவேணி பெயருக்கேற்றபடி, அம்சமாக இருப்பாள் என்று, அந்தக் காலத்து சரோஜாதேவி கதைகள் பலது ஆரம்பித்திருக்கும். நம்முடைய, மன்னிக்கவும்; மேஸ்திரிச் செட்டியாருடைய அம்சவேணியும், அப்படியே!
அவளது புருஷன், பாறைக்கு வைத்த வேட்டில் பலியாகி விட்டான். அதிலிருந்து, அவளும் கல்லுடைக்கும் வேலையை விட்டுவிட்டு, சித்தாள் பணிக்கு வந்து கொண்டிருக்கிறாள். உயர்நிலை படிக்கிற இரண்டு பிள்ளைகளுக்குத் தாய் என்றால், நம்ப முடியாத தோற்றம்.
சினிமாவுக்குப் போக வேண்டிய சித்தாளு என்று, சொல்லத் தோன்றும் அளவுக்கு கவர்ச்சி. எப்படியோ ஏடாகூடமாகி, ஏகபத்தினி விரதம் களைந்து விட்டார் மேஸ்திரி செட்டியார்.
இறைவன் எழுதி வைத்ததை மாற்ற யாரால் முடியும்?
மேஸ்திரி செட்டியார் வேலைக்குப் போகும்போது, ஆட்டாம்பதி போய் அம்சவேணியையும், டி.வி.எஸ்.,ல் பின்னால் அமர்த்தி, ஜோடியாக போவதும், வருவதும் என்றிந்தபோதே, லோகாம்பாளுக்குத் தெரியவந்து, விசாரித்தாள்.
“அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல லோகு… ஆராச்சு எதாச்சும் சொல்றாங்கன்னு, நீயும் நம்பீட்டிருக்கற பாரு… வடக்க வேலையா இருந்து, அந்த வழீல போகீல பஸ் ஸ்டாப்புல அவ நின்னுட்டிருந்தா, கூட கூட்டீட்டுப் போறதுதேன்; வழீல அங்க எறக்கியுட்டர்றதுதேன். கூட வேலை செய்யற புள்ளையாச்சே…
“எதுக்கு வெட்டியா பஸ்சுக்கோ, ஆட்டோவுக்கோ செலவு பண்ணணும்; பாவம். நாம வண்டீல பொறகால வெச்சுக் கூட்டீட்டுப் போனா, பெட்ரூலு எச்சாவா செலவாகப் போகுதுன்னு, ஒரு ஒவகாரம் பண்றதுதேன். அதையப் போயி தப்பா நெனைக்கறயே…’ என்று, அப்புராணியாட்டம் பேசி, இவளை நம்ப வைத்து விட்டார்.
நாள்பட விஷயம் வெளிப்படையாகி விட்டது. “ஆமா… அப்புடித்தேன்!’ என்று அவரும் ஒப்புக்கொண்டு விட்டார்.
வீட்டுக்கு தருகிற வரும்படி குறைந்தது. அவ்வப்போது, அவள் வீட்டிலேயே ராத் தங்கலும் ஆயிற்று. ஊரே கேளு, நாடே கேளுன்னு பரவிய இவ்விஷயம், இப்போது உற்றார், உறவினர் முதற்கொண்டு, சம்பந்திகள் வீடு வரை தெரியும். மகள்கள், முகஞ் சுளித்தது ஒரு புறமிருக்க, அவர்களின் பிள்ளைகளே கை பொத்திச் சிரித்தன.
எந்நேரமும், ஏச்சும் பேச்சுமாகக் கரித்துக் கொட்டினாள் லோகாம்பா. “வெண்டிக்கா என்ன வெலை போச்சு? அருகு புடுங்கறக்கு ஆள் கெடைச்சுதா?’ என்று விசாரித்தால் கூட, அதற்கு அம்சவேணியை முடிச்சுப் போட்டு, நூணாயம் நுணுக்குவாள்.
சோத்தைக் குழைய வைத்து, சோத்திலே மொளகாப்பொடி அள்ளிப்போட்டு விட்டு, “சோறு களியாட்டிருக்குது, சோத்துல காரம் கொரவளியப் புடிக்குது…’ என்று உள்ளதைச் சொன்னாலும், “ஆமா… நானு காட்டுலயும், வேத்து வடியப் பாடுபட்டு, இங்கியும் அடுப்புல வெந்து, ஆக்கி அரிச்சுக் கொட்டறது, உனக்கு களியும் காரமுமாத்தான் இருக்கும். அந்த மம்முதராணி மூத்தரத்தப் புடிச்சுக் குடுத்தாக் கூட, தேவாமிருதமா இனிக்கும்…’ என்பாள்.
கொட்டுனாத்தான் தேளு; கொட்டாட்டி புள்ளைப் பூச்சி என்று, கிடைக்கிற சந்தப்பங்களி லெல்லாம், அவள் விளாசியடிப்பாள். மேஸ்திரியாரோ, பாளுங்கெணத்துல இடி உளுந்தா, ஆருக்கு என்ன கவலை என்று இருப்பார்.
அவர் நினைக்கிறாரோ இல்லையோ, சதா சர்வ நேரமும், சக்களத்தி நினைப்போடே ரத்தம் கொதித்துக் கொண்டிருப்பாள் லோகாம்பா. அந்தக் கொதிப்பு, உச்சி மண்டைக்கு ஏறுவது, அவ்வப்போது, அம்சவேணி அவரைப் பார்க்க இங்கேயே வந்துவிடும் போது தான்.
நாலைந்து நாள், தொடர்ந்தாற்போல வேலை, இல்லாமல் இருந்து, மேஸ்திரியாரை சந்திக்கவில்லை என்றால், வேலை இருக்கிறதா என்று கேட்டுப் போவதற்கு அவள் வருவது, முன்பிருந்தே வழக்கம். இப்போதும் அப்படி வந்ததாகவே அவள் சொல்வாள்.
அது வெறும் சாக்காடு என்று தெரியாதா?
“ஏன்டீ தொண்டு முண்டை… புருசனப் பொங்க வைச்சுத் தின்னுபோட்டு, எம் புருசனக் கைக்குள்ள போட்டுட்டதும்மில்லாம, ஏறிப்புடிச்சுட்டு, என்ற ஊட்டுக்கே வந்துட்டயா? உனக்கு அன்னாடும் ஆம்பளச் சொகம் வேணும்ன்னு, அந்தளவுக்கு மோளம் சேவிக்குதா? இன்னி இந்தப் பக்கம் காலெடுத்து வைச்சீன்னா, வரப் பீயக் கரைச்சு ஊத்தி, வாசக் கூட்டற வெஞ்சாமரத்துலயே, நெரவிப் போடுவேன் நெரவி…’ என்று புளிச்ச ஆட்டு ஆட்டிவிட்டதிலிருந்து, வீட்டுக்கு வருவதில்லை.
ஆனால், பிரிவில் நின்று, இந்தப் பக்கமாக வருகிற ஊர்காரர்கள் யாரிடமாவது சொல்லிவிட்டு, மேஸ்திரியாரை அங்கு வரும்படி செய்விப்பாள்.
இப்போதும் அப்படித்தான், அங்கு நின்று கொண்டிருந்தாள்.
சற்று முன், உர மூட்டை எடுத்துக்கொண்டு வந்த திருமூர்த்தி, அவளை அங்கு பார்த்ததுமே பைக்கை நிறுத்தினான்.
“”இந்த அஞ்சு நாளா ஐயனப் பாக்காம, கண்ணுக்குள்ளயே நிக்கறாப்புடி இருக்குது தங்கம்… அதுதான் பாத்துட்டுப் போலாம்ன்னு வந்தேன். ஊட்டுக்கு வந்தா, அம்மா வாய்க்கு வந்தபடி சத்தம் போடும். அதனாலதான், ஆராச்சு தடத்துல போறவீகக்கட்ட, சொல்லியுடலாம்ன்னு நிக்கறன். நல்ல நேரம், நீயே வந்துட்ட. சித்தெ ஐயனக் கொஞ்சம் தாட்டியுடறயா தங்கம்?” என்று கேட்டுக் கொண்டாள்.
திருமூர்த்திக்கு அப்பா மேல் பாசம், பரிதாபம் ரெண்டுமே அதிகம். அவரது இந்த உறவு நியாயமானது என்று நினைக்கிறவனும் கூட. அதனால், வீடு சேர்ந்ததும், அம்மா இருக்கிறாளே என்று கூடப் பாராமல், நேரே மேஸ்திரியாரிடம் போய், “”அப்போவ்… உன்னைய வெய்ட் பண்ணீட்டு பிரிவுல சித்தி நிக்குது. எங்கட்ட உன்னையங்க தாட்டியுடச் சொல்லுச்சு…” என்றான்.
இதிலிருந்தே உங்களுக்குத் தெரிந்திருக்கும், அவன் எவ்வளவு வெள்ளைச் சோளம் என்று.
மக்காச்சோளம் காயப்போட்டுக் கொண்டிருந்த லோகாம்பா, அதைக் கேட்டு, “”எடு சீவக் கட்டை… எவடா உனக்கு சித்தி? அந்த அருத சாதிக்காரி, அறுத்த முண்டை உனக்கு சித்தியா? கட்டீத் தீனி, கடை கெட்ட நாயி… சித்தியாமா, சித்தி. நீயிப்புடி சொந்தம் கொண்டாடறதுனாலதான், மகனையே மாமாவாக்கியுட்டிருக்கறா அந்த மம்முத ராணி… அவதான் சொன்னான்னா உனக்கெங்கடா போச்சு புத்தி… ஏன்டா திருவாத்தா… அப்பனுக்கே வெளக்குப் புடிக்கறயா நீயி?” என்று, வாசக் கூட்டுகிற வெஞ்சாமரத்தைத் தூக்கிக் கொண்டே வந்து விட்டாள்.
திருமூர்த்தி துள்ளி ஓடி, “”அய்யோ சித்ரா… அம்மா என்னைய மொத்தறா,” என்று கத்திக்கொண்டே, கோழிப் பண்ணைப் பராமரிப்பிலிருந்த பொண்டாட்டி பின்னால் போய் ஒளிந்து கொண்டான்.
அவளோ, கொண்டவனுக்குத் துப்பில்லையென்றாலும், கூரை ஏறி சண்டை போடுகிற ரகம். சும்மா விடுவாளா? “”எம் புருசன் மேல இன்னி ஒரு அடி உளுந்துதுன்னா, நடக்கறதே வேற… நானே அவர அடிக்கறதில்ல; நீ அடிக்கறயா… அதுவும் சீவக்கட்டைல? மாமியான்னு கூடப் பாக்காம, கைய ஒடிச்சுக் கவ்வளம் குடுத்துருவன், சாக்கரதை,” என்று நைட்டியை ஏற்றிச் சொருகியபடி வந்து விட்டாள்.
இத்தனை களேபரம் இங்கு நடந்து கொண்டிருக்க, மேஸ்திரியார் தன் பாட்டுக்கு, டி.வி.எஸ்., வண்டியை முறுக்கி, “ஏ குருவி, சிட்டுக் குருவி…’ என்று பறந்து விட்டார்.
அவர் போன வழி பார்த்து, இன்னமும் ஆங்காரத்தைக் கொட்டிக் கொண்டிருந்தாள் லோகாம்பா.
திருமூர்த்திக்கு தனிப் பண்ணையம் ஆகும் முன்பே, தனிக்குடித்தனம் ஆகி விட்டது. ஆசாரமாக இருந்த அறையிலேயே சமையல், படுக்கை எல்லாம். இரவில், எல்.கே.ஜி., படிக்கும் பேரனுக்கு விளையாட்டு காட்டியபடி மேஸ்திரி செட்டியார் அங்கு, “டிவி’ பார்த்துக் கொண்டிருந்தார்.
“”ஏம்பா… அம்மாவே ஒரு ராக்காச்சின்னு தெரியும். அப்பறம் ஏன் எப்பப் பாத்தாலும், அது வாயில உளுந்துட்டு? பேசாம நீயும் என்னையாட்ட ஒரு செலுப்போனு வாங்கீட்டு, சித்திக்கும் ஒண்ணு வாங்கிக் குடுத்துட்டீன்னா, ரெண்டு பேரும் பேசப் படிக்க சவுரீமாச்சல்லோ… சித்திக்கும் இத்தனை தூரம் வந்து, பிரிவுல காத்துட்டு நின்னு, அடுத்த வீககட்ட சொல்லியுட்டுட்டிருக்கற சிரமம் இருக்காதல்லோ?” என்று யோசனை தெரிவித்தான் திருமூர்த்தி.
“”அடக் கட்டீத் தீனீ… கடை கெட்ட நாயீ… அப்பன் தொண்டு சுத்தறதுக்கு அகுடியாக் குடக்கறயே… நீயெல்லாம் ஒரு மகனா?” நடுவே இருந்த அறை தாண்டி, சமையல் கட்டிலிருந்து லோகாம்பாவின் குரல் கேட்டது.
“”டிவி சத்தத்தை மீறி, அதுக்குக் கேட்டிருக்குது பாரு… செரியான பாம்புக் காது! அதும்மில்லாம, எப்பூமு இங்க என்ன பேசறோம், ஏது பேசறோம்ன்னு ஒட்டுக் கேக்கறதேதான் அதுக்கு வேலை,” என்றாள் சித்ரா, மெதுவான குரலில்.
ரிமோட்டில் சத்தம் கூட்டிவிட்டு, “”ங்கப்பாங்கறதுனால, அந்த ராக்காச்சியக் கட்டீட்டு நுப்பத்தெட்டு வருசம் சமாளிச்சிருக்கறாரு, பாவம்! வேற ஆராவதா இருந்தா, எப்பவோ உட்டுட்டு ஓடிப் போயிருப்பாங்கொ. இல்லாட்டி, அப்பவே வெப்பாட்டி செட் பண்ணியிருப்பாங்கொ…
“”ங்கப்பா, இப்பூம் பாரும் எப்புடி ஆறடி ஏளங்கணத்துக்கு, மணியாசுல தேச்சு மட்டம் புடிச்சாப்புடி, ஜம்முன்னு இருக்கறாரு! வயிசுல ஜெமுனி கணேசனாட்ட இருந்திருப்பாரல்லொ! இவுரோட ஒசக்கத்துக்கும், கலருக்கும் ங்கம்மா ஏணி வெக்கறதல்லொ, லிப்ட்டு, போனாக் கூட எட்டாது. எல்லாம் ங்கப்பத்தா பண்ணுன மண்டத்தரம் (முட்டாள்தனம்).
“”இல்லாட்டி செட்டியார் சாதீல, கலராவும், அளகாவும் உன்னையாட்ட இருக்கற பிகருகளுக்கு பஞ்சமா என்னெ? சில்பா செட்டியவே வேண்ணாலும், ங்கப்பாவுக்குக் கட்டி வெச்சிருக்கலாம்… ஏதோ, இத்தற (இத்தனை) காலம் கிருமிச்சுன்னாலும், அவருக்கு ஏத்த சோடி அமைஞ்சிருக்குதே,” என்று திருமூர்த்தி சொல்லவும் தான், அவனுக்கு தன் மீதுள்ள கரிசனத்தை மட்டுமின்றி, தன் வேலி தாண்டலின் தார்மீக நியாயங்களையும் உணர்ந்து கொண்டார் மேஸ்திரியார்.
அவனது யோசனைப்படி, மூன்றாம் நாளே தனக்கொரு, டூயல் சிம் சைனா மொபைல் வாங்கிக் கொண்டதோடு, அம்சவேணிக்கு, ஐயாயர்ரூவா நோக்கியா செட்டே வாங்கிக் கொடுத்தும் விட்டார். அதிலிருந்து, அவள், இவர்களின் வீடு தேடி வர வேண்டிய சிரமமோ, அதனால் விளையும் சங்கடங்களோ இல்லை. ஆனால், லோகாம்பாளுக்குத்தான் பெருந்தொல்லை!
பத்துப் பைசா ஸ்கீமில் பேசிக்கொள்ளும்படியான ஏற்பாடு இருந்ததால், அன்னாடம் பார்த்துக் கொண்டாலுமே, வெடியால, “பெறப்பட்டாச்சா?’ என்று கேட்பதற்கு ஒரு சலக்கா; பொளுதோட, “ஊடு போய் சேர்ந்தாச்சா?’ என்று கேட்பதற்கு ஒரு சலக்கா; ராத்திரி, “சாப்புட்டாச்சா; என்ன சாப்பாடு?’ என்று விசாரித்து, “குட் நைட்’ சொல்றதுக்கு ஒருக்கா என, அம்சவேணியிடமிருந்து போன் வந்து கொண்டேயிருக்கும்.
வார்த்தைக்கு, வார்த்தை “அம்சு, அம்சு…’ என்று, அவர் கொஞ்சிக் குலாவுவதைக் கேட்டால், லோகாம்பாளுக்கு, கொதிக்கிற எண்ணெயை காதுக்குள் ஊற்றுவது போலிருக்கும்.
அதைவிட முக்கியமாக, தலைக்கும் மொளகா அரைச்சுப் பூசினாற் போல் எரிச்சலடையச் செய்யும் காரியம் ஒன்று உண்டு. அது, அம்சவேணியின் போன் வரும்போதெல்லாம். “சின்ன வீடா வரட்டுமா… பெரிய வீடா வரட்டுமா… மேஸ்திரிக்குப் பெரிய வீடு புடிக்குமா… இல்ல, மேஸ்திரிக்கு சின்ன வீடு புடிக்குமா?’ என்ற காலர் ட்யூன் அதிரடியாக முழங்குவது தான்.
“என்னொரு ஏத்தம், எளக்க நாட்டமிருந்தா அப்பனும், மகனும் சேந்துட்டு அந்தப் பாட்ட வெச்சிருப்பீங்கொ? இல்ல, இதைய வெக்கச் சொல்லி, அந்த ஆட்டாம்பதி, <உலக அளகியே சொன்னாளா? சின்ன ஊடா வருட்டுமா, பெரிய ஊடா வருட்டுமான்னு கேக்கறக்கு, நீயென்ன இன்னியும் கலியாணமாகாத கொமரனா? இல்லாட்டி என்னைய ட்ரைவர்ஸ் பண்ணீட்டு, அவளையே பெரிய ஊடா கட்டிக்கலாமுன்னு ப்ளானா?’ என்று நாலடி ஒசக்கமுள்ள அவள், ஏழடி, எட்டடிக்கு எகிறி எகிறிக் குதிப்பாள்.
அப்பனோ, மகனோ கண்டுகொள்ளவே மாட்டார்கள்.
இது இப்படியிருக்க, ஒரு நாள் மேஸ்திரி செட்டியார், “”அம்சா எனக்கு தலைல நரை உளுந்துருச்சுன்னு நெம்ப வெசனப்படறாடா… வயிசான மாறி தெரியுதாமா!” என்றார் மகனிடம்.
“”அட, அதுக்கென்னப்பா… அங்க்கிள, அண்ணனாக்கற சாயம் பூசீட்டாப் போச்சு!” என்றான் அவன்.
“”அவளும் அதையத்தான் சொன்னா. ஆனாட்டி நமக்கென்னுமோ ஒரு நிதா இருக்குது…” என்று இழுத்தார் இவர்.
“”சின்னத்தை கூட, நீங்க போகீல வரீல இப்படி இருந்தா, வயிசு வித்தியாசம் ஜாஸ்த்தியாத் தெரியுமுங் மாமா…” என்றாள் சித்ராவும்.
மறுநாள் காலையில் மேஸ்திரியார், திண்ணையில் கண்ணாடியும், கையுமாக இருக்க, கிண்ணத்தில் சித்ரா பக்குவமாக கலந்து கொடுக்க, புருசும், கையுமாக நரை பார்த்து அவருக்கு, “டை’ அடித்துக் கொண்டிருந்தான் திருமூர்த்தி. அரை மணி நேரம் தொண்டைத் தண்ணி வறள கத்தி ஓய்ந்த லோகாம்பா, இடுப்பில் கை வைத்தபடி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, நெற்றிக்கண் திறப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள்.
டையடிப்பு வைபவம் முடிந்தது.
மேஸ்திரியார் கண்ணாடியில் நேர், பக்கவாட்டு கோணங்களில் திரும்பத் திரும்பப் பார்த்து புளகாங்கிதப்பட்டார்.
“”இப்பத்தானுப்பா நீயி, சித்திக்குப் பொருத்தமான சோடியா இருக்கற. எனக்கே இன்னிமேலு உன்னைய சித்தப்பான்னு கூப்படலாமாட்ட இருக்குது,” என்றான் திருமூர்த்தி.

– பார்வதி ஓமனக்குட்டன் (செப்டம்பர் 2012)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *