திருப்பதி ஆசாரியின் குடை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2012
பார்வையிட்டோர்: 7,445 
 
 

குடையை விரிக்கவே இல்லை திருப்பதி ஆசாரி… கொளுத்தும் வெய்யிலில் குடையை கையில் பிடித்துக் கொண்டே நடந்து வந்தார். வெய்யிலோ மழையோ குடையை விரிக்கவே மாட்டார், வெயில் இருக்கும் போது பெரும்பாலும் சுனக்கமில்லாமல் நடந்து விடுவார் எவ்வளவு தூரமா இருந்தாலும், மழை வந்தால் மட்டும் ஏதாவது ஒரு தார்சாலா பாத்தோ இல்ல ஓட்டு சாப்பு இருக்கிற இடத்திலோ ஒதுங்கி கொள்வார். பிறகு எதற்கு குடையை வைத்திருக்கிறார் என்பது பரம ரகசியம் இன்று வரை… அவருடைய மனைவி பையம்மாவுக்கே தெரியாத ரகசியம் என்றால் அதில் எந்தவித ஜோடனைகளும் இல்லை.

இன்னைக்கென்னாச்சு நாலு மணி ஆவப்போவுது இன்னும் வெயில் இந்த போடு போடுதே என்றவருக்கு கொஞ்சம் தலை கிறுகிறுன்னு வர மாதிரி இருந்தவுடன், எங்கேயாவது கொஞ்ச நேரம் ஒதுங்கலாம்னு தோனிடுச்சு அவருக்கு. காலைல இருந்து பல்லுல ஒன்னும் படாதது தான் வெயில உக்கிரமா காட்டுதோ என்னவோ என்று நினைத்துக் கொண்டார். யோசித்துகொண்டே ராகவேந்திர விலாஸ் ஹோட்டல் தார்சாலில் ஒதுங்கினார்… இந்த ஹோட்டல்கார அய்யர் நம்ம ஊருக்காரரு…ஹிந்து ஸ்கூல்ல தான் படிச்சாரு, இவரு சி.எம்.எஸ் ஸ்கூல்ல படிக்கையில… சி.எம்.எஸ். மைதானத்துல ஹாக்கியெல்லாம் சேர்ந்து விளயாடி இருக்காரு… பழக்கம் தான்… ஆனா கையில அரை ரூவாத் துட்டு இருந்தா ஒதுங்கலாம்… அய்யரும் நல்லா உள்ளங்கை அகலத்துக்கு வெங்காய் பஜ்ஜி வச்சு கட்டி சட்னி வப்பாரு… நமக்குன்னா நல்லா கவனிக்க சொல்லி, அதிகப்படியா ஒன்னும் கொடுப்பாரு…

தொடைச்சு எடுத்தா தாமரை போட்ட 20 பைசாவும், ஒரு செல்லாத்துட்டு ஓட்ட காலனாவும் தான் இருக்கு… இதுக்கு ஒரு காப்பி குடிக்கலாம்… காப்பிக்காக போயி உட்காந்தா பஜ்ஜி கிடைக்காது… இங்க வந்து ஒதுங்கினதே அய்யர் நம்மள பாத்து கூப்பிட மாட்டாரான்னு பாக்கத் தானோ என்று நினைத்தவரு சேச்சே வெயில்லுன்னு தானே ஒதுங்குனோம் என்று தனக்கு தானே சமாதானம் சொல்லிக்கொண்டார்… பார்த்தா கஷ்டத்தையும் சொல்லி ஒத்த ரூபா கேக்கலாமான்னு மனசுக்குள் தோன, பிறகு அவரே வேண்டாமென்று பலமாய் தலையை ஆட்டிக்கொண்டார். என்ன பன்றதுன்னு ஒரே கலக்கமா இருந்துச்சு அவருக்கு. வீட்டுக்கு போனா வீட்டுக்காரி வேற கேப்பா என்னாச்சுங்க, ஏதாச்சும் கிராக்கி கிடச்சுதா… இல்லடி என்று அவளிடம் சடவா சொல்லத்தான் வரும் எப்பப்பார்த்தாலும். பொண்டாட்டிட்ட பிரியமா பேசியே ரொம்ப நாளாச்சு… அவளுக்கும் அதப்பத்தி பெரிய கவலை இல்லை… வீட்ல ஒல பொங்குனா சரி, ஒரு வேளையோ ரெண்டு வேளையோ சாப்பிட்டா சரி, அதான் பிரியம் என்று நினைத்துக் கொள்வார்

திருப்பதி ஆசாரி சின்ன வயசுல இருந்தே இந்த தொழில் தான் பன்றாரு… அவ்ங்க அப்பாவும் இதே தான்… இவருக்கு தெரிஞ்சே இது மூனாவது தலைமுறை… அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல அவருக்கு புள்ளகுட்டி எதுவும் இல்லை… அதும் ஒரு பெரிய கவலை திருப்பதி ஆசாரிக்கு. எட்டாவது வயசுல தன்னோட அப்பாகூட உமியப்போட்டு உமியோடு ஏத்தவும்… சன்னத்தெல்லாம் போட்டு உறுக்கவும் ஆரம்பிச்சு, அப்படியே படிப்படியா… இலைத்தோடு, மூக்குத்தி செய்ய கத்துக்கிட்டாச்சு… அதுக்கு மேல வளையலோ அல்லது சங்கிலி செய்யவோ கத்துட்டிருக்கலாம்…வரும்படி கொஞ்சம் தேவலாமா இருக்கும்… நல்லா சேதாரம் எடுக்கலாம், கடைக்கு போடுறதாலே கூலி கிடைக்காது, ஆனாலும் கடிச்ச இல்லாம போகும். அதுக்கு நமக்கு கொடுத்து வைக்காம போச்சு. ஏதோ கிரகம் சரியில்லாம அதெல்லாம் கத்துக்காமயே விட்டாச்சு என்று அவரையே தேற்றிக் கொள்வார்…

பையம்மாவ போய் முதத் தடவயா மல்லிப்புதூர்ல போய் பொண்ணு பாக்கும்போதே பிடிச்சுப்போச்சு… ஒரு மாதிரி சுங்கடி சேலையும், வெள்ளைல ரவுக்க துணியும் கட்டியிருந்தா, அவ போட்டிருந்த ஒத்தக்கல் மூக்குத்திய பார்த்தவுடனே… ரொம்ப பிடிச்சுப்போயி எந்த ஊரு ஆசாரி செஞ்சிருப்பான் என்று அவராகவே யோசித்துக் கொண்டிருக்கும்போது பிடித்து விட்டதென சொல்லிவிட்டார். கருப்பு தான் ஆனா ஒரு மினுக்கு இருக்கும் தோள்ல… ராஜம்மாக்கு தான் கொஞ்சம் வருத்தமா இருக்கும், நல்ல தண்ணி கினத்துமேட்டுல நின்னு பார்த்தது, சிரித்தது எல்லாம் ஒரு நெருஞ்சிமுள்ளாட்டம் அப்பும், ஆனா பையம்மாவின் மினுக்கு அவரை நெருஞ்சி முள்ள தூக்கிபோட்டுட்டு, அவள கட்டிக்கிடுதேன்னு சொல்லி ஒன்னும் ஏமாத்திப்புடலையே என்று தனக்கு தானே சமாதானமும் சொல்லிக் கொண்டார்

அவளோட சித்தப்பா வீட்ல தான் போயி பார்த்தது… வாசக்காலு உயரம் கம்மி தான், உயரமா, சிகப்பா இருக்காரு மாப்பிள்ள, உசத்தி கட்டுமய்யா வாசக்காலன்னு ஏதோ பெருசு கூட கிண்டலடித்துக் கொண்டிருந்தது… உள்ள நுழைச்சதுமே ஒரே இருட்டா இருந்துச்சு… ஒரு சாக்கு நடுல தொங்கிக்கிட்டிருந்தது, அதத் தாண்டி சின்னதா ஒரு சன்னல், இந்த சாக்கு படுதா பின்னால தான் சில கால்களும் கொஞ்சம் குரல்களும் இருந்துச்சு… பாயவிரிச்சு உட்காந்தவுடனே திருப்பதி ஒக்காந்து விட, திருப்பதியோட அம்மா பொம்பிளக இருக்கிற இடத்துக்கு போயி ஒக்காந்துக்கிச்சு, அப்பா ராமசாமி ஆச்சாரி, பொன்னையா ஆச்சாரி, பெரிய முத்துராஜூ என்று பெருந்தலைகளும் அவர்களுடன் பெண்டு பிள்ளகளும் இருக்க… கொடுக்காப்புளி அய்யர் ஜாதகம் பாத்து , முகூர்த்த நேரத்தயும் குறிச்சுப்புட்டார்… திருப்பதியா இருந்தவரு திருப்பதி ஆசாரி ஆயிட்டார், கல்யாணத்திற்கு பெறவு. அதுக்கு பின்னால, ராஜம்மாவுக்கு சாத்தூர்ல பேனா நிப்பு கம்பெனில வேல பாக்குற பயல கல்யாணம் பண்ணி கொடுத்துட்டாக…

ஏன் திடீர்னு இதெல்லாம ஞாபகம் வந்ததுன்னு அவரால யோசிக்கமுடியல… சரி கிளம்பிடலாம்னு அங்கே இருந்து ரெண்டு அடி எடுத்து வைக்கிறதுக்குள்ளாற என்ன ஓய்! உள்ள வராமயே போறீரு! என்ற மணி அய்யரின் குரல் அவரை நிறுத்தியது… இல்லங்கானும்… இப்படியே வந்தேன் சந்தை வரைக்கும் போயிட்டு வந்தது, ஒரே கிறக்கமா இருந்தது, அதான் கொஞ்சம் ஒதுங்கிட்டு திரும்ப நடக்கலாமேன்னு என்றார். உள்ள வர வேண்டியது தானே… வாருமய்யா… ஏதாவது சாப்பிடுதீரா… எலே… அய்யாவுக்கு குளுந்த தண்ணி கொண்டு வாலே… மண் பானத் தண்ணி குடிமையா… சாந்தியா இருக்கும் என்றார். திருப்பதி ஆசாரி அவரு ஏதாவது சாப்பிட சொல்ல மாட்டாரா என்று ஏக்கமாய் இருந்தது. அதை எப்படி கேட்பது என்று சங்கடமாவும் இருந்தது. குடைய எதுக்குய்யா மடக்கியே வச்சிருக்கீரு… விரிக்கலாமுல்ல… விரிச்சா குடையோட பவுசி தெரிஞ்சுபோயிடும்னு அவருக்கு சொல்லவா முடியும்… இத பத்து வருஷத்துக்கு மேல இப்படியே வச்சிருக்காரு, அவருக்கே திறக்க பயம்…

வீட்டுக்குப் போனதும் குதிரவல்லி அரிசி வாங்கிட்டு வந்தீங்களா என்பாள், அரை ஆழாக்கு வாங்கிட்டு போனா பொங்கிப்போட்டு ரசமும் வச்சு பருப்பு தொகையல எப்படியாவது வச்சுடுவா… இரண்டு வேளைக்கு இழுத்துக்கலாம்… கடைல போய் திரும்ப கடன் சொல்லமுடியாது, தங்கையா நாடார் இனிமே கடன் கொடுக்க மாட்டேன்னு சொல்லிட்டாரு.. இன்னைக்கு அறுந்த தோட்ட ஊத வந்த பய… சல்லிக்காசு கொடுக்காம, வாரண்ணேனு போயிட்டான்… செக்குல வேலை பாக்குற பய… ஒரு ருவாய்க்கு எண்ணெ வாங்குனா… கொஞ்சம் கூட கொடுப்பான், நம்ம போனா… அதனால அந்த பயக்கிட்டயும் கேட்க முடியல… ஊதி முடிச்சது வாங்கிட்டு அந்தானிக்க போயிட்டான்.

என்னத்த பன்றதுன்னு ஒன்னும் புரியலை அவருக்கு… சாயங்காலம் கருக்குவேல் அவம் பொஞ்ஜாதியும் வந்தா… ஏதோ தோடு செய்யக் கொடுக்குறதா சொன்னாங்க… கொஞ்சம் முன்பணமா வாங்கிகிட்டா இந்த வாரத்த சமாளிக்கலாம்… ஆனா அதுவும் நிச்சயம் கிடையாது… இவ சமைக்க அது இதுன்னு எட்டனாவாவது வேண்டியதிருக்கும்… இருவது பைசாத்துட்டு எவந்தருவான், குதிரவல்லியரிசி… கிட்னாசாரி சொன்னபடி பாத்தா போன மாசத்தோடு ஏழரை சனி போயிடுச்சு… பொங்கு சனி அது இதுன்னு சொன்னா… ஒன்னத்தையும் காணோம்… கிட்னாசாரி பொழக்க தெரிஞ்ச பய… நம்ம வேலைக்கு வராம… ஜோசியம் பார்த்துக்கிட்டு… கிரகத்த எல்லாம் மத்தவுங்களுக்கு தள்ளி விட்டுட்டு… சொகுசா இருக்கான்…ம் என்று அவரே அறியாமல் ஒரு பெருமூச்சு வேறு வந்தது… தாவாக்கட்டைய தூக்கிப் பிடிச்சு யோசிச்சுட்டு இருந்தவரு முன்னாடி மணி அய்யரு சொல்ல, ரெண்டு இட்லியும் சட்னி சாம்பாருடன், வடையும் வந்து வச்சிட்டு போனா ஒரு பய…
பாக்க சீனிச்சாமி மகென் மாதிரி இருந்தான்… என்ன ஓய் தண்ணிய தரோம்னுட்டு… இட்லிய வைக்கீரு… சாப்பிடுமையா… உம்ம தெரியாத எனக்கு… சாப்பிடும்… காசு வரும்போது குடுங்கானும் என்றார்…

திரும்பவும் குதிரவல்லி அரிசி வந்து ஒக்காந்து விட்டது அவரு மண்டைக்குள்ள… இப்போ அவ என்னத்த திம்பா… என்ற யோசனை வந்தது… ஒரு வடைய மட்டும் தின்னுட்டு… மணி அய்யர் கல்லாவ பாத்துட்டு இருக்கிற போது யாரு பாக்காய்ங்களானு பாத்துட்டு… குடய லேசா அகட்டிட்டு உள்ள இட்லிய பொட்டலமா கட்டி குடைக்குள்ள போட்டுக்கிட்டார்… வடைய மட்டும் தின்னுட்டு கொடுத்த காப்பிய குடிச்சுட்டு… பெரிய ஏப்பமா விட்டுட்டு… சந்தோஷம்யா… காசு வந்தவொடனே குடுத்துப்புடுறேன் என்றார். மெதுவா குடுமையா…ஒன்ன யாரு இப்போ துட்டக் கொடுன்னு புடுங்கா… என்றவரிடம் சொல்லிக்கொண்டு, கொஞ்சம் கூடுதல் சொரத்துடன் வீட்டுக்கு வேகமா நடந்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *