திருநாளை போவார்!

0
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 28, 2013
பார்வையிட்டோர்: 7,861 
 

புது காரை டெலிவரி எடுக்க, டாக்டர் ராஜா கிளம்பிய போது, “புது கார் எடுத்ததும் எங்கே போகலாம்… மகாபலிபுரம், புதுச்சேரி அல்லது சிதம்பரம்?’ என்று, கைகளால் மாலையாக கழுத்தை வளைத்து கொஞ்சலாக கேட்ட ஆசை மனைவி ராதாவிடம், “எனக்கு ஒரு நேர்த்திக்கடன் இருக்கு… அதை முடிச்சுட்டு தான் மறுவேலை…’ என்று சொல்லி, கிளம்பினான்.
திருநாளை போவார்!அவன் மனதில், “என்னுடைய, 17 வது வயசுல, வீட்டை விட்டு வந்தவன் நான். ஊரில் இருந்தவரை, மாதந்தோறும் கிருத்திகைக்கு, திருத்தணி மலைக்கு போய், முருகனை தரிசித்து விடுவேன். முருகன் தான் எங்களுக்கு குல தெய்வம். 53 வயசு ஆகப்போகுது எனக்கு. ஊரை விட்டு வந்த இவ்வளவு வருஷத்துல, இன்னும் அந்த கோவில் பக்கம் போகலை. நானும், பலமுறை நினைச்சுக்குவேன். நாம நினைச்சால் மட்டும் போதுமா… அந்த இறைவனும் மனசு வைக்கணும். அந்த நாள் எப்ப வருமோ?’ என்று, இரண்டு கைகளையும் ஏந்தியவாறு, குப்புசாமி ஏக்கத்துடன் சொன்னது நிழலாடியது.
ராஜா சொந்தமாக கிளினிக் வைத்த போது, ஒரு பேஷன்ட் கூட வரவில்லை. சோர்ந்து போய், கிளினிக்கை மூட தீர்மானித்த சமயத்தில் தான், இருமலுடன் தேடி வந்தார் குப்புசாமி.
குப்புசாமிக்கு கண்ணியமான தோற்றம். இனிமையுடனும், நம்பிக்கையுடனும் பேசும் நல்ல சுபாவம். ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனத்தில், பேட்டர்ன் மாஸ்டராக வேலை.
அவரிடமிருந்து வாங்கிய, இருபது ரூபாய் தான், முதல் பீஸ்.
ராஜாவுக்கு, சொல்லிக் கொள்ளும்படியான பின்புலம் ஒன்றும் இல்லை.
ஐந்து வருடப் படிப்பு முடித்து வெளிவந்த போது, டிகிரியும், இரண்டு லட்சம் ரூபாய் கடனும் தான் கையில். உடனடியாக கடனை அடைக்க வேண்டிய நெருக்கடி.
சொந்தக்காரர் ஒருவர், கடனுக்கு பொறுப்பேற்று, பதிலுக்கு மகளைக் கொடுத்து, மருமகனாக்கிக் கொண்டார். அவரால் முடிந்தது அவ்வளவு தான்.
மனைவி ராதா, மெட்ரிகுலேஷன் பள்ளி ஒன்றில் டீச்சர். ராஜாவும், சிறிது காலம் தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்தான்; சம்பளம் போதவில்லை. மேற்கொண்டு, எம்.டி., – எம்.எஸ்., படிக்க வேண்டும் அல்லது தேர்வு எழுதி, அரசு மருத்துவமனையில் சேர வேண்டும்.
எதுவும் உடனடியாக செய்துவிட முடியாத சூழலில் தான், கடைத்தெருவில் வாடகைக்கு இடம் பிடித்து, கிளினிக் வைத்தான்.
குப்புசாமி கொடுத்த, இருபது ரூபாயை பார்த்துக் கொண்டிருந்தான்.
“என்ன டாக்டர்… ரூபாயை அப்படி பார்க்கிறீங்க; நல்ல நோட்டு தான்…’ என்றார் குப்புசாமி.
“அப்படியிருந்தால், இது முதலிலேயே என்னிடம் வந்திருக்க வேண்டாமா… கிளினிக்கை மூடிவிட நினைக்கும் நேரத்தில் வந்து, பரிகாசம் பண்ணுதே!’ என்றான்.
குரலில் தெரிந்த சலிப்பை கவனித்த குப்புசாமி, “டாக்டர்… நீங்க அதிகம் படிச்சவங்க; நான் அவ்வளவா படிக்காதவன். ஆனால், என் அனுபவத்துல சொல்றேன்… எந்த தொழிலுமே, எடுத்தவுடனே வளர்ந்துடறதில்லை; விதை முளைக்கிற மாதிரி, மெதுவாத்தான் வளரும். அதை கொஞ்சம் காலம், கண்ணும், கருத்துமா வளர்த்துட்டா போதும். அது காலத்துக்கும் பயன் கொடுக்கும். இன்னைக்கு சொல்றேன், இதே இடத்துல நீங்க ஓகோன்னு வருவீங்க. அவசரப்பட்டு இடத்தை மாத்திடாதீங்க…’ என்றார்.
அது, ஒரு அருள் வாக்கு போல இருந்தது ராஜாவுக்கு.
சொன்னதோடு நில்லாமல், அதை தானே நிரூபிக்க கங்கணம் கட்டிக் கொண்டவர் போல், செயல்படவும் செய்தார் குப்புசாமி.
அவரது குடும்பத்தில், யாருக்கு உடம்புக்கு முடியாமல் போனாலும், ராஜாவிடம் அழைத்து வந்தார். அதோடு, நண்பர்கள், தெரிந்தவர்கள் யாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும், ராஜாவை சிபாரிசு செய்தார். அவரது, “மவுத் பப்ளிசிடி’ நன்றாக ஒர்க் அவுட் ஆனது.
ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்; பிறகு, எண்ணிக்கை கூடியது.
பத்து டோக்கன், இருபது டோக்கனாகி, இன்று ஓய்வெடுக்க நேரமில்லாத நிலை.
சேது பாலம் கட்ட உதவிய அணில், ராமன் நெஞ்சில் இடம் பிடித்தது போல, குப்புசாமி மீது, ராஜாவுக்கு வாஞ்சை. அவருக்கு ஏதாவது அன்புப் பரிசளிக்க விரும்பினான்.
அந்த மனிதர், பிரதி உபகாரம் எதிர்பாராதவராக இருந்தார். குறைந்த பட்சம், அவருக்கு பீஸ் வாங்க மறுத்தாலும், வற்புறுத்தி கொடுத்துவிட்டுப் போவார்.
ஆரம்ப நாட்களில், கிளினிக் வெறிச்சோடி கிடந்த நாட்களில், அவர் வந்து துணைக்கு இருப்பார். அப்போது, தன் வாழ்க்கையைச் சொல்வார்.
“சொல்லிக்கிற அளவுக்கு ஒண்ணும் பெரிய வாழ்க்கை இல்லை நமக்கு. வீட்ல கஷ்டம்; வேலை தேடி வெளியில் வந்தாச்சு. ஒரு தையக்கடையில சேர்ந்து, படிப்படியா வேலை கத்துக்கிட்டேன்.
“நண்பர்கள் கிடைச்சாங்க… நாலு பேர் சேர்ந்து சென்னைக்கு வந்து, வேலை தேடினோம். ரூம் எடுத்து, ஒண்ணா தங்கி, சமைச்சு சாப்பிட்டு, வேலை பார்த்துகிட்டிருந்தோம். பிறகு, ஆயத்த ஆடை நிறுவனத்தில் சேர்ந்து, படிப்படியாய் வளர்ந்தது. நண்பர்களே பெண் பார்த்து நடத்தி வச்ச கல்யாணம்.
“கொஞ்ச காலத்துக்குப் பிறகு, நான், “மெப்ஸ்ல’ வந்து சேர்ந்தேன். ஆயிடுச்சு, முப்பது வருஷத்துக்கு மேல. சொத்து பத்து ஒண்ணும் சேர்க்கலை; ஆனால், பத்து நண்பர்கள் இருக்காங்க. எங்கே இருந்தாலும், என்னை மறக்க மாட்டாங்க; நானும், அவங்களை மறக்க மாட்டேன். அவங்க வீட்டு நல்லது, கெட்டதுக்கெல்லாம், கட்டாயம் வரச் சொல்வாங்க; அவங்களும் வருவாங்க. இதுதான் வாழ்க்கையில் நான்…’ என நெகிழ்ந்திருக்கிறார்.
அடுத்தபடியாக, வேலை பார்க்கும் நிறுவனம். அது குறித்தும் அவருக்கு நிறைய ஆதங்கம் இருந்தது.
“ரொம்ப நல்லா போய்கிட்டிருந்த கம்பெனி சார்… ஒரு நேரத்துல, 1,000 பேருக்கு மேல வேலை பார்த்தாங்க. அப்ப இருந்த டைரக்டர்கள் தங்கமானவங்க; சின்சியரா இருப்பாங்க. கம்பெனியிலிருந்து ஒரு குண்டூசி கூட கொண்டு போக மாட்டாங்க; நல்ல லாபம் வந்தது. போனஸ், இன்க்ரிமென்ட்டெல்லாம் நிறைய கிடைக்கும். கேன்ட்டீன்ல சாப்பாடு, வடை, பாயசத்தோடு, விருந்து போல இருக்கும். வேலை செய்ய நமக்கு ஊக்கமா இருந்துச்சு. அப்புறம் வந்த டைரக்டர்கள், ஊழல் பண்ண ஆரம்பிச்சாங்க. சரியா ஆர்டர் எடுக்கறதில்லை; நேரத்துக்கு சப்ளை பண்றதில்லை.
“ஜப்பான், கொரியா, ஆஸ்திரியாவிலிருந்தெல்லாம் ஆர்டர் வரும். இவங்க பொறுப்பில்லாத நடத்தையால, எல்லாம் பாழாகும்; வேதனையா இருக்கும். லட்ச லட்சமா பணத்தை சுருட்டுவாங்க. நான் தைரியமா எதிர்த்து கேட்பேன். எனக்கும் ஒரு பங்கு தர்றதா சொல்லி, ஆசை காட்டுவாங்க; மசிய மாட்டேன். “டில்லியிலிருந்து மினிஸ்டரோ, அதிகாரிகளோ வந்தா, பிரச்னையை சொல்ல மாட்டாங்க; அவங்களை கவனிச்சு அனுப்பிடுவாங்க. இப்ப புரொடக்ஷன், நாலுக்கு ஒண்ணா சுருங்கி போச்சு. முன்னூறு பேர் தான் வேலை பார்க்கறாங்க. வாரத்துல பாதி நாள், வேலையே இல்லை. இதையே நம்பிகிட்டிருக் கவங்க பாடு, ரொம்ப சிரமம் சார்!’
தன்னைப் பற்றி பேசியது கொஞ்சம். எப்போது பேசினாலும், கம்பெனி, வேலை செய்பவர்களின் கவலைகளை தான் பகிர்ந்து கொள்வார்.
முன்போல் அடிக்கடி கிளினிக் பக்கம் வருவதில்லை குப்புசாமி.
“பேஷன்ட்டுங்க இல்லாத போது, எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம். இப்ப பிசியான நேரம். நான் அடிக்கடி வந்துகிட்டிருந்தால், அது இடைஞ்சலாக இருக்கும். உறவுக்காரங்க, நண்பர்கள் வீடுகள்ல ஏதாவது விசேஷம் வந்துகிட்டிருக்கு. தவிர்க்க முடியாது. எல்லாத்துக்கும் போய் தலை காட்டணும். தேவைப்படும் போது வர்றேன்…’ என சொல்லிவிட்டு போனார்.
ஒரே வருடத்தில் கார் வாங்கும் நிலை வந்த போது, குப்புசாமியை தொடர்பு கொண்டு சொன்னான்.
மகிழ்ச்சியாக வந்தார். வரும்போதே, தெரிந்த மெக்கானிக்கிடம், லேட்டஸ்ட் மாடல் கார் எது, பிரச்னையில்லாமல் ஓடக் கூடியது எது, நிறைய மைலேஜ் கொடுக்கக் கூடியதுமான காரும், கலரும் உட்பட பல விவரங்களை கேட்டு வந்திருந்தார்.
அவர் சொன்ன கம்பெனியும், மாடலும், நிறமும், ராஜாவுக்கு பிடித்திருந்தது.
“அந்த மாடலுக்கு நிறைய டிமாண்ட். உங்களுக்கு ஒரு வாரம் ஆகும், வண்டி டெலிவரி கொடுக்க…’ என்றனர் ÷ஷா ரூமில்.
புக் பண்ணிவிட்டுத் திரும்பும் போது, ராஜா நினைவூட்டினான்…
“வண்டி டெலிவரி எடுத்து, பூஜை போட்டதும், நேரா திருத்தணி போறோம். உங்கள் நீண்ட நாள் ஏக்கத்தை பூர்த்தி செய்த பாக்கியம் எனக்கு கிடைக்கட்டும்…’ என்று.
“கட்டாயம் வர்றேன்…’ என்று ஒப்புக் கொண்டார் அவரும்.
காரை டெலிவரி எடுத்ததும், வழியில், கோவிலில் வைத்து பூஜை போட்டு, நேரே குப்புசாமி வீட்டிற்கு போன போது, அவர் மனைவி, “”காலைல அவசரமா கிளம்பிப் போனார் சார்… எங்கிட்ட ஒண்ணும் சொல்லலை,” என்றார்; ஏமாற்றமாக இருந்தது ராஜாவுக்கு. தன்னை குப்புசாமி அவமதித்து விட்டதாக உணர்ந்த ராஜா, வேகமாக காரை கிளப்பி வந்து விட்டான்.
“”நானும் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வந்திருக்கேன். நீங்க டாக்டர்; அவர் சாதாரண தொழிலாளி. ஆரம்பத்துல கொஞ்சம் உதவினாருங்கறதுக்காக, ஒரேயடியா தூக்கி தலையில வச்சுக்கிட்டீங்க. அவ்வளவு தூரம் சொல்லியும், கடைசி நேரத்துல வராம போயிட்டாருன்னா… அவர், உங்களுக்கு கொடுத்த மரியாதை அவ்வளவு தான். இனியாவது, உங்க லெவலுக்கு இருக்கும் நபர்களோடு நட்பு வச்சுக்குங்க,” என்று மனைவி ராதா சொல்லிக் கொண்டிருக்கும் போது, அப்பா வந்தார்.
“”என்ன பிரச்னை?”
சொன்னான்…
“”உன்னை ஏமாத்தணும், அவமதிக்கணும்ன்னு திட்டம் போட்டு எதையும் செய்திருக்க மாட்டார் குப்புசாமி. இப்ப வராததுக்கு, ஏதாவது வலுவான காரணம் இருக்கும். அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடக் கூடாது…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே, மொபைல் போன் ஒலித்தது; எடுத்து பேசினான்; குப்புசாமி தான்.
“”வண்டி டெலிவரி எடுத்திட்டீங்களா சார்… என்னால திருத்தணிக்கு வர முடியாது. இங்க கம்பெனியில எதிர்பாராத விதமா, முன்கூட்டியே மெட்டீரியல்ஸ் வந்திருச்சி. வேற ஆள் இல்லை; நான் தான் பேட்டர்ன் எடுக்கணும். ஏற்கனவே, நாலு நாள் வேலை இல்லாம, எல்லாரும் சும்மா இருந்தாங்க. இப்ப நான் வந்துட்டா, வேலை தங்கிடும். முன்னூறு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட விஷயம். உடனே வரச் சொல்லி, கம்பெனியிலிருந்து சொன்னாங்க; வந்துட்டேன். கோவிச்சுக்காதீங்க… இப்ப நீங்க, குடும்பத்தோட கோவிலுக்கு போயிட்டு வாங்க; இன்னொரு சமயம் நாம் போகலாம்,” என்றார்.
முகத்தில் சிலீர் என்று, தண்ணீர் அடிக்கப் பட்டது போல் சிலிர்த்தது.
கடமைக்கும், பிறர் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அந்த நல்ல மனிதர், முருகனைத் தேடி ஒரு நாளும் போக வேண்டியதில்லை; முருகன், அவரைத் தேடி வருவார். அவரை, ஒரு கணம் தவறாக நினைத்தற்காக, வருத்தப்பட்டு, வார இறுதியில் கோவிலுக்கு போகலாம் என தீர்மானித்து, கிளினிக்குக்கு விரைந்தான் ராஜா.
“இன்று விடுமுறை’ என்று எழுதி வைத்ததை அழித்துவிட்டு, கதவை திறந்தான்; நோயாளிகள் வரத் துவங்கினர்.

– மு.சேதுராமலிங்கம் (ஜூன் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *