”கார்த்தி, ஸ்வீடன் வந்து இரண்டு வாரம் ஆவுது எங்கேயாவது கூட்டிட்டுபோடா!! செம போரடிக்குது” என வாசுகிரெட்டி நான் அலுவலகம் கிளம்பும் பொழுதெல்லாம் நச்சரிப்பது வழக்கமாகிக் கொண்டிருக்கிறது.
வாசுகிரெட்டி என் மனைவி, போராடி காதல் கல்யாணம் செய்து கொண்டு இரண்டு மாதங்கள் தான் ஆகின்றன. இருவீட்டார் தொல்லையில் இருந்து விடுபட, நீண்ட நாட்களாக தட்டிக்கழித்துக் கொண்டிருந்த சுவீடன் ஆன்சைட் வாய்ப்பை விருப்போடு வாங்கிக்கொண்டு தேனிலவை பால்டிக் கடலில் கொண்டாடலாம் என நினைத்து வந்தால், ஒட்டு மொத்த வேலையையும் என் தலையில் கட்டிக்கொண்டிருக்கிறான் என் மனேஜர் ஹான்ஸன். காலையில் எட்டு மணிக்கு கிளம்பினால் மாலை வர ஆறு மணி ஆகிவிடுகிறது. ஆறு மணிக்கு வீட்டுக்கு வந்தால் இந்திய , அமெரிக்க நேரங்களுடன் டிவிட்டர், பேஸ்புக் அரட்டை பின்னர் தமிழில் என் பெற்றோருடனும் அரைகுறைத் தெலுங்கில் அவள் பெற்றோருடனும் உரையாடவே நேரம் சரியாக இருக்கின்றது.
நம்ம ஊரிலாவது பக்கத்து வீட்டுக்காரன் கொஞ்சம் ஆவது புன்னகையைக் கொடுப்பான். இங்கு சுவிடீஷ் மக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நட்பாக மாட்டார்கள். அதுவும் இந்த ஊரில் அரபு, சோமாலியா அகதிகள் அதிகம் இருப்பதனால் ஐரோப்பிய வெள்ளை நிறத்திற்கு சற்று குறைவாக இருந்தாலும், மற்றவர்கள் விசயத்தில் சுவிடீஷ் மக்கள் தலையிட மாட்டார்கள் என்ற போர்வையில் தள்ளியே இருப்பார்கள். நான் தலைமுடியைத் தவிர நிறம் முகத்தில் சோமாலியாக் காரனைப்போல் இருப்பேன். வாசுகியோ அரபுப் பெண் போல இருப்பாள்.
வந்ததில் இருந்து ஒரே ஒருமுறை மட்டுமே கார்ல்ஸ்க்ரோனா திரையரங்கிற்கு வாசுகியை கூட்டி சென்றிருக்கின்றேன், அதுவும் சுவிடீஷ் மொழித் திரைப்படம், சிலப்பல முத்தங்களைத் தவிர வேறு ஒன்றும் புரியவில்லை.
”இதி இலாகி ஜரிகிதே நேனு பிச்சிவாதினி ஆவுத” வாசுகி தெலுங்கில் பேச ஆரம்பித்தால் கோபமாக இருக்கின்றாள் என அர்த்தம்.
“நான் தான் ஆபிஸ்ல எப்போதும் ஆன்லைன்ல இருக்கேனே !! டோண்ட் வொர்ரிடா”
“ஆன்லைன்ல இருக்கனும்னா, நான் வைசாக் லேயே இருந்திருப்பேன்”
“ஆவுன்னா, அப்போ இன்னக்கி நைட்டு ஆன்லைன்ல மட்டும் பேசிக்குவோம், என்ன சரியா”
“போடா டேய், சிக்கிரம் வந்து தொலைடா “ என முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாள்.
அலுவலகம் எனக்குக் கொடுத்திருந்த பழைய சிவப்புநிற வோல்ஸ்வேகனை ஓட்டிக்கொண்டு போகையில் அனவாசியமாக பிரிவோம் சந்திப்போம் சினேகா நினைவுக்கு வந்துபோனார். அலுவலகத்திற்கு சென்றவுடன் என்னுடன் சினேகமாக இருக்கும் டோல் யூனாஸிடம் வார இறுதிகளில் ஊர் சுற்றிப்பார்க்க ஏற்ற இடங்கள் பற்றி கேட்டேன். யூனாஸ் ஆஸ்ப்போ தீவைப்பற்றி சொன்னார். கார்ல்ஸ்க்ரோனா படகுத்துறையில் இருந்து சிறிய கப்பல் இலவசமாக மக்கள், வாகனங்களை ஏற்றிக்கொண்டு ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை ஆஸ்ப்போ தீவிற்கு செல்லும் எனவும் அங்கு இருக்கும் பழமையான கோட்டையை கட்டாயம் பார்க்கவேண்டிய ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
அந்த வார இறுதியில் 23 நிமிட பயணத்திற்குப்பின்னர் ஆஸ்ப்போ தீவைச் சென்றடைந்தோம். ஒவ்வொரு வாகனங்களாக கப்பலை விட்டு வெளியேற கடைசியாக நாங்களும் வெளியேறி ராம்கோபால் படங்களில் வருவதைப்போல் இருந்த காட்டுப்பாதையில் மெதுவாக செல்ல, வலதுபக்கம் அமர்ந்து இருந்த வாசுகி , என் காதருகே வந்து
“தக் சோ மிக்கெத்” என சொல்லி கன்னத்தில் முத்தமிட்டாள்.
“என்னது தெலுகு அம்மாயி , ஸ்விடீஷ் பிகர் மாதிரி பேசுது”
கண்ணுக்கு எட்டின தூரம் வரை அடர்ந்த மரங்கள் , அதைத் தாண்டி அலைகள் அற்ற அமைதியான பால்டிக் கடல் திகிலை மீறி ஒரு ரம்மியமான சூழல்.
காரைவிட்டு இறங்கி இருவரும் மரத்திற்கொரு முத்தம் வீதமாக ஒவ்வொரு மரத்தடியிலும் சில வினாடிகள் முத்தமிட்டுக்கொண்டே கடல் தொடும் பாறைகளை நோக்கி நடந்தோம்.
“டோட்டலி 160 ட்ரீஸ் டா கார்த்தி” வாசுகியை அரவணைத்தபடியே நடையைத் தொடர்ந்தேன்.
முன்பு ஒரு முறை சென்னை கிழக்குகடற்கரை சாலையில் அருகில் இருக்கும் சவுக்குக் காட்டிற்கு இதே வாசுகியை பயந்தபடி அழைத்துச் சென்றது நினைவுக்கு வந்தது. அந்த பயம் இப்பொழுது எட்டிப்பார்த்தாலும் , அட இது சுவீடன் என்றதால் வந்த பயம் ஓடோடிப்போனது.
இப்படி பார், அப்படி பார், இப்படி எம்பிக்குதி என வாசுகியின் ஆணையில் ஏகப்பட்ட கோணங்களில் அவள் வீட்டு வரதட்சினைகளில் ஒன்றான எஸ்.எல்.ஆர் கேமரா என்னைப் படம் பிடித்துக் கொண்டிருந்தது.
மரங்களைக் கடந்து சென்றதும் கடலை ஒட்டியபடியே மஞ்சள் நிறத்தில் வண்ணமடித்து, வீட்டின் முன்னால் பெரும் புல்பரப்புடன் ஒரே மாதிரியாக சில வீடுகளைப்பார்த்ததும்
“கார்த்தி கார்த்தி, என்னை அந்த வீட்டு முன்ன வச்சி போட்டோஸ் எடுடா”
சாகரசங்கமம் ஜெயப்பிரதா மாதிரி பரதநாட்டியம் எல்லாம் ஆட வைத்து விதம் விதமாக படம் எடுத்தேன். சட்டென அந்த வீட்டின் கதவு திறந்தது. வயதான தம்பதியினர் எங்களைப்பார்த்து கைக்காட்டி சிரித்தனர். பாட்டியின் கையில் உயர்தர கேமரா.
பாட்டி எங்களைப் படம் எடுக்க தாத்தா வீட்டிற்குள் சென்றுவிட்டார். வாசுகிக்கு ஒரே கொண்டாட்டம். என் தோளில் சாய்ந்தபடி அவர்களுக்கு போஸ் கொடுத்தாள். படங்களை எடுத்த பின்னர் அந்த பாட்டி திரும்ப வீட்டிற்கு சென்று தாழிட்டுக்கொண்டார். எனக்கும் வியப்பாக இருந்தது, சிரிப்பதற்கே யோசிப்பவர்கள் சட்டென வந்து படம் எல்லாம் எடுத்து வைத்துக் கொள்கிறார்கள் என நினைத்துக் கொண்டேன்.
மாலை வரை ஆஸ்ப்போ கோட்டை, தேவாலயம், காடுகள் எனச் சுற்றிவிட்டு மீண்டும் படகுதுறையை நோக்கி , அனவேஷனா தெலுங்கு படத்தில் வரும் ஏகாந்த வேளா பாடலை ஒலிக்கவிட்டு, ஒரு கையால் வாசுகியை அணைத்துக்கொண்டபடி காரை செலுத்திக்கொண்டிருந்தேன். பாரதியார் ரசனைக்காரனப்பா, சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைத்து என அப்போவே பாடி இருக்கான்.
அடுத்த வாரம் திங்களன்று யூனாஸிடம் ஆஸ்ப்போ தீவில் அந்த பெரியவர்கள் படம் எடுத்ததைப் பற்றி பெருமையாக சொல்லிக்கொண்டிருந்தேன்.
அதற்கு யூனாஸ்
“சொல்லுகின்றேன் என வருத்தப்படாதீர்கள், ஆஸ்ப்போவில் தனிவீடுகள் அதிகமாக இருப்பதால், யாரேனும் சுவிடீஷ் மக்கள் இல்லாத அந்நியர்கள் ,குறிப்பாக அரபு அகதிகளோ, கருப்பர்களோ வந்தால் புகைப்படம் எடுத்து வைத்துக்கொள்வார்கள், ஏதேனும் தகாத சம்பவங்கள் பின்னர் நடந்தால் அந்தப் புகைப்படங்கள் உதவும் என சொல்லப்படாத விதியாக இதை செயல்படுத்துகின்றனர், ஆஸ்ப்போ மட்டுமல்ல , தனிவீடுகள் அதிகமாக இருக்கும் வீதிகளில் இரண்டு மூன்று முறை அதிகமாக நடந்தாலும் யாராவது ஒருவர் படம் எடுத்து வைத்துக்கொள்வர்”
மாலை வீட்டிற்கு செல்லும்போது, வாசுகிரெட்டி அவளின் அம்மாவிடம், ஆஸ்ப்போ பயணத்தையும் அந்த வயதானவர்கள் எங்களைப் புகைப்படங்கள் எடுத்ததைப் பற்றி பேசிக்கொண்டிருந்தாள். யூனாஸ் சொல்லியதை அவளிடம் கடைசிவரை சொல்லவே இல்லை.
– August 04, 2010