(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
1-4-35
நாலு நாளைக்கு முன்னால் ஒண்ணு நடந்து போச்சு; திருடனைத் தேள் கொட்டினாப்போல் தவிக் கிறேன். மனுஷாளுக்கு மறதி, புத்திஹீனம் இதுகளெல் லாம் சகஜந்தானே என்று சக்கரவட்டமாகப் பேசுவா. கத்தை கத்தையாகக் கருணை ததும்பும்படி கதை திரிப்பா. காரியத்தில் -? அவா வீட்டில் படுக்கை அறை ஓரணாச் சிம்மணிமட்டும் ஒண்ணு உடைஞ்சுபோகணும் – நடக்கிற ரகளையைப் பார்க்கணும்! ‘அழும்பு, போக்கிரித்தனம், தடித்தனம், அஜாக்கிரதை’ இந்த மாதிரி ஒரு அத்தி யாயம் வசவு புறப்படும். இதான் லோகத்தில் இருக்கிற தமாஷ்!
போன வெள்ளிக்கிழமை எண்ணெய் முறை யோன்னோ? மூக்கிலே காதிலெ இருக்கிறதையெல்லாம் ஞாபகமாகக் கழட்டி, வெள்ளிசோடா டம்ளரிலே போட்டு, சமைக்கற உள்ளே வச்சுட்டு, வெந்நீர் உள்ளே போய் ஒரு கை எண்ணெய் வச்சுக்கிண்டப்பத்தான் தலைப் பின் னலை அவுக்கவில்லை என்ற ஞாபகம் வந்தது. பின்னலை அவுத்து ஜடைபில்லையைப் பெறையிலே வச்சூட்டு எண்ணெய் தேச்சுக்கொண்டு ஸ்நானம் பண்ணினேன். அப்பறம் அந்த எழவை உள்ளே எடுத்துக்கொண்டு போக மறந்துவிட்டேன்போல் இருக்கு. சாயங்காலமாகத் தலை பின்னிக்கிறபோத்தான் ஞாபகம் வந்தது. ஓடி னேன் வெந்நீர் உள்ளுக்கு. பெறையைப் பார்த்ததும் வயத்துலே பகீர் என்றது. சொல்லவும் படல்லெ, மெல்லவும் படல்லே. இல்லாத சந்தேகமெல்லாம் வந்து விட்டது. ஒருவேளை உள்ளேயே தான் வச்சூட்டேனோ என்று கூட அஞ்சறைப் பெட்டி முதல்கொண்டு அரைக்கால்படி குண்டான் வரையில் தேடிப் பார்த்துட் டேன். காணோம்.
ஒருவேளை நாட்டுப்பெண்ணுக்குப் பாடம் படிச்சுத் தரணும்னு மாமியார் எடுத்து ஒளிச்சிவச்சிருப்பாள் என்று நெனைச்சேன். ஆனால் கேக்கப்படுமா? ஒரு நாளாச்சு, ரெண்டு நாளாச்சு, இன்னியொடெ நாலு நாள் ஆயிடுத்து. எனக்குப் பயமாய் இருக்கு. திருகுவில்லை எங்கே என்று மாமியார் கேட்டால் என்ன பதில் சொல்றது? கெட்டுப்போச்சுன்னு சொன்னால் முழியைப் பிடுங்கிவிடுவாள்; என்ன செய்யறது?
இப்பொத்தான் தோணறது, நமக்கெல்லாம் நகை வேண்டாம்னூட்டு. அதுவும் இந்தப் புக்ககத்துக்காரர் கள் நகை இருக்கோ இல்லையோ, மடியிலே தேளைக் கட்டிக் கொண்டாப்பிலே தான்…போறும், போறும் இந்த
நகை எழவு….
2-4-’35.
நல்ல வேளை! இன்னிக்கு வரைக்கும் அந்தப் பேச்சே ஒத்தரும் எடுக்கல்லே. ரொம்ப யோசிச்சு யோசிச்சு ஒருகாரியம் இன்னிக்குப் பண்ணியிருக்கேன். என்னைப்போல அப்பாவுக்குப் பாக்கி ரெண்டு பெண் களும் தபால் எழுதிப்போட்டா ரொம்ப நன்னாயிருக் கும்! என் தபாலைப் பார்த்து அப்பா என்ன பாடு படு வாரோ பணத்துக்கு? ஆனால் ஒண்ணு, தலையை அடகு வச்சானும் வாங்கி அனுப்பிவிடுவார். இந்த வீட்டு யோக்கியதை அவருக்குத் தெரியாதா? தவிர என் மேலே கடுகளவு பிரியங்கூட இல்லாமலா போகும்? மொதல் குழந்தையோ இல்லையோ!
இப்போ ஒரு யோசனை வந்திருக்கு. அப்பா அதைத் தபாலில் அனுப்பிச்சுவிட்டால் -! ஆனால் அவருக்கு இல்லாத மூளையா எனக்கு? பார்ப்போம்.
5-4-’35.
என்னைப் பிடிச்ச அதிருஷ்டம், மாமியார் ஊரிலே இல்லை. அவாள் மட்டும் வீட்டிலே இருந்தார். “அம்மா” என்று தபால்காரன் கூப்பிட்டதும் எனக்குக் கொஞ்சம் திக் என்றது. நான் அவர் ரெண்டுபேரு மாகத் தெரு ரேழிக்குப் போனோம். மார் படபட வென்று எனக்கு அடிச்சுக்கிண்டது.”இந்தாங்கோ” என் ஒரு ரிஜிஸ்தர் பாக்கெட்டை என்கிட்டெக் குடுத்துக் கையெழுத்து வாங்கிக்கிண்டு தபால்காரன் போயிட்டான். என்ன ஆம்படையான் பெண்டாட்டி என்றாலும் சில சமயம் பயமாகத்தான் இருக்கு. ஐயோ ஈசுவரா! உள்ளே இருக்கிறது அவருக்குத் தெரியாமெ இருக்கணுமேன்னு பிரார்த்திச்சேன். இப்பிடி நெனைச்சுக்கிண்டிருக்கறப்பவே அவர், “அது என்ன? இங்கே குடு பார்ப்போம்” என்றார். பளிச்சுனு ஒரு யோசனை தோணித்து. ”இந் தாங்கோ’ என்னு பார்சலை அவர் கிட்டெ குடுத்து விட்டு, “என்னவோ வெத்தலை மாத்தரையாம்; ரொம்ப ஒசந்ததூன்னு அப்பா அனுப்பி இருக்கிறார்” என்று ஒரு போடு போட்டேன். இதுக்குப் பேர் பொய்யில்லெ! அடுத்தாத்து ராயர் சொல்றாப்போலெ, மானத்தைக் காப்பாத்திக்கிறது.
பார்செல் கயத்தை அறுத்து, மேல் துணியைக் கிழிச்சவர், “அரண்மனை பாய்சாப்” என்று சொல்லி என் முதுகிலே ஒரு தட்டுத் தட்டிவிட்டு, பாக்கெட்டை அப் படியே என் கிட்டெக் குடுத்துட்டார். அப்பாடா! நெஞ் கிலெ வச்சிருந்த பாறாங்கல்லைப் புரட்டினாப்போலே இருந்தது. உள்ளே போய்ப் பிரிச்சுப் பார்த்தேன். அப்பிடியே அஞ்சு அச்சும் உறிச்சு வச்சாப்பிலே இருந் தது. இதுக்குப் பணம் எங்கேதான் ஆகப் பண்ணி னாரோ, அப்பா? இப்போத்தான் தெரியறது, ‘பெண்ணோ புண்ணோ!’ என்கிற வசனத்தின் பொருத்தம். போன உசுர் இன்னிக்கித்தான் எனக்குத் திரும்பி வந்திருக்கு
8-4-’35.
தமாஷாம் தமாஷ்! என்ன வேண்டியிருக்கு? விளை யாட்டு வினையாகப் போகிற கதை எத்தனை கேட்டிருக்கிறோம்! போன மாசம் அடுத்த தெரு அம்மாளு தீர்த்தம் குடிக்கிறப்போ அவள் அத்தான் என்னவோ வேடிக்கை யாகச் சொன்னானாம். உடனே அம்மாளுவுக்குப் பொறை போய் ரெண்டு நிமிஷம் பிரக்ஞையே இல்லாமல் போயிடுத்தாம். அதுமாதிரிதான் இருக்கு, இங்கேயும்.
முந்தாநாள் சாயங்காலம் மோட்டுத்தெருவுக்குச் கிளம்பறதூன்னு நிச்சயம் ஆகி இருந்துதா; நான் தலை பின்னிக்கொண்டு நிலைக்கண்ணாடிக்கு முன்னே நாக ஒத்தைப் போட்டுக்கொண் டிருந்தேன். எனக்கு எதிர்த் தாப்போலே மேஜை மேலே புதுத் திருகுவில்லையும் தங்க மல்லிகைப் பூவும் இருந்தது.
நமக்குள்ளே தான் ஒரு வழக்கம் உண்டா? அந்த மாதிரித் தலைப் பின்னலுக்குப் பின்னாலே சின்னக் கண்ணாடி ஒண்ணெக் காண்பிச்சுப் பெரிய கண்ணாடியிலெ பின்னல் சரியாக அமைஞ்சிருக்கா என்னு அம்பத்தி அஞ்சாந் தடவை பாத்துக்கிண் டிருந்தேன்போல் இருக்கு. அறைக் குள்ளே இவர் நுழைஞ்சு வந்தது எனக்குத் தெரியாது. “கிளாவர் பின்னலோ ஆடுதன் பின்னலோ போட்டுக் கிண்டிருக்கயே; பின்னல் கமானுக்கு நடுவிலே திருகு வில்லையை வச்சுக்கிண்டாத்தானே நன்னாயிருக்கும். அதுக்கு என்னைப்போல ஒரு ஆள் போட்ட இடத்திலெ இருந்து சாமானை எடுத்துக்கிண்டு வந்து பத்திரப்படுத்தி வச்சு, எஜமானியம்மா கேட்டப்போ கொண்டுவந்து கொடுத்தா தாராளமா இரண்டு கையாலும்…’ என்று வாக்கியத்தை முடிக்காமல் எனக்குப் பின்னாடியிருந்தே ஒரு திருகுவில்லையை மேஜைமேலே வச்சார், ரொம்ப நைச் சியமாய். எனக்குக் கோபம் வராமே கோவிச்சுக்கற வார்த்தை! அந்தத் திருகுவில்லையைப் பார்த்ததும் என் மூஞ்சி கடுவன் பூனை மாதிரி ஆயிடுத்து. மேஜைமேலே இருந்த திருகுவில்லையைப் பார்த்ததும் அவர் மூஞ்சியும் சுண்டிப்போயிடுத்து. ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தார். ‘’ஏண்டி! அது ஏது?” என்றார்.
எனக்கு ஒரே கோபம். “நீங்க கெட்டிக்காரர்தான்; ஒடைமையிலே கண்ணுங் கருத்துமா இருக்கேள் ; ஒப்புக்கறேன். ஒரு வாரத்துக்குமேல் ஆகப்போறதே. அப்பவே சொல்லப்படாதோ?”
“என்ன அவசரம்? ஒனக்காக ஞாபகம் வந்து கேக்கறப்போ குடுக்கலாம்னு இருந்தேன்.”
“நல்ல காரியம் ! திருகுவில்லை தொலைஞ்சு போயிட்டுது என்னு நினைச்சுக்கொண்டு அப்பாவுக்கு எழுதி வேறெ ஒண்ணு வரவழைச்சேன். கெட்டுப் போச்சுன்னு ஒங்க அம்மாவுக்குத் தெரிஞ்சா என்னைக் கிழிச்சு மாலை போட்டுக்கொண்டுவிட மாட்டாளா?”
“ஒங்கப்பா லக்ஷாதிகாரி…அடுத்த வீட்டுக்காரி நகையை இரவல் வாங்கிக்கொண்டு வந்துவிட்டு அப்பா அனுப்பிச்சார் இன்னு விடாதே.”
“போருமே ஒங்க பேச்சு; நீங்களே குபேரனா இருங்கோ…அன்னிக்கு அப்பா எனக்கு ஒரு ரிஜிஸ்டர் பார்சலை அனுப்பிக்கவில்லையா?”
“வெத்திலை மாத்திரை என்று சொன்ன ஞாபகமாய் இருக்கே. ”
“கெட்டுப்போனது தெரியப்படாதுன்னுதான் அப்பிடிச் சொன்னேன்.
“அதுதான், ஒரு பிசகை மறைக்க ஒன்பது பொய் சொல்லவேண்டி வந்துவிட்டது. ஒரு வார்த்தை என்னைக் கேட்டிருந்தால் இவ்வளவு வம்பே வந்திருக்காது.”
“ரொம்ப நிஜம், இப்பவே இந்தப் பாடு படறது, அப்போ ஒங்களைக் கேட்டிருந்தால், ஏ! அப்பா?”
அப்பாவுக்கு என்னாலே எவ்வளவு வீண் உபத்திரவம்! இத்தனைக்கும் இவர்தானே காரணம். இந்த வேதனையே மனசை அறுக்கறது. இப்போ இரண்டு நாளாக நான் அவரோடெ பேசல்லே. விளையாட்டுக்குக்கூட ஓர் எல்லையுண்டோ இல்லையோ?
– மோகினி (சிறு கதைகள்), முதற் பதிப்பு: நவம்பர் 1951, கலைமகள் காரியாலயம், சென்னை.