திரிபுறம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 6, 2024
பார்வையிட்டோர்: 208 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள். ரங்கா என்கிற ரங்கநாயகிக்கு முப்பது வயது. அவள் கணவன் கோபாலகிருஷ்ணன் மெஷின் மேன். காலையில் ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் போய்விடுவான். வீடு திரும்ப எப்படியும் ஏழு எட்டு மணியாகிவிடும். ஊருக்கு வெளியே தொழிற்சாலை. சமையல் வேலையெல்லாம் அவளுக்கு இல்லை. எல்லாவற்றையும் தொழிற்சாலை நிர்வாகமே கவனித்துக்கொண்டுவிடுகிறது. ஆனால் கொடுக்கிற காசுக்கும் சோற்றுக்கும் சக்கையாக பிழிந்துதான், ஆளை வெளியே விடும். கல்யாண புதிதில் ஓரிரு முறை கணவனுடன் வெளியே செல்வதற்காக அவள் அந்த தொழிற்சாலையின் பெரிய கதவருகில் நின்றிருக்கிறாள். சங்கு ஊதியவுடன் சாரி சாரியாக தொழிலாளிகள் வெளியே வருவார்கள் ஆலையின் புகை போக்கியின் வழியே வழியும் புகைபோல. காலையில் திடப்பொருளாக போகும் இவர்கள் புகையாகத்தான் வெளியே வருகிறார்கள் என்று ரங்காவிற்குத் தோன்றும். கோபியும் அப்படித்தான் வருவான். ஆனாலும் நீரில் போட்ட பஞ்சு போல அவன் முகமும் உடலும் ரங்காவைக் கண்டவுடன் புத்துணர்ச்சியால் ஊறும்.

ரங்கா தன் வீட்டுக்கூடத்தை ஒரு முறை நோட்டம் விட்டாள். எப்படி இருந்த வீடு! எப்படியாகிவிட்டது? சனி, ஒரு வாரம் முன்பு தான் தன் சூம்பிய காலை அவள் வீட்டிற்குள் எடுத்து வைத்தது. பக்கத்து வீட்டு லச்சுமி சன்னல் வழியாகக் குரல் கொடுத்தாள். “லதாம்மா ஒங்களுக்கு •போன்” ரங்காவிற்கு அது அதிசயமான விசயம். அவளுக்கு யாரும் தொலைபேசியில் அழைப்பதில்லை. உறவு என்றிருந்த பெற்றோர்கள் போய் சேர்ந்து வெகு நாளாகிவிட்டிருந்தன. ஒரே ஒரு அண்ணன் கோவையில் இருக்கிறான். இருக்கிறானா என்று நினைக்கத் தோன்றும்படி இருக்கும் அவன் நடவடிக்கை. வீடு கட்டியிருக்கிறானாம். கார் வாங்கியிருக்கிறானாம். எல்லாம் அண்ணி வந்த ராசி. எல்லாம் வாங்கியவன் உறவுகளை அறுத்துக்கொண்டு, தனிமையையும் வாங்கிவிட்டான் போலிருக்கிறது. முதல் இடி அவள் மேல் இறங்கியது அந்த தொலைபேசி வழியாகத்தான். யாரோ சொன்னது அவளுக்கு ஞாபகம் வந்தது. “எட்டு நம்பர் ஆக்கிட்டாங்களாம். இனி எல்லாருக்கும் அஷ்டமத்திலே சனி. எங்கே நல்ல செய்தி வரப்போகுது?”

அவள் சந்தோஷத்தைத் தொலைத்த தொலைபேசிச் செய்தி இதுதான். வேலைக்கு நடுவில் கோபிக்கு விபத்து ஏற்பட்டிருக்கிறது. வலது கையில் அடி. ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறார்கள். நிர்வாகமே வீட்டிற்கு கொண்டுவந்து சேர்க்கும். வீட்டிற்கு வந்து கதவைத் திறப்பதற்குள், கோபியைக் கொண்டுவந்துவிட்டார்கள். வலது கை பாதிக்குமேல் மாவு கட்டு போட்டிருந்தார்கள். ஈ.எஸ்.ஐ. பணம் வரும் என்றார்கள். ஒரு காகிதப் பையில் மருந்துகளும் அதனடியில் மருத்துவர் சீட்டும் வைத்துவிட்டு, கைகளை கட்டிக்கொண்டு கொஞ்ச நேரம் நின்றுவிட்டு, வந்தவர்கள் போய்விட்டார்கள். படுக்கையில் இருந்த கோபி அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான். கழுத்து வரை போர்த்திவிட்டிருந்தார்கள். அடிபட்ட வலி தூக்கத்திலும் அவன் முகத்தில் தெரிந்தது.

அடுத்த நான்கு நாட்களுக்குள், பி.டி. வகுப்பில் ஒட்டப்பந்தயத்தில் தடுக்கி விழுந்த லதா மண்டையை பெயர்த்துக்கொண்டு கட்டுடன் வந்தாள். அஞ்சறை பெட்டியில் ஆறு மாதமாகச் சேர்த்து வைத்திருந்த ஐநூறு ரூபாயும் காணாமல் போனது. பக்கத்து வீட்டு லச்சுமிதான் ஒருமுறை திரிபுரம் மாமியைப் பற்றிச் சொன்னாள். மாமி ஜாதகம் பார்த்து பிட்டு பிட்டு வைக்கிறாளாம். பரிகாரமும் சொல்கிறாளாம். வந்த பிணியும் பீடையும் பிடறியில் பின்னங்கால் பட ஓடிவிடுகின்றனவாம். ஒரு நாள் துணைக்கு லச்சுமியுடன் போனபோது, ரங்காவும் மாமியைப் பார்த்திருக்கிறாள். கொஞ்சம் தாட்டியான உருவம். இரண்டு ரூபாய் அகலத்திற்கு குங்குமப்பொட்டு. முகமெல்லாம் மஞ்சள் தடவி சற்றே தடித்துவிட்ட முகம். வண்டி மையைத் தடவினாற் போல் அடர்த்தியான புருவங்கள். லேசாக மீசை கூட இருந்தது. மாமியை நோட்டம் விட்டதில், லச்சுமி கேட்டதும், மாமி சொன்ன பரிகாரமும் கோட்டை விட்டாயிற்று. அதில் வருத்தமுமில்லை அவளுக்கு. அப்போது எல்லாம் நல்லபடியாகத்தானே இருந்தது. இந்த ஒரு வாரத்தில்தான் மாமியை நோக்கி நினைவைத் திருப்பிவிட்டிருக்கிறது மனசு. கூட்டம் இருக்கும் என்று எண்ணி காலை ஏழு மணிக்கே கிளம்பிவிட்டிருந்தார்கள் லச்சுமியும் ரங்காவும்.

தெருவை அடைச்சாப்பல கூட்டம் நிக்குமே. என்னா சனத்தையே காணம்

லச்சுமி ஆச்சரியப்பட்டாள். தெரு காலியாக இருந்தது. சின்னத் தெரு. ஒரு வாகனம் வந்தால் இன்னொரு வாகனம் ஒதுங்க வேண்டியிருக்கும். மூன்றடி சந்தில் மூன்றாவதாக இருந்தது மாமியின் வீடு. அதற்கப்புறம் அடிபம்பு, குளியலறை, கழிப்பறைகள்…

யாரோ இரண்டு பேர் வெளியே வந்து கொண்டிருந்தார்கள். இவர்களைப் பார்த்தவுடன் நின்றார்கள். “மாமி இல்லையே! நேத்து காலையில அவங்க மருமகன் விபத்தில காலமாயிட்டாரு. அங்கே போயிருக்காங்க”

அவர்கள் கடந்து போனபோது சொல்லிக்கொண்டே போனது ரங்காவின் காதுகளில் விழுந்தது.

”பத்துப் பொருத்தம் பாத்து பண்ணிவச்ச கல்யாணம். மருமகன் இப்படி போவாருன்னு யாருமே நெனைக்கல”

கணவனுக்குக் காலை சிற்றுண்டியும், லதாவுக்கு கொடுக்கவேண்டிய மருந்தும், ஞாபகத்தில் வர, ரங்கா வீடு நோக்கி விரைந்தாள்.

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *