தின்று தீர்க்கும் இருள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 1, 2013
பார்வையிட்டோர்: 11,008 
 
 

கையில் பத்து ரூபாய்தான் இருந்தது. ஆனால், அவள் முடிவு செய்துவிட்டுத்தான் வந்திருந்தாள். ஊருக்குப் போய்விட வேண்டும். ஊருக்குப் போயேத் தீரவேண்டும்.

அந்த நகரத்தின் இயக்கத்தை வாகனங்களின் சப்தம் வெளிப்படுத்திக்கொண்டிருந்தது. மணி எட்டை நெருங்கிக்கொண்டிருந்தது. தலைக்கு மேலே மெர்க்குரி விளக்கு மஞ்சள் குடை விரித்திருந்தது. இந்த அலங்காரமெல்லாம் அவளின் கிராமத்தில் கிடையாது. தெருவுக்கு ஒரு டியூப் எரிந்தால் அது ஆச்சரியம். நெடுஞ்சாலையில் இறங்கி ஊரை நோக்கி நடக்கும்போது இருட்டுக் குகைக்குள் பயணப்படுவதுபோல இருக்கும். காட்டுப் பூச்சிகளின் ரீங்காரம் காதைத் நிறைக்கும். ஊரை நெருங்கும்போது நாய்கள் ஊளையிட்டு நெருங்கி, அப்புறம் ‘ஓ நீதானா’ என்பது போல வாலை ஆட்டும்.

அவள் பத்து வருடத்திற்கு முன்னால், இந்த நகரத்திற்கு இரண்டு முறை வந்திருக்கிறாள். ஒரு சமயம், அப்பாவோடு. அப்புறம் கணவனோடு. மற்றபடி காடுதான் அவளின் உலகம். ஆனால், இந்த பத்து வருடமாக இந்த நகரம்தான் பிழைப்பு என்றாகியிருந்தது.

காடு என்றால் வனாந்தரம் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். அது அவர்களின் விவசாய நிலம். அவர்களின் ஊரில் அப்படித்தான் சொல்வார்கள். மழையை நம்பி விவசாயம் செய்வது காடு. அவ்வளவுதான்.

இவள் கிணற்றில் மீன் வளர்த்துக்கொண்டிருந்தாள். சிவப்புக் கெண்டை, விரால் என்று வளர்த்துக்கொண்டிருந்தாள். அப்போது அவளுக்குப் பத்து வயது இருக்கும். இப்போது முப்பத்தைந்து வயது.

அப்பா மாட்டைக் கட்டி நீரை இறைப்பார். தோப்பறை ஏறி ஏறி இறங்கும். ஒவ்வொரு முறை தோப்பறை மேலே வரும்போதும் நீர் கலகலவென்று சிரித்தபடி மடையில் பாயும். தக்காளி செடிகள் வரப்போகும் நீரை நினைத்து தலையாட்டும். பட்டுப்பூச்சிகள் எதையும் கவனிக்காது பூவிட்டுப் பூ தாவும். காற்றின் வேகத்திற்கு வேம்பு அசையாது நிற்கும், இலைகள் மட்டும் அசைந்தாடும்.

இவளுக்கு இது எதுவும் தெரியாது. தோப்பறையில் மீன் மாட்டிக்கொள்ளுமோ என்று கவலையோடு பார்த்திருப்பாள். முன்பின்னாக நடக்கும் மாடுகளை இயக்கிக்கொண்டிருக்கும் அப்பாவுக்கு இவளின் யோசனையெல்லாம் தெரியாது. தக்காளி விளைந்தால் நல்ல விலை வருமா? பருத்திப் போட்டால் தப்பித்துக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருப்பார்.

அவள் ஊரில் எல்லோரும் கரும்பு போட்டிருந்தார்கள் என்பது இவளுக்கு நினைவிருக்கிறது. ஆனால், அப்பா தக்காளி, பருத்தி என்று தள்ளாடிக் கொண்டிருந்தார். ‘அவனுங்க மோட்டாரு வைச்சி எறைக்கிறானுங்க.. நம்மாள முடியுமா?’, என்று கேட்டபோதுதான் இவளுக்குச் சிக்கல் புரிந்தது.

இரண்டு ஏக்கரையும் பெண் பிள்ளையையும் வைத்திருக்கும் விவசாயி வேறு என்ன செய்ய முடியும்?

ஆனால், அவள் அப்பா படித்தவர், அந்தக் காலத்து எஸ்எஸ்எல்சி. தாத்தாதான் ஊரின் பெரிய மனிதர். அவர் காலத்துக்குப் பின்பு அவருக்கு இருந்த நிலத்தை எட்டு பிள்ளைகளுக்குப் பிரித்தபோது 2 ஏக்கர் கிடைத்தது. அத்துடன் பொதுக் கிணறும் கிடைத்தது. அந்தக் கிணறு அண்ணன் தம்பி அத்தனை பேருக்கும் சொந்தம் முறை வைத்து நீர் பாய்ச்சிக் கொள்ள வேண்டும்.

வாரத்தில் ஏழு நாளும் நீர் கிடைத்த காலம்போய், கிணறு நீர் சுரக்க காத்திருக்கும் காலம் வந்தது. அப்புறம் கண்ணீர்போல நீர் வந்தது. இவள் வளர்த்த சிவப்புக் கெண்டை துடிதுடித்துச் செத்துப்போனது. அவளின் அப்பா தவிர அனைவரும் விவசாயத்தை விட்டுவிட்டு திருப்பூர் போனார்கள். அப்பாவோ மண்ணுக்குள் போனார்.

போவதற்கு முன்பு இவளின் திருமணத்தை முடித்து வைத்துவிட்டுத்தான் போனார். ஒற்றைப் பெண்ணான இவளுக்கு அப்பாவின் இரண்டு ஏக்கர் வந்து சேர்ந்தது. என்ன பிரயோஜனம்? மோட்டார் வைத்தவர்களில் சிலர் போர் போட்டார்கள். அப்புறம் சைடு போர் போட்டார்கள். இப்போது ஊரில் இரண்டே இரண்டு பேர்தான் விவசாயம் செய்கிறார்கள். அதுவும் தென்னை விவசாயம். அதற்குத்தான் குறைவான நீர் போதும். மற்றவர்கள் எல்லாம் தரிசாகிப் போனார்கள்.

கணவன் பெரியசாமிதான், இப்போது பாஸ்கர் டாக்டர் மருத்துவமனையில் இருக்கிறான். அவனைப் பார்த்துவிட்டு, பணத்தையெல்லாம் கட்டிவிட்டு, அவனுக்குத் தேவையான மருந்துகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, நைட்டுக்கு இட்லி வாங்கி வைத்துவிட்டு வந்தாள். இரண்டு நாளைக்கு சாப்பாடு வாங்கித்தர பக்கத்து பெட்காரரிடம் பணம் கொடுத்துவிட்டு வந்தாள். கையில் இருந்த காசெல்லாம் கரைந்திருந்தது.

அதற்குள் இருட்டிவிட்டது. வீட்டில் ஐஸ்வர்யா தனியாக இருப்பாள். பெரியவனைப் பற்றிக் கவலையில்லை. வேலைக்கு போகிறானோ இல்லையோ தண்ணி அடித்துவிடுவான். ஊர் மந்தையில் மல்லாந்து கிடப்பான். கவலைப்பட்டு என்ன செய்ய முடியும்? ஊருக்குள்ளேயே கடையிருக்கிறது. அப்புறம் பிள்ளைகள் என்ன செய்யும்?

ஐஸ்வரியா பயப்படுவாள். நாளை மரம் வெட்டப் போனால்தான் செலவுக்குப் பணம். அதனால்தான் ஊருக்குப் போக இவள் வந்து நிற்கிறாள். இல்லையென்றால் பெரியசாமியோடு இருந்திருப்பாள்.

பெரியசாமி கிணற்றுமேடு தேக்கு போல வளர்ந்தவன். இவளின் சொந்த மாமாதான். சைக்கிளை மிதிக்கும்போது கால்கள் ஹேண்டில்பாரில் இடிக்கும். பாரில் இவள் உட்கார்ந்திருப்பாள். ஹைஸ்கூல் வரைக்கும் சவாரி. அப்புறம் மாலையில் வந்துவிடுவான். கண்ணைப்போல அவளைக் காத்துக் கல்யாணம் செய்துகொண்டான். பத்து படிக்கும்போது இவள் முதன் முறையாகக் கூச்சத்தை உணர்ந்தாள். அவனின் கால்கள் பெடலோடு ஏறி இறங்கும்போது இவளுக்குள் விறுவிறுயென்ற இரத்தம் ஏறியது. ஏனென்று தெரியவில்லை. அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.

அப்புறம் சண்டைபோட்டு உடைந்து போன கேரியரை மாற்றி நல்ல கேரியர் வைக்கும்வரை அவள் பாரில் ஏறவில்லை. சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவன் நடக்க, இவள் கூடவே நடப்பாள். நாகர் கண்மாய் கரையில் அரசமரம் ஓங்கி நிற்கும். வழியெங்கும் புங்கை நிழலை விரித்திருக்கும். டிசம்பரில் சொர்க்கம் போல செங்கொன்றை பூத்திருக்கும். தோளோடு தோள் இடித்துக்கொண்டு நடக்கும்போது வாழ்க்கை இனிக்கும்.

அந்தக் காதல் கல்யாணம் வரைக்கும் போவதில் எந்தப் பிரச்சனையும் வரவில்லை. கல்யாணம் முடிந்து வாழ்க்கையைத் துவக்கும்போதுதான் பிரச்சனைகள் வந்தன.

இவள் நின்றுகொண்டிருக்கும் பிரிவுதான் நகரத்தின் கடைசி பஸ் ஸ்டாப். இங்கு காலையிலும் மாலையிலும் பெரிய கூட்டம் காத்திருக்கும். கையில் தூக்குச் சட்டியுடன் ஆணும் பெண்ணுமாகக் காத்திருப்பார்கள். கிழவர்கள் முதல் வாலிப வயது வரை கலவையான கூட்டமாக இருக்கும். எல்லோரும் இவளின் கிராமம் போல பல்வேறு கிராமங்களில் இருந்து வருபவர்களாக இருப்பார்கள். காலையில் ஏஜெண்ட்டுக்காகக் காத்திருப்பார்கள். கட்டுமான வேலைக்கு இங்குதான் ஆள் பிடிப்பார்கள். முதலில் வாலிப வயதினர் போய்விட அப்புறம் கிழவன் கிழவிகளுக்கு வாய்ப்பு வரும். புத்திசாலியான கிழங்கள் வாலிபப் பிள்ளைகளை ஒட்டிக்கொண்டு பறந்துவிடும். ஏமாந்ததெல்லாம், விதியை நொந்துகொண்டு ஊருக்கு டவுன் பஸ் பிடிக்கும்.

மாட்டுச் சந்தைபோல மனிதச் சந்தை என்று இவள் யோசித்திருக்கிறாள். இவளின் கிராமம் போலவே சுத்துப்பட்டு கிராமமெல்லாம் காய்ந்து போய்விட்டன. கண்மாய்கள் மேடாகிவிட்டன. இவள் மீன் வளர்த்த கிணறு மரணப் பள்ளம் போல வாய்திறந்து காய்ந்து கிடந்தது. தோப்பறையை மாட்டும் மரங்கள் மட்டும் இற்றுப்போன பிணத்தின் எலும்புகள் போல கிணற்றுக்குள் துருத்திக்கொண்டிருந்தன. கிணற்று மேட்டின் வேம்பு மட்டும் விடாது போராடி உயிருடன் இருந்தது. வரப்பெல்லாம், பல்லுபோன பாட்டியின் வாய் போல ஆகிவிட்டன. பாலையாகிப் போய், சீமை கருவை மண்டிய நிலங்களுக்கு அப்பால் கருப்பு கோவில் மட்டும் ஆலமரத்துடன் நின்று கொண்டிருந்தது.

வேறுவழியில்லாமல் இவளும் வீட்டுக்காரனும் நகரத்து வேலைக்குப் போனார்கள். முதலில் பெரியசாமி ஒப்புக்கொள்ளவில்லை. சம்சாரியெல்லாம் சட்டியும் மண்வெட்டியும் தூக்க முடியுமா? ஆனால், வறுமை விரட்டியது. இரண்டு பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டுமல்லவா? பெரியசாமியும் இவளுமாக அந்த நகரத்து மனிதச் சந்தைக்கு வந்து சேர்ந்தார்கள்.

மாலையில் ஆறு மணிக்கெல்லாம் அந்தப் பிரிவில் கூட்டம் அலைமோதும். கிராமத்துக்குப் போகும் டவுன்பஸ்சைப் பிடிக்க அல்லாடுவார்கள். பெரியவனும் ஐசும் தூங்குவதற்கு முன்பு போய் சமைக்க வேண்டும் என்ற கவலை இவளைப் பிடித்தாட்டும். முட்டி மோதி ஏறாவிட்டால், அப்புறம் ஏழு மணிக்குதான் பஸ். ஊருக்குப் போய்ச் சேர எட்டு மணியைத் தாண்டிவிடும். அப்புறம் இரவு சமைப்பதெப்படி? பிள்ளைகளுக்குப் போடுவது எப்படி? சாப்பிடுவது எப்படி? மறுபடியும் காலை நான்கு மணிக்கு எழுந்து ஓட்டத்தைத் துவங்குவது எப்படி? இவள் தன் குச்சி உடம்பை பஸ்சுக்குள் நுழைத்துக்கொண்டு எப்படியும் ஆறு மணி பஸ்சில் ஊர் திரும்பிவிடுவாள்.

அந்தப் பஸ் ஸ்டாப்பில்தான் இன்று அவள் நின்றிருக்கிறாள். கடைசி பஸ் போய்விட்டது. இனி லாரிதான். பஸ்ஸ்டாப்பில் யாரையும் காணோம். பெட்டிக் கடைக்காரர் கடையைக் கட்டிக்கொண்டிருந்தார். லாரியில் போகத் துணை வேண்டுமே? ஊர்க்காரர்கள், பக்கத்து ஊர்க்காரர்கள் என்று யாரையும் காணோம்? இப்படி வந்து மாட்டிக் கொண்டோமே என்று யோசித்தாள். போயாக வேண்டும். வேறு வழியில்லை.

பெட்டிக் கடைக்காரரைப் பார்த்தாள். ‘அவருகிட்ட பத்து ரூபா கேப்பமா?’ என்று யோசித்தாள். மனம் வரவில்லை. சட்டென்று ஒன்று சொல்லிவிட்டால், அப்புறம் முகம் பார்ப்பது எப்படி?

பெரியசாமிக்கு கிட்னி அடைப்பு. முதுகுப் பக்கத்தில் வலிக்கிறது என்று ரொம்ப நாளாகச் சொல்லி வந்தான். பெட்டிக் கடையில் மாத்திரை வாங்கிப் போட்டுக்கொண்டு வேலைக்குப் போவான். இவள் இரவில் மருந்து போட்டு நீவி விடுவாள். ஒன்னுக்குப் போவதில் பிரச்சனை வந்தபோதுதான் கல்லடைப்பு என்று தெரியவந்தது.

பெரியசாமிக்கு மட்டுமல்ல, கிராமத்தில் நிறைய பேருக்கு கல்லடைப்பு இருந்தது. முன்பெல்லாம், கண்மாயில் நீர் எடுத்துக் குடித்தார்கள். கம்மாய் காய்ந்த பின்னர் கிணற்று நீரைக் குடித்தார்கள். அப்புறம் பஞ்சாயத்தில் குழாய் போட்டு தொப்பமலை அடிவாரத்தில் போர் போட்டு தண்ணி கொண்டு வந்தார்கள். அதனை வாயில் வைக்கவே இவளுக்குப் பிடிக்காது. நீர் பிடித்த பாத்திரத்தில் வெள்ளையாய் ஏதோ மிதக்கும். இரண்டு மாதம் நீர் பிடித்த பானையில் வெள்ளையாய் ஏதோ ஒன்று ஒட்டிக்கொண்டு சுரண்டினாலும் போகாது. ஏதோ உப்பாம். அந்த உப்புதான் கல்லாகி ஊரில் உள்ளவர்களையெல்லாம் துடிக்க வைத்துக் கொண்டிருந்தது. பலரும் நகரத்தில் உள்ள கிட்னி ஆசுபத்திரிக்கப் போனார்கள். பெரியசாமியை இழுத்துக்கொண்டு இவளும் போனாள்.

இந்தமுறை அவனுக்கு கைகால் எல்லாம் வீங்கிவிட்டது. மெஷின் வைக்க வேண்டும் என்றார்கள். துடித்துப் போனாள். இவள் இடுப்பைப் பிடித்து அப்படியே தூக்கும் பெரிய சாமியை இவள் தூக்கிப் போக வேண்டியிருந்தது. ஆல்போல வளர்ந்திருந்தவன் அருகு போல சுருண்டுவிட்டான். இப்போதெல்லாம் அவன் பேசுவதில்லை. காதலித்துக் கரம் பிடித்தவளை கசக்கிப் பிழிகிறோம் என்று யோசிப்பானோ? பிள்ளைகளை விட்டுவிட்டு தன்னைப் பார்க்கும்படி ஆனதே என்று பரிதவிப்பானோ? தெரியவில்லை. பாவி மகன் வாய்த் திறப்பதில்லை.

அப்பன் விட்டுவிட்டுப்போன துண்டு நிலத்தையும் கிரயம் பேசி அந்தக் காசை வாங்கித்தான் பெரியசாமியை அந்த பாஸ்கரன் மருத்துவமனையில் சேர்த்திருந்தாள். இனி ஆசுபத்திரி செலவு பெரிசா வராது. ஆனால், ‘சாப்பாடு, போக்குவரத்து இருக்கே’, என்று யோசித்தாள். பரவாயில்லை. ‘ரெண்டு நாளு –மரம் வெட்டுற வேலை, ரெண்டு நாளு ஆஸ்பத்திரியில இருந்துட்டுன்னு சமாளிக்கலாம்’, என்று முடிவு செய்து வைத்திருந்தாள்.

அவள் ஊரைச்சுற்றி சீமைக்கருவை வளர்ந்திருந்தது. திருப்பூரில் இருக்கும் ‘சம்சாரி’களுக்கு வயலில், கருவையாவது வளர்வது நிம்மதி. இரண்டு வருஷம் மூன்று வருஷம் போனால், கருவையை வெட்டிக்கொண்டு காசு தருவார்கள். அந்தக் காசை வாங்கிக்கொண்டு அப்படியே தீபாவளியையும் கொண்டாடிவிட சம்சாரிகள் ஊர் திரும்புவார்கள். இப்போது கருவை வெட்டும் வேலை போய்க் கொண்டிருந்தது. அதுதான் அவளுக்குத் தெம்பு தந்திருந்தது.

ஊருக்குப் போய்ச் சேர வேண்டும். பிள்ளைகளைப் பார்க்க வேண்டும். காலையில் மரம் வெட்டப் போக வேண்டும். ஆனால், எந்த லாரிக்காரனும் நிறுத்தவில்லை. மணி ஒன்பது ஆகிக்கொண்டிருந்தது. என்ன செய்யலாம் என்று அவள் யோசித்தபோது அந்த லாரி நின்றது. லாரியின் முன் பக்கமெல்லாம் சில்வர் பட்டை அடித்து, கருப்புக் கயிறுகள் எல்லாயிடத்திலும் தொங்க லாரி வித்தியாசமாக இருந்தது. வடநாட்டு லாரி போல..

லாரியில் இருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டார்கள். இவளுக்குப் புரியவில்லை. இந்தி போலத் தெரிந்தது. அப்புறம் கிளி இவளிடம் ஏதோ கேட்டான். இவளுக்குப் புரியவில்லை.

அப்புறம் அவன் பின் பக்கம் கையைக் காட்டி, ‘வாரியா?’ என்றான்.

இவள் சட்டென்று தலையை ஆட்டி ஊர் பேரைச் சொன்னாள்.

‘கித்னா தூர் ஹை?’ என்றான் கிளி.

இவளுக்குப் புரியவில்லை.

‘கித்னா கிலோ மீட்டர் ஹை’, என்றான்.

இவளுக்கு கிலோ மீட்டர் புரிந்தது. இரண்டு கையும் விரித்து பத்துவிரலைக் காட்டினாள். அவனோ, பின்னால் ஏறிக்கொள்ளும்படி சொன்னான்.

கட்டுமான வேலையில் சாரத்தைப் பிடித்து ஏறிப் பழகியவள், கேபின் அருகே இருந்த இரும்பு ஏணியைப் பிடித்துக்கொண்டு ஏறி லாரியின் பின் பக்கத்தில் இறங்கினாள். கால் மெத்தையில் பட்டது போல இருந்தது. ஏதோ மூட்டைகள். லாரி புறப்பட்டது. நகரம் விலக இருள் கவ்விக்கொண்டது. வறண்ட காற்று தலையைக் கலைத்தது.

அடுத்த கிராமத்தை நெருங்குவதற்கு முன்னால், லாரி நின்றது. இவளுக்குப் புரியவில்லை. ரிப்பேரோ என்று யோசிப்பதற்குள், டிரைவர் பக்கத்து கதவைத் திறந்துகொண்டு டிரைவர் மேலே வந்தான்.

உடனே லாரி புறப்பட்டது. கிளினர் ஓட்டுகிறான் போல.

இவளுக்குப் புரிந்துவிட்டது.

கண்ணை மூடிக்கொண்டாள். உடலைக் கட்டையாக்கிக் கொண்டாள். பெரியசாமியை நினைத்துக்கொண்டாள். குறைநீர் இருந்த கிணற்றில் சிவப்புக் கெண்டை துடித்தது கண்ணில் தெரிந்தது. ஆலமரத்துக் கருப்பு அருவாளுடன் வெட்டியாய் நின்றுகொண்டிருப்பது தெரிந்தது. மனம் இறுகிப்போனது… ஒளியைக் கக்கிக்கொண்டு லாரி முன்னோக்கிச் செல்ல அவளையும் அவள் வாழ்க்கையையும், உலகத்தையும் இருள் தின்றுகொண்டிருந்தது.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *