தித்திப்பாய் ஒரு விபத்து

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 24, 2014
பார்வையிட்டோர்: 10,536 
 
 

(நவம்பர் 1981-ல் நடந்தது)

‘தற்கொலை செய்து கொள்ள வேண்டியதுதான் என்று முடி-வெடுத்தாயிற்று. சரி, எங்கே, எப்படி செய்து கொள்வது? விஷம் எங்கே கிடைக்கும்? மூட்டைப் பூச்சி மருந்து? அது எங்கு வேண்டுமானாலும் கிடைக்குமே. எது வேகம், எது வேதனை குறைவு? தண்டவாளத்தில் தலை கொடுத்தால்? ஏதோ சயனைடாமே, அது அதிவேகம் என்கிறார்களே, அது கிடைக்குமா? சரி, வேண்டாம், கயிறு? முழி பிதுங்கி, நாக்கு வெளியே தள்ளி.. கோரமாய் இருக்குமோ? கணவனின் முகம் பார்த்து கதறி அழ முடியாமல் விசாலம் பயந்து, உறைந்து போய் விடுவாளே. தூங்குவது மாதிரி தான் இருக்க வேண்டும். என்றால், விஷம் தான் சரி. வீட்டிலேயே சாப்பிடுவதா.. ம்ஹூம் கூடாது, ஆவி சுற்றும் வீடு என்று விசாலம் வீட்டை விற்க நினைத்தாலும் அடிமாட்டு விலைக்குக் கேட்பார்கள். ஆமாம், நான் உண்மையிலேயே இங்கே ஆவியாக அலைந்து கொண்டிருப்பேனோ! தெரியவில்லை, ஆனாலும் வீடு வேண்டாம். மெட்ராஸுக்குப் போனால் எத்தனை லாட்ஜுகள் இல்லை.’

மேற்படி எண்ணங்கள் சிவனேசனின் மனதில் ஓடிக் கொண்டி-ருக்கையில், கூடவே சிரிப்பும் வந்தது அவருக்கு. செத்துப் போன பின்னுமா, விசாலத்தைப் பற்றியும் வீட்டைப் பற்றியும் கவலை? இந்த கவலைகளையும், இன்ன பிறவற்றையும் விட்டொழிக்கத் தானே மேலே போகிறோம் என்ற நினைப்பினால்தான் அவருக்கு சிரிப்பு வந்தது.

பாலுசெட்டிச் சத்திரம்தான் சிவனேசன் பிறந்தது, வளர்ந்தது எல்லாம். இறக்கப் போவது மெட்ராஸ் என்று முடிவெடுத்திருந்தார். ஐம்பத்திரண்டு வயதாகும் சிவனேசன் திடகாத்திரமாய்த்தான் இருந்தார் – மூன்று ஆண்டுகள் முன்பு வரையில். முறைப் பெண்ணான விசாலத்தைக் கைப் பிடித்து ஆகி விட்டது இதோ இருபத்தைந்து வருடங்கள். ஆசைக்-கொன்று, ஆஸ்திக்கொன்று என்று பெற்று வைத்திருந்தும், ஆஸ்தியை என்னவோ அவரால் ஈட்ட முடியவில்லை. ஆசையை பொழிந்தவள் மீதும் இன்று ஒரு அந்நியம் பாராட்டிக் கொண்டிருக்கிறார். இந்தக் காரணமும் கூட, இன்ன பிறவற்றுள் ஒன்றுதான் சிவனேசனின் தற்கொலை தீர்மானத்திற்கு.

பலகைகளையெல்லாம் நம்பர் படி எடுத்து, ‘காடி’யில் படிய வைத்து, தாழ்ப்பாள் போட்டுப் பூட்டி, ‘ணங்’ ‘ணங்’ என்று சாவியால் பூட்டின் மேல் தட்டுகிற வரையில், சிவனேசனின் மளிகைக் கடையில் அவர்தான் எல்லாம். மகனும் ஒரு நாள் கூட வந்து, தனியாவையும் பூண்டையும் லாவகமாய் பொட்டலம் கட்டிக் கொடுக்க, தான் உட்கார்ந்து சில்லறையை எண்ணிக் கொண்டிருக்கலாம் என்று எண்ணியது மடத்தனம் என்பது நான்கு வருடங்-களுக்கு முன்பு அவருக்குப் புரிந்தது. அவ்வப்போது தலையை சீவி, உடனே கலைத்துக் கொண்டு, கோதி சிலிர்த்துக் கொண்டு, அடிக் குரலில் பேசியவாறு, கண்ணாடி முன்னே மணிக் கணக்கில் ஒரு இருபது வயது பிள்ளை நின்றால், நடிகனாக வேண்டும் என்ற ‘இலட்சிய வெறி’ அவனுள்ளே கிளர்ந்தெழுந்து விட்டதை புரிந்து கொள்ள வேண்டாமோ? மகனும், பத்தாயிரம் ரூபாய் பணமும் ஒரே நாளில் காணாமல் போனதும் தான் புரிந்து கொண்டார்.

அது நடந்து அரை வருடம் ஆயிருக்கும். வேலூரிலிருந்து சென்னை போன சரக்கு லாரி ஒரு விடியற்காலையில், நெடுஞ்சாலையில் இருந்த அவர் கடைக்குள்ளே மோதி, கண்ணாடித் துகளை அரிசி பருப்பு இத்யாதிகளின் மீது அள்ளித் தெளித்திருந்தது. டிரைவர் மளிகை சாமான்-களின் குவியலில் இரத்தக் களறியாய் உயிர் விட்டிருந்தான். பிறகு போலீஸ் என்றும் விசாரணை என்றும் பத்து நாட்கள் போய் விட்டன. சிதிலப் பட்ட மளிகை சாமான்களை எடுத்தெறிந்தது, கடைக்கு மராமத்துச் செலவு இவை-களை கணக்குப் போட்டுப் பார்க்கையில், நட்டம் ஏழெட்டை தாண்டியது. வியாபாரம் முடங்கியதன் வழியாய் நட்டம் ஓர் இரண்டாயிரம் என எல்லாமாகச் சேர்ந்து பத்தைத் தொட்டது. நஷ்ட ஈடு கேட்கலாம் என்று போனவரை நாராய்க் கிழித்து அனுப்பி விட்டார்கள்; லாரி ஆற்காடு MLA-வினுடைய, இராணிப் பேட்டை ‘சின்ன வீட்டு’க்குச் சொந்தமாம்.

இதெல்லாம் போதாதோ, இன்றைக்கெல்லாம் இருந்தால் பதி-னைந்து முடியப் போகிற கௌரி காதலிக்கிறாளாம். விசாலம் சொல்லி இப்படி தன் பெண்ணைப் பற்றிக் கேள்விப் பட்டவர், அத்தனை சீக்கிரம் நேரிலேயே பார்த்துத் தொலைப்போம் என்று நினைக்கவில்லை. ‘கரண்ட் பில்’ கட்ட வேண்டியது கடைசி நாள் என்பது கடைசீ நிமிஷத்தில் நினைவுக்கு வர, கடையைப் பூட்டிக் கொண்டு, குறுக்கு வழியாய் விரைகையில்தான் அந்தக் கண்ணராவியை பார்க்க நேர்ந்தது. பள்ளியில் இருக்க வேண்டியவள், வேலிகாத்தான் ஓரமாய் எவனோ தடியன் மடியில் பள்ளி கொண்டிருந்தாள். ‘ஐயோ, இவன் ‘சப்பி சதா’ இல்லையோ’ என்று கௌரியில் கூந்தலில் அளைந்து கொண்டிருந்தவனை அடையாளம் கண்டு கொண்டவருக்கு வயிறு எரிந்தது. ‘சப்பி சதா’ என்று ஊரில் பட்டப் பெயருடன் அலைந்து கொண்டிருக்கும் இவனுக்கு இதை விடப் பொருத்தமான பெயர் கிடைக்காது. பெயரும் சதாசிவமாக அமைந்து, சதா ‘சப்பி’யுடன் திரியும் இவனுக்கு, வேறு என்ன பெயர் பொருத்தமாக இருக்க முடியும்? எத்தனையோ முறை கடை திறக்கப் போகும் போது இவனை அலங்கோலமாய், மூட வேண்டிய இடங்-களனைத்தும் திறந்திருக்க, ஏதாவதொரு சந்து மூலை சாக்கடையில் விழுந்து கிடக்கின்றதை பார்த்திருக்கிறார். இப்படிப் பட்ட பன்றியுடனா என் பசுங்கன்று? பிய்ந்துத் தொங்கிய இதயத்துடன், வீட்டுக்கு ஓடினார்.

‘என்னடி பொண்ணை வளத்திருக்கே?’ என்று தன் ஆற்றாமையை விசாலத்தின் முதுகில் அடிகளாய் இறக்கினார். கௌரி வந்ததும், ‘எங்கே, பள்ளிக்கூடத்துலேருந்துதான் வர்றியா?’ என்று சிவனேசன் கேட்க, ‘வேறெங்-கேருந்து வருவாங்களாம்?’ என்று நக்கலாய் அவள் நகல, ‘மூதேவி, எங்கே-ருந்து வர்றேன்னு எனக்குத் தெரியும்டீ, கருமாந்திரத்தைத்தான் என் கண்-ணாலே பாத்தேனே’ என்றபடி, முகமென்றும் முதுகென்றும் பாராமல் சரமாரி-யாய் அவளை விளாசினார் சிவனேசன். ‘சப்பி சதாவை ஊரெல்லாம் துப்பு-கிறதேடி’ என்று மாரிலடித்துக் கொள்கிறார். அதெல்லாம் பொய்யாம், அவரைப் போல் நல்லவர் இல்லையாம், கட்டினால் அவரைத்தான் கட்டுவாளாம். இப்படியெல்லாம் கௌரி சொல்லச் சொல்ல, ஒரு பதினைந்து வயதுப் பெண்ணை என்ன செய்து இந்த சதா இது போல் மாற்றி வைத்திருக்கிறான் என்று அவன் மீதுதான் ஆத்திரம் வந்தது சிவனேசனுக்கு. நேரில் கண்ட-தைக் கூட அபாண்டமாய் பழி சுமத்துவதாக அவள் சொல்ல, சிவனேசனுக்கு ஆத்திரம் கட்டுக்கடங்காமல் போய், கையில் கிடைத்ததை எடுத்து அவளை அடிக்க முற்பட்டார். தடுக்க வந்த விசாலத்தையும் அடித்தார், தன்னையும் அடித்துக் கொண்டார். மகனையும், தன்னை இந்த உலகத்துக்குக் கொண்டு வந்த தகப்பனையும் சபித்தார். வீடே அலங்கோலமாய் அழுதது.

சென்னையில் மைத்துனி வள்ளி வீட்டில், கௌரியை கொண்டு விடுவதாகத் தீர்மானித்து, விசாலத்தோடு அவளை அனுப்பி வைத்தார் சிவ-னேசன். முரண்டு பிடிக்காமல் கௌரி போனது முதலில் ஆச்சரியமாகவும், பிறகு சந்தேகத்துக்கிடமாகவும் இருந்த போதிலும், பத்து நாட்களுக்குப் பின் வள்ளியிடமிருந்து வந்த கடிதத்தில், கௌரி இப்போது சகஜ நிலைக்கு திரும்-பியிருப்பதாக எழுதியிருப்பது பற்றி திருப்தி பட்டுக் கொண்டார். இலேசான அந்த சந்தோஷம் ஒரு நாள் கூட நிலைக்கவில்லை. குலைக்கவென்றே திரும்பி வந்தான் குலக் கொழுந்து. கன்னத்து சதையையும், பணம் பத்தா-யிரத்தையும் ஒரு சேர தொலைத்து விட்டு நிற்கும் அவனை இன்று, ‘கூட்டத்-தில் ஒருவ’னாகக் கூட சினிமாவில் வேஷம் கொடுப்பார்களோ என்னவோ. ஆனால் அவன் மட்டும் இன்னும் பிடிவாதமாகத்தான் இருந்தான், ஒரு நாள் ‘கிரேட்டஸ்ட் ஸ்டார்’ ஆவேன் என்று. ‘எங்கேடா நாயே பத்தாயிரம்?’என்று ஆத்திரப் பட்டவரை ‘பித்து மனம்’ அடக்கியது. ஏதோ அருவருப்பான பூச்சியை பார்ப்பது போல் சிவனேசனைப் பார்த்தான், ‘நாளைய நட்சத்திரம்’. சிவனேசனின் மன ஓட்டத்தை படித்தவள் போல் ‘பணம் போகட்டுங்க, புள்ள திரும்பி வந்திச்சே’ என்றாள் விசாலம். ‘நா யேந் திரும்ப வர்றேன் இந்த எளவு புடிச்ச ஊருக்கு, பாட்டன் சொத்துத்தானே இந்த வூடு, வித்துப்புட்டு யாம்பங்கை, அந்த பத்தாயிரத்த எடுத்துக்கிட்டு பிரிச்சு குடுக்கச் சொல்லு, நா போய்ட்டே இருக்கேன்’ என்று வேறெங்கோ பார்த்தவாறு தலையைக் கோதி நிமிர்ந்து விட்டத்தை வெறித்தான் மகன். விசாலம் விக்கித்து நிற்க, ‘த்தூ’ என்று ஓரெழுத்திலே தன் ஆத்திரத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்திய சிவனேசன் வேகமாய் வெளியேற, நிலைப் படியில் தலை இடித்து தடுமாறி விழுந்தார். ‘ஐயோ’ என்று பதறிப் போய் ஓடிய தாயை, ஒன்றுமே நடவாதது போல் பார்த்துக் கொண்டு தடி மரம் போல் நின்றிருந்-தான் அந்தத் தனயன்.

இத்தனை தலைவலிகளும் போதாதென்று, இது நாள் வரை இல்லாத நிஜமான ஒரு வித ஒற்றைத் தலைவலியும் நாள் முழுவதும் சிவ-னேசனை கிடுக்கிப் பிடி போட்டு அழுத்தவாரம்பித்திருந்தது. காஞ்சீபுரம் போய், கண் டெஸ்ட் செய்து கண்ணாடி போட்டுக் கொண்டும், மாற்றம் கொஞ்சம் கூட இல்லாமல் படுத்தியது தலைவலி. சிரிப்பு என்பது முற்றி-லுமாய் மறைந்து சிடுசிடுப்பே முகமாய் மாறியது. வ்ந்து கொண்டிருந்த ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களும் இவர் சிடுசிடுப்பை ஜீரணிக்க முடியாமல் ஒதுங்கிக் கொண்டனர். அவர்களுக்குத் தெரியுமா ஏன் இப்படி சிவனேசன் மாறினார் என்று? அப்படியே தெரிந்தாலும், அதை பாராட்டிக் கொண்டிருக்க யாருக்கு நேரமோ, நேசமோ இருக்கிறது?

சுத்தமாய் துடைத்து கடையை மூடினார் சிவனேசன். சொத்தைப் பிரிக்கச் சொல்லி வக்கீல் நோட்டீஸ் ஒரு புறம் வந்தது. இன்னொரு புறம் வள்ளியின் கடிதம் – யாரோ ஒருவன் பரட்டைத் தலையாய் அடிக்கடி வீட்டெ-திரே தென்படுகிறானாம். அவன் தான் சதாவோ என்று சந்தேகமாம். என்ன செய்வது என்று கேட்டிருந்தாள். ஒரு மனிதனை இத்தனை விதமாகவா பிரச்சினைகள் பிடுங்கித் தின்னும்? வீட்டை விற்று மகனுக்கு பங்கைக் கொடுத்து அவனை தலை முழுகுவதா, ‘எக்கேடும் கெட்டு எந்தப் பன்றியுடனோ சுற்று’ என்று கௌரியை விட்டு விடுவதா, அடுத்த வேளை சோற்றுக்கு என்ன வழி என்று ஏற்கனவே பிளந்து கொண்டிருக்கும் தலையை இன்னமும் பிளந்து கொள்வதா என்று இத்தனை குழப்பங்களிலிருந்தும் எப்படித்தான் விடுதலை? இப்படித்தான் என்று மேற்கூறிய அந்த தீவிர முடிவை எடுத்தார். ‘என்னய்யா செட்டியாரு கடைசீல இப்டி செஞ்சிட்டாரு, எவனுக்குத் தான் பிரச்சினை இல்ல?’ என்று பின்னால் நிச்சயம் இந்த ஊர் பேசும். பேசட்டுமே. தலைவலியும் ஜூரமும் தனக்கு வந்தால் தானே தெரியும்.

இரண்டே வரிகளில் கடிதம் ஒன்று எழுதி வைத்து விட்டு இரவோடு இரவாக சென்னைக்கு பஸ் ஏறினார் சிவனேசன்.

சென்னையில் கௌரியும் சதாவுடன் ஓடிப் போவதாக இரண்டு வரிக் கடிதம் ஒன்றை எழுதி தலையணை அடியில் வைத்து விட்டு, பெங்க-ளூருவுக்கு பஸ் ஏறினாள் – சதாவுடன் தான்.

வள்ளியின் கணவன் போலீஸ் ஸ்டேஷனில், மைனர் பெண்ணை சதா கடத்திக் கொண்டு போய் விட்டதாக புகார் ஒன்றைக் கொடுத்து விட்டு, கையோடு பாலுசெட்டி சத்திரத்துக்கு புறப்பட்டான். அங்கே விசாலத்தின் கூக்குரலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் எட்டிப் பார்க்க, அவள் சிவ-னேசனின் கடிதத்தை கையில் வைத்துக் கொண்டு தலைவிரி கோலமாய் அரற்றிக் கொண்டிருந்தாள்.

– – – – – – – – – – – – –

வெண்மை, வெண்மை எங்குமே வெண்மை. ஆனால் புகை மூட்டமான வெண்மை. இலேசாக எங்கோ ஒரு அழுகுரல், ஒரு விசும்பல். அப்பா ! ஒரு வழியாய் தற்கொலை முயற்சி வெற்றிகரமாய் முடிந்து விட்டது. இனி எல்லாம் சுகமே. ஆனால் உலக வாழ்க்கையை எப்படி முடித்துக் கொண்டோம் என்பது நினைவுக்கு வரவில்லையே என்று நெற்றியை சுருக்கிக் கொள்கிறார் சிவனேசன். சரி, இறந்த பிறகு எப்படி நெற்றியை சுருக்கிக் கொள்ள முடிகிறது என்று ஆச்சரியப் பட்டவர், ‘ரொய்ங்’ ‘ரொய்ங்’ என்று இடிக்கும் தலைவலியும் போய் விட்டதை உணர்ந்து அப்பாடா எனப் பெருமூச்சு விடுகிறார்.

‘நர்ஸம்மா, இங்க வாங்க, இவருக்கு நெனவு திரும்பிடிச்சு பாருங்க, சீக்கிரம் வாங்க’

என்னது? சகலை மாணிக்கத்தின் குரலில்லையா இது ! ஓ, புகை மூட்டமான அந்த வெண்மை, விட்டமா? ஆமாம், அதோ ஒரு ஃபேன் ஓடுவது கூட தெரிகிறதே. கண்ணை இன்னும் சற்றுத் திறந்து பார்க்கிறார் சிவனேசன். என்றால், நான் இன்னும் உயிருடன் தான் இருக்கிறேனா, விஷம் சரியாக வேலை செய்யவில்லையா? முதலாவது நான் விஷம் தான் சாப்பிட்டேனா? ஏன் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன்? யாரோ நெற்றியை நீவுகிறார்களே.

‘என்னங்க, இப்படி பண்ணிட்டீங்க, என்ன எப்படி தனியா விட்டுட்டுப் போக மனசு வந்திச்சு…’

விசாலம் ! – இப்போது அவருக்கு எல்லாம் மெதுவே மெதுவே நினைவுக்கு வந்தது. அருண் மெடிக்கல் ஸ்டோரில் கெஞ்சிக் கூத்தாடி தூக்க மாத்திரை வாங்கியது, அதை விசாலத்திற்குத் தெரியாமல் ஒளித்து வைத்தி-ருந்தது, இதுதான் இவள் முகத்தை கடைசியாகப் பார்ப்பது என்று விசாலத்-திற்கு எங்கே தன் முகம் காட்டி விடுமோ என பயந்து, ‘மதியம் வந்திருவேன், சாப்பாடு வச்சிரு’ என்று சர்வ ஜாக்கிரதையாக குரல் உடையாமல் சொன்னது, பஸ்ஸில் தலைவலி வழக்கம் போல் ஆக்ரோஷமாய் பிளந்தது… பிறகு சுங்குவார் சத்திரம் தாண்டி.. தாண்டி… என்ன ஆயிற்று..? மூளையை கசக்கிப் பார்க்கிறார்… ஓ.. பெருஞ்சத்தத்துடன் யாரோ என்னை பிடித்துத் தள்ளி முகத்தை கீழே மோதினார்களே.

விழியோரத்தில் அவரை அறியாமலே கண்ணீர் வழிந்து தலையணையை நனைத்தது. ‘கௌரி எங்கேம்மா’ என்று கிணற்றுக்-குள்ளிருந்து கேட்டார்.

விசாலம் எதுவும் பேசாமல், தலைப்பால் வாய் பொத்தி விசும்பி, அடுத்த கட்டிலை காட்டுகிறாள்.

‘கௌரி எதற்காக ஆஸ்பத்திரியில்?’

பேண்டேஜின் உள்ளிருந்து கொஞ்சமாய் கௌரி தெரிந்தாள். கண் மூடி இருக்கிறாளே, ஐயோ என்ன ஆயிற்று இவளுக்கு, சீக்கிரம் யாராவது சொல்லுங்களேன், உயிரோடு தானே இருக்கிறாள்?

‘பயப்படாதீங்க சகலை, நல்ல வேளையா ஒன்னும் ஆவலே கௌரிக்கு, சதாதான் செத்துப் போய்ட்டான். பத்து நிமிஷத்துக்கு முன்னாடி தான் குளிரடிக்குதுன்னு ஜன்னல் பக்கத்துலேருந்து இந்தப் பக்கம் வந்து உக்காந்தாளாம் கௌரி. சதா ஜன்னல் பக்கம் உக்காந்திருக்கான். நீங்க மெட்ராஸ் வந்த பஸ்ஸும், இவுங்க போன பெங்களூரு பஸ்ஸும் தான் மோதிக்கிடிச்சு.. இந்த ஆக்ஸிடெண்டு ஆவலேன்னா என்ன ஆயிருக்கும்னு நினச்சுப் பாக்கவே கொல நடுங்குது சகலை’ என்று இன்னும் என்னென்-னவோ பேசிக் கொண்டே போனான் சிவனேசனின் சகலை மாணிக்கம்.

அக்கூ பங்க்சர் பற்றி நிரம்பத் தெரிந்த டாக்டரைக் கேட்டிருந்தால், சிவனேசனின் ஒற்றைத் தலைவலி அந்த விபத்தோடு மாயமாய் மறைந்ததற்கு, அவர் காலில் எங்கோ குத்திய கண்ணாடியைக் காரணமாய் காட்டியிருப்பார். காஞ்சீபுரம் போன சர்க்கரை லாரியை முந்தப் போன பெங்களூர் பஸ், எதிரே வந்த சென்னை பஸ்ஸோடு மோதியதும் அல்லாமல் அந்த சர்க்கரை லாரியை-யும் கவிழ்த்ததனால், அந்த ஊர் ஜனங்கள் அதை ‘சர்க்கரை ஆக்ஸிடெண்டு’ என்றே குறிப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு மட்டுமா, சிவ-னேசனுக்கும் அது தித்திப்பான ஒரு விபத்துதானே, இல்லையா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *