(1956ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அன்புமிக்க சகோதரி சுஜாதா,
சேலைகள், ஆடைகள் நாம் வாங்கினால் விலை கூடப் போய் விடும். ஆடவர்களையே வாங்கி விடச் சொல்லி விடலாமா யென நீ கேட்டிருக்கிறாய்.
அது இன்னும் ஆபத்துத்தான். பெண்களுக்கு வேண்டிய சேலைகளை வாங்குவதில் ஆண்களுடைய திறமை மிகக் குறைவு. நூற்றுக்கொருவர் புடவைகளின் நிறம், தரம் தெரிந்தவர்களாக இருக்கலாம். அவ்வளவே.

சென்ற வருஷம் என் கணவரிடம். “தீபாவளிக்கு உங்கள் கையால் எனக்குப் புடவை வாங்கிக் கொடுக்க வேண்டும்” என்று சொல்லி வைத்தேன். நுணலும் தன் வாயால் கெடுமல்லவா? வழக்கமாக நான்தான் வாங்கி வைப்பேன். ஆசையாக நூற்று இருபது ரூபாய்க்குப் புடவையை வாங்கி வந்து என் கையில் கொடுத்தார். அதைப் பார்த்ததும் எனக்குத் தலையைச் சுற்றியது. என் சிநேகிதி ஒரு வாரத்துக்கு முன் தன் மாமா பெண் கல்யாணத்துக்கு வாங்கிக் கொடுத்த மாம்பழக் கலர் புடவை நன்றாக இல்லை என்று தெரிந்து, அந்தக் கடையில் கொடுத்திருந்தாள். அதை அவர்கள் நாற்பது ரூபாய் விலை போட்டு எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதே புடவையை என் கணவர் நூற்று இருபது ரூபாய் கொடுத்து வாங்கி வந்திருக்கிறார்!
“எப்படிப் புடவை? இந்த ஊரில் இது ஒன்றுதான் இருக்கிறது என்று சொன்னான். பணத்தையும் கொடுத்துவிட்டேன்” என்றார். “ஆமாம்! இந்த மாதிரி சேலை இந்த ஊரில் உங்கள் ஒருவருக்குத்தான் அகப்படும்” என்று நானும் பதில் சொல்லி வைத்தேன்! ஒரு சமயம் மதுரையில் இருக்கும் என் உறவினர் வீட்டுக்குப் போயிருந்தேன். வீட்டு எஜமானர் பெரிய வக்கீல். நல்ல வருமானம். நான் போயிருந்த சமயம் விருது நகருக்கு வழக்கு விஷயமாகப் போயிருந்தார். திரும்பி வரும் போது இரண்டு மூட்டை துவரம்பருப்பு வாங்கி வந்தார். (அவருடைய கட்சிக்காரர் பணம் கொடுத்திருக்கலாம்!) பருப்பு குண்டு குண்டாக ஒரு கல், மண் இன்றி மிகவும் ருசியாக இருந்தது. அந்த அம்மாளிடம், “உங்கள் கணவர் சாமான்கள் நன்றாக வாங்குகிறார்” என்று பெருமையாகச் சொன்னேன். “அதற்குள் முடிவு கட்டி விடாதே! எது நிறையத் தேவை? எது கொஞ்சமாகத் தேவையென அவருக்குத் தெரியாது” என்றாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் வெளியூருக்குப் போயிருந்தார். திரும்பி வரும்போது வேலைக்காரன் இரண்டு கோணி மூட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தான். பிரித்துப் பார்த்தால் அவ்வளவும் கத்திரிக்காயாக இருந்தது.
கூடிய மட்டும் நாம் இருக்கும் ஊரில் கிடைக்கும் சாமான்களைக் கொண்டே காரியங்கள் நடத்துவது சிறந்தது. சில சமயம் அயலூரில் நன்றாக அல்லது மலிவாகக் கிடைக்கும் பொருள்களை வாங்கித் தரச் சொல்லும் சந்தர்ப்பங்கள் நேரலாம். அவர்கள் நமக்காகச் சிரமப்பட்டு வாங்கிக் கொடுத்தால், அவற்றை அவர்கள் மனம் நோகக் குற்றம் சொல்லக் கூடாது. குற்றமாக இருந்தாலும் நாம் பாராட்டித்தான் சொல்ல வேண்டும்.
வீட்டிலிருந்து கிளம்பும் போதே என்ன சாமான்கள் தேவை யென்று திட்டமிட்டுக் கொண்டு போவது நலம். கடைக்குப் போய்க் கவர்ச்சிகரமான பொருளை வாங்கி விட்டு, வீட்டுக்குத் தேவையானதை வாங்காமல், திரும்பி விட்டால் அதன் பலனாகச் சிரமத்தை அநுபவிக்க நேரிடும். காய்கறிகள் ஆடவர்கள் வாங்கினால் பார்த்து வாங்க மாட்டார்கள். வேலைக்காரர்கள் வாங்கினால் விலை அதிகமாய்க் கொடுப்பார்கள். அல்லது நமக்கு அதிகமாக்க்கணக்கு கொடுப்பார்கள். பம்பாய் நகரத்தில் நல்ல உடன்படிக்கை இருக்கிறது. ஒரு கட்டடத்தில் குடியிருக் கும் அவ்வளவு பேருக்கும் சேர்த்து ஒரு சகோதரி காய்கறிகள் வாங்கி வருகிறாள். அடுத்த முறையில் மற்றொரு சகோதரி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுகிறாள். இது சிக்கன முறையையும் அதே சமயம் ஒற்றுமையையும் வளர்த்து வரும்.
இப்படிக்கு,
பூமாதேவி
– தேவியின் கடிதம், கல்கியில் 1956-இல் தொடங்கிய தொடர்.