திட்டம் தவறிப்போச்சு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2020
பார்வையிட்டோர்: 3,286 
 
 

(1989ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பேரும் குண இயல்புகளும் அதிசயமாக ஒத்துப் போகிற அபூர்வப் பிறவிகளில் பரிபூரண ஆனந்தம் என்பவரும் ஒருவராவார்.

வளர்ந்து பெரியவன் ஆனதும் நம்ம பிள்ளையாண்டான் இப்படி இப்படி நடந்து கொள்வான் என்பதை முன் கூட்டியே தீர்க்க தரிசனம்” ஆக உணர்ந்து, பையனுக்கு அந்தப் பெயரை குடும்பத்தின் பெரியவர்கள் இட்டார்களா? அல்லது, நமக்கு இந்தப் பெயர் இருப்பதால் நாம் பூர்ணமாக எதையும் செய்ய வேண்டும், எதிலும் பரிபூரணம் காண்பதே நமது வாழ்க்கை தர்மமாக இருக்க வேண்டும் என்று பையனே தீர்மானித்து அப்படி ஒரு கொள்கையை கைக்கொண்டு வளர்ந்தானா? இது தீர்மானிக்க முடியாத ஒரு விஷயம்.

எப்படியோ, சின்ன வயசிலிருந்தே, “செய்வன திருந்தச் செய்” என்பது மட்டுமல்ல; எதையும் முழுமையாக, “பெர்பெக்ட் ஆகச் செய்ய வேண்டும் என்பதில் கருத்தாக இருந்தான் அவன்.

பரிபூரணானந்தன் என்று இலக்கணப்படி எழுதுவது சிரமமாக இருக்கிறது என்று அவன் பரிபூரண ஆனந்தன் என்றே எழுதியும் சொல்லியும் வந்தான்.

அவரவர் பெயரை சுருக்கி வைத்துக் கொள்வது ஒரு நாகரிகமாக – ஸ்டைலாக – பாஷன் ஆகக் கருதப்பட்டு வந்த காலத்திலும் சூழ்நிலையிலும் வசித்துக் கொண்டிருந்த போதிலும், அவன் பி. ஆனந்தன் என்றோ, பி.ஏ. தன் எனவோ தனது பெயரை சுருக்கிக் கொள்ள ஆசைப்பட்டானில்லை.

ஆனாலும், மற்றவர்கள் அவனை அவரவர் இஷ்டம் போலவும் சவுகரியம் போலவும் பெயர் சொல்லி கூப்பிடு வார்கள். “பரி” என்று அழைத்தார்கள் பலர். “பூரணம்” என்கிறார்கள் சிலர். “ஆனந்த்” என்றும் “ஆனந்தன்” என்றும் கூப்பிடுவார்கள் அநேகர். ஒருவன் மட்டும் “பரிபூரண ஆனந்தன்” என்று வாய்நிறைய உச்சரிப்பது வழக்கம். அவனையே தன் அருமை நண்பனாக மதித்தான் ஆனந்தன். படிக்கிற காலத்திலேயே அவன் அனைத்துக் காரியங்களையும் ஒழுங்காகவும் சரியாகவும் செய்து முடிப்பதில் அதிக அக்கறை காடடினான்.

இந்தப் பழக்கம் பிற்காலத்திலும் நிலைபெற்று வளர்ந்தது. “எடுத்த காரியம் எதுவானாலும் அதை பெர்பெக்ட் ஆகச் செய்து முடிக்கணும். இது என் பிரின்சிபிள்” என்று அவன் அடிக்கடி சொல்வது வழக்கம். சொல்கிறபடி செய்வது அவனுடைய பழக்கம்.

வேலை பார்க்கிற இடத்தில், பலரும் கடியாரத்தைப் பார்த்த படி இருப்பார்கள். ஐந்து மணி ஆகி விட்டதா என்று அடிக்கடி உற்று நோக்குவார்கள். ஐந்து ஆவதற்கு ஐந்து நிமிடங்கள் இருக்கிறபோதே, செய்த அலுவல்களை அப்படி அப்படியே போட்டு விட்டு, “அவசரம் ஒண்ணும் இல்லே. நாளைக்கு செய்யலாம் என்று மேசையின் இழுப்பறைக்குள் தள்ளிப் பூட்டி விட்டு, கிளம்புவதற்கு ரெடி ஆகிவிடுவார்கள். டாண் என்று ஐந்து மணிக்கெல்லாம் மிடுக்காக வெளியே நடப்பார்கள்.

ஆனால், பரிபூரண ஆனந்தன் அப்படி எல்லாம் நடந்து கொள்ள மாட்டான். அன்றைய அலுவலைப் பூரணமாக முடித்த பின்னரே புறப்படுவான். ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் தாமதமானாலும் பரவாயில்லே; எடுத்த வேலையை பெர்பெக்ட் ஆகச் செய்த முடிக்க வேணும் என்பான். மற்றவர்களும் அவ்விதம் செய்ய வேண்டும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், மற்றவர்கள் அப்படிச் செய்ய முன்வரவில்லை. அவனை அப்பாவி, “பைத்தியாரன்” (பைத்தியக்காரன்) என்றும் கருதினார்கள்.

“இப்ப இப்படித்தான் இருப்பாரு. கல்யாணம் ஆகி விட்டால் இவரும் வழிக்கு வந்துவிடுவாரு. இவருடைய சுத்தம் – ஒழுங்கு – பூரணம் – பெர்பெக்ட்தனம் எல்லாம் வீட்டுக்கு வந்து சேருகிற அம்மாளிடம் பலிக்குமா என்ன? பெண்கள் பெரும்பாலும் அவரவர் இஷ்டம் போல் மெத்தனமா, சோம்பேறித்தனமாக, டெர்பெக்ட்தன்மை எல்லாம் பார்க்காமல் தான் காரியங்கள் பண்றாங்க, பரிபூரண ஆனந்தனுக்கு ஒருபரிபூரண ஆனந்தியா வரப் போறா! பார்ப்போமே!” என்று நண்பர்கள் கிண்டல் செய்வதும் சகஜமாகி விட்டது.

அது அவனை யோசிக்க வைத்தது. கவனிக்கும் படி செய்தது. பெண்களின் போக்குகளை, இயல்புகளை, செயல் திறன்களை, பேச்சுகளை ஸ்டடி பண்ணும் படி தூண்டியது. இறுதியாக ஒரு முடிவுக்கு வரும் படி பண்ணியது.

“நமக்கு ஒத்து வரக்கூடிய பெண் கிடைக்க மாட்டாள். நம்மை அவள் வழிக்கு இழுத்துவிடக் கூடியவளாக பெண் இருப்பாள். நம்முடைய பிரின்சிபிள், கொள்கை, சுபாவம் எல்லாம் எவளோ ஒருத்தியினால் மிதிபட்டு, நம்மிடமிருந்து அகற்றப்பட்டு. சேச்சே, அது சரிப்படாது. ஆகவே நமக்கு நமது பூரண ஆனந்த வாழ்க்கைத் துணை அவசியம் இல்லை. துணைவி இல்லாமலே நம்முடைய வாழ்க்கை பெர்பெக்ட் ஆக இயங்கும்.

அவனுடைய சிந்தனை காட்டிய வழி இது. அதன் படியே நடந்தான் அவன். அதற்காக அவன் வருத்தப்பட நேர்ந்தது.

அதிகாலையில் நாலரை மணிக்கு எழுந்தான். ஒன்றரை அல்லது இரண்டு மைல் தூரம் உலா போனான். குளிர்ந்த நீரில் குளித்தான். ஒரு அம்மாள் பதிவாகச் சில பேருக்கு சமைத்துப் போட்டு வாழ்க்கை நடத்திய தனிச் சாப்பாட்டு விடுதியில் நேரம் தவறாது சாப்பிட்டான். வேலைகளை ஒழுங்காகக் கவனித்தான். ஒய்வு நேரங்களில் பத்திரிகைகள், புத்தகங்கள் படித்தான். சில நாட்களில் நண்பர்களோடு சுற்றுலா போய் வந்தான். சினிமா பார்த்தான். சந்தோஷமாக இருந்தான்.

காலம் ஓடியது. பரிபூரண ஆனந்தர் பெரியவனாகி, வேலையிலிருந்து ஓய்வு பெற்று, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தார். தனி உணவு விடுதி நடத்திய அம்மாள் இறந்துவிட்ட பிறகு, ஆனந்தர் தனிப்பட்ட “மெஸ்”களில் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அவருடைய உணவுப் பழக்கம் வசதியாக அமைந்துவிட்டது.

காலையில் காப்பியும் பிஸ்கட் தினுசுகளும். காப்பியை அவரே தயாரித்துக் கொண்டார். மதிய உணவு ஒரு ஒட்டலில். கும்பல் சாடுவதற்கு முன்னரே போய் சாப்பிட்டு வந்து விடுவார். மாலையில் காப்பி மட்டும். இரவில் பால், ரொட்டி, பழங்கள், ஆகவே, ஆரோக்கியமாகவே இருந்தார் அவர்.

இருந்தாலும், மரணம் பற்றிய நினைப்பு ஆனந்தரின் உள்ளத்தில் நிலைத்து நின்றது. தனது மரணத்துக்கும் முன்னேற் பாடுகள் செய்து வைக்க வேண்டும் என்று அவர் எண்ணினார்.

தான் இறந்ததற்குப் பிறகு உனது உடல் முழுமையாக, அப்படியே அடக்கம் செய்யப் படவேண்டும் என அவர் ஆசைப்பட்டார். ஆகவே, தனது சடலத்தை எரியூட்டாது, சமாதியில் பத்திரமாக வைக்க வேண்டும் என்று தீர்மானித்தார். அதற்கான ஏற்பாடுகளும் செய்தார்.

தனது வீட்டின் பின்புறத் தோட்டத்தில், நல்லமுறையில் சமாதிக் குழிதோண்டி, சிமிண்டுனால் பூசி வைத்தார். உயிரோடு இருக்கிற போதே தனக்கான சமாதிக் குழியையும், சுற்றுப்புற கட்டுமான வேலைகளையும் சீராகவும் அமைத்து, தானே கண்டு மகிழ முடிந்ததில் ஆனந்தருக்கு ஒரு பூரண திருப்தி ஏற்பட்டது. இதர செலவுகளுக்குத் தேவைப்படக் கூடிய பணத்தையும் ஒரு பேங்கில் போட்டு வைத்தார் அவர். இறுதிச் சடங்குகள் எப்படி எப்படி நடத்தப்பட வேண்டும் என்று திட்டமிட்டு, விளக்கமா கவும் எழுதிவைத்ததார். முக்கியமானவர்களிடம் இவை பற்றிச் சொல்லி, தக்க ஏற்பாடும் செய்தார். தன்னுடைய வாழ்க்கையில் முழுமையான திருப்தியோடு நாட்களைக் கழிக்கலானார் ஆனந்தர்.

வாழ்க்கை விளையாட்டுப் புத்தி உடையது. அல்லது, வாழ்க்கையை இயக்குகிற சக்தி விளையாட்டுத்தனம் கொண்டது என்று சொல்லலாம். அது பலபேரோடு குரூரமாக – ஒரு வக்கிரத் தன்மையோடு – விளையாடி விடுகிறது. பரிபூரண ஆனந்தர் விஷயத்திலும் அப்படித்தான் அது நடந்து கொண்டது.

அறுபத்து நான்காவது பிறந்த நாள் அன்று. ஆனந்தர் மகிழ்ச்சியோடு காலை உலா போய்க் கொண்டிருந்தார். நடைமேடை மீது தான் போனார்.

ஆனாலும், வேகமாக வந்த லாரி ஒன்று தடம் தவறித் தாறுமாறாக ஓடி, பிளாட்பாரத்தின் மீது ஏறி, ஆனந்தரை தாக்கியது. அவரைக் கீழே தள்ளி நசுக்கி, ஒரு மரத்தின் மீது மோதிவிட்டு நின்றது.

உரியமுறைப்படி காரியங்கள் எல்லாம் நடைபெற்றன. ஆனந்தரின் உடல் சிதைந்து சீர்குலைந்து போயிருந்தது. இவர் தான் பரிபூரண ஆனந்தர் என்று அடையாளம் கூடக் காண இயலாத விதத்தில் அவரது முகம் துவையலாகியிருந்தது பாவம்!

– அரும்பு 1989

– வல்லிக்கண்ணன் கதைகள், முதற் பதிப்பு: 2000, ராஜராஜன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *