வீற்றிருந்தாள் என்ற வார்த்தைக்கு அரசியாக அல்லது வேறு ஏதோ அதிகாரம் உள்ளவள் அதிகாரம் செலுத்துவதற் காகத் தன் அதிகார பீடத்தில் தன் பணி மக்கள் சூழ உட்கார்ந்திருந்தாள் என்பது தான் சாதாரணப் பொருள்.
அமீனா வீற்றிருந்தாள் – இருந்தாள். அதுவும் வெண் மணல் விரித்த கடற் கரையை அடுத்து நிற்கும் தாழை மரங் களுக்குக் கீழ் ஒரு மகாராணியாக வீற்றே இருந்தாள்.
அவள் கொலுவிருக்கையைச் சூழ்ந்து நின்ற தாழை மரங்கள் அவளைக் காத்து நிற்கும் வேழப்படையினர், மந்திரி பிரதானிகள்.
கந்தலான அவளுடைய ஆடை களையும் மீறி நின்ற அவளுடைய தனி அழகு ஒன்று தான் அவளுடைய அணிகள் தாதியர் சேடியர் எல்லாம்….
வயோதிபனாகிய நான் சில சமயம் மாலை வேளைகளில் என் வயிற்றின் பரு மனைக் குறைத்துக் கொள்வதற்காகக் கடற்கரை ஓரமாகக் கால்நடையாகச் செல்வதுண்டு.
என்றோ ஒரு நாள் கடற்கரை ஓரமாகச் சென்றபொழுது, அமீனா தாழை மரங்களின் கீழ் வெண்மணலில் கொலுவிருக்கும் அழகைக் கண்டேன்.
தாழை மரங்களின் மடல்கள் வெண்மணல் அருகில் நின்று அசையும் அழகைப் பலர் அநுபவித்திருக்க மாட்டார்கள். வெண் மணல் அமீனாவின் முகம், தாழை மடல்கள் அவள் கருங்கூந்தல். அவள் தன் கழுவாத கருங்கூந்தலில் சொருகியிருந்த மணமில்லாத வெண்மலர் தாழை மடல்களின் மத்தியில் மிளிரும் இளம் வெண் தாழை முகை….
அவள் என்னைக் கண்ணெடுத்துப் பார்க்கவில்லை. யுத்தத் துக்குச் சென்ற தன் இளம் காதலனின் வருகையை எதிர்பார்த்து
வீற்றிருக்கும் வீரமகள் போல் சமுத்திரத்துடன் போராடி வயிற்றுப் பிழைப்புக்கு மீன் கொண்டு வரச்சென்ற தன் கிழத்தந்தை உமறு நையினாவின் வள்ளம் வருவதை எதிர்பார்த்துத் தாழை நிழலில் வீற்றிருந்தாள்.
இந்த ஏழைச் சிறுமி அரசிபோல் வீற்றிருப்பதைக் கண்டு நான் அவ்விடத்திலேயே நின்றுவிட்டேன். அவளுடைய பெயர் எனக்குத் தெரிந்ததொன்றுதான். கொலுவிருந்த கோமகளின் மனத்தைக் குழப்பவேண்டுமென்று அன்று காலை சைத்தான் என்னைத் தூண்டினானோ என்னவோ?
“அமீனா!”
அவள் பதிலே கூறவில்லை . அதனால் சிறிது உரத்து அழைக்க வேண்டி நேரிட்டு விட்டதே என்று நான் மனம் கலங்கி னேன். இருந்தும்……
“அமீனா!”
அவள் அசையவில்லை . அவள் அரசி. அக்பர் பாதுஷாவின் அரண்மனையில் பிறக்க வேண்டியவள் இந்த ஏழைச் செம்பட வனின் மகளாய்ப் பிறக்க நேர்ந்துவிட்ட துயரத்தை எண்ணிக் கொண்டு அவ்விடத்திலேயே நின்றேன். அருகில் இருந்த குடிசையில் இருந்து அமீனாவின் தாய் குரல் கொடுத்தாள்.
“அமீனா மகள்!”
அமீனா பதில் கூறவில்லை .
சேனைகளின் அணிவகுப்பைப் பார்வையிடுபவள்போல நீலக்கடல் மேல் புரண்டு அலைமோதும் வெண்ணிற அலைகளைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த ஏழைச் சிறுமி – ஆ! மன்னிக்க வேண்டும் – அந்த அரசி!
“அமீனா வாறியா! அல்லாமல் போனால் கம்புகொண்டு வரவா?” என்று குடிசையில் இருந்த தாய் மறுபடி குரல் கொடுத்தாள். அமீனா தலையை ஓய்யாரமாக ஒரு தரம் அரசியின் ஆணவத் தோடு அசைத்துக் கொண்டு மறுபடி கடலின் அடிவானத்தைப் பார்ப்பதில் இலயித்து விட்டாள்.
“அமீனா வரமாட்டையா?”
“எனக்கு ஒண்ணா !”
“கம்புதான் கேக்குது உனக்கு இப்ப!”
“வாப்பாடை வள்ளம் இன்னும் வரவில்லை.”
அரசிகள் அழுவதில்லை. ஆனால் அமீனாவின் கண்ணில் சற்றே கண்ணீர்ச்சாயல் படிந்திருந்ததுபோல் எனக்குப்பட்டது. குறிப்பிட்ட இடத்துக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வந்து சேராத போலிக் காதலனை நினைத்து வாடும் அரசியின் ஏக்கம் அதில் தொனித்தது.
“உன்ரை வாப்பாவைக் கடல் விழுங்காது, வந்திடுவார். வாடி இங்கே !”
“ஒண்ணா !”
அமீனா தாயின் மிரட்டல்களுக்கு அசைந்து கொடுக்க வில்லை. தாய் கம்பு கொண்டு அடித்தாலும் கூட அசைய மாட்டாள் என்று எனக்குப்பட்டது. அவள் அரசி!
நான் கடல் ஓரமாக நண்டுகள் வளைகளில் புகுந்தும் வெளிவந்தும் அலைகளுடன் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நடந்தேன்.
அரசி போலக் கொலுவீற்றிருப்பவள், சாதாரண மனித னாகிய என்னுடன் இலேசில் பேசுவாளா என்று எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
இலங்கையின் கீழ்க்கரையை அடுத்த ஓர் ஊரில் செம் படவர்கள் வாழும் பகுதி இது. தாழை மரங்கள் செறிந்து அடம்பன், கொடி பசேல் எனப் படர்ந்திருந்த கரையில் மெத்தென்ற வெண் மணல் பரப்பியிருந்த விளிம்பை ஓலமிடும் வெண்நுரை தள்ளும் ஆயிரம் நாக்குகளைப் பயங்கரமாய் நீட்டித் தன் பெருவயிற் றுக்குள் விழுங்க எத்தனிப்பதுபோலச் சிலசமயங்களிலும், தாயின் கரங்கள் மெதுவாக அசைந்து மகவைத் தாலாட்டுவது போலச் சில சமயங்களிலும் இந்து மகாசமுத்திரம் தன் எண்ணம் போல் கீழ்க்கரையுடன் தொடர்பு கொண்டிருந்தது.
மீன்பிடி வள்ளங்கள் தங்கு துறையை நெருங்கியவுடன் செம்படவர்களினதும், மீன் வாங்கும் வியாபாரிகளினதும் குரல் ஒலி கேட்டது. வந்த வள்ளங்கள் கரையில் தூங்கின. ஈரமான வலைகள் தென்னை மரங்களின் இடையில் தொங்கின. நாய்கள் வெட்டி வீசப்பட்ட மீன் வால்களையும் நீச்சல் இறகுகளையும் மோப்பம் பிடித்து ஒன்றை ஒன்று பார்த்து உறுமின.
நான் கடலில் அடிவானத்தில் வரும் சூரியனையும், எல்லை இல்லாத ஒரு நீலப்பட்டை விரித்துவிட்டது போன்ற கடலின் அழகையும் பார்த்தபடி நின்றேன்.
தொலைவிலே அடிவானத்தில் ஏதோ கூர்மையாக ஒன்று என் கண்ணில் பட்டது. என் அருகில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அமீனா ஓடி வந்து நின்றாள்.
“அமீனா!”
அரசியாகக் கொலுவிருந்தவள் இப்பொழுது குழந்தையாகி மலர்ந்து சிரித்த முகத்துடன் நின்றாள்.
“வாப்பா வாறாங்க.”
“எங்கே ?”
“அங்கே பாருங்க வாப்பாடை வள்ளம்!”
“அது எப்படி உனக்குத் தெரியும்?” –
“உங்களுக்கு ஒண்டும் தெரியாது போங்க! நம்மட வாப்பாட வள்ளம் நமக்குத் தெரியாதா? பழுப்புப் பாய் தெரிய லையா? வாப்பா வந்திட்டாங்க!”
பன்னிரண்டு வயதுச் சிறுமியான அவள் தன் வயதுக்குரிய நாணத்தையும் மறந்து அந்த வெண்மணலிலே சீவாத கருங்கூந்தல்
காற்றிலே அசைய, குதித்து ஆடத் தொடங்கிவிட்டாள்.
2
அது அமீனா போன்ற அரசிகள் உலவிவரும் இடம் மட்டும் அல்ல. பளபளக்கும் துவிச்சக்கர வண்டிகளில் மாலை வேளை களில் அந்த வட்டாரத்தின் இளவல்களும் காடையர்களும் முகப் பவுடர் பூசிக் கைலேஞ்சிகளில் தெளித்துவிட்ட மலிந்த வாசனைத் தைலங் கமகம என்று மணம் வீச ‘காற்று’ வாங்கவரும் இடம் கூட!
அவர்கள் அமீனாவை ஓரக்கண்ணால் பார்த்துக் கொள் வார்கள். அவ்வளவுதான். தாழை மரத்தின் கீழ் அவள் கொலு இருக்கும் கம்பீரமே எவனையும் பயமுறுத்திவிடுமே! –
அதற்கு மேலாக உமறு நைனாவின் மேல் அச்சம் அவர்களுக்கு!
உமறு நைனாவின் வாழ்நாளில் அரைநாள் கடலில் கழிந்து விடும். தன் ஒரே மகள் அமீனாவைப் பொறுத்தமட்டில் வற்றுக் கடலின் அமைதியையும் அழகையும் அவனிடம் காணலாம். அவன் இவளுடைய கைப்பொம்மையோ அல்லது இவள் அவனுடைய கைப்பொம்மையோ என்று பிரித்துக் கூறமுடியாத படி தந்தைக்கும் மகளுக்கும் இடையில் உள்ள பாசம் பின்னிப் பிணைத்து நிற்கும். ஆனால் மனைவி உட்பட மற்ற எவரைக் கண்டாலும் பெருக்கு நேரத்தில் புயலின் ரௌத்திரம் கொண்டு குமுறும் கடல், உமறு நைனா! அதனால் அந்த இளவல்ளுக்கு அமீனாவின் அருகில் செல்லவோ அவளுடன் பேசவோ அச்சம்.
என்றோ ஒருவன் வந்தான் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு. சைக்கிளின் மெழுகிட்டு மினுக்கிவிட்ட மேனியைப் போல, அவன் மேனியும் தலைமயிரும் கறுப்பாக மின்னின. அத்துடன் சைக்கிளின் வெள்ளிப் பாதங்களைப் போல அவன் பற்களும் மாலையின் மங்கலிலே பளிச்சிட்டன.
காற்றின் திசையும் நீரோட்டமும் மாறிவிட்டபடியால் மீன்பிடி வள்ளங்கள் காலையிற் சென்று மாலையில் திரும்பும் காலம் இது.
அமீனா, ஹுர்ணிமாப் பெண்களைப் போன்ற அழகிய அகன்ற செவ்வரி படர்ந்த கண்களுடன் அதே இடத்தில் அர சிருக்கை! முதலில் இவனைக்கூட அவள் கண்ணெடுத்துப் பார்க்க வில்லை . இவன் சைக்கிள் மணியைப் பலமுறை அடித்தான். தன் சேட்டின் கொலரை மேலே தூக்கிவிட்டுக் கொண்டான். தன் சுருண்ட தலைமயிரைக் கோதிவிட்டுக் கொண்டான். சில சமயம் தன் கௌரவத்தைக் காட்ட ‘கோட்டு’க் கூட அணிந்துகொண்டு வந்தான். இவன் பெயர் சம்சுதீன்.
அரசியாகிய அமீனா இவற்றிற்கு எல்லாம் அசைந்து விடுவாளா? ஆனால் அவளுடைய தந்தையான உமறு நைனா அசைந்துவிட்டான் போலும்! திருமணம் கடிதில் நடந்துவிட்டது.
மறுமுறை நான் கடற்கரைப் பக்கமாகச் சென்றபொழுது அமீனாவின் புன்னகை உதயசூரியனின் அழகு போல் என் மனத்தில் பட்டது. அவளுடைய கன்னங்கள் சில கடற்சிப்பிகளிற் காணும் ரோஜா வர்ணம் போல் – வெண் புறாக்களின் பாதங் களைப் போல – தமிழ்ப் பெண்கள் நெற்றியில் அணியும் குங்குமத் திலகம் போல் செந்நிறம் பாய்ந்தன…
3
அவள் அழகான மெல்லிய பட்டாடையைத் தலைமேல் முக்காடிட்டு அணிந்திருந்தாள். நடுவகிடு எடுத்து வாரிப் பின்னல் மயமாய் இருந்த கருங்கேசத்தில் ஒரு வெண்பூ!
அதன்பிறகு அமீனாவை நான் பல நாட்களாகப் பார்க்கவே யில்லை. வழமை போல் உமறுநைனா கடலுக்குப் போவான். அவன் இல்லாத வேளைகளில் அவன் மனைவி அயல் வீட்டுப் பெண்களுடன் சண்டை போட்டுக் கொண்டிருப்பாள்.
ஆனால் அமீனா அதிகம் வெளியே வருவதில்லை. அல்லது கணவனுடைய வீட்டில் போய் அடைபட்டு விட்டாளோ? அமீனாவின் அரசிருக்கை இல்லாத தாழை மரங்களும் வெண் மணலும் நீலக்கடலும் செக்கர் வானமும் உதயசூரியனும் எல்லாம் அழகற்றவையாக என் மனத்தில் பட்டன. தாழை மலர்களின் வாசனைகூட இனிமையாக இல்லை.
நான் கடற்கரைக்குப் போவதையே நிறுத்திக் கொண்டேன். இரண்டு ஆண்டுகள் ஓடி மறைந்தன.
4
ஏதோ ஓர் எண்ணத்தில் ஒருநாள் மாலை முந்திய வழமை போல் கடற்கரைக்குச் சென்றேன். அன்று எனக்கு ஓர் அற்புதம் காத்திருந்தது. போகும்பொழுது தாழைமலர்களின் வாசனை வீசியது. வெண்மணல் முத்துப்போல் ஒளிவீசியது.
மேற்கே அஸ்தமிக்க ஆயத்தமாகும் சூரியனின் ஒளி கீழ் வானத்தில் நீலக்கடல்களின் மேற் படிந்து செக்கர் வானம் செய் திருந்தது. அழகில்லாமல் இருந்த கடற்கரை இன்று அழகு பெற்றுத் தோன்றுவதேன் என்று நினைத்துக் கொண்டு நடந்தேன். அமீனா அதே பழைய தாழைமரத்தின் கீழ் உட்கார்ந்திருப்பதைக் கண்டு அப்படியே நின்றுவிட்டேன். ஆமாம்! உட்கார்ந்துதான் இருந்தாள். – வீற்றிருக்கவில்லை ! அவளுடைய கூந்தல் ஏதோ ஒரு மாதிரி யாகச் சீவி முடிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவளுடைய முகத்தில் முந்திய அரச கம்பீரமும் ஆணவமும் இருக்கவில்லை . அவளுடைய கூந்தலில் தாழை மடல்களில் படர்ந்திருந்த கருமையான அழகில்லை. அதன் மத்தியில் வெள்ளை மலர்கூட இல்லை.
அவளுடைய மடியில் ஒரு குழந்தை கிடந்தான்.
கொலுவிருந்த பூமகள் கூனிக் குறுகி உட்கார்ந்திருப்பதைக் கண்டு நான் அவ்விடத்திலேயே நின்றுவிட்டேன்.
“அமீனா!”
“ஐயா !”
“ஆம், எங்ஙனம் இருக்கிறாய் மகளே?”
“ஏதோ இருக்கேன்.”
“உன்னுடைய மடியிற் கிடப்பவன் உன்னுடைய மகனா?”
“ஓம் ஐயா!”
“உன்னுடைய வாழ்வை மலர்வித்த அவனுக்கு அழகான பெயர்தான் நீ வைத்திருப்பாய் என்று நினைக்கின்றேன். நீ இந்த இடத்தில் ஒரு சக்கரவர்த்தினி போல் இருந்தாய்! அதனால் அவனுக்கு அக்பர் என்று பெயர் சூட்டியிருப்பாய் என்று நம்பு கின்றேன். நான் உன்னை அக்பர் பாதுஷாவின் மகளாகக் கண்டவன் என் கற்பனையிலே!” என்று மேன்மேலும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தேன்…
அவள் கன்னங்கள் நாணத்தினால் சிவந்தன. செந்தழலைச் சாறாக்கி வர்ணம் கொடுத்தது போல அவள் தரையை நோக்கி னாள். அரசிகள் தரையை நோக்குவதில்லை என்பது எனக்குத் தெரிந்துதான் இருந்தது. ஏதோ குழந்தை என்ற எண்ணத்தில் மறுபடியும் நான் அவளிடம் பேசினேன்.
“அமீனா! என்ன இந்தக் கிழவனிடமா உனக்கு நாணம்? ஆனால் எங்கே உன் கணவன்?”
அவள் என்னை நிமிர்ந்து நோக்கினாள் ஒரு கணம். அவளுடைய செவ்வரி படர்ந்த கண்களிலே தேங்கி நின்ற உணர்ச்சி எதுவென்று என்னால் அறிந்துகொள்ள முடியவில்லை. செந்தாமரையும் கருங்குவளையும் கலந்த ஒரு மலர் இருக்குமானால் அந்த மலரின் இதழ்களிலே நீர் துளிர்ப்பது போலவும் உதய சூரியனைத் திடீரென மறைத்துவிட்ட பனிப்படலம் போலவும் அவள் கண்கள் நீர்மல்கின; உடனே பொழிந்தன.
அடுத்த கணம் தன்னுடைய முகத்தைத் தன் மகனின் மார்பிலே புதைத்துக் கொண்டு தோள்களும் மார்பும் குலுங்கக் குலுங்க அழுதாள். விம்மி விம்மி, விக்கி விக்கி அழுதாள்.
திடீரென்று சேற்றில் இறங்கிவிட்ட யானைபோல் என் மனம் தாங்கொணா வேதனைப்பட்டது.
“அமீனா!”
அவளுடைய விம்மல், பொருமலைக் காண ஆற்றாது நான் அவ்விடத்தில் நிற்காமல் மெதுவாக நடந்துவிட்டேன். சிறிது பொழுது செல்ல நான் மறுபடியும் அவ்விடத்துக்கு வந்தேன். அமீனா கண் தேறியிருந்தாள்.
கருமேகங்கள் குவிந்து குளிர் காற்று வீசியது. அவளுடைய மகன் அவைகளை எல்லாம் பார்த்து உணர்ந்து சிரித்தான்.
“அமீனா!”
“ஐயா !”
“என்ன நடந்தது மகளே?”
“என்னுடைய கணவருக்கு கிராமஅதிகாரி வேலை கிடைத்துவிட்டது.”
“அதனால்….”
“என்னை அவருக்கு ஒண்ணாதாம்.”
“ஏன்?”
“நம்மட வாப்பா கடற்றோழில் செய்கிறார். அப்படிப்பட்டவர் சம்பந்தம் ஆகாதாம். அதனால்தான் என்னைத் ‘தலாக்’குப் பண்ணித் துரத்திவிட்டார்.”
எனக்கு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை ஏழை அழுத கண்ணீர் கூரிய வாள் என்று யாரோ சொல்ல நான் கேட்டிருக்கின்றேன். ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் கூரிய வாள் என்ன செய்யும்? கொடுமைதான் என்ன செய்யும்? அல்லது மனிதர்களுடைய உந்தியிலே இருந்து எழுந்து உச்சியில் மோதி நெருப்புச் சுவாலையாய் வரும் கோபம்தான் என்ன செய்யும்?
“அமீனா! வாப்பாட வள்ளம் வருகிறதா?” என்று அவளைத் தேற்றினேன்.
“ஆம் ஐயா! அதைத்தான் பார்த்துக் கொண்டிருக்கேன். இவனும்தான் பார்த்துக் கொண்டிருக்கான்” என்று மகனுடைய கன்னத்தைக் கிள்ளினாள். அவன் சிரித்தான்.
நான் நடந்து விட்டேன்.
ஆனால் இதுதானா அழகிய தாழைமலர்? அதன் மென்மையான சுகந்தம் எல்லாம் இதுதானா! மனிதர்களின் அசுர மூச்சினால் அழகிய மலரும் வாடி, அதன் இனிய வாசனையும் தீர்ந்து போய்விட்டதா, என்ன?
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.