தாலி வரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 3, 2021
பார்வையிட்டோர்: 4,618 
 

நீலவேணி, ஏ.இ.இ.,யின் அனுமதியுடன் ஒரு மணி நேரம் முன்னதாக வீட்டுக்கு கிளம்பினாள். அலுவலக உதவியாளர் கணேசனிடம் அண்ணா இந்த ஃபைலை கொண்டுப் போய் ஏ.இ.இ.,பில்டிங்க் செக்‌ஷன் டேபிள்ல வைச்சுடுங்க என்றாள்.

சரிங்க மேடம் என்று உத்திரவுக்கு பணிந்த கணேசன், என்ன மேடம் அவசரமா கிளம்புறதா தெரியுது, ஏதாவது நல்ல செய்திங்களா.,? என்று ஆர்வமாக கேட்டான்.

பெருசா ஒண்ணுமில்லை, வழக்கமா வீட்டிலே சாப்பிட்டு ஆபிசுக்கு வந்திட்டு போறமாதிரி இன்னிக்கு ஒரு மாப்பிள்ளைக்கு இந்த மூஞ்சியை காட்ட வேண்டியதிருக்கு, அதான் போறேன் என்றாள் சலிப்புடன்.

அவனுக்குத் தெரியும், அவளின் கல்யாணம் அவளுக்கு கேள்விக்குறியாக இருக்கிறது என்று. இது வரையில் அவளை பெண் பார்த்து விட்டு போனவர்கள் ஏதேதோ காரணம் சொல்லி வேண்டாமென நிராகரித்து இருக்கிறார்கள். கடந்த இரண்டு வருடத்தில் நிறைய வரன்கள் குதிராமல் போயிருக்கிறது. அது குறித்து சில சந்தர்ப்பங்களில் தனது வருத்ததை தெரிவித்திருக்கிறான். அந்த பரஸ்பரத்தில். . .

நம்மைப் பற்றி எதுவும் தெரியாமல் பிறர், பல குறைகள் சொல்லலாம். ஆனால் நம்மைப் பற்றி நாமே தெரிந்துக் கொண்டு நம்மை நாமே தாழ்த்திக் கொள்ளக் கூடாது. உங்களுக்கு என்ன மேடம் குறைச்சல். அழகா இருக்கீங்க, கை நிறைய சம்பாதிக்கிறீங்க. .. உங்களோடு வாழ கொடுப்பினை இல்லாதவங்கத் தான் புறம்பு பேசி திரிவாங்க, நீங்க எதற்கும் கவலைப் படாதீர்கள். எல்லாம் நல்லப் படியாக நடக்கும் என்று பேசி நம்பிக்கை கொடுத்தான்.

தாங்க்ஸ் அண்ணா, இருந்தாலும் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆண்கள் குறை சொல்வதெற்கென்றே பிறந்தவர்கள். உயரத்தில், படிப்பில், பதவியில், தாய் தந்தை இணைப்பில், பிறப்பில், வளர்ப்பில், நிறத்தில், கௌரவத்தில், அப்பப்பா. . தட்டிக்கழிக்க காரணங்களை தேடி அலைவார்கள் போலும்.

கிருஷ்ணகுமாருன்னு ஒருத்தர் பெண் பார்த்துட்டு போனாரே., அவர் வீட்டிலே ஒன்னும் முடிவு சொல்லலையா மேடம்.,?

ஒரு தகவலும் சொல்லலை., யோசிக்கிறாரு போல . . . இனி எதிர்ப்பார்க்கிறதில் பிரயோஜனமில்லை என்று இன்றைக்கு வேறு ஒருத்தரை பெண் பார்க்க அப்பா வரச்சொல்லி இருக்கிறார். யாரு என்னான்னு நான் பெரிசா எதுவும் கேட்டுக்கலை, வலிய வந்து பெண் கேட்கிறாங்கன்னு மறுத்துப் பேச முடியாமல் சரின்னுட்டார். அதான் போறேன், வரப்போகிறவர் என்ன சொல்லி, என்ன செய்யப் போகிறாரோ தெரியலை., என்று ஆதங்கப்பட்ட நீலவேணி, ரபேல் பிளைட் போல விர்ரென்று கிளம்பினாள்.

வீட்டுக்கு வந்த நீலவேணிக்கு கிருஷ்ணகுமாரைப் பார்த்ததும் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது. இவரா. . . இவரா பெண் பார்க்க வந்திருக்கிறார்..,? .,! ஏற்கனவே இவர் பெண் பார்த்துவிட்டு போனவர் தானே. . இப்போ எதற்காக வந்திருக்கிறார். கல்யாணம் பேச வந்திருக்கிறாரோ. . . நினைத்தவள் வினோதமாக அப்பாவை ஏறிட்டுப் பார்த்தாள்.

தர்ம சங்கடமான நிலையில் இருந்த சங்கரலிங்கம் . . இருதலை கொள்ளி எறும்பாய் தவித்தார். குழம்பிய நீலவேணி கிருஷ்ணகுமாரை பார்த்த படி அப்பா இ . .இவ. . இவர். . . என்று வார்த்தையால் தடுமாறினாள்.

வா . . நீலா. . மாப்பிள்ளை வீட்டார்கள் வந்திட்டு இருக்கிறார்கள். . இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவார்கள். நீ போய் ரெப்பிரஷாயிட்டு வந்திடும்மா . . . என்றார்.

ஓ . . இன்னிக்கு இன்னொருத்தர் பெண் பார்க்க வருகிறாரா. . கங்கிராட்ஸ். . என்றான் கிருஷ்ணகுமார்.

இவன் என்ன வாழ்த்து சொல்றான்.,? கூர்ந்து நோக்கிய நீலவேணி தன் அறைக்குள் சென்றாள்.

நேரம் நகர்ந்தது. கூடத்தில் நிலவும் மௌனத்தை கலைக்க வேண்டி, நீங்க வந்த விஷயத்தை பற்றி இன்னும் ஒரு வார்த்தை சொல்லலை . . மாப்பிள்ளை வீட்டிலிருந்து வேறு வர இருக்கிறார்கள் . . தயக்கத்துடன் பேச்சைத் தொடங்கினார் சங்கரலிங்கம்.

ம் . . . பரவாயில்லையே, நாங்க சாதகமாவோ, பாதகமாவோ எதுவும் சொல்லாத நிலையில் நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து, இன்னொரு வரனை வரச்சொல்லி இருக்கீங்க போலிருக்கு . .

நீங்க பெண் பார்த்து விட்டு போன விஷயம் புதுசா வரவங்களுக்கு தெரியாது, நீங்களும் முடிவு எதுவும் சொல்லாமல் நாளை கடத்திக்கிட்டு இருந்தீங்களா. . வரோம்ங்கிறவங்களை வரவேணாமின்னு சொல்ல முடியாத ஒரு நெருக்கடி, நீங்க உங்க சம்மதத்தை சொல்லிட்டீங்கன்னா, இப்பவே ஒரு போன் பண்ணி வேண்டாமுன்னு சொல்லிடுறேன், எதிர்ப்பார்ப்புடன் சொன்னார் சங்கரலிங்கம்.

நீலவேணி சோர்வு நீக்கிய முகத்துடன், பனியில் பூத்த புது மலராய் வெளியே வந்தாள்.

ஐய்யையோ. . அவசரப்பட்டு அப்படியெல்லாம் செய்திடாதீங்க. . நானே. . எங்களை எதிர்ப்பார்க்காதீர்கள், வேறு இடத்தை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிட்டு போகத்தான் வந்தேன், அதை போனில் சொன்னால் உசிதமாகாதே என்று நேரில் சொல்ல வந்தேன் என்றான் பதட்டத்துடன்.

சந்தோஷம். . சொல்லிட்டீங்கள்ல, போயிட்டு வாங்க, என்றாள் நீலவேணி.

நிலா மேடம், இப்படி பொசுக்குன்னு கோபப்பட்டால் குடும்பத்துக்கு ஆகாது. ஏன்னு காரணம் தெரிஞ்சுக்க வேண்டாமா.,? சொல்றேன் கேளுங்க, கேட்டால் தானே என் தரப்பு ஞாயம் புரியும்.

எம் பொண்ணு மாசற்ற தங்கம். குறை சொல்ல ஒண்ணுமில்லாத போது உங்க தரப்பு ஞாயம் தெரிஞ்சு ஆகப்போறது ஒன்னுமில்லை. வேண்டாமின்னு சொல்லிட்டீங்கில்ல . . நீங்க கிளம்புங்க என்றார். சங்கரலிங்கம். குரலில் ஏமாற்றம் தொணித்தது.

ஐயோ .. உங்க பொண்ணை குறை சொன்னால் என் நாக்கு அழுகிவிடும். குலம் கோத்திரத்தைப் பற்றி குறை சொல்லப் போறதில்லை, சீர் வரிசையில தான் குறையிருக்குன்னு தெரியுது.

இயலாமையை காரணம் காட்டி எட்டி உதைக்கிறாரோ. . நினைத்துக் கொண்டாள் நீலவேணி.

புரியலையில்ல, புரியும்படி சொல்றேன் கேளுங்க, உங்க சங்கதிப் போல தான் என் வீட்டிலும் நடந்தது. இங்க வந்து நான் நிலாவை பெண் பார்த்துவிட்டு போன விஷயம் தெரியாமல், இன்னொரு பெண் வீட்டில் நூறு சவரனைவிட நூத்துப்பத்து சவரன் போடுறேன், ரொக்கமா ஐம்பது லட்சத்துக்கும் கூடுதலா அறுபது லட்சம் தாரோம், அது மட்டுமல்லாமல் பைக்குக்கு பதிலா கார் வாங்கி தாரோம் என்றார்கள். அப்போது தான் என் மதிப்பு என்னான்னு எனக்கு தெரிய வந்துச்சு., எல்லாமே அதிகமாக கிடைக்கிற போது தட்டிக்கழிக்க முடியலை. இதுல இன்னொரு வேடிக்கை என்னான்னா பொண்ணுக்கும் என்னை விட இரண்டு வயசு ஜாஸ்தி இப்போ தெரியுதா நீங்க செய்யுற சீர் வரிசை குறைச்சல்ன்னு. . . கேட்ட கிருஷ்ணகுமார் நமட்டுடன் சிரித்தான்.

நாங்க டிமாண்ட் ஏதும் வைக்க மாட்டோம்., நீங்க செய்யுறதை செய்யுங்கள் என்று சொன்னதாலே உங்க கௌரவத்துக்கு குறைவன்னியில் எங்களால முடிந்ததை செய்கிறோம் என்று சொன்னோம்., இதுதான் பிரச்சினை என்று சொல்லியிருந்தால் நான் ஏதாவது ஏற்பாடு செய்து இருப்பேனே. . முனைப்புடன் பேசினார் சங்கரலிங்கம்.

அப்பா என்ன பேச்சு பேசறீங்க.,? இவரு பார்க்கிற உத்தியோகத்துக்கு நாம செய்யுற சீர் செனத்தியே ஜாஸ்தி. இந்த லட்சனத்தில இன்னும் வேறு கொட்டிக் கொடுக்கனுமாக்கும், போகச் சொல்லுங்கப்பா அவரை, கடுப்புடன் எரிமலையாய் வெடித்தாள் நீலவேணி.

உத்தியோகத்தில் வாங்குகிற சம்பளத்தை விட, உபகாரத்தில் சைடு வருமானம் அதிகமாக கிடைப்பதால் தான் ரொக்கமும் பவுனும் கொட்டிக் கொடுக்கிறார்கள். இல்லை என்றால் கொடுப்பார்களா.,?

அப்போ வரும்புடி அதிகமாக வருவதால் தான் என்னை வேண்டாம் என்கிறீர்களா கிருஷ்ணகுமார்.,?.,!

ஆமாம். . இதுல என்ன சந்தேகம்.,?

இப்போ நீ. . சொன்னதை விட மேலும் கூடுதலா நூத்து ஐம்பது சவரன் நகை போட்டு, ஒரு கோடி ரொக்கமும், ஆடிக் காரும் வாங்கித் தருகிற இடம் ஒண்ணு இருக்கு. பொண்ணுக்கு கொஞ்சம் கூடுதல் வயசு . . உனக்கு ஓ.கே., வா.,?

ஆஹா. . என்ன தாராள மனசு, உங்களால முடியாத போது, அடுத்தவர் செய்யும் சீர்வரிசையை சொல்லி கல்யாணம் பண்ணிக்க சொல்லும் சமயோசிதம் . . அருமை! அருமை!! சொல்லு நிலா எனக்கு ஓ.கே., தான். கூச்சமும் அருவெறுப்புமின்றி பேசினான் கிருஷ்ணகுமார்.

பொண்ணுக்கு முப்பது வயசாகியும் இன்னும் அவ வயசுக்கு வரலை. பரவாயில்லையா..? ஏவ்விடியமாக கேட்டாள் நீலவேணி.

ரொம்ப திமிறுடி உனக்கு., இந்த வாய்க்கொழுப்பு இருக்கிறதால தான் பொண்ணுப் பார்க்கிற எவனும் கல்யாணம் பேச வரதில்லை. நான் சொல்றதை எழுதி வச்சுக்கு., இப்போ வரப்போகிறவன் இல்லை., இன்னும் எவன் வந்து உன்னை பொண்ணுப் பார்த்தாலும் உனக்கு இந்த ஜென்மத்தில் கல்யாணம் நடக்கப் போறதில்லை. கோபத்துடன் கத்தினான் கிருஷ்ணகுமார்.

அவனின் சிம்ம கர்ஜணையை கேட்டபடி மாப்பிள்ளை வீட்டார்கள் உள் நுழைய, அவமானப்பட்டவன் விரோத முறைப்புடன் வெளியேறினான். வந்தவர்களை வரவேற்று உட்கார வைத்தார் சங்கரலிங்கம்.

யாருங்க அவரு., கௌசிக முனிவராட்டம் சாபம் கொடுத்துட்டு போறாரு, என்று கேட்டார் புது மாப்பிள்ளையின் தந்தை.

தலை எழுத்துங்க., இப்படி கண்டவன்கிட்ட எல்லாம் வாங்கிக் கட்டிக்கனுமின்னு ஆண்டவன் எழுதியிருக்கான் போல. . என்ற சங்கரலிங்கம் தம் மனைவியிடம் வந்தவர்களை உபசரிக்கச் சொன்னார்.

பெண் பார்க்க வந்த சதீஷ், பெண் பிடித்திருக்கு என்று சொல்லவும், அவனின் தந்தை, நகை நட்டுன்னு நீங்க பெரிசா எதுவும் செய்ய வேண்டாம், கல்யாணத்தை வெகு விமர்சையாக செய்யனுமின்னு என் மகன் ஆசைப்படறான் அதை மட்டும் குறைவன்னியில் செய்து விடுங்க என்றார்.

இருவீட்டார்களும் கலந்து பேசி நிச்சயதார்த்தத்துக்கு நாள் குறித்தார்கள். நீலவேணிக்கு சற்று ஆறுதலாகவும், கொஞ்சம் சந்தோஷமாகவும் இருந்தது. இனி தரையில் தூக்கிப் போட்ட மீனாட்டம் துடி துடிக்க வேண்டாம் என்று நிம்மதி பெருமூச்சு விட்டாள். இருந்தாலும் கழுத்தில் தாலி ஏறுகிற வரையில் கல்யாணம் நிச்சயமில்லை என்பது எழுதப்படாத (தலை)விதியாக இருப்பதை நினைத்துக் கொண்டாள்.

ஒரு வாரம் கழித்து நீலவேணி அலுவலகம் சென்ற போது அங்கு பதட்ட சூழ்நிலை உருவாகி இருந்தது. காரணம் மஞ்சள் காமாலையில் இருந்து வந்த கணேசனின் மனைவிக்கு சிறுநீரகம் செயலிழந்து உயிரை விட்டிருந்தாள். மனம் பதறி கணேசன் வீட்டுக்குச் சென்றாள்.

உடல்நிலை சரியில்லாமல் இருப்பதை ஏற்கனவே கணேசன் சொல்லியிருந்தாலும் சாகக்கூடிய நிலைக்கு ஆளாகியிருப்பாள் என்று அவள் எதிர்ப்பார்க்க வில்லை. வெளிர்மஞ்சள் சாயத்தில் நனைத்து எடுத்த துணியைப் போல உடல் முழுவதும் மஞ்சளாய் வயிறு உப்புசமாய் தரையில் கிடக்கும் கணேசனின் மனைவி சடலத்தை பார்த்த போது நீலவேணிக்கு உள்ளம் நடுங்கியது. அதிர்ச்சி அலைகள் வயிற்றை பிசைந்தது. நல்லவங்களுக்கு காலம் கிடையாதா.,? யாருக்கும் தீங்கு நினைக்காத கணேசனுக்கா இந்த கதி ஏற்பட வேண்டும்.,?

கணேசனின் ஒன்றரை வயது பெண் குழந்தை, தாயின் சடலத்தில் ஏறி தாய் இறந்தது அறியாமல் அரவணைப்பின் ஏக்கம் கொண்டு அழுதது. தாய் தன்னை பிடிவாதமாக தூக்காமலிருக்கிறாள் என்ற ஆக்ரோஷத்தில் மேலும் தொண்டை வலிக்க கேவி. . கேவி அழுதது. குழந்தையின் பரிதவிப்பை கண்டு சூழ்ந்து நின்றவர்கள் சமாதானப் படுத்த தூக்கவும், தூக்குபவர்களின் பிடியிலிருந்து முரட்டுப் பிடிவாதமாக நழுவி கீழே இறங்கி தாயின் அருகில் ஓடிய நிகழ்ச்சி நீலவேணிக்கு நெஞ்சை பிசைந்தது. தன் பங்குக்கு குழந்தையை தூக்கி சமாதானப் படுத்தினாள். அவளின் பாசக்கரமும் அரவணைப்பும் குழந்தைக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். குழந்தை மெல்ல மெல்ல ஓய்ந்தது.

ஈமச்சடங்கு, பதினாறாம் நாள் கருமாதி முடிந்து வேலைக்கு வந்திருந்தான் கணேசன். முன்பிருந்த வேலையின் ஈடுபாடு குறைந்திருந்தது. மனைவியின் பிரிவு சோகத்துயரத்தில் தெரிந்தது.

மதிய உணவு இடைவேளையின் போது. நீலவேணியும் கணேசனும் பேசிக்கொண்டிருக்கும் போது. .

நிச்சயம் நடந்த வீட்டில் யாரும் இழவு வீட்டுக்கு போகமாட்டார்கள். நீங்கள் என்னடாவென்றால் கல்யாணப் பெண்ணாக இருந்துக் கொண்டு என் வீட்டு துக்கக்காரியத்தில் கலந்து கொண்டீர்களே தப்பில்லையா.,? உறவுக்காரர்கள் யாரும் எதுவும் குத்தம் சொல்லலையா.,? என்று கேட்டான் கணேசன்.

வாழ்வும் சாவும் இயற்கையாக உண்டானது. இடையில் வரும் எதுவும் நிரந்தரமில்லை. மனித நேயத்துக்கு குந்தகம் ஏற்படுத்தும் எதையும் நாம கடைபிடிக்கனும் என்கிற அவசியமில்லை

இருந்தாலும், உங்க கல்யாணத்தில் மேலும் பங்கம் ஏதும் வந்துவிடக் கூடாது. அதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காக சொன்னேன்.

அதைக் கேட்டு நீலவேணி விரக்தியாக சிரித்தாள்.

ஏன் மேடம் சிரிக்கிறீங்க.,?.,!

நடக்காத நிச்சயதார்த்தத்தில் பங்கம் எங்கிருந்து வந்து விடும்.,?

எனக்கு ஒன்றும் புரியலை. நிச்சயதார்த்தம் நடக்கலையா.,? ஏன் என்ன ஆயிற்று.,?

உங்க வஃய்ப் இறந்ததற்கு முதல் நாள் என்று நினைக்கிறேன். சதீஷ் போன் பண்ணினார். அவர் சொன்னதை கேளுங்கள்.

நீலவேணியின் மொபைல் ஒலிக்கவே, வேலையில் மும்மரமாக இருந்தவள் மொபைலை தோளுக்கும் காதுக்கும் இடையே சொருகி அலோ என்றாள்.

நான் சதீஷ் பேசுறேன் . . .

ஓ . . . மாப்பிள்ளை சாரா. .? சொல்லுங்கள்.

உங்க அப்பா அம்மாப் பற்றி ஒரு விஷயம் தெரியனும்.

நீலவேணி யோசித்தாள். காதலித்து திருமணம் செய்துக் கொண்ட அவர்களைப் பற்றி இவருக்கு என்ன தெரியனும்.? .,! கல்யாணத் தடைகளில் இதுவும் ஒன்றாச்சே. .? . .! ஏற்கனவே பெண் பார்த்துவிட்டு போன ஒருவர் உன் அப்பா ஒரு ஜாதி உன் அம்மா ஒரு ஜாதியாமே. . அப்படி வேற வேற ஜாதிக்காரர்கள் சேர்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க எங்களுக்கு இஷ்டமில்லைன்னு ஒருத்தன் நிராகரித்து இருக்கிறான். இவனும் அதைத்தான் சொல்லப் போகிறானோ. .? காதலித்து கல்யாணம் செய்து கொள்வது அவ்வளவு பெரிய சமூகக் குற்றமா.,?

என்ன பேச்சே காணோம்.,? சதீஷ் கேட்டான்

என்ன விஷயம் தெரியனும்..? நான் என்ன ஜாதின்னா.,!.,?

அதெல்லாம் இல்லை. கல்யாணத்துக்குப் பிறகு உங்க அப்பா அம்மா உன் கூடவே இருப்பார்களாமே.,? அப்படியா.,?

என்னை விட்டால் அவர்களுக்கு வேறுயாரும் இல்லை. நம்மலோடவே இருக்கட்டும். அவர்களுக்காக நீங்கள் எதுவும் செலவழிக்க வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன்.

கல்யாணத்துக்குப் பிறகு உன்னோட சம்பாத்தியமும் என்னோட உடமை. ஒத்து வராது

அவங்க பொண்ணு ஒத்து வரும், பொண்ணோட சம்பளம் ஒத்து வரும், பொண்ணப் பெத்தவங்கள் ஒத்துவரமாட்டார்கள் என்றால் எப்படி.,?

நானே என்னோட அப்பா அம்மாவை முதியோர் இல்லத்தில் விட்டுவிடலாம் என்கிற பிளானில் இருக்கிறேன். இதுல அவங்களுக்கும் சேர்த்து தண்டம் அழ முடியாது.

அப்போ உங்க முடிவு. .?

அது உன் கையில் தானிருக்கிறது.

என் அப்பா அம்மாவை நிராதரவாக விடவும், மாமியார் மாமனாரை அனாதையாக்கி தவிக்க விடவும் என்னால முடியாது. உங்களால் முடிந்தால் நாளை நடக்க இருக்கும் நிச்சயத்தார்த்ததை நிறுத்திக்குங்க. .

இதுதான் நடந்தது. நிச்சயதார்த்தம் நடக்க வில்லை. நீலவேணி சொல்லி முடித்ததும் .. .

விசனப்பட்டவனாக ஐயோ. . என்ன மேடம் இந்த இடமும் நிலைக்கலையா.,? நான் முடிந்து விடும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன் என்றான்.

அதை விடுக்கள். நான் சாவுக்கு வந்திருந்த போது ஒரு விஷயம் கவனித்தேன். இறந்து போன உங்க மனைவி கையில தாலிகயிறு, மஞ்சள் குங்குமம் வைத்து உங்க கையில கொடுத்தாங்களே அது என்ன சம்பிரதாயம்.,?

ஓ. . அதுவா அதன் அர்த்தம் நீ கொடுத்த தாலிக்கும் குங்குமத்துக்கும் எந்த பங்கமும் ஏற்படாமல் திரும்ப உன்னிடமே கொடுத்து விட்டேன் என்ற ஒரு அர்த்தம் உண்டு. இன்னொன்று. .

இன்னொன்று.,? .,!

இனி நீ இதனை யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம் என்று இறந்தவள் கொடுக்கும் அனுமதி என்றும் சொல்லுவார்கள். சிலர் தமது சந்தோஷத்துக்காக இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்து கொள்வார்கள். சிலர் ஏகப்பத்தினி விரதம் பூண்டவனாக மறுமணம் செய்து கொள்ளாமல் இருந்து விடுவார்கள்.

பொண்டாட்டி செத்துப் போனால் புருஷன் புது மாப்பிள்ளை என்று சொல்லுவார்கள், நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்.,?

கடைசி காலத்தில் ஒருவனுக்கு ஒரு துணை அவசியம் தேவைப் படுகிறது. அதை உத்தேசித்து மறுமணம் செய்து கொண்டால் முதல் தாரத்து பிள்ளைகளின் வாழ்க்கை நாசமாகிடும். நான் என் பொண்ணுக்காக அந்த தப்பை செய்ய மாட்டேன்.

நீங்க ஒன்றரை வயசு கைக்குழந்தையை வைத்துக் கொண்டு என்ன செய்வீர்கள்.,? வாழும் முறையும் சூழ்நிலையும் தான் ஒரு செயலை சரி தப்பு என்று உறுதி செய்கிறது.

நீங்க என்ன சொல்ல வரீங்க மேடம்.,?

எதேச்சையாக ஒரு காரியம் நடந்தது. அதை சந்தர்ப்பமா எடுத்துக்கிறதா.,? இல்லை வரமா எடுத்துக்கிறதா.,? என்று எனக்குத் தெரியலை. நீங்க சொன்னதை வைத்துப் பார்த்தால் அது சாசுவதமாக அமைகிறது.

சத்தியமாக எனக்கு ஒன்றும் புரியலை மேடம்.

உங்க மனைவி கையால வாங்கிய தாலிகயிற்றையும், மஞ்சள் குங்குமத்தையும் என்கிட்டத்தான் கொடுத்தீங்க. .

அது . . குளிசத்துக்குள்ள பிரேதத்தை எடுக்கனுமின்னு, பக்கத்தில நிற்கிறவங்கக் கிட்ட கொடுத்துட்டு அடுத்து ஆகவேண்டிய காரியத்தைப் பாரு என்று அவசரப்படுத்தியதால உங்கக்கிட்ட கொடுத்திட்டேன் போலிருக்கு.

அதில தப்பு இல்லை. சேரவேண்டிய இடத்துக்குத்தான் வந்திருக்கு.

என்ன மேடம் சொல்றீங்க.,?

நீலவேணி யோசித்தாள். மனதில் பட்டதை சொல்லி விடலாமா.,? அப்படிச் சொன்னால் இவர் அதை எப்படி எடுத்துக்கொள்வார்.,? என்னப்பற்றி எவ்விதமாக எடுத்துக்கொள்வார்.,?

சொல்லுங்க மேடம் . . என்ன சொல்ல வறீங்க.?

இதை விட்டால் வேறொரு சந்தர்ப்பம் கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தவளாய்., உங்க மனைவிகிட்ட தாலி வரம் வாங்கின, என்னை உங்க மனைவியா ஏத்துக்கிறீங்களா.,? என்று கேட்டாள்.

அதிர்ச்சியுடன் என்ன மேடம் பேசறீங்க நீங்க.? என்று கேட்டான்.

ஏன் அப்படி என்ன. . நான் தப்பா சொல்லிட்டேன்.,? சொல்லப் போனால் உங்களுக்கு சப்போர்ட்டா தான் பேசுறேன். உங்களுக்காக இல்லாவிட்டலும் உங்க குழந்தைக்காக நீங்க சம்மதிக்கலாமுல்ல.,

கணேசன் யோசித்தான். அன்று பிணமாக கிடந்த தாயிடம் அழுத குழந்தையை நீலவேணி அக்கறையாக தூக்கி மார்புடன் அணைத்துக் கொண்ட போது, குழந்தை சமாதானம் ஆனதை, நினைத்துப் பார்த்தான்.

எனக்கு ஒன்னும் புரியலை. இது சூழ்நிலையா.,? சந்தர்ப்பமா.,? பிராப்த்தமா.,? ஆண்டவன் கட்டளையா.,? இல்லை விதின்னு சொல்றதான்னு எனக்கு ஒன்னும் புரியலை. ஏற்கவும் முடியாமல், நிராகரிக்கவும் முடியாமல் தவிக்கிறேன். இருந்தாலும் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பதால் சொல்லுகிறேன், உங்க படிப்புக்கும், நீங்க பார்க்கிற உத்தியோகத்திற்கும் நான் கொஞ்சமும் பொருத்தம் இல்லாதவன் மேடம் என்றான்.

உங்க மனைவி, தெய்வமாகி என் சுமங்கலி பாக்கியத்திற்கு ஆதாரமா கொடுத்த அந்த மஞ்சள், குங்குமம் என்கிட்ட தான் இருக்கு. உங்க குழந்தை என்னை தாயா நினைச்சு தஞ்சம் கொண்டிருக்கா, நான் இப்பவே என் கழுத்தில் தாலி கட்டுங்கள்ன்னு சொல்லலை, என்னை உங்க மனைவியா ஏத்துக்க வாக்குறுதி கொடுங்க. உங்க தேவையின் அவசியம் நானாக இருக்கிறேன். என்னுடைய பிறப்புக்கும் ஒரு அர்த்தம் கிடைக்கும். நல்லா யோசிச்சு உங்க முடிவை சொல்லுங்கள்.

சம்மதித்து தலையசைத்த கணேசன் கல்யாணத்துக்கு அவசரப்படுத்தக் கூடாது என்றான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *