(1939ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
விடிய இரண்டு நாழிகைக்கு வண்டி கோணக்கரை தாண்டி விட்டது. கிழவி ‘பிழைத்தோம்’ என்ற அர்த்தத்துடன் பெருமூச்சுவிட்டாள்.
இனிமேல் ஊர்ப் பயம் இல்லை. கிட்ட வீடு ஒன்றுமே இல்லை. இனிமேல் என்ன ஆனாலும் பாதகமில்லை. சமாளித்துக்கொண்டு விடலாம். வண்டிக்காரன்-வண்டியை ஓட்டிக்கொண்டு வந்தவன் – சுந்தர சாஸ்திரிகளின் பண்ணையாள். ஆகையால் அவனைப்பற்றி அவ்வளவு யோசனை செய்ய வேண்டாம். ஆனால் என்ன வெட்கக் கேடு! என்ன ஆனாலும், வேறொரு மனிதனுக்கு விஷயம் தெரிந்தால் சமாசாரம் புகைந்து புகைந்து பரவிவிடுமே! இப்பொழுது என்ன பரவாமல் வாழ்ந்தது? ஊரேதான் கொசமுசவென்று பேசிக் கொண்டார்கள். எவ்வளவோ ரகசியமான சமாசாரமும் எப்படியோ வெளியேதான் வந்துவிடுகிறது. இந்தத் துரதிருஷ்டம் பிடித்த பீடையின் தலையெழுத் திற்கு ஏற்றாற்போல் வயிற்றில் வேறா வத்து விடவேண்டும்?’
கிழவி இந்த மாதிரி வாயை மூடிக்கொண்டு யோசித்த வண்ணம் வண்டியில் உட்கார்ந்திருந்தான். பாலாம்பாள் வண்டியில் படுத்தபடியே அழுதுகொண்டும் முனகிக் கொண்டும் இருந்தாள். உடல் வலி ஒரு புறம்: மனவலி மற்றொரு புறம். என்ன செய்வாள் பாவம்! இயற்கைக்கு இடம் கொடுத்ததன் பலன் இவ்வளவு கடுமையாகவா அவன் தலையில் வந்து இறங்கவேண்டும்? சிருஷ்டியின் ஆக்ஞைக்குக் கீழ்ப்படிந்ததற்கா இப்பேர்ப்பட்ட தண்டனை?
***
பாலம் பதினான்கு வயசு வரையில் கவலை என்பதே அறியாமல்-துக்கம் என்பதே இன்னதென்று தெரியாமல்-காட்டில் செழிப்பும் வளப்பமும் கொண்டு தாவிப் படரும் கொடிபோல வளர்ந்தாள். அவளுடைய ஒவ்வோர் அங்கத்திலும் புதுக்கிளைகளில் நிறையும் ஜீவ சத்துப்போல் இளமை எதிர்த்து ஓடி நின்றது. மிருகப் பிராயமான அதன் கொழுப்பால் அவள் நடையிலும் பார்வையிலுமே ஒரு துள்ளலும் குதிப்பும் இருந்தன. ‘மெள்ள நடந்துபோடி! பூமி அதிர்கிறதுபோல நடக்காதே’ என்பான் கிழவி. அவளுடைய சிரிப்பின் அலைகளில் அந்த நிறைவு கொண்டு வெளிக்கிளம்பும். ‘என்னடீது, பொம்மண்டாட்டி அப்படிச் சிரிக்கிற துண்டோ எங்கேயாவது ?” என்று கிழவி உடனே அதற்கு அணைபோட முயலுவாள். அவள் கூந்தலிலிருந்த வாளிப்பு அவளுடைய சர்வாங்க சௌந்தரியத்திற்கு ஒரு சிகரமாகவே இருந்தது.
இந்த அழகையும் கண் எடுத்துப் பார்ப்பாரில்லை. காட்டில் மலர்ந்த மலர்போல யாரும் சீண்டாதவளாகவே பாலம் பாட்டியுடன் அந்தப் பெரிய வீட்டில் ஒரு பக்கம் காலம் கழித்தாள். அப்படியும் சொல்லு வதற்கு இல்லை. ஒவ்வொரு சமயம் பாலம் வாசல் திண்ணையில் வந்து சற்று நின்றபோதும் தெருவில் சென்றபோதும் அவளைப் பார்த்த வாலிபன் ஒவ்வொருவனும் கண்கொட்டாது கவனித்துத் தான் ஏகினாள். அவள் கையைப் பிடிக்க, அந்தப் புது மலரை நுகர்ந்து எறிய, பலர் காத்திருந்தார்கள்.
ஆனால் அவளை யாரும் கல்யாணம் செய்துகொள்ள முன் வர வில்லை. அவளுடைய ரோஜா அழகு வறுமை முள்ளில் கிடந்தது. அது விரிந்து மலர்ந்தது. கல்யாணம் ஆகாத கவலை, பாவத்தைக் கொஞ்சங் கொஞ்சமாக உறுத்த ஆரம்பித்தது. அதனால், கொஞ்சம் மேனி வாடிக் குன்றினாள். கிழவி சர்வப் பிரயத்தனம் செய்தும் வரன் கிடைக்க வில்லை. அவள் வேலையாக இருந்த அந்த வீட்டுக்காரர் சுந்தர சாஸ்திரிகள் கூட எவ்வளவோ சிரமப்பட்டார். அவ்வளவு அழகும் காட்டில் அடிக்கும் நிலவுபோல வீணாகிக் கொண்டிருந்தது.
அதன் ஆதிக்கியம் அவளைமட்டும் சும்மா விடவில்லை. அவளுடைய யௌவனத்தின் தாகம் வெளியுலகத்தின் இன்ப ஈரத்தைப் புலன்கள் மூலம் ஜிவ்வென்று இழுத்துக் கொண்டது. மேன்மேலும் அதிகமான அவளுடைய கவலையையும் துக்கத்தையுங்கூடத் தூக்கி அடித்துவிட்டு அந்த இச்சை மேலெழுந்தது. ‘உள்ளே கிட! உனக்கு என்ன வேடிக்கை வேண்டியிருக்கிறது? யாராவது பார்த்தால் சிரிப்பார்கள்’ என்று பாட்டி சொல்லுவாள். அவளுடைய அழகு அப்பொழுது பார்த்துச் சிரிக்கும் படியாக இருந்தது! அப்பொழுது அவளுக்குப் பிராணன் போவதுபோல இருக்கும். ஆனால் மறுபடியும் உலகம் அவனைப் பற்றி இழுக்கும். வாசலில் போகும் ஊர்வலங்கள், பெண்களின் பேச்சுகள் சிரிப்புகள் எல்லாம் அவள் உள்ளத்தைக் கிளறும். தானும் அவர்களிடையே ஓடிப் போய் நின்றுவிடவேண்டும் என்று தோன்றும் அவளுக்கு. கல்யாண வீட்டு வாசலில் பெண்கள் குதித்துப் பாடுவதைக் கண்டால் தானும் அங்கே போய் அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு குதித்துப் பாட வேண்டும் என்று எண்ணுவாள்.
ஆனால் அப்பொழுது அவள் விதவைபோல இருந்தாள். கல்யாண மாகவில்லை அவ்வளவுதான். அவளுக்கு ஓர் உரிமையும் இல்லை. வயசு வந்துவிட்டது ஒரு குற்றமாகியது. அழகின் பிரதிபிம்பமாக அவள் ஏன் அவ்வளவு சீக்கிரமாகப் பருவமடைந்தான்? அது பிசகு! அவள் ஏன் இயற்கையை அதுசரித்து அவ்வளவு அதிசயமான வளர்ச்சி யைக் கொண்டாள்? அது கூடாது! கல்யாணமானால் அல்லவா அவள் வளரக்கூடும்? நிர்ப்பந்தமின்றி உயரக்கூடும்-வாழ்க்கையின் கண்முன்? அதற்காகத்தான் அது அவளை உயரக்கூடாது என்று தலையிலடித்து உட்கார்த்திற்று; மெய் நிறையக்கூடாது என்று சூரிய கிரணங்கள் போலச் சமூகம் தன் கண் பார்வையைச் செலுத்திக் குத்திற்று.
அவள் என்ன செய்வாள்? குன்றித்தான் போய்ப் பார்த்தாள். வெளி யுலகத்து இன்பத்தின் ‘மகடி’யைக் கேட்டதும் அவளுக்குன் பெட்டியில் கிடப்பதுபோலக் கிடந்த யௌவன சர்ப்பம் சீறிக்கொண்டு படம் எடுத்தது. அதை அடக்க எந்த மந்திர சக்தியால் முடியும்? அவனால் அடக்க முடியவில்லை.
அந்த மாதிரி இரண்டு வருஷங்களைக் கழித்தாள் பாலம். இளமை மாறி முதிர்வுகூட ஏற்பட்டது. அவள் சரீரத்தில்: வளர்ந்துகொண்டே போன அவளுடைய வளப்பு உடல் கொள்ளாததாகி விட்டது.
அப்பொழுதான் அந்த லீவுக்குச் சுந்தர சாஸ்திரிகள் பிள்ளை சந்திர சேகரன் ஊருக்கு வந்தான். அவன் காலேஜ் படிப்பு முடியும் தருணம். பெண்மையைப் பற்றி இரவும் பகலுமாக எண்ணி எண்ணி ஏங்கின சமயத்தில் பாலம் அவன் கண்ணில் பட்டாள். அந்த வருஷந்தான் தகப்பனார் அவனுக்குக் கல்யாணம் செய்ய வேண்டுமென்று தீர்மானித் திருந்தார். பாலத்தைப் பார்த்தவுடனேயே கல்யாணம் வேண்டாமென்று அவன் மறுத்துவிட்டான். யார் சொல்லியும் கேட்கவில்லை. பாலத்தின் கண் நிறைந்த அழகு அப்படி அவனை உடனே மாற்றிவிட்டது. ஆனால் பாலத்தை அவன் கல்யாணம் செய்து கொள்ள முடியாது. அதனால் என்ன என்று அந்த மயக்கத்தில் தோன்றிற்று அவனுக்கு.
அந்த ஒன்பது மாதங்களுக்குள் பாலத்தின் இயற்கையே மாறிவிட்டது. அவள் திடீரென்று ஸ்திரீ ஆகிவிட்டாள். சிறுபெண் கனவுகளும், யெளவன ஏக்கங்களும் அவளைவிட்டு அகன்றுவிட்டன. அவ்வளவு இன்பமயமாகத் தோன்றிய வாழ்க்கையில் இனிமேல் எப்படிக் காலம் தள்ளுவது என்ற திகைப்பு வந்துவிட்டது அவளுக்கு. அது ஒரு வனாந்தரம்போல இருந்தது. எங்கே போவது? என்ன செய்வது? திக்குத் திசை தெரியவில்லை.
***
சந்திரசேகரன் காலேஜ் படிப்பு முடிந்ததும் லீவுக்கு வந்தவன் சட்ட கலாசாலை திறந்ததும் அதில் சேர்ந்து படிக்கப் போய்விட்டான். இரண்டு மாதங்கள்தான் ஊரில் இருந்தான். போகும்போது பாலத்திடம் என்ன என்னவோ சபதங்கள் செய்துவிட்டுப் போனான். ஆனால் பின்னால் ஏற்பட்ட விபரீதம் அவனுக்குத் தெரியாது. பாலம் அவனுக்குத் தெரிவிக்க விரும்பவில்லை. சுத்தர சாஸ்திரிகளுக்கு விஷயம் தெரிந்து விட்டது. ஆனால் அவர் உலகமறிய, தன் மகனின் குற்றத்தை அங்கீகரிக்க இஷ்டப்படவில்லை. அதனால்தான் மேற்சொன்ன பிரயாணம்.
பாலம் வலிக்காக முனகினானே தவிர அதிகமாக அழுகைகூட வரவில்லை அவளுக்கு. அவள் பாட்டிமட்டும் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ புலம்பிக் கொண்டே இருந்தான்.
படுபாவி இப்படி என்னைக் கவிழ்த்துவிட்டானே!” என்றான் பாட்டி. ‘அவரை ஒன்றும் சொல்லாதே பாட்டி. அவர் உன்னை என்ன கவிழ்த்தார்?
‘வேறு என்னடி செய்யணும்?’
‘அவர் மனத்துடன் ஒரு கெடுதலும் செய்யமாட்டார்’.
‘கல்யாணம் செய்துகொள்ள முடியாதவன்-‘,
‘அவர் வேறு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள மாட்டார்’.
‘இப்போ மானம் போறதே!’
‘அவர் வெறுமனே இருக்கமாட்டார்’.
1இருக்காமல்தான் இந்த வண்டியில் இங்கே வந்து சீரழிகிறோமோ இப்பொழுது?’
‘அவர் இருந்தால் இது நடக்காது. அவர் சம்மதிக்க மாட்டார்’.
பேசிக்கொண்டிருக்கும்போதே பாவத்திற்கு ஒரு விபரீதமான உணர்ச்சி ஏற்பட்டது.
‘பாட்டி’ என்று சட்டென்று கத்தினாள்.
வண்டியில் வைக்கோல் பரப்பி ஜமக்காளமும் துணிகளும் மெத்தென்று விரிக்கப்பட்டிருந்தன.
கிழவி சட்டென்று பாலத்தின் பக்கத்திலிருந்த குழந்தையை எடுத்துக் கொண்டாள்.
‘எங்கே பாட்டி, காண்பி!’
வண்டி அப்பொழுது ஆற்றங்கரைக்கு வந்துவிட்டது. வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி அவிழ்த்துப் போட்டு விட்டு எங்கோ போனான் மறைவாக.
கிழவி குழந்தையை எடுத்துக்கொண்டு வண்டியை விட்டு இறங்க முயன்றாள்.
‘பாட்டி, என்ன செய்யப்போறே!’
‘செய்யறது என்னடி இருக்கு?’
பாலம் திடீரென்று எழுத்து உட்கார்ந்து கொண்டாள்.
‘பாட்டி, பாட்டி!’
‘என் தலையிலே எழுதியிருக்கோல்லியோ இந்தப் பாவத்தைக் கட்டிக்கணும்னு, கொண்டு-‘
‘என்னடி செய்யப்போகிறாய் குழந்தையை?’ என்று ஆத்திரத்துடன் கேட்டாள் பாலம்.
‘என்ன செய்கிறது/ மனசு வரத்தான் இல்லே. வேறே வழி?’
‘ஐயோ, இதுக்கா பிறந்தது இந்தக் குழந்தை?’
‘ஜலத்தோரமா- கரைவே வச்சூட்டு வந்துட்டாக்கே மரம் வச்சவர் இருக்கார்! ஆச்சு, விடியற சமயம். யாராவது போரவா வரவா பாத்தா பரிதாபப்பட்டு எடுத்துண்டு போயிடுவா. அதுக்கு அப்படி எழுதியிருக்கு!’
‘பாட்டி, வாண்டாம்!”
‘என்ன வாண்டாம்?’
‘குழந்தையை எப்படிடீ இருட்டுவே கரையிலே போட்டூட்டுப் போறது? அதுக்கு ஜலத்துலேயே போட்டுடலாமே! பாட்டி, குழந்தை யைக் கொடு ஒருதரம் பாத்து’
பாட்டிக்கும் உணர்ச்சியில் மெய் சிலிர்த்தது. குழந்தையை, பாலத்தின் கையில் கொடுத்தான் அவள் அதை நிலவொளியில் ஒரு தரம் பார்த்து மார்புடன் அணைத்துக்கொண்டாள்.
‘பாட்டி, நான் மாட்டேன்!’
‘என்ன மாட்டாய்?’
‘குழந்தையைக் கொடுக்க மாட்டேன்! … ஐயையோ என்ன காரியம் செய்யத் துணிஞ்சு இங்கே வந்தேன்! நல்ல வேளை! பாட்டி, இதை இங்கே போட்டுட்டு உன்னுடன் ஊருக்குத் திரும்பிவந்து எனக்கு என்ன ஆகணும்? என் குழந்தையெக் காட்டிலும் என் உயிர் பெரிசா? நான் செய்தது குத்தமானால் அதை மறைக்க இந்தக் கொடுமையா? கூடாது நான் மாட்டேன்! குழந்தை -எனக்கு வேணும்! இனிமேல் அதுதானே? அதைக் கைவிட்டால் எனக்கு மன்னிப்புக் கிடையாது!’
‘என்னடி அசடு ? இதை எடுத்துண்டு திரும்பி ஊருக்குள்ளே போகவா?’
‘போவோமே! என்ன பயம்?’
‘ரொம்ப நன்னாத்தான் இருக்கு. உனக்கு-‘
‘எனக்கொன்றுமில்லை. யாரும் எனக்கு வேண்டாம். இது ஒன்று போரும்!’ என்று சொல்லிக் கொண்டு பாலம் குழந்தையை இறுகப் பற்றிக்கொண்டாள்.
குழந்தை மெல்ல அழுதது. அதற்கு உடனே ஆறுதல் அளித்தான் பாலம். பலபலவென்று விடியும் பொழுது பாலம் கைகளில் குழந்தையை வைத்துக்கொண்டு தான் ஒரு தாய் என்ற புது உணர்ச்சி பெற்றாள்.
‘நாழியாச்சேடி!’
‘பாட்டி, என்ன ஆனாலும் சரி, குழந்தையைப் பறிகொடுக்க தான் இப்பொழுது தயாரில்லை’ என்று பாலம் தீர்மானமாகச் சொன்னாள்.
‘ஐயையோ! இதென்ன இப்படி வம்பு பண்றே?’
‘ஒரு வம்புமில்லை. அடே, பண்ணைக்காரா! வண்டியைக் கட்டு. திரும்பிப்போவோம்!’ என்று பாலம் கம்பீரமாக உத்தரவு கொடுத்தாள்.
– சூறாவளி, 30.06.1939