மாலினி தனது உள்ளங்கையைப் படுக்கையில் படுத்திருந்த கணவன் பிரசன்னா உள்ளங்கையில் பொருத்தி மெதுவாக வருடினாள். அவனுக்கு உணர்வு எதுவும் ஏற்படவில்லை.
அவள் உடனே தன் இரு கைகளைப் தலையில் வைத்து கப்பல் கவிழ்ந்து விட்டது போல் உட்கார்ந்து விட்டாள். அவனுக்குச் சீக்கிரம் குணம் ஆக வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக் கொண்டாள்.
அவள் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றது.
“இந்தாங்க மாப்ளே கார் சாவி” என்று ஐ10 காரின் சாவியை மகாலிங்கம் பிரசன்னாவிடம் கொடுத்தார். கல்யாணம் நடந்தவுடன் மாப்பிள்ளைக்கு அவர் கொடுக்கும் அன்புப் பரிசு. மாலினி மிடில் கிளாஸ் வகுப்பைச் சேர்ந்தவள். அப்பாவுக்கு வயசு அறுபத்து ஐந்து ஆகி விட்டது. ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். பெண்ணின் மேல் மிக்க பாசம் உடையவர்.
பிரசன்னா மாலினி கல்யாணம் அப்போதுதான் முடிந்திருந்தது.
மணப்பெண் மாலினிக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. ”அப்பா சொல்லவே இல்லையே. அருமையான பரிசு ” என்று சொல்லித் தந்தையைக் கட்டிக் கொண்டு தன் சந்தோஷத்தை வெளிப்படுத்தினாள். பிரசன்னாவைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் சந்தோஷத்தால் துள்ளி குதித்திருப்பார்கள். அவனைப் பொருத்தவரை கார் சாவி சந்தோஷத்தை விட ஹிம்சையைதான் கொடுத்தது. அதற்குக் காரணம் அவன் எளிமையான வாழ்க்கை வாழ விரும்பியதுதான். எந்த வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் என்னுடைய பிளாட்டில் காரை விட்டு விட ஏற்பாடு செய்திடுங்க மாமா என்றான்.
பிரசன்னாவுக்குக் கார் லைசன்ஸ் இருக்கிறது. மாமனார் கொடுத்த காரை வாரத்துக்கு ஒரு நாள் தான் அவன் ஆபிஸ் எடுத்துச் செல்வான். அவனுக்குச் சொந்தமாய் சமீபத்தில் வாங்கிய இரண்டு படுக்கை அறை கொண்ட ஃபிளாட் நங்கநல்லூரில் இருக்கிறது. அவனுடன் அப்பா ராமசாமியும் அம்மா கீதாவும் சேர்ந்து வசிக்கிறார்கள். ராமசாமி அரசு வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர். மாதம் ரூபாய் ஐம்பதாயிரம் பென்ஷன் வாங்குகிறவர்..
புதுமண தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கை இனிமையாகத் தொடங்கியது. கல்யாணம் முடிந்து இருவரும் தேனிலவுக்கு ஊட்டி போய் பத்து நாட்கள் இன்பமாய் கழித்து விட்டு வந்து விட்டார்கள்.
பிரசன்னாவின் பிளாட்டில் அவனுக்கென்று ஒதுக்கப்பட்ட கார் பார்க்கிங் ஏரியாவில் அவனுடைய நீல நிற புது காரை நிறுத்தி வைத்தான். அவன் இருந்த இருந்த குடியிருப்பில் மொத்தம் ஆறு வீடுகள். அவனோடு சேர்த்து மொத்தம் மூன்று பேர்தான் கார் வைத்திருக்கிறார்கள்.
பிரசன்னா ஒரு பிரபல தனியார் கம்பெனியில் எச் ஆர் டிபார்ட்மெண்டில் ஆபிசராக வேலை செய்கிறான். காலை ஒன்பது மணி முதல் மாலை ஆறு மணி வரை ஆபிஸ் வேலை நேரம். இரவு எட்டு மணிக்குள் திரும்பி வந்து விடுவான். மாலினி பி காம் பட்டதாரி என்றாலும் வீட்டை நிர்வாகிக்கும் இல்லத்தரசியாக இருந்தாள்.
பிரசன்னா வசிக்கும் பிளாட்டில் இரண்டாவது மாடியில் வசந்தி என்னும் இளமங்கை வசிக்கிறாள். வயது இருப்பது ஆறுதான். அவள் பெற்றோரும் கூட இருக்கின்றனர். அவள் பி ஈ படித்து ஒரு சாப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்கிறாள். அவளும் கார் வைத்திருக்கிறாள். காரில்தான் ஆபிஸ் போவாள்.
அவளுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதால் ஒரு நாயை வளர்க்கிறாள். அந்த நாயின் பேர் ஜாக்கி. அதைத் தினமும் காலையிலும் மாலையிலும் வாக்கிங் அழைத்து செல்வாள். பணக்கார கம்பீரத்துடன் அவள் நாயைப் பிடித்துச் செல்லும் அழகே அழகு. நாயுடன் காலையும் மாலையும் தெருவில் தினந்தோறும் வலம் வருவாள். நாயை அவள் இழுக்க அவள் நாயை இழுக்க ஒரே போராட்டமாக இருக்கும்.
நாள் நட்சத்திரம் பார்த்து பிரசன்னா ஒரு நாள் பிரசன்னா காரை வெளியில் எடுத்தான். அந்த சமயம் பார்த்துத்தானா வசந்தி நாயுடன் வாக்கிங் செல்ல வர வேண்டும் ? அவன் காரில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறான். அவள் வாசல் கேட்டை திறந்து நாயுடன் கீழே இறங்குகிறாள். நாய் திமிறி கொண்டிருக்கிறது. அவள் கொஞ்சம் அசட்டையா இருந்து விட்டாள். நாய் அவள் பிடியிலிருந்து விடுபட்டு குறைத்து கொண்டே பிரசன்னாவை நோக்கி ஓடி வந்தது. அதிர்ச்சி அடைந்த அவன் காரில் ஏறி அதனை ஸ்டார்ட் செய்தான். நாய் ஒடி வந்து வாசல் கேட் அருகில் சென்று குரைத்தது. அவன் காரின் வேகத்தை அதிகப்படுத்த காரின் சக்கரம் நாயின் கால் மேல் ஏறியது. நாய் பலமாய் குறைத்து விழுந்து விழுந்து புரண்டது. அங்கு ஒரே களேபரம் தான். ஜாக்கி, ஜாக்கி என்று கண்களில் கண்ணிர் வழிய ஓடோடி வந்து நாயைத் தூக்கிய வசந்தி பார்த்து ஓட்டக் கூடாதா என்று முணுமுணுத்துக் கொண்டே பிரசன்னாவைப் பார்த்து கோபமாய் ஒரு முறை முறைத்தாள். பிறகு நாயை ஒரு ஆட்டோவில் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றாள். பிரசன்னா பாடு திண்டாட்டமாய் ஆகிவிட்டது. அதுக்கப்புறம் காரை எடுக்க மனம் வராததால் அதை வீட்டிலே விட்டு விட்டு பைக்கில் ஆபிஸ் போய் விட்டான்.
அன்று பிரசன்னா ஆபிஸ் போகும்போது வாசலில் அவனுக்கு டாடா காண்பித்துவிட்டுத் திரும்பும்போது மாடி வீட்டு வசந்தி இறங்கி வந்தாள். மாலினியைப் பார்த்துச் சிரித்து, ”ஹலோ?” என்று கையை அசைத்தாள்.. பதிலுக்கு மாலினியும் ” ஹலோ” என்றாள் மாலினி,
அவள் காரை ஸ்டார்ட் செய்து வலது கையை அசைத்து டாடா காண்பித்துக் கொண்டே கார் ஓட்டிச் செல்லும் அழகை பார்த்து வியந்த மாலினி அவளைப் போல் கார் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
அன்று இரவு பிரசன்னாவிடம் மாலினி கூறினாள்.
”நம்ம பிளாட்டில் வசிக்கிற வசந்தி இலாகவமாக கார் ஓட்டிச் செல்கிறாள்.”
நீ கூட கார் ஓட்ட கத்துக்கோ. நானே உன்கிட்டே சொல்லாம்னு இருந்தேன்,. நம்ம வீட்டிலே கார் என்னமோ இருக்கு. டிரைவிங் ஸ்கூலில் பக்கத்திலே இருக்கு.” என்றான்.
அடுத்த நாளே டிரைவிங் ஸ்கூலில் சேர்த்து அவள் கார் கற்றுக் கொள்ள ஏற்பாடு செய்தான்.
பதினைந்து நாட்களில் அவள் கார் ஓட்ட கற்றுக் கொண்டு லைசென்ஸ் வாங்கி விட்டாள். கியர் மாற்றுவது. ரிவர்ஸ் எடுப்பதெல்லாம் அவளுக்கு அத்துபடி.இருந்த போதிலும் அவளுக்குக் கார் ஓட்ட பயம் தான்.
ஒரு முறை காரை கேட்டின் வழியாக வெளியே எடுக்கும்போது கேட்டின் மேல் லேசாக இடித்து விட்டாள். . காருக்கு அதிகம் சேதமில்லை,. அவ்ளுக்கு கார் ஓட்ட கான்பிடன்ஸ் வரவில்லை.
”நீ எப்ப கார் ஓட்டுக் கொண்டு போய் உங்க அப்பாவை ஆச்சர்யத்தில் ஆழ்த்த போறே” என்று பிரசன்னா அவளை அடிக்கடி கேலி செய்வான்.
”சீக்கிரம் ஓட்டிப் போறேன். என்னை கிண்டல் செய்யாதீங்க” என்பாள் அவள்.
”எல் போர்ட் போட்டு ஓட்டு. மற்றவர்கள் ஜாக்கிரதையாக இருப்பார்கள்” என்று சிரித்தான்..
சொன்னபடியே அவன் எல் போர்ட் தயார் செய்து காரின் முன் பக்கமும் பின் பக்கமும் நன்கு தெரியும்படி எல் போர்டை ஒட்டினாள். அவள் சீக்கிரம் கார் ஓட்ட கற்றுக் கொண்டு அதை அப்பாவிடம் கூறி அவர் சந்தோஷப்பட வேண்டும் என்று ஆசைப்பட்டாள்.
நாட்கள் பறந்தன. கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆகி விட்டது. இன்னும் எல் போர்ட் உடன் காரை ஓட்டி வந்தாள்.
ஒரு நாள் அவள் காரை தனியாக எடுத்துக் கொண்டு அப்பா வீட்டுக்குப் போகக் கிளம்பினாள். வழியில் ஒரு பாலத்தில் சரிவில் அவளால் பிரேக் போட்டு நிறுத்த முடியாததால் பின்னால் நின்று கொண்டிருந்த வண்டி மீது கார் முட்டியது. அந்த வண்டியோ புது வண்டி. அப்போதுதான் வாங்கி வந்திருக்கிறார்க்ள். அந்த வண்டியின் டிரைவர் கத்தினான். அவனிடம் சாரி சொல்லி விட்டுத் தப்பித்தால் போதுமென்று அவள் விரைந்து காரை செலுத்தினாள்.
”எப்படிமா இருக்கே… என்று வரவேற்ற தந்தையிடம் அப்பா நான் தனியா கார் ஓட்டி வந்திருக்கேன்” என்றாள்
”கார் நல்லா ஒட்டறியா?”
“இன்னும் கத்துக் கொண்டு வருகிறேன். கூடிய சீக்கிரத்திலே நல்லா ஓட்டுவேன்.” அவளுக்கு அப்பாவிடம் காரை திரும்பக் கொடுத்து விடலாமென்று கூட தோன்றியது. ஆனால் பரிசாகக் கொடுத்ததைத் திரும்பக் கொடுப்பது அவ்வளவு இங்கிதமல்ல என்பதால் அவள் அதைப் பற்றிப் பேசவில்லை.
”அடிக்கடி ஓட்டி பயிற்சி செய். சித்திரமும் கை பழக்கம் என்பது போல் பயிற்சி செய்தால் நீ திறமையோடு கார் ஓட்டலாம். எங்காவது மைசூர், மும்பை என்று நெடுந்தொலைவு போய் வருவது தானே.”
”அவருக்கு இப்போதைக்கு லீவ் இல்லை. அதனால் என்ன, கொஞ்ச நாள் கழித்து அப்படிச் செய்தால் போயிற்று.”
ஒரு நாள் பிரசன்னா காரை எடுத்து ஆபிஸ்க்கு ஓட்டிச் சென்றான்., ஒன்பது மணி ஆபிஸ்க்கு ஏழறை மணிக்குக் கிளம்பிய விட்டதால் ட்ராபிக் நிறைய இல்லை. அதனால் எந்த வித பிரச்சனையுமில்லாமல் எட்டரை மணிக்கே ஆபிஸ் போய் விட்டான். போனதும் வாட்ஸ் அப்பில் மாலினிக்கு ஆபிஸ் ரீச்டு” என்று கட்டை விரல் சிம்பலுடன் ஒரு மெசேஜ் அனுப்பி வைத்தான். மாலினியும் பதிலுக்குச் சிரித்தது கொண்டு இருக்கும் ஒரு சிம்பளை அனுப்பி வைத்தாள்.
மாலினி கராத்தே கற்றுக் கொண்டாள். வீட்டில் அவள்தான் சமையல். நேரம் கிடைக்கும்போது தனக்கு ஈடுபாடு இருந்த விஷயங்களைச் செய்வதில் மிகுந்த ஆர்வம் காண்பித்தாள்.. ஓவியம் தீட்டுவாள். கதைப் புத்தகம் படிப்பாள். சிறுகதைகள் எழுதுவாள்.
காலச்சக்கரம் சுழன்றது. இரண்டு வருடம் ஆனது. .அம்மாவும் தொடர்ந்து அப்பாவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருவரும் மேலோகம் சென்று விட்டார்கள். பிரசன்னா வேலை செய்த சென்னை பிராஞ்சை மூடி விட்டதால் அவனுக்கு டில்லிக்கு டிரான்ஸ்பர் செய்து விட்டார்கள். அவனுக்கு ஏனோ சென்னையை விட்டுச் செல்ல மனசில்லை. சென்னையிலேயே வேறு வேலை முயற்சி செய்தான். அவனுடைய துரதிர்ஷ்டம் அவனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. அவன் டில்லி போவதைத் தவிர்க்க முடியவில்லை. அவன் அப்பாவும் அம்மாவும் நீ எங்கு இருக்கிறாயோ நாங்களும் உங்கூட இருப்போம். பிள்ள இருக்குமிடம்தான் எங்களுக்கு அயோத்தி. இந்தி தெரியலையானாலும் சமாளித்துக் கொள்வோம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்கள். காரை எடுத்துப் போக வேண்டாம். இங்கேயே விற்று விட்டுப் போய் விடலாம் என்று பிரசன்னா கூறினான். ஆனால் அதுக்கு மாலினி ஒத்துக் கொள்ளவில்லை. என் தாய் வீட்டுச் சீதனத்தை விற்க நான் சம்மதிக்க மாட்டேன் என்று உறுதியாக நின்றாள். அதனால் ஒரு டிரைவரைப் போட்டு காரிலியே குடும்பமே டில்லி சென்றது. மாலினிக்கு சந்தோஷம். ஏன் அவள் மாமனார் மாமியாருக்கும் நிரம்ப மகிழ்ச்சி.
டில்லி சரிதா விஹாரில் ஒரு பிளாட் வாடகைக்குப் பார்த்து பிரசன்னாவின் குடும்பம் குடியேறியது. . எல் போர்ட் மாட்டிய வாகனமும் இப்போது சரிதா விஹாரில் தான் இருக்கிறது.
மாலினிக்கு டில்லி மிகவும் பிடித்துப் போய் விட்டது. பெரிய ஊர். பல மொழி பேசுபவர்கள் வசிக்குமிடம். பிரசன்னாவுக்குத் தான் ஆபிஸ் இருபத்து ஐந்து கிலோ மீட்டர் தள்ளி இருந்தது. தில்லியில் அதெல்லாம் சகஜம். அவன் வீட்டிலிருந்து அரை கிலோ மீட்டர் தள்ளிப் போனால் கம்பெனி பஸ் வரும். மாலினிதான் அவனை காரில் காலையில் பஸ் வருமிடத்துக்குப் போய் டிராப் செய்து விட்டு வருவாள்,. மாலை அவன் பஸ் விட்டு இறங்கும்போது அவனை அழைத்து வருவாள். அவளுக்குத் தில்லி டிராபிக்கில் கார் ஓட்ட பயம்தான். இருந்தாலும் கணவனுக்காகச் சிறிது தூரம் போய் அவனை விட்டுவிட்டு மறுபடி கூட்டி வருவதை அவள் மகிழ்ச்சியுடன் செய்தாள்.
மாலினிக்கு இந்தி தெரியாது. இருந்தாலும் புதிய ஊரில் அவள் சமாளித்துக் கொண்டாள். டிவியில் இந்தி சினிமா பார்ப்பது, பக்கத்து வீட்டு மாஜியிடனும் வேலைக்காரி, காய்கறி கடைக்காரனுடன் பேசியே அவள் வெகு சீக்கிரத்தில் இந்தி கற்றுக் கொண்டு விட்டாள். தப்போ தவறோ அவள் துணிந்து பேசி விடுவாள். அது பெண்களுக்கு உரியக் குணம். பிரசன்னா என்ன முயன்றாலும் அவனால் இந்தியை கற்று கொள்ள முடியவில்லை. தப்பாக பேசி விடுவோமோ என்ற பயம் அவன் கற்று கொள்வதைத் தடை செய்தது.
பிரசன்னா ஆபிஸ் விட்டு வரும்போது இரவு எட்டு மணி ஆகிவிடும். அவன் ஆபிசிலிருந்து வந்தவுடன் அன்று ஆபிசில் நடந்த விஷயங்களை மாலினியுடன் பகிர்ந்து கொள்வான். பிறகு இருவரும் சாப்பிடுவார்கள். அவர்கள்: வாழ்க்கை அமைதியுடனும் மகிழ்ச்சியுடன் அமைதியுடன் சென்று கொண்டிருந்தது. வாழ்க்கை எப்போதுமே இன்பமாக இருப்பதில்லை. துன்பமும் சேர்ந்து தானே வாழ்க்கை.
பிரசன்னாவின் அப்பா அம்மாவுக்குத் தான் தில்லி பிடிக்கவில்லை. இருந்தாலும் எப்படியோ அவர்கள் சமாளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். வயதான தம்பதியர் ஒருத்தருக்கு ஒருத்தரை நன்கு கவனித்துப் பார்த்துக் கொண்டனர். அவர்கள் அன்னியோன்யத்தைப் பார்த்து மாலினிக்கு பெரும் வியப்பு.
அன்று பிரசன்னா காலையிலே குளித்து ஆபிஸ் போக ரெடியாகி விட்டான்.
”எதாவது சாப்பிட்டு போங்களேன். இட்லி பண்ணித் தரேன். பத்து நிமிடத்தில் ரெடியாகி விடும்” என்றாள் மாலினி..
இன்று எனக்கு ஒரு மீட்டிங் இருக்கிறது. நான் சரியான டைம்க்குப் போக வேண்டும். மீட்டிங் முடிஞ்சதும் நான் வெளியே போய் ஓட்டலில் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறி விட்டு பிரசன்னா கிளம்பிய விட்டான்.
அவன் போனப்பின் மாலினி பீரோவிலிருந்து புடவையை எடுக்கும் போது அங்கு வைத்திருந்த வெங்கடசலபதி பொம்மை கீழே விழுந்து உடைந்தது. மாலினிக்கு நிரம்ப மனக் கிலேசம் உண்டாயிற்று. அடடா ! பெருமாள் பொம்மை உடைந்து விட்டதே. விட்டிலே இருக்கும் வயசான மாமானார், மாமியாருக்கு எதுவும் ஆகக் கூடாதே என்று இறைவனிடம் வேண்டிக் கொண்டாள் மாலினி,
பிரசன்னாவுக்கு ஆபிஸ் போனவுடன் ஒரு மீட்டிங் இருந்தது. அது முடியும் போது ஒரு மணி ஆகி விட்டது. அப்போதுதான் அவனுக்குத் தான் சாப்பிடாமல் இருப்பது ஞாபகம் வந்தது. நான் போய் சாப்பிட்டு விட்டு வருகிறேன் என்று மேனேஜரிடம் சொல்லி விட்டு வெளியே வந்தான். ரோடை கிராஸ் செய்து எதிர் பக்கம் இருந்த ஓட்டலுக்குப் போய்க் கொண்டிருக்கும்போது அவன் மீது வேகமாக வந்த லாரி மோதி அவனுக்குக் கால், கை மற்றும் முதுகுத் தண்டில் பலமான அடி. உடனே ஆம்புலன்சில் எடுத்துச் சென்று பக்கத்திலிருந்த தனியார் ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்தார்கள். ஐசியுவில் அவன் அட்மிட் செய்யப்பட்டு அவசர சிகிட்சை கொடுத்தார்கள்
திடீரென்று மதியம் அவளுக்கு பிரசன்னாவின் ஆபிசிலிருந்து போன் வந்தது.. மேனேஜர் பேசினார்.
“பிரசன்னாவுக்கு ஆக்சிடெண்ட் ஆகி விட்டது .ஆஸ்பிட்டலில் இருக்கிறான்” என்றார்.
அதைக் கேட்டதும் மிக்க அதிர்ச்சி அடைந்து பதைபதைப்புடன் ஆஸ்பிட்டலுக்கு ஓடினாள். மாமனாரும் கூட வந்தார். உடம்பு பூராவும் கட்டுப் போட்டு அவன் இருந்த நிலைமையைப் பார்த்து கண்ணீர் விட்டாள்.
ஒருமுறை வாடகை காரில் ஷிவானி என்னும் ஒரு பெண் டிரைவர் கார் ஓட்டி வந்தாள். அவளுக்கு மிக்க ஆச்சரியத்தைக் கொடுத்தது.
”நீங்கள் கார் ஓட்டுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது ! இதுவரை நான் ஆண் டிரைவர்கள் ஓட்டித்தான் பார்த்திருக்கிறேன்.”
”பெண்கள் இல்லாத துறை எது? ரயில், பஸ், ஆட்டோ, கார் எதையும் ஓட்டுவார்கள். பெண்கள் வாடகை கார் ஓட்டுவதை இந்த ஊரில் சாதாரணமாய் பார்க்கலாம். தைரியமும் துணிச்சலும் இருந்தால் போதும் .” என்றாள் சிரித்துக் கொண்டே.
அவளிடம் பேசியதில் ஷிவானி மூன்று வருடங்களாக டிரைவராக கார் ஓட்டிக் கொண்டிருக்கிறாள் என்பதும் நல்ல வருமானம் வருகிறது என்பதும் தெரிய வந்தது. எதற்கும் இருக்கட்டும் என்று அவளுடைய பெயர், மொபைல் எண்ணைக் குறித்துக் கொண்டாள். ஷிவானியைப் பார்த்து தானும் அவளைப் போல கார் ஓட்டிச் செல்ல வேண்டும் என்னும் உத்வேகம் அவளுக்கு உண்டாயிற்று.. அடுத்த நாள் துணிந்து மாலினி காரை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்பி விட்டாள். பயமில்லாமல் ஓட்டி ஆஸ்பத்திரி அடைந்து விட்டாள்.
கிட்டத் தட்ட ஒரு மாதம் அவன் ஆஸ்பிட்டலில் இருந்தான். அந்த ஒரு மாதமும் அவள் தினமும் காரை எடுத்துக் கொண்டு ஆஸ்பிட்டல் சென்றதால் அவளுடைய கார் ஓட்டும் திறன் அதிகரித்து விட்டது. காரிலிருந்து எல் போர்டை எடுத்து விட்டாள். இப்போதெல்லாம் எவ்வளவு டிராபிக் இருந்தாலும் அவளால் சுலபமாகச் சமாளித்து விட முடிந்தது..
பிரசன்னா வீட்டுக்கு வந்து விட்டான். ஒரு மாதம் வீட்டில் ஓய்வு எடுக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து அவனுக்குக் கடுமையான காய்ச்சல் வந்தது. மறுபடியும் ஆஸ்பித்திரியில் அட்மிட் செய்து சிகிட்சை செய்தும் பலனில்லை. கழுத்துக்குக் கீழே செயலிழந்து உணர்வு இல்லாமல் போய் விட்டது. எப்போது வேண்டுமானாலும் சரியாகிவிடும் என்று சொல்லி ஆஸ்பத்திரியிலிருந்து அவனை டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள்.. வீட்டில் அவன் எப்போதும் படுக்கையில்தான் இருக்கிறான். மாலினி சலித்துக் கொள்ளாமல் அவனுக்குப் பணிவிடை செய்கிறாள். அவன் சீக்கிரம் பழைய நிலைமைக்கு வருவான் என்று நம்பிக்கையோடு இருக்கிறாள். மாமனார் மாமியாரும் அவர்களுடைய இயலாமையைச் சொல்லிப் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.
அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கணவனால் வேலைக்குப் போக முடியாவிட்டால் யார் அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றுவார்கள் ? நாலு பேர் சாப்பிட வேண்டுமே. அவள்தான் இப்போது குடும்பத்தின் கேப்டன். வேலைக்குப் போக ரெடி என்றாலும் உடனே வேலை கிடைக்குமா?. நாலா பக்கமும் வேலைக்கு அலைந்தாள். அவளுக்கு அதிர்ஷ்டமில்லை..
குடும்பத்தின் நிலைமை இப்படி ஆகி விட்டதே என்று வருத்தப் பட்டாள். நா இப்போ என்ன செய்வது என்று தனக்குள் கேட்டுக் கொண்டாள்.
”என்ன பண்ணப் போகிறாய் மாலினி ? என்றான் பிரசன்னா. அவன் கேட்டது அவள் காதில் விழவில்லை.
”மாலினி நான் சொல்வது உன் காதில் விழவில்லையா?” என்று பிரசன்னா மீண்டும் கேட்டதும் மாலினி சிலிர்த்தது எழுந்தாள். விழிப்பு நிலைக்கு வந்தாள்.
”என்ன கேட்டீங்க ? “ .
”எந்த வேலையையும் இனிமேல் என்னால் செய்ய முடியாது. நான் பெரிசா எதுவும் சேமித்து வைக்கலை. எனக்கு உன்னை நினைச்சாத்தான் கஷ்டமா இருக்கு. . நான் உங்களுக்கெல்லாம் பாரமாயிட்டேன். என்னை மன்னித்து விடு .கடவுள் ஏன் இப்படிச் சோதிக்கிறாரோ தெரியலை. என்ன செய்யலாம் நம் ஊருக்கே திரும்பிப் போய் விடலாமா? என்றான் பிரசன்னா.
பிழைப்புக்குன்னு இங்கே வந்துடுட்டோம். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும் இங்கேயே இருக்கலாம். நம்ம ஊருக்குப் போனாலும் அங்கே நமக்கு என்ன சொத்தா இருக்கு?. வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருகேன்.. சீக்கிரம் வேலை கிடைச்சிடும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு.
நான் ஒண்ணு சொல்றேன். நீ தப்பா நினைச்சுக்க கூடாது.
சொல்லுங்கோ.
உன்னுடைய தாய் வீட்டுச் சீதனத்தை ஏன் விக்கக் கூடாது? வர்ற பணத்தை வைச்சு ஒரு ஆறு மாசமாவது கவலையில்லாமல் இருக்கலாம். இப்போ காருக்கு நமக்கு தேவையும் இல்லை. நீ என்ன சொல்றே? என்றான்.
மாலினிக்கு அதிர்ச்சியாக இருந்தது. சற்று யோசித்தாள். திடீரென்று அவளுக்குப் பொறி தட்டியது. ஷிவானியைப் போல் நாமும் ஏன் வாடகை காரை ஓட்டக் கூடாது . சொந்த காரால் பிழைக்கலாம் என்று எண்ணினாள். அவள் முகம் மலர்ந்தது.
கார் தான் நமக்கு இனிமேல் சோறு போட போகிறது. காரை விற்க வேண்டாம். அந்தக் காரை வாடகை காராக ஓட்டப் போகிறேன். அப்பா காரை உங்களுக்காகத்தான் கொடுத்தார். ஆனால் அது நம் வாழ்வாதரத்துக்குப் பயன் படுமென்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை. ஒரு செயலின் விளைவு நம் கண்களுக்குத் தெரியாமல் மறைந்திருக்கிறது. பின்னால் தான் தெரிகிறது. எல்லாம் இறைவன் செயல்.
”மாலினி, நீ என்ன சொல்றே ! ”என்றான் பிரசன்னா நம்ப முடியாமல்.
ஒரு பெண் நினைத்தால் முடியாது என்ன இருக்கிறது ? நான் சமீபத்தில் தினத்தந்தியில் படிச்சேன். கோவையைச் சேர்ந்து இளம் பெண் ஷர்மிளா, 24 வயதாகும் இவர் டவுன் பஸ்சை இயக்கி கோவை மண்ணின் முதல் பெண் ஓட்டுனராக கலக்கிக் கொண்டிருக்கிறார். படித்ததோ பார்மசி, பிடித்ததோ பஸ் ஸ்டியரிங். நான் முன்பு இருந்த பயந்தாங்கொள்ளி மாலினி இல்லை. எனக்கு இப்போ கார் நன்றாக ஓட்டத் தெரியும். தாய் வீட்டுச் சீதனமா என் அப்பா கொடுத்த சொந்த காரில் ஸ்டியரிங் பிடிப்பேன். ஷிவானி கிட்டே பேசி எப்படி நம்ம காரை வாடகை காராக மாற்றுவது என்று கேட்கிறேன்” என்று சொல்லி மொபைலை எடுத்தாள். அதைக் கேட்ட பிரசன்னா சிலையாய் சமைந்து போனான்.