தியேட்டரில் என் மகனின் படத்தை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு, அழுகையை அடக்க முடிய வில்லை.
(என்ன புரியவில்லையா? என் மகன் விஜய் புகழ் பெற்ற நடிகன். அவனின் படத்தை தியேட்டரில் பார்க்கத்தான் மகிழ்ச்சியோடு, யார் கண்ணிலும் படாமல், படம் ஆரம்பித்தவுடன், இருட்டில் தியேட்டருக்குள் வந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் அவனின் அப்பாவுடன்)
படத்தில் என்னமாய் ….பாசத்தை காட்டுகிறான் அந்த அம்மாவிடம்… பார்க்க பார்க்க என் மனசு வலித்தது. என் கண்களில் இருந்து தாரைதாரையாக கண்ணீர்.
பக்கத்தில் இருந்த என் கணவர் என்னை அதட்டினார்… “தெரியும்…நீ இப்படி தான் உணர்ச்சி வசப்படுவாய் என்று. யாராவது அடையாளம் தெரிந்து, கவனிக்கப் போகிறார்கள்..என் மானத்தை வாங்காதே.”
நான் அழுதது…படத்தில் என் மகன் நன்றாக நடிக்கிறானே என்பதற்காக, பெருமைப்பட்டு, வந்த ஆனந்தக் கண்ணீர் அல்ல. படத்தில் நடிக்கும் அந்த அம்மாவிடம்… அவன் காட்டும் பாசத்தில், ஒரு கடுகளவு கூட, இப்போது அவன் என்னிடம் காட்டுவதில்லையே..!!! என்ற என் ஆதங்கம் அழுகையாய் மாறிவிட்டது.
என்னுடன் அன்பாய் பேசி , சிரித்து வருடங்கள் ஆகிவிட்டன. ஒரு போன் கூட இல்லை . நல்லா இருக்கியா..? உடம்பு எப்படி இருக்கு..? சாப்டியா..? ஒரு வார்த்தை. ம். இல்லவே இல்ல. என்னுடன் பேச அவனுக்கு நேரமே இல்லை. அவ்வளவு பிஸி..!
ஒரே ஊரில் தான் இருக்கிறோம். சென்னையில் அவன், மனைவியுடன் தனியாய் வசிக்கிறான். மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கூட.. வீட்டுக்கு வந்து எங்களை பார்க்க, அவனுக்கு நேரமில்லை.
அவனுடன் அன்பாய் பேச, அவனை மடியில் சாய்த்து அவன் தலையை கோதி விட , அவன் விரும்பி சாப்பிடுகிற உணவை சமைத்துக் கொடுக்க , ஏன்..? அவன் மீது சாய்ந்து கொள்ள கூட தான், இந்த தாய் மனம் ஏங்குகிறது. என்ன இருந்து , என்ன பயன்…? பெரிய பங்களா. ஆடி கார். ஆனால் மனசுக்கு ஆறுதல் இல்லையே. பேரக் குழந்தைகளை கூட பார்த்து கொஞ்சுவது அரிதாகிவிட்டது.
இதெல்லாம் கூட எனக்கு இப்போது எட்டா கனியாகிவிட்டது. வயதான காலத்தில் நாங்கள் இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு, பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறோம்.
தியேட்டரிலாவது அவனை பார்க்கலாம் என்றால்… அப்படத்தின் கதை என்னை மேலும் சோகமாக்கி விட்டது. அவனோட நடிப்பை, அவன் முகத்தை பார்க்க ஆவலாய் வந்தேன். இங்கு வந்து அழுது கொண்டிருக்கிறேன்.
அவன் உலகம்…ஒரு தனி உலகமாகிவிட்டது…!
படத்தில் அம்மாவாய் நடித்துக் கொண்டிருப்பவரிடம் அவ்வளவு பாசத்தை காட்டி பேசுகிறான்.. என் பையனா இது…? அந்த அம்மாவின் மடியில் முகம் புதைக்கிறான். அன்போடு அவள் தோளில் சாய்கிறான்.முத்தம் கொடுக்கிறான்.
சிறு வயதில் அம்மா அம்மா என…என் சேலையை பிடித்துக் கொண்டு திரிந்த என் மகன், இன்று என்னை விட்டு வெகு தூரம் சென்றுவிட்ட ஒரு உணர்வு என்னுள்.
நான் போன் செய்தால்…. வை போனை. வேலை இருக்கு எனக் கூறும் அவனின், பேச்சு என் ஆழ் மனதினை என்னவோ செய்கிறது. இன்று அவனின் இத்தகைய நடிப்பினை பார்க்கும்போது என்னால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரே மகன். என்னுடன் பேசுவதற்கு அவனுக்கு விஷயங்களே இப்போது இல்லையாம். என்ன பேசுவது..? என்கிறான். அப்படி ஆகிவிட்டது தாய் மகன் உறவு.
படத்தில் நடிக்க தனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என.. என் மடியில் படுத்து அழுத என் மகன், இப்போது உன்னுடன் பேச என்ன இருக்கிறது என கேட்கிறான்.
ஆறு மாதங்களுக்குப் பிறகு, போன வாரம் வீட்டுக்கு வருவதாய் மருமகள் போன் செய்திருந்தாள். பிறகு வேறு ஒரு வேலை வந்து விட்டது எனக் கூறி வரவில்லை .
அந்த மன அழுத்தத்திற்குப் பிறகே, இன்று ரிலீசான எனது மகனின் படத்தினை ,முதல் நாளே…! வந்து பார்க்க வேண்டும் என்ற ஆசையிலும் ஆவலிலும் இங்கு வந்தேன்.
ஆனால் என்னால் படத்தை ரசித்து பார்க்க முடியவில்லை . மனது கிடந்து தவித்தது. விஜய்யின் அம்மா நான் என , பக்கத்தில் தெரிந்தால் , சூழ்ந்து கொள்வார்கள் என்பது எனக்கு தெரியும். அதனால் அழுகையை அடக்கிக் கொண்டு, படம் முடிவதற்கு முன்பே கிளம்பி விட்டோம்..
வீட்டுக்கு வந்த எனக்கு இரவு சாப்பிட பிடிக்கவில்லை. இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை. படத்தில் எனது மகன் விஜய்…, அந்த நடிக்கும் அம்மாவுடன் பேசிய விஷயங்கள், திரும்பத் திரும்ப என் மணக்கண் முன்னே வந்து கொண்டிருந்தது.
விஜய்யின் அப்பா… நான் அழுவதை பார்த்து , எனது உணர்வுகளை உணர்ந்து ,சிரித்துக் கொண்டிருந்தார்.
“லலிதா…இத்தனை வருஷம் கழித்தும், உன்னிடம் உன் மகன் அன்பு காட்டவில்லை, போன் செய்யவில்லை, உன்னை வந்து பாக்கல, அப்படின்னு இவ்வளவு வருத்தப்படுறியே…!
அவன் எவ்வளவு பிசியான நடிகன். அவனுக்கு எவ்வளவு ரசிகர்கள். எவ்வளவு நண்பர்கள். அவனோட வேலை அது. அதை அவன் செய்து தான் ஆகணும்.
இந்த சினிமா இண்டஸ்ட்ரில, அவன் கால் ஊன்ற எவ்வளவு கஷ்டப்பட்டான் என உனக்கே தெரியும் லலிதா. நீயே அவனோட படம் நல்லா ஓடணும்னு கோவில் கோவிலா போய் வேண்டிகிட்ட…! அப்போ நீ போகாத கோயிலே இல்ல. அவன் படம் மிகப்பெரிய வெற்றி அடையணும் என்று , திருப்பதிக்கு போய் மொட்டை கூட அடிச்ச நீ. ஞாபகம் இருக்கா. அவனும் மிகவும் கஷ்டப்பட்டு தான், இந்த நிலைக்கு வந்திருக்கிறான்.
அப்படி கஷ்டப்பட்டு கிடைச்ச பேர… அவன் நிலை நாட்டணும்மா… இல்லையா? உன் கூட பாசம் இல்லாம இல்ல. அம்மா தானே… அப்புறம் பேசிக்கலாம் என்ற உரிமை. பிறகு சமாதானப்படுத்திக்கலாம் அப்படின்னு நினைச்சுட்டு இருப்பான்.
அவனுக்குன்னு ஒரு குடும்பம் இருக்கு. பொண்டாட்டி கூட பேசுவானா..? புள்ளைங்கள கவனிப்பானா..? நடிக்கிறதை பாப்பானா? அவன் ரசிகர்களோட கேள்விக்கு பதில் சொல்வானா? ரசிகர்களை மதிக்கவில்லை என்றால் அவ்வளவுதான்.. எவ்வளவோ விஷயங்கள் இருக்கு லலிதா.. அழுகிறதை விட்டுட்டு புரிஞ்சுக்க… ட்ரை பண்ணு.
இந்த வயதில் நீ இப்படி நினைச்சேன்னா…மருமகளோட நிலைமையை பாரு. மருமகள் கூடவும் பேசுறதுக்கு அவனுக்கு நேரமே இல்லை. எல்லா குடும்ப வேலைகளையும் அவ தலை மேல போட்டுகிட்டு பண்றா.
அங்கே சினிமாவுல, உன் பையன், காதல் காட்சியில் நடிக்கும் போது, அதை பார்க்கிற மருமகளோட மனசு, எப்படி இருக்கும்னு நெனச்சு பாரு…! அப்பாவுக்கு நம்ம கூட டைம் ஸ்பென்ட் பண்ண நேரமில்லையே என என்னும் புள்ளைங்களோட நிலைமையை நினைச்சு பாரு..! நம்ம அப்பா நம்ம ஸ்கூலுக்கு வர்றதில்ல. மத்த அப்பாக்கள் மாதிரி இருக்கிறதில்ல. அப்படின்னு அவங்களுக்கு எவ்வளவு ஏக்கம் இருக்கும்…? நம்ம மருமகளுக்கு எவ்வளவு மனசு கஷ்டமா இருக்கும்..?
மருமக, புள்ளைங்க, அவங்களோட வேதனையை பார்க்கும் போது உன்னுடைய வேதனை ரொம்ப சிறியது லலிதா.”
பெரிய பிரசங்கமே செய்து விட்டார் விஜய்யின் அப்பா.
என் மனசு லேசானது. புத்தியில் கொஞ்சம் உரைத்தது.
பொதுவா அவனுடன் போன் பேச, எனக்கு தயக்கம். அவனாக எனக்கு போன் பேசவில்லையே என்ற ஆதங்கம் என்னுள். என்ன செய்ய..? இப்போ நானே… அவனுக்கு காலையில் போன் செய்தேன்.
தூக்க கலக்கத்தோடு போனை எடுத்த விஜய், என்னம்மா…எப்படி இருக்க என்றான். மறுபடியும் என் கண்களில் நீர் முட்டியது. சமாளித்துக் கொண்டு, போன வாரம் நீங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு நீ வரல. நாளைக்கு கண்டிப்பா வீட்டுக்கு வா விஜய். சரியா…?
நேத்து தியேட்டரில் போய் உன்னோட அந்த “வைராக்கியம்” என்ற படத்தை நானும் உன் அப்பாவும் சென்று பார்த்தோம்.
ம்..அப்படியா..? எப்படி ஏன் நடிப்பு..? நடிப்பு நல்லா இருந்துச்சா.?
ரொம்ப நல்லா நடிச்சிருக்கப்பா..! நான் அழுதுட்டேன். அதுல அந்த… உன்னோட அம்மாவ நடிக்கிற அந்த அம்மா ரொம்ப பாக்கியசாலி.
ஏம்மா அப்படி சொல்ற..!
ஆமா அந்த அம்மா மேல தான், அவ்வளவு அன்பு காட்ற. இந்த அம்மாவை பாக்கக்கூட உனக்கு நேரம் இல்ல . அதனால தான் சொன்னேன்.
ஏம்மா… இப்படி இருக்க நீ…? உனக்கு அறிவே இல்ல. அது நடிப்புமா… இல்லாட்டி எவனும் படத்த பாக்கவே மாட்டான். என் பெயரை தக்க வச்சுக்கணும் இல்ல. என் வேலை. அம்மா என்னோட உண்மையான அன்பு… உன் மேல தாம்மா.
ஞாயிற்றுக்கிழமை கண்டிப்பா வருவோம். கோழி வறுவலும் மட்டன் குழம்பும் செய்து வை. வந்து உன் சமையல ஒரு பிடி பிடிக்கனும். உன் கையால சாப்பிட்டு, ரொம்ப நாள் ஆச்சு.
நான் அழும் சத்தம் அவனுக்கு கேட்டுவிடக் கூடாது என்பதற்காக போனை உடனே கட் செய்து விட்டு, கண்ணீரைத் துடைத்தேன். நான் சகஜ நிலைக்கு வர அரை மணி நேரம் ஆனது.
விஜய்யின் அப்பா என்னை கிண்டல் அடித்தார் . என்ன மகனோட பேசியாச்சா..? மனசு சமாதானம் ஆயிடுச்சா …? இதுதான் நிஜம். அது சினிமா. உன் மருமகள் பரவாயில்லை. சினிமாவை சினிமாவாய் பார்க்க கற்றுக் கொண்டு விட்டாள். உன்னால் அது முடியவில்லை.
தாய் மனம் தவித்தாலும், இப்போதைக்கு என் மனம் கொஞ்சம் அமைதியானது. ஆம்…அது சினிமா.