தாயும் கன்றும்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 3, 2020
பார்வையிட்டோர்: 7,831 
 
 

கன்றுக்குட்டிவர வர நோஞ்சலாகிக்கொண்டு வந்தது. ஒரு வீட்டிலிருந்து மற்றொரு வீட்டிற்கு நடப்பதற்குள் அதைப் பத்துதடவை உந்தித் தள்ளவேண்டியிருந்தது. பால்காரப் பாலகிருஷ்ணன் அருமையாக வளர்த்த மாட்டின் கன்று அது. அவன் அருமையாக வளர்த்தது மாட்டைத்தான்; அதன் கன்றை அல்ல. கன்று மாடு சுரப்பு விடுவதற்காக உள்ள கருவி என்று எண்ணினானே ஒழிய, அதற்கும் உயிர் உண்டு என்பதை அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை. பால் கறக்கும் குவளை, தீனி வைக்கும் கூடை-இவைகளெல்லாம் அவனுடைய பால் வியாபாரத்திற்கு உதவி செய்தன. அவை பாலைக் குடிக்கின்றனவா? இல்லையே! கன்றுக்குட்டியும் அப்படியல்லவா இருக்க வேண்டும்? பசு மாட்டின் மடியை முட்டிப் பால் சுரக்கும் படி பண்ணிவிட்டுப் பேசாமல் வந்துவிடவேண்டும். அப்படி இல்லாமல் அது மடியை விடாமல் பற்றிக் கொள்கிறதாவது! இழுக்க இழுக்க வராமல் அது முரட்டுத்தனம் பண்ணினபொழுது பாலகிருஷ்ணனுக்குக் கோபம் கோபமாக வந்தது. “உன் தோலை உரித்துவிடுவேன்!” என்று அவன் கத்துவான். அந்தப் பேச்சைப் புரிந்து கொள்ளும் சக்தி அந்தக் கன்றுக்குட்டிக்குக் கிடையாது. பக்கத்து வீட்டுப் பால்காரன் உண்மையாகவே ஒரு கன்றுக் குட்டியின் தோலை உரித்து அதற்குள்ளே வைக் கோலை அடைத்துப் பால் குடிக்காத கன்றுக்குட்டி ஒன்றைச் சிருஷ்டி பண்ணியிருக்கிறானே; அதுபோல இவனும் செய்யலாமே என்று யோசித்துப் பார்க்கும் அறிவு அதற்கில்லை. அதானால் அது ஒவ்வொரு தடவையும் தன் தாயின் மடியை விடாப் பிடியாகப் பற்றிக்கொண்டு தான் இருந்தது.

பசு மாட்டுக்குத் தீனி போடுகிறவன் அவன். பராமரிக்கிறவன் அவன். இப்போதெல்லாம், மாட்டுத் தீவனத்தின் விலை எவ்வளவு உயர்ந்துவிட்டது! இன்னும் தண்ணீருக்கு யாரும் விலை வைக்கவில்லை; அப்படி இருக்கிறதால்தான் பாலகிருஷ்ணன் பிழைக்கிறான். இல்லாவிட்டால் – அவனுடைய அம்மா, அவன், அவன் மனைவி மூன்று பேரும் உழைக்கிறார்கள்; மாட்டைப் பராமரிக்கும் உழைப்புத்தான். தன உறவில் நாட்டுப்புறத்திலிருந்து ஒரு பெண்ணை அவன் தன் வாழ்க்கைத் துணைவியாகப் பொறுக்கி எடுத்திருக்கிறான். பட்டணத்து வாயாடிகளைப் போன்றவள் அல்ல அவள்; நாலுபேர் செய்கிற வேலையை முகம் சிணுங்காமல் குதிரைக் குட்டியைப் போல் ஒருத்தியாகவே குதூகலத்துடன் செய்கிறாள். இவ்வளவு பேர் சேர்ந்து உழைக்கிற உழைப்பிலே கன்றுக்குட்டி ஒரு வேலையும் செய்யாமல் பாலைக் குடிக்கிறதென்றால் பாலகிருஷ்ணனுக்குக் கோபம் வருமா, வராதா? சொல்லுங்கள்!

ஆனால் அந்த நாட்டுப்புறத்துப் பெண் இருக்கிறாளே அவன் மனைவி-அவள் பேர் நல்லம்மாள்- அந்த நல்லம்மாள் கிராமத்தில் வளர்ந்தவள். “கொழு கொழு கன்றே, கன்றின் தாயே” என்று குழந்தைகள் கதை சொல்லும் கூட்டத்தைச் சேர்ந்தவள்; கன்றுக்குட்டி கொழு கொழுவென்றிருப்பதைப் பார்த்துக் கழிக்கும் உழவர் வீட்டிலே பிறந்தவள். “இந்தக் காளைக் கன்று நாளைக்கு எந்த மகா ராஜனுடைய வில் வண்டியிலே பூட்டும் பெருமையை அடையப் போகிறதோ!” என்று கன்றுக் குட்டியைப் பார்த்துப் பெருமைப்படும் இயல்புடையவர்கள் அவர்கள்.

நல்லம்மாளுக்கு இந்தக் கன்றுக்குட்டியைக் காணும் போதெல்லாம், “ஐயோ, பாவம்!” என்று இருக்கும். அவள் இந்த வீட்டுக்கு வந்து நாலு ஆண்டுகள் ஆகிவிட்டன. கன்றுக்குட்டி பிறந்து ஆறு மாதங்களே ஆகின்றன. அவள் கண்முன்னாலே பிறந்தது அது. இப்போது அது தேய்ந்து மாய்ந்து கொண்டிருந்தது.

“கன்றுக்குட்டிக்குப் பால் விடாமல் கறப்பது பாவம்!” என்று அவள் பாலகிருஷ்ணனிடம் சொல்லிப் பார்த்தாள். அவன், “சரிதாண்டி போடி; கன்றுக் குட்டிக்குப் பால் வாசனை போதாதோ? அதுதான் புல்லையும் தவிட்டையும் தினமும் ஒரு ரூபாய்க்கு மேல் திங்கிறதே!” என்று சொல்லிவிடுவான். அவல் அதற்குமேல் பேசமாட்டாள். கன்றுக்காகத்தான் பசுவினிடம் கடவுள் பாலை உண்டாக்கியிருக்கிறார் என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்ல, அவள் அரசியல்வாதி அல்லவே? அப்படி எடுத்துச் சொன்னாலும் பாலகிருஷ்ணன் கேட்கப் போகிறானா, என்ன?

* * *

பாலகிருஷ்ணனுடைய தாய் பக்கத்து வீட்டுக்காரியோடு குறைப்பட்டுக் கொண்டாள். “என்னவோ, இந்தப் பெண் வண்டு நாலு வருஷ காலம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு பிஞ்சு விடவில்லை. எனக்கோ வயசாகி விட்டது. காடு வா வா என்கிறது. பசுமாட்டையும் கன்றுக் குட்டியையும் பார்க்கிறபோதேல்லாம் இந்த வீட்டிலே ஒரு குழந்தை விளையாடவில்லையே என்ற துக்கம் பொங்குகிறது” என்றாள்.

“என்ன அதற்குள்ளே அவசரம்? நல்லம்மாளுக்கு அப்படி என்ன வயசாகிவிட்டது? அவளுக்கு இனிமேல் குழந்தை பிறக்காமலே போய்விடுமா?” என்று கேட்டாள் அடுத்த வீட்டுக்காரி.

“அவளுக்கு வயசாகவில்லை; அவசரமும் இல்லை. எனக்குத்தான் அவசரமாக இருக்கிறது. பேரனை மடியில் வைத்துக் கொஞ்சுவதற்குள்ளே நான் கண்ணை மூடிக் கொண்டால்-” அவள் பெருமூச்சுவிட்டாள்.

“அப்படி எல்லாம் பேசாதே! நீ விடு கொள்ளாத பேரன் பேத்திகளைப் பார்த்துச் சந்தோஷமாக இருக்கப் போகிறாய்” என்று ஆறுதல் கூறினாள் அடுத்த வீட்டுக்காரி.

தனக்குப் பேரன் பிறக்கவேண்டும் என்ற ஆவல் அந்தக் கிழவிக்கு அதிகமாகத்தான் இருந்தது. அந்த ஆவலிலிருந்து நல்லம்மாள்மேல் கொஞ்சம் வெறுப்புக்கூட உண்டாகிவிட்டது. “மலட்டுப் பெண்ணைக் கட்டிக் கொண்டாயே!” என்று தன மகனிடம் சில சமயங்களில் அலுத்துக்கொள்ளும் அளவுக்கு அந்த வெறுப்பு வளர்ந்தது.

ஒரு நாள் நல்லம்மாள் காதில் இது விழுந்தது. அன்று முழுவதும் அவளுக்கு ஒன்றுமே வேண்டியிருக்கவில்லை. இரவு அவள் புருஷன் அவளைச் சமாதானப்படுத்தினான். அப்போது அவளுக்கு ஆத்திரம் தாங்கவில்லை. “கன்றுக் குட்டிக்குப் பால் விடாமல் கறக்கிற கல் நெஞ்சக்காரர்களுக்குக் குழந்தை எப்படிப் பிறக்கும்?” என்று கேட்டு விட்டாள். இப்படி ஒருநாளும் அவள் பேசினதில்லை. பால கிருஷ்ணனுக்கு அந்த வார்த்தை சுருக்கென்றது. அவன் அவளைக் கோபிக்கவும் இல்லை; சமாதானப்படுத்தவும் இல்லை. எதிர்வீட்டு ராமனுடைய பெண் தன் கணவனுடன் பிறந்த வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் பிள்ளைப் பேற்றுக்கு இங்கே வந்து போனவள்தான்; இரண்டு வருஷமாக வரவில்லை. அவள் வந்ததில் ராமனுக்கும் அவன் மனைவிக்கும் அளவற்ற சந்தோஷம். அவள் குழந்தை இரண்டு வருஷத்துக்கு மிஞ்சின வளர்ச்சி பெற்றிருந்தது; தத்தித் தத்தி நடந்தது. அங்கங்களெல்லாம் உருட்டித் திரட்டி விட்டாற்போல் இருந்தன. அந்தக் குழந்தையை எடுத்துக்கொண்டு வீதியிலே வந்து நிற்பதிலே ஒரு தனி இன்பம் கண்டாள் ராமன் மனைவி. “எதற்காக அப்படிப் போய் நிற்கிறாய்? யார் கன்னாவது படப போகிறது!” என்று அவளுடைய மகள் குழந்தைக்குத் தாய்-கூவினாள். அந்தச் சமயம் பார்த்துத்தானா பாலகிருஷ்ணனனுடைய தாய் அந்தக் குழந்தையைப் பார்க்கவேண்டும்? எதிர்வீட்டுக்காரி தன் பேரானை இடுப்பிலே வைத்திருக்கும் கோலம் அவள் கண்ணிலே பட்டது. அதோடு சேர்ந்தாற்போல் அவள் பெண் பேசின பேச்சும் காதிலே பட்டது, ‘அட அதிசயமே!’ என்றுதான் முதலில் பாலகிருஷ்ணனுடைய தாய் நினைத்தாள். அடுத்த கணமே, ‘அதிசயந்தான்’ என்ற உண்மையான எண்ணம் உண்டாயிற்று. ‘இரண்டு வயசில் இவ்வளவு வளப்பத்தோடு ஊரில் உள்ள குழந்தைகள் இருக்கின்றனவா? பொட்டலங் கட்டும் காகிதத்தில் சில குழந்தைகளின் படம் வருகிறதே, அப்படியல்லவா இந்தக் குழந்தை இருக்கிறது..’

மறுபடியும் அந்தக் குழந்தையை நன்றாகப் பார்த்தாள். கொழு கொழுவேன்றிருந்த கோலத்தைக் கண்ணால் முகந்து முகந்து பருகினாள். ‘அதிசயமான குழந்தைதான். எந்தத் தாயும் பெருமைப்பட வேண்டிய குழந்தை’ என்ற தீர்மானத்துக்கு வந்தாள். “நமக்கு ஒரு நோஞ்சல் குழந்தைகூட அதிசயந்தான். இங்கே மலட்டு மரமல்லவா வளர்கிறது!” என்று அலுத்துக் கொண்டாள்.

“அம்மா, குழந்தையை உள்ளே கொண்டு வா; பால் கொடுக்க வேண்டும்” என்று குழந்தையின் தாய் சொன்னது இவள் காதில் விழுந்தது. தாய்ப்பாலின் ஊட்டந்தான் அந்தக் குழந்தைக்கு அவ்வளவு வளப்பத்தையும் பொலிவையும் கொடுத்திருக்கிறது என்பது அவளுக்கு நினைவு வந்தது.

எதிர்வீட்டு ராமனுடைய பெண் தன் குழந்தையை எடுத்துக்கொண்டு பாலகிருஷ்ணன் வீட்டுக்கு வந்தாள்.

“குழந்தைக்கு என்ன அம்மா கொடுக்கிறாய்?” என்று கேட்டாள் பாலகிருஷ்ணனின் தாய்.

“என் பால்தான்” என்று அலட்சியமாகச் சொன்னாள் அந்தப் பெண்.

“பார்த்தாயா? நான் நினைத்தேன்” என்று சட்டென்று பாலகிருஷ்ணன் தாய் கூறினாள்.

அப்போது மற்றொரு குரலும் எழுத்து. பாலகிருஷ்ணன் மனைவி நல்லம்மாள்தான் பேசினாள். “அதன் அதன் தாய்ப் பால் வகையாக இருந்தால் குழந்தை நன்றாகத்தான் இருக்கும்” என்று அவள் சொன்னாள்.

அவள் பேச்சு அவள் மாமியாருக்கு எரிச்சலை உண்டாக்கியது, “ஆமாம், நீ ரொம்ப கண்டு விட்டாய்! தாய்ப் பாலைப்பற்றிப்பேச உனக்கு ஏது வாய்?” என்று சீறினாள்.

மூன்றாவது பேர்வழியை வைத்துக்கொண்டு அவள் அப்படிப் பேசினது நல்லம்மாளுக்குப் பிடிக்கவில்லை. “தாய் என்றால் எல்லாம் தாய்தான். அதன் பாலைக் கன்றுக் குட்டிக்குக் கொடுத்து வளர்க்கத் தெரியாதவர்களுக்கு மாத்திரம் தாய்ப் பாலின் அருமை தெரிந்துவிடுமா, என்ன?” – அவள் பேச்சில் சிறிது பலமாகவே வெறுப்புத் தொனித்தது. ரோசம் கொண்ட பேச்சு அல்லவா அது?

இப்படிப் புயல் மூண்டவுடன் எதிர்வீட்டுப் பெண் நாகரீகமாக விலகிக்கொன்டாள். “கடைக்குப் போய்ச் சாமான் வாங்க வேணும். நான் நாளைக்கு ஊருக்குப் போகிறேன், அத்தை” என்று சொல்லி விடை பெற்றாள்.

வாசல் திண்ணையில் இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்தான் பாலகிருஷ்ணன்; அவனுக்குக்கூடத் தன் தாயிடம் கோபம வந்தது. அயலாருக்கு முன் அவள் நல்லம்மாளைப் பழித்தது அவனுக்கும் பொறுக்கவில்லை. * * * * “இல்லை அம்மா, கன்றுக்குட்டியை இன்னும் கொஞ்சம் விட்டுப் பிறகு பிடி, அம்மா!”

“இது என்னப்பா புதிய பேச்சு?”

“புதிசு அல்ல. கன்றுக்குட்டி நன்றாக இராவிட்டால் முநிசிபாலிடியில் அபராதம் போடுகிறார்களாம். பால் வியாபாரமே பண்ணக் கூடாதென்று தடுத்து விடுகிறார்களாம்” என்றான் பாலகிருஷ்ணன்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அனால் நல்லம்மாளுக்கு நன்றாக விளங்கிவிட்டது. “நீ இப்படி மணம் கசந்து கொள்கிறாய்? அந்தக் குழந்தையைப் பார்த்தது முதல் எனக்கே மனசு இறங்கிவிட்டது. நான் பண்ணுகிற அக்கிரமம் புரிகிறது. ஏதாவது தந்திரம் பண்ணி அம்மாவை ஏமாத்தலாம். அம்மா ஏமாந்தாலும் தப்பு இல்லை; கன்றுக் குட்டியும் நீயும் ஏமாந்து போகக் கூடாது” என்று அவன் தனிமையிலே சொன்ன வார்த்தை இப்போது செயலாக உருவாகிறது என்று விளங்கியது.

அன்றுமுதல் கன்றுக் குட்டியின் பாடு குஷிதான்.

* * *

ஆறு மாதம் கழித்து எதிர்வீட்டுப் பெண் மறுபடியும் வந்திருந்தாள். அவள் தங்கைக்குக் கல்யாணம்; அதற்காக வந்தாள். பாலகிருஷ்ணன் வீட்டுக் கன்றுக்குட்டி வாசலில் வந்ததைப் பார்த்தாள். தன் வீட்டு வாசலில் இருந்தபடியே பாலகிருஷ்ணன் தாயை, “அத்தை, வேறே மாடும் கன்றும் வாங்கியிருக்கிறீர்களா?” என்று கேட்டாள்.

“இல்லை, இல்லை, பழைய மாடுதான்.”

“பின்னே!” அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது.

“எல்லாம் நீ கற்றுத் தந்த வித்தை” என்று பதில் வந்தது.

“மருமகள் சௌக்கியமா?” என்று அந்தப் பெண் கேட்டாள். அதுத்த கணம் பழைய காட்சி நினைவுக்கு வந்ததனால் ‘ஏன் கேட்டோம்’ என்று நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்த சீறல் தோன்றவில்லை. “அவள் பத்துநாள் பிறந்த வீட்டில் இருந்துவிட்டு வரப் போயிருக்கிறாள்” என்றாள் பாலகிருஷ்ணன் தாய், முகமலர்ச்சியுடன்.

“என்ன விசேஷம்?”

“சாமி கண் திறந்து பார்த்திருக்கிறார்” என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்து நின்ற கன்றுக் குட்டியை அந்தக் கிழவி தடவி கொடுத்தாள்.

– குமரியின் மூக்குத்தி (சிறு கதைகள்), அமுதம், முதற்பதிப்பு-டிசம்பர், 1957, நன்றி: https://www.projectmadurai.org

கி. வா. ஜ என்றழைக்கப்பட்ட கி. வா. ஜகந்நாதன் (ஏப்ரல் 11, 1906 - நவம்பர் 4, 1988) குறிப்பிடத்தக்க தமிழ் இதழாளர், கவிஞர், எழுத்தாளர் மற்றும் நாட்டுப்புறவியலாளர், இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த தமிழறிஞர்களில் ஒருவர் (1906-1988). இவர் தமிழறிஞர் உ. வே சாமிநாதய்யரின் மாணாக்கராவார். கலைமகள் இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். 1967 இல் இவரது வீரர் உலகம் என்னும் இலக்கிய விமர்சன படைப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *