கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினகரன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 26, 2015
பார்வையிட்டோர்: 20,930 
 
 

1

சித்திக்கு நாளை வளைகாப்பாம் சித்தி பாட்டியும், அப்பா பாட்டியும் பேசுவது என் காதில் விழுந்தது.

அதோடு சித்தியும் அப்பாவும் குட்டிப் பாப்பாவுக்கு, என்ன பெயர் வைக்கலாம் என்று இப்போதே பேசிக் கொள்வதைக் கவனித்த பெரியவர்கள் அனைவரும் மனதிற்குள் மகிழ்ச்சியைக் கொண்டாடுவதையும் நான் கவனிக்கத் தவறவில்லை, இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த எனக்கும் ஆசையாகத்தான் இருக்கிறது குட்டிப் பாப்பாவை பார்ப்பதற்கு. குட்டிப் பாப்பா சித்தி சாடையில் இருக்குமா, அப்பா சாடையில் இருக்குமா என்ற கேள்வியோடு அன்றைய இரவின் வருகை என் கண்களைச் சூழ்ந்து கொண்டது.

மறுநாள் காலை எல்லோர் முகத்திலும் ரொம்பவே சந்தோசம் களை கட்டியிருந்தது. சித்தியின் முகத்தில் கொஞ்சம் கூடுதலாகவே சந்தோசம்.

தாயுமானவள்

இந்த மூன்று நாட்களிலும் பாட்டிகளும், தாத்தாக்களும், அத்தையும் கவனித்ததில் சித்தி ஒரு சுற்று பெருத்துவிட்ட மாதிரி எனக்குள் ஓர் எண்ணம். அப்படி ஒரு சாப்பாடு விதவிதமாய். அதோடு அவர்கள் சித்தியை ஒரு வேலையும் செய்யவிடவில்லை.

என்னைப் பள்ளிக்கு அனுப்பும் வேலையைக்கூட தாத்தாவும் பாட்டியுமே பார்த்துக் கொண்டார்கள்.

அன்றும் அதேபோல் என்னை பள்ளிக்கு அனுப்புவதற்காக யுனிபார்ம், ஷூ எல்லாம் எடுத்து வைத்த தாத்தாவைப் பார்த்த நான், “”பள்ளிக்கூடம் போகமாட்டேன்” என்று அடம் பிடித்தேன்.

இதைக் கேட்ட பாட்டி என் அருகில் வந்து, “” சித்திக்கு சாயங்காலந்தான்டா செல்லம் வளைகாப்பு, நீதான் மூணு மணிக்கு வந்துடுவியே. ஆறாம் வகுப்புப் பாடம் இப்பயே ஆரம்பிச்சிட்டாங்கன்னு சொல்ற. நீ போகலைன்னா அந்தப் பாடமெல்லாம் உனக்குப் புரியாதுடா செல்லம்” என்று சொன்ன பாட்டி, “”எனக்குப் பிடிச்ச நெய்யுருண்டையும் செஞ்சு வைக்கிறேன்”னு சொல்ல பாதி மனதோடு சம்மதம் தெரிவித்தேன்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சித்தி , என்னைக் கூப்பிட்டு என் காதோரம் சொன்ன சேதியைக் கேட்டு, “”சரிம்மா சமத்தா போயிட்டு வரேன்” என்று நான் சொன்னதைக் கேட்ட எல்லோர் முகத்திலும் ஆச்சரியமும் அது என்ன சேதியாக இருக்கும் என்ற கேள்வியும், எல்லோர் மனதிலும் எழுந்திருக்க வேண்டும்.

2

சித்தி சொன்ன சேதியை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில், என்னைப் பள்ளிக்கு அனுப்புவதையும் மறந்து அனைவரும் என்னையே சுற்றிச் சுற்றி வந்தார்கள். நானும் அவர்களின் பொறுமையை அதிக நேரம் சோதிக்க விரும்பவில்லை. ஒவ்வொருவரின் காதிலும் சத்தமில்லாமல் ஏதோ ரகசியம் சொல்வதைப் போல நான் சொன்ன சேதியைக் கேட்ட அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி வெள்ளம். அப்பா தாத்தாவைத் தவிர.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அப்பா தாத்தா “உம்’மென்று முகத்தை வைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்த எனக்குப் பாவமாய் இருந்தது. அடுத்த நொடியில் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்துவிட்டு, “” தாத்தா உன்கிட்ட கடைசியா சொன்னாத்தான் சந்தோசப்படுவே” என்று சொல்லி அவர் காதில் “”தம்பிப் பாப்பாவைப் பெத்துத்தரேன்னு சித்தி சொன்னாங்க” என்று சத்தமாய் சொன்னவுடன் தாத்தாவின் சந்தோசம் என் கன்னத்தில் முத்தமாய் பதிந்தது.

இந்த சந்தோசத்தோடயே எல்லோரும் என்னை பள்ளிக்கு அனுப்பிவைத்தார்கள்.

அன்று மாலை பள்ளி முடிந்து திரும்பிய எனக்காக, தாத்தா விட்டு வாசலில் காத்திருந்தார். பள்ளி வேனிலிருந்து இறங்கியதும் தாத்தாவிடம் புத்தகப் பையைக் கொடுத்துவிட்டு, விட்டுக்குள் நுழைந்ததும் சித்தியைத் தேடிய எனது கண்களில் சித்தி அசந்து தூங்குவது தெரிந்தது.

சித்தியை எழுப்ப மனமில்லாமல் அவள் அருகில் படுத்துக் கொண்டேன். எனக்கு தூக்கம் வரவில்லை, சித்தியின் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சித்தியின் தூக்கம் கலைந்து, என் நெற்றியில் அழுந்த முத்தம் கொடுத்தாள். “”இன்னொன்னு, இன்னொன்ன்னு” என்று கேட்டு கேட்டு சித்தி கொடுத்த முத்தங்களால் எனது கன்னமும், சித்தியின் வாயும் வலிக்க “”போதுண்டா செல்லம்” என சித்தி நிறுத்திக் கொண்டாள்.

“”சித்தி இனிமே தம்பிப் பாப்பாவத்தானம்மா பக்கத்தில படுக்கவச்சு முத்தம் கொடுப்ப, எனக்கு கொடுக்கிறதுக்கு உனக்கு இனிமே நேரம் இருக்காதுல்ல, அதனாலதான் இப்பவே எல்லாத்தையும் மொத்தமா வாங்கிட்டேம்மா”

இதைக்கேட்ட சித்தியின் கண்களிலிருந்து கண்ணீர் முட்டிக்கொள்ள “”போடி செல்லம். நீங்க ரெண்டுபேரும் எனக்கு ரெண்டு கண்கள்தான்டி”

3

இப்படிச் சொன்ன சித்தியின் கன்னத்தில், என் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிய, என் உதடுகள் முத்தமழை பொழிந்தது.

“”என்னடிம்மா நேரமாகுது, எழுந்து குளிச்சு ரெடியாகணும்” பாட்டியின் குரல் கேட்டு, சித்தி எழுந்துவிட்டாள்.

அடுத்த அரைமணி நேரத்தில் சித்தி குளித்து புதுப்புடவை கட்டி ஹாலில் சாமி அறையின் முன்னால் உட்கார்ந்தாள்.

சித்தி பார்க்க அழகாய் இருந்தாள். “” நீ அழகும்மா சடையில் பூவெல்லாம் வச்சு கட்டியிருக்கிறதுல இன்னும் ரொம்ப அழகா இருக்கம்மா” என்று சித்தி காதில் சொல்ல, சித்தி கன்னத்தில் குழிவிழ சிரித்தது கூடுதல் அழகு.

சித்தி பாட்டி, அப்பா பாட்டி, அத்தை, உறவினர்கள் மற்றும் பக்கத்து வீட்டு ஆண்டிகள் அனைவரும் சித்தியின் கன்னத்தில் சந்தனமிட்டு, கையில் கண்ணாடி வளையல்களை போட்டுவிட்டார்கள்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த அனைவரின் முகங்களும் சந்தோசத்தால் நிரம்பி வழிந்தன.

அந்த அரைமணிப் பொழுது அனைவருக்கும் ஆனந்தமாய் கழிந்தது.

என் கண்முன் நடந்தவை அனைத்தும் சினிமாக் காட்சிகள் போல் ஒவ்வொன்றாய் நகர்ந்து கொண்டிருக்க, அடுத்த காட்சிக்குத் தயாரானாள் அப்பா பாட்டி.

அப்பாவைப் பக்கத்து தெருவில் இருக்கும் விநாயகர் கோவிலுக்கு போகச் சொன்னாள். இதற்கான காரணம் என்னவென்பதை அடுத்த பத்தாவது நிமிடத்தில் தெரிந்து கொண்டேன்.

சித்தியை, தாத்தா வீட்டிற்கு பிரசவத்திற்காக அழைத்துச் செல்லும்பொழுது, அப்பா வீட்டில் இருக்கக் கூடாது என்பது சம்பிரதாயமாம்.

இவை எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த நான், சித்தி அருகில் சென்று மெüனமாய் நின்றதையும், என் முகத்தில் தெரிந்த மாற்றத்தையும் கவனித்த சித்தி, என் மெüனத்தைக் கலைத்தாள்.

“”செல்லக்குட்டிம்மா நான் சொல்றத பொறுமையா சமத்தா கேக்கணும்” சித்தி இப்படிச் சொல்ல தலையாட்டினேன் மெüனமாக.

4

“”அப்பா தாத்தாவுக்கும், பாட்டிக்கும் ரொம்ப வயசாயிடுச்சு, அப்பாவும் அடிக்கடி வேலை விசயமா வெளியூர் போயிடுவாங்க. அந்த நேரத்தில என்னை ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப் போகணும்னா உதவிக்கு யாரும் இல்லைல்லடா கண்ணு அதனாலதாண்டா செல்லம்” சித்தி மீண்டும் தொடர்ந்தாள்.

“”சித்தி தாத்தா வீட்ல, அத்தை, மாமா எல்லாரும் இருக்காங்க. அவசரத்திற்கு உதவிசெய்றதுக்கும் சொந்தங்க நிறைய இருக்காங்கம்மா. அதெல்லாம் யோசிச்சுத்தாம்மா அப்பாவும் நானும் சேர்ந்து இந்த முடிவ எடுத்தோம். ஒரு மாசந்தானம்மா. உனக்கு தம்பிப் பாப்பா வேணுந்தான. சித்திக்கு நீயும் போன் பண்ணுவியாம், நானும் போன் பண்ணுவேனாம். சமத்துக்குட்டிதான. சித்தி போயிட்டுவரேன்” புறப்படுவதற்குத் தயாரானாள்.

சித்தி பாட்டியும், தாத்தாவும், அத்தையும் எனக்கு முத்தம் கொடுத்து, “”வேளாவேளைக்கு சாப்பிடணும், நல்லா படிக்கணும்” இப்படி சொல்லிவிட்டு காரில் ஏறிக்கொண்டார்கள்.

சித்தி கன்னத்தில் நானும், என் கன்னத்தில் அவளும் முத்தத்தைப் பகிர்ந்துகொள்ள, சித்தி காரில் ஏறிக்கொண்டாள்.

எல்லோர் முகத்திலும் ஆனந்தக் கண்ணீர் பொங்க, கார் புறப்பட்டு அடுத்த தெருவைக் கடக்கும்போது. சித்தியின் கண்கள் அப்பாவைத் தேடியிருக்கும் என்று மனதிற்குள் சொல்லியவாறு, வீட்டிற்குள் சென்றவுடன், வீடே நிசப்தமாய் இருந்ததை என்னால் உணரமுடிந்தது.

கடந்த ஒரு மணிநேர நிகழ்வுகளை மறக்கும்பொருட்டு, பாடப் புத்தகத்தில் என் கவனமும், தாத்தா, பாட்டி டிவி நிகழ்சிகளைப் பார்க்கவும், அடுத்த ஒருமணிநேரம் கடந்துவிட்டது.

அப்பாவும் அடுத்த அரைமணிக்குள் வீடு வந்தவுடன், அனைவரும் இரவுச் சாப்பாட்டை முடித்துக்கொண்டு, உடல் அசதியின் காரணமாக அனைவரும் ஓய்வு எடுக்கத் தயாராகிவிட்டார்கள்.

நாளைக் காலைல சித்திக்கு போன் பண்ணலாம் என அப்பா என்னிடம் சொல்லிவிட்டு தூங்கப்போய்விட்டார். தாத்தாவும் சீக்கிரமே தூங்கிவிட்டார்கள்.

நானும் பாட்டியும் ஹாலிலேயே படுத்துக்கொண்டோம். பாட்டி என் தலையை வருடிவிட்டு, நெற்றியில் அழுந்த ஒரு முத்தம் கொடுத்துவிட்டு அசதியின் காரணமாக அவர்களும் தூங்கிவிட்டார்கள்.

5

என்னைப் பெற்ற அம்மாவின் நினைவுகள் என்னைத் தூங்கவிடவில்லை. இப்படி இரண்டாண்டுகளுக்கு முன்னர் நான் தூக்கமின்றி தவித்தபொழுது, அப்பா என் அருகில் வந்து உச்சிமுகர்ந்து சொல்லியது என் நினைவில் நிழலாடியது.

“”செல்லக்குட்டிம்மா நான் சொல்றத கவனமாக் கேக்கணும். தாத்தா, பாட்டிக்கும் வயசாயிடுச்சு, என்னோட வேலைப்பளு காரணமா, உன்ன பள்ளிக்கூடத்துக்கு அனுப்புறதுலயிருந்து உன் படிப்புலயும் என்னால கவனம் செலுத்த முடியல. அதோட உன்னோட தேவைகளை அறிந்து அதையும் என்னால பூர்த்தி பண்ணமுடியல. அலுவலக வேலையா அடிக்கடி வெளியூர் போறதும் ஒரு காரணமா இருக்கு”. அப்பா மேலும் பேச ஆரம்பித்தார்.

“”அதனால தாத்தா பாட்டிக்கு உதவிக்கும், உன்ன பார்த்துக்குறதுக்கும், எனக்கு ஒரு துணையா இருக்குறதுக்கும், நான் கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கேன். இது உன்னோட முழு சம்மதத்தோடதான் நடக்கணும்மா. இதுக்கு உன்னோட பதிலை இப்பவே நான் எதிர்பார்க்கல. நல்லா யோசிச்சு உன் விருப்பத்தை சொல்லலாம். அப்பா இதனைக் கேட்டது என்னுடைய எட்டாவது வயதில்.

என்னைப்பெற்ற அம்மா, எங்களை விட்டு பிரிந்து இரண்டாண்டுகள் கழிந்த பின்னரே, அப்பாவின் மனதில் எழுந்த கேள்வி இது.

அப்பாவின் மனதிற்குள் இப்படி ஓர் எண்ணம் எழுந்ததில் எந்த ஒரு தவறும் இல்லைதான். அதோடு, எங்களது நலனில் அக்கறை கொண்டே, இந்த எண்ணம் அவருடைய மனதில் எழுந்திருக்கவேண்டும்.

6

இதேபோல் அப்பாவிற்கும் அவருடைய ஆசைகளை, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கு யோசனைகளை சொல்வதற்கும், எண்ணங்களை பகிர்ந்து கொள்வதற்கும் ஒரு துணைவேண்டும். அந்த இடத்தை மனைவி ஒருத்தியால் மட்டுமே நிரப்பமுடியும்.

அதற்கும் மேலாக, வயதான தாத்தாவையும், பாட்டியையும் கவனித்துக் கொள்வதற்கும், அவர்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், அவர்களோடு அன்பை பகிர்ந்து கொள்வதற்கும், எல்லாவற்றிற்கும் மேலாக வாய்க்கு ருசியாக சமைத்துப்போடுவதற்கும், இந்தக் குடும்பத்திற்கு ஒருமனைவியாக, மருமகளாக, சித்தியாக ஒரு பெண் வர வேண்டும்தான்.

இதையெல்லாம் யோசித்துத்தான், அப்பா இப்படி ஓர் எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கவேண்டும்.

என்னுடைய வயதிற்கும் கூடுதலாக, மேற்சொன்னவற்றையெல்லாம் யோசித்து, ஒருவாரம் கழித்து, அப்பாவின் விருப்பத்திற்கு சம்மதம் தெரிவித்தேன்.

அடுத்த ஆறுமாதங்களில், எங்கள் குடும்பத்திற்கு ஏற்ற பெண்ணாக இருப்பாள் என மனதளவில் அப்பா ஏற்றுக்கொண்ட பெண்ணிடம், எங்கள் குடும்ப நிலையினை எடுத்துச் சொல்லி, அப்பெண்ணின் பூரண சம்மதத்துடன் எனது சித்தியை வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொண்டார்.

அப்பாவின் எண்ணப்படியும், நாங்கள் எதிர்பார்த்தற்கும் மேலாகவும், ஆண்டவனின் அருளாலும் என்மீது அக்கறை கொண்ட ஒரு நல்ல சித்தியாக, அப்பாமீது அன்பைப் பொழியும் மனைவியாக, தாத்தா பாட்டிக்கு பாசமிகு மருமகளாக இன்று வரையில் நடந்து வருகிறார்கள்.

7

இந்த எண்ணங்கள் என் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக் கொள்ள, பூசை அறையில் நிழற்படமாக இருக்கும் என்னைப்பெற்ற அம்மாவிடம், “”நீயே இன்னொரு பிறவி எடுத்து சித்தியாக எனக்கு வந்திருக்கம்மா, சித்தி நல்லபடியா தம்பிப் பாப்பாவ பெத்தெடுத்து வரணும்னு உன்ன வேண்டிக்கிறேம்மா. உன் ஆசீர்வாதம் எப்பொழுதும் எங்களுக்கு வேணும்மா” என கண்களில் வழிந்தோடிய கண்ணீரோடு அம்மாவை மீண்டும் ஒருமுறை வேண்டிக் கொண்டு அப்பாவின் அருகில் போய் அயர்ந்து உறங்கிவிட்டேன்.

– ஏப்ரல் 2014

Print Friendly, PDF & Email

1 thought on “தாயுமானவள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *