தாயுமானவள்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 28, 2021
பார்வையிட்டோர்: 4,857 
 

இதமான இலையுதிர்காலத்தின் ஆரம்பம். வெய்யோன் விட்டுவிட்டுத்தன் வெள்ளித்தாரைகளை முகில்களுக்கிடையால் ஒழுக்கிக்கொண்டிருந்தான். அன்று எனக்கு பெர்லினின் Kreuzberg பகுதியிலுள்ள Herzogin- Luise Haus எனும் முதுமக்கள் பராமரிப்பகத்தில் பணி. அதன் பொறுப்பாளர்கள், Lenz என்கிற அந்த இளைஞரை எனக்கு அறிமுகப்படுத்தி ‘அவருக்கு வயது 50’ என்றார்கள், நம்பமுடியவில்லை. 8 மிமீ இருக்கக்கூடிய சிறிய தாடி கறுப்பு நிறத்தில் வைத்திருந்தார். கட்டங்களிட்ட துணியில் பிஜாமாவும் டி- ஷேர்ட்டும் அணிந்து, முகத்தில் சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக அழகனாக இருந்தார். இன்னும் வெள்ளத்துக்கு அள்ளுப்பட்ட வயல்போல தலையில் இங்கொன்றும் அங்கொன்றுமாக எண்ணிவிடக்கூடிய அளவிலேயே மயிர்கள் இருந்தன. ஈச்சம்பழப்பருமனில் கருமணிகள் கோர்த்த செபமாலையைப்போன்றதோர் மாலையில் எனாமலில் இணக்கிய ‘ஓஷோ’வின் பதக்கத்தையும் கோர்த்து அணிந்திருந்தார். சாம்பல்நிற வெளிவட்டமும் நீலமையமும் ஆரங்களில் கோடுகளுமுள்ள தேடலுள்ள காந்தியான கண்கள், பொழுதைவிரட்ட இணைவலையில் ஓராயிரம் விளையாட்டுக்களைத் தரவிறக்கி வைத்து சிறுவர்களைப்போல விளையாடிக்கொண்டிருந்தவர் அதை நிறுத்திவிட்டு என் முகத்தை நேராகப் பார்த்துப் பேசினார்.

அவரது அறையில் பிரதானவாசலிருந்த பக்கம் தவிர்த்து மற்றைய பக்கமெல்லாம் கிளாஸிக் வகை) எனப்படும் Harley-Davidson, BMW, Motor Guzzi, Honda Goldwing, Norton, Triumph போன்ற பன்னாட்டுத் தயாரிப்புகளிலுமான விசையுருளிகளின் (Motor bike படங்களைப் பெரிய பெரிய சட்டகங்களில் உள்ளிட்டு மாட்டியிருந்தார். அங்கே அவருடன் 20 Harley-Davidson விசையுருளிகளும், இரண்டு BMW, Kawasaki விசையுருளிகளும், Triumph இன் தயாரிப்புகளிலேயே மிகப்பெரிய விசையுருளியான Rocket III Roadster (2294 cc) எனும் மொடலும் சுவர்களில் ஆரோகணித்திருக்கவும் அவற்றின் மத்தியில் வாழும் Lenz இன் தீவிர விசையுருளிப்பிரியத்தை அவரது சொகுசு அறைக்குள் நுழைந்ததுமே உணர்ந்துகொண்டேன்.

விசையுருளிகளின் போட்டிகளுக்கானவைகளை விடவும் சும்மா உல்லாசச்சவாரிகளை விரும்புபவர்களுக்கான இவ்வகை வண்டிகளின் வேகம் அநேகமும் 200 கிமீட்டருக்குள்ளாகக் கட்டுப்படுத்தப் பட்டவை. தவிரவும் உடைஅலமாரியின் பக்கவாட்டில் Vintage எனப்படும் தற்போது தயாரிப்பில் இல்லாத விநோதமான விசையுருளிகளின் படங்கள் இருந்த கலெண்டர்களைத் தொங்கவிட்டு பேரழகிகளைப்போலும் அவற்றை இரசித்துக்கொண்டிருந்தார். 14 ஆண்டுகள் முன்னதாக அவர் ஒரு விபத்தைச் சந்தித்த நாளிலிருந்து அவரது வலதுகால் கணுக்காலின் கீழே பாதம் முழுவதும் செயலிழந்துபோனது. இப்போது அவரால் விசையுருளிகளை இரசிக்கமட்டுந்தான் முடியும்.

ஆரம்பத்தில் Lenz என்னுடன் மனம் திறந்து பேசுவதற்குச் சற்றே தயங்கினார். வழமையாக அந்நியர்களுடன் பேசுவதைப்போல காலநிலை, சூழலியல், இயற்கைபோன்ற விஷயங்களுக்குடனேயே எம் உரையாடல்கள் நின்றுகொண்டன. பழைய ரணத்தைக் கிளறுவதைப்போல் அவரது விபத்தைப்பற்றியோ, அவரின் நோய்க்குணங்கள்பற்றியோ நான் அதிகம் அவரிடம் உசாவ முற்படவில்லை.

ஒருநாள் அவராகவே “என் 12 வருடாகால விசையுருளி அனுபவத்தில் நான் ஒரு சிறுவிபத்தைக்கூடச் சந்தித்தில்லை” என்றார். “ நீங்கள் மிகவும் கவனமும் விழிப்புமுள்ள ஒரு சவாரிக்காரனாக இருந்திருக்கிறீர்கள் என்பதை நம்புகிறேன், இருந்தும்…………. ‘இந்த விபத்து உண்டாவதற்கான சூழமைவு எப்படி உண்டானது’ என்றுமட்டும் நான் கேட்டபோது அவர் விபரித்தே அதைச் சொல்லலானார்:

“நான் அந்தக்கோடைகாலத்து மாலையை இரசிப்பதற்காக என் பைக்கில் சென்றுகொண்டிருந்தபோது எனக்கு மூன்று அல்லது நான்கு வாகனங்கள் முன்னதாகச் சென்றுகொண்டிருந்த ஒரு ட்ரான்ஸ்போட்டரின் (சிறுசரக்குந்து) மோட்டோரிலிருந்து ஒழுகி வீதியில் விசிறப்பட்ட மசகு எண்ணெயில் எனது பைக் கட்டுப்படுத்த முடியாதபடி வழுக்கியதில் விழுந்து இழுபட நேர்ந்தது. மோட்டோர்பைக் ஆபத்து மிகுந்த வாகனந்தான், ஆனாலும் நான் எந்த விதிகளையும் மீறவோ, தவறோ செய்யவில்லை, எல்லா வியாகூலங்களும் தாமாக என்னைத்தேடி வந்தன” என்றார். அப்படி அவர் விபரிக்கையில் மெல்லமெல்ல அவரது முகமும் காதின் சோணைகளும் சிவந்துகொண்டுவந்தன.

அந்தக் கரிய நாளிலிருந்து மீதி ஜீவனம் உருளியிருக்கையில் என்றாகிவிட்ட அவருக்கு இரத்தஅழுத்தம் அதிகரிக்கும்போதும் மிகை உணர்ச்சிவசப்படும்போதும் ஊனமான அந்தக்கால் அப்போதுதான் அறுபட்டதைப்போல் துடிக்கும். அத்துடிப்பை அவராலல்ல எவராலும் நிறுத்தமுடியாது. துடிக்கவிடாது இறுக்கமாக வார்ப்பட்டிகளால் கட்டினால் தாளமுடியாத வலியாக இருக்குமாம். அதுவொரு ‘மருத்துவ விந்தை’ என்றார்கள்.

அன்று விபத்துபற்றிய நினைவிடைதோய்தலை நிறுத்திப் பேச்சை வேறு திசையில் திருப்பினேன்.

***

யாழ் – புன்னாலைக்கட்டுவன் சந்தியில் வாகனத்திருத்தகம் வைத்திருந்த மீசை பாலாவையும் வீராவையும் அகவைகள் ஐம்பதை அணுகுபவர்களும், கடந்தவர்களுமான யாழ்வாசிகள் அநேகமாக அறிந்திருப்பர். மீசை பாலாவைப்போலவே அவர் தோழர் வீராவிடவும் தேய்ந்த தும்புக்கட்டையை நினைவூட்டும் அடர்ந்த தில்லான் மீசை இருந்தது. அவர்களிடம் Harley-Davidson இனது (Prototype) ஆதிப்பதிப்பான Red Indian Motorbike ஒன்று இருந்தது. சரசாலையிலிருந்து மீசைபாலாவும் தோழர் வீராவும் அதை உயிர்ப்பித்து இடிமுழக்கிக்கொண்டு அதன் Side Car இனுள் வீரா இருக்க தம் வேலைத்தலத்துக்கு புத்தூரூடாக வந்துபோய்க்கொண்டிருப்பார்கள். அவர்களது விசையுருளியை ‘புதுவைக்கவிஞர்’ ‘நடமாடும் இரும்புக்கடை’ என்று வர்ணித்துக்கிண்டலடிப்பார். பின்நாட்களில் மீசை பாலாவும் மீசை வீராவும் ஈழவிடுதலைப்போராட்ட இயக்கங்களிடையே ஏற்பட்ட குரோதங்களுக்குப் பலியானார்கள் என்பதுவும் வருத்தத்துக்குரிய ஒரு தகவல்.

அந்த Red Indian விசையுருளிக்கு நவீன உருளிகளிலுள்ள Shock absorbers எனப்படும் அதிர்வுவாங்கிகள் எதுவும் இல்லை. முன்பக்கமாக ஒரு நெஞ்சுக்கூட்டை ஒத்த ஒற்றைச்சுருள்வில் (Spring) மட்டும் தனியாக மையத்தில் இருக்கும், ஒருவேளை உந்துருளி கிணற்றுக்குள் பாயநேர்ந்தால் அது இரண்டு அங்குலம் இயங்குதோ என்னவோ…… அதன் கியரைக்கூட கார்களைப்போலவே கைகளால்தான் மாற்றவேண்டும், கிளட்சையும் காலினாலேயே மிதிக்கவேண்டும்” இராணுவத்தேவைக்காக அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட பலவகை வாகனங்களில் அதுவுமொன்று என்றும், முழு இலங்கைக்கும் அப்படி வந்தவை மொத்தமும் 10 விசையுருளிகளுக்குள்ளாகத்தான் இருக்கும் என்று இரண்டாம் உலகயுத்தகாலத்தில் இராணுவத்தில் தொழில்நுட்பப்பிரிவிலிருந்த என் சித்தப்பா சொல்லியிருந்தார்.

எம் கிராமங்களில் சில வயசான மாட்டுவண்டிச் சவாரிப்பிரியர்கள் இருப்பார்கள். ஒருவர் முட்டாமல் கோடிக்கேபோக முடியாதவராயினும் சவாரிமாட்டுக்கதையை யாரும் சாமத்தில் எடுத்தாலும், அதிலேயே அமர்ந்து கைதடிக் கழுகன்ர பாய்ச்சல், மட்டுவில் மயிலையின்ர எடுப்பு, சங்கானைச் செங்காரியின்ர சீற்றம் என்று பழமைபாடுகளை அவிழ்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

யாழ்ப்பாணத்துச் சவாரிக்காரரையொப்ப Lenz சுக்கும் இன்னும் Vintage Motorbikes, Cars கள் பற்றிப்பேசுவதற்கு தீராத ஆர்வமிருந்தது. நான் அந்த Red Indian Motorbike இன் அங்கலாவண்யங்கள், விருத்தாந்தங்களைச் சொல்லச்சொல்ல Lenz கண்கள் அகன்று விரியக் கேட்டுக் கொண்டிருப்பார். நான்தான் அவற்றைப்பற்றி அவருடன் அளவளாவும் ஒரு மனிதனாக இருந்ததால் என்னுடன் பேசுவதற்கான அவரின் ஆர்வம் நாளடைவில் மெல்ல வளர்ந்துவிட்டிருந்தது.

ஆனாலும் அவருக்குத் தன் சொந்தவாழ்வின் பக்கங்களை முழுவதுமாக எனக்குக் காட்டுவதில் இருந்த தயக்கம் நீடிக்கத்தான் செய்தது. அதுக்கும் ஏதுவான காரணமில்லாமலில்லை. அந்தளவுக்கு அவர் வாழ்க்கை விநோதமானதாகவும் சிக்கலானதாகவும் கோளாறானதாகவும் இருந்தது.

***

அந்தப் பராமரிப்புமனையில் வதிபவர்களுக்கு பிரதி மாதமும் சிகரெட்டுக்கள், மற்றும் வைன், பியர்போன்ற அல்கஹோல் செறிவு குறைந்த மதுவகைகள் வாங்குவதற்கு அனுமதியுண்டு. தீவிர புகைப்பிரியரான Lenz எப்படியும் தன் இரண்டாவது வாரத்திலேயே தனக்கான பங்குரிமையைத் (Quota) தீர்த்துவிட்டு நுகர்வரே சுயமாகச் சுருட்டிப்புகைக்கும் பீடியின் கந்தங்கொண்ட மலிவான புகையிலையுடன் அக்கப்பாடுபடுவார்.

அடுத்தவாரம் அவரைச் சந்திக்கச் சென்றபோது அவரை வசியம்செய்ய ஒரு Marlboro பாக்கெட்டும் அவருக்கு விருப்பமான Club-mate ஒரு குப்பியும் Red Bull சக்திப்பானகக்குவளையும் வாங்கிக்கொண்டுபோனேன். அவரது முகம் ஏகத்துக்கு மலர்ந்து விகசித்தது. சம்பிரதாய முகமன்கூறிவிட்டுக் குசலம் விசாரிக்கையில் நான் நலமா மனைவி பிள்ளைகள் சுகமா என்றவர், “உங்களுக்கு மூன்று மணம் புரிய அனுமதி உண்டு என்ன” என்றார். அவர் என்னை ஒரு இஸ்லாமியராகக் கருதியிருந்ததும் ஒரு வகையில் நல்லதுதான்.

‘ஒற்றையுடன் குத்துமல்லுப்பட்டுக் குறையுயிரிலிருக்கும் பக்கிரிக்கு உள்ளூரச் சிரிப்பு வந்தது. ஆனாலும் வேதாளத்துக்குக் கிடைத்ததைப்போலும் இச்சிறு கொம்பைப்பிடித்தே ‘அவரைக் கொஞ்சம் கிளறலாம்’ என்றும் பட்டது. அன்றைக்கு விசையுருளிகள் பற்றியகதைகளைத் தொடவேயில்லை. என் மூன்று மனைவிகள் பற்றியான சரடுகளை அவிழ்த்துவிட்டேன்.

“மதம் அனுமதித்த அந்தச் சலுகையை முற்றாகப் பயன் செய்யவேண்டும் என்ற பெருவிருப்பில் நானும் மூவரை மணந்தேன், ஏதோ அவர்கள் மூவரிடமிருந்தும் தப்பிப்பிழைத்து இதுவரை வாழ்ந்துவிட்டேன்” என்றுசொல்லிப் போலிப் பெருமூச்சொன்றை இழுத்துவிடவும் அவர். என்னை ஒரு ‘தேவதூதனைப்போல’ அதிசயத்துப் பார்த்தார்.

“ஆரம்பத்தில் என் 24 இல் என் பெற்றோரின் விருப்பத்தில் இலங்கையில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டேன். பின் கப்பலில் மாலுமியாகச் சேர்ந்து கடலோடி பிறேஸிலில் 2 வருடங்கள் தங்கி வாழநேர்ந்ததால் சகமாலுமி ஒருவனின் சகலையைக் காதலித்து மணமுடித்தேன்” என்று முடிப்பதற்கிடையில் ஆர்வந்தாங்காமல் “இப்போது அவள் எங்கே” என்றார்.

“அவள் பிறேஸிலில் சுகமாக வாழுகிறாள்”

“அப்போ மூன்றாவது………………..” என்று இழுத்தார்.

“என் மூன்றாவது மனைவியைத்தான் ஜெர்மனியில் கண்டுபிடித்தேன் ”

“அவள் ஜெர்மன்காரியா……..”

“பிறப்பால் பெர்ஸிக்காரி, வளர்ப்பால் ஜெர்மன்காரி…………… இப்போது என்கூட வாழ்பவளும் அவள்தான் ”

Lenz இன் முகபாவத்திலிருந்து அவர் என்ன நினைக்கிறார் என்பதை இப்போது ஊகிக்கமுடியவில்லை.

“மூன்று கோட்டான்களும் ஒன்று சேர்ந்தால் உனக்கு ஏகப்பட்ட மனவழுத்தத்தை உண்டு பண்ணுவார்களே.” என்றார்.

“அதுதான் மூன்றையும் ஒன்று சேரவே விடவேமாட்டேனே……………….. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்கில் வைத்திருப்பது பின் எதுக்கு?”

சிரித்தார்.

“அப்போ பிள்ளைகள்………………………?”

“மூத்தமனைவிக்கு ஒன்று, அவள் அங்கே இயற்கை அறிவியல் படிக்கிறாள்

பிறேஸில்காரிக்கும் ஒன்று, அவளும் அறிவியல் மாணவிதான்.

பர்ஸிக்காரிக்கு இரண்டு”

“அதெப்படி இவளுக்கு மட்டும் இரண்டு”

“அவளது கட்டிலைத்தானே நீண்டகாலம் பகிர்ந்துகொண்டேன் எல்லாம் அதன் விளைவுதான்”

‘ஓ’……………வென்று அதிசயப்பட்டார்.

“இந்த மூன்று பெண்களிடமும் உங்களைக் கவர்ந்த விஷயங்கள் என்ன?”

“நான் இயல்பிலேயே நுட்பமான அழகியல் ரசனைகொண்டவன்……… இவர்கள் மூவருமே அசாதாரண அழகிகளாக இருக்கிறார்கள்……. இரண்டாவதாக என்னைவிடவும் குடும்பத்துக்காக அதிகம் தியாகங்கள் செய்யத்தயாராகவும் இருக்கிறார்கள் ”

“அவ்வகைப் பெண்களை நான் இன்னும் சந்திக்காதது……… என் கர்மாவோ என்னவோ…………”

ஐரோப்பியர்களில் சிலரும் இப்போது கர்மாவைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கிறார்கள்.

“என்ன செய்யலாம்… ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை வேறுமாதிரித்தானே இருக்கிறது………”

‘அவரது பிரச்சனையின் பக்கமாக வந்துவிட்டேன்’ என்பது புரிந்தது. ஆனாலும் அவர் இன்னும் தன்கதையைச் சொல்வதிலான தயக்கத்துள்ளே தவிப்பதையும் உணரமுடிந்தது. ‘என் சிக்கலான கதையை எதுக்கு இவனிடம் விளம்பவேண்டும்’ என்றுகூட Lenz நினைக்கலாம்.

மோர்ஸ் சங்கேதமொழியில் தந்தி அனுப்புவதைப்போல ‘எனது வாழ்க்கையின் சிக்கலைப்போல் யாருக்கும் இருக்கமுடியாது……..’ என்று நிறுத்தியவர் சிறிது இடைவெளிவிட்டு ‘அவ்வளவு விசித்திரம் அது’ என்றார். வார்த்தைகள் இங்கொன்றும் அங்கொன்றுமாக வந்து விழுந்தன, சங்கேதமொழியில் பரிச்சயமுள்ள எனக்கே அவற்றைப் பூரணமாகப்பொருத்தி உருப்படியான பனுவலாக்க மேலும் உழைக்க வேண்டியிருந்தது. Lenz மேலும் கொஞ்சம் இணக்கமாக நெருங்கிவருவதைப்போல இருந்தது. அவருடனான அன்றைய என் பணிப்பொழுது நிறைவடைந்து நான் புறப்படுகையில் ”Red Indian விசையுருளிபற்றிச் சொன்னதுக்கு நன்றி” என்றார்.

‘அப்போ என் மனைவிகள் பற்றிச்சொன்னதற்கு இல்லையா’ என்றொரு ‘கொக்கி’யைப்போட்டேன்.

சிரித்தபடி “ பதிலுக்கு என் வாழ்க்கைபற்றிச் சொல்லவேண்டியதுதான்……….” என்று கையையுயர்த்தி ஐந்துதந்து விடைதரவும்

“அதை எனக்குச்சொல்லவேண்டிய நிர்ப்பந்தம் கிடையாது” என்றபடி நானும் ஐந்தைத்தந்துவிட்டு வாசலை நெருங்கவும் “ஆனால்……………….எங்கிருந்து ஆரம்பிப்பது என்பதுதான் தெரியவில்லை……….. அடுத்தமுறை பார்க்கலாம் ” என்றார். பின்னரும் கட்டை விரல்களை உயர்த்திக்காட்டி விடைபெற்றோம்.

***

அடுத்தமுறை போயிருந்தபோதும் அவருக்குப் பிடித்தமான Marlboro பாக்கெட்டும் Red Bull குவளையும் ஒரு மூலிகைகளாலான Jaegermeister குப்பியும் எடுத்துச்சென்றேன்.

முகமன் சம்பிரதாயங்கள் முடிந்ததும் “குழந்தைகள் என்றால் எனக்கு ஆசை ” என்று ஒரு அறிமுகத்தைமட்டும் சொல்லிவிட்டு நிறுத்தினார்.

“பெற்றுக்கொள்வதுதானே………….”

“அது அத்தனை இலகுவல்ல…….ஒரு (Backer) வெதுப்பாளனுக்குக் கிடைக்கும் வருமானத்தில் ஒரு சிறிய குடும்பத்தைக்கூடப் பராமரிக்க முடியாமலிருக்கும் எனப்பயந்தேன்.”

“அதுதான் திருமணமானவுடன் உனக்கு வருமானவரியிலிருந்து விலக்களிப்பார்களே…”

“இருந்தாலும் சமாளிக்க முடியாதென நினைத்தேன். திருமணம் என்கிற நினைப்பே என்னைப்பயமூட்டியது.”

“அப்போ செக்ஸுக்கு என்ன செய்தாய்……….” நான் முடிப்பதற்குள் Lenz ஸே தொடர்ந்தார். “இதற்குள் என் அடுக்ககத்துப் பக்கத்து அடுக்ககத்தில் வாழ்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இடையீடு செய்யாது இருந்தேன், அவர் தொடர்ந்து பேசலானார்.

“அவளுக்குப்பெயர் Bertina திருமணமானவள், அவளுக்கு மூன்று வயதில் Mayer என்றொரு பையனும் கணவனும் இருந்தார்கள். நான் அதிகாலை ஒருமணிக்கு பணிக்குப்புறப்பட்டால் ஒன்பது பத்துமணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவேன். Bertina பணியெதுக்கும் போகாமல் வீட்டிலிருந்ததால் ‘எல்லாமும்’ எமக்கு வசதியாயிருந்தது. ‘வா’ என்றவளுடன் படுத்துவிட்டு எழுந்து என்பாட்டுக்குப் போயிருந்தால் பிரச்சனை ஒன்றுமில்லை. அதிக உரிமை எடுத்துக்கொண்டு என் பலம் பலவீனம் ஆசைகள் கனவுகள் எல்லாவற்றையும் முட்டாள்த்தனமாக அவளிடம் முழுவதும் கொட்டிவிட்டதுதான் பிரச்சனையின் ஆரம்பம். ஒருநாள் ‘உனக்கு பிள்ளைதான் விருப்பமென்றால் நான் பெற்றுத்தருகிறேன் ஆனால் அதுக்கான பராமரிப்புச்செலவினங்களை நீ தந்துவிடவேண்டும்’ என்றாள்.

நான் அதனை அவளின் ‘வழமையான ‘வேடிக்கைப்பேச்சு’ என்றே எடுத்துக்கொண்டேன். நாட்கள் செல்லவும் எமது களவொழுக்கக் காலத்தில் அவளின் மாதவிலக்கு தள்ளிப்போனது, ‘நான் உண்டாகி இருக்கிறேன்’ என்றாள்.

எனக்கும் அப்பாவாகிவிட்ட பூரிப்பிருந்தாலும் அது நிச்சயம் எனது பிள்ளைதானாவென்ற சந்தேகமும் இருந்தது. அவள் புருஷன் Wolfgang நல்லவன், அவனுக்கு எமது களவொழுக்கம் பற்றிய சந்தேகம் கொஞ்சமும் இல்லை, என்னை நல்லதொரு அயலவனாகத்தான் அவன் எண்ணியிருந்தான். குழந்தை பிறந்ததும் ‘உன்பிள்ளைக்கு இஷ்டமான பெயரை வைத்துக்கொள்’ என்று என்னிடமே விட்டுவிட்டாள். ஒருவேளை என்னுடைய பிள்ளைதானோ…….. கொஞ்சம் நம்பிக்கை வந்தது, அவனுக்கு Adrian என்று பெயர் வைத்தேன்.

அவள்தான் தத்தாரி……………. குளிர்காலம் வரவும் குழந்தை Adrian ஐக்காட்டிக்காட்டி அவனுக்கு ஸ்வெட்டர் வாங்கணும், ஓவரோல் வாங்கணும் சப்பாத்து வாங்கவேணும், Pampers (diapers) வாங்கணும் என்று என்னிடம் அதிகமாகக்காசு பிடுங்கத்தொடங்கினாள். என் சக்திக்கும்மேலாக அவளுக்கு எல்லாமும் வாங்கிக்கொடுதேன். Wolfgang ம் நிச்சயம் நிறையவே அவளுக்குப் பணம் கொடுத்திருப்பான். அவளுடைய வாழ்முறையோ பேராசையோ என்னவோ அவர்களிடையே அடிக்கடி சண்டைவர ஆரம்பித்தது.

ஒருமுறை Bertina என்னிடம் 3000 இயூரோ பணம் வாங்கியிருந்தாள். அவள் அதைக்கேட்ட ‘தொனி’யைப் பார்க்கையில் ஏதோ கைமாற்றாகக் கேட்டதைப் போலிருக்க என் கடனட்டைமூலம் வங்கியிலிருந்து அத்தொகையை எடுத்துக்கொடுத்திருந்தேன். நாளும் வங்கியின் வட்டி வளர்ந்துகொண்டிருந்தது. ஆறேழுமாசங்களாகியும் அவள் அதுபற்றி மூச்சேவிடாதிருக்க ஒருநாள் அவளிடம்போய் ‘அந்தப்பணம் எனக்குத் திரும்பத்தேவை’ என்று கேட்டேன்.

அவள் அப்பணத்தில் பாதிக்கும் மேல் Adrian க்குத்தான் செலவானது என்பதுபோலக் கதைவிடவும் நமக்குள் தர்க்கம் ஏற்பட்டது. நாம் தர்க்கித்துக்கொண்டிருக்கையில் Wolfgangம் வந்துசேர்ந்தான். வந்தவன் ‘உங்களுக்கிடையில் என்ன பிரச்சனை’ என்று கேட்கவும் அவளாகவே முந்திக்கொண்டு ‘இல்லை Lenz இடம் ஒரு ஆயிரம் இயூரோ கடன்வாங்கியிருந்தேன்……….. அதைத்தான் திடுப்பெனத்தரச்சொல்லி வற்புறுத்துகிறான்’ என்றாள். கோபடைந்த Wolfgang ‘நான் உனக்கு வாரியிறைப்பது போதாதென்று வெட்கங்கெட்டு ஒரு நல்ல அயலவனிடமும் போய்க் கடன் வாங்கினாயா’ என்று கூச்சலிட்டான். பின் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு “அந்த ஆயிரத்தைவிடவும் வேறு என்னவெல்லாம் அவனிடம் வாங்கினாய்” என்று ஆவிவிட்டான். (பிளிறுதல்)

அதனால் கொதித்துக்கிளர்ந்து சீறிக்கொண்டு வந்தவள் Adrian ஐத்தூக்கிக் கையில் பிடித்துக்கொண்டு “வடிவாகப்பார் இவனையும் அவனிடந்தான் வாங்கினேன்” என்றாள், வாயடைத்துப்போனான் Wolfgang. ‘ஒருவேளை அவன் என்மேல் பாய்ந்து என் கொலரைப்பற்றுவான்’ என நினைத்தேன். அவன் உணர்ச்சிவசப்ப்படக்கூடிய வன்முறையாளனல்ல. கடைசிவரையில் சாத்வீகம் காத்தான்.

“ ஓகே……..ஓகே……………..நீ உன் இஷ்டம்போல் வாழ்ந்துகொள்………………நான் உன் சுதந்திரத்துக்குத் தடையாயிருக்கமாட்டேன்” என்றுவிட்டு Mayer ஐயும் தூக்கிக்கொண்டு போனவன்தான்……….. இவளிடம் திரும்பிவரவே இல்லை.

***

அவர்களின் பிரிவுக்கு நானும் ஒருவகையில் காரணமாக இருந்திருக்கிறேன் என்பது எனக்குப் பச்சாதாபத்தையும் மனவுழைச்சலையும் ஏற்படுத்தின. ஆறு மாதத்துக்கும்மேல் தனியே வாழ்ந்தாள் Bertina. என் இரக்கம் காரணமாக அவளை என்னுடன்கூட்டி வைத்துக்கொண்டேன். அந்த இரக்கந்தான் என் வாழ்க்கையையே மாற்றிப்போட்டது. ‘தகுதியில்லாதவர்களுக்கு இரங்கத்தேவையில்லை’ என்பான் ஒரு தத்துவார்த்தி. மீண்டும் தவறு செய்தேன். நாமும் சேர்ந்து ஆறு மாதங்கள் வாழ்ந்திருப்போம். ஒரு பொருட்பெண்ணைப்போல் அவளுக்குத் தினமும் பணம் தேவைப்பட்டது. பணத்தை வீசினாலே அவளுடன் படுக்கலாம் என்றானது. எனது சம்பளம் எம் வாழ்க்கைச்செலவுக்கு மட்டுமட்டாகவே இருந்தது. சில மாதங்களில் என் முழுச்சம்பளத்தையும் குடும்பத்துக்கே தந்துவிட்டு எனக்கு சிகரெட் , பத்திரிகைகள், உள்ளாடைகள், பெற்றோலுக்கே அல்லாடினேன். அவளிடமும்கூடவே ஊதாரித்தனம் வளர்ந்ததே தவிரக் கொஞ்சமும் திருந்திக்கொள்கிற மாதிரியாயில்லை. Bertina அவளாகவே ‘நானும் வேலை செய்தால் செலவுகளைச் சமாளிக்கலாம்’ என்றாள். அவ்வேளை நான் பணிபுரிந்த வெதுப்பகத்தில் மாலையில் அதைச்சுத்தம் செய்யும் பணியாளின் வெற்றிடம் ஒன்று வரவும், அதில் அவளைப் பொருத்திவிட்டேன். அதன்மூலம் கிடைத்தபணம் அவளின் ஆடம்பர உடைகளுக்கும், அலங்கார சாதனங்களுக்குந்தான் போதுமாக இருந்தன, நானும் புத்திசொல்லிப்பார்த்து அலுத்தேன். தான்தோன்றித்தனமாக வாழ்ந்து தம் நிம்மதியையும் குடும்பத்தின் ஒற்றுமையும் கெடுத்த பெண்களைப்பற்றியான கதைப்புத்தகங்களை வாங்கிக்கொடுத்தேன், வாசித்தாள் ஆனால் எதுவும் வேலை செய்யவில்லை, எம்மிடையே முறுகல்களும் கருத்துவேற்றுமைகளும் வளரத்தொடங்கின. ஒரு ஒக்டோபரில் அவளுடன் தகராறுண்டான ஒரு நாளில்த்தான் அந்த விபத்து நடந்தது. இத்தனைக்கும் நாம் குடும்பமாக அதே ஒக்டோபரில் Baltimore தீவுக்குப்போய் விடுமுறையைக்கழிப்பதாக இருந்தோம். விபத்து செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்கள் முழுவதும் என்னைக் ‘கோமா’வில் கிடத்தி வைத்தது.”

விபத்தைப் பற்றிச்சொல்லும்போது Lenz இன் வலது கால் உதறலெடுக்கத் தொடங்கியது. ‘அவரது நோய்க்கூறே அதுதான்’ என்பது எனக்கு முதலிலேயே அறிவுறுத்தப்பட்டிருந்தது.

சிகரெட் ஒன்றை எடுத்து வாயில் வைத்தார், அதைப்பற்ற வைக்க நான் உதவி செய்ததுக்கு. ‘நன்றி’ என்றார்.

Lenz ஐ ஆசுவாசப்படுத்தவேண்டி “சரி சரி Lenz இன்றைக்கு இது போதும்…….. பிறிதொரு நாளில் மீதியைக்கதையைப் பேசுவோம்” என்று சொல்லி அன்று அவரின் பெருங்கதையாடலுக்கு அரைப்புள்ளி வைத்தேன்.

அதுவும் ஒரு செப்டெம்பர் மாதந்தான், அடுத்தவாரம் அவரைச் சந்திக்கும் நாளில் Herzogin- Luise Hause பராமரிப்பகத்தில் மதிய உணவுவேளை அங்குள்ள தோட்டத்தில் ‘கிறில் பார்ட்டி’ ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. நானும் Lenz சுடன் அமர்ந்து விருந்து சாப்பிட என்னையும் அழைத்திருந்தார்கள்.

விருந்தில் Lenz தன் மீதிக்கதையையும் சொல்ல உன்னிக்கொண்டிருந்தார். நான் ’பிறகு பேசிக்கொள்ளலாம்’ என்று கண்களால் ஜாடைகாட்டினேன். விருந்து முடிந்து அறைக்குத் திரும்புமட்டும் அமைதியாக இருந்தவர் அறைக்குள் நுழைந்ததும் தொடங்கினார்:

“ஆஸ்ப்பத்தரியிலிருந்து விடுபட்டு மூன்றரை மாதங்களில் அவர்களின் மருத்துவவாகனத்தில் வீடு திரும்பினேன். வீட்டுள் நுழைந்தால் குடியெழும்பிவிட்டவர்களின் வீடுபோல என் வீடு முழுவதும் பூரணகாலியாக இருந்தது. எனக்குப் படுப்பதற்கான கட்டிலைக்கூட விட்டுவைக்காமல் எடுத்துச்சென்றுவிட்டிருந்தாள் அவிசாரி. எந்நிலமையை அறிந்த மருத்துவமனை உடனடியாகவே (Rehabilitation) என்னைப் புனருத்தாரண முகாமுக்கு 3 மாதங்கள் அனுப்பிவைத்தது.

“இப்போது Bertina எங்கே……….?”

“Baden-Württemberg மாநிலத்தில் Stuttgart க்கு அருகில் Konstanz இலோ எங்கேயோ வாழ்வதாகச் செய்தி வந்தது………….நான் அவளை எதுக்குத்தேடவேண்டும்?”

“சரி Adrian என்ன செய்கிறானாம்………….?”

“அவனுக்கு இப்போ 18 வயது வந்திருக்கும்…….. ஒழுங்காகப் படித்திருந்தானாகில் கல்லூரிக்கோ, பல்கலைக்கோகூடச் சென்றுகொண்டிருக்கலாம்…….. அல்லது ‘பங்கி’ ‘ஜங்கியா’….. தெருக்களிலும் சுற்றிக்கொண்டுமிருக்கலாம்………. யார் கண்டார்?”

“இந்தக்கால இடைவெளியில் Adrian கூட உன்னைவந்து பார்க்க முயற்சிக்கவில்லை……….. இல்லை?”

“ drian நிஜமாக என்னுடைய பிள்ளையென்றால் அவனால் என்னைப்பாராமல் இருந்திருக்கமுடியாது………. என்னைத்தேடி வந்திருப்பான்.”

அப்போது எனக்கும் மூச்சுத்திணறுவதைப்போலிருந்தது. Lenz ஐச் சொஸ்தப்படுத்துவதற்கான வார்த்தைகள் என்னிடம் இருக்கவில்லை,

– 20.20.2017 Malaiga.com அக்டோபர் இதழ் இலக்கியம் -132

Print Friendly, PDF & Email

1 thought on “தாயுமானவள்

  1. கதை சொல்லல் மிக அருமையாக கைகூடி இருக்கின்றது.அருமை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *