தாயுமாகி…சேயுமாகி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 18, 2022
பார்வையிட்டோர்: 1,375 
 

அவர்கள் டெல்லியிலிருந்து இத்தாலி நாட்டின் மிலான் நகரில் உள்ள மெல்பென்சா விமான நிலையத்தில் அப்பொழுது தான் வந்து இறங்கியிருந்தார்கள்.

ஆன்னா கைகளில் நான்கு வயது சுராஜ் …மருண்ட கரு விழிகளுடனும் ….திகைப்புடனும்…அவள் முகத்தைப் பார்ப்பதும் அவளருகில் வந்துகொண்டிருந்த மிக்கேலேயைப் பார்ப்பதுமாக ….… இதுவரை அவன் கண்டிராத புது உலகத்துக்கு அவன் வந்திருக்கிறான்.

ஆன்னாவினை இப்படி மகிழ்ச்சியாக மிக்கேலேக்கு முன்பு எப்பொழுதும் பார்த்ததாக ஜாபகமில்லை. அவளை அப்படிப்பார்க்கும் போது அவனுக்குக் குதூகலமாக இருந்தது… அவன் ஆன்னாவையும் சுராஜையும் ஒருங்கே அணைத்து இருவரையும் முத்தமிடுகிறான்.

அவர்களின் அணைப்பு சுராஜுக்குப் சில நாட்களுக்கு முன்பு போல் விரும்பத்தகாததாக இருக்கவில்லை. … அவன் அவர்களோடு முரண்படாமல் இணக்கமான மனநிலையில் தான் இருந்தான்.

கல்கத்தாவில் அன்னை தெரேசாவின் அனாதை விடுதியில் பல குழந்தகளுக்கு மத்தியில் இருந்தவன் தான் சுராஜ். விடுதியில் ஐந்துநாடகள் ஆன்னாவையும் மிக்கேலையும் சுராஜுடன் தங்கவைத்து பழக்கப்படுத்தியதனால் இந்த இணக்க மனநிலைக்கு அவன் வந்திருந்தான்.

சுராஜ்…மம்மா…சுராஜ்…பப்பா…

ஆன்னா தான் தேக்கிவைத்த தாய்ம்மை உணர்வு முழுவதையும் கொட்டிவிடுபவள் போல சுராஜுக்கு தன்னையும் மிக்கேலையையும் காட்டிச் சொல்லுகிறாள்.

விடுதியில் கிந்தி மொழி பேசிக்கொண்டிருந்தவன் தான்அவன்.

“சுராஜுக்கு….மெல்ல மெல்லத்தான் இத்தாலி மொழியைப் பரிட்சயம் செய்ய வேண்டும் .”மிக்கேலே எண்ணிக்கொள்கிறோம்.

மேலைத்தேயங்களில் அறுபது எழுபது வருடங்களுக்கு முன்பு பிறந்தவர்களில் பெரும்பான்மையினர் தம்பதியினராக தமது இறுதிக் காலம் வரை ஒன்றாக வாழ்வது பொதுவாகக் காணப்படுவதே. ஆனால் இன்றைய புதிய தலைமுறையினர் வாழ்வு தளம்பல் மிகுந்தது. அவர்களில் பலர் பலகாதல்களில் விழுந்து எழுந்து ஒருகட்டத்தில் தம்பதியினர் ஆகின்றனர். ஆனாலும் இத்தம்பதியினரில் கணிசமானவர்கள் இறுதி வரை கூடி வாழ்வார்களா என்பதும் சந்தேகம்தான்.

அனால் ஆன்னாவும் மிக்கேலேயும் சற்று வித்தியாசமான தம்பதிகள் தான். அவர்களிடையே தோன்றிய முதல் காதலே இன்றுவரை தொடருகிறது.

அவர்கள் பள்ளியில் படிக்கும்போது காதலிக்கத் தொடங்கினார்கள்.

மிக்கேலேக்கு அப்பொழுது 15 வயது மட்டுமே .அந்த வயதில் குழப்படிக்குப் பெயர் போனவனாக அறியப்பட்டான் . எந்நேரமும் துரு துரு என்று இயங்கிக் கொண்டே இருப்பான். கோடை விடுமுறைக்கு வழமை போல மிக்கேலேயின் குடும்பம் கிராம வீட்டுக்குச் சென்றிருந்தது.

கார் லைசன் எடுப்பதற்கு பதினெட்டு வயதை அடைந்திருக்க வேண்டும். அனால் அதுவரை மிக்கேலைக்குப் பொறுமையில்லை.ஸ்கூட்டர் ஓடிப்பார்ப்பது ரேசிங் சைக்கிள் ஓடுவது என்று எப்பொழுதும் பொழுதைக் கழிப்பான்.அவ்வப்போது விழுவதும் எழுவதும் சிறு சிறு காயங்களுக்கு உள்ளாவதும் வழமையாக இருந்தது.

ஒருநாள் வயலில் நின்ற தகப்பனது ‘றக்றரை’ எடுத்து எந்த முன் அனுபவமோ பயிற்சியோ இன்றி ஓடத்தொடங்கியவன் ஐந்தாவது நிமிடமே வரம்பில் அடியுண்டு விபத்துக்கு உள்ளானான். மயிரிலையில் உயிர்தப்பியபோதும் உடலில் பெருங்காயங்களேற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டான்.

அவனை வகுப்பு தோழர் தோழியருடன் பார்ப்பதற்கு ஆன்னாவும் வந்திருந்தாள்.

“பாருங்கள்.. மிக்கேலே என்சொல்லுக் கேட்பதில்லை .அதன் பலனை இன்று அனுபவிக்கிறான்.தயவு செய்து இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்ள வேண்டாம் என்று சொல்லுங்கள்.”என்று மிகவும் வினயமாக அவனது தாய் மரியா, மிக்கேலையின் நண்பர்களைக் கேட்டுக்கொண்டா.

மிக்கேலையை அந்தக் கோலத்தில் பார்க்க ஆன்னாவுக்கு பாவமாக இருந்தது. அவள் அவனது கைகளைப் பற்றியபடி,

“இனி இப்படிச் செய்யாதே மிக்கி , பார் உனது மம்மா எப்படிக் கவலைப் படுகிறா…” என்று சொன்ன அவள் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

அந்தப் பரிசமும் அக்கறையுமே அவர்கள் காதலுக்குத் முத்தாரமாய் அமைந்துவிட்டது.

அதன் பின் பன்னிரண்டு வருடங்களுக்கு பின்பு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் வாழ்வு குறை எதுவும் இல்லாததாய் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் சென்றுகொண்டிருந்தது.

திருமணமாகி முதல் ஐந்து வருடங்கள் குழந்தை பற்றி இருவருமே சிந்திக்கவில்லைத்தான். ஆனால் அடுத்துவந்த வருடங்களில் ஆன்னாவுக்கு குழந்தை பெற வேண்டும் என்ற ஆசை மெல்லத் தலைதூக்க ஆரம்பித்தது.

அந்த ஆசை மிக்கேலேக்கு இருந்தாலும் கூட அவன் பொறுமையாக இருந்தான் .ஆனால் அன்னாவின் ஆசை மெல்ல மெல்லத் தீவிரமைடையத் தொடங்கியது.

ஆன்னாவுக்கும் மிக்கேலேயுக்கும் இலங்கை, இந்திய நண்பர்கள் அதிகம். அதனால் கூட ஆன்னாவிடம் குழந்தை மேலான ஆசை மிக அதிகமாக ஏற்பட்டிருக்கலாம் என்றுகூட மிக்கேலே நினைத்ததுண்டு.

ஆன்னாவின் ஆசை தீவிரமடைந்தபோது மிக்கேலையால் சும்மா இருக்க முடியவில்லை. அவர்கள் இருவரும் மருத்துவப் பரிசோதனைக்குச் சென்றார்கள். இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரிலும் சில பிரச்சினைகளை அடையாளங்கண்டனர். அதற்கான மருத்துவத்தையும் செய்தார்கள்.இரண்டு ஆண்டுகள் ஓடிப்போயின . ஆனாலும் ஆன்னா பூத்துக் காய்க்கவில்லை

அவளுக்கு குழந்தை இல்லை என்று அவள் நண்பர்கள் கேட்கவில்லை. ஏன் அவளைப் பெற்ற தாயோ, மாமியாரோ கூடப் பிள்ளை பற்றி அவர்களுடன் பிரஸ்தாபித்ததில்லை.

எட்டு வருடங்களுக்கு முன் ஒருதடவை ஆன்னா ஜெனோவாவிலிருந்து மிலானில் உள்ள தன் தாய் வீட்டுக்குப் போயிருந்தாள்.

அங்கு அவளது அறையில் இருந்த அலுமாரிக்குப் பக்கத்தில் இன்னுமொரு அலுமாரி…

“மம்மா இது என்ன புதுசாய் ஒரு அலுமாரி..?”

“உன் அக்கா இசவெல்லாவின் குழந்தைகள் வளர்ந்துவிட்டார்கள் ..எதுக்கும்பயன்படும் என்று அவர்களின் பொருட்களை இதில் எடுத்து வைத்திருக்கிறேன்”

ஆன்னாவின் தாய் வரோனிக்காவின் பதிலின் அர்த்தம் ஆன்னாவுக்குப் புரியாமலில்லை. வரோனிக்கா இப்படித்தான் தனது ஏக்கத்தை வெளிப்படுத்தினாவே தவிர ஒருநாள்கூட அன்னா இன்னும் பிள்ளை பெற்றுக் கொள்ளாததையிட்டு வெளிப்படையாகக் கேட்டதில்லை…. ……..புலம்பியதில்லை.

அப்படிக் கேட்பது அநாகரிகம். குழந்தை பெறுவதும் விடுவதும் அவர் அவர் சொந்த விடயம் . உண்மையில் ஆன்னா மருத்துவ உதவிபெற்றது பற்றி தன் தாயிடம் கூடச் சொல்லவில்லை.

அவர்களுக்கு குழந்தை பெறுவது குறித்த எந்தச் சமுக நெருக்கடியும் இல்லைத் தான்..

ஆனாலும் ஆன்னாவின் உள்ளத்தில் பொங்கிப் பிரவாகம் எடுக்கும் தாய்மை உணர்வு ஏக்கங்களாய் உருவெடுத்து அவளை வாட்டத் தொடங்கின.

அவளது கனவுகளில் அழகிய குழந்தைகள் முகங்காட்டின. அவை முலையமுதம் உண்டபோது குதூகலத்தில் ஆன்னா திளைத்தாள்.அவற்றின் சிரிப்பு அவளை மயக்கின.

அவளது மன ஏக்கங்கள் அவள் செயல்களிலும் புலப்படத் தொடங்கின. அவளது வேலை எதிலும் முன்னமிருந்த சிரத்தை இல்லாது போயிற்று. அவள் உற்சாகம் இழந்தவளாய் ஒருவகை மந்த நிலைக்கு உள்ளானாள்.

அப்பொழுதுதான் மீண்டும் மிக்கேலே அவளை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றான். மருத்துவர்கள் IUI, IVF ,வாடகைத்தாய் முறைமை, முதலிய செயற்கைக் கருத்தரித்தல் முறைகள் பற்றி விளக்கம் அளித்தார்கள். அதில் கிடைக்ககூடிய வெற்றிவாய்ப்புக்களையும் விளக்கினர்கள். அன்னாவும் மிக்கேலேயும் நன்கு படித்தவர்கள்தான் .ஆனாலும் அவர்களுக்கு ஆரம்பத்தில் குழப்பங்களும் சந்தேகங்களும் இந்த மருத்துவ முறைகள் பற்றி இருந்தன.போகப்போக அம்முறைகள் பற்றித்தெளிவாகப் புரிந்து கொண்டார்கள்.

ஆன்னாவுக்கு வாடகைத்தாய் முறையில் சிறிதும் உடன்பாடு இருக்கவில்லை. என்னதான் கரு இரவலாக இருந்த போதும் ஒரு தாய் உணரும் எல்லா உணர்வுகளையும் உடல் அவஸ்தைகளையும் அனுபவிக்கும் ஒரு பெண்ணுக்கும் அவள் வயிற்றில் பிறக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதை அவளால் ஒத்துக்கொள்ளமுடியவில்லை.

அதனால் IVF சோதனைக்குழாய் சிகிச்சையை ஆன்னா செய்து கொண்டாள். அவளிடமிருந்து கருமுட்டை எடுக்கப்பட்டபோதும் பின்னர் அதுவிந்தணுவுடன் இணைக்கப்பட்டு கருவாக வைக்கப்பட்டபோதும் நீண்ட சிகிச்சைக்கு அவள் உள்ளாக வேண்டி இருந்தது. வயிற்றைசுற்றியும் உடலின் வேறு பாகங்களிலும் உசிகள் குற்றப்பட்டதுமாக சிகிச்சை மிகக் கடினமானதாகவே இருந்தது.. ஆனால் அதிலும் கூட முதல்முறையில் பயன் கிட்டவில்லை.

ஆன்னா இதன்போது உடல் ரீதியாகவும் மனதளவிலும் அடைந்த சங்கடங்கள் சொல்லில் அடங்காதவை….

அது மிக்கெலையைப் பெரிதும் பாதித்தது.

“தாயைக் கொன்று பிள்ளை பெற வேண்டுமா?”

என்ற கேள்வி மிக்கேலைக்கு அப்பொழுது தோன்றியது.

மருத்துவர்களும் இவ்வகைச் சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து மேற்கொள்வதை ஊக்குவிக்கவில்லை.

“உலகில் உறவுகள் எல்லாம் ஒரு பாவனைதானே. தாய் அன்பை வழங்குவதற்கு தன் உதிரத்தில் உதித்த குழந்தையாக இருக்க வேண்டும் என்பது அவசியமா என்ன?.

மனதால் தாய்மை உணர்வைக்கொண்டிருந்தாலே போதாதா?.

அந்த உணர்வு நிறைந்த அன்னாவால் தத்தெடுத்த குழந்தையிடமும் அன்பை முழுமையாகப் பரிமாறிக்கொள்ள முடியாதா என்ன?”

மிக்கேலே எடுத்துச் சொன்னபோது அன்னாவும் மனப்பூர்வமாக அதனை ஒப்புக்கொண்டாள்.

எங்கிருந்து குழந்தையைத் தத்தெடுப்பது?

ரஸ்சிய ஆபிரிக்க நாடுகளில் இருந்தும் பிள்ளைகளித் ததெடுக்கலாம்தான்.

“இந்தியாவில் இருந்து தந்தெடுப்போம்.”அன்னாதான் முதலில் சொன்னாள்

அன்னாவுக்கு மட்டுமல்லாது மிக்கேலேக்கும் அந்த முடிவு மனதுக்கு நெருக்கமான உணர்வைத்தந்தது .

குழந்தையைத் தத்தெடுப்பது ஒன்றும் அவர்கள் எண்ணியது போல அவ்வளவு இலகுவானதாக இல்லை. அதற்காக அவர்கள் பல்வேறு ஆவணங்களைச் சமர்பிக்கவேண்டியிருந்தது. தமது வருமானம் பற்றிய தகவல்களை வழங்க வேண்டியிருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக தாம் தமது பிள்ளையாக வளர்ப்பதற்காகத்தான் குழந்தையைத் தத்து எடுக்கிறோம் என்பதனை சாட்சியமாக நிறூபிக்க வேண்டி இருந்தது.

மூன்று தடவைகள் கல்கத்தா அனாதை விடுதிக்குப் போக வேண்டிவந்தது.

முதல் தடவை போனபோது மூன்று மாதக் குழந்தை யாகத்தான் சுராஜைக் கண்டார்கள்..

அங்கு ஆன்னா ,மிக்கேலே நிறத்துக்கு ஓரளவு ஒத்து வரக்கூடிய சற்று வயதுகூடிய சிலகுழந்தைகள் கூட இருந்தன. ஆனாலும் மானிறமாகத் துருத்ருத்த கண்களைக் கொண்ட சுராஜை ஆன்னாவுக்கு ஏனோ பிடித்துப் போயிற்று.

ஆன்னா அவனைத் தூக்குவதற்காகக் குனிந்தபோது அவள் விரல் ஒன்றை அவன் இறுக்கிப் பிடித்துக்கொண்டான். அந்தப் பிஞ்சு விரல்களின் பரிசம் அவளது முடிவை மேலும் உறுதிப்படுத்தியது.

“சுராஜின் பெற்றோர்கள் ஓர் விபத்தில் இறந்துவிட்டார்கள் .அவனது உறவினர்கள் அவனை வளர்க்குமளவுக்குப் பொருளாதார பலம் கொண்டவர்கள் அல்ல…அதனால் இங்கு வந்து ஒப்படைத்தார்கள்” என்று மதர் மிருணாளினி சேவையர் கூறியபோது அன்னாவுக்கு கண்கள் கலங்கின. அவள் அதை மறைக்கவில்லை.

மிக்கேலே அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

“மதர் நாங்கள் இவனை எடுத்துக்கொண்டு எங்கள் கோட்டலுக்குப் போகலாமா?”, ஆன்னா சுராஜை உடனேயே ஆழைத்துக்கொண்டு இத்தாலி திரும்பலாம் என்ற எண்ணத்துடன் மதரிடம் ஆர்வம் பொங்கக் கேட்டாள்.

மதர் மிருணாளினிக்கு அன்னாவைப்பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

அவ மௌனமாகத் தன் மேசையில் இருந்து ஒருகட்டுக்காகிதத்தை எடுத்து ஆன்னாவிடம் நீட்டினா.

தத்தெடுப்பதற்கான நிபந்தனைகள் அடங்கிய சட்டக்கோவை அது.

அன்னாவுக்கு அதனைப் பார்த்தபோது மலைப்பாக இருந்தது.

இதன் பின் இன்னுமொருதடவை இந்திய நீதிமன்றம் ஒன்றில் ஆவணங்கள் பலவற்றை ஒப்படைத்து நேரில் சமூகமும் கொடுக்க வந்திருந்தார்கள்.

அவர்கள் விடுதிக்குச் சென்ற போது சுராஜுக்கு இரண்டு வயதாகி இருந்தது.

அவன் முன்னர் போல ஆன்னாவிடம் ஒட்டவில்லை மருட்சியடைந்தவனாய் மதர் மிருணாளினியின் சேலைத்தலைப்பை இறுகப் பற்றியவனாய் அவர் பின் ஒளிந்து கொண்டது ஆன்னாவுக்குச் சொல்லவொண்ணாத சோகத்தைத் தந்தது.

அவள் மிக்கேலையிடம் புலம்பித்தள்ளிவிட்டாள். அவளைச் சமாதானம் செய்வதற்கு மிக்கேலேக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

சுராஜைப் பிரிய மனமின்றிப் பிரிந்து அவர்கள் இத்தாலி திரும்பினர்.

மல்பென்சா விமானத்திலிருந்து ஜெனோவாக்குத் திருபிக்கொண்டிருந்தபோது அவுட்டோகிறிலில் காரை நிறுத்தி கோப்பி குடிக்கச் சென்றான் மிக்கேலே, அன்னா காரில் இருந்து இறங்கி சற்று ஓய்வெடுத்துக் கொண்டிருந்தாள்

நாய் ஒன்று அவளருகில் வந்து அவள் முகத்தை ஏக்கத்துடன் பார்த்தது.அதை தடவிக்கொடுத்தபோது அது அவளோடு ஒட்டிக்கொண்டது.ஆன்னா சுற்று முற்றும் பார்த்தபோதும் அதன் உரிமையாளர் எவரும் தென்படவில்லை. அவள் தன்னிடம் இருந்த பாண்துண்டைப் போட்ட போது அது ஆவலாகக் கவ்வி உண்டது,.நாயினைத் தூக்கிய அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.

“இந்த நாயை நான்களே வளர்ப்போம்” என்ற படி மிக்கேல்லே அவளுக்காக வாங்கிவந்த கப்புச்சீனோவை நாய்க்குகப் பருக்கினாள்.

இரக்கமும் எதனிடத்திலும் அன்பு செலுத்துவதும் ஆன்னாவின் பிறவிக்குணம் என்பதை மிக்கேலே அறிவான்.

அதனால் மிக்கேலே மறுப்பெதுவும் சொல்லவில்லை. ஆன்னாவின் இன்றைய மனனிலைக்கு நாயின் வருகை ஆறுதலாக இருக்கும் என உறுதியாக நம்பவும் செய்தான்..

ஆதரவற்ற நாயை வீட்டுக்கு கொண்டுவந்த போது ஆன்னாவின் மனதில் சிறிது அமைதி உண்டாயிற்று. அந்த நாய்க்கு நார்தோ எனப் பெயரிட்டார்கள். அன்னாவின் பெரும் பொழுதுகள் நார்தோவுடனேயே கழிந்தன.

இந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் பிள்ளைகளைத் தத்தெடுக்கச் சென்ற இத்தாலிய ஸ்பானியத் தம்பதிகள் பலரது நட்பு அன்னா தம்பதியருக்குக் கிடைத்தது.அவர்கள் வற்சப் குரூப் ஒன்றை உருவாக்கிக் கொண்டார்கள். அடிக்கடி கதைப்பதோடு ,குறிப்பிட்ட தினங்களில் ஒரிடத்தில் சந்தித்தும் உரையாடுவார்கள். தங்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவர்களில் சிலர் ஏற்கனவே தாம் தத்தெடுத்த பிள்ளகளை அந்த ஒன்றுகூடலின்போது எடுத்து வருவார்கள்

அப்பொழுதெல்லாம் சதா நேரமும் சுராஜின் நினவாகவே இருக்கும் ஆனாவுக்கு ஏக்கமாக இருக்கும். அவள் தத்தெடுப்பதில் இறுக்கமான விதிகளை உருவாக்கியவர்களை ஒருபாட்டம் திட்டித்தீர்த்துவிடுவாள்.

மூன்றாவது தடவையாகச் சென்ற போது தத்தெடுப்பதாற்கான சடங்காசாரங்கள் எல்லாம் பூர்த்தியாகி…

கடைசியில் சுராஜை மிக்கேலே தம்பதியினரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.

ஒரு குழந்தைக்காககத் அதன் தாய் பத்து மாதங்கள் மட்டுமே காத்திருக்கிறாள்…ஆனால் அன்னாவோ முழுசாக நான்கு ஆண்டுகாளாகக் காத்திருந்திருக்கிறாள்.

இன்று ஆன்னாவின் கைகளில் சுராஜ்…

“எனது வாழ்க்கைக்கு இன்றுதான் அர்த்தம் கிடைத்தது” என்று மருகிப் போகிறாள் ஆன்னா.

அவளுடைய வாழ்வுக்கு மட்டுமா…? சுராஜின் வாழ்வுக்கும் தான்…

Print Friendly, PDF & Email

நிழல் பேசுகிறது!

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

பர்ஸனல் ஸ்பேஸ்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)