தாயில்லாக் குழந்தைகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 5, 2023
பார்வையிட்டோர்: 2,704 
 

(1951ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

கதைமூலம்: பிரான்ஸிஸ் பெல்லர்பி, இங்கிலாந்து

வேர்த்து விருவிருக்க, கால்கள் தள்ளாட, இரண்டு குழந்தைகள் நடந்து சென்றன. பையன், பதினொரு வய சிருக்கும் முன்னால் நடந்தான். பெண் எட்டு வயசுபோல இருக்கும், பாதை முன் மறு ஓரத்தில் பின் தங்கித் தொடர்ந்து கொண்டிருந்தாள். ‘ஏன் உலாத்தப் போயி ருக்க வேணும்’ என அவள் எண்ணினாள். ‘யாராவது எப்பவாவது அண்ணன்கூட உலாத்தப் போவாளா ?’… மனசில் வருத்தமும் வெறுப்பும் குமிழியிட்டது. பையன் வீட்டில் உட்கார்ந்து வழக்கம்போல காப்பியாவது எழுதிக் கொண்டிருந்தோமில்லியே என நினைத்தான்.

லிலாக் கொடி அவள் சென்ற பாதை ஓரத்துச் சுவர் மேல் கவிந்து தொங்கியது. சிறுமி கொஞ்சம் நின்றாள், பச்சைப் பசேல் என்று பட்டுப்போல இலை, கிண்ணம் மாதிரி பூ… மழையில் நன்றாக நனைந்து பிரகாசித்தால் நன்றாக இருக்காதா என்று நினைத்தாள்.

சுவர்மேல் உடைந்த கண்ணாடித் துண்டுகள் நெடுகக் குத்தி வைக்கப்பட்டிருந்தது. வெயில் வெளிச்சம் அதில் பட்டு வைர நகை மாதிரி பளிச்சிட்டது. அவர்களுடைய அப்பா ஒரு பாதிரியார். அவருடைய சர்ச்சுக்கு வார்ட னான [டிரஸ்டிமாதிரி ] ஸ்ரீ ஹார்ப்பர் அந்த ஊரிலேயே ரொம்பப் பெரிய பணக்காரர். நிஜமான நகை என்றால் அப்படி ஒரு நிமிஷத்திற்கு அதை விட்டு வைத்திருக்க மாட்டாரே. வச்சிருந்தாலும் ஜனங்கள் உடைந்த கண் ணாடித் துண்டுன்னுதான் நெனைச்சிருப்பார்கள்.

‘பிலுக்குக்காரி’ என்றான் பையன். ‘என்ன ரொம்ப பிலுக்கிக்கிட்டு நடக்கிறியே. பையிலே கையை வச்சிக் கிட்டு நடந்தா ஆம்பிளை ஆயிருவியோ, ஒன்னைப் பாத்தா அசட்டுப் பொட்டச்சி மாதிரிதான் இருக்கு’

என்று சொல்லிவிட்டுக் காலால் தரையில் உதைத்துப் புழுதி யைக் கிளப்பிக்கொண்டு காலில் கிடந்த ஜோடுகளை நிசார மாகப் பார்ப்பது போலப் பார்த்துப் பெருமை யடித்துக் கொண்டான் பையன்.

அவன் நிஜத்தைச் சொல்லல்லேன்னு அவளுக்குத் தெரியும். சட்டைப் பையிலே கையிருக்குதுன்னா அது அவளுக்கு வழக்கம். பிலுக்குகிறதுக்கே தைரியம் தனக்குக் கிடையாது என்பது அவளுக்குத் தெரியும், ஒரு தடவை அவன் அப்படிச் சொல்லி விட்டால், இயற்கை யாக நடக்கவோ பேசவோ அவளுக்கு முடியாது. அழுகை அழுகையாக வந்தது. ஒன்னும் செய்ய முடியலெ. பைக்குள் கிடந்த வேர்த்துப் புழுங்கும் அழுக்கு விரல்களை இறுக்கி மடக்கி நெறித்துக் கொண்டாள்.

அப்பொழுது தான் கிழவி கார்லண்ட் வீட்டுக் கிழட்டு நாயைப் பார்த்தான் அவன். ‘அதோ கிடக்கே சோம்பேறி நாயி. அதெ எழுப்பி ‘சூ’ விடறேன் பாரு. ‘ஏ, நாயி…’ நிழலில் படுத்துக்கிடந்த சுகத்தில் அது திரும்பவில்லை. (அது கிழவிவைத்திருந்த கடையின் ஜன்னலுக்குக் கீழே படுத்துக்கிடந்தது) பையன் குனிந்து ஒரு கல்லை எடுத்தான.

‘கொடுமெ பண்ணாதியேன், போடாதே – போடக் கூடாது…’ பையன் கல்லை விட்டெறியும் சமயத்தில் அவள் அவனுடைய கையைத் தட்டிவிட்டாள். கல் நாயின் மேல் விழாமல் மேலிருந்த ஜன்னல் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே பாய்ந்தது.

குழந்தைகள் இரண்டும் பயத்தில் விரைத்துப்போய், சில்லு சில்லாகச் சிதறிய கண்ணாடித் துண்டுகளைப் பார்த்துக்கொண்டு நின்றன. அச்சமயம் ஒரு கிழவியின் கீச்சுக் குரல் பீதி கொப்புளித்துக் கொண்டு பிறப்பது கேட்டது. பையனுக்கும் பயம் சற்றுத் தெளிந்துவிட தப்புவதற் காகச்சிறுமியின் கையை எட்டிப்பிடித்துக்கொண்டு ‘வாடீ ஓடிருவோம்’ என்றான். அவர்கள் ஓடியே போயிருப்பார் கள். ஆனால் அந்த நிமிஷத்திலேயே கிழவி கதவைத் திறந்துகொண்டு லொங்கு லொங்கு என ஓடிவந்து குழந் தைகளைச் சுட்டிக் காண்பித்து, ஜன்னலையும் காட்டிக் கத்த ஆரம்பித்தாள். கிழட்டு நாயும் துணைக்கு நின்று குலைத்தது.

‘மாஸ்டர் டிக், மிஸ் ஸாரி-என்னா பண்ணிப்புட்டிங்க பாத்தியா-அந்தப் பெரிய பாறாங்கல்லை விட்டெரிஞ்சு என்னைக் கொண்ணே போட்டிருப்பிகளே. மயிரிழெல்லா தப்பிச்சேன். உங்கப்பா நல்ல பக்திமான். இப்படி இந்தத் தாயில்லாப் புள்ளைங்க கொலெகாரரா அலைஞ்சு திரியு துன்னு அவருக்குத தெரிஞ்சா எப்பிடி இருக்கும்? உங்கம்மா செத்துப்போயி ரெண்டு வாரங்கூட ஆவுலியே, கர்த்தர் கழிச்ச ஞாயிற்றுக்கிழமையிலியா நீங்க இப்படிச் செய்யணும்? நான் வெயிலா இருக்கேன்னு உள்ளே இருந்து கணக்குப் பார்த்துக்கிட்டிருந்தேன்…’ என அடுக்கிக் கொண்டே போனாள். மடை உடைத்துக் கொண்டு பாய்ந்தமாதிரி வார்த்தை கங்கு கரையில்லாமல் புரண்டு பிரவகித்தது.

பெண்ணுக்குக் கோபம், பயம். இத்தனையும் சொல் லக்கிடக்கா. தடுக்க வேண்டாமா?… குழந்தை அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள். ஏதாவதுநடந்து, பெரிசா நடந்து இந்த வார்த்தையை அணைக் கட்டவேண்டும், அம்மா… செத்து ரெண்டு வாரமாச்சு… என்ற வார்த்தைகளே பிறவாதது மாதிரி துடைக்கப்பட வேண்டும்.

பெரிசா ஒன்று நடக்கத்தான் செய்தது.

பையன் முறுக்காக, ‘அந்தக் கல்லைச் சன்னல் மேல் குறிபார்த்து எறியவில்லை-நாயின் மேல் போட்டேன்’ என்றான் உரத்த குரலில்,

‘அப்படியா’ என்று கிழவி கீச்சிட்டாள். அவளுடைய கைகள் பதறின. வானத்தையும் பூமியையும் மாறி மாறிப் பார்த்து அங்கலாய்த்து, ‘வாயில்லாப் பிராணியாச்சே, பாவம் இப்பத்தானேடியம்மா ஒன்குழந்தையை மண்ணுக் குப்பறிகுடுத்தே’ என நாயிடம் கதற ஆரம்பித்து விட்டாள்.

நாயின் குலைப்புகளுக்கு இடையே பையன் இடைமறித்துத் தன் பதிலைக் கோஷித்தான். ‘நாயிமேலே போடரத்துக்கில்லே – ஒரு பெரிய வண்டு அதும் மூக்குக்கிட்டப் பறந்து வந்தது, கொட்டிப்புடுமேன்னு கல்லெப் போட் டேன். வண்டெ வெரட்டிப்புட்டுது. ஆனாக்கக் கல்லுதான் ஜன்னல் மேலே பட்டு ஒடச்சுப்புட்டுது. ரொம்ப வருத்தமாருக்கு, அப்பாகிட்டச் சொல்லிப் பணத்தெ அனுப்பச் சொல்லுறேன்’.

என்ன ஆச்சரியமான பொய். மகா பெரிய இதிகாச உதயத்துக்குகந்த பொய். குழந்தைகளின் பீதி தளர்ந் தது. இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவில்லை. கிழவியின் முன், தொண்டை கம்மிய நாயின்முன் தளர்ந்து போய் நின்றார்கள்.

குழந்தைகள் பொய்யே சொல்லாதவை, தாயாருக்கும் தெரியும.தகப்பனாருக்குந் தெரியும். எல்லாருக்கும் தெரியும் பொய் சொல்லமாட்டார்கள் என்று.

அண்ணன்னா இப்படியல்லவா இருக்கணும். அண்ணன்னா இவன் தான் அண்ணன். நம்மை யார் இனி என்ன செய்ய முடியும்… சிறுமியின் மனத்தில் பெருமையும் பரிவும் குமிழிவிட்டது.

கிழவியின் தன்மை அடியோடு மாறியது. அப்படின்னா அது வேறேதான். வாயில்லாச் சீவனுக்கு உதவி பண்ணினிங்க. எப்படி இருந்தாலும் கல்லு கல்லுத்தான். மாஸ்டர் டிக் நீ இனிமேல் இப்பிடிக்கல்லெ விட்டெறியாதே. கல்லெடுத்தே போடப்படாது. அதுதான்சட்டம். அதெப் பத்தி இனிமே என்ன பேச்சு, உங்கப்பாதான் பணத்தை அனுப்பப் போறாங்களே, அனுப்பி விடுவாங்கன்னு என க்குத் தெரியுமே. எப்பிடி இருந்தாலும் அந்த அம்மாவுக்குப் பொறந்த கொளந்தைங்கள் இல்லே. சூரியன் மாதிரி பொய்யே சொல்லாதே…’ என அலப்பிக் கொண்டே…

கிழவி கொடுத்த பட்சணங்களைத் தின்று கொண்டு மேலே நடந்து சென்றன குழந்தைகள். பிளொ (கலப்பை) என்ற பெயர் உள்ள கள்ளுக்கடைக் கதவு சாத்தியிருந் தது. வாசலில் பூனைக்குட்டி படுத்துக்கிடந்தது. ஒருத்தரு மில்லை. சத்தமே கேக்கலே. குதிரை மசாலி மரச்சோலைக் கப்புறம் பாதிரியார் வீடுதான். நாஸ்திகப் பண்ணையார் (சர்ச்சுக்கு வராததால்) தோட்டத்தில் குதிரைக்குட்டிகள் உண்டு. அவைகூட ஓடக்காணோம்.

வேலி ஓரத்தில் தலையைக்குனிந்து ஆட்டிக்கொண்டு நெருங்கி நின்றார்கள்.

‘அப்பா கிட்டவும் அதேயேதான் சொல்லணும்’ என்றான் பையன்.

‘ஆகட்டும்’

‘கிழட்டு முண்டை’

‘ஆமாம்.’

‘ஒன்னெ அவ்வளவு தூரம் நடத்தி இழுத்தடிச்சே னென்று இருக்கு’

‘நடக்கரதுக்குக் கஷ்டமாவே இல்லியே-எனக்கும் நல்லாத்தானே இருந்தது.’

‘கருப்பு வர்ண முட்டாயி ரெண்டுதான் மிச்சம், என் பங்கு.’

தோளோடு தோள் ஒட்டும்படியாக ஜோடியாகத் தலையைக்குனிந்து கொண்டு நெருங்கி நடந்து சென்றார்கள். கவனிப்பாரற்று வெறிச்சோடிக் கிடக்கும் புஷ்பப் பாத்திகளைத் தாண்டி நிசப்தம்கிடந்த பழைய வீட்டுக்குள் புகுந்தார்கள் அந்தக் குழந்தைகள்.

– தெய்வம் கொடுத்த வரம், தமிழில்: புதுமைப்பித்தன், முதற் பதிப்பு: செப்டம்பர் 1951, ஸ்டார் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *