தாம்பத்தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 28, 2022
பார்வையிட்டோர்: 1,390 
 

(1952 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

செல்லம்மாள் தனிமையில் உட்கார்ந்திருந்தாள். உலகத்தில் விருப்பு வெறுப்புகளிலெல்லாம் இருந்து விடு பட்டவளைப் போல் அந்த அறையின் ஒரு மூலையில் தனிமையில் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.

செல்லம்மாளுக்கு வயது இருபத்தியெட்டு. இருபத்தி யெட்டு வருசம் இந்த உலகத்தில் வாழ்ந்து விட்டதினாலோ, அல்ல பத்து வருடக் குடும்ப வாழ்க்கையில் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகி விட்டதினாலோ எந்தப் பெண்ணும் உலகத்தை வெறுத்து விட முடியாது.

செல்லம்மாளுக்கு அழகு இருந்தது. அழகுக்கேற்ற வயது இருந்தது. வயதுக்கேற்ப வாழ்க்கை வசதி இருந்தது. வீட்டிற்குள் துள்ளி விளையாட இரண்டு குழந்தைகள் இருந்தன. இத்தனைக்கும் ஆதரவாக அவள் கணவன் இருந்தார்.

கணவன் இருக்கிறாரா? இந்தக் கேள்வி மனதில் எழுந் ததும், செல்லம்மாள் தலையைத் தூக்கிப் பார்த்தாள், எதிரே வெள்ளையடித்த சுவர் தான் இருந்தது.

சற்று நேரத்துக்கு முன் அவளுடைய எட்டு வயது குழந்தை ரமணி கொண்டு வந்து கொடுத்த ஒரு சஞ்சிகை அவள் மடியில் கிடந்தது, அதைக் கையில் எடுத்தபடி சன்னல் வழியே உலகத்தைப் பார்க்க முயன்றாள். உலகம் தெரியவில்லை! மழை பெய்வதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருக்கும் இருண்ட வானம் தான் தென்பட்டது. ஒரு பெருமூச்சு விட்டபடி கையில் இருந்த சஞ்சிகையை புரட்டினாள். மனம் எதிலும் ஈடுபடவில்லை. பக்கம் பக்கமாகப் புரட்டிக் கொண்டிருக்கும் பொழுது தாம்பத்தியம்” சற்றுப் பெரிய எழுத்தில் அச்சிடப்பட்டிருந்த அந்தப் பெயர் ஒரு சிறு கதையின் தலைப்பு என்பது அவ ளுக்குத் தெரிந்தது. அது அவள் கவனத்தைக் கவர்ந்தது. குடும்ப வாழ்க்கை குலைந்து போகாமல் இருப்பதற்காக, மனதிற்குக் கடிவாளம் போட்டு வாழ்ந்த தாம்பத்தியக் கதாபாத்திரங்களைப் படித்திருக்கிறாள், அவள். ஆனால்!

சுவரிலிருந்த கடியாரத்திலிருந்து டா…ண்! என்று ஓசை கேட்டது. செல்லம்மாள் தலையைத் தூக்கிப் பார்த்தாள்; மணி நாலரை.

மனிதன் கண்ட அறிவுப் புரட்சி அந்த மனிதக் கூடு, பத்து வருட காலமாக அந்த வீட்டில் ஒரு வினாடி கூடத் தவறாமல் தன் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது. ஏன்? அவளுடைய தாம்பத்தியமும் கடந்த பத்து வருட காலமாக எவ்வித குறையுமின்றி ஒழுங்காகத்தான் ஓடிக் கொண்டிருந்தது. ஆனால்! அவள் பார்வை அந்த நேரம் காட்டும் இயந்திரத்தில் லயித்துப் போயிருந்தது.

ஓரு நாள் அதோ அந்தச் சுவரோரம் ஒரு ஸ்டூலைப் போட்டு அதன் மேல் ஏறி நின்று அந்த மணிக்கூட்டை சுவரில் மாட்டினான் அவள். கணவர் கணேசன். அவன் ஏறி நின்ற ஸ்டூல் ஆடாமல் இருப்பதற்காக அதைப் பிடித்துக் கொண்டு நின்றாள் அவள். மணிக்கூட்டை சுவரில் மாட்டி விட்டு கீழே இறங்கிய கணேசன், செல்லம்மாளைப் பார்த்துச் சொன்னான்.

“மனைவி செய்ய வேண்டிய வேலை இது தான்”

“எது?” அவள் கேட்டாள்.

“வாழ்க்கையின் அசைவுகளினால் கணவனின் கால்கள் தவறி விடாமல் பார்த்துக் கொள்வது”

இதைச் சொல்லி விட்டு அவள் கன்னத்தில் தட்டினான் அவன் அவள் சிரித்தபடி ஸ்டூலை அப்புறப்படுக்தினாள்.

இந்தப் பழைய நினைவுகளில் செல்லம்மாளின் கண்கள் கலங்கின. அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அந்த மணிக்கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மணிக் கூட்டின் அந்த பனிரெண்டு இலக்கங்களும் பனிரெண்டா யிரம் வருடங்களாகத் தோன்றியது அவளுக்கு. மணிக் கூட்டின் முட்கள் அந்தப் பனிரெண்டு இலக்கங்களையும் நிலைக்களனாக வைத்து எதிர்காலத்தைச் சுற்றிச் சுழல் வதைப் போல, அவளுடைய மனமும் அந்த மணிக்கூட்டை நிலைக்களனாக வைத்துக் கடந்த காலத்தைச் சுற்றி வந்தது.

செல்லம்மாளுக்கு விவாகமாகி ஏழெட்டு மாதங் களுக்குப் பிறகு தனிக் குடித்தனம் ஆரம்பித்து ஐந்தாறு நாட்களாகியிருந்தன. ஒரு நாள் மதியச் சாப்பாட்டுக்குப் பின் வேலை எதுவும் இல்லாமல் போகவே பக்கத்து வீட்டுக்குப் பேச்சுத் துணைக்காகப் போயிருந்தாள். அன்று மின்றும் பெண்களுக்குப் பேச்சென்றால் அப்பத்தைத் தேனில் தொட்டுச் சாப்பிடுவது போன்றது தான். எனவே பேச்சுப் போக்கில் நேரம் போனது தெரியாமல் இருந்து விட்டாள் செல்லம்மாள். அந்த வீட்டுக் குழந்தைகள் பள்ளிக்கூடம் விட்டு வந்த பிறகுதான் அவளால் நேரத்தை உணர முடிந்தது. அவசரவசரமாக வீட்டுக்கு ஓடி வந்து தேநீருக்கு அடுப்பில் தண்ணீரை வைத்து விட்டு வீட்டு வேலையில் ஈடுபட்டாள். அடுப்பிலேற்றிய தண்ணீர் கொதிப்பதற்குள் அவள் கணவன் வந்ததும் அவளுக்கு ஒன்றுமே ஓடவில்லை. பரபரப்புடன் தேநீர் ஊற்றும் வேலையில் கவனம் செலுத்தினாள்.

கணேசன் அவளுடைய பரபரப்பைக் கண்டு உள்ளுக் குள் சிரித்தான். ஒன்றுமே பேசாது ஈசிச் சேரில் படுத்திருந் தான் அவள் வரவை எதிர்பார்த்து.

தேநீர் இல்லாமல் அவனைப் பார்க்க அவள் விரும்ப வில்லை. காரியாலயத்தில் வேலைத் தொல்லைகளால் அலுத்துப் போய் வீடு வரும் கணவனை ஆசுவாசப் படுத்த முடியாத ஒரு மனைவி வீட்டில் இருந்து என்ன பயன்? என்று எண்ணியதில் ஏற்பட்ட பரபரப்பு கணவர் கோபித்துக் கொள்வாரோ என்ற பயம். இவைகளுக்கு மத்தியில் தேநீர் கோப்பையுடன் கணேசனிடம் வந்தாள் செல்லம் மாள். அவள் முகத்தில் வியர்வை வழிந்தது.

“வானம் இருண்டு குளிர் காற்று வீசுகிறதே! அங்கே வியர்வை வழிவது ஆச்சரியம் தான். ஆனால்! அழகாய் இருக்கிறது” என்றான் கணேசன்.

செல்லம்மாள் முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

“செல்லா! இப்படி உட்காரலாமே?” என்றான் அவன்.

அவள் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள்.

“தேநீரை விட தேவி தரிசனம் தான் முக்கியம்” என்றான் அவன்.

“பிரசாதம் இல்லையென்றால் தேவியிடம் பக்தனுக் கென்ன வேலை?” இப்படிக் கேட்டு விட்டு ஒரு பிஸ்க் கட்டை எடுத்து நீட்டினாள் அவள். இருவரும் தேநீர் அருந்தினர். அவளுக்கு அவன் இனித்தான். அவனுக்கு அவள் இனித்தாள். இருவருக்கும் வாழ்க்கை இனித்தது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு மறு நாள் அலுவலகத்தில் இருந்து வரும் பொழுது ஒரு மணிக்கூடு வாங்கி வந்தான் அவள் கணவன். அந்த மணிக்கூடுதான் இன்றும் அந்தச் சுவற்றில் தொங்கிக் கொண்டிக்கிறது.

மனைவி தவறு செய்யும் பொழுது அந்தத் தவறுக்குக் காரணம் என்ன? என்பதை அறிந்து மேலும் தவறு செய் யாமல் இருப்பதற்கு வழி வகுத்துக் கொடுப்பது தான் தாம் பத்தியத்துக்கு இன்றியமையாதது. கணவனின் கடமை யும் கூட, இந்தக் கடமையைக் கணேசன் அறிந்திருந்தான். அதைச் செய்தும் கொடுத்தான். அந்தச் செய்கையால் காலம் அறிந்து காரியம் செய்வது என்ற நியதி அவள் வாழ்க்கையில் நிலை பெற்று விட்டது. கணவனுடைய கடமை ஒழுங்கு பெற மனைவிக்கும் பொறுப்புணர்ச்சி ஏற் பட்டது. அதனால் அவளுடைய தாம்பத்தியமும் ஒழுங்கு பெற்றது .

மணி நாலரை டா…ண்! என்றடிக்கும்பொழுது தேநீரு டன் கணவனை எதிர் பார்ப்பாள் செல்லம்மாள். அந்த நாலரை மணிதான் அவளுடைய இன்ப வாழ்க்கையின் திறவு கோலாக அமைந்திருந்தது. காலையில் எட்டரை மணிக்குக் காரியாலயம் செல்வான் கணேசன். மதிய போசனம் ஒரு வேலைக்காரி மூலம் கிடைக்கும். திரும்பவும் நாலரை மணிக்குத்தான் வீட்டுக்கு வருவான். அந்த இடத்தில் தான் அவர்களின் வாழ்க்கையின் இனிமை ஆரம்பமாகும். சொல்லப்போனால் அந்த நாலரை மணிதான் அவர்கள் தாம்பத்தியத்தின் தலைவாசலாக அமைந்திருந்தது. இன் றும் அந்தத் தலைவாசல் இருந்தது. ஆனால்! அதைத் திறக்க அவன் இல்லை ,

செல்லம்மாள் சேலைத் தலைப்பால் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள், சன்னல் வழியே வந்த குளிர் காற்று செல்லம்மாளின் பார்வையை வெளி உலகத்துக்கு இழுத்தது. திரும்பவும் தன் வெறிச்சிட்ட பார்வையை சன்னனுக்கு வெளியே ஓடவிட்டாள். அப்பொழுது தான் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையென்றால் அவன் கணவனுக்குத்தான் எவ்வளவு பிரியம்? மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது அவன் சொல்வான்.

“வேலை செய்யாமல் சம்பளம் தருவதற்கு யாராவது இருந்தால், மழைக்காலத்தைப் போல் மகிழ்ச்சியான காலம் வேறெதுவும் இருக்க முடியாது. அதிலும் மழை பெய்யும் பொழுது அடுப்புக்கருகில் உட்கார்ந்து மனைவிக்கு ஒத்தாசை செய்தால் உடம்புக்கும் மனதிற்கும் குளிரே தாவ முடியாது!” என்று.

அவன் சொல்லும் இந்த வார்த்தைகளிலிருந்து ஒன் றைக்கூட அவள் மறக்கவில்லை. மழை காலத்தில் அவன் வீட்டில் இருக்கும் பொழுதெல்லாம் காரமாக ஏதாவது செய்து கொடுப்பாள். அதைத்தான் எவ்வளவு ருசித்துச் சாப்பிடுவான் அவன்.

செல்லம்மாள் கண்ணீர் மறைத்துக் கொண்டிருந்த தனது கண்களால் திரும்பவும் மணிக்கூட்டைப் பார்த்தாள். அது எப்பொழுதும் போல் தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது.

மணிக்கூடும் மனித வாழ்க்கையும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள். மனித வாழ்க்கையில் ஒரு வினாடி கூட மணிக்கூட்டின் உதவியின்றிச் செல்வது கிடையாது மனிதன் தன் வாழ்க்கையையே மணிக்கூட்டிடம் தான் ஒப்படைத்திருக்கிறான்.

இதே மணிக்கூடு செல்லம்மாளின் வாழ்க்கையில் புஷ் பத் தொட்டிலில் படுத்துறங்கும் அனுபவத்தைக் கொடுத் திருக்கிறது. ஆனால் அதே மணிக்கூடு இன்று இரத்தம் வடியும் வெட்டுக் காயத்தில் ஐடினை ஊற்றுவது போன்று எரிவைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

அப்பொழுது செல்லம்மாள் கர்ப்பிணியாக இருந்தாள். வாழ்க்கையில் முதல் அனுபவம் இனிமையானது தான்.”பிரசவம் பயங்கரமானது.” என்று பலர் சொல்லியும் செல்லம்மாள் அந்த முதல் அனுபவத்தை மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்திருந்தாள். அவளுக்கு மாதம் நெருங்கிக் கொண் டிருந்தது. இப்பொழுதெல்லாம் அவள் இரவில் சாப்பிடுவ தில்லை. இல்லையென்று சாப்பிட்டாலோ, நெஞ்சில் கல்லை ஏற்றியது போன்ற அவஸ்தைதான். அன்றிரவு தூக்கமே இருக்காது. இது ஒரு குழந்தைக்குத் தகப்பனாகும் நாளை எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் கணேசனுக்குத் தெரியாமல் போனது ஆச்சரியமில்லை. ஆனால்! செல்லம் மாளும் இதை அவனுக்குச் சொல்லவில்லை. சில சமயம் செல்லம்மாள் சாப்பிடவில்லை என்று அவன் அறிந்து விட்டால் அவனும் சாப்பிட மாட்டான். எப்படியும் சாப் பிட வைத்த பிறகு தான் அவனும் சாப்பிடுவான். செல்லம் மாள் அதிகம் பிடிவாதம் செய்தால், அவலுடைய கடைசி ஆயுதம் இது தான்.

“நான் உன் அன்புக் கணவன். உன்னை விட ஐந்து வருடம் முந்திப் பிறந்தவன்; நான் சொன்னால் நீ சாப்பிட மாட்டாயா?”

இப்படிக் கொஞ்சலும் கெஞ்சலுமாகப் பேசும் கணவனை மீற முடியாமல் சாப்பிட்டு விடுவாள். வாழ்க் கையிலே அவளை முந்திப் பிறந்த கணவன் மரணத்திலும் அவளை முந்தி விட்டானே.

செல்லம்மாள் தன் இரு கரங்களாலும் தன் முகத்தை மூடிக் கொண்டு விம்மினாள்.

“டா…ண்! டா…ண்!”

செல்லம்மாள் நிமிர்ந்து பார்த்தாள்; மணி ஐந்து! இந்த ஐந்து மணி அடிக்கும் பொழுது அனேகமாக அவள் கணவ னுடன் தேநீர் அருந்திக் கொண்டிருப்பாள். அந்த நேரம் தான் எவ்வளவு இனிமையாக இருக்கும்! வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு வினாடியும் மிகவும் பெருமதியானது என்று புத்தகத்தில் படித்த ஞாபகம் அவளுக்கு. என்றாலும் வாழ்க்கையில் கழியும் ஒவ்வொரு வினாடியும் மிகவும் இனி மையானது என்பதை அவளுடைய தாம்பத்தியத்தில் தான் அனுபவித்திருக்கிறாள். கடந்த பத்து வருட காலமாக இந்த ஐந்து மணி அடிக்கும் பொழுது இருந்த மனநிலை வேறு; இன்றிருக்கும் நிலை வேறு. அன்றும் இன்றும் அந்த மணிக்கூடு ஐந்து மணியை ஒரே சுருதியில்தான் அடித்துக் கொண்டிருக்கிறது. ஆனால்! அவளுடைய வாழ்க்கை தான் சுருதி மாறிவிட்டது! சுருதி மாறி விட்டதா? ஒரு தந்தி யறுந்த அபசுரம் பேசிக் கொண்டிருக்கிறது.

முதல் பிரசவம் ஆஸ்பத்திரியில் தான் நடைபெறவேண்டு மென்று சொல்லிக் கொண்டிருந்தான் கணேசன் பிரசவ காலம் நெருங்கிவிட்ட சமயம் அரசாங்க அலுவலாக கணேசன் வெளியூர் போகவேண்டி வந்து விட்டது. செல் லம்மாளுக்குத் தைரியம் சொல்லிவிட்டு அவன் போய் விட்டான். அவன் போன மறு நாள் வழக்கம்போல் மருத்துவ பரிசோதனைக்காகச் சென்றாள் செல்லம்மாள். ஆஸ்பத்திரிக்குப் போகும் போதே அவள் இடுப்பு நரம்புகள் கடுத்துக் கொண்டிருந்தன. செல்லம்மாளுக்கு அதன் அர்த்தம் புரியவில்லை. வீட்டுக்கு வரும்பொழுது மணி பதினொன்றாகி விட்டது. செல்லம்மாளின் தாயார் ஏதோ கசாயம் போட்டுக் கொடுத்தாள். ஆனால்! இரண்டு மணிக் கெல்லாம் பிரசவ வேதனை ஆரம்பித்து விட்டது. மருத்து வத் தாதி வந்தாள்; சரியாக மணி ஐந்தடிக்கும்பொழுது குழந்தை பிறந்து விட்டது.

குழந்தை பிறக்கும் பொழுது கணேசன் இல்லை; இதை நினைத்து அந்த பிரசவ நேரத்தில் செல்லம்மாள் அழுதாள்.

இரண்டு நாள் கழித்து கணேசன் வந்தான். குழந்தை பிறந்து விட்டதை அறிந்து மகிழ்ச்சியுடன் செல்லம்மாளின் அறைக்குள் ஓடினான். கணவனைக் கண்டதும் செல்லம் மாளின் கண்களில் நீர் மல்கியது.

“செல்லா?” என்றான் கணேசன். அந்த அழைப்பில் எல்லாவற்றையும் மறந்தாள் அவள். அந்த அழைப்பின் இனிமையில் கண்களை மூடிக்கிடந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வடிந்தது. அவன் அவள் பக்கத்தில் உட்கார்ந்து குழந்தையைப் பார்த்தான்; அது நன்றாகத் தூங்கிக்கொண் டிருந்தது. செல்லம்மாளின் தலையை வருடிக்கொண்டே கணேசன் கேட்டான்.

“நான் உன்னைத் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டேன் என்று பயந்தாயா?” என்று.

அவள் பதில் சொல்லவில்லை. அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள், அவன் அவள் கையை எடுத்து தன் தாடையில் வைத்து அணைத்தபடி சொன்னான்.

“நீ பயப்படக் காரணமே இல்லை . என் உயிர் உன் பக்கத்தில் தானே இருந்தது!”

அவள் தலையைச் சரித்துக் குழந்தையைப் பார்த்தாள். அவளால் ஒரு வார்த்தை கூடப் பேச முடியவில்லை . அந்த இனிமையிலே அவள் வாயடைத்துப் போய் விட்டது கணேசன் மேலும் சொன்னான்.

“உன் அன்புக்கு இன்னொரு பங்காளி தோன்றி விட்டான் இனி என்னை யார் கவனிக்கப் போகிறார்கள்?”

செல்லம்மாள் அவன் கன்னத்தைக் கிள்ளினாள்.

இந்த இடத்தில் செல்லம்மாள் தன் எண்ணத்தை நிறுத்திக் கொண்டாள், மேலும் தொடர்ந்தால் அவள் உள்ளம் வெடித்து விடும் போல் இருந்தது.

செல்லம்மாள் மணிக்கூட்டைப் பார்த்தாள். கண்கள் ளுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. இருட்டு அந்த அறைக்குள் மெதுவாக வந்து கொண்டிருந்தது. யாரோ வரும் சத்தம் கேட்டது. செல்லம்மாள் தன் பார்வையைக் கதவுப் பக்கம் திருப்பினாள். அவளுடைய மூத்த குழந்தை சீரமணி’ வந்து கொண்டிருந்தாள்.

“அம்மா! இருட்டுக்குள் உட்கார்ந்து கொண்டிருக்கி றீர்களே? விளக்கைப் பொருத்தட்டுமா?” என்று கேட்டாள் ரமணி,

“வேண்டாம் அம்மா! நான் பொருத்திக் கொள்கிறேன்” என்றாள் செல்லம்மாள்.

விளக்கு வெளிச்சத்தை விட இப்பொழுது இருள் தான் அவளுக்கு ஆறுதல் அளிக்கக் கூடியதாக இருந்தது.

ரமணி வாடிய முகத்துடன் அறையை விட்டு வெளி யேறிக் கொண்டிருந்தாள். மகளிடம் செல்லம்மாள் சொன்னாள்.

“ரமணி! கதவைச் சாத்தி விட்டுப் போம்மா!” என்று.

ரமணி கதவை அடைத்து விட்டுச் சென்றாள். இருந்த வெளிச்சமும் மறைந்து இருள் எங்கும் இடம் பெற்று விட்டது. இப்பொழுது செல்லம்மாள் இருளுக்குள் இருளாய் ஒன்றிப் போய் விட்டாள். ஆனால்? அவளுடைய தாம்பத்தியம் எப்பொழுதோ இருளுக்குள் ஒன்றி விட்டதே!…

– 1952, பித்தன் கதைகள், முதற் பதிப்பு: மார்ச் 1995, மல்லிகைப்பந்தல் பதிப்பகம், யாழ்ப்பாணம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *