தாம்பத்தியத்தில் கத்தரிக்காய்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 22, 2021
பார்வையிட்டோர்: 3,754 
 
 

“பாரு! இங்க வந்து பாரேன்,” உற்சாகமாகக் கூவினார் ஜம்பு.

“வேலையா இருக்கேன்,” என்று பதில் குரல் கொடுத்தாள், அவருடைய தர்மபத்தினி.

எரிச்சலுடன், `இவருக்கென்ன! மாசம் பொறந்தா, `டாண்’ணு பென்ஷன் வந்துடும்! பொண்ணாப் பிறந்தவளுக்கு ஏது ஓய்வு, ஒழிச்சல் எல்லாம்!’ என்று முணுமுணுத்துக்கொண்டாள்.

“பாரு!” புழக்கடைத் தோட்டத்திலிருந்து வந்த குரலில் ஸ்ருதி இன்னும் ஏறியிருந்தது.

அடுப்பைச் சிறியதாக எரியவிட்டாள் பாரு. இல்லாவிட்டால், கத்தரிக்காய் கறி கரியாகிவிடுமே!

‘ஒனக்குக் கொஞ்சமாவது பணத்தோட அருமை தெரியறதா?’ என்று அதற்கு வேறு கத்துவார்.

கணவர் இன்னொருமுறை அலறுவதற்குள், “வந்துட்டேன்,” என்று குரல் கொடுத்தபடி பின்புறம் போனாள்.

“அப்படி என்ன தலைபோற விஷயம்?”

“இங்கே பாரேன்!” அவரது மகிழ்ச்சிக்குப் பாத்திரமாகி இருந்ததை ஒரு விரலால் சுட்டிக் காட்டினார். கத்தரிக்காய் செடியில் ஒரு மொட்டு. தான் நட்ட செடியில் முதன்முறையாகக் காய்க்கப்போகிறது!

உதட்டைப் பிதுக்கினாள் பாரு. “இதுக்கா இத்தனை ஆர்ப்பாட்டம்?” என்று கேட்காமல் இருக்க முடியவில்லை அவளால்.

“நான் மார்க்கெட்டில காய் வாங்கிண்டு வந்தா, சொத்தை, வாடல், பூச்சின்னு நூறு குத்தம் கண்டுபிடிப்பியே!” என்று அவளையே தாக்கினார். “இன்னும் கொஞ்ச நாளிலே பச்சை வாசனை போகாம, செடியிலேருந்து பறிச்ச ஒடனேயே சமைக்கலாம்!”

அவருடைய பெருமையில் பங்குகொள்ளாது, “ஒங்களோட பேசிண்டிருந்தா, கறி தீய்ஞ்சுடும்,” என்றபடி உள்ளே நடந்தாள்.

‘ரசனையே துளிக்கூட இல்லாத அசமஞ்சம்!’ என்று திட்டினார். மெள்ளத்தான். எல்லாம், அவளுக்குக் கேட்கவா போகிறது என்ற தைரியம்தான்!

இல்லாவிட்டால், இலையைக் கவனித்துப் பரிமாறுவாளா? `நீங்களே எடுத்துப் போட்டுக்கோங்கோ,’ என்று விறைப்பாகக் கூறிவிட்டு, தொலைக்காட்சியின்முன் உட்கார்ந்துவிடுவாளே!

“இன்னிக்கு.. சமையல் ரொம்ப நன்னாயிருக்கு, பாரு – எங்கம்மா கைப்பக்குவம் மாதிரி. கத்திரிக்காயை எண்ணையிலேயே குளிப்பாட்டி, உளுத்தம்பருப்பு, மிளகாய்வத்தல் ரெண்டையும் வறுத்துப் போட்டியா? ஆகா!” என்றபடி ஒரு பிடி பிடித்தார்.

‘டாக்டர் என்னை சாமானே கூடாதுங்கிறார். இவருக்கோ அதுதான் பிடிக்கிறது. கண்ணில படாம, கொஞ்சம் காயை ஒளிச்சு வெச்சிருக்கணும்!’ என்று தன்னையே நொந்துகொண்டவள், இனிமேல் அப்படித்தான் செய்யவேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டாள்.

அடுத்தடுத்த வாரங்களில் ஒரு சிறு டபராவில் இருந்ததைப் பார்த்து, “ஒரு கிலோ வாங்கினேனே! இவ்வளவுதானா இருக்கு?” என்றவருக்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

“எல்லாத்தையும் நீயே சாப்பிட்டுட்டியா?” என்று மேலும் துளைத்தார்.

“நான் என்னிக்கு ஒங்களுக்கு முன்னாலே சாப்பிட்டிருக்கேன்!” என்று அலுத்த குரலில் கூறியவள், “வயசானா, நாக்கை அடக்கக் கத்துக்கணும். பாத்துச் சாப்பிடுங்கோ. நிறைய எண்ணை விட்டு வதக்கியிருக்கேன்,” என்ற மனைவியின் எச்சரிக்கைக்கு அப்போதெல்லாம் செவிசாய்த்திருந்தால் ஜம்புவின் இருதய அடைப்பு மோசமாகி, அவருக்கு நிரந்தர விடுதலை வாங்கித் தந்திருக்காது.

‘கத்தரிக்கா மொட்டுவிட்டபோது எப்படிப் பூரிச்சேள்! இப்போ, காய்ச்சுக் குலுங்கறதைப் பாத்தா, உசிரையே விட்டிருப்பேள்!’ பேச்சுவாக்கில் சொல்லிவிட்ட பாரு நாக்கைக் கடித்துக்கொண்டாள்.

‘நல்ல பிஞ்சுக் காயாப் பறிச்சு, அவருக்குப் பிடிச்சமாதிரி வதக்கிப் படைக்கணும்!’

மாலை அணிந்திருந்த சட்டத்துக்குள் அடைபட்டிருந்த ஜம்புவுக்கு அவளது ஆதங்கம் புரியவில்லை. எப்போதும்போல் விறைப்பாகத்தான் காட்சியளித்தார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *