(இதற்கு முந்தைய ‘ஞானோதயம்’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
தன்னுடைய வாழ்க்கையில் ஏதோவொரு பெரிய சதித்திட்டம் போட்டு நடப்பது போல இருந்தது சபரிநாதனுக்கு.
அப்படி இல்லாமலா இந்த நேரம் பார்த்து மச்சக்காளை மண்டையைப் போட்டு வைப்பான்? ஒரு விதத்தில் பார்த்தால் சாவுக்கு ராஜலக்ஷ்மியையும் கூட்டிக்கொண்டு போவதுதான் நியாயம். இந்நேரம் மரகதம் இருந்தால் கழுகுமலைக்கு அவள்தான் முதல் ஆளாகக் கிளம்புவாள். ஆனால் இப்போதைய சங்கடம், ராஜலக்ஷ்மியை அந்த வீட்டுக்காரர்கள் யாருமே பார்த்ததுகூடக் கிடையாது. இப்போது அவளை அழைத்துப் போனால் சாவு வீடு சாவு வீடாக இருக்காது. அங்கு இருப்பவர்கள் துட்டியை மறந்துவிட்டு ராஜலக்ஷ்மி எப்படி இருக்கிறாள் என்று கண்களை உருட்டி உருட்டிப் பார்ப்பார்கள்.
திடீரென ராஜலக்ஷ்மியைக் கொன்றே தீர்த்துவிட்டால் இம்மாதிரிப் பிரச்னையே இல்லை என்ற வேகம் சபரிநாதனின் உணர்வுகளில் மிக வேகமாகப் பரவியது. உள்ளுக்குள் இந்த உணர்வு வேகத்தில் உழன்று கிடந்தாலும், வெளிப் பார்வைக்கு நேர் எதிரான திக்பிரமையில் இருந்தார்.
பெருமாள் தலையில் பாரத்தைப் போட்டுவிட்டு தான் மட்டும் போய் வருவதென்று தீர்மானித்தார். ஆனால் கிளம்புவதற்குள் ராஜலக்ஷ்மியை ஏழுகோலம் பண்ணிவிட்டார். “அந்தச் சட்டையை எடுளா, இந்த வேட்டியை எடுளா..” என்று ஒரு ஆட்டம். குடிக்க மோர் குடு கொஞ்சம்; தண்ணீர் கொடு என்று ஒரு குரங்காட்டம்…
இப்படி எல்லா ஆட்டமும் காட்டிவிட்டு காலில் செருப்பை மாட்டிக் கொண்டபோது அவரின் உச்சந்தலை கொஞ்சம் அதிகமாகவே கொதித்தது. உடம்பும் மனசும் எந்தவொரு ஆதாரப் பிடிப்பும் இல்லாத ஊசலாட்டத்தில் இருப்பதாகத் தோன்றியது. சிறிது நேரம் வாசலில் நின்றுகொண்டு தெருவில் போவோர் வருவோரிடம் எல்லாம் தான் துட்டிக்கு கழுகுமலை போகிற விஷயத்தை தணிந்த குரலில் சொல்லிவைத்தார்.
தெருவில் காலை வைக்கும்முன் சுப்பையாவின் மோட்டார் பைக்கை வன்மத்தோடு ஒரு பார்வை பார்த்தார். அவரின் பார்வையில் அனல் சுட்டெரித்தது. ஏதாவது ஏடாகூடமாக நடந்தால் இந்த மோட்டார் பைக்கை முதலில் தீ வைத்துக் கொளுத்திவிட்டுத்தான் அடுத்த ஜோலி என்ற மன ஆங்காரத்தோடு சபரிநாதன் குடையை விரித்துப் பிடித்தபடி தெருவில் இறங்கி வேகமாக நடந்தார்.
பக்கத்து வீட்டில் சுப்பையா வேறுமாதிரியான சிந்தனையில் உழன்றான். அவனுடைய மனதில் ஒரு சின்ன கவலை ஏற்பட்டிருந்தது. குழந்தையின் கையில் மாலையைக் கொடுத்து அவனுடைய கழுத்தில் போடவைத்த காந்திமதியின் கண்களில், அணுகலில் மறைந்திருந்த காமம் அவனை அச்சம்கொள்ள வைத்தது. பல நிமிடங்களுக்கு அவன் கண்களை மூடிய படியே அமர்ந்திருந்தான்.
அப்போது ஜன்னலுக்கு வெளியே “நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில் காள்” என்ற ராஜலக்ஷ்மியின் குரல் மென்மையாகக் கேட்டது. காந்திமதியால் கவலை கவிந்த மனம் சட்டென மாறுதலுற்று அவன் எழுந்து ஜன்னலுக்குப் போனான். எதிர் ஜன்னலில் ராஜலக்ஷ்மியின் நிலவு போன்ற முகம் தெரிந்தது.
“அஞ்சி நிமிஷம் நின்னு பாத்தேன்… உங்க உருவம் எனக்குத் தெரியலை. பாசுரம் சொன்னது அதனால்தான்.”
“என் மாமனார் வீட்டில் இல்லையா?”
“ஒரு சாவு. அதுக்காக கழுகுமலை வரை போயிருக்காங்க. நாளைக்குத்தான் வருவாங்க…”
“அப்ப இன்னிக்கி ஈவ்னிங்கே நீங்க சொன்ன அந்த அழகான ஏகாந்த இடத்துக்குப் போகலாமா?”
“ஓயெஸ்… இப்பவே போகணும்னாகூட நான் ரெடி.”
“இன்னும் நான் குளிக்கவே இல்லை. தாமிரபரணி ஆத்துல போய் குளிச்சிட்டு வரலாம்னு பாக்கேன்…”
“அப்ப இன்னும் காலைப் பலகாரமே சாப்பிடலையா நீங்க?”
“ரொட்டி ஜாம் சாப்பிட்டேன்.”
“நான் ஆப்பம் தாரேன், சாப்பிட்டுப் பாருங்களேன். இன்னிக்கின்னு பார்த்து ஆப்பம் ரொம்ப ஜோரா வந்திருக்கு. ஊருக்குப் போகணும்கிற எரிச்சல்ல அவங்க சாப்பிடாமலேயே போயிட்டாங்க…”
“நான் இதுவரை ஆப்பம் சாப்பிட்டதே இல்லை. ஆப்பத்தை எனக்கு எப்படித் தருவீங்க ராஜலக்ஷ்மி?”
“வாங்களேன் எங்க வீட்டுக்கு… ஜெயில் வார்டன்தான் இல்லையே…!”
“யாராவது பாத்தா ஏதாவது நெனைக்க மாட்டாங்களா?”
“யாரும் எதுவும் நெனக்க மாட்டாங்க. எல்லோருமே சபரிநாதனா என்ன?”
“வம்பே வேண்டாம் ராஜலக்ஷ்மி. இந்த நிமிஷம் நம்முடைய நட்பு ரொம்ப இனிமையா இருக்கு. அதுக்கு எந்தத் தடங்கலும் வந்துடக்கூடாது.”
“நான் பரிமாறி நீங்க சாப்பிடறதை பாக்கணும் எனக்கு…”
“சாப்பிடாமலா போயிடப் போறேன்?”
“இப்பவே சாப்பிட்டா தேவலையே!”
“ஒரு ஐடியா சொல்றேன். நீள இடுக்கி இருக்கா உங்ககிட்டே?”
“இருக்கு.”
“ஒரு தட்டுல ரெண்டு ஆப்பங்களை வச்சு, தட்டை இடுக்கியால பிடிச்சிண்டு என்கிட்ட நீட்டுங்க… நானும் என்னோட இடுக்கியால கவனமா உங்க தட்டைப் பிடிச்சு அப்படியே வாங்கிக்கிறேன்…”
“கரெக்டா எட்டுமா?”
“சுப்பையாவுக்கு கை ரொம்ப நீளம்…”
“வேற எது நீளம்?”
இருவரும் பெரிதாகச் சிரித்தார்கள்.
“நீங்க ரொம்பவே ரொமாண்டிக் ராஜலக்ஷ்மி…”
“ஆமாங்க… நாம ரெண்டு பேரும் எப்போதும் ஒண்ணா இருந்தா எப்படி இருக்கும்?”
“அந்த நாளும் கண்டிப்பா வரும்…”
“சரி… இருங்க உங்க ஐடியா மாதிரியே ஆப்பம் தரேன்…”
ராஜலக்ஷ்மி இடுக்கியால் ஆப்பத் தட்டை ரொம்ப கவனமாகப் பிடித்துக்கொண்டு சுப்பையாவை நோக்கி நீட்டினாள். சுப்பையாவும் கவனத்துடன் ஒரு இடுக்கியால் ஆப்பத்தட்டை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டான். இருவருக்குமே இந்த அனுபவம் பரவசமாக இருந்தது.
“இப்போதான் ரொட்டி சாப்பிட்டேன். ஆப்பத்தை தாமிரபரணி போய் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டுக்கிறேன்…”
“எப்போ சாப்பிட்டாலும் இந்த ஜன்னல்கிட்ட வந்து நின்னு நான் பார்க்கும்படிதான் சாப்பிடணும், சரியா?”
அவள் குரலில் இருந்த அன்பும் காதலும் சுப்பையாவை அடித்துப் போட்டன.
“எப்படி இதுக்கெல்லாம் நன்றி சொல்லப் போறேனோ?”
“இந்தக் குயிலை எப்படியாவது நந்தவனத்தில் கொண்டுபோய் விட்டுட்டா இந்த ஜென்மத்துக்கு அது போதும்.”
வீட்டு வாசலில் அப்போது ஒரு பெண்ணின் குரல் கேட்டது.
“யாரோ என்னைக் கூப்பிடறாங்க சுப்பு. நீங்க போய் ஆத்துல குளிச்சிட்டு வாங்க… பிறகு பேசுவோம்.”
ராஜலக்ஷ்மியின் முகம் ஜன்னலில் இருந்து அவசரமாக மறைந்து விட்டது.
சுப்பையா பெரிய பூக்கள் போட்ட பெர்முடா டிரவுசரும், டி ஷர்ட்டும் அணிந்து கொண்டான். அழகான அயல்நாட்டு டர்க்கி டவலை அகன்ற தோளில் போட்டவாறு அவன் ஆற்றுக்குப் போவதை வீட்டு வாசலில் நின்று தன்னைத் தேடிவந்த புவனா என்ற அடுத்தத் தெருப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்த ராஜலக்ஷ்மி பார்த்தாள். அவளின் இளம் உணர்வுகள் சற்றுப் படபடத்தன.
அதேநேரம் தெருவில் நடந்து சென்ற அவனின் தினவெடுத்த தோள்களை தன் வீட்டுத் திண்ணையில் இருந்து பார்த்த காந்திமதி காமத்தில் விம்மினாள்…
“சபரி அண்ணாச்சி வீட்ல இல்லையா அக்கா?” புவனா கேட்டாள்.
“ஆமா… துட்டிக்கு கழுகுமலை போயிருக்காங்க. நாளைக்குப் பால். பொறவுதான் வருவாக.”
“அப்ப நாம தாமிரபரணிக்கு நீச்சலடிக்கப் போலாமாக்கா? தண்ணி கரை புரளுதாம்..” ராஜலக்ஷ்மியின் மனக்குயில் சிறகுகளை சிலிர்த்துக் கொண்டது. அவள் சற்றும் நினைத்தே பார்த்திராத சந்தர்ப்பம் இது! உடனே வீட்டைப் பூட்டிக்கொண்டு புவனாவுடன் கிளம்பி விட்டாள்.
அடுத்த பத்து நிமிடத்தில் இளம் பெண்கள் பதினைந்து பேர் சேர்ந்துகொண்டு கூச்சலும் கும்மாளமுமாக தாமிரபரணியை நோக்கி ஓடியது. ராஜலக்ஷ்மியின் மனசு சுப்பையாவை நினைத்துப் பார்த்தது. சந்தோஷத்தில் அவளுடைய உணர்வுகளில் இளமைப் பெருக்கு கரை புரண்டு ஓடிக் கொண்டிருந்தது. தாமிரபரணியை நெருங்குகையில் சோப்பின் மணத்துடன் ஈரப்பத வாசனை தூக்கியடித்தது…
தூரத்தில் இருந்தே ராஜலக்ஷ்மியின் கண்கள், தாமிரபரணியில் குளித்துக் கொண்டிருந்த சில ஆண்களின் மத்தியில் சுப்பையாவை அவசரமாகத் தேடிக் கண்டுபிடித்தன. ஒரு நிமிடம் நீருக்குள் நீந்தித் தலையை உயர்த்திய சுப்பையாவின் செழுமையான தோள்களின் ஈரம் காலைச்சூரிய ஒளியில் அவனின் முழு இளமையையும் மெருகூட்டிக் காட்டியது. அதேநேரம் ராஜலக்ஷ்மியைக் பார்த்துவிட்ட சுப்பையாவின் மனசில் சிறிதாகக் காதல்ரசம் ஊறியது… ராஜலக்ஷ்மியும் சுப்பையாவின் ரோமம் படிந்த ஈரமார்பை மையலுடன் அவள் கவனித்தாள். வெட்கத்தில் உடம்பு சிலிர்த்தது…
“அய்..! சுப்பையா அண்ணாச்சி இங்கன குளிக்கிறாஹ..” ஒருத்தி கூவினாள்.
“நாம கொஞ்சம் தள்ளிப் போயிடலாம் வாங்க…” ராஜலக்ஷ்மி சொன்னாள்.
“இல்லை, இல்லை… நீங்க எல்லோரும் இங்கனயே குளிக்கலாம். நான் குளிச்சாச்சு. இப்ப எந்திருச்சிருவேன்…” எனினும் சுப்பையா உடனே எழுந்து விடவில்லை. ராஜலக்ஷ்மி ஆற்றில் குளிக்கிற சுதந்திரத்தையும், சந்தோஷத்தையும் பார்க்க வேண்டும்போல அவனுக்குத் தோன்றியது…
ஆனால் பெண்கள் கூட்டம் முப்பதடி தூரம் தள்ளிப் போய்தான் ஆற்றில் இறங்கியது. ராஜலக்ஷ்மி மட்டும் உடனே தாமிரபரணியில் இறங்கி விடவில்லை. படித்துறையின் சிவந்த படியில் உட்கார்ந்து தன் வாழைத்தண்டு கால்களை ஆற்று நீரில் அளைந்தபடி நீண்ட ஜடையைப் பிரித்துவிட்டுக் கொண்டிருந்தாள்.
“மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப்
போதுவீர் போதுமினோ நேரிழையீர்..”
திருப்பாவையின் இந்த முதல் பாசுரத்தை சுப்பையா ராஜலக்ஷ்மியைத் தவிர வேறு எந்தப் பெண்ணுக்கும் தெரியாதபடி பாடிக்கொண்டே கரையேறினான். படித்துறையில் அவனின் பாதங்கள் வெளுப்பாக இருந்தது. அந்தக்கணம் தான் நந்தவனம் வந்து சேர்ந்துவிட்ட குயிலாகவே தோன்றியது ராஜலக்ஷ்மிக்கு. அந்தக் குதூகலத்தோடு ஆற்றில் இறங்கினாள். கரையேறிவிட்ட சுப்பையா தான் குளிப்பதைக் கவனித்துக் கொண்டிருப்பான் என்ற சின்ன வெட்கத்துடனேயே ராஜலக்ஷ்மி தண்ணீருக்குள் மூழ்கி மூழ்கி எழுந்து கொண்டிருந்தாள்.
அப்போது திடீரென்று புவனா ஆற்றின் ஆழத்திற்குச் சென்றுவிட, ஆற்றின் வேகம் விருட்டென அவளைத் தன்னுள் இழுத்துக் கொண்டது. பெண்கள் பெரிய குரலில் அலறினார்கள். சுப்பையா யோசிக்கவே இல்லை. சிறிது தூரம் கரையில் ஆற்றின் திசையிலேயே வேகமாக ஓடி, புவனாவை நோக்கித் தண்ணீரில் பாய்ந்தான். புவனாவின் நீண்ட கூந்தலை இறுக பற்றிக்கொண்டான். தத்தளித்த புவனாவை இழுத்தபடியே படித்துறையை அடைந்தான். உடனே மளமளவென்று அத்தனைப் பெண்களும் கரையேறி விட்டார்கள். அத்தனை பேரின் முகத்திலும் பயம் உறைந்து கிடந்தது.
சிறிதளவு நீரைக் குடித்திருந்தாலும் பயத்தினால் புவனா விறைத்துப் போய்க் கிடந்தாள். சுப்பையா அவளின் உடம்பைக் குப்புறப் புரட்டி முதுகை பலமாக கைகளால் அழுத்தி அழுத்தி மஸாஜ் செய்ததில் அவளின் மூக்கு வழியாகவும், வாய் வழியாகவும் எராளமாக தண்ணீர் வெளியேறி வழிந்தது. பெண்கள் புவனாவின் உடைகளை தளர்த்தி விட்டார்கள். சில நிமிடங்கள் தாமதமாகிப் போயிருந்தாலும்கூட விபரீதமாகப் போயிருக்கும் என்பதை உணர்ந்திருந்த பெண்களின் கண்களில் இன்னும் அச்சம் தேங்கிக் கிடந்தது. சிறிது நேரத்தில் புவனாவின் மூச்சு சீராகியது.
ராஜலக்ஷ்மியைத் தவிர எல்லோரும் மாற்றி மாற்றி சுப்பையாவுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவள் மட்டும் மொத்த மெளனத்துடன் சுப்பையாவையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் மொத்த மனசும் சுப்பையாவின் மேல் வீழ்ந்திருந்தது. சுப்பையாவும் இதைப் புரிந்து கொண்டவனாக மெளனமாகவே அவளின் மொத்த மனசையும் அவளின் மொத்த உணர்வுகளால் பெற்றுக் கொண்டிருந்தான்… தாமிரபரணி சுழித்து ஓடிக் கொண்டிருந்தது…
போச்சா.சபரிநாதன் எண்ணம்போல் தானா?அப்ப இனி திருவிளயாடல் இருக்கு போல சுப்பையாவுக்கு